சப்தம் செத்த ஓர் சனிக்கிழமை…

Image result for Jesus on Cross

 

இப்படி ஒரு நாள்
இல்லாமலேயே போயிருக்கலாம்.

நேற்று மதியம்
சூரியனைக் கட்டி,
முள்முடி சூட்டி
மரச் சிலுவையில்
மரணிக்க வைத்தனர்.

போதனைகளின்
முடிவில்,
போதகனின் உயிர்
முற்றுப்புள்ளியாய்
குத்தப்பட்டு விட்டது.

எங்கேனும்,
சீசாத் தண்ணீ­ரில்
சூரியன் அணைந்ததாய்
வரலாறுண்டா?

மூச்சுக் காற்றில்
மலைகள் சரிந்ததாய்
சரித்திரமுண்டா ?

நாளை !
மண்ணில் புதைத்த
விண்ணகம் ஒன்று
விஸ்வரூபம் கொள்ளும் நாள்.

விதைகளின் வேலை
மரணிப்பதல்ல
பயணிப்பதென்பது
புரியப்போகும் நாள்.

இதற்கிடையில்
தனியாய்
சனி-யாய் ஏன் நான் ?

உலர்வுக்கும்
புலர்வுக்கும்
சாட்சியாக நிற்கும்
சபிக்கப்பட்டவனா நான் ?

இல்லை,
மனுக்குல மகத்துவம்
மண்ணுக்குள் இருப்பதால்
காவல் செய்யும்
ஏவல்க் காரனா நான் ?

மடியலுக்கும்
விடியலுக்குமிடையே
ஏன் ஓர்
இயலாமையின்
இடைச்சொருகல் ?

என்
இரு கரத்தையும்
விரித்துப் பிடிக்கிறேன்.

இடது ஆள்காட்டி விரலில்
கல்வாரிக் காயங்களால்,
குருதித் தூறல்களாய்
ஓர்
பாவத்தின் பலிபீடம்.

வலது கை விரல் நுனியில்
நெருஞ்சிகள்
மெழுகை நெரித்தாலும்
சுடர் கிழிவதில்லை
எனும்
நம்பிக்கையின் பேரொளி.

தெய்வீக ரசனை

Image result for sculptures in temple

அற்புதமான கோபுரம்,
அழகிய சிற்பங்கள்,
மெல்லியதாய் சிறகடிக்கும்
புறாக்கள்,
சூரியனை விழுங்கி
மஞ்சள் பூசிக் கொள்ளும்
கலசங்கள்.

நிமிர்ந்து பார்க்க மறுத்து
தலை குனிந்து
உள் செல்லும் மனிதர்கள்.

செலவுகள்

Related image

 

கிறிஸ்மஸ் மரத்தைச் சுற்றி
மின்சார மின்மினிகளை
வரிசையாய்
நிற்க வைத்தேன்,
உச்சியில் சின்னதாய் ஓர்
செயற்கை நட்சத்திரத்தையும்
செய்து வைத்தேன்.

யதார்த்தமான ஒரு
குடிலை வாங்கி
குழந்தை இயேசுவை உள்ளே
இளைப்பாற வைத்தேன்.

சுவரைச் சுத்தமாக்கி
காயாத பூக்களை
சாயாமல் ஒட்டி வைத்தேன்.

வாசலிலும்,
அறைகளிலும்
தோரணத் தொங்கல்,
கூரைகளில் கூட
நட்சத்திர ஊஞ்சல்.
எல்லாம் செய்து வைத்தேன்.

பொருளாதாரத்தைக் கொஞ்சம்
சுரண்டித் தின்றாலும்,
இந்த
விழாக்கால ஏற்பாடு
இதமான உறக்கம் தந்தது
இரவில்.

கனவில்,
சிரித்துக் கொண்டே
இயேசு கேட்டார்,
இத்தனை செலவு செய்தாயே
யார் அன்பையேனும்
சம்பாதித்தாயா ?

அழிவின் ஆரம்பம்

Image result for crusades

 

மதவாதிகளே
நீங்கள்
மிதவாதிகளாவது எப்போது ?

ஜ“ரணிக்கும் முன்
மரணிக்கும் வாழ்க்கை
இன்னுமா
பயணிக்கிறது ?

மனித அறுவடைக்காய்
அயோத்திக்கு ஆயுதம்
அனுப்புகிறீர்கள்.

சாவின்
புள்ளிவிபரங்கள் பொறுக்கி
வெற்றி அட்டவணை
வரைகிறீர்கள்.

உங்கள்
குடிசைக் கதவுகளை
கரையான் அரிக்கிறது.
வேதனை வேல்கள்
பொருளாதார விலா இடிக்கிறது !

எப்போதேனும்
இதை உணர்ந்ததுண்டா ?

