தொடரும் பிரிவுகள்

Image result for seperation

 

உறவுச் சுவரில்
உயிர் ஒட்டிய நாளிலிருந்தே
பிரிவுப் பிசாசின்
கோரப்பற்களில்
ஈரம் மாறா இரத்தத் துளிகள்.

இரு உடல்
ஓருயிராய் பிணைந்து,
ஓருடல்
ஈருயிராய் தாய்மை அணிந்து,
பின்னொரு பொழுதில்
தொப்புள் கொடியின்
நெருக்கம் விட்டபோது
துவங்கிய பிரிவு.

பள்ளிக்கூட
ஆரம்ப நட்பு.
ஆற்றங்கரையில் ஒதுங்கிய
சிறு வயதுச் சங்கதிகள்,
பதின் பருவத்தில்
பயிரான
முகப்பருப் கனவுகள்.

அத்தனை
கானகக் குவியலிலும்
பிரிவைச் சந்திக்காத
பச்சைக் கிளை
ஒன்றையேனும்
பார்க்க இயலவில்லை.

பிரிவுகளில் பின்னால்
ஓடி ஓடி
கால் வலித்த காதல்கள்,

கடல்களைக் கடந்து
கட்டி வைக்கும்
மணல் கோபுரக் கரன்சிகள்,

தாய் நாட்டில்
ஓர் ஓட்டு வீட்டுக்குள்
ஒதுங்கிக் கிடக்கும்
தாய்ப்பாசக் கவலைகள்.

சட்டென்று முடிவடையும்
ஒற்றையடிப்பாதையின்
குறுக்குச் சுவர்
மரணங்கள் !

தற்கால ஓய்வுகளாகவும்,
நிரந்தரச் சாய்வுகளாகவும்,
பிரிவுக்கு முன்னாலும்
பின்னாலும்
பிரியாமல் தொடர்பவை
பிரிவுகளே.

பிரிவுகளைப்
பிரியவேண்டுமென்று
மனங்கள் பிரியப்படும்.

ஆனால்,
நிஜத்தின் பாதங்களோ,
அந்த பிரியத்தின்
சந்திப்பிலும்
ஒரு பிரிவைச் சந்திக்கும்.
மன்னிக்க முடியாத இரவு

Advertisements

நலமா

Image result for friends talking

 

நலமா,
எனும் விசாரிப்புகள் தொடரும்.
செவிப்பறைகள்
பதில் வருமுன் பூட்டிக் கொள்ளும்.

உன்னைப் பார்த்ததில்
மனசு மகிழ்கிறது
எனும்போதும்,
கண்கள்
தூக்கக் கலக்கத்தில் விழிக்கும்.

மிச்சமிருப்பதெல்லாம்
சொற்களுக்கும்
பற்களுக்குமான உறவு.

இமைகள் கூட
கண்களை தனிமைச் சிறைக்குள்
தள்ளும் கதவு தான்.

கடிகாரக் கட்டளைகளும்
அதிகார மூச்சிரைப்புகளும்
விரட்டிக் கொன்று விட்டன
சில
வெளிவராத வெளிச்சங்களை.

இன்னும்
எங்கள் விசாரிப்புகள் தொடரும்,
உள்ளீடில்லா வார்த்தைகளோடும்
ஊமையான
செவிகளோடும்.

 

நேரம்

Image result for fantasy clock

நேரத்தின் முகத்திற்கு
ஓராயிரம் முகங்கள்,

மெல்லிய பூவை
சில்லென வருடி
மயங்கிக் கிடக்கும் வேளையில்
அது
அசுர வேகத்தில் பாயும்.

எதிர்பார்ப்பை
எதிர்கொள்ளும் காலம்
எதிர்துருவத்தில் அமர்ந்து
நகர மறுத்து
நகைக்கும்.

இதய இரைச்சல்
அடங்கும் போதெல்லாம்
சின்ன நடையில்
காயப் படுத்தாமல்
கடந்து செல்லும்.

