தன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது !

நட்பு என்பது இரண்டு உடல்களில் உலவும் ஒற்றை ஆன்மாஎன்கிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். நட்பின் பிணைப்பையும், இணக்கத்தையும் சொல்லும் ஒரு அசத்தலான வாசகமாய் இதைக் கொள்ளலாம்.

நட்பு இல்லாத மனிதன் இருக்க முடியாது. எல்லோருக்கும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். சில நண்பர்கள் ஆரம்ப கால அரை டவுசர் வாழ்க்கையோடு விடை பெறுகிறார்கள். சிலர் கல்லூரி கால வாழ்க்கையுடன் நின்று போய் விடுகிறார்கள். சிலர் அலுவலக வட்டத்துக்குள்ளேயே ஓடி ஓடி ஓய்ந்து விடுகிறார்கள்.

வெகு சில நண்பர்களே இந்த எல்லைகளையெல்லாம் தாண்டி நமது இதயத்தின் மேடையில் கூடாரமடித்துக் குடியிருக்கிறார்கள். நமது வாழ்க்கையின் பாதையில் நண்பர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. இளம் வயதில் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் நண்பர்களின் குணாதிசயங்கள் நம்மையும் தொற்றிக் கொண்டு விடுகிறது. 

ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள். அதனால் தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. 

நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்கவிடுவார்களோ, அதே போல தீய நண்பர்கள் நம்மை உயரத்திலிருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவார்கள். சரியான பாதையில் கப்பலைச் செலுத்தும் ஒரு மாலுமியைப் போல இருக்க வேண்டும் நல்ல நண்பன். “கூடா நட்பு கேடாய் முடியும்என வள்ளுவர் அந்தக் காலத்திலேயே அழுத்தமாய்ச் சொன்னதன் காரணம் அது தான்.

இன்றைய இளைஞர்கள் பலரும் இந்தநட்புத் தேர்வுஏரியாவில் தவறி விடுகிறார்கள். “வாடாதண்ணியடிக்கலாம்என்று அழைப்பது தான் உண்மை நட்பின் அடையாளமென என்று நினைத்து விடுகிறார்கள். உண்மையான நண்பன் உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவான். உங்களுடைய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவான். உங்களைத் தீய வழியில் இழுக்க மாட்டான் என்பதை மனதில் அழுத்தமாய் எழுதுங்கள்.

ஒருவேளை நீங்கள் புகை, மது போன்ற பழக்கங்களில் இருந்தால் உங்களை அங்கிருந்து வெளியே கொண்டு வருவது தான் உண்மையான நண்பனின் பண்பு. அதை உற்சாகப் படுத்துவதல்ல.

நல்ல நண்பன் உங்கள் தவறுகளைக் கடிந்து கொள்வான். உங்கள் மனம் கோணாமல் எப்போதும் நல்ல விஷயங்களையே சொல்லிக் கொண்டிருப்பவன் ஆத்மார்த்த நண்பன் அல்ல. நல்ல நண்பன் நாளைய வாழ்வில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் எனும் ஆர்வம் கொள்பவன். அப்படிப்பட்டவர்கள் உங்கள் குறைகளை உங்களிடம் சுட்டிக் காட்டத் தயங்க மாட்டார்கள். அதற்காத நட்பே போனால் கூட கவலைப்பட மாட்டார்கள். 

நான் தண்ணியடிக்கிற விஷயத்தை அப்பா கிட்டே சொல்லாதேஎன்பது போன்ற சத்தியங்களை நல்ல நண்பன் கண்டு கொள்வதில்லை. சில நேரங்களில் சத்தியம் கூட மீறப்படலாம் என்பது உண்மைத் தோழனுக்குத் தெரியும். 

