சிறுகதை : அது… அவரே தான்….

Image result for school girl cycle 

இசை கண்களைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தாள். அவரே தான் ! அந்த பரந்து விரிந்த பள்ளிக்கூட மைதானத்தின் ஓரமாய் அமர்ந்து எதையோ வரைந்து  கொண்டிருக்கிறார். இசையால் தன் கண்களை நம்பவே முடியவில்லை. மீண்டும் உற்றுப் பார்த்தாள். அவளது நினைவு நரம்புகளுக்குள் விளைந்து கிடந்த அந்த முகத்தை அவளால் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்ன ?

ஸ்கூல் முடிந்து பையனை கூட்டிக்கொண்டு போக பெரும்பாலும் இசையின் கணவர் தான் வருவார். அவ்வப்போது அபூர்வமாய் இசை வருவதுண்டு. ஆனால் இதுவரை இவரைச் சந்தித்ததில்லை. இங்கே அவருக்கு என்ன வேலை ?

ஸ்கூல்ல வாத்தியாரா சேந்துட்டாரா ? இல்லை அவரும் ஒரு பேரன்டா ? யோசித்துக் கொண்டே இருந்த இசையின் மனதுக்குள் மெல்லிய பெருமூச்சோடு நினைவுகள் ஊர்வலமாய் நுழைந்தன.

ஆயிற்று நீண்ட நெடிய பதினெட்டு வருடங்கள். பள்ளிக்கூடத்தில் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தான் அந்த முகத்தை முதன் முதலாகப் பார்த்தாள் !

“யாருடி அவரு.. ஸ்மார்ட்டா இருக்காரு.. லேடீஸ் ஸ்கூல்ல அவருக்கென்ன வேலை ?”

“தெரியலடி.. ஏதாச்சும் குரியர் பாயா இருக்கும்…”

“போடி.. இவ்ளோ ஸ்டைலா இருக்காரு.. அவரைப் போயி குரியர் பாய்… சொறியர் பாய்ன்னு”

“ஓஹோ… அப்போ எதுக்கு என்கிட்டே கேக்கறே.. நீயே போய் கண்டுபிடி” என்று சொல்லிவிட்டு தோழி விடுக்கென திரும்பிப் போய்விட்டாள்.

இசை சிரித்தாள் . அவளுடைய கண்ணாடி மனசுக்குள் ஏதோ ஒரு சின்ன கலவரம் !

இசை !

பெயருக்கேற்றார் போல இசையின் இழைகளில் கிடப்பவள். அவளுடைய குரலுக்குள் கொஞ்சம் குயிலின் அம்சமும் உண்டு, கொஞ்சம் வயலின் தன்மையும் உண்டு. இரவு நேர மௌனத்தின் தாழ்வாரங்களில் அவளது குரல் மென்மையாய் ஒலிப்பது தெய்வீக அனுபவம்.

அத்தோடு அவளுடைய பிரியத்தின் பட்டியலில் இருந்த இன்னொரு விஷயம் டிராயிங். படம் வரைவதென்றால் அவளுக்கு உலகம் மறந்து விடும். தன் முன்னால் இருக்கின்ற காகிதமே உலகமாய் மாறிவிடும். அந்தக் காகிதத்தில் அவளுடைய கற்பனைக் கோடுகள் புதிய உலகத்தைப் படைக்கத் துவங்கும். கதாபாத்திரங்கள் ஓடிக்கொண்டிருக்கும் பென்சில் கோடுகளின் வழியாக பிரசவித்துக் குதிக்கும்

அப்படி பதினொன்றாம் வகுப்பில் ஒரு டிராயிங் போட்டி நடந்தது. ஆனால் இசையின் பெயர்  அதில் இடம் பெறவில்லை. இசைக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

நேராக தலைமை ஆசிரியரின் அறைக்குச் சென்றாள் இசை.

‘சார்… என்னோட பெயரை போட்டியில கண்டிப்பா சேக்கணும் சார்… எத்தனை பரிசு வாங்கியிருக்கேன்னு உங்களுக்கே தெரியும்’

‘ஓ..உன் பேரு இல்லையாம்மா ? நான் டிராயிங் சார் கிட்டே சொல்றேன்’ சொல்லிக்கொண்டே ஒரு பெல்லை அமுக்க அட்டென்டர் எட்டிப்பார்த்தார்.

‘யப்பா.. டிராயிங் சார் டீச்சர்ஸ் ரூம்ல இருப்பாரு கூட்டிட்டு வா’

இசைக்கு மனதில் கோபம் தீரவில்லை. தன்னை எப்படி அவர் நிராகரிக்கலாம் ? இன்றைக்கு இரண்டில் ஒன்று கேட்காமல் விடப்போவதில்லை என மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

அப்போதுதான் அவர் உள்ளே நுழைந்தார்.

அந்த ஸ்மார்ட் இளைஞர் ! இசையின் கண்ணாடி இதயம் சட்டென கண்சிமிட்டியது.

‘சார்… இவங்க இசை.. நல்லா வரைவாங்க.. இவங்க பெயரையும் காம்பெட்டிஷன்ல சேத்துக்கங்க’ தலைமை ஆசிரியர் சொன்னார்.

‘சரி சார்… இவங்க குவாலிஃபை ரவுண்ட்ல ஆப்சென்ட் சார்.. அதான் சேக்கல’

‘பரவாயில்லை சார்…ஷி ஈஸ் டேலன்டட்..’

‘ஓகே சார்.. நான் புதுசு இல்லையா.. அதான் தெரியல’

இசையின் கோபமெல்லாம் சட்டென காணாமல் போயிருந்தது. ‘சார்.. பரவாயில்லை சார்… நான் அன்னிக்கு வராதது என் தப்புதான் சார்… மன்னிச்சிடுங்க’

மனதில் நினைத்திருந்ததற்கு நேர் எதிரான வார்த்தைகள் மென்மையாய் இசையிடமிருந்து வந்தன.

அன்றிலிருந்து இசையின் இலட்சியம் டிராயிங் என்பதை விட,  டிராயிங் சாருடன் நட்பு பாராட்டுவது என்றாகிவிட்டது.

பதினொன்றாம் வகுப்பில் டிராயிங் கிடையாது. இருந்தாலும் அடிக்கடி தனது டிராயிங் புக்கை எடுத்துக் கொண்டு சாரைப் பார்க்கலாம் என போவாள். இருந்தாலும் தயக்கம் தடுக்கும்.

எப்போதும் ராஜ் சார் வருகிறாரா ? என்பது தான் மனசில் ஓடும் சிந்தனையாய் இருக்கும். கண்கள் மானின் கண்களைப் போல அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும்.

இவளுடைய கண்ணிமைகளில் தொற்றிக் கிடந்த பால்யக் காதலை அவரும் கண்டிருந்தார். ஆனாலும் காணாதது போல அவர் நடித்து அமைதியாக போய்விடுவார்.

‘எப்படியாச்சும் சாரோட வீடை கண்டு பிடிக்கணும்டி…’

‘ஓ.. தெரியாதா ? அவரு நம்ம கோனார் கடைக்கு போற தெருவுக்கு பக்கத்துல எங்கயோ தான்டி வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருக்காரு’

‘தேங்க்ஸ்டி..’ சொல்லிக்கொண்டு சைக்கிளை விருட்டென கோனார் கடையை நோக்கித் திருப்பினாள் இசை. பல நாள் தேடலுக்குப் பின் அவரது வீட்டையும் கண்டுபிடித்தாள்.

அதன்பின் பக்கத்து தெருவில் இருக்கும் கடையில் பால் வாங்க வேண்டுமென்றாலும் கூட, தூரத்தில் இருக்கும் கோனார் கடை வீதியைச் சுற்றி தான் போவாள். அவர் அவ்வப்போது மாடியில் தென்படுவார். அந்த தரிசனமே போதுமானதாய் இருந்தது அவளுக்கு.

பள்ளிக்கூடத்துக்கு தினமும் தாமதமாய் வருவாள். அந்த நேரத்தில் தான் சைக்கிள் ஸ்டேன்ட் பக்கத்தில் இருக்கும் மரத்தடியில் அமர்ந்து அவர் வரைந்து கொண்டிருக்கும் தருணம்.

அவரை அரைக்கண்ணால் நோட்டம் இடுவதற்காகவே தாமதமாகப் போவாள் இசை. அதை அவர் கவனித்தே தான் இருந்தார்.

நாள்கள் செல்லச் செல்ல இசையின் மனதுக்குள் இருந்த பால்யக் காதல் பருவமடையத் துவங்கியது. அவளது நினைவுகளில் திரிந்த மாஸ்டர் கனவுகளுக்குள்ளும் நுழையத் துவங்கினார்.

பால்யத்தின் கலர் கனவுகளில் அவர் தான் படம் வரைந்து கொண்டிருந்தார். இனம் புரியாத ஒரு இன்பத் திளைப்பில் இசையின் இதயம் துடித்துக் கொண்டிருந்தபோது தான் அந்த அதிர்ச்சிச் செய்தி வந்தது.

‘ஏய்… இசை… தெரியுமாடி விஷயம்.. உன்னோட ஆளுக்கு வேற கவர்மென்ட் ஸ்கூல்ல வேலை கிடைச்சிருக்காம்… கிளம்பறாரு’ தோழி பற்ற வைத்தது கண்ணி வெடியாய் வெடித்தது.

கண்கள் சட்டென அருவியாய் கொட்ட தேம்பித் தேம்பி அழுத இசை நேரடியாக கான்டீன் பக்கம் ஓடினாள். ஓரமாய் இருந்த பெஞ்சில் அமர்ந்து கதறிக் கதறி அழத் தொடங்கினாள்.

தோழிக்கு பக் என்றாகி விட்டது. ஏண்டா சொன்னோம் என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

அப்போது சட்டென அவர்கள் முன்னால் வந்து நின்றார் ராஜ் மாஸ்டர். இசையின் அருகில் வந்து அமர்ந்தார். இசையின் மனதுக்குள் பெருங்கடல் பொங்கி மறிந்தது. ஆனாலும் அதில் ஆனந்தம் இருக்கவில்லை.

மாஸ்டர் இசையில் கையை மெல்லமாய்ப் பற்றினார்.

அந்த முதல் தொடுதலின் ஸ்பரிசத்தில் அவளுக்குள் நான்கைந்து நயாகராக்கள் சரிந்தன. ஏழெட்டு இமைய மலைகள் தடுமாறி விழுந்தன.

“வருத்தப்படாதேம்மா .. எல்லாம் சரியாயிடும்’

ஒற்றை வார்த்தையைச் சொல்லிவிட்டு அவர் கிளம்பி விட்டார். ஆனால் இசையின் மனதில் எதுவும் நிற்கவில்லை.

சில நாட்களிலேயே அவர் ஸ்கூலை நிறுத்தினார். அடுத்த சில நாட்களிலேயே அவர் வீட்டையும் காலி செய்து விட்டு போய்விட்டார்.

இசையின் மனதில் காதலின் வலி நிரம்பியது.

அவளுக்கு பள்ளிக்கூடத்திலேயே ரசிகர்கள் உண்டு. அவளுடைய குரலுக்கும், ஓவியத்துக்கும், ஒரு தேவதையாய் சிரிக்கும் அவளது புன்னகைக்கும் ! எதுவும் அவளை சலனப்படுத்தவில்லை.

ஒரு முறை தலைமை ஆசிரியை கூப்பிட்டு திட்டவும் செய்தார். ‘என்னம்மா லவ் லெட்டரெல்லாம் ஸ்கூலுக்கு வருது.. இதெல்லாம் நல்லதில்லை’ என்று !

‘நல்லதில்லேன்னா கிழிச்சு போடுங்க, எனக்கு எந்த லவ் லெட்டரும் வேண்டாம்’

‘என்ன திமிரா ? பத்தாம் கிளாஸ்ல 92 சதவீதம் மார்க்.. பதினொன்னாம் கிளாஸ்ல 62 சதவீதம்… படிக்கணும்ன்னு வரியா இல்லை தெனாவெட்டா பேச வரியா ?”

“மேம்… 12ம் கிளாஸ்ல 90 சதவீதத்துக்கு மேல மார்க் எடுக்கலேன்னா என்னை கேளுங்க நீங்க.. “ என சொல்லி விட்டு வீராப்பாய் வெளியே வந்தாள் இசை.

சொல்லி வைத்தார்போல் அடுத்த ஆண்டு 91 சதவீதம் மார்க் ! தலைமை ஆசிரியை தனியே கூப்பிட்டு அவளைப் பாராட்டினார்.

அதன்பின் கல்லூரி, வேலை, திருமணம் என வருடங்கள் தாவித் தாவி இன்று மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். இத்தனை வருடங்கள் அவருடைய நினைவு எத்தனையோ சந்தர்ப்பங்களில் வந்து போயிருக்கிறது.

அடிக்கடி சோசியல் மீடியா தளங்களில் அவருடைய பெயரைப் போட்டு தேடிப் பார்ப்பதுண்டு. ஆனால் சிக்கியதில்லை.

இப்போது !

இதோ கண்ணெதிரே அமர்ந்து கொண்டிருக்கிறார். இசை முடிவெடுத்தாள். போய் பேசிவிடுவோம். ! இத்தனை ஆண்டுகள் கழிந்து அவருடைய மனசு எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

இசை  தான் இருந்த இடத்திலிரிந்து எழுந்து அவரை நோக்கிப் போனபோது மகன் ஓடிவந்து கட்டிக்கொண்டான்.

‘மம்மீ…. லெட்ஸ் கோ’

‘வெயிட் டா.. அதோ ஒரு அங்கிள் இருக்காங்கல்ல, அவங்களை பாத்து பேசிட்டு போலாம்’

‘ஓ..அந்த அங்கிளா.. அனாமிகா வோட டாடி… ‘

‘அனாமிகா ?’

‘எஸ் மாம்… மை கிளாஸ் மேட்.. குளோஸ் பிரண்ட்…’ பையன் சொல்லிக்கொண்டே போக இசையின் உதடுகள் புன்னகைத்தன.

எதையோ தீவிரமாய் வரைந்து கொண்டிருந்த  ராஜை நோக்கிப் போனாள்.

‘ராஜ் மாஸ்டர்…’

ராஜ் நிமிர்ந்து பார்த்தார். திடுக்கிட்டார். சட்டென எழுந்தார்.

‘நீ..நீ..’

‘சேம் இசை மாஸ்டர்… உங்களுக்கு இம்சை குடுத்துட்டே இருப்பேனே.. அந்த காலத்துல… ‘ இசை சிரித்தாள்.

‘வாவ்… ரொம்ப சந்தோசம்.. எப்படி இருக்கீங்க’

‘ஐம் ஃபைன் மாஸ்டர்… தோ.. ஹி ஈஸ் மை சன்.. அனாமிகா கிளாஸ்  தான்… சர்ப்ரைஸ் இல்லையா’ இசை சிரித்தாள்.

‘யா.. யா.. ரியலி… ‘ ராஜ் சிரித்தார். அவருடைய கண்கள் இசையின் விழிகளை தொட்டுத் தொட்டு விலகின.

‘மாம்… லெட்ஸ் கோ…’ பையன் இழுத்துக் கொண்டே இருந்தான்.

‘சரி.. மாஸ்டர்… நான் கிளம்பறேன். ஒரு நாள் பொண்ணையும் வைஃபையும் கூட்டிட்டு வீட்டுக்கு வாங்க’

‘கண்டிப்பா… கண்டிப்பா’ ராஜ் சொன்னார்.

இசை புன்னகைத்துக் கொண்டே திரும்பினாள். அவளுடைய மனதில் ஏதோ ஒரு இனம்புரியா மகிழ்ச்சி நிரம்பியது. ஒரு பறவையாய் மெல்ல மெல்ல அசைந்து விலகினாள்.

ராஜ் பின்னாலிருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

‘இசை.. உனக்கு ஒரு கடிதம் எழுதினேன். அது உனக்கு கிடைச்சுதா தெரியல. உனக்கு என்மேல் இருப்பது காதலாய் இருந்தால் அந்த வாரத்தில் ஏதோ ஒரு நாள் எனக்குப் பிடித்த உன்னுடைய மஞ்சள் கலர் கம்மல் போட்டுட்டு வர சொல்லி எழுதியிருந்தேன். ஒவ்வொரு நாளும் நான் ரகசியமா உன்னோட காதை பாத்துட்டே இருப்பேன்.

நீ முதல் நாளே மஞ்சள் கம்மலோட வருவேன்னு நினைச்சேன். ஆனா ஒருவாரத்துல ஒரு நாள் கூட மஞ்சள் கம்மலோட நீ வரல. மனசு உடைஞ்சு போச்சு. உன் படிப்பு எல்லாம் முடிஞ்சப்புறம் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு கனவு கண்டேன். ஒரு வாத்தியாரா இருக்கும்போ அதெல்லாம் சொல்ல முடியாதுன்னு தான் நான் ரிசைன் பண்ணினப்புறம் லெட்டர் போட்டேன்.

உன் சிரிப்பு என் மனசுல ஏற்படுத்தின காயம் கொஞ்ச நஞ்சமல்ல. உன் கிட்டே இன்னும் அதே ஈர்ப்பு இருக்கு’

ராஜின் மனம் நினைவுகளின் சிக்கெடுத்துக் கொண்டிருக்கையில் வந்து நின்றாள். அனாமிகா ! ஒரு விபத்தில் பெற்றோரைப் பறிகொடுத்த அனாமிகாவுக்கு கடந்த ஒன்பது வருடங்களாக ராஜ் தான் அப்பா ! ராஜுக்கு பள்ளிக்கூட நினைவுகள் தான் குடும்பம் ! அந்த நினைவுகளோடு திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருந்தார் ராஜ் மாஸ்டர்.

*

 

சிறுகதை : ஐ.டி கலாட்டா

காலை 10 மணி.

டேய் மச்சி, இந்த போட்டோவைப் பாருடா.

சதீஷ் நீட்டிய போட்டோவில் ஒரு இளம் பெண் காற்றில் அலையும் கூந்தலை இடது கையால் செல்லமாய் விலக்கி விட்டுக் கொண்டிருந்தாள். அந்தக் கணினி மென்பொருள் நிறுவன வளாகம் ஒரு கல்லூரி கிரவுண்ட் மாதிரி இளைய தலைகளின் சுறுசுறுப்பான அலைச்சலில் பரபரப்பாய் இருந்தது. வலது கையில் இருந்த சிகரெட்டை இடது கைக்கு மாற்றிக் கொண்டே அந்த போட்டோவை வாங்கினான் கார்த்திக்.

வாவ்.. சூப்பர் மச்சி, பிகர் யாரு ? புதுசா புடிச்சியா ?

டேய்… பிகர் இல்லடா .. எனக்குப் பாத்திருக்கிற பொண்ணு. பேரு சரண்யா. போட்டோ குடுத்துட்டு போயிருக்காங்க.

ஓ.. சாரி மச்சி… உனக்கு நல்லா மேச் ஆகும்டா… என்ன பண்றாங்க ? சட்டென பிகர் பேச்சை மாற்றி, மரியாதைக் குரலுக்குத் தாவினான் கார்த்திக்.

நம்மள மாதிரி சாஃப்ட்வேர் லைன் தான், என்கோர் ன்னு ஒரு கம்பெனில வேல பாக்கறாங்க.

ஏண்டா சாஃப்ட்வேர் பொண்ணைப் போய் புடிச்சிருக்கே. இது தான் ஒரு உருப்படாத ஃபீல்ட் ன்னு உனக்குத் தெரியுமே ! ஒழுங்கா காலைல வேலைக்குப் போய் சாயங்காலம் வீட்டுல வர மாதிரி ஒரு ஒரு பொண்ணு பாருடா. லைஃப்க்கு அது தான் செட் ஆகும். ஒரு டீச்சர், ஒரு கவர்மென்ட் ஜாப், இல்லேன்னா ஒரு டாக்டர்…

ஆமா எந்த டாக்டர் காலைல வேலைக்குப் போய் சாயங்காலம் வீட்டுக்கு வந்திருக்காங்க…

சரி, டாக்டரை விடு.. டீச்சர், லெக்சரர் மாதிரி பாக்கலாம்ல…

அதெல்லாம் சரிப்பட்டு வராது மச்சி. ஏற்கனவே ஐ.டி ன்னாலே அவன் அவன் தயங்கறான். நாம ஏதோ இந்த அலுவலகத்துக்குள்ள நாம வரதே பிகர்களை கரெக்ட் பண்றதுக்கும், கூத்தடிக்கிறதுக்கும் தான்னு உலகம் நினைக்குது. நம்ம கஷ்டம் எவனுக்குத் தெரியப் போவுது ? “ஐடி பையனா ? ஒழுக்கமா இருப்பானா” ன்னு எவனாச்சும் பேசினாலே பத்திகிட்டு வருது. பொளேர்ன்னு ஒன்னு உடணும் போல இருக்கு. யூஸ்லெஸ் ஃபெல்லோஸ்…

சொல்றவன் சொல்லிட்டே தான் இருப்பான். திருட்டு புருஷன், திருட்டுப் பொண்டாட்டி, லொட்டு லொசுக்குன்னு டெய்லி நாலு கொலை நடக்குது இப்பல்லாம். எல்லாரும் ஐடி ல யா வேல செய்றாங்க. என்னைக் கேட்டா, தப்பு செய்றவன் எங்க இருந்தாலும் செய்வான்.

உன்னை எவன்டா கேட்டான். தத்துவம் பேச வந்துட்டான்… சிரித்தான் சதீஷ்.

பி…சீரியஸ் டா.. ஒரு டிவி புரோக்ராம் பாத்தேன் மச்சி. அதுல ஒருத்தன் சொல்றான் ஐடில ஏகப்பட்ட சம்பளமாம். ஆனதால மக்கள் எல்லாம் தப்பு பண்றாங்களாம். நல்ல மொபைல் வாங்க தோணுமாம். தண்ணி அடிக்கத் தோணுமாம். தப்பு பண்ணத் தோணுமாம். லோண் வாங்கத் தோணுமாம். அதனால அந்த வேலையை விட்டு வெளியே வந்தானாம். டேய் கேணப் பசங்களா ? ஏன் அதெல்லாம் பண்றீங்க ? ஐபோன் வெச்சுக்கலேன்னு உன்னை பிரிச்சு வுட்ட ஒரு கம்பெனி பேரைச் சொல்லு ? கிடைக்கிற சம்பளத்துல தேவையானதை வெச்சுட்டு மிச்சத்தை ஒரு அனாதை ஆசிரமத்துக்கு குடு, ஒரு ஏழைக்குக் கொடு, ஏழைப் பசங்களுக்கு கல்வி உதவி செய். இல்லேன்னா உன் குடும்பத்துக்கு குடு, உன் சொந்தக்காரன் எவனாவது பணம் வேணும்னு தவிச்சிட்டு இருப்பான் அவனுக்குக் குடு ! உன் மனசை ஓட்டையா வெச்சுகிட்டு எதுக்கு மத்ததையெல்லாம் குத்தம் சொல்றே ?

கரெக்ட் மச்சி… கடவுள் ஒருத்தருக்கு பணம் நிறைய கொடுக்கிறது இன்னொருத்தருக்கு உதவி செய்றதுக்கு. சும்மா பந்தா வுட்டு திரியறதுக்கு இல்லை.

சரி, அதை விடு. தத்துவம் பேசறது போர்டா. உன் மேட்டருக்கு வருவோம். இது உன் லைஃப் மேட்டர். மனைவியும் ஐ.டின்னா நிறைய கஷ்டம் இருக்கு. நாளைக்கு ஒரு குழந்தை குட்டின்னு ஆச்சுன்னா, யூ கேனாட் மேனேஜ்.

நீ சொல்றதெல்லாம் சரிதான். பட், நம்ம பீல்ட்ல இருக்கிற பொண்ணைக் கல்யாணம் பண்றது தான் நமக்கு ரொம்ப நல்லது. ஏன்னு சொல்றேன். பாம்பின் கால் பாம்பறியும் ன்னு சொல்லுவாங்க இல்லையா… ஓகே. ஓகே… எக்ஸாம்பிள் கொஞ்சம் மொக்க தான். பட், யோசிச்சு பாரு. நம்ம வேலைக்கு சம்டைம்ஸ் மிட் நைட் தான் வீட்டுக்கு போவோம். சில நேரம் காலை வரைக்கும் ஆபீஸ்ல தான் கெடப்போம். டீம்ல நிறைய பொண்ணுங்க உண்டு, அவங்க கூட பேச வேண்டியிருக்கும். டீம் அவுட்டிங் அது இதுன்னு ஏகப்பட்ட விஷயம் இருக்கும். இதையெல்லாம் இந்த ஃபீல்ட்ல இருக்கிற ஒருத்தரால தாண்டா புரிஞ்சுக்க முடியும். மத்தவங்க புரிஞ்சுக்கவே மாட்டாங்க.

ம்ம்ம்… யா.. அது கரெக்ட் தான் மச்சி.

ம்ம்… பாக்கலாம்… ஐ நீட் டு கெட் ஹர் நம்பர்…

நல்ல ஐடியா சொல்றேன்டா… ஃபேஸ் புக் போ, பொண்ணு பெயரைப் போட்டுத் தேடு. அப்படியே பிரண்ட் ரிக்வஸ்ட் குடு. அக்ஸப்ட் பண்ணுவா, அவளோட கடந்த சில வருஷ ஃபேஸ் புக் ஆக்டிவிடீஸ் பாரு. பொண்ணு எப்படின்னு தெரிஞ்சுடும். அப்புறம், யூ கேன் டிசைட்.

எனக்கு இன்னொரு பெட்டர் ஐடியா இருக்கு..

சொல்லு,

நீ அவளுக்கு பிரண்ட் ரிக்வஸ்ட் குடு. பிரண்ட் ஆயிடு… அவ கிட்டே பேசிப் பாரு… கொஞ்சம் விஷயம் கலெக்ட் பண்ணு…  என்ன சொல்றே.

ம்ம்… சரி வருமா..

யெஸ்.. டிரை பண்ணு.. பட்.. அதுக்கு முன்னாடி என்னை உன்னோட பிரண்ட்ஸ் லிஸ்ட் ல இருந்து நீக்கிடு. இல்லேன்னா, கண்டு பிடிச்சுடுவா… ஓகே வா…

ஓகேடா.. தில்லாலங்கடி வேல பண்றதுக்குன்னே பொறந்தவன் டா நீ !

சரி சரி.. அடக்கி வாசி.. லெட்ஸ் கோ… நிறைய வேலையிருக்கு !

நேரம் 2 மணி 30 நிமிடம்.

கணினியின் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவனை தொலைபேசி அழைத்தது. அகலமான நெற்றியுடன் சிரித்த சிஸ்கோ போனினைப் பார்த்தான் சதீஷ். அழைப்பது ரவி ஜோய்ஸ்லா என்றது.

ஓ.. மேனேஜர். போச்சு, இன்னிக்கு என்னத்த கழுத்தறுக்கப் போறானோ ! எடுக்கலாமா வேண்டாமா எனும் இரண்டு வினாடி சிந்தனையின் முடிவில் போனை எடுத்தான்.

சட்டென குரலில் வழுக்கும் ஆங்கிலத்தை ஒட்டவைத்துக் கொண்டு பேசினான்.

எஸ் ரவி…

ஒரு அர்ஜன்ட் மேட்டர்…

சொல்லுங்க.

ஒரு கிளையன்ட் விசிட். வைஸ் பிரசிடன்ட் ஆஃப் ஐ.டி, பாப் கார்டினஸ். நாம அதுக்குத் தயாராகணும்.

ஷுயர்.. எப்போ ?

அடுத்த திங்கட்கிழமையாம்… ஏதோ திடீர் விசிட் அடிக்கிறாராம் இன்னொரு கம்பெனிக்கு, போற போக்கில நம்ம கம்பனியில ஒரு நாள் செலவிடப் போறாராம்.

ஓ.. ஓகே…  பர்ப்பஸ் ஆஃப் த விசிட் ?

நம்ம புராஜக்ட் ரிவ்யூ தான் மெயின். நீ தான் அதை தயார் பண்ணனும். ஒரு பிரசன்டேஷன் குடுக்கணும் மண்டே… கெட் ரெடி வித் த டேட்டா..

ஷுயர்… ரவி…  வாட் எல்ஸ் ஐ நீட் டு டு ?

எல்லாம் நீ தான்யா பண்ணணும். நீ தான் இதை லீட் பண்ணணும். பி.எம்.ஓ வை கனெக்ட் பண்ணு, லாஜிஸ்டிக்ஸ் எல்லாம் பக்காவா இருக்கணும். அவர் வந்ததும் வரவேற்பு, அப்புறம் எக்ஸிகியூடிவ் மீட்டிங், அப்புறம் ஒரு டீம் வாக் துரூ, லஞ்ச், லஞ்சுக்கு அட்மினை கான்டாக்ட் பண்ணு. ரேடிஸன் ஃபுட் வில் பி நைஸ்… ஆஃடர்நூன் ல டவுன் ஹால் இருக்கட்டும். மேபி மூணு மணிக்கு. இரண்டு மணி நேரம் ஆடிட்டோரியம் பிளாக் பண்ணு. நீ தான் பிரசன்ட் பண்றே… ரொம்ப முக்கியம்.. நம்ம டெலிவரி, பிளஸ் கேப்பபிலிடீஸ்…. நீளமாகச் சொல்லி நிறுத்தினார் ரவி.

பண்ணிடலாம் ரவி. போன தடவை பண்ணினது போலவே எல்லாத்தையும் நீட்டா பண்ணிடறேன்.

யா.. ஐ. நோ. அதான் உன் கிட்டே பொறுப்பைக் கொடுத்திருக்கேன். வில் கனெக்ட் டுமாரோ.. கிவ் மி டெய்லி அப்டேட்ஸ் பிளீஸ் !

போனைத் துண்டித்து விட்டு தலையில் கையை வைத்து உட்கார்ந்தான் சதீஷ்.

கிளையன்ட் விசிட் என்பது ஒரு சிம்ம சொப்பனம். சி. எம் ரோட்டில் போகிறார் என்றால் ஏரியா இன்ஸ்பெக்டருக்கெல்லாம் வியர்த்து வடியுமே அது போல ஒரு பதட்டம். எப்படா போய்த் தொலைவாங்க, எப்ப நாம நிம்மதியா மூச்சு விடலாம் என்று தான் தோன்றும். ஏதாச்சும் குளறுபடி நடந்தால் வேலைக்கே ஆப்பு வைத்து விடுவார்கள். எப்படிச் செய்வது ? எங்கே தொடங்கி, எங்கே முடிப்பது என தெரியாமல் குழம்பினான் சதீஷ்.

குழம்பியவனுடைய கணினித் திரையில் மெசேஜ் ‘டொக்’ எனும் சத்தத்தோடு தலை நீட்டியது.

கார்த்திக் !

சொல்றா மாப்ளே… என்ன மேட்டர்.

வாடா.. ஒரு தம் போட்டு வரலாம்.

இல்ல மச்சி, கிளையன்ட் விசிட் இருக்காம். சாவடிக்கிறாங்க. ஏதோ கம்பெனிக்கு போறானாம், போற போக்கில இங்க வந்துட்டு போறானாம். சனிப்பொணம் தனியா போகாது கணக்கா நம்ம தலையில வந்து விழுது பாரு ஒவ்வொண்ணும்.

ஏண்டா சலிச்சுக்கிறே. நீ பாக்காத விசிட்டா.. வா மச்சி.. ஒரு மேட்டர் சொல்லணும்.