முகம் கண்டால் மட்டும்
புன்னகைக்கும்
மனிதர் குணமோ,
தனியே இருந்தால்
தூங்கித் தொலைக்கும்
சோம்பேறித் தலைசுற்றல்களோ
அதன்
சுற்றல்களில் இருப்பதில்லை.

அத்தனை முகங்கள்
சூடினாலும்,
என்றும் பிரமிப்பது
இயல்பிலிருந்து மாறாத
அதன் இயல்பே.

இயல்பில் இருப்போருக்கே
‘நேரம்’
வரும் போலிருக்கிறது.

 

முடியாத முடிவுகள்

Image result for fantasy world

நடக்காது என்று
தெரிந்த பின்னும்
இன்னும்
அந்தப்பாதையில் தான் நடக்கிறேன்.

வானவில்லை
வாசலில் தோரணமாக்க
இன்னும் நான்
மழை நாளுக்காய் காத்திருக்கிறேன்.

நிலவைப் பிடித்து
நிலத்தில் புதைக்கவேண்டுமென்று
சுருக்குக் கயிறோடு
சுற்றிவருகிறேன்

என் விளக்கில் சுடர் ஏற்ற
சூரியன் தான் வேண்டுமென்று
மெழுகுத்திரியோடு
முயற்சி செய்கிறேன்.

இன்னும் என் தூண்டில்கள்
கானல் நீருக்குள் தான்
காத்திருக்கின்றன…

பாறை மீது விதைத்துவிட்டு
வயல்களுக்குள்
ஈரம் பாய்ச்சுகிறேன்.

விழுதுகள் வருமென்று
ரோஜாக்களின் பாதங்களில்
கண்விழித்துக் காவல் இருக்கிறேன்.

கனவுகள் மட்டுமே எனக்கு
கவரி வீசுவதால்
நிஜங்களை நான்
கனவுகள் என்றே
கற்பனைசெய்து வருகிறேன். !!!!

அலுவல் விவாதம்

Image result for conference room discussion

 

முனை மழுங்கிய சதுர வடிவில்,
இல்லையேல்
முனை உடைந்த முட்டை வடிவில்,
ஏதோ
ஒரு வடிவில் இருக்கும் அந்த அறை.

பெரிய தேனீர் கோப்பைகளோ
குளிர்பான பாட்டில்களோ
கைகளில் ஏந்தி,
சிரித்துக் கொண்டே
ஏதேதோ பேசுவார்கள்.

புரியக்கூடாதென்று
பிரம்ம பிரயர்த்தனம் பண்ணியும்,
தங்கள்
அறிவுக்கு அங்கீகாரம் வாங்கவும்.

கேள்வி கேட்பதற்கென்றே
கேட்பவர்களும்,
பொழுதுகளை போக்குவதற்கென்றே
வருபவர்களும் உண்டு.

சொல்லாமல் கொள்ளாமல் வரும்
கொட்டாவி மட்டும்
கைகளால் மறைக்கப்படும்.

கொஞ்சம் விட்டால்
தூங்கி வழியும்
அபாயம் இருப்பதால்,
தேனீர் குவளை தேவையாகிறது.

முடிவுகளை எடுப்பதைவிட
எடுத்த முடிவுகளை
அறிவிப்பதற்காகவே கூடும்
சில அவசர ஆலோசனைகள்.

பெரும்பாலும்,
எடுக்கப்படுபவை என்னவோ,
வாய்தா வழங்கும்
வழக்காடுமன்றங்களாக,
அடுத்த உரையாடல் எப்போதெனும்
தீர்மானங்கள் மட்டுமே.

 

மேகத்தை மூடும் மேகங்கள்

Image result for two friends

சில நினைவுகள்
மூழ்கித் தொலைகின்றன,
சில
தூண்டில்களை மூழ்கவிட்டு
மிதவைகளாய் மிதக்கின்றன.