மதத்தின் மையத்தில்
மனிதாபிமானப் புயல் தானே
மையம் கொண்டிருக்கிறது
பின் ஏன் அது
பிசாசுகளை கரை கடத்துகிறது ?

வெறியின் கிண்ணத்தில்
ஊறிக்கிடக்கும் மனசை
எந்த கங்கை வந்து
கழுவப்போகிறது ?

ஏன்
கடவுளைக் கொளுத்தி
மதத்தை வெளிச்சப்படுத்துகிறீர்கள் ?
ஆண்டவனை
கொன்றுவிட்டுக்
கோயில் கட்டுகிறீர்கள் ?

வீடு பேறு கோரி விட்டு
ஆண்டவனுக்கே
வீடு தரப் போகிறாயா ?

தவமிருக்கும் பக்தன் நீ
வரம் வினியோகிக்கிறாயா ?

தீட்டி வைத்த
ஆயுதங்களை ஆராயும் முன்
கொஞ்ச நேரம்
பூட்டி வைத்த மத நூல்களை
ஆராய்ந்து பார்.

எங்கேனும்
அடுத்த மதத்தை
அழிக்கச் சொன்னால்
வா.
எனக்கும் ஓர் அரிவாள் கொடு.

 

ஆண்டவனைப் பூட்டிய சாவிகள்…

Image result for Poor man in front of church

 

அந்த உண்டியலுக்கும்
இந்த
பிச்சைப்பாத்திரத்துக்கும்
தூரம் அதிகமில்லை.

தூரம் மட்டும் தான்
அதிகமில்லை.

அந்த தேவாலயத்தின்
மதில் சுவரும்,
அந்த தொழுகைக் தளமும்,
கோவில் தெப்பக் குளமும்
எல்லாம்
எல்லாம் பெரிது தான்

கருணை தரும்
கடவுளோடு மக்களுக்கு
கருணை அதிகம்.

கடவுளோடு மட்டும் தான்
கருணை அதிகம்.

தெருக்கள் தோறும்
கும்பாபிஷேகம் தொடரும்,
இடையூறாய் இருந்தால்
சேரிகள் மட்டும்
சரிக்கப்படும்.

அச்சத்தின் அடிமைகள்
மதவாதிகளா ?
இல்லை
பத்தியின் உச்சத்தால் மதவாதிகளா ?

மனிதாபிமானம்
மிச்சமில்லா தேசத்தில்
ஆண்டவனைப் பூட்டிய
சாவிகளும் தொலைந்துவிட்டனவா?

மனிதனுக்காக
கடவுள் வந்ததே
மதங்களென்று பெயரிடப்பட்டன.
அதனால் தானோ என்னவோ
எப்போதுமே
மனிதனுக்காக மனிதன்
வர மறுக்கிறான்.

எல்லா உறிகளும்
வெண்ணை தாங்குகின்றன,
திருடச் சொல்லி
கண்ணனுக்கு கருணை மனுவும்
தருகின்றன.

ஆனால்,
கண்ணனோ
கொள்ளையிட
கள்ளமில்லா வெள்ளை உள்ளங்களை
மட்டுமே தேடுகிறான்.
வெண்ணை உறிகளை அல்ல.

ஆண்டவன் பேசுகிறேன்…

Image result for chappal in front of temple

 

பிரிய பக்தனே…

வா.
வந்தமர்.

ஏன் இத்தனை
அவசரம் ?
வாசலில் நீ போட்ட
செருப்பு
அங்கேயே தான் கிடக்கும்.

உட்காரேன்.
கொஞ்ச நேரம்.

இங்கே
வருவோரெல்லாம்
கூடை நிறைய
கோரிக்கைகளோடும்,
வண்டி நிறைய
வேண்டுதல்களோடும் வரும்
வாடிக்கையாளர் தான்.

ஓர்
வேண்டுதலுக்கு முன்புதான்
என்றோ பெற்றவற்றுக்கு
நன்றி சொல்ல
நினைக்கிறார்கள்.

வேடிக்கை பார்ப்பதற்கும்
சுய புராணம்
வரைவதற்கும்
வருபவர்கள் தான் ஏராளம்.

நூல் கையிலிருந்தாலும்
ஏங்கோ பறக்கும்
பட்டம் போல,
எண்ணங்களை எங்கோ
எறிபவர்கள் தான் ஏராளம்.

வேண்டுதல் பயத்தின்
வெளிப்பாடுகளாய்,
நேர்த்திக் கடனின்
வேண்டா வெறுப்புடன்
வந்து நிற்பவர் தான் ஏராளம்.

எனக்கு
லஞ்சம் தருவதாய் சொல்லி
நச்சரிக்கும்
பக்தர்கள் தான் ஏராளம்.