என்ன மேட்டர்டா..

சரண்யாவை ஃபேஸ் புக் ல புடிச்சேண்டா… பிரண்ட் ரிக்வஸ்ட் அக்ஸப்ட் பண்ணிட்டா.

என்னடா, முகம் தெரியாதவனுக்கெல்லாம் அக்ஸப்ட் பண்றா…  தொடக்கமே சரியில்லையே !

போடா இவனே.. வாயை டெட்டால் ஊத்திக் கழுவு. இதுக்கே ஏண்டா சந்தேகப் படறே…. பேஜ்ல ஏதும் விவகாரமான விஷயங்கள், லிங்க்கள் ஏதும் இல்லடா… ரொம்ப நல்ல பொண்ணா தெரியறா !

ம்ம்.. என்னை அன்ஃபிரண்ட் பண்ணிட்டேல்ல ?

டேய் பண்ணிட்டேண்டா… டைப் பண்ணி பண்ணி கை வலிக்குது. நீ பேசாம ஆர்.கே கடை பக்கம் வா… மிச்சத்தை பேசுவோம்.

வரேன். கிவ் மி ஃபைவ் மினிட்ஸ். நானும் சரண்யாக்கு ஒரு பிரண்ட் ரிக்வஸ்ட் குடுத்துட்டு வரேன் பாக்கலாம் என்ன பண்றான்னு..

சொல்லிக் கொண்டே ஃபேஸ் புக் நுழைந்து சரண்யாவுக்கு ஒரு நட்பு விண்ணப்பம் கொடுத்து விட்டு எழுந்தான் சதீஷ்.

அவனுக்கும் ஒரு தம் அடிப்பது அவசியம் போல தோன்றியது. எழுந்தான். சோர்வாக இருந்தது. எழுந்தான். இடதுபக்கம் இருந்த வாட்டர் பாட்டிலைத் திறந்து அப்படியே வாயில் சரித்தான். தண்ணி குடிக்கவே மறந்து போவுது, எழவு என்று தன்னையே திட்டிக் கொண்டு நடந்தான்.

கார்த்தில் வாயெல்லாம் பல்லாக, கையில் தம்மோடு காத்திருந்தான்.

மச்சி, உன் ஆளு நல்லா பேசறா.. நான் கொஞ்சம் நோண்டி நோண்டி விஷயங்களைக் கேட்டுட்டிருக்கேன்.

டேய், சினிமால வராமாதிரி கடைசில நீ அவளை லவ் பண்ணித் தொலச்சிடாதே..

சே…சே.. என்ன மச்சி, என்னைப் பத்தித் தெரிஞ்சுமாடா இப்படி சொல்லிட்டே…

டேய்.. உன்னப் பத்தி தெரிஞ்சதனால தாண்டா சொல்றேன்.

இருவரும் மாறிமாறிக் கலாய்த்துக் கொண்டிருந்தபோது மறுபடியும் போன் அடித்தது !

அதே ரவி ! சே.. இவனுக்கு வேற வேலையே இல்லையா  என புலம்பிக் கொண்டே “யா..ரவி.. டெல் மி”

சாரி சதீஷ்.. சுத்தமா மறந்துட்டேன். ரெண்டு பேரு இன்டர்வியூவுக்காக வந்திருக்காங்க. யூ நோ.. தேட் ஜாவா ரிக்வயர்மென்ட். கேன் யூ டேக் கேர்…

ஷூயர் ரவி… கேன் யூ சென்ட் மி த புரஃபைல்ஸ்..

ஆல்ரெடி அனுப்பிட்டேன்… 2 பேரு, சரவணன் ன்னு ஒரு பையன், மாலதி ன்னு ஒரு பொண்ணு…

ஓகே ரவி. ஐ வில் டேக் கேர்…

சொல்லிவிட்டுத் திரும்பினார் சதீஷ். முகத்தில் வழக்கத்துக்கு மாறாக ஒரு குட்டிப் புன்னகை.  ‘மச்சி, நான் ஒரு புரஃபைல் அனுப்பறேன். ஒரு இன்டர்வியூ பண்ணு. பேரு சரவணன்”

ஏன் நீ பண்ண வேண்டியது தானே..

ரெண்டு பேரு வராங்கடா… நீ ஒண்ணு பண்ணு, நான் இன்னொன்னு பண்ணு.

இன்னொரு ஆள் யாரு..

மாலதி

ஓ.. பொண்ணுங்கன்னா நீ இன்டர்வியூ பண்ணுவே, பசங்கன்னா நான் பண்ணணுமா… முடியாது. நீ சரவணனை இன்டர்வியூ பண்ணு, நான் மாலதியைப் பாத்துக்கறேன். இல்லேன்னா மவனே பேஸ் புக் ல சரண்யா கிட்டே உன் பேரு டேமேஜ் ஆயிடும்.

அது என்னவோ ஆயிட்டுப் போகட்டும், ஐ நீட் சம் ரிலாக்ஸேசன் மச்சி. நான் மாலதி கிட்டே பேசப் போறேன். ஒரு மணி நேரம் பேசப் போறேன் பாரேன் ! சிரித்தான்.

மாலை ஐந்து மணிக்கு மறுபடியும் ரவி அழைத்தார். ஐந்து மணி என்பது அரசாங்க அலுவலகங்களைப் பொறுத்தவரை கதவைப் பூட்டி விட்டுக் கிளம்பும் நேரம். ஐ.டியைப் பொறுத்தவரை ஒரு பாதி நாள் கடந்த உணர்வு. எல்லோரும் பிஸியா வேலை பாத்துட்டு இருக்கிற டைம். காலைல தான் கிளையண்ட் விசிட் பற்றிப் பேசினாரு, இப்போ அதுக்குள்ள ஸ்டேட்டஸ் கேக்கப் போறாரோ ? கடுப்பில் போனை எடுத்தான் சதீஷ்.

சொல்லுங்க ரவி.

ஹவ் ஈஸ் த கிளையன்ட் விசிட் பிரிபரேஷன்ஸ் கோயிங் ?

வேலை ஆரம்பிச்சாச்சு ரவி… எல்லாம் சரியா பண்ணிடலாம்.

ஏதாச்சும் தேவைன்னா எனக்கு உடனே கால் பண்ணு. சரி.. அந்த இன்டர்வியூ எப்படி போச்சு ?

சரியில்லை ரவி.. ரெண்டுமே ரிஜக்ட் பண்ணியாச்சு.

ஓ… ரீசன் ? நாட் வர்த்தி ?

சரவணனுக்கு எக்ஸ்பீரியன்ஸ் கம்மி. அவனால தனியா வேலை பண்ண முடியாது. மாலதி ஈஸ் குட்.. பட் ..

பட் வாட் ?

ஷீ ஈஸ் பிரக்னென்ட் ரவி. கர்ப்பமா இருக்காங்க. இந்த நேரத்துல நாம புராஜக்ட்ல போடறது வேஸ்ட். கொஞ்ச நாளிலயே வளைகாப்பு, பிரசவம் அது இதுன்னு கெளம்பிடுவாங்க. ஆபீஸ் வந்தாலும் அவங்களால எக்ஸ்டன்ட் பண்ணி ரொம்ப நேரம் வர்க் பண்ண முடியாது. சனி ஞாயிறெல்லாம் வர முடியாது. நிறைய சேலஞ்சஸ்.

ஓ.. ஓகே.. அக்ரீட்.. பட் டெலிவரி டைம்ல ஏன் வேலை தேடறாங்க இவங்கல்லாம் ?

டெலிவரி டைம் ஆகல. ஐ திங்க் ஷி ஈஸ் இன் ஹர் சிக்ஸ்த் மந்த். எப்படியும் இன்னும் மூணு நாலு மாசத்துல நமக்குத் தலைவலி தான்.

ஒரு மூணு மாசம் நல்ல வர்க் பண்ணினாலே போதும் இல்லையா ? அதுக்குள்ள வேற ஆளை நாம தேடிக்கலாமே ?

இல்ல ரவி. இந்த டைம்ல அடிக்கடி ரெஸ்ட் எடுக்கறேன், ஸ்கேன் எடுக்கறேன், பையன் உள்ளே உதைக்கிறான் வீட்டுக்கு போறேன்னு படுத்தி எடுப்பாங்க. டார்ச்சர். கல்யாணம் ஆகப் போறவங்களையும், கர்ப்பமா இருக்கிறவங்களையும் கொஞ்சம் ஒதுக்கி வைக்கிறது தான் நல்லது. எல்லா ஐடி கம்பெனியும் அப்படி தான் பண்றாங்க. லெட்ஸ் டு த சேம்.

யா.. ஐ.. அக்ரீட்… கல்யாணம் ஆகற டைம்லயும் தே வில் பி பிஸி .. தென் ஹனி மூன்.. அது இதுன்னு வேலைல கவனம் இருக்காது. எனிவே.. நான் உன்னோட முடிவுக்கே அதை விட்டுடறேன். நாளைக்கு இன்னும் கொஞ்சம் ரெஸ்யூம்ஸ் அனுப்பறேன். ஹேவ் அ லுக். கிளையன்ட் விசிட் தான் முக்கியம், கவனம்.

போனை வைத்தார் ரவி.

நாள் முழுதும் ஏதோ ஒரு அலுப்பில் போனது போன்ற உணர்வு சதீஷ்க்கு. ஒரு காபி குடித்தால் தேவலாம் என்று தோன்றியது. அலுவலகத்துக்கு உள்ளேயே இருந்த மெஷினுக்குக் கீழே பேப்பர் டம்ளரை வைத்து, ‘சவுத் இந்தியன் காபி’ எனும் பட்டனை அமுக்கினான். குட்டி குட்டியாய் நான்கு டியூப்கள், இரண்டில் காபியும், இரண்டில் பாலும் வந்து டம்ளரில் விழுந்து கலந்தது. கொஞ்சம் சீனியும் போட்டு ஒரு கலக்கு கலக்கி, அந்த வாசனையை முகர்ந்த போது ஏதோ ஒரு மிகப்பெரிய நிம்மதி போல தோன்றியது. அந்த நிம்மதியில் தான் சரண்யா நினைவுக்கு வந்தாள்.

வேகமாய் வந்து கணினியின் முன் அமர்ந்து ஃபேஸ் புக் நுழைந்தான்.

சரண்யா ரொம்ப நேரத்துக்கு முன்பே பிரண்ட் ரிக்வஸ்ட் அக்ஸப்ட் செய்திருந்தாள். இவ எப்பவுமே ஃபேஸ் புக்கில தானோ ? என்று யோசித்துக் கொண்டே பார்த்தான். சேட் வின்டோவில் அவளுடைய பெயருக்கு முன்னால் பச்சை விளக்கு எரிந்தது. சேட் பண்ணிப் பார்ப்போமே !

ஹாய்..

கொஞ்ச நேர தாமதத்துக்குப் பின் சரண்யாவிடமிருந்து பதில் வந்தது.

ஹாய்.. ஹவ் ஆர் யூ.

நான் யாருன்னு தெரியுமா ?

யெஸ்.. நேற்றில இருந்து தெரியும்.

ம்ம்ம்… எப்டி இருக்கீங்க ?

நல்லா இருக்கேன். நீங்க ?

நலம் ! கிளையன்ட் விசிட் ஒண்ணு இருக்கு.. சோ… டென்ஷன்.

ம்ம்… என்னிக்கு ?

மண்டே !

ஓ.. சோ சூன்…. நீங்க தான் விசிட் மேனேஜரா ?

யா.. கைன்ட் ஆஃப்… உங்களுக்கு எப்படி போவுது வேலை ?

ம்ம்.. போவுது…

கொஞ்சம் டல்லா இருக்கீங்களா சரண்யா ? பேச்சில சுவாரஸ்யம் கம்மியா இருக்கே ? பேசப் புடிக்கலையா ? பேசற ஆளைப் புடிக்கலையா ? கொஞ்ச நேரம் சேட் பண்ணிய பிறகு ஒரு சின்ன புன்னகை ஐக்கானுடன் கேட்டான் சதீஷ்.

நோ.. நோ.. அப்படியெல்லாம் இல்லை. உங்க பிரண்ட் கார்த்திக் கிட்டே கூட காலைல இருந்து ரொம்ப நேரம் பேசினேன்.

எ..என் பிரண்ட் கார்த்திக் ? சதீஷின் விரல் தடுமாறியது.

யா.. கார்த்திக் ராஜாராம். உங்க பிரண்ட் தானே ?

ம்ம்.. யா.. பட்.. அவன் ஃபேஸ் புக் ல இருக்கானா ? என்னோட பிரண்ட் லிஸ்ட்ல இல்லையே ? எப்படி என் பிரண்ட் ன்னு தெரியும் ?

ஆமா, இதுக்கெல்லாம் எஃப்.பி.ஐ லயா வேலை பாகணும். அவனோட ஆல்பம் போய் பாத்தேன், நீங்க ரெண்டு பேரும் கட்டிப் புடிச்சு போஸ் குடுத்திருந்தீங்க.

ஓ.. ஓகே.. ஓகே.. குட். அவன் ஃபேஸ் புக் ல இருக்கானா ? நான் இணைச்சுக்கறேன்.

ம்ம்… சரி…

சொல்லி முடித்ததும் போன் அடித்தது, லைனில் கார்த்திக். இதுக்குப் பேரு தான் டைமிங் போல !

மச்சி.. குட் நியூஸ்டா.. அவ கிட்டே மேட்டரெல்லாம் போட்டு வாங்கிட்டே இருக்கேன். நிறைய இன்ஃபர்மேஷன் கிடைச்சிருக்கு. நாம ஃப்ரண்ட்ஸ்ங்கற விஷயம் அவளுக்குத் தெரிஞ்சா விஷயம் கறக்க முடியாது’ கார்த்திக் இருபத்து மூன்றாம் புலிகேசி முன்னால் நிற்கும் ஒற்றன் போல பேசிக்கொண்டே போனான்.

‘டேய் இவனே.. நீ போட்டு வாங்கலடா.. அவ போட்டு குடுத்துட்டே இருக்கா. எல்லாத்துக்கும் காரணம் ஒரு போட்டோ… அதெல்லாம் நான் அப்புறம் சொல்றேன் போனை வை’.

போனை வைத்து விட்டு சேட் வின்டோவில் மறுபடியும் காதலிக்கத் தொடங்கினான் கார்த்திக்.

‘பட்.. ஐ..ஃபீல் நீங்க கொஞ்சம் டல்லாவே இருக்கீங்க’ – கார்த்திக் டைப்பினான்.

யா.. நிஜம் தான், மனசு சரியில்லை.

ஏன் ? என்ன விஷயம் ?

இல்ல… ஒரு பழைய விஷயம்..

பழைய விஷயமா ? யாராச்சும் உன்னை லவ்…. இழுத்தான் கார்த்திக்.

சேச்சே… அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை…

தென் வாட் ?

மை சிஸ்டர்… ஒரு கம்பெனில வர்க் பண்ணிட்டு இருந்தா. அங்கே லே ஆஃப் வந்துச்சு. அது தான் சாக்குன்னு அவளை வேலையை விட்டுத் தூக்கிட்டாங்க. எங்கயும் வேலை கிடைக்க மாட்டேங்குது.

ஓ.. இதான் மேட்டரா… என் கம்பெனிக்கு அனுப்புங்க, நானே டிரை பண்ணி எடுத்துடறேன்.

உங்க கம்பெனில தான் இன்னிக்கு இன்டர்வியூ அட்டென்ட் பண்ணினா. சம் இடியட் இன்டர்வியூ பண்ணினானாம். ஒரு மணி நேரம் பேசிட்டு, நீங்க கர்ப்பமா இருக்கீங்க, சாரி.. இது ஷார்ட் டர்ம் புராஜக்ட் ஒத்து வராது.. வேற கம்பெனி தேடுங்க ன்னு சொன்னானாம். இடியாட்டிக் ஃபெல்லோஸ். ஏன் கர்ப்பமானா வேலை கொடுக்க மாட்டானா ? அவன் என்ன கர்ப்பம் இல்லாம ஹெவன்ல இருந்து விழுந்தானா ?

சரண்யாவின் மெசேஜைப் பார்த்து தலையில் கை வைத்தான் சதீஷ்..

உங்க அக்கா பேரு ?

மாலதி ! இன்டர்வியூ பண்ண வந்தவன் வேற தம் அடிச்சுகிட்டு நாற வாயோட வந்தானாம். எனக்குப் புடிக்காத விஷயம் இந்த தம் அடிக்கிறது. ஐ சிம்ப்ளி கான்ட் ஸ்டான்ட். நீங்க தம் அடிப்பீங்களா ? அடிக்க மாட்டீங்கன்னு வீட்ல சொன்னாங்க.

நோ..நோ.. சிகரெட்ல எந்தப் பக்கம் தீ வைக்கணும்ன்னே எனக்குத் தெரியாது, வழிந்தான்!

ம்ம்.. லேட் ஆகுது.. ஆபீஸ் பஸ் போயிடும். நான் கெளம்பறேன். நாளைக்கு பேசலாமா ?

யா.. பை..பை..

பேச்சை முடித்துக் கொண்டு தலையில் கைவைத்தான் சதீஷ். கிணறு வெட்ட பூதம் கிளம்பலாம், தப்பில்லை. ஒரு சின்ன பள்ளம் தோண்டினதுக்கே இவ்ளோ பூதமா ? ஒவ்வொரு பிரச்சினையாய் எப்போது தான் தீர்க்கப் போகிறேனோ ! ஆரம்பமே இப்படின்னா.. போகப் போக எப்படியோ !

தலையில் கை வைத்துக் கொண்டிருந்தவனுடைய போன் மீண்டும் சிணுங்கியது ! இப்போது ரவி, மானேஜர். எரிச்சலில் போனை கட் பண்ணினான் சதீஷ். அடுத்த பூதத்துக்கான வரவேற்புப் பத்திரம் அது என்பதை அறியாமலேயே !

சிறுகதை : சந்தித்த கண்கள்.

கதவு தட்டப்படும் ஓசை கேட்டு கேள்வியோடு தலையை உயர்த்திக் கடிகாரத்தைப் பார்த்தான் ரமேஷ். மணி இரவு பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. உள்ளறையில் ரம்யா ஏதையோ புரட்டிக் கொண்டிருந்தாள். இன்னும் தூங்கவில்லை. சன்னல் வழியே கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருட்டும், இருட்டு சார்ந்த இடங்களுமாய் இருந்தது. தெருவிளக்குகள் இரவின் அடர்த்தியை ஆங்காங்கே அழித்திருந்தன. தெருநாய்களில் சில இரவின் அமைதியைக் தவணை முறையில் கலைத்துக் கொண்டிருந்தன.

டொக்…டொக்…. கதவு மென்மையாய் தட்டப்பட்டது.

ரமேஷ் கதவை நெருங்கி, கதவில் பொருத்தப்பட்டிருந்த கோலி சைஸ் கண்ணாடியில் கண்ணை வைத்து வெளியே பார்த்தான்.

வெளியே ஒரு இளம் பெண். அழகான இளம் பெண் ! அவளுக்குப் பின்னால் யாரேனும் இருக்கிறார்களோ ? கதவைத் திறந்ததும் அடித்துப் போட்டுக் கொண்டு எல்லாவற்றையும் பிடுங்கி விட்டு ஓடிவிடுவார்களோ ? இப்போதெல்லாம் திருட்டு தினம் தினம் புதிது புதிதாய் அவதாரம் எடுத்துக் கொண்டே இருக்கிறது. ரமேஷின் மனம் சிந்தனையைக் கிளறியது. வேறு யாரும் தென்படவில்லை.

முதல் வேலையாக வெளியே மின் விளக்கைப் போட்டான். அந்தப் பெண் இப்போது வெளிச்சத்தில் குளித்தாள். இன்னும் அழகாய்த் தெரிந்தாள்.

சங்கிலியைக் கதவிலிருந்து விலக்காமல் கதவை ஒரு முப்பது டிகிரி அளவுக்குத் திறந்து வெளியே மெல்ல முகம் நீட்டினான்.

யெஸ்… யாரைப் பாக்கணும் ?

இது உங்களுதா பாருங்க ?

அந்த இளம் பெண் கையில் வைத்திருந்த அந்த சின்னப் பையை நீட்டினாள். அந்தப் பையைப் பார்த்ததும் சட்டென சங்கிலியை விலக்கி கதவை முழுசாய்த் திறந்தான் ரமேஷ். அதற்குள், ‘யாருங்க அங்கே’ எனும் கேள்வியோடு ரம்யாவும் வந்து சேர்ந்தாள்.

இல்ல… நம்ம பை ஒண்ணை மிஸ் பண்ணியியிருக்கோம்.. அதான் இவங்க…. ஓ..சாரி, பிளீஸ் கம் இன்.

அந்தப் பெண் உள்ளே நுழைந்தாள்.

இது எங்க பை தான்…

ஆமா தெரியும். அதனால தான் உங்க கிட்டே கொண்டு வந்தேன். ஏகப்பட்ட பணம் வெச்சிருக்கீங்க, முக்கியமா உங்க பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், கிரடிட் கார்ட்ன்னு சர்வமும் வெச்சிருக்கீங்க. அதான் கையோடு குடுத்துட்டு போயிடலாமேன்னு வந்தேன்.

ஓ… ரொம்ப ரொம்ப நன்றி. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. எப்படி இதை மிஸ் பண்ணினேன்னே எனக்கு ஞாபகம் இல்லை… இது உங்ககிட்டே எப்படி ?

நீங்க வந்த அதே ஃபிளைட்ல தான் நானும் வந்தேன். நீங்க என்னைக் கவனிச்சிருக்க மாட்டீங்க. ஆனா நான் பார்த்தேன். வெளியே பாகேஜ் கிளெய்ம் ஏரியால நீங்க இந்த பையை இன்னொரு ட்ராலி மேல தவறுதலா வெச்சுட்டீங்கன்னு நினைக்கிறேன். மே பி உங்களுக்கு நிறைய செக் இன் இருந்திருக்கலாம்.

ஆமா.. நாலஞ்சு பெட்டி, கைப் பை எல்லாம் வெச்சிருந்தோம்.. ரமேஷ் அசடு வழிந்தான்.

நீங்க விட்டுட்டுப் போறதைப் பாத்தேன். உங்க கிட்டே குடுக்கலாம்ன்னு வேகமா வந்தேன். ஆனா அதுக்குள்ள நீங்க வெளியே வந்துட்டீங்க. செக்யூரிடி செக் கிராஸ் பண்ணி வெளியே வந்தா நீங்க இல்லை. சரி, செக்யூரிடி ஆபீசர் கிட்டே குடுக்கலாம்ன்னு நினைச்சேன். ஆனா அதுக்கு முன்னாடி உள்ளே என்னதான் இருக்குன்னு பாக்கலாமேன்னு ஒரு கியூரியாசிடி. பேட் ஹேபிட் ஐ நோ. பட், பார்த்தா கணிசமான யூரோ வெச்சிருந்தீங்க. பாஸ்போர்ட், கார்ட் அது இதுன்னு ஏகப்பட்ட விஷயங்கள். ஒருவேளை உங்களுக்கு சரியான நேரத்துல இது கிடைக்கலேன்னா தவிச்சு போயிடுவீங்களேன்னு தான், வீடு தேடி வந்தேன்.

படபடவென பேசிவிட்டு, பையைக் கொடுத்து விட்டு எழும்பினாள் அவள்.

நீங்க.. எங்கே தங்கியிருக்கீங்க ?

இனிமே தான் பாக்கணும். இப்போ தான் வந்திருக்கேன். ஒரு வாரம் சென்னை வாசம் தான். அப்புறம் மறுபடியும் ஜெர்மன் போயிடுவேன். ஒரு புராஜக்ட் வர்க், ஃபீல்ட் வர்க். சிரித்தாள்.

இந்த நட்ட நடு ராத்திரில எங்க போவீங்க ? உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா, யூ கேன் ஸ்டே வித் அஸ் டுடே…

ஓ.. நோ.. யாரை வேணுமானாலும் தொந்தரவு பண்ணலாம். ஆனா ஒரு இளம் ஜோடியை தொந்தரவு பண்ணக் கூடாது, நான் வரேன்.

நோ…நோ… பிளீஸ்… நாளைக்கு நானே உங்களை எங்க வேணுமோ டிராப் பண்றேன். நைட் ஈஸ் நாட் சேஃப். அதுவும் வெளியூர் பொண்ணுங்களுக்கு. ரமேஷ் அவசரமாய்ச் சொன்னான்.

ஆமா.. இன்னிக்கு இங்கே தங்குங்களேன். எங்களுக்கு சிரமம் ஏதும் இல்லை, நீங்க பண்ணினதை விட பெரிய உதவியா நாங்க பண்ணப் போறோம். ரம்யாவும் தன் பங்குங்கு அழுத்தம் கொடுத்தாள்.

கடைசியில் வலது பக்கம் இருந்த படுக்கை அறை பரபரவென ஒழுங்கு படுத்தப்பட்டு அவளுக்காகத் தயாரானது. தரையில் சிந்திக் கிடந்த புத்தகங்களை ரமேஷ் அள்ளினான். நடுவில் இருந்த மேஜையை ஓரமாய்த் தள்ளி, அதன் மீது புத்தகங்களை வரிசையாய் வைத்தான். படுக்கைக்கு மேல் கிடந்த பழைய பொருட்களையெல்லாம் ரம்யா அள்ளி ஓரமாய் ஒரு இடத்தில் வைத்தாள். அறை சுத்தமாய்த் தான் இருந்தது. ஒரு புது படுக்கை விரிப்பை விரித்து, அதன் மீது தலையணை வைத்து, ஏசியை ஆன் பண்ணியதும் அறை பளிச் என்றானது !

குட் நைட். நாளைக்கு காலைல உங்களை நானே டிராப் பண்றேன். டோன்ட் வர்ரி, ஃபீல் அட் ஹோம்… சொல்லிவிட்டு ஸ்நேகமாய்ப் புன்னகைத்தான் ரமேஷ்.

படுக்கையறையில் போய் கதவை மூடியபோது ரம்யா சொன்னாள்.

ரமேஷ்… எனக்கென்னவோ இந்தப் பொண்ணை எங்கேயோ பாத்த மாதிரியே இருக்கு.

ஏர்போர்ட்ல பாத்திருப்பே.

நோ.. நோ… வேற எங்கயோ பார்த்தேன். இந்த தீர்க்கமான கண்களை என்னால மறக்க முடியல. சம்திங் ஈஸ் தெயர்.. ரம்யா தலையைச் சொறிந்தாள்.

சரி, நீ ஆர அமர யோசிச்சுட்டு காலைல நான் எழும்பினதும் சொல்லு, எனக்குத் தூக்கம் வருது. சொல்லிக் கொண்டே பொத் என மெத்தையில் சரிந்தான் ரமேஷ். மெத்தை மெல்லிய தாள லயத்தோடு ஆடி அடங்கியது !

அந்த இரவு மெல்ல மெல்ல எல்லாருக்கும் தூக்கத்தை இமைகளில் இறக்கி வைத்தது.

காலையில் அலாரம் அடித்த போது மணி எட்டு !

மெதுவாகக் கண்களைத் திறந்த ரம்யாவின் மனதில் இரண்டு செகண்ட்களுக்குப் பிறகு தான் சட்டென நினைவுக்கு வந்தாள் அந்தப் பெண். !

சட்டென போர்வை விலக்கி பக்கத்துப் படுக்கையறைக்குப் போனாள். அறைக் கதவு திறந்திருந்தது. அந்தப் பெண்ணைக் காணோம்,

ஒருவேளை எதையாவது சுருட்டிக் கொண்டு போயிருப்பாளோ ? அந்த எண்ணமே சட்டென அவளுக்குள் ஒருவித கிலியைப் பரப்பியது. சே,… அப்படிப்பட்டவ ஏன் வீடு தேடி வந்து பையைத் தரணும். ஒருவேளைச் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கிற டெக்னிக்கோ ?

பதட்டத்துடன் வெளியே வந்தாள் ரம்யா. அறையிலிருந்து வெளியே வந்த ரமேஷும் அவளுடைய பதட்டத்தைக் கொஞ்சம் கண்களில் வாங்கினான்.

ஹேய்.. குட்மார்ணிங்…. வெளியிலிருந்து குரல் கேட்டது. அவள் தான் ! அவளே தான். ரொம்பவே பிரஷ் ஆக இருந்தாள்.

கு…குட் மார்ணிங்… சீக்கிரம் எழும்பிட்டீங்க போல !

ஆமாமா.. அஞ்சுமணி ஆச்சுன்னா போதும் என்னோட பயாலஜிகல் கிளாக் என்னை படுக்கையில இருந்து உருட்டித் தள்ளிடும். அப்புறம் என்னால தூங்கவே முடியாது. விக்கி கிட்டேயிருந்து கத்துகிட்ட கெட்டபழக்கத்துல இது ஒண்ணு.. சிரித்தாள்.

விக்கி ?

ஓ.. யா.. ஹீ ஈஸ் மை ஹஸ்பன்ட்.. விக்னேஷ். சுறுசுறுப்புக்கு எறும்பு கூட அவன் கிட்டே டிரெயிங் எடுக்கணும். அஞ்சு மணிக்கு எழும்புவான். ஷூவைக் கால்ல கட்டிகிட்டு ஹெட்போனைக் காதுல மாட்டிக்கிட்டு ஓடுவான். காதுல சுப்ரபாதம் ஓடும், கால் தரையில ஓடும். நான் ஓடமாட்டேன்பா… ‘வினோ.. டெய்லி ஓடணும்மா.. ஒடினா தான் லைஃப் ஓடும்’ ன்னு சொல்லுவான்.

வினோ ?

ஓ.. சாரி, தட்ஸ் மி. வினோதினி.. சுருக்கமா வினோ.

நல்ல பெயர் பொருத்தம், விக்கி வினோ ! லவ் மேரேஜா ?

யா… லவ் அன்ட்… மேரேஜ் அப்புறம் மேரேஜ் அன்ட் லவ். நீங்க கூட ரமேஷ் ரம்யா… ஏதோ கதைக்காக எழுதற பெயர் மாதிரி இருக்கு ! லவ்வா ?

யா… இட்ஸ்… யா.. லவ் மேரேஜ் தான். பேசிட்டே இருக்கேன்.. உங்களுக்கு ஒரு காபி கூட குடுக்கல, பிளீஸ் வெயிட்… ஒரு அஞ்சு நிமிஷம் குடுங்க. சொல்லிக் கொண்டே சமையலறை நோக்கிப் போனாள் ரம்யா.

ஹேய்… என்னது இது… யாரு காபி போட்டது ? – ரம்யாவின் குரல் சமையலறையில் இருந்து ஒலித்தது.

சாரி,, அதுவும் நான் தான். கொஞ்சம் எக்ஸ்ட்ரா உரிமை எடுத்துகிட்டேன் போல. நானும் விக்கியும் டெய்லி போட்டி வெச்சுப்போம். யாரு முதல்ல காஃபி போடறதுன்னு. அவன் ரொம்ப ஸ்மார்ட்.. அடிக்கடி என்னைத் தோக்கடிச்சுடுவான். நான் அசந்து தூங்கும்போ காபி குடுத்து குட்மார்ணிங் சொல்லுவான். வாட் எ லவ்லி வே டு ஸ்டார்ட் எ டே… ! இன்னிக்கு நான் எழும்பினேன், என் ரொமான்டிக் ராஸ்கல் ஈஸ் நாட் ஹோம். அதான் உங்களைத் தோக்கடிப்போம்ன்னு காஃபி, பிரட் சான்ட்விச் பண்ணினேன். தப்புன்னா… மன்னிச்சுக்கோங்க.