கல்லூரிக்குச் சென்றபின்
நான்
மறந்து விட்டேனென்று
என் ஆரம்பகால நண்பன்
அலுத்துக் கொண்டான்,

வேலைக்குச் சென்றபின்
நட்பை
மறந்து விட்டதாய்,
கல்லூரி நண்பன்
கவலைப் பட்டான்.

திருமணத்துக்குப் பின்
சந்திப்பதில்லையென்று
என்
சக ஊழியன்
சங்கடப்பட்டான்.

ஒவ்வோர்
முளைக்கு முன்னும்
சில
இலைகளை உதிர்த்துக் கொண்டே
மரம் வளர்கிறது.

ஆனாலும்
வேர்களுக்குள் இருக்கின்றன
உதிர்ந்த இலைகள்
உதிரம் ஊற்றிய ஈரப் பதிவுகள்.

இதுவும் பழசு.

Image result for abandoned house

 

நான்
இப்போது எழுத நினைத்த
கவிதையை
யாரேனும்
எழுத நினைத்திருக்கலாம்.

நான்
நேற்று எழுதிய கவிதையை
யாரேனும்
என்றோ எழுதியிருக்கலாம்.

யாரும் எழுதவில்லை என
நான்
வார்த்தைகளால்
கோர்த்து வைத்த கவிதையை,
என்றேனும்
ஓர் செல்லரித்த ஓலைச் சுவடி
சுமந்து கனத்திருக்கலாம்.

வெளிக்காட்டாத
குறிப்பேடுகள் ஏதேனும்
அவற்றை
ஒலிபரப்பு செய்யாமல்
ஒளித்து வைத்திருக்கலாம்.

இல்லையேல்,
மனசுக்குள் மட்டுமாவது
யாரேனும்
முனகிப் பார்த்திருக்கலாம்.

எனக்கே எனக்கான
என்
அனுபவக் கவிதைகள் கூட,
ஏதேனும்
கிராமத்துத் திண்ணைகள்
அனுபவித்து உரையாடியிருக்கலாம்.

எதுவும்
புதிதென்று என்னிடம்
எதுவுமே இல்லை.

எல்லாமே
நேற்றின் நீட்சிகள்,
இல்லையேல்
துண்டிக்கப்பட்ட
கடந்தகாலக் காற்றின்
இணைப்புகள் மட்டுமே.

மன வயிறுகள்.

Image result for village tree

ஈரமாய் ஓடும் ஆறு
எங்களூருக்கு அது ஒரு வரம்.
கம்பீரம் இழந்தாலும்
ஓடிக்கொண்டேயிருக்கும்
எப்போதும்.

அதைக் கடக்க வேண்டிய
தருணங்களிலெல்லாம்,
கால் நனைத்துக் கொள்ளாமல்,
அதை
நேசத்தோடு அள்ளாமல்
கடந்து போனதே இல்லை.

அது
செதுக்கிப் போட்டிருக்கும்
கூழாங்கற்களும்,
வழவழத்த பாறைகளும்,
சாய்ந்து கிடக்கும்
ஒற்றைத் தென்னை மரமும்,
எப்போதும் என்
விசாரிப்புக்குத் தப்பியதில்லை.

இப்போதும்,
என் வெற்றுக் கால்களின் கீழ்
நதி ஈரமாய்
நகர்ந்து கொண்டுதானிருக்கிறது.

கையருகே,
ரேஷன் அட்டையும், பையும்.
காத்திருக்க வேண்டும்
வரிசையில், வெயிலில் சாலை ஓரத்தில்.

ரசனைகளும்
நிர்ப்பந்தங்களும்
இணைந்து ஓடுகின்றன
தனித் தனியாய்..
தடுமாறாமல் ரயில் ஓட்ட
கற்றுக் கொள்ள வேண்டும் தான்.
ஒவ்வொருவரும்.

இது கவிதை அல்ல.

Image result for writing

 

கவிதைகளை விட
அதிகமாய்,
எது கவிதை எனும்
விவாதங்கள்.