உங்களுடைய இலட்சியங்களை உங்கள் நண்பன் ஆதரிக்கிறானா ? அல்லது அவனுடைய செயல்பாடுகள் உங்களுடைய இலட்சியத்துக்குத் தடைக்கல்லாய் இருக்கிறதா ? என்பதைப் பாருங்கள். உங்களுடைய இலட்சியங்களைக் கிண்டலடிப்பவனோ, அதை நோக்கிய உங்கள் பயணத்தின் போது உங்களுக்கு ஊக்கமளிக்காமல் இருப்பவனோ உங்களுடைய நண்பன் அல்ல.

உண்மையான நண்பன் உங்களுடைய திறமைகளை முழுமையாய்ப் பயன்படுத்த ஊக்குவிப்பான். ஒரு இசைக்கலைஞன் ஆவது உங்கள் இலட்சியமெனில், அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் எனும் விஷயங்களில் உங்களுக்கு உதவி செய்வான். உங்களைப் படிப்படியாய் அந்தப் பாதையில் நடத்துவான். வெறுமனே உங்களுடைய வெற்றிகளில் வந்து கை குலுக்கி விட்டுப் போகும் மனிதனாக அவன் இருப்பதில்லை. 

மற்ற நண்பர்களைப்பற்றி உங்களிடம் தரக்குறைவாகப் விமர்சிக்கும் நண்பர்களிடம் கொஞ்சம் உஷாராய் இருங்கள். உங்களைப் பற்றி அவர்கள் வேறு நண்பர்களிடமும் அதே போலப் பேசித் திரியும் வாய்ப்பு உண்டு. நீங்கள் எந்த நண்பனுடன் இருக்கும் போது அடுத்தவர்களைப் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்களை அவிழ்க்கிறீர்கள் என யோசியுங்கள். அந்த நண்பன் நல்ல நண்பன் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உண்மை நண்பர்கள் உங்களுடைய சந்தோஷத்தின் போது காணாமல் போனாலும், உங்களுடைய துயர வேளையில் நிச்சயம் உங்களோடு இருப்பார்கள். தங்களைப் பற்றிய தம்பட்டங்களை ஒதுக்கி வைத்து விட்டு உங்களுடைய உரையாடலைக் கவனமுடனும், ஈடுபாட்டுடனும் கேட்பது நல்ல நண்பனின் அடையாளம்.

மனசுக்கு கஷ்டமாயிருக்கு, பணக் கஷ்டமாயிருக்கு, உதவி தேவையிருக்குஎன கஷ்டம் என்றால் மட்டுமே உங்களிடம் வரும் நண்பர்கள் சிலர் இருப்பார்கள். நட்பின் முக்கியத் தேவையே உதவுவதில் தான் இருக்கிறது. ஆனால் அத்தகைய சூழல்களில்மட்டுமேஉங்களைத் தேடி வரும் நண்பர்கள் சுயநலத்தின் சின்னங்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

சில நண்பர்கள் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தஞ்சாவூர் பொம்மை போலத் தலையாட்டும் நண்பர்களே வேண்டுமென்பார்கள். அவர்கள் உண்மையான நண்பர்களல்ல. அவர்களுடைய நட்பில் வீசுவதும் சுயநல வாசமே !. 

தப்பானஒரு செயலைச் செய்ய உங்களை ஊக்கப்படுத்துபவன் உங்கள் நண்பனல்ல என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்டவர்களை நீங்கள் முளையிலேயே கிள்ளி எறியலாம். போதை, திருட்டு, பாலியல், சமூக விரோதச் செயல் போன்ற பல தவறுகளுக்கு இளைஞர்களை இட்டுச் செல்வதில் பெரும்பாலான பங்கு நண்பர்களையே சாரும். அத்தகைய ஒழுக்கத்தை மீறிய செயல்களுக்குள் உங்களை இழுப்பவர்கள் உங்கள் எதிரிகளே ! நண்பர்களல்ல.

நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவனே உண்மை நண்பன். “எனக்குப் பிடித்த மாதிரி மாறினால் தான் உன்னோடு நட்பாய் இருப்பேன்என நிபந்தனைகள் விதிப்பவர்களின் நட்பை விலக்கி விடுங்கள்.  