தப்பிப் பிழைக்கும்
மற்ற மக்கள் எல்லாம்,
என் கர்ப்பக் கிரகத்தைச் சுற்றி
கண்ணீ­ர் துளி விதைத்து
ஈரமாக்கி நகர்கிறார்கள்.

கடிகார ஒப்பந்தத்தோடு
தான்
முடிந்து போகிறது
அத்தனை பேரின்
ஆலய சம்பந்தமும்.

யாரேனும்,
வருவார்களா ?

சும்மா..
உன்னை பார்க்க வந்தேன்
எனும் ஸ்நேகத்தோடு.

தொடரும் சிறுகதைகள்.

Related image

அனாதைகள்
இந்த தேசத்தின்
இன்னொரு நிறம்.

வறுமைக்கோட்டின்
சுருக்குப் பிடிகளும்,
எல்லைக்கோட்டைத் தாண்டிய
வாலிபத்தின் கொடுக்குப் பிடிகளும்
பிரசவித்த பலவீனங்கள்.

காகிதக் கட்டுகளில்
கண்ணயர்ந்து,
குப்பைகளில் குடியிருக்கும்
செல்லாக்காசுகளின் செல்லரித்த
முகத்தோற்றங்கள்.

பசி
இவர்களின் தேசியப் பிரச்சனை,
பாசம்
இவர்களின் இமைகளில் தொற்றிக்கிடக்கும்
பகல்க்கனவு.

சாலையோரத்தின்
தேனீர் விடுதித் துடைப்பங்களாய்,

சாக்கடைச் சுத்தீகரிப்பின்
மனித இயந்திரங்களாய்,

அனாதை இல்லங்களின்
படுக்கைகளுக்கே பாரங்களாய்,
பல முகங்கள்
இந்த தளிர்களுக்கு.

ஆற்றில் மிதந்தாலும்
குளிக்க முடியா தாமரைகளாய்
பாரததேசத்தின் பிறந்தும்
அசோகச் சக்கரத்தால்
நசுக்கப்படுகின்றன
இந்த கொழுகொம்பில்லா கொடிகள்.

பாரி வள்ளல்களோ
தேர் கொடுக்க
முல்லைக்கொடி தேடி அலைகிறார்கள்.

கனவுகாணும் உரிமை கூட
கலைக்கப்பட்டு,
வைக்கோர்ப்போருக்குள் வைக்கப்பட்ட
தீவிரவாதத் தீப்பந்தங்களாய்
இந்த
பயிர்களின் வயிறுகள் எரியும்.

யாரேனும் ஆறுதலாய்
தோள் தொடுவார்களா ?
யார் விரலேனும் விழிதுடைக்குமா ?
எனும் எண்ணங்களுக்கெல்லாம்
முற்றுப்புள்ளி வைத்து
விரைந்து நடப்பர்
நாகரீகத்தின் மனித உருவங்கள்.

என்றேனும் ஓர் கரம் தொடும்
எனும்
கனவை அருகிலிருத்தி
இரவுகளோடு சேர்ந்து
இன்னும் விழித்திருக்கிறார்கள்.
கதவுகளே இல்லாத கண்ணீ­ர் வாசல்களில்.

முதுமை

Image result for old man

வயோதிகத்தின் வழிப்பாதை.
அது
இன்னொரு பிரசவத்தின்
பிரயாசை.

ஒரு முட்டை ஓட்டின் பலவீனத்தில்
கால் முட்டிகள்,
அதிர்ந்து தும்மினால்
அறுந்து வீழும் வலியில்
அரற்றும் அங்கங்கள்.

சுய ஓடுகளாலேயே ஒதுக்கப்படும்
ஆமை வாழ்க்கை இது.

இரங்கல் கூட்டம் போடும்
இரக்கமில்லாதோர் சபை.
இங்கு
முதியவர்களின் முகத்திற்கு நேராய்
மூச்சுக்கு
மூவாயிரம் குற்றச்சாட்டுக்கள்.

உயிரை மட்டும்
இழுத்துப் பிடித்திருக்கும்
இந்த சுருக்கங்களின் தேசத்தோடு
இளசுகளின் யுத்தங்கள்.

தளிர்களின் நரம்புகளெங்கும்
சருகுகளோடு சண்டை.

பச்சையப் பாசனம் நின்றுபோன
இந்த
வைக்கோல் வயல்களுக்கு
கொழுகொம்புகளே
கொலைக்களமாகி விடுகின்றன.

இரும்பாய் இருந்தவரை
ஏதேதோ வடிவத்தில் வாழ்க்கை.
கால்கள் துருப்பிடிக்கத் துவங்கியபின்
தரையோடு தான்
தவழ்கிறது மிச்ச வாழ்க்கை.