சே..சே.. அப்படியில்லை.. உங்களுக்கு நாங்க தரணும், நீங்க என்னன்னா.. எங்களுக்கு காபி போட்டு தரீங்க.

அட.. இதுல என்ன இருக்கு. நீங்க தான் ஃபீல் அட் ஹோம் ன்னு சொன்னீங்க. அப்படின்னா, இப்படி தான். சிரித்தாள்.

உங்க லைஃப் ரொம்ப ஜாலியான லைஃப் ஆ இருக்கும் போல ! ரம்யா சிரித்துக் கொண்டே சொன்னாள்.

ஓ யெஸ்.. அவனை ஒரு நாள் பிரியறதே கஷ்டமான விஷயம். அவனுக்காக உயிரைக் கூட குடுப்பேன். அவ்ளோ லவ்லி அவன். இந்த ஒரு வாரத்தோட வேலையை முடிச்சுட்டு எப்படா போவோம்ன்னு இருக்கு. ஐ ஆம் ஆல்ரெடி மிஸ்ஸிங் ஹிம்.

அவரு என்ன பண்றாரு.

லவ் தான்…

இல்ல என்ன வேலைன்னு.

ஸீ.. என்னை பொறுத்தவரை அவன் என்ன வேலை பண்றாங்கறது எனக்கு முக்கியமில்லாத விஷயம். அவன் லவ் பண்ணணும். பண்ணிட்டே இருக்கணும். அதான் எனக்கு முக்கியம். நான் ரொம்ப ஓவரா பேசறேனோ ?

இல்ல, சுவாரஸ்யமா பேசறீங்க !

இந்த ஒரு வார்த்தையே போதும், நான் கிளம்பறேன். உங்களை ஒரு நாள் டிஸ்டர்ப் பண்ணினது போதும்.

எங்கே போறீங்க ?

ஹோட்டல்.

ஒண்ணு சொன்னா கோச்சுக்கமாட்டீங்களே ? ரம்யா கேட்டாள்

சொல்லுங்க

ஒரு வாரம் தானே ? எங்க கூட தங்கிக்கலாமே ?

சே..சே.. ஒரு நாள் தங்கினதே அதிகம். இளம் தம்பதியர் வாழ்க்கைல ஒரு கரடி சுத்திட்டு இருக்கக் கூடாது.

நோ..நோ.. பிளீஸ்… எங்களுக்கு ஒரு தொந்தரவும் இல்லை. ரொம்ப லோன்லியா இருக்கு, நீங்க ஒரு வாரம் தங்கிக்கோங்க. எங்களுக்கும் ஒரு துணையா இருக்கும்.

ரம்யாவும், ரமேஷும் மாறி மாறி வற்புறுத்தியபின் வினோதினியால் மறுக்க முடியவில்லை. சிரித்துக் கொண்டாள். சிரித்துக் கொண்டே ரம்யாவை வினோ பார்த்தாள். அந்த பார்வையைச் சந்தித்தபோது ரம்யா மனசுக்குள் மீண்டும் சொல்லிக் கொண்டாள் !

‘இந்த கண்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன்’ எங்கே.. எங்கே ?

கேள்விகளுடன், ஆளாளுக்கு அவரவர் வேலை பார்க்கக் கிளம்பிவிட்டார்கள் !

மாலையில் வினோதினி வீடு திரும்பிய போது ரம்யாவும், ரமேஷும் தீவிரமான வாக்குவாதத்தில் இருந்தார்கள்.

ஹலோ….. எனிபடி ஹோம் ! குரல் கொடுத்தாள் வினோ.

சட்டென உள்ளறை அமைதிக்குள் தாவ, ரம்யா வெளியே வந்தாள், கண்கள் கலங்கியிருந்தன.

ஏய்.. என்னாச்சு ? எனிதிங் ராங் ? கேட்டுக்கொண்டே வீட்டில் நுழைந்தாள் வினோ.

இல்ல.. சின்ன ஒரு சண்டை.

ம்ம்.. சின்னச் சின்ன சண்டைகள் வாழ்க்கைய ரொம்ப அழகாக்கும். ஒரு தோட்டத்துல மலர்கிற சின்னச் சின்ன புற்களைப் போல. அதே நேரம் சின்னச் சின்னச் சண்டைகள் நம்ம வாழ்க்கையையே நாசமாக்கவும் செய்யும்… படகில விழற ஓட்டை மாதிரி. முதல்ல அடைக்கிறது ஈசி, அப்புறம் தண்ணீர் நிறைஞ்சுடும். ஓட்டையைக் கண்டு பிடிக்கிறதே பெரும்பாடா இருக்கும். தண்ணீரை இறைக்கிறதே தலைவலியாகும். தண்ணீரை இறைச்சு ஓட்டையைக் கண்டுபிடிச்சு அடைக்கிறதுக்குள்ள நாம முழுசா மூழ்கிப் போகவும் செய்வோம்.

ம்ம்… தலையாட்டினாள் ரம்யா.

நானும் விக்கியும் ஒரு உடன்படிக்கை போட்டுட்டோம். சண்டைல யாரு முதல்ல மன்னிப்புக் கேக்கறதோ அவங்க தான் வின்னர். அவன் தான் அடிக்கடி ஜெயிப்பான். அவன் கூட போட்டி போட்டு நானும் ஜெயிப்பேன். நீங்களும் சண்டை போடுங்க. குட்டிக் குட்டியா. ஆனா ஒரே ஒரு அக்ரீமென்ட். நைட் தூங்கப் போறதுக்குள்ள சமாதானமாயிடணும். சூரியன் மறையும்போ உங்க கோபமும் போகணும். மறு நாள் புதுசா விடியணும். அதான் முக்கியம் !

நீங்க நல்லா பேசறீங்க, சுவாமிஜி மாதிரி – ரமேஷ் சிரித்தான்.

நான் அப்படி தான். தோணறதை பேசிட்டே இருக்கிற லொடக்கு வாய். எதையும் மறச்சு வைக்க மாட்டேன். அன்பு இருந்தா அதை அப்படியே காட்டுவேன். வெறுப்பு இருந்தா அதையும் காட்டுவேன். ஆனா எல்லாத்த விடயும் விக்கி கூட அன்பா இருக்கிறது தான் முக்கியம்ன்னு எப்பவுமே நினைச்சுப்பேன். என்னதான் கோபம் இருந்தாலும் விட்டிடுவேன். அவன் செய்த நல்லது மட்டுமே நெனச்சுப்பேன். எல்லாருக்குமே நினைச்சுப் பாக்க நிச்சயம் நல்ல விஷயம் நிறைய இருக்கும் இல்லையா ?

ம்ம்….

நியூட்டனின் மூணாவது விதி மாதிரி, நல்லதுக்கு சமமா கெட்டதும் இருக்கும். ஏன் கெட்டதை எடுக்கிறீங்க ? வய் நாட் குட் திங்க்ஸ் ! ? நல்ல விஷயங்களை மட்டுமே நாம பாக்கப் பழகினா, நம்மைச் சுற்றி நல்லது நிறைஞ்சுட்டே இருக்கும். லைட் போட்டதும் இருட்டு போயிடுதுல்ல ! கட்டிலுக்குக் கீழே இன்னும் இருட்டு இருக்கே ன்னு நினைக்காம, கட்டிலுக்கு மேலே வெளிச்சம் இருக்கேன்னு நினைக்கலாம்ல !

வினோவின் மனம் திறந்த உரையாடல் அவர்களுக்குள்ளே ஏதோ ஒரு சின்ன சிந்தனையைத் தூண்டி விட்டிருக்க வேண்டும். அதன் பின் அடுத்த நாள் சண்டையின் குரல் ஏதும் இல்லை. வெளியே போலாமா என்று அவர்கள் ஒன்றாக அழைத்த போது வினோவுக்கு ஆச்சரியமாய் இருந்தது.

கடற்கரை மணலில் கடலை கொறித்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள் மூவரும். அவர்களிடையே அன்னியோன்யம் அதிகரித்திருந்தது.

நான் ஒரு குட்டிக் கதை படிச்சேன். வழக்கம் போல வினோதான் ஆரம்பித்தாள்.

சொல்லுங்க.

இரண்டு பேர் ஏன் சண்டை போடும்போ கத்திக் கத்திப் பேசறாங்க தெரியுமா ?

எரிச்சல்னால,

கோபத்தினால

ம்ம்… அதே நேரம் லவ் பண்றவங்களைக் கவனிச்சிருக்கீங்களா ? போனுக்கே கேக்காத மாதிரி பேசுவாங்க. மணிக்கணக்கா காது கடிப்பாங்க. மூச்சுக்கே கேக்காத மாதிரி முணு முணுப்பாங்க. காரணம் என்ன தெரியுமா ? சிம்பிள். லவ் பண்ணும்போ இரண்டு மனசும் ரொம்ப நெருக்கமா இருக்கும். அவங்க மெல்லப் பேசினாலே கேக்கும். அவங்க மௌனமா இருந்தா கூட கேக்கும். அதே நேரம் வெறுப்பு வந்துச்சுன்னா இரண்டு மனசும் விலகிப் போகும். அதனாலதான் கத்திக் கத்திப் பேச வேண்டியிருக்கு. சண்டைக்காரங்க இரண்டு பேர் பக்கத்துல இருந்தா கூட கத்திப் பேசினா தான் கேக்கும். காரணம் உடல் பக்கத்துல இருக்கு, பட் மனசு ரொம்ப ரொம்ப தூரமா இருக்கு !

வாவ்… லவ்லி !

நான் சண்டை போடும்போ நெனச்சுப்பேன். ‘அடேய் வினோ.. உன் மனசு தூரமா போவுதுடி.. கொஞ்சம் கிட்ட வா’ ன்னு. சிரித்தாள் வினோ.

உண்மை தான் வினோ. லைஃப்ல உன்னதமான விஷயம் அன்பு தான். அன்பு செய்யப் படுகிறோம் என்கிற ஒரு சின்ன பீலிங் இருக்கே. அது தான் வாழ்க்கையை ரொம்பவே அழகாக்குது. அந்த அன்புக்காகத் தானே ஒவ்வொருத்தரும் ஏங்கறோம். பணமா, வசதியா, செல்வமா ? எது நமக்கு நிம்மதி தரும். கையைப் புடிச்சிட்டு.. டேய்.. நான் உனக்காக இருக்கேன்டா.. ங்கற ஒரு அன்பான தொடுதல் தானே – ரம்யா சொல்லும் போதே கண்கள் கலங்கின.

ரமேஷும் தலையாட்டினான்.

உண்மை தான். குடும்பத்துல நடக்கிற சண்டைகளுக்கெல்லாம் காரணம், அன்பு வேண்டாங்கற சண்டையல்ல. அன்பு வேணும்ங்கற சண்டை. எனக்கு அன்பு போதலைங்கற சண்டை. என் கூட அன்பு செலுத்த இன்னும் நிறைய நேரம் வேணும்ங்கற சண்டை. அதை நிறைய பேரு புரிஞ்சுக்கறதில்லை. அந்த உண்மையான அன்பைப் புரியாம இருக்கும்போ நாம வெறுப்போட கூட்டணி வைக்கிறோம். வெறுப்புங்கறது கேன்சர் மாதிரி, அது கொஞ்சம் கொஞ்சமா நம்மை அரிச்சே கொன்னுடும்.

நீங்க இப்ப சொன்னீங்களே, அது நூற்றுக்கு நூறு உண்மை வினோ ! “எனக்கு அன்பு போதலை.. இன்னும் வேணும்” ங்கறது தான் குடும்ப மனஸ்தாபங்களோட அடிப்படை. அன்பு நல்ல விஷயம் தானே. அதைச் சொல்ல, அதைச் செய்ய, அதை வெளிக்காட்ட ஏன் தயங்கணும். வெரி நைஸ். இந்த சின்ன வயசிலயே வாழ்க்கையை ரொம்ப நல்லா புரிஞ்சு வெச்சிருக்கீங்க. ரியலி நைஸ்.

அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை ரம்யா. ஒரு குழந்தையைப் பாக்கும்போ ஆத்மார்த்தமா அள்ளிக் கொஞ்சறோம். அந்த ஆத்மார்த்த அன்பு ஒவ்வொரு செயலிலயும் இருக்கணும்ன்னு நினைக்கிறவ நான். அட்லாஸ்ட்.. லைஃப் ஈஸ் டு லவ் அன்ட் டு பி லவ்ட்… அன்பு செய்யவும், அன்பு செய்யப்படவும் தான் இல்லையா ? !

அவர்களுடைய உரையாடல் எவ்வளவு நேரம் போனதென்றே தெரியவில்லை. கடிகாரத்தை பார்க்க மறந்தார்கள். ஆனால் சூரியன் எதையும் மறக்கவில்லை. வழக்கம் போல தூங்கப் போய்விட்டான். இனிமே வீட்டுக்குப் போவோம் என்று ஆடைகளில் இருந்த மண்ணைத் தட்டிக் கொண்டே எழுந்தார்கள் மூவரும்.

சில விஷயங்களை இப்படி மணலைத் தட்டற மாதிரி சிம்பிளா தட்டிட்டுப் போனா எவ்ளோ நல்லா இருக்கும் !

அது நடக்கிற விஷயமா ?

ஏன் முடியாது. அதுக்கெல்லாம் மனசு தான் காரணம். அன்புக்கு முன்னாடி ஈகோவைத் தூக்கி எறிஞ்சீங்கன்னா, தேவையில்லாத மணலைத் தூக்கிச் சுமக்க வேண்டியதில்லை.

மறு நாள் !

காலையில் எழும்பியபோது வினோ தயாராய் இருந்தாள்.

தாங்க்யூ சோ மச். ஒரு வாரம் என்னைச் சகிச்சுக்கிட்டீங்க. ஐ ஆம் லீவிங்.

சகிச்சு கிட்டதா, ரொம்ப ரசிச்சுகிட்டோம். நிறைய கத்துகிட்டோம். ரமேஷ் சிரித்தான்.

இல்ல இல்ல, இது எனக்கு தான் ஒரு அற்புதமான அனுபவம். நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். சொல்லிக் கொண்டே வினோ ரம்யாவின் கண்களைப் பார்த்தாள்.

அதே கண்கள் ! எங்கேயோ பாத்திரிக்கேன்… இன்னிக்கு கேட்டுடுவோம். ரம்யாவின் மனசு தவித்தது.

வினோ, ஒண்ணு கேட்டா தப்பா நெனச்சுக்க மாட்டீங்களே !

கேளுங்க.

நாம இதுக்கு முன்னாடி சந்திச்சிருக்கோமா ? ஃபார் சம் ரீசன் உங்க கண்ணைப் பாக்கும்போதெல்லாம் எனக்கு அந்த ஃபீலிங் வருது.

வினோ சிரித்தாள். எஸ்.. ஒரு தடவை சந்திச்சிருக்கோம். பார்த்திருக்கோம். பட் பேசினதில்லை.

வாட்…. ? எங்கே.. எப்போ …. ரம்யாவும், ரமேஷும் ஆர்வமானார்கள்.

ம்ஹூம்.. இப்போ சொல்ல மாட்டேன். நெக்ஸ்ட் டைம் என் கண்ணைப் பாருங்க, அப்போ சொல்றேன்.

சொல்லிக் கொண்டே கதவைத் தாண்டி வெளியேறினாள் வினோ,

வினோ வெயிட், ஐ வில் டிராப் யூ… என ரமேஷ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வீட்டைத் தாண்டி, சாலையில் இறங்கி நடக்கத் துவங்கினாள்.

ரமேஷ் ரம்யாவைப் பார்த்தான். அவனுடைய பார்வையில் வார்த்தைகள் மிதந்தன. எதையோ சொல்ல வேண்டும் போல அவனுடைய இமைகள் தயங்கின.

சொல்லுங்க.

ஒண்ணு சொல்றேன்… நீ, யோசிச்சு சொல்லு.

ம்ம்.. சொல்லுங்க

நாம, டைவர்ஸ் பண்ணித் தான் ஆகணுமா ? யோசிச்சு பாத்தா நமக்குள்ள பெரிய பிரச்சினை ஏதும் இல்லை, நாம தான் மாறி  மாறி….

ரமேஷ் பேசிக்கொண்டிருக்கும் போதே ரம்யா தாவி வந்து ரமேஷை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அவளிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை. வெறுமனே தேம்பல் மட்டுமே வந்து கொண்டிருந்தது.

ஐ ஆம் சாரி…

நோ..நோ… ஐ ஆம் சாரி..

அந்த மௌனத்தின் நிமிடங்கள் மெல்ல மெல்ல இயல்பாகிக் கொண்டிருந்த போது பேப்பர் காரன் வீசிய பேப்பர் அவர்களுடைய கதவைத் தாண்டி வந்து விழுந்தது. ஒரு குட்டி அரைவட்டம் அடித்து அமைதியானது.

அந்த பேப்பரின் முதல் பக்கத்தைப் பார்த்த ரம்யாவும் ரமேஷும் அதிர்ந்து போனார்கள்.

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி. எழுத்துகளுக்குக் கீழே பளீரென சிரித்துக் கொண்டிருந்தாள் வினோதினி !

வாட்… முதலாம் ஆண்டு ? இது அந்தப் பெண் தானே ! பெயர் கூட வினோதினி … நடுக்கத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

ரம்யா மீண்டும் அந்தப் புகைபடத்தைப் பார்த்தாள். அந்தக் கண்களைப் பார்த்தாள்.

ரமேஷ்… ஐ.. ஐ.. ரிமம்பர் நௌ. இப்போ ஞாபகம் வருது. இவங்களை எங்கே பார்த்தேன்னு…

ரமேஷ் அவளுடைய கண்களை ஏறிட்டான். சொல்லு என்பது போல நெற்றி சுருக்கினான்.

ஜெர்மனில பெர்லின்ல  காபி ஷாப்ல பாத்தேன். நாம ரெண்டு பேரும் கொஞ்சம் சண்டை போட்டுகிட்டு இருந்தோம். டைவர்ஸ் பண்ணிக்கலாம்ன்னு முதல்ல அன்னிக்கு தான் பேசினோம். நான் அழுதிட்டிருந்தேன். தூரத்துல இன்னொரு டேபிள்ல இவங்க இருந்தாங்க. ஒரு ஆண் கூட. மே பி ஹி ஈஸ் விக்கி. என்னையே உத்துப் பாத்திட்டிருந்த அந்த கண்கள். அதான் எனக்கு அந்தக் கண் ரொம்ப நல்ல பரிச்சயமா தெரிஞ்சுது. கண்டிப்பா, அந்தக் கண் தான். இதெப்படி இதுவரை எனக்கு ஞாபகம் வராம போச்சு !!!  அப்படின்னா.. நாம ஒரு ஆவி கூடயா ஒரு வாரம்… சொல்லும் போதே ரம்யாவுக்கு நா குழறியது. விரல்கள் நடுங்கின.

வினோதினி தங்கியிருந்த அறையை நோக்கினான் ரமேஷ். தடுமாறும் கால்களுடன் சென்று கதவைத் திறந்தான். அதிர்ந்தான். ஒரு வாரத்துக்கு முன்னால் அந்த அறை எப்படி இருந்ததோ அப்படியே இருந்தது. புத்தகங்கள் தரையில் சிந்தியிருந்தன. அறையின் நடுவே ஒரு டேபிள் இருக்க, ஓரமாய்க் கிடந்த படுக்கையில் பழைய பொருட்கள் குவிந்து கிடந்தன.

ரமேஷ் ஒரு வினாடி யோசித்தான். படபடப்புடன். பத்திரிகை அலுவலகத்துக்குப் போன் பண்ணினான். ஒரு நான்கைந்து போன்கால்களுக்குப் பின் அவனுக்கு விக்கியின் போன் நம்பர் கிடைத்தது. டயல் பண்ணினான்.

ஹலோ…

கேன் ஐ ஸ்பீக் டு விக்கி.

எஸ்.. விக்கி தான் பேசறேன்.

சார், பேப்பர்ல வினோதினியோட முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பார்த்தோம்…

ம்ம்.யா.. கூப்பிட்டதுக்கு நன்றி. நீங்க…

எப்படி நடந்துது ?

ஜெர்மனில வெச்சு ஒரு ஆக்சிடன்ட். ஸ்நோ டைம் அது. ஒரு கார் ஸ்லிப் ஆகி வேகமா வந்துது. நான் கவனிக்கல. காருக்கு அடில விழவேண்டியது நான். வினோ என்னை ஓரமா இழுத்தாங்க, பட்… அவங்க ஸ்லிப் ஆயிட்டாங்க. என்னைக் காப்பாத்திட்டு அவ இறந்துட்டா… இதுக்கு பதிலா… விக்கியால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

சாரி… அப்புறம் நீங்க இந்தியா வந்துட்டீங்களா ?

ஆமா.. வினோ இல்லாத பெர்லின் ரொம்ப கொடுமையா இருந்துச்சு. சென்னைக்கே வந்துட்டேன்.

சென்னைலயா !

ஆமா.. வடபழனி. சரி, வினோ வை உங்களுக்கு எப்படித் தெரியும்.

ஜெர்மனில தான் தெரியும். நிறைய சொல்லியிருக்காங்க. நீங்க விடியற்காலத்திலயே எழுந்து காபி போடறது, சுப்ரபாதம் கேட்டுட்டே ஜாகிங் போறது, சண்டை போட்டா மன்னிப்பு கேக்கறது இப்படி ஏகப்பட்ட விஷயம் சொல்லியிருக்காங்க. இன்னிக்கு தான் அவங்க இல்லேங்கற விஷயம் தெரிஞ்சுது. ரியலி சாரி…  ரமேஷ்… மெதுவாகச் சொன்னான்.

மறு முனையில் விக்கி அமைதியாய் இருந்தான். தொண்டையை மெல்ல இருமி, சகஜ குரலில் பேச முயற்சித்தான். ‘ஒரு நாள் வீட்டுக்கு வாங்களேன்’

யா.. கண்டிப்பா… நிறைய பேசணும். குறிப்பா, அவங்க எங்களுக்கு செய்த பெரிய உதவியைப் பற்றி. அவங்க எங்க கூட தங்கின ஒரு வார வாழ்க்கையைப் பற்றி.

வினோ உங்க கூட ஒரு வாரம் தங்கினாங்களா ? எப்போ ? எங்கே..

எல்லாம் நேர்ல வந்து சொல்றேன்.

ம்…

ரமேஷ் போனை வைத்து விட்டு ரம்யாவைப் பார்த்தான். அவர்களுக்குள் பயமா, திகிலா, மகிழ்ச்சியா, பிரம்மையா என்று புரியாத ஒரு உணர்வு மேலோங்கியிருந்தது.

இப்படியெல்லாம் நடந்துதுன்னு சொன்னா நம்மை பைத்தியக்காரன்னு சொல்லுவாங்க. லாஜிக் இல்லாம கதை உடறான்னு நெனப்பாங்க. ரமேஷ் உதடு கடித்துக் கொண்டே சொன்னான். ரம்யா தலையாட்டினாள். அவளுடைய கைகள் ரமேஷின் கரங்களை இறுக்கமாய்ப் பற்றியிருந்தன. முன்பெப்போதும் இல்லாத அன்பின் இறுக்கம் !

சிறுகதை : அம்மா மறைத்த ரகசியம்

சந்தியால் நம்பவே முடியவில்லை. ரொம்ப சிலிர்ப்பாய் இருந்தது. இத்தனை நாள் தனக்கு இந்த விஷயம் தெரியாம போச்சே என்று முதன் முதலாய் வருத்தப்பட்டாள். அம்மா ஏன் இந்த விஷயத்தை என்கிட்டே மறைச்சாங்க ? என்ற கேள்வியே அவளுக்குள் காற்றாடி போல ராட்சசத் தனமாய்ச் சுற்றிக் கொண்டிருந்தது.

மாலையில் நடந்த நினைவுகள் மீண்டும் மீண்டும் அவளுக்குள் சினிமா போல ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி விரிவடைந்து கொண்டிருந்தது.

அந்தப் புள்ளி இந்த வாக்கியம் தான்.

“வசந்தி… வேலாயுதன் மாமா மதுரையில இருந்து போன் பண்ணினாங்க, நாளைக்கு தேனிக்கு வரச் சொல்றாரு… நீயும் வா…” அம்மா லட்சுமி தான் அந்த முதல் வாக்கியத்தை ஆரம்பித்து வைத்தவள்.

“நாளைக்கு காலேஜ் இருக்கேம்மா… ”

” ரெண்டு நாள் லீவ் போட்டுக்கோடி, இது ஃபஸ்ட் இயர் தானே… ஒண்ணும் குடி முழுகிப் போயிடாது”

“தேனீல என்னம்மா ?”

“தேனில ஒரு பழைய வீடு இருக்கு… அதை விக்கணுமாம்.. நானும் சைன் போடணுமாம். போட்டுட்டு வந்துடலாம்ன்னு பாக்கறேன்”

“தேனில வீடா ? என்னம்மா சொல்றே.. இதுவரைக்கும் நீ சொன்னதேயில்லையே… நான் பொறந்து வளந்தது எல்லாமே சென்னைல தானே ? இல்லியா ?”

“ம்ம்… வளந்தது சென்னை தான். பொறந்தது தேனில அந்த வீட்ல தான். மொதல்ல கொஞ்ச காலம் அந்த வீட்ல தான் எல்லாரும் இருந்தோம்…”

“எல்லாரும்ன்னா ? யாரெல்லாம்மா ”

“நீயும், நானும் உன் அப்பாவும் தாண்டி… எழவெடுத்தவளுக்கு கேள்வியைப் பாரு”

“அப்பா !!” வசந்தியின் கண்கள் சட்டென மின்ன சரேலென எழுந்தாள்.

“ஏண்டி அதுக்கு இப்படி குதிக்கிறே”

இல்லம்மா… அப்பா வாழ்ந்த வீடுன்னு நினைச்சுப் பாக்கவே ரொம்ப ஒரு மாதிரி சந்தோசமா இருக்கும்மா…. நீ இதைப் பத்தி என்கிட்டே சொன்னதே இல்லியேம்மா.

“வேண்டாம்ன்னு தான் சொல்லல… எதுக்கு பழசையெல்லாம் கெளறிட்டு. நீ போய் படி.. சீக்கிரம் தூங்கு, காலைல குருவாயூர் எக்ஸ்பிரஸ் புடிச்சா ரிலாக்ஸா போலாம். ரெண்டு நாள்ல சட்டுபுட்டுன்னு எல்லாத்தையும் முடிச்சுட்டு சீக்கிரம் வந்துடணும்.” அம்மா சொல்லிவிட்டு வீட்டுக்குள் போக, வசந்தியின் மனசில் என்றுமில்லாத ஒரு உணர்வு.

அப்பாவைப் பற்றி பலதடவை பேசியிருக்கிறாள். ஆனால் அம்மா எப்போதுமே பதில் சொன்னதில்லை. அப்படியே சொன்னாலும், அதையேண்டி கேக்கறே எழவெடுத்தவளே… நீ கண்ண தொறந்ததைப் பாக்கறதுக்குன்னே காத்திருந்தது மாதிரி, நீ கண்ண தொறந்ததும் கண்ண மூடிட்டு போயிட்டாரு. ஒத்தையாளா நின்னு உன்னை வளத்த நான் பட்ட பாடு எனக்கு தானே தெரியும். ஊருக்குள்ள புருஷன் இல்லாதவ வாழறதுல என்ன கஷ்டம் இருக்குங்கறதை அனுபவிச்சவ நான். உசுரு இல்லாம வாழலாம், புருஷன் இல்லாம வாழக் கூடாதுங்கறது தான் ஊரோட விதி. எரியற வீட்டில புடுங்கற ஜென்மங்கள்கிட்டேயிருந்து உன்னைக் காப்பாத்த ராவோடு ராவா மெட்ராஸ் ஓடினவ நான். அன்னில இருந்து இன்னிக்கு வரைக்கும் உனக்காக தானே ஜீவிச்சிட்டிருக்கேன். உனக்கு அதெல்லாம் எங்கே தெரியப் போவுது, உனக்கு உன் அப்பன் பத்தி தான் நெனப்பு. என புலம்புவாள். புலம்பிப் புலம்பி அழுதுமுடிக்கும் நாட்களில் பெரும்பாலும் சாப்பிடுவதே இல்லை.

இந்த புலம்பல் புராணத்துக்குப் பயந்து கொண்டே அப்பாவைப் பற்றிய பேச்சை வசந்தி அடியோடு நிறுத்தி விட்டாள். கூடப் படிக்கிற பிள்ளைகளோட அப்பாக்களைப் பாக்கும்போதோ, அவர்களுடைய கதைகளைக் கேக்கும்போதோ ஒரு சின்ன ஏக்கம் உள்ளுக்குள் உருவாகும். அதை சட்டென முகமும் கண்களும் காட்டிக் கொடுத்தும் விடும். வசந்தி அப்பாவி. உள்ளொன்று வைத்து புறமொன்று காட்ட இன்னும் பழகலை.

இந்த ராத்திரி அப்பாவின் நினைவுகள் நிறுத்தாமல் வந்து கொண்டே இருந்தது. அப்பா வாழ்ந்த இடம். அப்பாவோட வீடு. அதில் அம்மாவும் சில வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்கள். என் பிறப்புக்கான விதை அங்கே தான் துவங்கியிருக்கிறது. என்னுடைய பிறப்பும் அங்கே தான் நடந்திருக்கிறது. நான் சிறுவயதில் அங்கே தான் தவழ்ந்திருக்கிறேன். ஏதேதோ நினைவுகள் வசந்தியைத் தூங்க விடவேயில்லை.

கையருகே இருந்த செல்போனை எடுத்தாள். வெறுமனே கான்டாக்ட் லிஸ்டைப் புரட்டினாள்.

யாருக்காச்சும் போன்பண்ணலாமா என்ற நினைப்பு எழுந்தது. படுக்கையிலிருந்து திரும்பி சுவரைப் பார்த்தாள். ஆணியில் பின் தலை சொருகப்பட்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். அது இருட்டுக்குள் அமைதியாய் கிடந்தது. கண்ணைச் சுருக்கு உற்றுப் பார்த்தாள். ஒன்றும் தெரியவில்லை. “அடச்சே.. செல்போன்லயே டைம் பாக்கலாம்ல… ”

தன் தலையில் கற்பனையாய் ஒரு தட்டு தட்டி விட்டுப் பார்த்தாள். மணி 1 என்றது !

அய்யோ, காலங்காத்தால எழும்ப முடியுமா ? எப்படியாச்சும் கஷ்டப்பட்டு தூங்குவோம். கண்களை இறுக்கமாய் மூடினாள். நல்ல வேளை தூங்கிப் போனாள்.

மறு நாள் காலை.

எழும்புவதொன்றும் நேற்று ராத்திரி நினைத்தது போல கடினமாய் இருக்கவில்லை. சட்டென முழிப்பு வந்து விட்டது. அப்பா வந்து எழுப்பி விட்டிருக்க வேண்டும் என சும்மா நினைத்துக் கொண்டாள். புன்னகைத்தாள்.