உங்கள் நண்பர்களுடன் பேசும்போது உங்களுடைய மனம் நேர் சிந்தனைகளில் நிறைகிறதா ? எதிர் சிந்தனைகளில் நிரம்புகிறதா என்று பாருங்கள். எதிர் சிந்தனைகளே வளர்கிறதெனில் அந்த நட்பு தப்பானது என்பதைக் கண்டு கொள்ளுங்கள். 

சில நண்பர்களோடு பழகும்போது உங்களுடைய நல்ல குணாதிசயங்களெல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். அத்தகைய நண்பர்களை எப்போதுமே அருகில் வைத்திருங்கள்.

உங்களுடைய நெருங்கிய நண்பர்களில் நான்குபேரை நினையுங்கள். அவர்கள் நல்லவர்களா, மோசமானவர்களா என இப்போது அளவிடுங்கள். தீய நண்பர்களெனில் ஒதுக்குங்கள். தீய நண்பனோடு பழகுவதை விட நண்பனே இல்லாமல் வாழ்வது சாலச் சிறந்தது. 

கடைசியாக ஒன்று. நல்ல நட்பை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே அடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்கள். எனவே நீங்களும் பிறருக்கு எப்போதும் ஒரு நல்ல நண்பனாகவே இருங்கள் !

அன்னை தெரசா சிறுமியாக இருந்தபோது அவருடைய தோழியர்களில் ஒரு தீய தோழி இருப்பதை அவருடைய தாய் கவனித்தார். ஒரு தீய நட்பு நல்லவர்களையும் கெடுத்துவிடும் எனவே அந்த நட்பைத் துண்டிக்க வேண்டும் என தெரசாவின் தாய் முடிவெடுத்தார்.. 

ஒருநாள் அவர் தெரசாவை அழைத்தார். அவருடைய கையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள் பழங்கள் இருந்தன. அழகான ஆப்பிள் பழங்களைக் கண்ட தெரசாவின் கண்கள் ஆனந்தத்தில் விரிந்தன. ஆர்வத்துடன் ஒரு பழத்தை எடுக்கப் போன தெரசாவை தாய் நிறுத்தினாள். தனியே வைத்திருந்த ஒரு அழுகிய பழத்தை எடுத்தாள் தாய். தெரசா புரியாமல் பார்த்தாள். தாய் அந்த அழுகிய பழத்தை அழகிய பழங்களின் நடுவே வைத்தாள். 

ஏம்மா ? நல்ல பழங்களோடு கெட்ட பழத்தையும் வைக்கிறீர்கள் ?” தெரசா கேட்டாள்.

எல்லாம் ஒரு காரணமாய் தான். இதை அப்படியே கொண்டு போய் ஒரு இடத்தில் வை. நான் சொல்லும்போது எடுத்து வாஎன்றார் தாய்.

தெரசா அப்படியே செய்தார். 

சில நாட்களுக்குப் பின் தாய் தெரசாவை மறுபடியும் அழைத்தாள். அந்த பழக் கூடையை எடுத்து வரச் சொன்னாள். பழக்கூடையை தெரசா எடுத்து வந்து தாயின் முன்னால் வைத்தாள். அந்தக் கூடையிலிருந்த பழங்கள் எல்லாம் அழுகிப் போய் இருந்தன.

தெரசா வருந்தினாள். நன்றாக இருந்த பழங்கள் கெட்டுப் போய்விட்டனவே என்று அவளுக்கு அழுகையே வந்து விட்டது. 

தாய் தெராவை அருகில் அமரவைத்து மெதுவாய்ச் சொன்னாள். “பார்த்தாயா ? ஒரு அழுகிய ஆப்பிள் பழம் ஒரு கூடை நல்ல பழங்களை அழுக வைத்து விட்டது. தீய நட்பும் இப்படித் தான். ஒரு தீய நட்பு ஒரு நல்ல குழுவையே நாசமாக்கி விடும். விஷம் ஒருதுளி போதும் ஒரு மனிதனைக் கொல்ல. எனவே நட்பைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை”. 