உணர்வுகளை மட்டுமே
கவிதை
உருட்டி வைக்க வேண்டுமாம்
அதில்
கருத்துக்களைத்
திரட்டி வைத்தல் தகாதாம்.

சூரியக் கதிராய்
சுகமாய்ச் சுடலாம்,
மாலை வெயிலாய்
மெல்லப் படரலாம்
ஆனால்
பச்சையம் விற்கும்
பணி செய்யக்கூடாதாம்

அங்கங்களை வருடலாம்,
அவையில் அவற்றை
அவிழ்த்தும் வைக்கலாம்
ஆனால்
ஆடை வழங்கக் கூடாதாம்.

எதார்த்தம் பற்றி எழுதலாம்
ஆனால்
எதிர்காலம் பற்றி
எழுதல் தகாதாம்.

கல் பற்றி எழுதலாம்
கல்வி பற்றி கூடாதாம்.

தோகைகளைப் பாடிவிட்டு
மயிலை
சூப் வைத்துக் குடிக்க
சம்மதமில்லை எனக்கு.

பீலிகளைப் பற்றி
பத்துப் பக்கம் எழுதிவிட்டு
அச்சாணி பற்றி
அரை வரி எழுதினால்
அடிக்க வருபவரோடும்
உடன்பாடில்லை எனக்கு.

விளக்குகளை ஏற்றி
வீதியில் வைப்பதே
பாதசாரிகளுக்குப் பயன்.

கலங்கரை விளக்கம்
பக்கவாட்டில்
படுத்துக் கிடந்தால்
மாலுமிக்கேது
கரைப் பிரவேசம் ?

எத்தனைக் கிரீடம்
சூடிக்கொண்டாலும்
தலைக்குத் தானே விலை.

இது
கவிதை யில்லை என
உங்களில்
பலர் கருதக் கூடும்.

அவர்களைத் தவிர்த்த
இவர்களுக்கே
இக்கவிதை சமர்ப்பணம்.

தகவல் இல்லா தொடர்புகள்…

Image result for email

 

 

 

இணையத்தில்
ஏதோ இணைப்புப் பிழை,
உனக்கனுப்பிய
மின்னஞ்சல்
வழியில் எங்கோ விழுந்துவிட்டது.

உன்
வீட்டுத் தொலைபேசி
வேலை செய்யவில்லையா ?

மறந்து போன நண்பனை
வழியில் சந்திக்கும் போது
உதடுகள்
ஓயாமல் பொய்சொல்லும்.

‘கடுதாசி போட்டேனே’
என்று அப்பா யாரிடமோ
ஒரு நாள்
சொல்லிக் கொண்டிருந்தார்.

மறக்கத் துவங்கியிருக்கும்
பால்ய கால நண்பர்களுக்கு
டைரியைத் தொலைத்தேனெனும்
முன் ஜாமீன் பதில் தான்.

இந்த நட்பு
இறுதிவரை இருக்குமென்று நினைத்து
இறுக்கமற்றுப் போனவற்றின்
கணக்குகள்
ஐந்தாம் வகுப்பிலிருந்து
அமெரிக்கா வரை நீள்கிறது.

பாம்பின் மேல் பழி சுமத்திய
ஆதாம் காலத்தைய ஆரம்பம் தான்
இந்த
தப்பித்தல் உளறல்கள்.

கற்காலத்துக்கும்
தற்காலத்துக்கும்
அர்த்தங்களின் தூரம் அதிகமில்லை,
பெயர் சூட்டுதலில் தான்
பல நூற்றாண்டு நீளம்.

நேற்று,
சாலையோரம் மங்கலான வெளிச்சத்தில்
அவனைப் பார்த்தேன்,
ஒரு காலத்தில் என்னோடு
நெருக்கமாய் இருந்தவன்.

விசாரிப்புக்கிடையில்
வினவினான்
ஒரு கடிதம் அனுப்பினேனே,
கிடைத்ததா ?

சிரிப்புக்கிடையில் சொன்னேன்.
ஆம்,
பதில் கூட அனுப்பினேனே !