சீக்கிரம் கெளம்படி, டிரெயினைப் புடிச்சா நல்லது. பஸ்ல குலுங்கிக் குலுங்கிப் போவ உடம்பு ஒத்துக்க மாட்டேங்குது…

அவசர அவசரமாய் கிளம்பி, ரெயில்வே ஸ்டேசன் போய்ச் சேர்ந்தபோது அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மென்டுக்கு முன்னால் ஒரு நீளமான வரிசை நின்றது. ஆன்லைனில் கிளிக் பண்ணி ஹாயாய் பயணிக்கும் பொருளாதாரத்துக்கும், சில்லறை எண்ணி கக்கத்தில் பையைக் கவனமாய்ப் பிடித்திருக்கும் ஏழைக்குமான தூரம் சில பெட்டிகள் தான். அந்த சில பெட்டிகள் இடைவெளியில் எத்தனை பெரிய பள்ளத்தாக்கு. சில சங்கிலிகளால் இணைத்துக் கட்டி விடமுடியாத அளவுக்குப் பொருளாதார இடைவெளி !

எப்படியோ உட்கார இடம் கிடைத்தது புண்ணியம். நெருக்கியடித்துக் கொண்டு கிளம்பிய ரயிலில் வேறென்ன சொல்ல முடியும். வசந்தியின் மனதில் நிறைய கேள்விகள். எல்லாமே அப்பாவைப் பற்றி. ஆனால் அம்மாவிடம் கேட்கப் பயம். பயம் என்பதை விட அம்மாவை எதுக்கு இன்னொரு தடவை கஷ்டப்படுத்தறது ? எனும் நல்ல எண்ணம் என்று கூடச் சொல்லலாம்.

“ஏண்டி.. எப்பவும் அப்பா அப்பா ன்னு ஏதாச்சும் தொணதொணத்துட்டே இருப்பே.. இன்னிக்கு என்ன சும்மா இருக்கே ?”

வசந்தி அம்மாவை நம்ப முடியாமல் பார்த்தாள். “இல்லம்மா.. உனக்குப் பிடிக்காதுன்னு தான்…”

“யாரை ? அப்பாவையா ?

சே..சே இல்லம்மா.. நான் கேள்வி கேக்கறது

அப்படியில்ல வசந்தி. நான் இன்னிக்கும் உசுரோட இருக்கக் காரணம் நீ தான். நீ மட்டும் தான். உன் அப்பாவும் நானும் சேர்ந்து வாழ்ந்தது வெறும் நாலு வருஷம் தான். செல சமயம் ஒரு ஐம்பது வருஷம் வாழ்ந்தது போல தோணும். சில சமயம் ஒரு ரெண்டு மூணு நாளு தான் வாழ்ந்தோமோ ன்னு தோணும். ஒரு ஆள் போயிட்டா அப்புறம் எல்லாமே தலைகீழாயிடும் வசந்தி. உன் அப்பாவோட வாழ்ந்த பழைய ஞாபகங்கள் எனக்கு பயமாயிருக்கும் வசந்தி. மனசுல இருந்ததெல்லாம், ஏன் இப்போ இருக்கிறது கூட உன்னை வளத்தணும், அதுக்காக நான் வாழணும். அது தான். அது மட்டும் தான். அப்பாவை நினைச்சு, அப்புறம் வேற விஷயங்களை நினைச்சு செத்துப் போயிடக் கூடாதுல்ல.

வசந்தி அம்மாவின் கைகளை இறுக்கமாய்ப் பற்றினாள். ஏனோ தெரியவில்லை களுக் என கண்ணில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

வேணாம்மா.. சொல்ல வேணாம்ன்னா விட்டுடுங்க.

அவருக்கு நீன்னா உசுரு. நீ பொறந்தப்போ காலு தரையில படாம குதிச்சிட்டே திரிவாரு. மூக்கு என்னை மாதிரி இருக்கு, கண்ணு என்னை மாதிரி இருக்கு, அவ என்னப் பாத்தா தான் சிரிக்கிறான்னு எப்பவும் ஒரே சந்தோசம் தான். ம்ம்… இப்போ இருந்தா ரொம்ப சந்தோசப்படுவாரு. உன்னைப் பாத்தா ரொம்ப சந்தோசப்படுவாரு.

அம்மா.. நான் அப்பா மாதிரியா இருக்கேன்.

வசந்தி சிரித்தாள். பாக்கறதுக்கு அப்பா மாதிரி இல்ல. ஆனா பல விஷயங்கள் நீ உன் அப்பா மாதிரி தான் செய்வே.

அதென்னம்மா பல விஷயம்.

இல்ல.. நீ நடந்துக்குற விதத்தைத் தான் சொல்றேன்/

ஒண்ணு சொல்லுங்களேன்.

நான் அழுதேன்னா, நீ எல்லாத்தையும் விட்டுட்டு வந்து சாரிம்மா…. இனிமே நான் எதுவும் கேக்கலன்னு சொல்லுவேல்ல. அது அப்படியே அவரை மாதிரி. நான் அழுதேன்னா அவருக்குத் தாங்காது.

அப்பா எப்படிம்மா செத்துப் போனாரு ?

ஹார்ட் அட்டாக்

சின்ன வயசுலே எப்படிம்மா ஹார்ட் அட்டாக் ?

லட்சுமி உதட்டைக் கடித்தாள். வெளியே மரங்கள் வெறித்தனமாய் ஓடிக்கொண்டிருந்தன. ‘எனக்கும் சின்ன வயசு அப்போ, அதனால ஹார்ட் அட்டாக்’

என்னம்மா புரியவே இல்லையே.

அந்த வீட்ல அப்பாவுக்கும் ஷேர் இருக்கு. அந்த வீட்டை விக்கணும்ன்னா நான் கையெழுத்துப் போடணும்ன்னு சொன்னாங்களாம். அதனாலதான் வேலாயுதம் அண்ணன் போன் பண்ணினாங்க. போய் காட்டற இடத்துல கையெழுத்துப் போட்டுட்டு சீக்கிரம் கெளம்பி வந்துடணும். இந்த ஊருக்கு வரதே எனக்கு ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு.

எவ்ளோ இடம் இருக்கும்மா ? வீடு இருக்கிற இடத்தைக் கேக்கறேன்.

தெரியல ஒரு நாலு நாலரை சென்ட் இருக்கும்ன்னு நினைக்கிறேன். ஒரு சின்ன ஓட்டு வீடு உண்டு. மெட்ராஸ் வந்தப்புறம் நான் இந்த வீட்டுக்கு வந்ததேயில்ல. வேலாயுதம் அண்ணன் தான் வீட்டைப் பூட்டி நான் எப்படியும் வருவேன்னு காத்திட்டு இருந்திருக்காக. நான் பிடிவாதமா சென்னையிலயே இருந்துட்டேன். ஒரு பத்து வருஷம் கழிச்சு தான் என்னையே கண்டுபிடிச்சாரு.  நான் இங்கே ஒரு வேலையில இருக்கேன், வரமுடியாது ன்னு சொல்லிட்டேன். நான் இங்க இருக்கிற விஷயத்தை யாருகிட்டேயும் சொல்லக் கூடாதுன்னும் சொல்லியிருந்தேன். அண்ணனும் சொல்லல. இப்போ இந்த வீடு விஷயமாதான் வரவேண்டியதா போச்சு.

லட்சுமி தனது பழைய நினைவுகளை சொல்லிக் கொண்டே வந்தாள். வசந்திக்கு சில விஷயங்கள் புரிந்தன, சில புரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு புது விதமான அனுபவத்துக்குத் தயாராவதாய் மனம் குதூகலித்தது.

நெருக்கியடித்த ரயிலில் மூன்று பேர் அமரக் கூடிய அந்த நீள பெஞ்சில் ஏழு பேர் அமர்ந்திருந்தார்கள். கால் நீட்டினால் முன்னால் நான்கைந்து பைகள் இடித்தன. இருக்கையும் நாலு பலகைகளை இடைவெளிவிட்டு அடித்து வைத்திருந்ததில் உட்கார்வதில் பெரும் சிரமமாகவே இருந்தது. ஆனாலும் அவர்களுடைய கதை அந்த அசௌகரியங்களை மறக்க வைத்திருந்தது.

இருக்கை கிடைக்காத பலர் டாய்லெட்டுக்கு முன்னாலும், படிக்கட்டிலும் பைகளோடு குந்தியிருந்தார்கள். மேலே பொருட்கள் போட வைக்கப்பட்டிருக்கும் பலகையில் ஏழெட்டு பேர் நெருக்கியடித்துச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

மதுரை ஸ்டேஷன்.

பல்லில்லாத கிழவன் குதப்பித் துப்பிய வெற்றிலை போல, கசங்கியும், அழுக்காகவும் மக்கள் வெளியே வந்தனர்.

வேலாயுதம் ரயில்வே ஸ்டேஷன் வந்திருந்தார்.

அவரைப் பார்த்தபோது லட்சுமிக்கு தன்னை அறியாமலேயே கண்கள் கலங்கின. திருமணத்துக்கு முன்பு வரைக்கும் தான் அண்ணன் தங்கை பாசத்தின் அடர்த்தி. எப்போதும் கூடவே இருப்பது எத்தனை பெரிய பாக்கியம் என்பதெல்லாம் அப்போது தெரியாது. கல்யாணம் ஆனபிறகு தான் தெரியும். குடும்பம், குட்டி, புதிய வாழ்க்கை என புதுசு வந்தப்புறம் பழைய உறவுகளெல்லாம் பின் தங்கிவிடும். பாக்கவேண்டுமே என மனம் அடித்துக் கொள்ளும்போதெல்லாம் பார்க்க முடியாது. ஆண்டுக்கு ஒன்றோ இரண்டோ தடவை தான் பார்ப்பது. அதுவும் பெரும்பாலும் ஒரு கல்யாணம், திருவிழா, துக்கம்ன்னு ஏதாச்சும் ஒரு சம்பவம் நடக்கணும். இப்போ மட்டும் ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி போக முடிஞ்சா அண்ணன் கையைக் கட்டிப் புடிச்சுக்கணும், விடவே கூடாது என நினைத்தாள் லட்சுமி.

வாம்மா… எப்டி இருக்கே… வேலாயுதம் முதுமையின் முதல் படியிலும், நடுத்தர வயதின் கடைசிப் படியிலுமாய் கால்களை வைத்திருந்தார். அவருடைய குரலில் அரைநூற்றாண்டு நேசம் தெரிந்தது.

நல்லா இருக்கேண்ணா…  வசந்தி…, மாமா..

நல்லா இருக்கீங்களா மாமா…

நல்லா இருக்கேம்மா…. நீ என்ன படிக்கிறே

பி.எஸ்.சி ஃபஸ்ட் இயர் மாமா…

நல்லா படிக்கிறியா ?

ம்ம்… (சிரிப்பு)

வாங்க, வீட்ல இன்னிக்கு தங்குங்க. காலையில ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ் போலாம்…

இல்லண்ணா… எனக்கு அந்த வீட்டுக்கு இன்னிக்கு போணும் போல இருக்கு.

அங்கேயா ? அது பாழடைஞ்சு போய் கெடக்கு. அதுல யாரும் போறதில்லை.

இல்ல.. பரவால.. பொண்ணும் போணும்ன்னு ஆசப்படுது. அப்பன் வாழ்ந்த வீடில்லயா ?

பாம்பு கீம்பு ஏதாச்சும்…

பரவாயில்லன்ண்ணா.. நீங்களும் வாங்க…

ம்ம்…

என்னண்ணா.. விக்கிறதுக்கு முன்னாடி ஒரு வாட்டி பாத்துடறேன்…. இனிமே மறுபடியும் இந்தப் பக்கம் வருவேனான்னே தெரியாது.

ஏன் அப்படி சொல்றே.. இனிமே அடிக்கடி பாக்கணும். உன் பொண்ணு விசேஷத்துக்குக் கூப்பிடமாட்டியா என்ன ?

லட்சுமி சிரித்தாள்.

மதுரையிலிருந்து 42 கிலோமீட்டர் தள்ளி இருந்தது அவர்களுடைய கிராமம். லட்சுமிக்கு வேறு எதுவும் முக்கியமாய்த் தெரியவில்லை. வசந்தியோ அப்பாவின் வீட்டைப் பார்க்க வேண்டும் என்பது  மட்டுமே உலக மகா இலட்சியமாய் தோன்றியது. வேலாயுதம் மறுக்கவில்லை. வண்டியை ஏற்பாடு செய்தார்.

மரங்களடர்ந்த ஒரு காட்டுப் பகுதி போல இருந்தது மலையடிக் கிராமம். உள்ளே சிதிலமடைந்த நிலையில் அந்த ஓட்டு வீடு.

லட்சுமிக்கு திக் என்றது.

ஏய் லெட்சுமி… முற்றத்தைக் கூட்டும்மா, பாரு ஒரே இலையா இருக்கு….  ஏலே… சொல்லிட்டே இருக்கேன்ல அங்கே என்ன பண்ணிட்டிருக்கே ?

அவருக்கு வீடு எப்போதும் பளிச் என்று இருக்க வேண்டும். ஓட்டு வீடுதான். ஆனால் ஒவ்வொரு அறையும் அவ்வளவு சுத்தமாய் இருக்கும். படிக்கும் புத்தகங்களானாலும் சரி, சாப்பிடும் தட்டுகள் ஆனாலும் சரி வேலை முடிஞ்சதும் நீட்டா அதோட இடத்துல போய் இருந்துடணும். அவருக்கு அசுத்தம், குப்பை கூளம் எல்லாம் ஆவாத சமாச்சாரங்கள்.

லட்சுமி மீண்டும் ஒரு முறை பார்த்தாள். பழைய வீட்டின் சாயலாவது மிச்சமிருக்கிறதா என்று பார்த்தாள். இத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் சுற்றுப் புறத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை. வீடு தான் தனது ஒட்டு மொத்த அடையாளத்தையும் இழந்திருந்தது.

ரொம்ப வருஷமாச்சும்மா.. நீ போனப்புறம் நானும் இங்கே வரதில்லை. நம்ம சொத்துன்னு ஊர்ல எல்லாருக்கும் தெரியும். அதனால ஆரும் இங்கே வந்து தொந்தரவும் செய்றதில்லை. பாத்து வா… பூச்சி கீச்சி கிடக்கலாம்…

வேலாயுதம் சொல்லிக் கொண்டே முன்னால் நடந்தார். குவிந்து கிடந்த சருகுகளை கால்களால் அரைவட்டம் போட்டு விலக்கிக் கொண்டே முன்னேறினார்.

வீடு முழுசும் குப்பை வலை. சாவி துவாரத்தையே சுரண்டித் தேடவேண்டியிருந்தது. ஏதோ சினிமாவில் வரும் பாழடைந்த பேய் பங்களா போல் இருந்தது வீடு.

வசந்தி தான் விழிகள் விரிய பார்த்துக் கொண்டாள். தனது வேர்களைக் கண்டுபிடித்தது போல ஒரு சிலிர்ப்பு அவளுக்கு. இந்த முற்றங்களில் அப்பாவின் சுவாசம் உலவியிருக்கிறது. இந்த சுவர்களில் அப்பாவின் விரல்கள் பதிந்திருக்கின்றன. இந்த வீட்டின் கூரைகளில் அப்பாவின் குரல் தலையிடித்திருக்கிறது. சிந்தனைகள் அவளை சிலிர்க்க வைத்தன.

வீட்டுக்குள் நுழைந்தாள்.

வேலாயுதம் சட்டைப்பையிலிருந்த ஒரு பீடியை எடுத்து இடது பக்க பல்லில் வைத்துக் கடித்தார். தீப்பெட்டியை எடுத்து வலமும் இடமுமாக ஒரு ஆட்டி ஆட்டி விட்டு பெருவிரலால் திறந்தார். குச்சியை எடுத்து சின்ன ஒரு உரசல். பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே எரிந்தது குச்சி. அப்படியே மந்திரம் ஓதுபவர்கள் தண்ணீரைத் தலையில் தெளிப்பார்களே, அது மாதிரி ஒரு பாவனையில் பீடியைப் பற்ற வைத்து கவனமாய்க் குச்சியை அணைத்தார். தப்பித் தவறி கீழே விழுந்தால் எரிவதற்குத் தயாராய் கிடந்தது சருகுக் குவியல்.

வீட்டுக்குள் பல்லிகள் நிறைய ஓடின.

வசந்தி வீட்டில் நுழைந்து இடது பக்கமாய் இருந்த அறையில் நுழைந்தாள்.

அது தாண்டி அப்பாவோட ரூம். அங்கே தான் எப்பவும் இருப்பாரு !

அப்பாவோட ரூமா ? வசந்திக்குள் எழுந்த உணர்வை எப்படிச் சொல்வதென்று அவளுக்கே தெரியவில்லை. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அறை நன்றாகத் தான் இருந்தது. ஓரமாய் சில புத்தகங்கள். தூசுகளுக்கு இடையே அந்த புத்தகங்களைத் தொட்டாள். அப்பா படித்த புத்தகங்கள்… புத்தகங்களைப் புரட்டினாள். புத்தகங்களுக்கு இடையே ஏதேனும் தட்டுப் படுமா என்று அவளுடைய கண்கள் அலை பாய்ந்தன.

அப்பாவைப் பாத்ததேயில்லை. ஒரு போட்டோல கூட. அம்மாவோட கல்யாண ஆல்பம், அது இதுன்னு எங்கேயாச்சும் ஒண்ணு கிடைச்சா போதும். அப்பா எப்படி இருந்தாருன்னு பாக்கணும். என்னை மாதிரி தான் இருந்தாரா ?  இந்தக் காலத்துல போட்டோ கூட பாத்ததில்லேன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க. ஒரு போட்டோ கூடவா இல்லை ? ஏன் வேலாயுதம் மாமா கிட்டே கேக்கலாமேன்னு சொல்லுவாங்க. ! அட.. ஆமா. ஒருவேளை போட்டோ கெடைக்கலேன்னா வேலாயுதம் மாமா கிட்டே கேக்கலாமே….

கவனமா நில்லும்மா.. ஓடு உடஞ்சு கிடக்கு, விழுந்துடப் போவுது. உள்ளேயிருந்து அம்மா குரல் கொடுத்தாள்.

வசந்தி அந்த அறையை அக்கு வேறு ஆணி வேறாய் அலசத் தொடங்கினாள். அப்போது தான் சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த குச்சி கண்ணில் தெரிந்தது. எடுத்துப் பார்த்தாள். லத்தி ! அப்பா போலீஸ்காரரா ? போலீஸ்காரங்க தானே லத்தி வெச்சிருப்பாங்க ? கையில் எடுத்தாள். அப்பாவின் கைரேகை இதில் இருக்குமா ? அப்பா கையில் வைத்திருந்த லத்தி தானா இது ?

அறையின் ஓரமாய் ஒரு ட்ரங்க் பெட்டி தட்டுப்பட்டது. திறந்தாள். காலியாய் இருந்தது. ஏமாந்தாள். மூடப்போனபோது தான் கவனித்தாள். டிரங்க் பெட்டியின் மேல் மூடியின் உள்பக்கத்தில் சட்டை பாக்கெட் போல ஒரு சின்ன அறை. அதில் ஏதோ தட்டுப்பட்டது. ஆர்வமாய் இழுத்தாள். இரண்டு கடிதங்கள். ஒரு கீசெயின். குப்புறக் கவிழ்த்தாள். ஒரு குட்டி பிளாஸ்டிக் கவர் விழுந்தது. அதை எடுக்கக் குனிந்தவள் கையில் தாவியது ஒரு பல்லி.

அம்மா..ஆ…ஆ..ஆ…..

என்னடி ? பதட்டத்துடன் ஓடி வந்தாள் அம்மா…

ஒண்ணுமில்லேம்மா.. பல்லி…. சாரி… பின்னால் கட்டிய கையில் லெட்டர் ஒளிந்து கொண்டது.

ம்ம்ம்… இது தான் என்னோட டிரங்க் பெட்டி. கல்யாணத்துல எனக்குச் சீரா கெடச்சது. நல்லா இருந்துச்சு. இப்போ தகர டப்பா மாதிரி ஆயிடுச்சு. ம்ம்… சீக்கிரம் வா.. இருட்டுறதுக்குள்ள கெளம்பிடுவோம். அண்ணன் வீட்ல நைட் தங்கலாம். நாளைக்கு ஊருக்கு போணும்.

வசந்தி மீண்டும் குனிந்தாள். மறுபடியும் பல்லி தாவக் கூடாதே எனும் கவனத்துடன் குனிந்தாள். அப்படியே குதித்தாலும் கத்தக் கூடாது என நினைத்தாள்.

குட்டியாய் மடித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவர் பழுப்பு நிறத்தில் இருந்தது. பிரித்துப் பார்க்கையில் மூன்று போட்டோக்கள். இரண்டு பக்கமும் இருந்த போட்டோக்கள் பிளாஸ்டிக்கோடு ஒட்டி நோய் வந்தவனோட தோல் போல பிய்ந்து தொங்கியது. நடுவில் இருந்த புகைப்படத்தில் ஒரு இளைஞன் சிரித்தான்.

அப்பா !!!! வசந்திக்குச் சிலிர்த்தது. விரல்களால் வருடினாள். நெஞ்சோடு வைத்துக் கொண்டாள். பத்திரமாய்க் கைப்பையில் போட்டாள். தூசு படிந்திருந்த லெட்டரை உதறினாள். யாரும் பார்க்கக் கூடாதே எனும் பதை பதைப்புடன் வாசித்தாள்.

அம்மாவின் பெயருக்குத் தான் வந்திருக்கிறது. அப்பா தான் எழுதியிருக்கிறார். வாவ் !!! என்ன ஒரு அழகான கையெழுத்து !

அன்புள்ள வசந்தி… உன்னைப் பிரிந்து ஒரு மாதம் இருப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. மனசெல்லாம் நீ தான் இருக்கிறாய். கல்யாணம் ஆன முதல் நாள் ராத்திரி…. அடுத்தடுத்த வரிகளைப் படித்த போது உள்ளுக்குள் உறுத்தியது. அந்தரங்கமான ஒரு கடிதம். அம்மா அப்பாவுக்கு இடையே நடந்த காதல் கடிதம். இதையெல்லாம் வாசிக்கக் கூடாது என நினைத்தாள். ஆனால் கண்கள் வாசித்துக் கொண்டே இருந்தன. காதலாகிக் கசிந்துருகி அந்த கடிதம் முடிந்தது.

அடுத்த கடிதத்தை உதறினாள்.

அன்புள்ள வசந்தி… கொஞ்ச நாளிலேயே மறுபடியும் கடிதம் எழுதறேன். உன்னைப் பாக்காம இருக்க முடியல. தூங்க முடியல. இப்போ உன்னைப் பாத்தா… மீண்டும் காதல் புராணம். வசந்தி சிரித்துக் கொண்டாள். வாசித்துக் கொண்டே வந்தவள். கடைசி வரியை வாசித்த போது திடுக்கிட்டாள்.

நமக்குப் பையன் பொறந்தா சுப்ரமணியன்னு பேரு வைக்கணும், பொண்ணு பொறந்தா சுப்பு லட்சுமி ன்னு பேரு வைக்கணும். பிள்ளைங்களை நல்லா படிக்க வைக்கணும். அது தாண் கண்ணு என்னோட ஆசை… மீண்டும் வாசித்தாள். மீண்டும் மீண்டும் வாசித்தாள். அட்ரசைப் பார்த்தாள். அப்பா தான். அம்மாவுக்குத் தான். எனக்கு சுப்பு லட்சுமின்னு பெயர் வைக்க ஆசைப்பட்டிருக்கிறார் அப்பா. அம்மா ஏன் வசந்தின்னு பேரு வெச்சாங்க ?

கடிதத்தை பையில் திணித்தவளுக்கு மனசே அவளிடம் இல்லை.

வீட்டை சுற்றிப் பார்த்தபோதும், அறைகளில் கவனமாய் ஏறி இறங்கியபோதும் அவளுக்கு மனசுக்குள் ஒரு வரி மட்டுமே மீண்டும் மீண்டும் ஒலித்தது. நமக்கு பொண்ணு பொறந்தா சுப்புலட்சுமின்னு பேரு வைக்கணும். அப்பாவோட ஆசை நிறைவேறலையா ? ஏன் ? அப்புறம் அப்பா மனசு மாறிட்டாரா ? வசந்தின்னு வைன்னு அவர் தான் சொன்னாரா ? இல்ல அம்மாக்கு அந்த பேரு புடிக்கலையா ?

அந்த வீட்டை விட்டு விடைபெற்று மீண்டும் காரில் ஏறும்போது வசந்தியின் மனசு அடித்துக் கொண்டே இருந்தது. மனசு ஒரு கடிதத்தை எழுதியது.

அன்புள்ள அப்பா,

உங்க அறையை இன்னிக்கு சுத்திப் பாத்தேன். நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. என்னை மாதிரி இல்லை. என்னை விட ரொம்ப அழகா இருக்கீங்க. நான் சவுக்கியமா இருக்கேன். அம்மா நல்லா பாத்துக்கறாங்க. காலேஜ் போறேன். நீங்க இருந்திருந்தா என்னென்ன பண்ணியிருப்பேன்னு எனக்கே தெரியல. ஆனா உங்க அறையைச் சுத்திப் பாத்து, நீங்க எழுதின லெட்டரைப் படிச்சுப் பாத்து, உங்க போட்டோவைப் பாத்து ரொம்ப சந்தோசப்பட்டேன். நான் நல்லா படிக்கிறேம்பா… உங்க ஆசைப்படியே நல்லா படிச்சு பெரிய ஆளா வருவேன்…

இப்படிக்கு

வசந்தி… ம்ஹூம்… இல்ல இல்ல.. சுப்பு லட்சுமி !

“அம்மா.. அப்பா போலீசாம்மா ?”

போலீசா ? அவரு செக்யூரிடி வேலை பாத்தாரும்மா.. வீட்டுக் காவலாளி – முன் சீட்டில் இருந்த வேலாயுதம் மாமா திரும்பிப் பார்த்துச் சொன்னார்.

ஓ.. அதான் அந்த லத்தியா…

ஆமா... வீட்ல இருந்துச்சா ?

ம்ம்… பாத்தேன். சுவர்ல தொங்கிட்டிருந்துது.

கண்ணை மூடி மீண்டும் ஒரு முறை எல்லாவற்றையும் அசைபோட்டாள் வசந்தி… வேலாயுதம் மாமாவின் வீட்டில் நுழையும் வரை அவளுக்கு நினைப்பெல்லாம் அந்த வீட்டைச் சுற்றியே கிடந்தது.

வீட்டுக்குள் நுழைந்தாள். பெரிய கூடம். பழையகால மரத் தூண்களுக்கு நடுவே, வீட்டின் நடுவே வெளிச்சம் விழுந்தது. சுவரில் நிறைய போட்டோக்கள். வீட்டில் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

இடையே ஒரு போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தார் அப்பா. கையில் இருக்கும் அதே போட்டோவின் என்லார்ஜ்ட் சைஸ் ! இதில் இன்னும் கம்பீரமாய், அழகாய். கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே இருந்தாள். அருகே ஒரு ஜோடியின் போட்டோ..

இது யாரு மாமா. கல்யாண ஜோடி ?

இது தான்மா உன் அம்மாவும் அப்பாவும், அம்மாவை அடையாளம் தெரியலையா என்ன ?

மாமா சொல்ல வசந்தி திடுக்கிட்டாள். எஸ்.. அம்மாவே தான். அப்பாவை உற்றுப் பார்த்தாள். நோ… நோ.. !!!

“இ..இது யாரு மாமா” அருகில் இருந்த போட்டோவைப் பார்த்தாள். தான் அப்பா என்று நினைத்திருந்த போட்டோவை நோக்கி விரலை நீட்டினாள்.

அது உன் அப்பாவோட தம்பி சந்திரன். உன் அப்பா சாகிறதுக்கு முந்தின நாள் ஊரை விட்டு ஓடினவன் தான். அப்புறம் இந்தப் பக்கம் வரவே இல்லை. இப்போ எங்கே இருக்கானோ.. எப்படி இருக்கானோ ? வேலாயுதன் சொல்லிக் கொண்டே உள் அறைக்குள் நுழைந்தாள்.

வசந்தி கைப்பையிலிருந்து அந்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை அவசரமாய் எடுத்து யாருக்கும் தெரியாமல் பார்த்தாள். சந்திரன் ! அப்பா இல்லை !! இதெப்படி… ???

அவளுக்குத் தலை சுற்றியது. ஊருக்கு வந்திருக்கவே கூடாது என்று முதன் முறையாய்த் தோன்றியது !

சேவியர்

சிறுகதை : வெளியே போடா போக்கத்தவனே…

இதற்கு முன் கரிகாலனை இப்படிப் பார்த்ததில்லை. எப்போதும் உதட்டில் ஒரு அக்மார்க் புன்னகை அமர்ந்திருக்கும். கலைந்திருக்கும் தலையை அடிக்கடி கைகள் அனாயாசமாக பின்னுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். கண்களில் ஒரு தெளிவும், நடையில் ஒரு  கம்பீரமும் எப்போதும் இருக்கும்.

இன்றைக்கு எல்லாமே டோட்டல் மிஸ்ஸிங் ! இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தலை வழுக்கையடிக்கப்பட்டிருக்க வேண்டும். குட்டிக் குட்டியாய் முளைத்திருந்த மயிர்க்கால்களில் ஆங்காங்கே நரைகள் பல்லிளித்தன. கண்களில் அகலாத சிவப்பு. கண்களைச் சுற்றியிருந்த வீக்கம் அவனுடைய தொலைந்து போன தூக்கத்தைச் சொன்னது.

வாங்க தோழர்… உதட்டில் அவர் சட்டென அமர வைத்த புன்னகையிலும் சோகமே தெரிந்தது.

என்னாச்சு கரி… வருத்தத்துல இருக்கிற விபுலானந்தர் மாதிரி இருக்கு முகம் ? என்னாச்சு ? இனியன் சிரித்துக் கொண்டே கேட்டான்.

இல்ல.. நல்லா தான் இருக்கேன். ஒண்ணும் பிரச்சினை இல்லை. சும்மா, வெயில் காலம் இல்லையா அதான் மொட்டை போட்டேன். தலையைத் தடவிக் கொண்டே சிரிக்க முயன்று மறுபடியும் தோற்றுப் போனான் கரிகாலன்.

மச்சி… உன்னால நடிக்க முடியாதுடா. அதுக்கு நீ இன்னும் நிறைய கத்துக்கணும். சொல்லு, என்ன பிரச்சினை உனக்கு ?

ம்ம்…வா.. வெளியே போலாம். கரிகாலன் இனியனை அழைத்துக் கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தான். சென்னையின் ஜன நெருக்கடி மிகுந்த அசோக் நகர் பகுதியின் ஒரு சந்து அது. ஒட்டியிருந்த பார்க்கில் வேலியை உடைத்து விட்டு காங்கிரீட் போடும் வேலை நடந்து கொண்டிருந்தது.

உள்ளே போய் உக்காருவோம் கொஞ்ச நேரம். கரிகாலன் சொன்னான்.

உரசிக் கொண்டு சென்ற வாகனங்களிலிருந்து கவனமாய்க் குதித்து பார்க்கின் உள்ளே நுழைந்தார்கள். நடைபாதையின் ஓரத்தில் நடந்து கொண்டே இறுக்கத்தைக் கலைக்க முயன்றார்கள்.

மெட்ராஸ் ரொம்ப ஜனநெருக்கமான இடமாயிடுச்சு மச்சி. போன வாரம் பேப்பர்ல கூட போட்டிருந்தான். பாத்தியான்னு தெரியல. டெல்லிக்கு அடுத்தபடியா இப்போ சென்னை தான் அதிக ஜன நெருக்கடியான இடமாம்.