நட்பில் உண்மை நிலவட்டும்

வாழ்வின் கிழக்கு புலரட்டும் !

தன்னம்பிக்கை : காதலியுங்கள், ஆனால் !…

காதலியுங்கள், ஆனால் !…

Image result for love

வாழ்க்கையை அழகாக்கும் வலிமை படைத்த மிகச் சில விஷயங்களில் காதலும் ஒன்று ! “உலகின் மிக அழகான பொருட்களை தொடடோ, பார்க்கவோ முடியாதுஎன்கிறார் ஹெலன் கெல்லர். அழகானவை பொருட்களல்ல, உணர்வுகளே என்பதையே அவருடைய வார்த்தைகள் உணர்த்துகின்றன.

அன்பு செய்வதும், அன்பு செய்யப்படுவதும் தான் உலகின் உன்னதமான விஷயங்கள் என்பதில் சந்தேகமில்லை. அந்த அன்பின் ஒவ்வோர் பக்கத்திலும் ஒவ்வோர் வாசனை ! இளைஞர்களின் வாழ்க்கைப் பக்கத்தில் அதிகமாய் வீசும் வாசனை, காதல் !

காதலும், காதல் சார்ந்த இடங்களும் தான் இளைஞர்களின் எல்லைக் கோடுகள். காதல் அவர்களுடைய வாழ்க்கையை அவர்கள் கண்களுக்கே ரொம்ப அழகானதாக மாற்றித் தருகிறது.

ஒரு இளைஞனும், அவனுடைய தந்தையும் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். சன்னல் வழியே தெரிந்த காட்சிகள் இளைஞனை உற்சாகம் கொள்ளச் செய்தன. “வாவ்மரங்கள்என்றான். “வாவ்.. வெயில் என்றான்” “அடடா பறவைகள் என்ன அழகுஎன்றான். அருகில் இருந்தவர்களெல்லாம் அவனை வித்தியாசமாய்ப் பார்த்தார்கள். தந்தையோ அவனுடைய கைகளைப் பற்றியபடி, எல்லாவற்றுக்கும் புன்னகையுடன் தலையாட்டிக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரத்தில் மழை தூறத் துவங்கியது. இளைஞன் வழக்கம் போலவாவ்அப்பா, மழைத்துளி எவ்ளோ அழகு, அது தரையில் விழுவது அசத்தலா இருக்குஎன குதிக்க ஆரம்பித்தான். அருகில் இருந்தவருக்கு பொறுக்கவில்லை. பையனோட அப்பாவைப் பார்த்து , “பையனுக்குமூளை…” என்று இழுத்தார்.

தந்தை இல்லையென அவசரமாய் தலையாட்டிக் கொண்டே சொன்னார். “என் பையனுக்கு நேற்று வரைக்கும் பார்வையில்லை. இப்போ தான் ஆபரேஷன் பண்ணி பார்வை வந்திருக்கு. இதான் பார்வை கிடச்சப்புறம் அவன் செய்ற முதல் பயணம். அதான் அவனுக்கு ஏல்லாமே புதுசா இருக்கு ! மன்னிச்சுக்கோங்க 

காதலும் இப்படித் தான். காதல் ஒரு மனிதனுடைய உள்ளத்தில் விதையாய் விழுந்த உடன் அவனைச் சுற்றிய வாழ்க்கை அழகான மலர்களைச் சொரிய ஆரம்பித்து விடுகிறது. அதுவரை சாதாரணமாய் இருந்த விஷயங்களெல்லாம் அவனுக்குள் அழகியலைப் போதிக்கும் மகத்துவமான விஷயங்களாகிவிடுகின்றன.

