கவிதை : பிரார்த்தனைகள்

கைக் குழந்தையுடன்
சில்லறைக் கைகளுடன்,
அவள்
சாலையைக் கடக்கையில்
வாகனங்கள்
மோதிவிடக் கூடாதே என்று
ஒரு பிரார்த்தனை பிறக்கும்.

தண்ணி லாரியின் பின்னால்
பரபரக்கும்
ஆம்புலன்ஸ் சத்தமும்,
தடுமாறியபடி
வேக வாகனங்களிடையே
கை வண்டி இழுக்கும் முதியவரும்
ஒவ்வொரு பிரார்த்தனைக்கு
உரியவராவர்.

நிறுத்தங்களில் நிற்கும்
பொருளாதாரம் புறந்தள்ளிய
மனிதர்களும்,
ஆதரவுக் கைகள்
வெளிநடப்பு செய்த
சிறுவர்களும்
ஆளுக்கொரு பிரார்த்தனை பெறுவர்.

ஆலய வாசலில்
காரை நிறுத்தி விட்டு
பிரார்த்தனைக்காய்
உள் நுழைகையில்,

தோளைத் தொட்டு
நன்றி சொல்வார் கடவுள்
செய்த
பிரார்த்தனைகளுக்காக.

கவிதை : கடவுளின் குழப்பம்

விறகு உலர்த்திக் கொண்டே
அம்மா
மழை வரக்கூடாதே
என்றும்,

நடவு முடித்த மாமா
கொஞ்சமாய்
தூறலேனும் விழட்டுமே என்றும்.

ஒரே கடவுளிடம்
பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்
தனித் தனியாய்.

நான் கடவுளைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்
வெறுமனே.