பின்னே இருக்காதா ? ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் நகரத்துக்கு குடியேறினா அப்படித் தாண்டா இருக்கும். ஒரு வகைல இப்போ ஊர்ல எல்லாம் வயசானவங்க தான் அதிகம் இருக்காங்க. அன்னிக்கு நண்பர் சுந்தர் அதை சூப்பரா சொன்னாரு. கிராமங்களெல்லாம் முதியோர் இல்லங்களா மாறிட்டு வருதுன்னு.

வேற வழியில்லைடா… குடும்பத்தைக் காப்பாத்தணும்ன்னா பணம் தேவைப்படுது. பணம் வேணும்ன்னா நகரத்துக்கு தான் வரவேண்டியிருக்கு. நகரத்துல விலைவாசி அதிகமானா அது கிராமத்தையும் பாதிக்குது. ஆனா நகரத்துல உள்ள சம்பள உயர்வு போல கிராமத்துல வருமான வளர்ச்சி இல்லை. அதான் பிரச்சினை.

என்ன பண்றதுடா.. நான் சென்னைக்கு வந்திறங்கும்போ என்கிட்டே இருந்தது வெறும் 92 ரூபா ஐம்பது பைசா. ஒரு டீ குடிக்க கூட கஷ்டப்பட்ட நாளு எக்கச் சக்கம். இன்னிக்கு ஒரு சின்ன பதிப்பகம் வெச்சு மக்களுக்குப் பயன்படற மாதிரி நாலு புக் போட்டு வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கேன். கரிகாலன் பெருமூச்சு விட்டான்.

ம்ம்… சாதிக்கணும்ன்னு நினைக்கிறவங்களை சாதிக்கவைக்கும். பொழைக்கணும்ன்னு நினைக்கறவங்களை பொழைக்க வைக்கும். அழியணும்ன்னு நினைக்கிறவங்களை அழிக்கவும் செய்யும் அதான் சென்னை – இனியன் சிரித்தான்.

ஆனா, இந்த நிலமை வரை வரதுக்குள்ள நமக்கு ஏற்பட்ட அவமானங்களையெல்லாம் கணக்குல எடுத்தா கைகால் எல்லாம் நடுங்குது மச்சி.

ம்ம்.. உனக்கு ஒரு அண்ணன் இருந்தான் சென்னைல. அதனால உனக்கு பிரச்சினை இல்லாம போயிடுச்சு. எல்லாருக்கும் அப்படி அமையுமா என்ன ?

கரிகாலன் சில வினாடிகள் மௌனமாய் இருந்தான். அவனுடைய முகத்தில் பேசலாமா வேண்டாமா எனும் தயக்கமும், பதட்டமும் தெரிந்தது.

என்ன மச்சி.. சம்திங் ராங். நீ சொல்ல மாட்டேங்கறே. என்னாச்சு ?

நீ சொன்னியே ஒரு அண்ணன். அந்த அண்ணன் எனக்குச் செய்த உதவிகளையெல்லாம் நெனச்சுப் பாத்தேன். அதான் சைலன்ட் ஆயிட்டேன்.

அப்படின்னா ?

ஏசி ரூம்ல இருந்து கண்ணாடி சன்னல் வழியா வெளியே பாக்கிறவனுக்கு சென்னை வெயில் அழகா தெரியும். சென்னை வெயில் எப்படின்னு அவனுக்கு தெரியாது. ஒரு டிராபிக் போலீஸ்காரர் கிட்டே தான் அதைக் கேக்கணும்.

சுற்றி வளச்சுப் பேசாம விஷயத்துக்கு வா மச்சி. உனக்கும் அண்ணனுக்கும் இடையில ஏதாச்சுப் பிரச்சினையா ? அவரோட ‘அன்பின்றி அமையாது உலகு’ புக் கூட உன் பதிப்பகத்துல சமீபத்துல வந்துச்சே. நல்ல புக். நான் ரெண்டு தடவை படிச்சுட்டேன். குடும்ப உறவுகள் பற்றி அற்புதமா அலசியிருந்தாரு. நல்ல ஒரு ரைட்டர் டா.

அதான் சொன்னேனே… ஏசி ரூம்ல இருந்து பாத்தா சென்னை வெயில் அழகா தெரியும்ன்னு – கரிகாலன் தலையைக் கவிழ்ந்தான். நான் யாரை மலை போல நம்பினேனோ, அன்பு செய்தேனோ அவன் கடைசில என்னை ஒரு மனுஷனாவே மதிக்காம தூக்கி எறிஞ்சுட்டான்டா… கரிகாலன் சொல்ல இனியன் குழம்பினான்.

இனியனும், கரிகாலனும் பத்து வருடங்களாகவே நண்பர்கள். இதுவரை குடும்பத்தினரைப் பற்றி கரிகாலன் இப்படி பேசியதில்லை. ஏதோ பெரிய விஷயம் நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. ஆனால் என்ன ? கேள்வியோடு கரிகாலன் முகத்தைப் பார்த்தான் இனியன்.

நான் சென்னைக்கு வந்த புதுசுல தான் அவருக்குக் கல்யாணம் ஆச்சு. குடும்ப உறவை எல்லாம் உதறிட்டு தனியே கல்யாணம் பண்ணி குடியேறிட்டாரு. அதுக்கு அப்புறம் எங்க அப்பா, அம்மா கிட்டே அவரோட தொடர்பே இல்லாம போயிடுச்சு. நான் தனியே தான் இருந்தேன். வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்லியும் வலுக்கட்டாயமா என்னை அவர் கூடவே வெச்சுகிட்டாரு. நானும் பாசம்ன்னு நினைச்சேன். ஆனா இப்போ தான் தெரியுது, அவருக்கு அப்போ ஒரு துணையும், வேலைக்காரனும் தேவைப்பட்டுதுன்னு.

இனியன் அமைதியாய் இருந்தான்.

அவருக்குத் தெரியாம எதுவுமே நான் செஞ்சதில்லை. ஆனா அவரு எனக்குத் தெரிஞ்சு எதையுமே செய்யலேன்னு அப்புறமா தான் புரிஞ்சுகிட்டேன். நான் அவருக்காக பண்ணினதை எல்லாமே தப்பு தப்பா புரிஞ்சுகிட்டாருன்னு நினைக்கும்போ என்னால தாங்க முடியல. பாசத்துக்காடா வெல பேச முடியும் ? ஒரு அம்மாவோட அன்புக்கு என்னடா விலை குடுக்க முடியும் உன்னால ?

என்னடா ஆச்சு, திடீர்ன்னு ? நல்லா தானே போயிட்டிருந்துது அவர் கூட ?

ஒரு மனுஷன் வளரவே கூடாதுடா. நான் சென்னைல வந்தப்போ எக்மோர்ல இருந்து அசோக் நகர் வரை காலைலயும் சாயங்காலமும் நடந்து போய் வேலை செஞ்சிருக்கேன். நம்புவியா ? சாப்பாடு இல்லேன்னு சொல்லி ஒரு ஹோட்டல்ல டெய்லி சாயங்காலம் சாப்பாட்டுக்காக பாத்திரம் கழுவிக் குடுத்திருக்கேன். அப்படிச் சம்பாதிச்ச பணத்தையெல்லாம் அண்ணன் கிட்டே தான் குடுத்து வெச்சேன்.

அண்ணி தான். அதான் என்னால தாங்க முடியல. அவங்களை ஒரு அம்மா மாதிரி நினைச்சேன். அண்ணனை விட அதிகமா மதிச்சேன். அவங்க கேட்டு எதையுமே நான் மறுத்ததில்லை. கடைசில ‘நீயெல்லாம் ஒரு மனுஷனா.. நீ எங்களுக்கு எதுவுமே செய்யல. எங்க சோத்தைத் தின்னுட்டு எங்களையே கெடுத்துட்டேன்னு ‘ சொன்னாங்கடா. நான் என்ன அப்படி செஞ்சேன். எனக்கு ஒண்ணுமே புரியல.

பண விஷயமா ?

யாருக்கு தெரியும் ? வெளியே போடா போக்கத்தவனே… ன்னு அண்ணன்… சொல்லும் போதே கரிகாலனின் கண்கள் கலங்கின. அருகில் கிடந்த மரக்குச்சியை கையில் எடுத்து உருட்டினான். பாசம் எல்லாம் சின்ன வயசுல தான் மச்சி. கய்லாணம் ஆயிடுச்சுன்னா எல்லாரும் பொண்டாட்டியோட பொம்மைங்களா ஆயிடறாங்க.

என்னன்னு கேக்க வேண்டியது தானே டா.. அட்லீஸ்ட் உன் அண்ணன் கிட்டே.

அவரா ? ‘நீயெல்லாம் பொறுக்கி தான் தின்னணும்.. போ.. போ… ‘ ன்னு சொன்னாரு. அவரோட பொண்டாட்டியை திருப்திப் படுத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு. தனியே போன் பண்ணி, தம்பி என் பொண்டாட்டி முன்னாடி நான் அப்படித் தான் பேசுவேன்.. ன்னு சொல்லியிருந்தா கூட நான் புரிஞ்சுக்குவேன்ல. அதெல்லாம் பண்ணல. என் தங்கச்சியை கெட்ட வார்த்தைல திட்டறாரு. அதுவும் அண்ணி முன்னாடி.

மச்சி.. எனக்கே அதிர்ச்சியா தான் இருக்கு. நீ இவ்ளோ காலம் அவர் கூட இருந்தே, அவரோட சுபாவம் பத்தி இதுக்கு முன்னாடி உனக்கு ஒண்ணுமே தெரியலையா ?

சொல்லவே கூசுதுடா. நான் ஒரே ஜட்டியை டெய்லி கழுவிக் காயப் போட்டு உடுத்தியிருக்கேன். அது கிழிஞ்சு தொங்கும். ஒரே சட்டையை தொவச்சுத் தொவச்சு உடுத்தியிருக்கேன். இது வரைக்கும் ஒரு துணி கூட வாங்கித் தந்ததில்லை. நான் அதெல்லாம் நெனச்சதில்லடா. பாசத்துக்கு முன்னாடி பணம் என்னடா பணம். உனக்கு நான் எதுவுமே பண்ணமாட்டேன்டா.. ஆனா நீ தான் என் தம்பி – ன்னு அவரு சொல்லியிருந்தாலே போதும்.. சொன்ன கரிகாலன் முகம் இறுகியது !

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி எனக்கு அவரு தரவேண்டிய ரெண்டு லெட்சம் ரூபாவை வாங்கப் போனப்போ பிச்சைக்காரன் மாதிரி டிரீட் பண்ணினாங்க. அவங்க வீட்ல தின்னதுக்கு கணக்கு பாத்தா ஆயுசுக்கும் நான் அவங்களுக்கு சேவகம் செய்யணுமாம். என்னடா பெரிய ரெண்டு லெட்சம் ரூவா. போனாப் போவுது. தரமாட்டேன்னு சொல்லியிருந்தா, சரின்னு சொல்லியிருப்பேன். அதுக்காக இப்படியெல்லாமா பேசுவாங்க. இனிமே செத்தாலும் உங்க முன்னாடி வரமாட்டேன்னு வந்துட்டேன். இப்போ அவனை நினைச்சாலே எனக்கு பத்திகிட்டு வருது. எங்க அப்பா சாகக் கிடக்கிறாரு, ஒரு நாள் போய் பாக்கலாமா ? ஒரு ஆயிரம் ரூபா பணம் அனுப்பலாமா ? எழுதினா மட்டும் போதுமாடா ? வாழவேண்டாம் ?

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல மச்சி. ஆனா, ஒரு எழுத்தாளனோட பிம்பம் ஊருல எப்படி இருக்கு, அவனோட நிஜம் வீட்டுல எப்படி இருக்குன்னு நினைச்சா அதிர்ச்சியா இருக்கு. சுஜாதாவோட மனைவி கூட இதே மாதிரி ஒரு பேட்டி குடுத்ததா ஞாபகம். தமிழோட பெரிய ஆளுமையான சுஜாதா குடும்பத்துக்கு ஒரு நல்ல தந்தையாவோ, புருஷனாவோ இருக்கல. உன் அண்ணனோட நிலமையைப் பாத்தா அவரு அடிப்படையில ஒரு தப்பான மனுஷனாவே இருந்திருக்காரு.

விட்டுடு… இனிமே ஒரு புதிய கரிகாலனை உலகம் பாக்கும். அண்ணனுக்கும் எனக்கும் இருந்த உறவு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி முறிஞ்சு போச்சு. இனி அவரோட சாவுக்கு நான் போனா கூட நீ என்னைச் செருப்பைக் கழற்றி அடி. கரிகாலனின் பேச்சில் உஷ்ணம் தெறித்தது.

இனியன் மௌனமாக இருந்தான். இரவுக்கும் மாலைக்கும் இடைப்பட்ட அந்தப் பொழுது ரொம்ப அடர்த்தியான மௌனத்தைப் போர்த்தியிருந்தது. பூங்கா வெறிச்சோடியிருந்தது. சென்னையின் அனல் இன்னும் தீரவில்லை. என்ன பேசுவதென்று இனியனுக்குத் தெரியவில்லை. எப்படிப் பேசுவதென்று கரிகாலனுக்குப் புரியவில்லை. அவர்களுடைய மௌனத்தை அந்த செல்போன் சிணுங்கல் கலைத்தது.

கரிகாலன் போன் எடுத்தான். முகத்தில் அதிர்ச்சி ரேகைகள் ஓடின.

என்னது ? எப்போ ? – சொன்னவன் மறுவினாடி ஓடினான். கட்டியிருந்த காங்கிரீட் கம்பி அவனுடைய சட்டையை இழுக்க சாலையில் தெறித்து விழுந்தான். விலாப் பகுதி கிழிந்து இரத்தம் சொட்டியது. ஓடினான். இனியன் சுதாரித்து எழுவதற்குள் கரிகாலன் காணாமல் போயிருந்தான். விஷயம் ஏதோ சீரியஸ் என்பது புரிந்தது ! கரிகாலனின் அப்பாவுக்கு ? நினைக்கும் போது மனம் ஒருவினாடி நின்று துடித்தது.

கரிகாலன் காற்றைப் போல ஓடி நான்கு தெரு தள்ளி இருந்த அண்ணனின் வீட்டுக்குள் புயலாய் பாய்ந்தான். எந்தத் தயக்கமும் அவனுடைய கால்களில் இருக்கவில்லை.

அண்ணீ… அண்ணீ…

குரல்கேட்டு வெளியே வந்த அண்ணியின் கண்களில் தயக்கம்.

என்னாச்சு அண்ணீ.. அண்ணனுக்கு என்னாச்சு… சொல்லிக் கொண்டே உள்ளே ஓடினான். படுக்கையில் அண்ணன் சாய்ந்து அமர்ந்திருந்தான்.

ஒண்ணுமில்லே.. லேசா நெஞ்சுவலி.. என் தம்பியைக் கூப்பிட்டிருக்கேன். அவன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல….

அண்ணி சொல்லி முடிக்கவில்லை, கரிகாலன் அண்ணனைக் கைத்தாங்கலாய் எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். வெளியே ஸ்டான்டில் நின்று கொண்டிருந்த ஆட்டோவில் அண்ணனை ஏற்றி ஆஸ்பிடலுக்குப் பறந்தான்.

எங்கே போறீங்க.. என்ற அண்ணியின் குரல் பின்னால் தூரத்தில் கேட்டது.

ஆஸ்பத்திரியின் பரபரப்பான நிமிடங்களில் கரிகாலனின் மனம் பதட்டப்பட்டது. சே.. அண்ணனைத் திட்டிட்டோம் தேவையில்லாம. செத்தா கூட ன்னு சொல்லிட்டோம்… அவனுடைய மனசு அடித்துக் கொண்டது. டாக்டர்கள், நர்ஸ்களின் பரபரப்பு நடை அவனுடைய பதட்டத்தை இன்னும் அதிகரித்தது. உதடு கடித்தான், நகம் கடித்தான், விரலையும் கடித்தான். ஒரு அரை மணி நேரத்துக்குப் பின் டாக்டர் வந்தார்.

ஒரு தமிழ் சினிமாவின் கிளைமேக்ஸ் வசனம் போல அவர் பேசினார். ‘நல்ல நேரத்துல கொண்டு வந்தீங்க. சிவியர் அட்டாக். இதுக்கு முன்னாடி வந்திருக்கா ? லேட் பண்ணியிருந்தா சிக்கலாயிருக்கும்.. எனிவே.. லெட் ஹிம் பி இன் அப்ஸர்வேஷன்..’ சொல்லி விட்டுத் திரும்ப கரிகாலன் அறைக்குள் ஓடினான்.

அண்ணே….

அண்ணனின் கண்கள் கரிகாலனின் கண்களை நோக்கின. கரிகாலனின் கண்கள் வழிந்தன. ‘என்னண்ணே.. ஏன் இப்படி ?… நல்லா தானே இருந்தே… ‘ கரிகாலன் அண்ணனின் கை பிடித்தான்.

அண்ணனின் கண்கள் ஈரமாயின. அவன் கரிகாலனின் கையை அழுத்தினான்.

அப்போது அண்ணி அந்த அறையில் நுழைந்தாள். அறையில் நின்றிருந்த கரிகாலனின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

‘எங்கே போறேன்னு ஒரு வாக்கு சொல்லக் கூட புத்தியில்ல. அறிவு கெட்ட ஜென்மம். ஆட்டோக்காரனைப் புடிச்சு எங்கே போயிருக்காங்கங்கற விஷயத்தை வாங்கி ஆஸ்பிடலுக்கு வரதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுச்சு. இதெல்லாம் எப்போ திருந்தப் போவுது’ இருவரின் காது படவே முனகினாள் அண்ணி.

கரிகாலன் ஈரமாயிருந்த அண்ணனின் கண்களை மட்டும் ஒரு முறை பார்த்துவிட்டு, அமைதியாய் வெளியேறினான்.

சேவியர்

சிறுகதை : பையன் எங்கே ?

பையனைக் காணோங்க….

போனின் மறுமுனையில் பதட்டமும், அழுகையுமாய் வழிந்த குரலைக் கேட்டதும் சாகர் வெலவெலத்துப் போனான். முகத்துக்கு நேரே விசிறியடித்துக் கொண்டிருந்த ஏ.சி காற்றையும் மீறி சட்டென உடல் வியர்த்தது. பதட்டத்தில் இருக்கையை பின்னோக்கித் தள்ள அது ஒரு அரைவட்டமடித்து ஆடியது. முன்னால் டேபிளில் இருந்த லேப்டாப் முகத்தில் வரி வரியாய், கட்டம் கட்டமாய் ஆங்கில எழுத்துகளை வாங்கி புரியாமல் பார்த்தது.

பையனைக் காணோமா ? ஏன் ? என்னாச்சு ? வீட்ல தானே இருந்தான் ? இருக்கையை விட்டு பதறி எழுந்த சாகரின் கையிலிருந்த செல்போன் நழுவி தரையில் விழுந்தது. அந்த ஐடி நிறுவனத்தின் தரை முழுவதும் அழுக்கு கலர் கார்ப்பெட் கைகளை விரித்துப் படுத்திருந்தது. கீழே விழுந்த அந்த போன் இருபதாயிரத்துச் சொச்சம் ரூபாய். இன்னொரு சந்தர்ப்பமாய் இருந்திருந்தால், “ஓ..ஷிட்..” என்று கத்தியிருப்பான். இப்போது அவனுக்கு எதுவுமே ஓடவில்லை.

என்னாச்சு ? வீட்ல தானே இருந்தான்.. மறுபடியும் கேட்டுக்கொண்டே கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான். வெளியே ஒரு அரை ஏக்கர் நிலம் அளவுக்கு அந்த வர்க் ஏரியா விரிந்து கிடந்தது. சின்னச் சின்ன தடுப்புகளுக்குப் பக்கத்தில் கணினிகளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள் சாஃப்ட்வேர் என்ஜினீயர்கள்.

மறுமுனையில் பிரியாவின் அழுகைக்கிடையே அவளுடைய வார்த்தைகளைத் தேடுவதே பெரும் சிரமமாய் இருந்தது அவனுக்கு. ஒரே பையன். போன மாசம் தான் இரண்டாவது பிறந்த நாளைக் கொண்டாடினான். பிறந்த நாளை கிராண்டா கொண்டாடாதேப்பா கண்ணு வெச்சுடுவாங்க.. ஊரில் பாட்டி சொன்னதையும் மீறி நல்ல செலவு பண்ணி விழா எடுத்திருந்தான்.

மாமாவும், அக்‌ஷத்துமா வெளியே போயிருந்தாங்க…

ஓ… அப்பா தான் கூட்டிட்டு போனாரா ? சாகர் குரலில் கொஞ்சம் பதட்டம் தணிந்தது. வந்துடுவாங்க.. எப்போ போனாங்க…

போய் ஒரு மூணு மணி நேரமாச்சும் இருக்கும்

மூணு மணி நேரமா ? போன பதட்டம் மறுபடியும் வந்து ஒட்டிக் கொள்ள, சரி.. அழாதே, பக்கத்துல எங்கேயாச்சும் போயிருப்பாங்க. என்றான்.

இல்லீங்க, மாமா வெறும் லுங்கியும், பனியனும் தாங்க போட்டிருந்தாரு. பையன் வீட்ல போட்டிருந்த சட்டை தான் போட்டிருந்தான். வேற எங்கயும் போயிருக்க வழியே இல்லை.

போன் பண்ணிப் பாத்தியா ?

பண்ணினேன்.. போனை வீட்டிலேயே வெச்சுட்டுப் போயிருக்காரு.. வெளியே போனா கைல எடுத்துட்டுப் போற அறிவு கூடவா இல்லை ?

பக்கத்துல கடைகளுக்கு எங்கேயாவது போயிருப்பாரோ ?

பக்கத்து கடை, அவங்க போற பார்க், அவங்க சுத்தற ஏரியா எல்லாம் போய் பாத்துட்டேன். அத்தை பையன் லாஸ்ட் ஒன் அவரா பைக்ல சுத்திட்டே திரியறான்.. எனக்கென்னவோ பயமா இருக்குங்க.. மறு முனையில் விசும்பல் சத்தம் அதிகமாகி அழுகையாய் மாறியிருந்தது.

சரி, டென்ஷன் ஆகாதே.. நான் இதோ கெளம்பி வரேன்.. சொல்லிக் கொண்டே பளீரென ஒளிவிட்டுக் கொண்டிருந்த லேப்டாப்பை அப்படியே மடக்கி கருப்பு நிற பைக்குள் திணித்தான். சுவரில் ஒரு பாம்பு போல தொங்கிக் கொண்டிருந்த பவர் கார்டையும் இழுத்து உள்ளே தள்ளினான். கதவைப் பூட்டாமல், லைட்டை அணைக்காமல் வெளியே வந்தான்.

எதிரே பளீர் விளக்கோடு தெரிந்தது மேனேஜர் முத்து வின் அறை. அந்த அறையைப் பார்த்தபோதே உள்ளுக்குள் எரிச்சல் வந்தது. அதையெல்லாம் வெளிக்காட்டாமல் வேகமாக அந்த அறையின் கதவை சம்பிரதாயமாய் ஒரு தட்டு தட்டிவிட்டுத் திறந்தான்.

வாங்க சாகர்.. என்ன பையோட கெளம்பிட்டீங்க

பையனைக் காணோமாம்…

என்னது பையனைக் காணோமா ? முத்துவின் கண்களில் தெரிந்த அதிர்ச்சி அவருடைய கண்ணாடியையும் மீறி எட்டிப் பார்த்தது.

அப்பா தான் பையனைக் கூட்டிட்டு போயிருக்காரு, அதனால பக்கத்துல எங்கேயாவது தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

ஓ.. அப்பா கூட தான் போயிருக்காரா ? அப்போ நோ பிராப்ளம்…

இல்ல… தட்ஸ் த பிராப்ளம்.. அவருக்கு இல்லாத நோய் எல்லாம் இருக்கு. சுகர், லோ பிபி.. எல்லா எழவும் இருக்கு. பாவம்.. சட்டுன்னு லோ பிபி அது இதுன்னு ஆயிடுச்சுன்னா என்ன பண்றது ? அதான் டென்ஷனா இருக்கு…

சரி..சரி.. நீங்க கெளம்புங்க… பிளீஸ்… டோன்ட் வரி,,,ஹி..வில் பி ஆல்ரைட்.

அடுத்தவனுக்கு ஆறுதல் சொல்வது ரொம்ப ரொம்ப ஈசி. அதே பிரச்சினை நமக்கு வரும்போது தான் எந்த ஆறுதலும் வேலை செய்யாது. சோலியப் பாத்துட்டு போய்யா.. அவனவன் கஷ்டம் அவனவனுக்குன்னு கத்தத் தோணும். சாகர் எதையும் சொல்லவில்லை, தாங்க்ஸ்… என்று மட்டுமே சொன்னான்.

அதற்குப் பிறகு தாமதிக்கவில்லை, வேக வேகமாக கதவில் அக்ஸஸ் கார்டைக் காட்டினான். பீப் என சத்தமிட்டு இறுக்கம் தளர்ந்த கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டே ஓடிய சாகரை செக்யூரிடி பிடித்து நிறுத்தினார்.

சார்..சாவி..சாவி… ரூம் சாவி சார்…

சாவி ரூம்லயே தான் இருக்கு… நீங்களே பூட்டி சாவியை எடுத்துக்கோங்க, கொஞ்சம் அர்ஜன்ட்… பேசிக்கொண்டே ஓடினான் சாகர்.

சரசரவென இரண்டு மாடிகள் கீழே இறங்கி, கார்ப்பார்க்கிங்கை நோக்கி ஓடுகையில் மீண்டும் போன்…

போலீஸ் கம்ப்ளெயின்ட் குடுக்க போறேங்க… ஐயோ.. பையன் எங்கே போனானோ…

கொஞ்சம் வெயிட் பண்ணு, என் பிரன்ட்ஸ்க்கு கால் பண்றேன்.. தேடுவோம்… வரேன்… நான் கார்ல ஏறிட்டே இருக்கேன்…

லேட் ஆயிட்டே இருக்கு.. நைட் ஆச்சுன்னா கண்டு பிடிக்க கஷ்டம்.. சொல்லும் போதே பிரியாவின் அழுகை போனில் கொட்டியது.

பெண்களுடைய அழுகை தான் ஆண்களுடைய டென்ஷனை பலமடங்கு உயர்த்தி விடுகிறது. தனது சான்ட்ரோ காரில் ஏறி சட்டென கிளம்பினான் சாகர்.

“டாடி.. இன்னிக்கு ஒரு நாளைக்கும் லீவ் போடுங்களேன்” காலையில் அக்‌ஷத் சட்டையை இழுத்துக் கொண்டே கேட்டான்.

இல்லப்பா.. இன்னிக்கு கண்டிப்பா போணும், ஒரு கிளையன்ட் விசிட் இருக்கு.. முத்து வரச் சொல்லியிருக்காரு.

யாருப்பா அது முத்து ?

என்னோட பாஸ் டா..

அதென்ன பாஸ் பா.. என் பையன் வீட்ல நிக்க சொல்றான்னு சொல்ல வேண்டியது தானே..

ஒரு கிளையன்ட் விசிட் இருக்கு… அதனால நிறைய வேலை..

ஆமா.. பையனுக்கு கிளையன்ட் விசிட், வேலை எல்லாம் ரொம்ப நல்லா புரியும் ரொம்ப டீட்டெயிலா சொல்லுங்க. பாத்திரங்களின் இசைக்கிடையே பிரியாவின் குரல் கிண்டலுடன் ஒலித்தது.

பையனுக்கு புரியுதா இல்லையாங்கறது முக்கியமில்லை, ஆனா உண்மையைச் சொல்லணும்ல…

ஆமா..ஆமா.. பையனுக்கு சொல்ற சாக்குல என் கிட்டே தான் அதைச் சொல்றீங்க…

சே…சே… உனக்கு இனிமே புதுசா சொல்லணுமா என்ன ? சாக்ஸை உதறிக் கொண்டே கேட்டான் சாகர். அவனுடைய பதிலில் சிரிப்பு கொஞ்சம், வழிசல் கொஞ்சம் கலந்திருந்தது.

சரி.. சரி.. கெளம்புங்க…

டாடி…. பிளீஸ்….

இல்லடா செல்லம்.. நாளைக்கு லீவ் போட்டு உன்னை ஊர் சுத்திக் காட்டறேன் சரியா…

டேய்.. நாளைங்கறது டாடிக்கு எப்பவும் வராதுடா… அவருக்கு கிளையண்ட் தான் முக்கியம்…

சாகர் சிரித்துக் கொண்டே, பையனை அள்ளி எடுத்துக் கொஞ்சிவிட்டு காரை நோக்கி நடந்தான். பின்னால் பையன் ஒரு சோக முகத்தோடு சுவற்றைப் பிடித்துக் கொண்டே நின்றான்.

டேய்..சாவுகிராக்கி.. பாத்து ஓட்டமாட்டே ?

சர்ர்ர்ர்ர்ரக்… என பிரேக் அடித்து நிமிர்ந்த சாகரின் காருக்கு முன்னால் ஒரு பல்சர் நின்றிருந்தது. அவன் எப்போ அங்கே வந்தான் என்பதையே சாகர் கவனிக்கவில்லை. கவனம் எல்லாம் பையன் மீது தான் இருந்தது…

இந்த ஐடி கம்பெனியில் சேர்ந்ததிலிருந்தே ஏதாவது ஒன்று மாறி ஏதோ ஒரு வேலை வந்து கொண்டே தான் இருக்கிறது. என்ன செய்ய ? ஐந்திலக்கத்தில் ஒரு பெரிய எண் வங்கிக் கணக்கில் மாசம் தோறும் அட்சர சுத்தமாய் வந்து சேரும். அதற்குக் கொடுக்கும் விலை ரொம்பப் பெரியது.

கிளையன்ட் விசிட் என்றாலே போச்சு. அவன் தானே பணம் காய்க்கும் மரம். அவனை எவ்வளவு தூரம் சோப்பு போடறோமோ அந்த அளவுக்கு தான் கம்பெனி வளரும். ஒருத்தன் அமெரிக்காவிலிருந்து விசிட்டுக்கு வருகிறான் என்றாலே இங்கே எல்லோருக்கும் கிலி பிடித்துக் கொள்ளும்,

அஜென்டா தயாராக்கிட்டியா ? விசிட் அரெஜ்மென்ட் எல்லாம் என்ன நிலமைல இருக்கு ? லாஜிஸ்டிக்ஸ் ல எந்த பிரச்சினையும் வரக்கூடாது… வர்ரவன் சாதாரண ஆள் இல்லை. அவன் அந்த குரூப் டைரக்டர். அவனோட மனசைக் குளிர வைக்கிறது தான் நம்ம ஒரே குறிக்கோள்.

அஜென்டா பண்ணிட்டிருக்கேன் முத்து.. இன்னும் முடியல..

சீக்கிரம் முடி.. இன்னும் மூணு வாரம் தான் இருக்கு. நாலு கேப்பபிளிடி பிரசன்டேஷன் வேணும். டெஸ்டிங் சர்வீசஸ்ல யார் அவெய்லபிள்ன்னு பாரு… நாலு பிரசன்டேஷனாவது இருக்கணும். வரவனுக்கு நம்ம கம்பெனி மேல நல்ல அபிப்பிராயம் வரணும்.

கண்டிப்பா பண்ணிடலாம்.