தமிழனுக்கும் காதலுக்குமான மான தொடர்பு இன்று நேற்று வந்ததல்ல. கல்தோன்றாக் காலத்திலேயே தோன்றிய காதலை, சொல் தோன்றியக் காலத்திலேயே சொல்லி மகிழ்ந்தனர் தமிழர். சந்தேகம் இருந்தால் ஏதேனும் ஒரு பண்டைய இலக்கியத்தை தூசு தட்டிப் பாருங்கள். உள்ளேயிருந்து காதல் உதிரும் !  

இவ்வளவு அழகான காதலை பலரும் விமர்சிக்கக் காரணம் என்ன ? வெறுக்கக் காரணம் என்ன ? பதட்டப்படக் காரணம் என்ன ? அது தீண்டக் கூடாத விஷயம் என பதறக் காரணம் என்ன ?

முக்கியமான விஷயம், உண்மைக் காதலுக்கு இடையே வளரும் காதல் போன்று தோற்றமளிக்கும் களைகள் ! 

காதலிக்க மறுத்த காதலியை வெட்டிக் கொன்றான் காதலன்’, ‘காதல் ஜோடி தற்கொலை’, ‘காதலித்த பெண் மண்ணெண்ணை ஊற்றிப் படுகொலை’, ‘காதலித்த நாலே மாதத்தில் விவாகரத்துஎன்றெல்லாம் வரும் தகவல்கள் காதலைக் கொச்சைப்படுத்துகின்றன. அதனால் தான் உண்மையான காதலைக் கூட சமூகம் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது.  

இளைஞர்கள் பல வேளைகளில்உடல் ரீதியான ஈர்ப்பைக் கண்டு இதுதாண்டா காதல் என நினைத்து விடுகிறார்கள். அப்புறம் உடல் சிந்தனைகளிலேயே மூழ்கி நீச்சலடிக்கவும் செய்கிறார்கள்.  

காமநினைவுகளின் போது மூளையின் குறிப்பிட்ட பகுதி தூண்டப்படுகிறது. கோகைன் போன்ற போதைப் பொருளை உட்கொண்ட மூளையும், காம சிந்தனை நிறைந்த மூளையும் ஒரே போல இருக்கும். அது உண்மையான நபரைப் பார்க்காமல், இச்சையை  நோக்கியே சிந்தனையைச் செலுத்தும்என்கிறார் ஜூடித் ஆர்லோஃப் எனும் உளவியல் மருத்துவர் மற்றும் எழுத்தாளர். 

காமம் ஒரு நபருடைய மேனி எழிலைப் பார்த்து வருவது. கட்டுமஸ்தான உடலையோ, நளினமான உடலையோ பார்த்து தூண்டபடுவது. வந்திருக்கிறது காதலா, இல்லை ஈர்ப்பா என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் இதை தொடரலாமா, அல்லது விடலாமா என முடிவெடுக்க முடியும்.

உடலையும், அழகையும் மட்டுமே உங்களுடைய கண்கள் பார்க்கிறதா ? சாதாரணமா பேச முடியலையா ? அவிழ்த்து விடப்பட்ட ஆட்டுக் குட்டிகளைப் போல உங்கள் பார்வை அழகுப் பிரதேசங்களில் இலக்கில்லாமல் ஓடித் திரிகிறதா ? அது காதலல்ல. உடல் ஈர்ப்பு !

பேசிக்கொண்டிருப்பதை விட சில்மிஷம் சுவாரஸ்யமாய் இருக்கா ? பாலியல் சிந்தனைகள் எப்போதும் இருக்கா ? உங்கள் பேச்சிலும், மெயிலிலும், எஸ்.எம்.எஸ்சிலும்   பாலியல் சார்ந்தவையே ஆக்கிரமித்திருக்கிறதா ? உஷார் ! உங்கள் காதல் இனக்கவர்ச்சியின் சிக்னலில் இருக்கிறது !

பேசும்போ எப்படிப் பேசறீங்க ? “வானவில்லைக் குறுக்காக வெட்டி ரிப்பனாகக் கட்டும் விஷயங்களையா ?” அல்லது யதார்த்தமான பிரச்சினைகள், நிகழ்வுகளையா ? வெறும் கற்பனைக் கயிறில் பட்டம் விட்டால், அது உண்மைக் காதலல்ல !