கைத்தடிகளின் கால்களோடும்,
கட்டில்
கால்களின் துணையோடும்,
ஜன்னலோரக் காற்றோடு பேசிப் பேசி
கழிந்து விடும் எஞ்சிய ஜ“விதம்.

நெஞ்சில் தவழ்ந்த
மகனின் பிஞ்சுக்கால்கள்
இப்போது வலுவடைந்து விட்டன.

அவன் அடுத்த தலைமுறைக்கான
கதவுகளோடும் கனவுகளோடும்
நடக்கின்றான்.
நான்
இறந்தகாலத்தின் படுக்கையில்
இன்னும் இறக்காமல்.

உறவுகளுக்குப் பாரமாகிப்போனது
என் உடல்.
கடவுளின் கருணைக் கொலைக்காக
கண்­ர் மனு சுமந்து கிடக்கிறது
உணர்விழந்து போன உயிர்.

பிராணன் போகட்டுமென்று
பிரார்த்தனை செய்யும் மனசு,
செத்துப் போயேன் எனும்
மருமகள் வார்த்தையால்
இன்னொரு முறை சாகும்.

அறுவை சிகிச்சை

Image result for dreaming

நாளைக்கு அறுவை சிகிச்சை !!!
இருபத்து நான்கு வருட
இருள் வாழ்க்கைக்குப் பின்
விழிப்பாதைக்குள் வழியப் போகுது வெளிச்சம்.

எனைப் பார்த்துக்கொண்டிருந்த பூமியை
முதன் முதலாய்
நான் பார்க்கப் போகிறேன் ..

பார்வை கிடைத்ததும்
முதலில்
அம்மாவைப் பார்க்க வேண்டும்.
பேச்சுக்குள் பரிமாறிக்கொண்ட பாசத்தின்
முக உருவம் காண வேண்டும்.

வீட்டுக்குள் நுழையும் போது
நான் தொட்டுப் பார்க்கும் திண்ணையும்
எனைத் தொட்டுப் பார்க்கும்
அப்பாவையும் பார்க்க வேண்டும்.

இரைச்சல்களில் இழுக்கப்பட்டு
எங்கோ நிற்கும் போது
என்கரம் தீண்டி சாலை கடத்தும்
அந்த அன்னிய முகம் காணவேண்டும்.

என்னை மட்டும் இருள் பள்ளத்தின்
முகம் இல்லா மூலைக்குள்
புதைத்துப் போட்ட
என் கருவிழி காணவேண்டும் .

என் ஒரு முகத்தின்
இரு கண்களையும் இருட்டாக்கிய
அந்த பல முக இறைவனின்
திரு உருவம் தரிசிக்க வேண்டும்.

என் இருட்டுப் பயணத்துக்கு
கதவுகள் கண்டுபிடிக்கும்
என் ஊன்றுகோல்..
நான் உடுத்திருக்கும் ஆடையின் நிறம்
எல்லாம் காணவேண்டும்.

வானவில்லுக்கு நிறமுண்டாம்.
ஆமாம் நிறமென்பதென்ன ?
நிலவு போல பெண்ணாம்
சரி நிலவும்,பெண்ணும் என்ன நிறம்..?

எனக்கு முன்னால் இருப்பதெல்லாம்
எதிர்பார்ப்பு மூட்டைகள்.
மனசு முழுக்க ஆனந்தம் வந்து
ஊசிகுத்திய போது..
கனவு கலைத்தாள் அம்மா.

விடிந்து விட்டதாம்..
எனக்கு
அடக்கமுடியாமல் அழுகை வந்தது.

கனவு கண்டாயா
என்ற அம்மாவின் கேள்விக்கு
ஊன்றுகோல் தடவிய கரங்களுடன்
வார்த்தைகள் வலித்தன.
ஆமாம். ஆனால்.
கனவில் கூட கண் தெரியலேம்மா..

 

 

வெளிவராதவை

Image result for a man alone painting

மனசுக்குள்
ஓராயிரம் மீன்கொத்திகள்,
ஓரமாய் அமர்ந்து
சிந்தனை
கொத்திக் கொண்டிருக்கின்றன.

எப்போதும்
வார்த்தைகள் முண்டியடித்து
என்
தொண்டைவரை ஏறி
தற்கொலை செய்கின்றன.

வாய்க் குகைகள் வழியாய்
என்
மனசின் கர்ஜனைகள்
வெளிவருவதே இல்லை.

மரணம் வந்து
மேய்ந்து போன வயலாய்,
இதயம் முழுதும்
சொல்லாத ஆதங்கங்களின்
தடயங்கள் மட்டும்.

யாரேனும் சொல்லக் கூடுமா
என்
தொண்டையைக்
கிழித்த,
தூண்டில் வாசகங்களை ?

நான் பேச நினைப்பதெல்லாம்
பேச
நாவு இல்லா நிலையை
நானெப்படி சொல்ல ?