சீக்கிரம் பண்ணு… ஐ  வான்ட் டு ரிவ்யூ த பிளான். பிரசன்டேஷன் குடுக்கிறவங்களோட டைம் வேணும். அவங்களோட பிரசன்டேஷன் வாங்கி முதல்ல படிச்சுப் பாரு. ஒரு டிரை ரண் போடணும். சும்மா கிளையன்ட் முன்னாடி நிறுத்தினா சொதப்பிடுவாங்க. பத்து மில்லியன் அக்கவுண்ட்ப்பா… கொஞ்சம் சொதப்பினாலும் வீ வில் லூஸ் அவர் ஜாப்.. அப்புறம் வீட்ல தான் இருக்கணும்.

யா.. ஐ அண்டர்ஸ்டேன்ட்.. நான் பண்ணிடறேன்..

ஐ..நோ.. யூ வில் டூ.. பட்.. ஐ னீட் திஸ் குவிக்லி மேன்…

முத்துவின் விரட்டலிலும் காரணமில்லாமல் இல்லை. கிளையன்ட் விசிட் என்றால் அப்படி ஒரு முக்கியம் ஐடியைப் பொறுத்தவரை. வருபவனுக்கு மாலை போட்டு வரவேற்பது முதல், தனியே ஒரு கான்ஃபரன்ஸ் ரூம், பக்கத்திலேயே ராடிசன் ஹோட்டல் சிப்பாய்கள் ரெண்டுபேர் அவனுக்கு காபியோ, டயட் கோக்கோ ஊத்திக் கொடுக்க. அவனைப் பார்க்கும் போதெல்லாம் அலகில் கிளிப் போட்டது போல சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவன் கேட்பதற்கெல்லாம் பூம் பூம் மாடு போல தலையாட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

என்ன லைஃப் டா இது என அவ்வப்போது சலித்துக் கொள்வான் சாகர். ஆனால் எந்த வேலையில் தான் கஷ்டம் இல்லை ?. வெட்ட வெயிலில் ரோட்டு நடுவே நிற்கும் டிராபிக் கான்ஸ்டபிளை விட கஷ்டமானதா நமது வேலை, அல்லது சைக்கிளில் காய்கறி வைத்துக் கொண்டு கூவிக் கூவி விற்கும் பெரியவரை விடக் கஷ்டமானதா நமது வேலை. இல்லவே இல்லை. என மனசைத் தேத்திக் கொள்வான்.

சாலையில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே, பிரியாவுக்கு போன் செய்தான்.

என்கேஜ்ட் என்றது…

நண்பன் ஶ்ரீனிக்கு போன் செய்தான். டேய் அக்‌ஷத்தைக் காணோமாம்டா மச்சி.. உடனே கெளம்பி என் வீட்டுக்கு வா…

பேசிக்கொண்டிருக்கும் போதே பிரியாவின் போன்… கடவுளே நல்ல செய்தியாய் இருக்க வேண்டுமே என வேண்டிக்கொண்டே கிளிக்கினான்…

மறுமுனை இன்னும் அழுது கொண்டிருந்தது.

இதோ நாம் இன்னும் ஐந்து நிமிஷத்துல வந்துடுவேன்.. போலீஸ் ஸ்டேஷன் போலாம்.. அப்பாவும் போயிருக்காருல்ல.. வந்துடுவாங்க… சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு ஆம்புலன்ஸ் கத்திக் கொண்டே எதிர் திசையில் வந்தது.

சாகரின் கால்கள் வலுவிழந்தன… ஐயோ.. பையனுக்கு ஏதாவது ?… அந்த நினைப்பே அவனுக்குள்ளிருந்த கிலியை அதிகரிக்க கைகள் ஈரமாகி வழுக்கின.

இதோ இன்னும் இரண்டு சிக்னல் தான்.. சாகரின் மனம் எல்லா தெய்வங்களையும் உதவிக்கு அழைத்தது.

என்ன அப்பன் நான். பையன் எவ்ளோ தடவை சொன்னான்.. பேசாம லீவ் எடுக்காம அந்த முத்து பேச்சைக் கேட்டு ஆபீஸ் போனதே தப்பு.. கடவுளே நான் ஏதாச்சும் தப்பு பண்ணியிருந்தா என்னை மன்னிச்சுடு… என் பையனுக்கு ஒண்ணும் ஆகக் கூடாது… பிளீஸ்… அவனுடைய நெஞ்சம் பதறித் தவித்தது.

அதோ அடுத்த சிக்னலில் வலது பக்கமாக இருக்கும் டோமினோஸ் பீட்ஸா கடையை ஒட்டிய சந்தில் திரும்பினால் வீடு…

வேகமாய் காரை மிதித்து சரேலெனத் திரும்பினான் சாகர். எதிரே வந்த லாரி இன்னும் ஒண்ணே கால் வினாடி தாமதித்திருந்தால் ஏறி மிதித்திருக்கும். நல்ல வேளை ஒன்றும் நடக்கவில்லை. வீட்டிற்கு முன்னால் சின்னதாய் ஒரு கூட்டம்.

வண்டி நின்றது. ஓடி வந்தாள் பிரியா… ரெண்டு மணிக்கு போனாங்க, மணி ஆறாகுது.. இன்னும் வரலைங்க.. என்னமோ ஆயிருக்கு… அவள் அழுது அழுது சோர்ந்து போயிருந்தாள்.

சாகருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கைகளைத் தலையில் வைத்துக் கொண்டு உதடுகளைக் கடித்தான். அவனுடை பார்வை எதிரே இருந்த புதரை நோக்கிப் போனது.

எல்லா வாய்க்கா, புதர் எல்லாம் பாத்துட்டேங்க… அழுகை கலந்து குரல் வந்தது.

என்ன செய்வது ? போலீசுக்குப் போக வேண்டியது தான். சாகர் காரை நோக்கி விரைந்தான்.

அப்போது ஒரு ஆட்டோ வந்து நின்றது.

என்னாச்சு ? கேட்டுக்கொண்டே இறங்கினார் சாகரின் அப்பா. கையில் பையன் அக்‌ஷத். எல்லோருக்கும் போன உயிர் சட்டென திரும்பி வந்தது.

அக்‌ஷத்த்த்… கூவிக்கொண்டே ஓடிப்போய் குழந்தையை அள்ளினாள் பிரியா. கொஞ்ச நேரம் தெய்வங்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு குழந்தையை அணைத்தாள்.

ஏன்.. ஏன் கூட்டம் ? என்னாச்சு ? சாகரின் அப்பா புரியாமல் கேட்டார்.

ஏன்பா.. போகும்போ… போனையாவது கைல கொண்டு போயிருக்கலாம்ல… சாகர் பையனைக் கண்ட நிம்மதியில், அப்பாவிடம் மெலிதான எரிச்சலைக் காட்டினான். பையனைக் காணோம்ன்னு நாலு மணி நேரமா ஊர் புல்லா சுத்தியாச்சு.. எங்கே தான் போயிருந்தீங்க.

அய்யோ.. அதான் இந்த ஆர்ப்பாட்டமா.. சாரி.. பையன் பார்க் போணும்னு சொன்னான், பக்கத்து பார்க் மூடியிருந்துது அதான் நம்ம பிள்ளையார் கோயில் பின்னாடி இருக்கிற பார்க்ல கூட்டிட்டு போனேன்.

அவ்ளோ தூரமா போனீங்க..

ஆமா, போகும்போ நடந்து தான் போனோம். சரி லேட்டாயிடுச்சே தேடுவீங்களேன்னு தான் நான் ஆட்டோ புடிச்சு வந்தேன்.

மத்தவங்க பிள்ளையைத் தேடுவாங்கன்னு தெரியாது ? அறிவு கெட்ட ஜென்மம்… வேணும்னா தனியா போய் தொலைஞ்சிருக்க வேண்டியது தானே.. பிரியா உதடுகள் பிரியாமல் திட்டினார்.

எந்த ஆர்ப்பாட்டத்தையும் புரிந்து கொள்ள முடியாமல் அக்‌ஷத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான்.

போன் அழைத்தது…

சாகர்… பையன் கிடைச்சுட்டானா ? மறு முனையில் முத்து.

யா.. கெடச்சுட்டான்.. அப்பா கொஞ்சம் தூரமா கூட்டிட்டு போயிட்டாரு போல. அதுக்குள்ள என்னோட வய்ஃப் கத்தி கலாட்டா பண்ணிட்டாங்க.

ஓ..காட்.. நல்ல வேளை.. ஒரே பதட்டமாயிப் போச்சு. ஏன் வைஃபை மட்டும் சொல்றீங்க ? உங்க முகமே விகாரமாயிப் போச்சுல்ல. அதான்பா பிள்ளைப் பாசம்.

யா.. வேற எதையும் என்னால நெனச்சுக் கூட பாக்க முடியல… முத்து, ஹி.. ஈஸ் மை எவ்ரிதிங்.

ஓ.கே.. குட்.. தேங்க் காட்… சரி, நாளைக்கு லீவ் எடுத்துக்கோங்க.. வீட்ல பையன் கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க..

தாங்க்ஸ் முத்து, நானே கேக்கலாம்ன்னு நினைச்சேன்.

ஹே..நோ..நோ பிராப்ளம்.. கிளையன்ட் வருவான், போவான்.. நம்ம லைஃப், நம்ம கிட்ஸ் அவங்களை நாம தான் பாத்துக்கணும்… ஸ்பென்ட் சம் டைம் வித் ஹிம்…

தேங்க்ஸ் முத்து…  முதன் முறையாக முத்து மீது கொஞ்சம் மரியாதை வந்தது சாகருக்கு.

போனை வைத்த மறு வினாடி, வெளியே விளையாடிக் கொண்டிருந்த பையனை அள்ளினான்.

நாளைக்கு நான் லீவ் போடறேன்.. எங்கே போலாம்… ?

ரியலி ?? இன்னிக்கு போன பார்க்குக்கே போலாம் டாடி… கபடமில்லாமல் சிரித்தான் அக்‌ஷத்…

கண்டிப்பா என அணைப்பை இறுக்கினான் சாகர்.

சேவியர்

கல்கி சிறுகதை : ஜீ..பூம்..பா

 3

மந்திரவாதி தன்னுடைய கையிலிருந்த மந்திரத் தண்ணீர் இருந்த பாட்டிலை சிறுவனின் கையில் கொடுத்தான்.

“இதிலிருப்பது மந்திரத் தண்ணீர். உன்னுடைய தோட்டத்துச் செடிகள் வளரவேண்டுமென்றால் ஒரு சொட்டு மந்திரத் தண்ணீரை எடுத்து ஒரு செடியின் தலையில் விட்டால் போதும். செடி செழித்து வளரும்”

சிறுவனுக்கு ஒரே குஷி. அவனுடைய செடிகள் ரொம்ப நாளாவே வளரவில்லை. எப்படியாவது வளர வைக்க வேண்டுமென முயற்சி செய்கிறான் முடியவே இல்லை.  அப்பா வேறு ரொம்ப கடுமை பார்ட்டி. ஒரு செடியைக் கூட ஒழுங்கா வளக்கத் தெரியலை என்று பிரம்பை எடுத்து அடிக்கடி சாத்துவார். இப்போ இந்த மந்திரத் தண்ணீர் கிடைச்சிருக்கு. இது தண்ணீர் எல்லா சிக்கலுக்கும் விடிவு என சிறுவன் நினைத்தான்.

அன்று மாலை மந்திரக் குடுவையைத் திறந்து ஒரு சொட்டு மருந்தை ஒரு செடியின் தலையில் விட்டான்.

ஜீ..பூம்…பா போல செடி கடகடவென வளரும் என நினைத்தான்… ஊஹூம் வளரவில்லை.

அடுத்த செடியில் விட்டான்…

ஊஹூம்…

அதற்கு அடுத்த செடி ?

ஒரு மாற்றமும் இல்லை.

அப்படியே கடைசிச் செடி வரை முயற்சி செய்து பார்த்தான். ஒரு பயனும் இல்லை. ரொம்ப சோகமாகிவிட்டது. மிச்சமிருந்த பாட்டில் தண்ணீரையெல்லாம் கடைசிச் செடியின் தலையில் கவிழ்த்தான். கொஞ்ச நேரம் செடிகளையே பார்த்துக் கொண்டிருந்தவன் ரொம்ப சோகமும் சோர்வும் பிடித்துக் கொள்ளப் போய்ப் படுத்து தூங்கிவிட்டான்.

மறு நாள் காலை.

டேய்.. சீக்கிரம் எழும்புடா…. அப்பா உலுக்கினார்.

என்னப்பா ?

உன் தோட்டத்தைப் போய் பாரு ? என்ன பண்ணினே ?

என்னாச்சுப்பா ?

எழும்புடா போய்ப் பாரு.

சிறுவன் கண்ணைக் கசக்கிக் கொண்டே தோட்டத்தைப் போய்ப் பார்க்க செடிகள் எல்லாம் செழித்து வளர்ந்து அழகழகாய்ப் பூக்கள் பூத்திருந்தன. புது வகையான பூக்கள் !

சிறுவனுக்கு குஷி தாங்கவில்லை. ஓடிப் போய்க் கடைசிச் செடியைப் பார்த்தான். அந்தச் செடிக்குத் தான் மிச்சமிருந்த தண்ணீரையெல்லாம் ஊற்றியிருந்தான்.

அந்தச் செடி வானளாவ வளர்ந்து மேகத்துக்குள் புகுந்திருந்தது…

ஓ…வாவ்… எவ்ளோ பெருசு ? சிறுவன் ஓடிப் போய் அந்த மரத்தில் தொங்கினான். அந்தக் கிளையில் ஏதோ ஒன்று அமர்ந்திருந்தது. தகதகவென ஒளிர்ந்தது. உற்றுப் பார்த்தான். அது ஒரு பொன் நிறத்திலான குட்டி டிராகன் !

சரி… ஸ்கூல் வந்துச்சு… இனிமே மிச்ச கதை நாளைக்கு. வண்டியை ஓரமாகப் பார்க் பண்ணிவிட்டு சீட் பெல்டைக் கழற்றிக் கொண்டே இடப்பக்கம் திரும்பி மகனைப் பார்த்தேன். மடிப்பு கலையாத வெள்ளைச் சட்டை, கொஞ்சம் சாம்பல் கலரில் ஒரு டவுசர். கழுத்தில் தொங்கும் டேகில் அக்‌ஷயா மெட்ரிகுலேஷன் பெயர். அருகில் குட்டிப் புகைப்படத்தில் அவன் சிரித்துக் கொண்டிருந்தான். கீழே யூகேஜி பி. என்று பளிச் என எழுதப்பட்டிருந்தது.

டாடி… பிளீஸ்… கார்ல இருந்தே கொஞ்சம் சொல்லுங்க பிளீஸ்….  

நோ… டா செல்லம்.. இட்ஸ் லேட். நைன் ஓ க்ளாக். மிச்சம் நாளைக்கு.

ஒரு கையில் பையையும், மறுகையில் பையனையும் அள்ளிக் கொண்டு ஸ்கூல் காம்பவுண்டை நோக்கி நடந்தேன். தூரத்தில் அக்‌ஷயா மெட்ரிகுலேஷன் பள்ளி கம்பீரமாய் நின்றிருந்தது. பள்ளியின் தலையில் டிரீம், டேர், டூ என வாசகங்கள். வாசலில் குட்டிக் குட்டி மழலைப் பூக்கள் ஓடியாடிக் கொண்டிருந்தன. குட் மார்ணிங் மிஸ் எனும் குரல்களுக்கிடையே ஆசிரியர்களும் ஆங்காங்கே தெரிந்தார்கள்.

எனக்கு இது தினசரிப் பழக்கம் தான். காலையில் 6.20 க்கு அலாரம் அடிக்கும். அடிக்கும் அலாரத்தை சபிப்பதில்லை. காரணம் இப்போதேனும் எழும்பாவிட்டால் எல்லாம் குளறுபடியாகிவிடுமென்பது ரொம்ப நல்லா தெரியும். ஒருபக்கம் மகள், மறுபக்கம் மகன் என ஆளுக்கொரு திசையில் அற்புதமான தூக்கத்தில் லயித்திருப்பார்கள். அழகான தூக்கத்தில் இருக்கும் ஒரு மழலையை எழுப்புவது போல ஒரு மோசமான வேலை இருக்க முடியாது. என்ன செய்ய ? இப்போ எழும்பினால் தான் மகளை 8 மணிக்கு ஸ்கூலில் கொண்டு விட முடியும். பிறகு திரும்ப வந்து பையனை 9 மணிக்கு ஸ்கூலில் கொண்டு போய் விட வேண்டும்.

வீட்டுக்கும் ஸ்கூலுக்கும் இடையே மூன்று கிலோமீட்டர் தூரம் தான். சென்னை ஸ்பெஷல் ஏரியா ! சந்துகளைச் சந்தித்து, டிராபிக்கை அனுசரிக்க வேண்டியிருப்பதால் பத்து நிமிட கார்ப் பயணம்.

காரில் ஏறியவுடன் சீட்பெல்ட் போட்டு, ஒரு குட்டிப் பிரேயர் முடித்த கையோடு “டாடி ஸ்டோரி” என்பார்கள் இருவரும்.

ஆளுக்குத் தக்கபடி கதைகளைச் சொல்ல வேண்டும்.

மகளுக்கு பிடித்தவை தேவதைக் கதைகள். ஃபேரி டெய்ல்ஸ் அவளுடைய ஃபேவரிட். அழகழகான பூந்தோட்டங்கள், அதில் உலவும் ஃபேரி கள், அந்த ஃபேரிகளுக்கு வில்லனாய் வரும் தூரதேசத்து மோசமான சூனியக்காரி, பிறகு எப்படி அந்த ஃபேரிகள் கடைசியில் சந்தோசமாக வாழ்ந்தார்கள் என்று முடியும். ஒரு ஃபேரி கதை முடிந்தபின் அடுத்த கதைக்கு டால்பின், கடல்க் கன்னி, தூரதேசத்து ராஜகுமாரி, அரச கோட்டையில் கிடந்த நீலக் கல் என ஏதோ ஒரு கதை அன்றைய காலைப் பொழுதில் உதயமாகி தானாகவே வளரும்.

பையனுக்குப் பிடித்தமானவை ஆக்‌ஷன் கதைகள். மந்திரவாதி, டிராகன், டைனோசர், சிங்கம், புலி என பரபரப்பாய் இருக்கும் கதைகள் தான் பிரியம். அப்படி இல்லாவிட்டால் கார் ரேஸ், கடல் பயணம் என அதிரடியாய் இருக்க வேண்டும். பசங்களுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் எப்படி ரசனை சின்னவயதிலேயே நிர்ணயமாகிவிடுகிறது பாருங்கள். எல்லாம் கடவுள் படைப்பின் விசித்திரம் என்றால் நாத்திகவாதிகள் அடிக்க வருவார்கள். சரி அது கிடக்கட்டும். அப்படி, அவரவர் விருப்பத்துக்குத் தக்கபடி கதைகள் எப்படியோ எனது மூளையின் வலது பக்கத்தில் உதயமாகிக் கொண்டே இருக்கும்.

எந்தக் கதையையும் முன்கூட்டியே யோசிப்பதில்லை. எந்தக் கதை எப்படி துவங்கி எங்கே போய் முடியும் என்று சத்தியமாய்த் தெரியாது. குழந்தைகளுக்குக் கதை சொல்வது ஒரு கலை. கதை எப்படி இருந்தாலும் அதைச் சொல்லும் போது ஒரு நாடகம் போல ஏற்ற இறக்கம் முக்கியம். கொஞ்சம் ஓவர் ஆக்‌ஷன் இருக்கலாம் தப்பில்லை. பிள்ளைகள் எந்த இடத்தை ரசிக்கிறார்களோ அந்த இடத்தை டெவலப் செய்து கொண்டே போக வேண்டும். எந்த இடம் அவர்களுக்குச் சுவாரஸ்யம் இல்லையோ, அந்த இடத்தைக் கட்பண்ணி கடாசவேண்டும். அந்த நுணுக்கம் தெரிந்தால் எல்லோருமே கதை சொல்லிகள் தான். என் கதைகள் குழந்தைகளுக்கு ரொம்பப் பிரியம். தினமும் கதை சொல்வேன். எந்த இடத்தில் நேற்று முடித்தேன் என்பதையே மறுநாள் மறந்து விடுவதும் உண்டு. ஆனால் பிள்ளைகள் மறப்பதேயில்லை.

“டாடி, அந்த டிராகனோட முதுகுல இருந்து கடல்ல குதிப்பான்ல, அதுவரைக்கும் சொன்னீங்க. அவன் குதிக்கிற இடத்துல நிறைய முதலைங்க நீந்திட்டு இருந்துச்சு…” என்று அட்சர சுத்தமாய் நினைவில் வைத்து சொல்வார்கள்.

“ஓ.. குதிச்சானா, அங்கே முதலை வேற இருந்துச்சா… ” சட்டென மூளையைக் கசக்குவேன். எனக்கு உதவ ஒரு திமிங்கலமோ, கடல்கன்னியோ, அல்லது விழும் முன் தூக்கிக் கொண்டு பறக்க ஒரு ராட்சத வெள்ளை கழுகோ வரும். அது அந்த நாளைப் பொறுத்தது !

பையனை ஸ்கூலில் அனுப்பியாகிவிட்டது. இனிமேல் அலுவலகத்தை நோக்கி 30 நிமிட டிரைவ்.

கண்ணாடிகளை ஒட்டி வைத்து சூரிய ஒளியை சூரியனுக்கே திருப்பி அனுப்ப முயலும் ஐடி நிறுவனம் ஒன்றில் தான் வேலை. பிஸினஸ் எனேபிள்மென்ட் என ஸ்டைலாக அழைக்கும் துறையில் மேனேஜர். பேரைக் கேட்டு பயந்துடாதீங்க, கலர் கலரா பிரசன்டேஷன் பண்ணி, அதை திரையில் காட்டி கஸ்டமர்களை வசீகரிப்பது தான் வேலை. கொஞ்சம் டீசன்டா சொல்லணும்ன்னா அடுத்த கம்பெனிக்கு பிஸினஸ் போகாம நம்ம பக்கத்துக்கு இழுக்கிறது. ஓடைல ஓடற தண்ணியை இடையில வாய்க்கால் வெட்டி நம்ம வயலுக்குத் திருப்பற மாதிரி. விவசாயம் பத்தி தெரியாதவங்க,  டக் ஆஃப் வார் ன்னு வேணும்ன்னா வெச்சுக்கோங்க. 

கடந்த ஒரு மாத காலமாகவே ஒரு புராஜக்ட்க்காக மாடாய் உழைக்கிறோம். புராஜக்ட் புரபோஸல் கடைசி ஸ்டேஜ் ! கடைசி நிலைன்னு சொல்றது கஸ்டமரிடம் நமது பிரசன்டேஷனைக் கொடுத்து அவனுக்கு விளக்கிச் சொல்வது. அலுவலகத்தில் ஒவ்வொருத்தரிடமும் தகவல் கறந்து, சொல்யூஷனிங், டைமிங், காஸ்ட் அது இது என புரண்டு புரண்டு ஓடியதில் முதுகுக்கே முதுகு வலி. இன்னிக்கு நைட் கிளையன்ட் பிரசன்டேஷன். ஒரு நட்சத்திர ஹோட்டலில் கான்ஃபரன்ஸ் ஹால் புக் பண்ணியிருந்தார்கள்.

வைன் கோப்பைகளும், கோட் சூட்டுகளும் இருக்கும் அறையில் பிரசன்டேஷன் செய்வதே ஒரு பெரிய மேஜிக். கத்தியில் நடப்பது போல கவனம் வேண்டும். நாமும் கோட்டு சூட்டுக்கு மாறவேண்டியது முதல் கொடுமை ! வாடகைக்காவது ஒரு நல்ல ஷூ வாங்கிக் கொள்ள வேண்டியது இரண்டாவது கொடுமை. உதட்டிலிருந்து வழுக்கிக் கீழே விழுந்து விடாத புன்னகையை ஆணி அடித்து வைக்க வேண்டியது மூன்றாவது கொடுமை. எல்லாவற்றுக்கும் மேல் கிளையண்ட் சொல்லும் மொக்கை ஜோக்குக்கெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டியது உலக மகா கொடுமை.

இந்த கொடுமைகளையெல்லாம் தாண்டி, இந்த பிரசன்டேஷன் வெற்றி கரமாக முடிக்க வேண்டும் எனும் எண்ணம் மட்டுமே மனசில் ஓடிக்கொண்டிருந்தது. என்னுடைய மேனேஜரிம் மனசிலும் அதே சிந்தனை தான்… ஸீ… ஹி..ஈஸ் காலிங்…

சார்…

இட்ஸ் லேட்… வயர் ஆர் யு ?

ஆன் மை வே… ராஜ்….. ஐ..ல் …பி …. இன் ஃபியூ மினிட்ஸ்.

சீக்கிரம் வாங்க… ஒரு ஃபைனல் ரன் துரூ தேவையிருக்கு. நீட் மோர் கிளாரிடி ஆன் ஆன்ஸர்ஸ்.

கண்டிப்பா சார்… வெச்சுடலாம்… ஒரு லெவன் ஓ கிளாக் உங்களை மீட் பண்றேன்.

ஓகே… சப்போர்ட்டிங் டாக்குமென்ட்ஸ்..

எல்லாம் ரெடி சார்…

வீ நீட் டு கட் துரோட் மேன்…. ஐ ஆம் ஆல் எக்ஸைட்டிங்…

பண்ணிடலாம் சார். ஆல் செட்…. இந்த புரபோசல் நமக்கு தான் சாதகமா இருக்கு. காஸ்ட் வைஸ் நாம மத்த கம்பெனியை விட கம்மியா இருக்கோம்ன்னு நமக்கே தெரியுது. அப்படியே அவங்க இதை விடக் கம்மியா கோட் பண்ணியிருந்தா கூட, நாம நாலெட்ஜ் டிரான்சிஸன் இலவசமா பண்ணிக் கொடுக்கறதா சொல்லியிருக்கோம். அது ஒரு இன்வெஸ்ட்மென்ட் நம்ம சைட்ல. அவங்களுக்கு அது ஒரு ஆடட் அட்வான்டேஜ்… எல்லாமே நல்லா தான் இருக்கு…. எந்திங் மிஸ்ஸிங் ?

நோ..நோ… யூ ஆர் ரைட்… நல்லா பிரசன்ட் பண்ணணும். தேட்ஸ் இம்பார்டன்ட்.

கண்டிப்பா சார்.

ஓகே,.. ஸீ..யூ.. இன் ஆபீஸ்.

அன்று மாலை,

அந்த குளிரூட்டப்பட்ட அறையில் ஏழு பேர் இருந்தார்கள். ஒட்டடைக்குச்சி போல ஒருவர் கழுத்தில் டையுடன் நீளமான ஒரு கோப்பையில் வைன் வைத்திருந்தார். அவருக்கு நேர் எதிராய் ஒரு குண்டு மனிதர் பழச் சாறுடன் அமர்ந்திருந்தார். மிச்ச நபர்கள் ஆளுக்கொரு பேப்பரும் பேனாவும் வைத்துக் கொண்டு கால் மேல் கால் போட்டுக்கொண்டு என்னைப் பார்த்தார்கள். அந்தப் பார்வை எமோஷன்ஸ் ஏதும் காட்டாத ஜேம்ஸ்பாண்ட் லுக்.

கழுத்தில் இருந்த டையை கொஞ்சமாய் அழுத்தி தலையை அசைத்துக் கொண்டே…

“ஐ ஆம் ரியலி எக்ஸைடட் டு வெல்கம் யூ ஃபார் திஸ்……” என்று பேசத் துவங்கினேன்.

தயாரித்து வைத்திருந்த பவர் பாயின்ட் பிரசன்டேஷன் திரையில் கலர்கலராய் வரைபடங்களோடு மின்னியது.

எங்களுக்கு வேலை கொடுத்தால் மூன்று ஏரியாக்களில் நீங்கள் பயனடைவீர்கள். குறைந்த செலவு, நிறைந்த தரம் மற்றும் சரியான நேரம். இந்த விஷயங்களை எப்படி நாங்கள் செயல்படுத்தப் போகிறோம் என்பதை விளக்கப் போகிறேன். அதற்காக எங்களிடம் என்னென்ன ஸ்பெஷல் திறமைகள் இருக்கின்றன என்பதையும் சொல்லப் போகிறேன். அதற்கு முன் எங்கள் நிறுவனத்தைப் பற்றியும், அதன் வீர தீர பராக்கிரமங்களையும் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மென்மையான ஆங்கிலத்தில் விழுந்து விடாத புன்னகையில் பேசத் தொடங்கினேன்.

எனக்கு முன்னால் கதை கேட்க சுவாரஸ்யமாய் அமர்ந்திருக்கும் மகனின் முகம் தெரிந்தது. உள்ளுக்குள் மெல்லப் புன்னகைத்தேன். ‘டாடி.. சொல்லுங்க டாடி’ என்று அவன் சொல்வது போல ஒரு பிரமை.

நான் என் கையிலிருந்த மந்திரக் கோப்பையை எடுத்தேன். அதிலிருந்த திரவத்தை எடுத்து தெளித்தேன். செடிகள் அசுர வளர்ச்சியடைந்தன. எதிரே இருப்பவர்களின் சுவாரஸ்யங்களை அறிந்து அந்த ஏரியாக்களில் உயர்வு நவிர்ச்சி அணியைப் புகுத்தினேன். மற்ற இடங்களைத் தவிர்த்தேன். சரளமாக நான் சொல்லிக் கொண்டிருந்த ஃபேரி டேல் கலந்த பிரசன்டேஷனைப் பார்த்து தூரத்தில் அமர்ந்திருந்த மேனேஜர் பிரமித்துப் போய்விட்டார். நான் தொடர்ந்தேன்… தொடர்ந்து கொண்டே இருந்தேன். 

எனக்கு எதிரே அமர்ந்து உதட்டைத் தேய்த்துக் கொண்டிருந்தவரைப் பார்த்து,

எனி கொஸ்டின்ஸ் ?  என்றேன், புன்னகை மாறாமல்.

சேவியர்

 

 

 

பொருந்தாக் காதல் பெரும் தீது !

22j
இஸ்ரவேலர்களின் மன்னனாக இருந்த தாவீதிற்கு ஏராளமான மனைவிகளும், பிள்ளைகளும் இருந்தனர். அவர்களின் ஒருவன் பெயர் அப்சலோம்.
அப்சலோமிற்கு தாமார் என்றொரு சகோதரி இருந்தாள். தாமார் பேரழகி. இளமையும் அழகும் ஒரே இடத்தில் கொட்டி வைத்தது போன்ற அழகிய உருவம் அவளுக்கு. அவளைக் கண்டவர்கள் அனைவரும் தங்களை மறந்து அவளுடைய அழகில் சிறிது நேரம் சொக்கிப் போவது நிச்சயம். அந்த அளவுக்கு அழகி அவள்.

தாவீதிற்கும் இன்னொரு மனைவிக்கும் பிறந்த ஒரு மகன் அம்மோன். அவனும் நாளுக்கு நாள் அழகும் இளமையும் அதிகரித்துக் கொண்டே வருகின்ற தாமாரின் மீது ஆசைப்பட்டான். தன்னுடைய தங்கை என்று தெரிந்திருந்தும் அவள் மீது கொண்ட மோகத்தை அவனால் நிறுத்தி வைக்க முடியவில்லை. தூக்கமில்லாத இரவுகளில் அவன் தாமாரின் நினைவில் புரண்டான். எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்னும் நினைப்பிலேயே அவன் நோயுற்றான்.