உண்மையான காதலில் நட்பு நிச்சயம் உண்டு. ஒருவேளை உங்கள் காதலில் நட்பின் அம்சம் நீர்த்துப் போயிருந்தால், அந்தக் காதலைக் கொஞ்சம் அவசரமா பரிச்சீலனை பண்ணுங்கள்.  

உண்மையான அன்பு இணைந்து நேரம் செலவிட விரும்பும். ஆனால் அது பாலியல் சார்ந்தவையாய் இருப்பதில்லை. பேசிப் பேசி நேரம் போவதே தெரியாது !  ஆனால் அது பாலியல் சார்ந்த பேச்சாய் இருக்க வேண்டுமென்பதில்லை ! 

அடுத்தவருடைய உணர்வுகளை, சிந்தனைகளை, விருப்பங்களை, சோகங்களையெல்லாம் அது காது கொடுத்துக் கேட்கும். உண்மையான பரிவுடன்ஆலோசனைகள் சொல்லும். உண்மையில் அடுத்த நபருடைய இடத்தில் தன்னை வைத்துப் பார்ப்பதில் காதல் தனது உண்மை முகத்தை வெளிக்காட்டும்.

அடுத்தவரை வாழ்வில் முன்னேறச் செய்ய வேண்டுமென ஊக்கப்படுத்துவதையும், தொடர்ந்து ஆதரவு நல்குவதையும் காதல் சிறப்புறச் செய்யும். “எக்ஸாம் கெடக்குது.. வாடா சினிமா போலாம்என்பது உண்மைக் காதலல்ல ! “நல்லா எக்ஸாம் எழுது, பேனா பென்சில் எடுத்துட்டியா ? படிச்சியா ?” என அக்கறையாய் விசாரிப்பதில் அது மலரும்.

அதேபோல தப்பான காதல் குடும்பத்தினரை விட்டு விலகியே இருக்கத் தூண்டும். வெளிப்படையாய் இருக்க மறுக்கும் காதலுக்குள் சில மர்மங்கள் இருக்கலாம் !

மால்கம் கிளாட்வெல் தனதுபிளிங்க்எனும் நூலில் குறிப்பிடும் விஷயம் சுவாரஸ்யமானது.  நம்முடைய உள்ளுணர்வு ஒரு விஷயத்தை முந்திரிக் கொட்டை மாதிரி முன்னால் வந்து எச்சரிக்கும் இல்லையா ? “அது அக்மார்க் உண்மை, அதன் படி நடந்துக்கோங்கஎன்பதை அவருடைய நூல் வலுவாக முன்வைக்கிறது ! “பார்ட்டி சரியில்லையேஎன உள்மனம் எச்சரித்தால் உடனே ஒரு முற்றுப்புள்ளி போட்டு விடுங்கள் ! 

உண்மை கசக்கும் ! ஆனால் நிலைக்கும் !” காதலைப் பொறுத்தவரை சிக்கல் பொய்யில் துவங்கும். “எப்படியாவது ஆளைக் கவுக்கணும்பாஎன பொய்கள் சரசரவென ஓடி வரும். கல்யாணத்துக்கு அப்புறம் சாயம் வெளுக்கும். அது தான் காதலில் விழுகின்ற முதல் ஓட்டை. ஓட்டை விழுந்த படகு பயணத்துக்கு லாயக்கற்றதாகிவிடும். நம்பிக்கை உடைவதைப் போல உறவுகளிடையேயான விரிசல் வேறு இல்லை !

உண்மையான காதலுக்கு சில அற்புதமான குணாதிசயங்கள் உண்டு !  உண்மைக் காதல் நிஜங்களை அதன் உண்மையான இயல்புகளோடு ஏற்றுக் கொள்ளும் ! முரண்டு பிடிக்காது !  உண்மைக் காதல் அடுத்தவருடைய வலிகளில் துடிக்கும், வளர்ச்சியில் பறக்கும், தோல்வியில் துவளும். அடுத்த நபர் விலகிவிட்டாலும் கூட !