ஒரு நாள், அம்மோனைக் காண அவனுடைய நண்பன் யோனத்தாபு வந்தான்.

‘இளவரசே… என்னவாயிற்று உடம்புக்கு ? ‘ யோனத்தாபு கேட்டான்.

‘மனசு சரியில்லாததால் உடம்பும் வாடிவிட்டது… ‘ அம்மோன் சொன்னான்.

‘இளவரசருக்கே மனசு சரியில்லையா ? என்ன சொல்கிறீர்கள் ? மனசில் இருப்பதை மறைக்காமல் சொல்லுங்கள். எந்தக் குழப்பத்துக்கும் ஒரு முடிவு உண்டு, எந்தப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு.  உங்கள் கலக்கத்தைச் சொல்லுங்கள், அதைத் தீர்க்க நான் ஒரு வழி சொல்வேன்’

‘நான் ஒரு பெண்ணை அடைய வேண்டும். ஆனால் அது எப்படியென்று தான் தெரியவில்லை’ அம்மோன் கூறினான்.

‘இவ்வளவு தானா விஷயம். நீர் தான் இளவரசராயிற்றே. எந்தப் பெண் வேண்டுமோ அந்தப் பெண்ணை அறைக்கு அழையுங்கள். இதில் என்ன சிக்கல் ? இதற்கு ஏன் மனவருத்தம் ?’ நண்பன் கேட்டான்.

‘இல்லை… அந்தப் பெண்ணை நான் படுக்கைக்கு அழைக்க முடியாத நிலை’

‘புரியவில்லையே !!’

‘நான் விரும்புவது தாமாரை. அவள் எனக்குத் தங்கை முறை. ஆனால் அவளை அடையவில்லையெனில் நான் செத்து விடுவேன் போலிருக்கிறது’ அம்மோன் உண்மையைச் சொன்னான்.

‘ஓ… அதுதான் விஷயமா ?’ என்று இழுத்த யோனத்தாபு சிறிது நேரம் யோசித்தான்.
‘ம்ம்… நான் ஒரு வழி சொல்கிறேன். கேட்கிறீர்களா ?’

‘தாமாரை அடையவேண்டும். அதற்காக நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன். இதற்காக அவமானப் பட நேர்ந்தால் கூடக் கவலையில்லை’ அம்மோன் சொன்னான்.

‘அந்த அளவுக்கு நீங்கள் தாமார் மீது ஆசைப்படுகிறீர்களா ? சரி..ஒன்று செய்யுங்கள். நீங்கள் உடம்பு சரியில்லாதது போல நடியுங்கள். போர்வைக்குள் சுருண்டு படுத்துக் கொள்ளுங்கள். எப்படியும் உம்முடைய தந்தை உம்மைக் காண வருவார். அவரிடம், எனக்கு உடம்பு சரியில்லை, தாமாரை அனுப்பி கொஞ்சம் உணவு தயாரிக்கச் சொல்லுங்கள். தங்கை கையால் சாப்பிடவேண்டும் போல் இருக்கிறது என்று சொல்லுங்கள்’ நண்பன் திட்டம் தயாரித்துக் கொடுத்தான்.

அம்மோனுக்கும் அந்தத் திட்டம் பலிக்கும் போல தெரிந்தது. ஒத்துக் கொண்டார். திட்டமிட்டபடியே அவர் மிகவும் நோயுற்றவர் போல நடிக்க தாவீது அவரைக் காண வந்தார்.

‘மகனே… என்னவாயிற்று உனக்கு ? படுக்கையிலேயே கிடக்கிறாயே’ தாவீது கேட்டார்.

‘உடம்பு மிகவும் சோர்வாக இருக்கிறது. நீங்கள் பல வேலைகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள். பாசத்துக்குரிய யாராவது அருகில் இருக்க வேண்டும் போல இருக்கிறது. தாமாரை அனுப்புவீர்களா ? அவள் கையால் கொஞ்சம் சாப்பிடவேண்டும்’ அம்மோன் நடித்தான்.

தாவீதிற்கு அம்மானின் சூழ்ச்சி புரியவில்லை. ‘ தங்கையை அனுப்புவது தானே… இதோ இப்போதே அனுப்புகிறேன்’, என்று சொல்லி உடனே தாமாரை அழைத்து வரும்படி ஆளனுப்பினார்.

தாமார் அண்ணனைக் காண ஓடி வந்தாள்.

‘அண்ணா… என்னவாயிற்று. உங்கள் பாசம் என்னை நெகிழச் செய்கிறது. நான் இதோ இப்போதே உங்களுக்கு சூடான உணவு தயாரித்துத் தருகிறேன்… ‘ தாமார் பாசத்தால் நனைத்தாள். ஆனால் அம்மோனின் மனமோ மோகத்தில் மூழ்கிக் கிடந்தது.

தாமாரும், அம்மோனும் மட்டும் தனியறையில் இருந்தார்கள். தாமார் உணவு தயாரித்து வந்து அண்ணனின் அருகே அமர்ந்தாள். அம்மான் சட்டென தாமாரின் கையைப் பிடித்தான். அவனுடைய கையில் காமத்தின் சூடு தெரிந்தது.

தாமார் திடுக்கிட்டாள். ‘அண்……ணா…’ அவளுடைய குரல் பாதி வழியில் தடுக்கி விழுந்தது.

‘தாமார்.. கவலைப்படாதே. வா… என்னுடன் படு…என்னுடைய நோய்க்குக் காரணமே நீ தான். உன் நினைவில் தான் எனக்கு நோயே வந்தது. இப்போது அந்த நோய்க்கு மருந்தும் நீதான். வா..’ அம்மான் சொன்னான்.

தாமார் அதிர்ந்து போய் எழுந்தாள். ‘ இல்லை அண்ணா.. நீங்கள் என் சகோதரர். இதெல்லாம்… கூடவே கூடாது…’ தாமார் மறுத்தாள்.

அம்மான் விடவில்லை. ‘இல்லை நீ என் வேண்டுகோளை நிறைவேற்றியே ஆகவேண்டும்’ என்று கூறி அவளைப் பிடித்து இழுத்தான்.

‘அண்ணா… குறைந்தபட்சம் நீ நம்முடைய தந்தையிடம் பேசு. நானே உனக்கு மனைவியாகிறேன். இஸ்ரயேலரிடம் இந்த பழக்கம் இல்லையென்றாலும் கூட உன் நலனைக் கருதி தந்தை இதற்கு உடன்படக் கூடும். என்னை இப்போதைக்கு விட்டு விடு’ தாமார் எழுந்தாள்.

அம்மானுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. அவனுக்குள்ளிருந்த மிருகம் இப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காகத் தானே காத்திருந்தது. அடுத்த வினாடி வரை காத்திருக்கும் பொறுமை கூட அதனிடம் இருக்கவில்லை. அவன் அவளை பலாத்காரம் செய்து விட்டான்.

அதற்குப் பின்பு அம்மான் தாமாரை வெறுப்புடன் பார்த் தான். அவனுக்கு தாமாரின் மீதிருந்த காமம் சுத்தமாய் வடிந்து போயிருக்க மனம் வறண்டு போயிருந்தது.
‘இனிமேல் நீ வெளியே போய்விடு… இங்கே நிற்காதே’ என்றான்.

‘அம்மான்… நீ என்னுடன் உறவு கொண்டுவிட்டாய். இது வழக்கம் இல்லை என்றால் கூட என்னை மனைவியாக்கி விடு. கன்னித் தன்மை இழந்த என்னை வெளியே அனுப்பி விடாதே. இது என்னை பலாத்காரம் செய்ததை விடக் கொடுமையானது’ தாமார் கெஞ்சினாள்.

அம்மான் அவளைப் பார்க்கவே வெறுப்படைந்து அவளை விரட்டி விட்டான்.

தாமார் அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்று தான் அணிந்திருந்த அழகிய ஆடைகளைக் கிழித்துவிட்டு, தலையில் சாம்பல் தடவி துக்கம் அனுசரித்தாள். அப்போது அவளுடைய அண்ணன் அப்சலோம் வீட்டிற்கு வந்தான். தாமார் தலைவிரி கோலமாக அழுதுகொண்டிருப்பதைக் கண்ட அவனுடைய உயிர் துடித்தது.

‘தாமார்… என்னவாயிற்று உனக்கு ? எந்தப் பாவி உன்னை இந்த நிலமைக்கு ஆளாக்கினான். சொல்.. அவன் தலையைக் கொண்டு வருகிறேன்’ அப்சலோம் கோபத்தில் கேட்டான்.

‘அம்மான் தான் அவன்….’ தாமார் அழுதுகொண்டே சொன்னாள்.

அம்மான் என்னும் பெயரைக் கேட்டதும் அப்சலோம் இன்னும் அதிகமாக அதிர்ந்தான். ‘அவனா ? உன் சகோதரனா உன்னைக் கெடுத்தான்…. அவனைக் கொல்லாமல் விடமாட்டேன்… ‘ என்று புறப்பட்டான்.

நடந்தவற்றை அனைத்தையும் அறிந்த தாவீது மிகவும் கோபமடைந்தார். தன் மகனே தன் மகளை மானபங்கப் படுத்திவிட்டானே என வருந்தினார். ஆனாலும் அம்மோனை அவர் எதுவும் செய்யவில்லை.

அப்சலோம் அம்மோனைக் கொல்லத் தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தார்.

நாட்கள், வாரங்கள், மாதங்கள் என காலம் ஓடியது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ஏறக்குறைய எல்லோரும் இந்த சம்பவத்தை மறந்துவிட்ட ஒரு நாளில் அப்சலோம் தாவீதின் முன் சென்றான்.

‘தந்தையே… நான் ஒரு விருந்து ஏற்பாடு செய்துள்ளேன். நீங்களும் பணியாளர்களும் விருந்தில் கலந்து கொள்ளவேண்டும்’ அப்சலோம் அழைத்தான்.

‘அழைப்புக்கு நன்றி மகனே. ஆனாலும் நான் வந்தால் என்னோடு கூடவே படைவீரர்கள், பணியாளர்கள் எல்லோரும் வருவார்கள். உனக்கு வீண் சுமை..’ தாவீது மறுத்தார்.

‘சுமையெல்லாம் இல்லை தந்தையே… தந்தை மகனுக்குச் சுமையாக முடியுமா ? வாருங்கள்…’ அப்சலோம் கட்டாயப் படுத்தினார்.

‘இல்லை மகனே… வேண்டாம்… அது சரிப்பட்டு வராது’ தாவீது திட்டவட்டமாக மறுத்தார்.

‘அப்படியானால் அம்மோனையாவது அனுப்புங்கள்’ அப்சலோம் கேட்டான்

‘அம்மோனா ? அவன் எதற்கு ? வேண்டாம்… உனக்கும் அவனுக்கும் சரிவராது…’ தாவீது அதையும் மறுத்தார்.

‘என்ன சொல்கிறீர்கள் தந்தையே ? நீங்கள் பழசை இன்னும் மறக்கவில்லையா ? அதையெல்லாம் நான் என்றைக்கோ மறந்து விட்டேன். தாமர் எனக்கும், அம்மோனுக்கும் தங்கை தான். அதே போல அம்மோன் உங்கள் மகனல்லவா ? அவன் என் சகோதரனல்லவா ? சகோதரர்களுக்கு இடையே சண்டை வருமா என்ன ?’ அப்சலோம் நடித்தான்.

‘சரி.. அப்படியானால் அம்மோனை அழைத்துப் போ…’ தாவீது அனுமதியளித்தார்.

இந்த வாய்ப்புக்காகத் தானே அப்சலோம் காத்திருந்தான். அம்மோனைக் கட்டித் தழுவி, அவனை விருந்துக்கு அழைத்துச் சென்றான்.

அங்கே தாமாரும், அப்சலோமும் அவனுக்கு ஏராளமான இனிப்புகளும், மதுவகைகளும் வழங்கினர்.
அம்மோன் உற்சாகமாய்க் குடித்தான். குடித்துக் குடித்து போதையில் சரிந்தான்.

அந்த நேரத்துக்காகக் காத்திருந்த அப்சலோம், இரண்டு ஆண்டுகளாக தீர்க்கப்படாமலிருந்த கணக்கை அன்று தீர்த்துக் கொண்டான்.
அன்றே போதையில் மிதந்த அம்மோனை அப்சலோம் கொன்றான்.

அதுவரைக்கும் அப்சலோமின் கண்களில் அணையாமல் எரிந்து கொண்டிருந்த கோபத்தின் தீ அப்போது தான் அணைந்தது.
தகாத உறவுக்கு ஆசைப்பட்ட அம்மோன், துடி துடித்து இறந்தான்.

கி.மு – விவிலியக் கதைகள் நூலில் இருந்து

சிறுகதை : அம்மாவைப் பாக்கணும்

 ( உண்மைக் கதை, அல்லது உண்மைக்கு மிக அருகிலான கதை )

thinnai

“லேய்… ஒன் அம்மா சாவக் கெடக்குதுலே.. என்னதான் இருந்தாலும் பெற்றவ இல்லியா ? ஒரு வாட்டி வந்து பாக்கப்படாதா ? ” தங்கசுவாமி மாமாவின் குரலில் கவலை இருந்தது. எதுவுமே பேசாமல் போனை வைத்தான் வசந்தன்

பொதுவாகவே மாமாவின் பேச்சை அடுத்த வினாடியே மறந்து விட்டு வேலையைப் பாக்கப் போய்விடுவான். ஆனால் இன்று ஏனோ மனசு ரொம்பவே வலித்தது. ஊருக்கும் தனக்கும் உள்ள ஒரே உறவு தங்கசுவாமி மாமாவின் அவ்வப்போதைய அழைப்பு தான். சில வினாடிகள் நலம் விசாரித்தல், விஷயம் பகிர்தல் அதைத் தாண்டி அந்தப் பேச்சில் எதுவுமே இருக்காது. எப்போதும் வெகு சகஜமாய் இருக்கும் வசந்தனால் இன்றைக்கு அப்படி இருக்க முடியவில்லை. ஏதோ ஒன்று மனசில் பாரமாய் வந்து சம்மணம் போட்டு அமர்ந்து விட்டது. அம்மா சாகக் கிடக்குது – எனும் வார்த்தையாய் இருக்கலாம். 

ஏறக்குறைய பத்து வருஷம். அம்மாவிடம் சண்டை போட்டுக்கொண்டு இந்த ஊருக்கு வந்தபின் தொடர்பே இல்லாமல் போய்விட்டது. ஊருடனான தொடர்பை விட ஆழமாய் அம்மாவுடனான தொப்புள் கொடி உறவே வலுவிழந்து போய்விட்டது. எப்போதாச்சும் மனசுக்குள் எழுகின்ற அம்மா ஆசையையும் மனைவி உடைத்துப் போடுவாள். அம்மாவைப் பார்த்துக் கொள்ள ஊரில் தம்பி உண்டு. சொத்து என்று பெருசாக ஒன்றும் இல்லை. சேத்த சொத்து என் பிள்ளைங்க தான் என்று அம்மா அடிக்கடி சொல்லும். 

ஒரு சண்டை. அந்தச் சண்டையிலிருந்து வசந்தன் வெளியே வரவேயில்லை. “நாடுகளுக்கெடையில நடக்கிற சண்டையே நாலு வாரத்துல தீருது, பேசி சமாதானமாயிடறாங்க. உனக்கென்னடே… விட்டுத் தொலைக்கலாமில்லையா ?” இப்படியெல்லாம் அவ்வப்போது சொல்லும் ஒரே நபரும் தங்கசுவாமி மாமா தான். 

“சார் எங்க போணும் ?” பஸ்ஸின் ஓர சீட்டில் அமர்ந்து நினைவுகளைக் கொறித்துக் கொண்டிருந்தவனை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது கண்டெக்டரின் குரல். 

தொடுவெட்டிக்கு ஒண்ணு குடுங்க…. ஆங்… போய் சேர எத்தற மணி ஆவும் ? 

இப்போ மணி பத்தாவப் போவுது, காலைல ஒரு ஒம்பதரை பத்துக்குள்ள போவும். 

ஓ.. பத்து மணி ஆவுமோ ? 

ஆவும். டிரைவரு இழுத்து பிடிச்சாருன்னா ஒரு ஒம்பது மணிக்கு போலாம். மழ வேற வருதில்லையா…. கரக்டா ஒண்ணும் சொல்ல முடியாது. 

பேசிக்கொண்டே கண்டக்டர் கிழித்துக் கொடுத்த டிக்கெட்டை பாக்கெட்டில் பத்திரப் படுத்திக் கொண்டு மீண்டும் கண்மூடினான் வசந்தன்.

“மக்களே மழையில நனையாதே ஜலதோசம் பிடிக்கும்”

அம்மாவின் குரல். எந்த அம்மாவின் குரல் தான் குழந்தைகளின் குதூகல மழைக் குளியலை அனுமதித்திருக்கிறது ?. வசந்தனின் அம்மா ஞானம்மாவுக்கும் மழைக் கவலை ரொம்ப உண்டு. பிள்ளைகள் கண்டு கொள்வார்களா என்ன ? பட்டன் பிய்ந்து போன காக்கி டவுசரை ஒரு கையில் பிடித்துக் கொண்டு வசந்தன் ஓடினான். வீட்டின் கூரையில் வழிந்து கொண்டிருந்த தண்ணீருக்கு இடையே ஒரு மழை தின்னும் குருவி போல பறந்து திரிந்தான். மழை ஓயும் வரை அம்மாவின் குரல் ஓயவில்லை. வசந்தனும் ஓடி ஓயவில்லை. 

அன்றைய இரவில் வசந்தனுக்கு ஏறக்குறைய ஜுரம் வந்து விட்டது. குளிரில் விறைத்து விரல் நுனிகளிலெல்லாம் உலகப் படம் போல சுருக்கங்கள். 

வெள்ளியாவளை வைத்தியரிடம் வாங்கிய பொடி அம்மாவிடம் எப்பவும் இருக்கும். கரண்டியில் கொஞ்சம் பொடி போட்டு, அடுப்பில் காட்டி சூடாக்கினாள். அதை உள்ளங்கையில் கொட்டி, வசந்தனின் உச்சந்தலையில் இளம் சூட்டுடன் வைத்துத் தேய்த்தாள். வசந்தன் மண் அடுப்பின் பக்கவாட்டில் கைகளை வைத்து சூடு பிடித்துக் கொண்டிருந்தான். ‘சொன்னா கேக்க மாட்டினும், பொறவு இருமலும், தும்மலும் எல்லா எழவும் வரும்’. அம்மாவின் வாய் ஓயாது. கை வைத்தியம் பார்ப்பதை நிறுத்தவும் செய்யாது. பாத்திரத்தை எடுத்து சுக்கு காப்பி போட தயாரானாள். சுக்கு காப்பியும், சுடு கஞ்சியும் எல்லா நோயை விரட்டி விடும் என்பது அம்மாவின் நம்பிக்கை. அம்மாவின் நம்பிக்கை பொய்த்துப் போனதில்லை, பெரும்பாலும் ஊசி போடாமலேயே எல்லா நோயும் தீர்ந்து விடும். அப்படியும் மறு நாள் உடம்பு கொதித்தால் கம்பவுண்டரின் வீட்டுக்குப் போய் ஊசி போடுவது தான் ஒரே வழி.

சர்ப்பக் குளத்தில் குதித்து நீச்சலடிக்கும் போதும் இதே பல்லவி தான். சகதியில் புதையுண்டு கிடக்கும் சிப்பிப் புதையலை அள்ளி அள்ளி நேரம் போவதே தெரியாது. வசந்தனுக்கு ஒரு தம்பி உண்டு, செல்வன். இருவருமாக குளத்தில் குதித்தால் சிப்பி பொறுக்கியோ, டவலை முறுக்கிப் பிடித்து கயிலி மீன் பிடித்தோ மணிக்கணக்காய் தண்ணீர் பறவையாய் மூழ்கிக் கிடப்பார்கள். அப்போதும் அம்மாவின் வைத்தியம் தான் கை கொடுக்கும் “எப்பளும் வெள்ளத்தில தானே கெடக்குதிய.. நீங்க கெண்ட மீனா பொறக்க வேண்டியவங்கடே” என்று சிரித்துக் கொண்டே திட்டுவாள்.
ஒரே ஒரு அக்கா வாசந்தி. கிராமத்து நிறம். அப்படியே கிராமத்தின் அக்மார்க் நடை உடை பாவனைகள். ரொம்ப அமைதியானவள். ஊரில் அவளுக்கு பொய்ங்கி என்றொரு பட்டப் பெயரும் உண்டு. எந்த விஷயத்திலும் முன்னால் நிக்காமல் பின்னால் போய் நிற்பவர்களுக்கு வழங்கப்படும் கிராமத்துப் பட்டப் பெயர் அது.

பகல் முழுக்க குளத்தில் குதித்தும், மரத்தில் தொங்கியும் விளையாடினாலும் ராத்திரி அம்மாவின் அரவணைப்பு வேண்டும். அம்மாவின் இரண்டு பக்கங்களிலும் படுப்பது யார் என்று மூன்று பேருக்கும் நடக்கும் சண்டை தினசரி வழக்கு. கடைசியில் பொய்ங்கி அக்கா தான் விட்டுக் கொடுப்பாள். வசந்தனும், செல்வனும் ஆளுக்கொரு பக்கம் படுத்துக் கொண்டு அம்மாவின் சேலை முனையைப் பிடித்துக் கொண்டே தூங்கிப் போவார்கள். அம்மா அவர்களுடைய உச்சி மோந்து முத்தம் கொடுத்துக் கொண்டே இருப்பாள். பிறகு எப்போ தூங்குவாள் என்று தெரியாது, காலையில் தேயிலை வெள்ளம் போட்டு தான் பிள்ளைகளை எழுப்புவாள்.

மூணாவது பையன் பொறந்ததும் கண்ணை மூடின புருஷன் அடிக்கடி கண்களில் ஈரமாய் வழிவான். அதையெல்லாம் பிள்ளைகளிடம் அவள் காட்டியதில்லை. பனை ஓலையைக் கீறிப் பரம்பு செய்வதோ, கடவம் செய்வதோ, மொறம் செய்வதோ என அவளுடைய பொழுது கழியும். அதில் கிடைக்கின்ற சொற்ப வருமானம் தான் வறுமையை விரட்டும். முழுசா விரட்ட முடிந்ததில்லை. ஒரு ரெண்டு பர்லாங் தள்ளி எப்பவும் வறுமை இவர்களையே முறைச்சுப் பாத்துக் கொண்டு நிற்கும். நாலு நாள் ஞானம்மாள் காய்ச்சலில் படுத்தால் போதும், மறுபடியும் அது ஓடி வந்து திண்ணையில் வந்து குந்திக் கொள்ளும்.

“வண்டி பத்து நிமிஷம் நிக்கும், டீ..காபி சாப்டறவங்க சாப்டுங்க, டின்னர் சாப்டறவங்க சாப்டலாம்… இனிமே வண்டி வழியில நிக்காது” பஸ்ஸின் பக்கவாட்டில் அடித்துக் கொண்டே கிளீனர் பையன் போட்ட கத்தல் வசந்தனை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது. 

எந்த இடம் என்று தெரியவில்லை. ஒரே இருட்டு. டியூப் லைட் வெளிச்சத்தில் ஏதோ ஒரு பைபாஸ் ஹோட்டல். பசிக்கவில்லை. இறங்கினான். டீ கடையில் டி.எம்.எஸ் ஏதோ ஒரு பாட்டை உச்சஸ்தாயியில் பாடிக்கொண்டிருந்தார். அவர் மறைந்த பிறகு அந்தக் குரல் இன்னும் அதிகமாய் மனதைப் பிசைந்தது. பொட்டிக் கடையில் ஒரு கிங்க்ஸ் வாங்கி பற்ற வைத்தான். விரல்களிடையே புகை வழிய, இதயம் எரிந்து கொண்டிருந்தது. கண்ணில் கனல் இருந்தது.

“உனக்க பெண்டாட்டி சொன்னது சரியில்லடே” அம்மாவின் குற்றச்சாட்டு வசந்தனுக்கு எரிச்சல் மூட்டியது. கல்யாணம் ஆன நாளில் இருந்தே இந்த புராணம் தான். அடிக்கடி இப்படி ஏதாவது குற்றச்சாட்டை இருவரும் மாறி மாறி வைப்பது மனசுக்குள் இருந்த நிம்மதியை எல்லாம் குழி தோண்டிப் புதைப்பதாய் தோன்றியது அவனுக்கு. 

“அம்மா.. உங்க சண்டைல என்ன இழுக்காதீங்கம்மா” 

“ஏதோ கைவெஷம் குடுத்து பயல மயக்கிட்டா… இல்லங்கி அம்மன்னா அவனுக்கு உசுரு” அம்மா வருவோர் போவோரிடமெல்லாம் அம்மா இப்படிப் பேசுவது சர்வ சாதாரணம். உண்மையிலேயே அம்மாவுக்கு வசந்தன் என்றால் உயிர் தான். முதலில் ஒரு பெண்ணைப் பெற்றபின் அடுத்தது பையனா பொறக்கணுமே என தவம் கிடந்து பெற்ற பையன் இவன். நாலு பெண்ணு பொறந்தா நடைகல்லைப் பெயர்க்கும் என்று ஊரில் சொல்வார்கள். இவர்கள் இருக்கும் நிலமைக்கு நாலு தேவையில்லை, இரண்டு பெண் பொறந்தாலே அந்த நிலமை தான். 

ஆனால் கடவுள் கண் திறந்தார். பையனா பொறந்திருக்கான், இனிமே நமக்கு வசந்தம் தான் என்று தான் வசந்தன் என்று பெயரையும் வைத்தார்கள். சாப்பாட்டில் அவனுக்கு கொஞ்சம் ஸ்பெஷல் இருக்கும். எல்லாருக்கும் ஒரு துண்டு பொரிச்ச மீன் என்றால் இவனுக்கு ரெண்டு கிடைக்கும். சோற்றுக்குள் அப்பப்போ அவிச்ச முட்டை ஒளிச்சிருக்கும். அப்படி ஒரு தனி கவனம் அம்மாக்கு வசந்தன் மேலே. 

அதனால் தான் சண்டையில் வசந்தன் தன் பக்கம் நின்று பேசவேன்டும் என அம்மாக்கு உள்ளூர ஆசை. அம்மா பக்கம் நின்றால் பொண்டாட்டியின் ஓயாத நச்சரிப்பில் நிம்மதியே போய்விடும் எனும் பயம் வசந்தனுக்கு. 

அதனாலேயே அவன் அமைதி காத்தான். அந்த நாள் வரை. அந்த நாளில் எல்லாம் கைமீறிப் போய்விட்டது.

அந்த நாள் வராமலேயே போயிருக்கலாம். அந்த ஒரு சண்டை நிகழாமலேயே போயிருக்கலாம். அந்த ஒரு வார்த்தையை வசந்தன் சொல்லாமலேயே போயிருக்கலாம். வாழ்க்கை வேறு விதமாய் அமைந்திருக்கும். அந்த சண்டையின் முதல் பொறி என்ன என்பது இன்று வரை அவனுக்குத் தெரியவில்லை. 

“கொம்பியே… பயலை மயக்கி என்னை கொல்லுலாண்ணா பாக்குதே” அம்மாவின் குரல் எகிறியது.

“நான் எதுக்கு உன்னை கொல்லுதேன். நீ காட்டுத வேலைக்கு கடவுளு உன்னை எடுத்தோண்டு போவாரு” வசந்தனின் மனைவி அதை விட எகிறினாள்.

“நான் என்ன காட்டினேன் ? எனக்க பிள்ளைக்கோட பேசவும் விட மாட்டேங்குதே, அவன் ஏதெங்கிலும் வாங்கி தாறதும் உனக்கு பொறுக்க மாட்டேங்குது. அவன நானாக்கும் பெற்றது. நீயில்லா”

“கல்யாணம் வர பாத்தா மதி. எப்பளும் பிள்ள பிள்ள, பிள்ளைக்க பைசான்னு இருக்காதே கெழவி”

“பெண்ணே கெளவின்னா விளிச்சுதே”

“பின்ன நீ குமரியா ? சாவப் போற கெளவி”

சண்டையின் உச்சஸ்தாயியில் வசந்தன் பொறுமை இழந்தான். தாயை நோக்கி விரல் சூண்டினான்.

“கள்ளி.. மிண்டாத கெடப்பியா. உன்னால எனக்க நிம்மதியெல்லாம் போச்சு. வயசானா போய்த் தொலைய வேண்டியது தானே. மனுஷனுக்கு உயிர வாங்கிட்டு ” ஆவேசத்தில் அவனுடைய வாயிலிருந்து வார்த்தைகள் குதித்தன. 

அம்மா அதிர்ச்சியானாள். அவளுடைய இமைகள் மூடவில்லை. கண்ணில் கண்ணீர் வழிந்தது. அதன் பின் அம்மா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மனைவி ஏதேதோ கத்திக் கொண்டிருந்தாள். ஆனால் அம்மா பேசவேயில்லை. அமைதியாய் உள்ளே போனாள். 

தகப்பன் போனபிறகு ஒரு வினாடி கூட பிள்ளைகளைப் பிரிந்து அவள் இருந்ததில்லை. அந்த வீடு, அந்த ஊர், அந்த எல்லை என்பது மட்டுமே அவளுக்குப் பிடித்திருந்தது. எப்போதும் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் கையால் ஏதேனும் வாங்கி சாப்பிடவேண்டும். அவர்களுடன் பேசிச் சிரிக்க வேண்டும். எப்போதும் அவர்கள் பக்கத்தில் இருக்க வேண்டும். பிள்ளைகள் மட்டுமே அவளுடைய உலகமாகிப் போயிருந்தது. 

அந்த நாளுக்குப் பிறகு அம்மா எதுவும் பேசுவதில்லை. வசந்தனின் மனைவி பிடிவாதமாக எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டு ஊரை விட்டு வெளியேறினாள். அப்போதும் அம்மா எதுவும் பேசவில்லை. வசந்தனும் ஏதும் பேசவில்லை. பிரச்சினை இல்லாமல் போனால் போதும் என்றாகிவிட்டது அவனுக்கு. ‘இனி அந்த கெளவி கிட்டே ஒரு வாக்கு பேசினா நான் அறுத்துட்டு போயிடுவேன்’ என்பது மனைவியின் மிரட்டலாய் இருந்தது.

அதற்குப் பிறகு தம்பியின் கல்யாணத்துக்கு ஒரு முறை சம்பிரதாயமாய் வந்ததுடன் சரி. அப்போதும் அம்மாவிடம் சரியாகப் பேசவில்லை. அம்மா வழக்கத்தை விட இன்னும் அதிகமான மௌனத்துக்குள்ளாகவே போய்விட்டாள். 

பஸ் இரவைக் கிழித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. சாலைக் கோடுகளெல்லாம் பஸ் சக்கரத்தில் அடிபட்டு அலறி பின்னால் ஓடிக் கொண்டிருந்தன. சின்ன வயதில் அம்மாவோடு விளையாடிய, பேசிய, களித்த நிமிடங்களெல்லாம் அந்த இரவில் ஓடும் மின்மினிகளாய் வசந்தனின் மனசுக்குள் பறந்து திரிந்தன. தப்பு பண்ணிட்டோம் எனும் உணர்வு முதன் முதலாய் அவனுக்கு வந்தது. 
அம்மாவைப் போய்ப் பார்க்கவேண்டும். பேசணும். நிறைய பேசணும். மன்னிப்பு கேக்கணும். அம்மாவோட காலடியில கொஞ்ச நேரம் இருக்கணும். கால் நோவுதாம்மா ன்னு கேட்டு கொஞ்சம் தைலம் தேச்சு விடணும். கட்டிப் புடிச்சு கொஞ்ச நேரம் அழணும். அம்மா பேசுவாங்களா, ‘சாரமில்லே மோனே.. நீ நல்லா இருக்கியா’ என்று கையைப் பிடிச்சு முத்தம் தருவாளா ? மனசில் கேள்விகளோடு கண்ணை மூடினான் வசந்தன். எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை. 

ரெண்டு சொட்டு மழைத்தண்ணி முகத்தில் விழுந்தபோது தான் விழித்தான். 

வெளியே விடிந்திருந்தது. மெல்லிய சாரல் மழை. பஸ் கண்ணாடியை இழுத்துச் சாத்தினான். அது முழுமையாய் மூடாமல் முரண்டு பிடித்தது. சாரல் துளிகள் முகத்தில் தெறித்துக் கொண்டிருந்தன. 
“மக்களே… நனையாதே ஜலதோஷம் பிடிக்கும்” அம்மா சொல்வது போல ஒரு பிரமை.

திடீரென செல்போன் ஒலித்தது.

தங்கஸ்வாமி மாமா தான் பேசினார்.

டேய்… தூக்கமா ?

இல்ல மாமா… அம்மாவைப் பாக்கலாம்ன்னு ஊருக்கு வந்திட்டிருக்கேன். நேற்று சொன்னீங்கல்லா.. அதுக்கப்புறம் வீட்ல இருக்க முடியல. அதான் சொல்லாம கொள்ளாம கெளம்பிட்டேன்.

ஓ.. வீட்டுக்கு வந்திட்டிருக்கியா…. ஒரு வாக்கு சொல்லியிருக்கலாமில்லியாடே… ம்ம்…. செரி… நீ… நீ இப்பம் எவ்வளவு தூரம் வந்திருக்கே ? 

நான் தொடுவெட்டி வந்தேன் மாமா. ஒரு அர மணிக்கூர்ல வீட்ல இருப்பேன்.

செரி.. பஸ் ஒந்நும் பிடிக்க நிக்காதே. ஒரு ஆட்டோ பிடிச்சோண்டு சீக்கிரம் வா.

ம்…மாமா…. என்ன சொல்லுதீய ? வசந்தனின் குரல் நடுங்கியது.

ஆமாடே…. போச்சு… ஒரு ரெண்டு மணிநேரம் ஆச்சு. நீ வா.

வசந்தனின் தொண்டையில் சட்டென துக்கம் வந்து அடைத்தது. கண்ணீர் குபுக் என வழிந்தது. வாயைப் பொத்திக் கொண்டு, தலையைக் கவிழ்த்தான். பிடிவாதமில்லாமல் விமானத்திலிருந்து நழுவி விழுவது போல தோன்றியது.

வீடு துக்கத்தில் கிடந்தது. 

சொந்த வீட்டை மரணம் சந்திக்கும்போது வரும் துயரம் சொல்ல முடியாதது. ஆட்கள் வந்தும், போயும், விசாரித்தும்… முற்றம் அமைதியான பாதச் சுவடுகளால் நிரம்பியது. முற்றத்தின் நடுவில் புதிய ஆடையில் அம்மா. அந்த முகத்தில் என்ன உணர்வு இருந்தது என்பதை வசந்தனால் கண்டு பிடிக்க முடியவில்லை. அம்மாவின் கால்களைத் தொட்டபோது விரல் நடுங்கியது.

மாலையில் எடுத்தாகிவிட்டது. சுடுகாட்டுப் பயணத்தோடு எல்லாம் முடிந்து விட்டது. 

வசந்தனின் மனதில் இயலாமையும் ஒன்றும் செய்ய முடியாத குற்ற உணர்ச்சியும், அழுகையும் ஓயாமல் அடித்துக் கொண்டே இருந்தது. இந்தத் தவறை எப்படித் திருத்துவது. வழியே இல்லை. வாய்ப்புகள் இருந்தபோது மனம் இறங்கி வரவில்லை. மனம் கசிந்தபோது வாய்ப்பு இல்லை. அன்பையும் மன்னிப்பையும் தள்ளிப் போடக் கூடாது. அடுத்த வினாடில என்ன நடக்கும்ன்னு கடவுளுக்கு மட்டும் தான் தெரியும். வசந்தன் கலங்கினான். மரண வீட்டின் ஓலத்தையும் ஒப்பாரியையும் விடக் கனமானது அந்த இரவு நேர மவுனம் என்பது வசந்தனுக்கு உறைத்தது.

தூறல் இன்னும் முழுமையாய் விடவில்லை. வானம் விட்டு விட்டு அழுது கொண்டிருந்தது. 

“அப்பப்போ வந்து பாத்திருக்கலாம் இல்லியாடே. அம்மா ஒரு வாரமா இழுத்துட்டு கெடக்குது. உன் பேரை சொல்லிட்டு மேல பாத்துச்சு, அப்போ கண்ணீரு பொல பொலன்னு வந்துது. அதான் மனசு பொறுக்காம உனக்கு போன் பண்ணினேன்.” 

தங்கசுவாமி மாமா திண்ணையில் அமர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய வார்த்தைகள் மனசை இன்னும் கனமாக்கிக் கொண்டிருந்தன. செல்வன் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான். தலையைக் கவிழ்ந்திருந்தான்.

நீ வருவேன்னு எனக்குத் தெரியாதுடே… ஒரு போன் அடிச்சு சொல்லியிருக்கலாம் இல்லியா ? – செல்வன் தான் கேட்டான்.

ஒண்ணும் தோணலடே, தங்கசுவாமி மாமா சொன்னதும் நான் கெளம்பி வந்துட்டேன். மாமா கிட்டே வருவேன்னும் சொல்லல. அம்மா சாவக் கிடக்குதுன்னு சொன்னதுக்கு அப்புறம் இருப்பு கொள்ளல. நான் குடுத்து வெச்சது அத்தற தான். ஒரிக்கலாச்சும் அம்மாவை வந்து பாத்திருக்கணும். செய்யாம போயிட்டேன்டே. வசந்தனின் குரல் இடறியது.

உன்ன பாக்கணும்ன்னு அம்மா சொல்லிச்சு. நீ வரும்ன்னு தெரிஞ்சிருந்தா கொஞ்சம் வெயிட் பண்ணியிருப்பேன்.

வெயிட் பண்னியிருப்பியா ? என்னடே சொல்லுதே.

ஆமாண்ணா.. நேற்று நைட்டு தான் அம்மாக்கு தலைக்கு தண்ணி ஊத்தினோம்.

வசந்தனை சட்டென அதிர்ச்சி அடித்தது. திடுக்கிட்டுத் தலையை நிமிர்த்தான். சாகாமல் இழுத்துக் கொண்டிருக்கும் வயதானவர்களை நள்ளிரவில் உட்கார வைத்து தலையில் குளிர்ந்த தண்ணீரை ஊற்றி விடுவதுண்டு. அப்போது அந்தக் குளிரிலேயே இரவில் உயிர் பிரிந்து விடும். ஒருவகைக் கருணைக் கொலை ! 

அம்மக்கி தண்ணி ஊத்தினியா ? என்னடே சொல்லுதே… வசந்தனின் கண்களில் திட்டுத் திட்டாய் அதிர்ச்சி தெரிந்தது. 

ஆமாண்ணா… நீ மாமாட்டயும் வருவேன்னு சொல்லல. மாமா நிறைய தடவை உனக்கு இதுக்கு மின்னேயும் போன் செஞ்சிருக்காரு. நீ வரல. அது போல நீ இப்பவும் வரமாட்டேன்னு நெனச்சேன்டே. அம்மா படுத கஷ்டத்த என்னால பாத்து சகிக்க முடியல. எழும்பவும் முடியாம, பேசவும் முடியாம இழுத்தோண்டு கெடந்துது. எப்படியெல்லாம் நம்மள பாத்த அம்மா. இப்படி கஷ்டப்படறதைப் பாக்க முடியலே. நீ வருவேன்னு தெரியாதுன்னே.. நீ வருவேன்னு தெரியாது…. ஒரு வாக்கு சொல்லியிருக்கலாமில்லியா…. செல்வன் கண்கள் கலங்கின.

வசந்தன் நிலைகுலைந்து போயிருந்தான். அவனுடைய பார்வை உறைந்து போயிருந்தது. கால்கள் நடுங்கின.

இன்னும் நிற்காத குளிர் சாரல் அவ்வப்போது தெறித்துக் கொண்டிருந்தது. 

“மக்களே மழையில நனையாதே.. குளிர் பிடிச்சுரும்” அம்மாவின் குரல் மீண்டும் ஒலித்தது. மனசுக்குள்ளிருந்து. 

சேவியர்

கல்கி : பழைய காதலி

thinking
பழைய காதலி !
——————–

போச்சுடா… நேத்தும் நைட் ஃபுல்லா சுடர் கூட கடலை போட்டியா ? சிவந்து போய் வீங்கியிருந்த சாகரின் கண்களைப் பார்த்துக் கேட்டான் வாசன். அந்த ஐடி அலுவலகத்தில் சாகரும் வாசனும் பக்கத்து பக்கத்து இருக்கைக் காரர்கள். இங்கே மட்டுமல்ல, காலேஜ் காலத்திலிருந்தே அப்படித் தான். பத்து வருஷ நட்பு. மாற்றான் படம் வந்ததுக்கு அப்புறம் இவங்களுக்கு நண்பர்கள் வெச்சிருக்கும் செல்லப் பெயரே அமலன் விமலன் தான்.

வாசனின் கேள்விக்கு வெட்கம் கலந்த சிரிப்புடன் சாகர் பேசினான். ‘ஆமா மச்சி… அவள மறக்க முடியல. அவளும் என்னை மறக்க முடியாம ரொம்ப கஷ்டப் படறா. முதல் காதலை மறக்கிறது ஈசி கிடையாதுடா’

டேய்… அதுக்கு சுடர் உன்னோட முதல் காதலி இல்லையே…

யா… பட்… இருந்தாலும் இரண்டாவது காதலையும் மறக்க முடியாதுடா மச்சி.

எலேய்.. அவ உனக்கு இரண்டாவது காதலியும் கிடையாதுடா !

ஓகே..ஓகே… அதென்னவோ தெரியல மச்சி, சுடரை மட்டும் என்னால மறக்கவே முடியல.

டெய்லி நைட் தூங்காம ஃபேஸ்புக்கை சுரண்டிட்டே இருந்தா எப்படிடா மறக்க முடியும் வெண்ணை ! அவளைத் தூக்கிப் போட்டுட்டு மத்த விஷயங்களைப் பாக்க வேண்டியது தானே ! அவ என்ன உன்னை நினைச்சுட்டா இருக்கா ? கனடால போய் செட்டில் ஆகல ?

டேய் அவ கனடால இருந்தாலும், கர்நாடகால இருந்தாலும் என் மனசுல எப்பவுமே இருப்பாடா…

ஐயோ.. லவ் பண்ணும்போ தான் டயலாக் டயலாக்கா அவுத்து உட்டு சாகடிச்சே. இப்போ பிரிஞ்சப்புறமுமாடா ?

நாங்க பிரியவே இல்லையேடா ?

அது உன் பொண்டாட்டிக்குத் தெரியுமா ?

ஹி..ஹி… தெரிஞ்சா நாங்க பிரிஞ்சுடுவோம்.. ஐ மீன் என் பொண்டாட்டி மாலதியைச் சொன்னேன்.

வாசன் சிரித்தான். போதும்டா.. அவ மகேஷ்வரனைக் கல்யாணம் பண்ணி கனடால செட்டில் ஆகி ஆறு வருஷம் ஆச்சு. அவளோட பொண்ணுக்கும் இப்போ அஞ்சு வயசாச்சு.

பட்.. அவளோட குழந்தை பேரு தெரியும்ல ? சாரினி. என் பேரோட முதல் எழுத்துடா மச்சி. சாகர்.. சாரினி ! ஸீ.. தட்ஸ் லவ்.

மண்ணாங்கட்டி. அவ பாட்டி பேரு சாரினீஷ்வரி. அந்த பேரைத் தான் வைக்கணும்ன்னு சுடரோட அம்மா ஒத்தக் காலில நின்னாங்க. அதேதோ லேடி ரஜ்னீஷ் பேரு மாதிரி இருக்குன்னு மகேஷ் சண்டை போட்டு கடைசில வாலைக் கட் பண்ணி சாரினி ன்னு வெச்சாங்க. அதெல்லாம் தெரியாதது மாதிரி நடிக்காதே..குடுத்த காசுக்கு மட்டும் நடி.

சரி… அப்படியே இருந்தா கூட அது ஒரு தெய்வ சித்தம் மாதிரி அமஞ்சு போச்சு பாத்தியா ?

டேய்.. தெய்வ சித்தம் இல்லடா.. தெய்வக் குத்தம்… கல்யாணத்துக்கு அப்புறம் பழைய காதலி கூட கொஞ்சிக் குலவறது குத்தம்டா… இதெல்லாம் மாலதிக்கு தெரிஞ்சா என்ன ஆகும் !

டேய்.. அதெல்லாம் தெரியாதுடா. இதுல என்ன தப்பிருக்கு. அவ கனடால இருக்கா, நான் இங்கே இருக்கேன். சும்மா பேச்சு தானே !

பேச்சு இல்ல மச்சி. மனசு. மனசுல என்ன இருக்கோ அது தான் செயல்ல வரும். மனசுல சுடரை நீ வெச்சிருந்தா மாலதியோட வாழற வாழ்க்கை நல்லா இருக்காது. நீ கவனிக்க வேண்டியது உன் மனைவியை.

போதுண்டா உன் அட்வைஸுக்கு. நீயும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டவன் தானே. ஏதோ லவ்வே பண்ணாத மாதிரி பேசறே. குடும்பத்தையெல்லாம் நான் நல்லாதாண்டா பாத்துக்கறேன் என்ன குறைவெச்சிருக்கேன்.

என்ன ம்ம்… வாயில நல்லா வருது. உன் பொண்ணோட ஸ்கூல் புராஜக்டை பண்றதுக்கு நேரமில்லை, புண்ணாக்கு இல்லைன்னு புலம்பினே. சுடர் கூட கடலை போட டைம் இருக்கோ ?

சரி.. அந்த பேச்சை விடு.. இப்போ என்ன விஷயம் சொல்லு…

ஒண்ணும் இல்லை சும்மா தான் வந்தேன். பேசிக்கொண்டிருக்கும் போது சாகரின் மானிட்டரில் சேம்டைம் சேட் வின்டோ டொங் என்று திறந்தது.

‘சாகர் ஒரு நிமிஷம் இங்கே வரமுடியுமா பிளீஸ் ‘ மானேஜர் தான் கூப்பிட்டார்.

‘கண்டிப்பா’ என்று பதில் தட்டிவிட்டு சாகர் எழுந்தான்.

வாசன் சாகரின் கம்ப்யூட்டர் வின்டோவைப் பார்த்தான். டாஸ்க் பாரில் ஃபேஸ் புக் திறந்திருந்தது. கிளிக்கினான். அப்படி என்ன தான் சுடர் கூட பேசறான்னு பாப்போமே என்று நுழைந்தான். சுடரோடு சாகர் பேசிய சேட் ஹிஸ்டரி அனுமர் வால் போல நீண்டு கிடந்தது.

ஹாய் சுடர்.. எப்படியிருக்கே.

ம்ம்.. இருக்கேன் நீங்க ?

ஏதோ இருக்கேன்.. நினைவுகள் வாழவைக்குது.

ம்ம்ம்…

வீட்ல எல்லாரும் நலமா ?

யா… இருக்காங்க.. உங்க வீட்ல..

ம்ம்… இருக்காங்க…

நைட் தூங்காம சேட் பண்றீங்க ?

உன்னை மறக்க முடியுமா ? உலகத்துல எல்லாத்தையும் விட முக்கியமானது உன்கூட பேசறது தான் சுடர். அது தான் உலகத்துல என்னை வாழ வைக்குது.

ம்ம்ம்… ஐ யாம் மிஸ்ஸிங் தோஸ் டேஸ்

ம்ம்ம்… அந்த அருகாமை, அந்த நாட்கள் எல்லாம் சொர்க்கம்.

ம்ம்…. ஆமா…

ஞாபகம் இருக்கா.. அந்த வேலன்டைன்ஸ் டேக்கு.. முதல் முதலா….

வாசன் கடகடவென வாசித்தான். சேட் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக காதல், கவர்ச்சி, ஆபாசம் என தாவ வின்டோவை மூடினான். டெஸ்க் டாப்பில் ஒரு நோட் பேட் தென்பட்டது. பாஸ்வேர்ட்.டெக்ஸ்ட்

திறந்தான். சாகரின் மின்னஞ்சல்கள், ஃபேஸ்புக் எல்லாவற்றுக்குமான ஐடி மற்றும் பாஸ்வேர்ட். மடப்பயல் என்று நினைத்து கொண்டிருந்தவனின் மனதில் சட்டென ஒரு பொறி. ஃபேஸ்புக் ஐடி, பாஸ்வேர்ட்களை மனதில் பதித்துக் கொண்டு ஃபைலை மூடினான். இன்னும் சாகர் திரும்பி வரவில்லை.

அன்று இரவு, மணி பதினொன்று. வாசனின் போன் அடித்தது. மறுமுனையில் சாகர். சாகரின் குரலில் பதட்டம் தெரிந்தது.

மச்சி.. என்னோட டேட்டா கார்டைப் பாத்தியா ? பேக்ல போட்டிருந்தேன் காணோம். நெட் கணெக்ட் பண்ண முடியல.

ஓ.. இல்லையேடா… ஆபீஸ்ல விட்டுட்டியா தெரியலையே !

தெரியலடா மச்சி.. சே..நெட் கனெக்ட் பண்ண முடியல.. சுடர்வேற வெயிட் பண்ணிட்டிருப்பா…

டேய்… போய் தூங்குடா.. ம…. எல்லாம் நாளைக்கு பாத்துக்கலாம். சொல்லிக் கொண்டு போலிக் கோபத்துடன் போனை ஆஃப் பண்ணினான் வாசன். அவனுடைய கையில் சாகரின் டேட்டா கார்ட் சிரித்தது. அவனுடைய லேப்டாப்பில் சாகரின் ஃபேஸ் புக் பக்கம் சுடருக்காகக் காத்திருந்தது !

அரை மணி நேரத்துக்குப் பின் சுடர் பச்சை விளக்குடன் ஆன்லைனில் வந்தாள்.

கொஞ்ச நேரம் வாசன் அமைதிகாத்தான். சுடரே பேச்சை ஆரம்பித்தாள்.

ஹாய் சாகர்… எப்படி இருக்கீங்க….

பேசினான். சுமார் ஒரு மணி நேரம் பேசினார்கள். மறுமுனையில் இருப்பது வாசன் என்பதை சுடர் அறியவில்லை. சாகர் என்று நினைத்து பேசிக்கொண்டிருந்தாள்.

மறு நாள் மதிய வேளையில் பதட்டத்துடன் ஓடி வந்தான் சாகர்.

மச்சி… சுடர் கிட்டே நேத்திக்கு பேசல. அவ கோச்சுகிட்டா போலிருக்கு. என்னை அன்பிரண்ட் பண்ணிட்டா. இப்போ நான் அவளோட ஃபேஸ் புக் ஃபிரண்ட்ஸ் லிஸ்ட்லயே இல்லை. ரொம்ப கஷ்டமா இருக்கு.

ம்ம்ம்…

என்னடா நான் டென்ஷன்ல சொல்லிட்டிருக்கேன்.. நீ சைலன்டா இருக்கே.

மச்சி.. கொஞ்சம் பொறுமையா கேளு ! நேற்று சுடர் நைட் ஒரு மணி நேரம் சாகர் கூட பேசினா.. அப்புறம் போயிட்டா.

என்னடா சொல்றே ?

சாரி மச்சி.. நான் தான் பேசினேன், உன் பெயர்ல. உன் ஐடில நான் நுழைஞ்சுட்டேன். நீ இடையில வரக்கூடாதுன்னு தான் உன் டேட்டா கார்டை சுட்டுட்டு போனேன். கூல் டவுன்… இந்த சேட்டை படிச்சுப் பாரு ! வாசன் நேற்று இரவு நடந்த சேட் ஹிஸ்டரியை சாகரிடம் நீட்டினான்.

சாகரின் பொறுமை எல்லை மீறியது. டேய்.. மயி….இதெல்லாம் உனக்கே நல்லாயிருக்கா. என்னோட பர்சனல் விஷயத்துல அளவுக்கு மீறி தலையிடறே. அவகிட்டே என்ன சொன்னே ? என் லைஃப்பை டிசைட் பண்ண நீ யாரு ? நான் பேசுவேன், பேசாம இருப்பேன். அது என் இஷ்டம். திஸ் ஈஸ் டூ மச். ஐ ஆம் டோட்டலி இரிடேட்டட்.

முதல்ல நீ சேட்டை படி.. நான் ஏதாச்சும் தப்பா பேசியிருந்தா செருப்பால அடி..

சாகர் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகத்துடன் சேட்டை வாசித்தான்.

ஹாய் சாகர்… எப்படி இருக்கீங்க….

நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே ?

ம்ம்… இருக்கேன்.

வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா ? மகேஷ்வர், சாரினி நலமா ?

ம்ம்… இருக்காங்க… உங்க வீட்ல..

எல்லாரும் நல்லா இருக்காங்க. இன்னிக்கு என்னோட பொண்ணுக்கு டான்ஸ் புரோக்ராம் இருந்துச்சு. ஷி வாஸ் டூயிங் வெரி வெல். ரொம்ப சந்தோசமா இருந்துது !

ஓ.. நைஸ்.. நைஸ். என்ன டான்ஸ்

பரதநாட்டியம் கத்துக்கிறாங்க. லாஸ்ட் ரெண்டு வருஷமா. குட்டிப் பொண்ணு தான் ஆனா பின்றா. ஈன்ற பொழுதில் பெருதுவக்கும் தன் மகளை டான்ஸர் என கேட்ட டாடி… ( ஸ்மைலி )

ம்ம்… என் பொண்ணு கூட மியூசிக் கிளாஸ் போறா… வயலின்.

வாவ்.. வயலின் ரொம்ப கஷ்டமாச்சே…

ம்ம்.. ஆனா அவளுக்குப் புடிச்சிருக்கு.

யூ. நோ வாட்… என்னோட மனைவிக்கு வயலின்னா உசுரு. ரொம்ப அழகா வாசிப்பா. அவ வாசிச்சா நாள் முழுக்க கேட்டுட்டே இருக்கலாம். அடிக்கடி சாயங்காலம் மொட்டை மாடில போய் உட்கார்ந்து அவ வாசிக்கிறதை நானும் பொண்ணும் கேப்போம். மியூசிக் ரொம்பவே அற்புதமான விஷயம் யா.

ம்ம்…. என் ஹஸ்பன்ட் கூட நல்லா கீ போர்ட் வாசிப்பாரு. முன்னாடி ஒரு குரூப்ல சேர்ந்து ஆல்பம்ஸ் எல்லாம் போட்டிருக்காரு.

வாவ்.. வெரி இன்டரஸ்டிங். நீ சொன்னதே இல்லை.

ம்ம்… நீங்க கேட்டதில்லை அதனால நான் சொன்னதில்லை.

ஆமா.. உண்மை தான்.. ( ஸ்மைலி )

அப்புறம்.. வீக் எண்ட் என்ன பிளான் ?

என் பொண்ணோட அஞ்சாவது பிறந்த நாள் நெக்ஸ்ட் வீக் வருது. அதுக்கு பிளான் பண்ணணும். சில ஹோட்டல்ஸ் போய் பாக்கலாம்ன்னு இருக்கோம்.

வய்ஃப் கூடவா ?

ஆமா… அவங்களுக்கு ஒரு டேஸ்ட் இருக்கும்ல, அது மாதிரி பண்ணலாம்ன்னு பிளான். அவங்க சஜஷன் எப்பவுமே கரெக்டா இருக்கும். எங்க வெட்டிங் ஆனிவர்சரி கூட அவளோட பிளான் படி தான் இருந்துது. தேட் வாஸ் கிரேட். அதனால அவங்க கிட்டயே இதையும் விட்டுட்டேன்.

நானும் அப்படி தான். என் ஹஸ்பன்ட் என்ன சொல்றாரோ அது தான் ஃபைனல். பட்… ஹி ஈஸ் வெரி லவ்லி.. எனக்கு என்ன புடிக்குதோ அது தான் செய்வாரு. குட்டிம்மா குட்டிம்மா ன்னு சுத்தி சுத்தி வருவாரு (ஸ்மைலி)

நம்ம பார்ட்னருக்குப் பிடிச்சதைச் செய்றதுல தான் லைஃபே இருக்கு சுடர்…

ம்ம்ம்.. தோஸ் ஆர்… ஹேப்பி மொமன்ட்ஸ். குறிப்பா பிளேயிங் வித் மை கிட்.. வாழ்க்கையிலயே ரொம்ப சந்தோசமான விஷயம்.

கண்டிப்பா… குழந்தைங்க தானே நமக்கு உசுரு மாதிரி. அதுக்கு அப்புறம் தானே மற்றதெல்லாம்.

ம்ம்…. யா… நானும் அப்படித் தான் குழந்தையைப் பிரிஞ்சு ஒரு நாள் கூட இருக்க முடியாது.

வாவ்.. எனக்கும் அப்படியே தான் சுடர். அவ பொறந்த நாளு தான் என் வாழ்க்கையிலேயே ரொம்ப சந்தோசமான நாள்.

ம்ம்ம். அப்போ ரெண்டாவது சந்தோசமான நாள் எது ?

அது என் பொண்ணோட முதல் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது தான். ரொம்ப ரொம்ப அற்புதமான நாள். இன்னும் என் கண்ணுக்கு முன்னடியே அவளோட பாதங்கள் நடனமாடிட்டே இருக்கு.

ம்ம்ம்… மூணாவது சந்தோசமான நாள் ?

என்னோட கவிதை ஒண்ணு பிரசுரமான நாள். ரொம்ப சந்தோசப்பட்ட நாள் அது !

உன்னோட ஃபேவரிட் டேஸ் என்னென்ன சொல்லேன்.

ஆல்மோஸ்ட் சேம். என் குழந்தை பிறந்த நாள்… அவ ஸ்கூல் போன நாள்… நான் கனடா வந்த நாள். எங்க வெட்டிங் ஆனிவர்சரி. இப்படி !

வெரி நைஸ். இப்படி குழந்தைங்க கூட குடும்பமா சந்தோஷமா இருக்கிறது ரொம்ப ஆனந்தமான வாழ்க்கை தான். அதெல்லாம் சின்ன வயசுல தெரியல. லவ் மட்டும் தான் தெரிஞ்சுது. இப்போ குடும்பம் முன்னால வந்துடுச்சு. மற்ற எல்லாமே பின்னால போயிடுச்சு.

ஆமா சாகர். உண்மை தான். வாழ்க்கைல மிகப்பெரிய சந்தோசமே மகிழ்ச்சியான குடும்பம் தான்.

நாம கல்யாணம் பண்ணிக்காம இருந்த அந்த கெட்ட விஷயத்துல நடந்த நல்ல விஷயம் நமக்கு நல்ல இரண்டு குடும்பங்கள் கிடைச்சது தான். நம்ம குழந்தைங்க இடத்துல வேற குழந்தைங்களை வெச்சு நினைச்சுக் கூட பாக்க முடியல இல்லையா !

யா.. யா… நீங்க லைஃப்ல மகிழ்ச்சியா இருக்கிறது எனக்கு சந்தோசமா இருக்கு !

கண்டிப்பா.. நான் கூட நீ ஒரு நல்ல இடத்துல செட்டில் ஆகி, கணவன் கூட சந்தோசமா இருக்கிறதுல ரொம்ப ரொம்ப சந்தோசப்படறேன்.

ஓ.கே… போணும்… பொண்ணுக்கு லஞ்ச் டைம் வந்துடுச்சு… சீ யூ…

கண்டிப்பா.. நானும் கொஞ்சம் தூங்கறேன். டயர்டா இருக்கு… குட் நைட்…

சாகர் சேட் ஹிஸ்டரியை முழுமையாய் வாசித்து விட்டு அமைதியானான். வாசன் எதுவும் தப்பாய்ப் பேசவில்லை. எதுவும் தப்பான தகவல்களையும் சொல்லவில்லை. ஆனால் இப்படி ஒரு உரையாடலை நான் நடத்தியதே இல்லை. அவனுடைய மனசுக்குள் என்னவோ செய்தது. இதுக்கு ஏன் சுடர் என்னை நட்பு வளையத்திலிருந்து விலக்கினாள் ?

வாசன் சாகரின் தோள் தொட்டான்.

மச்சி, நீ ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ. லவ்ல சில முகங்கள் உண்டு. ஒண்ணு ஐயோ நம்ம லவ் பண்ணின ஆளு நல்லா இல்லையோ, சந்தோசமா இல்லையோ அப்படீன்னு குழம்பி, குற்ற உணர்ச்சியாகி, அவங்க கிட்டே பேசிட்டே இருக்கிறது. பழைய நினைவை கிளறிக் கிளறி நிகழ்கால வாழ்க்கை நாசமா போவும். இன்னொரு வகை என்னன்னா, நாம காதலிச்ச பொண்ணோ பையனோ நல்லா இருக்கான்னு தெரிஞ்சா எரிச்சல் பட்டு, கட் பண்ணிட்டு போயிடறது. என்கிட்டே இருந்தால் கிடைக்கிற சந்தோசமும், நிம்மதியும் நம்ம ஆளுக்கு வேற எங்கயும் கிடைக்காது ன்னு நினைக்கிற மனநிலை அது. கிடைச்சா எரிச்சலோ, கோபமோ கொள்ளும். அதனால உண்மையை எப்பவுமே அது பேசாது. ரியாலிட்டியை நீங்க ரெண்டு பேருமே பேசிக்கிட்டதில்லை. நீங்க போலியா ஒரு வளையத்தை உருவாக்கி உங்களை நீங்களே ஏமாத்திட்டிருந்தீங்க. நான் உங்க மனசுல இருந்த உண்மை உணர்வை வெளியே கொண்டு வந்தேன். இப்போ உனக்குத் தெரியும், அவ சந்தோசமான ஒரு வாழ்க்கைல இருக்கான்னு. நீயும் அப்படியே தான் இருக்கே. அதை ஏற்றுக் கொண்டா போதும் !

சாகர் அமைதியாய் இருந்தான். அவனுடைய மனதில் இருந்த குழப்பங்கள் தெளிவடையத் தொடங்கியது போல் இருந்தது. ஏன் சுடர் தன்னை நட்பு வட்டத்திலிருந்து விலக்கினாள் என்பதும் அவனுக்கு புரியத் தொடங்கியது. மௌனமாய் இருந்தான். வாசன் வழக்கம் போல அவனுடைய மௌனத்தைக் கலைத்தான்.

மச்சி.. லீவ் இட். வாழ்க்கைல நீ ஒரு தடவை காதலிச்சே. இனி வாழ்க்கையை ஒரு தடவை காதலி ! சிம்பிள். சொல்ல சாகர் புன்னகைத்தான்.

சேவியர்.
கல்கி 22 செப்டம்பர் 2013

அமரர் கல்கி சிறுகதைப் போட்டி 2013 – ல் பிரசுரத்துக்குத் தேர்வான பழைய காதலி எனும் எனது சிறுகதை