உண்மைக் காதல் ஒரு நீண்டகால ஒப்பந்தம். தற்காலிகத் தேவைகளுக்கான அடைக்கல நிழலல்ல ! 

காதல் நமது தோளில் உட்கார்ந்திருக்கும் பறவை போல என்பார்கள். இறுகப் பிடித்தால் இறந்து விடும். பிடிக்க நினைத்தால் பறந்து விடும். சுதந்திரமாய் விட்டால் தோள்களிலேயே தஞ்சமடையும் ! காதலனும், காதலியும் சுதந்திரமாய் உணர்வது காதலில் மிக முக்கியம். !

காதல் என்பது அன்பின் நிலை. அந்த அன்பு நிரம்பியிருப்பவர்கள் மற்றவர்கள் மீதும் அன்பும் கரிசனையும் காண்பிப்பார்கள். அடுத்த நபரிடம் மரியாதை செலுத்துவார்கள். செயல்களில் பணிவும் நாகரீகமும் மிளிரும் ! மன்னிப்பு மலரும் ! ஈகோ விடைபெறும். இவையெல்லாம் இல்லையேல் உள்ளே உள்ள அன்பு உண்மையா ? என கேள்வி எழுப்புங்கள் ! 

ஒரு சின்னக் கதை ! உயிருக்குள் உயிர் பொதிந்த காதலர்கள் அவர்கள். எல்லா காதலர் தினத்திலும் காதலிக்கு ஸ்பெஷல் பூங்கொத்தை பரிசளிப்பான் காதலன். காதல் வளர்ந்து திருமணமானது ! வருடங்கள் வளர வளர காதலும் வளர்ந்தது ! பூங்கொத்தும், பிரியமும்  தொடர்ந்தது. இந்தக் காதலை மரணம் கூட பிரிக்கக் கூடாதென மன்றாடினர் இருவரும். ஆனால் ரணத்தின் தேரேறி மரணம் ஒருநாள் வந்தது. காதலன் மறைந்தான், காதலி உறைந்தாள் !  

அடுத்த காதலர் தினம் துயரத்துடன் வந்தது. அவளுடைய அழுகை அணை உடைத்தது. அவனில்லாத முதல் காதலர் தினம் அது ! படுக்கையில் புரண்டு கண்ணீர் விட்டாள். திடீரென கதவு தட்டும் ஓசை. வாசலில் பூங்கொத்துடன் ஒருவன். பூங்கொத்தை வாங்கினாள். இறந்து போன காதலன் அனுப்பியிருந்தான். பூங்கொத்தில் ஒரு வாசகம். “மரணம் உயிரைத் தான் பிரிக்கும், காதலையல்லநான் உன்னை நேசிக்கிறேன்”.

அவளுக்கோ கோபம். பூ அனுப்பிய கடைக்காரரிடம் சென்றாள். “வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறாயாஎன சீறினாள். அவன் நிதானமாய்ச் சொன்னான்.

அம்மா, உங்க வீட்டுக்காரர் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே ஒரு அக்ரீமென்ட் போட்டுகிட்டாரு. எல்லா காதலர் தினத்துக்கும் உங்க வாசலில் ஒரு பூங்கொத்து வைக்கச் சொல்லி பணம் கொடுத்தாரு. ஒருவேளை நான் நேரடியா கடைக்கு வந்து பூ தேர்வு செய்யலேன்னா, நான் இறந்துட்டேன்னு அர்த்தம். ஆனாலும் நீ பூங்கொத்து கொடுக்கிறதை நிறுத்தக் கூடாது. ஒருவேளை மரணம் வந்து அவளையும் சந்தித்தால். கடைசியாய் ஒருமுறை அவள் கல்லறையில் பூங்கொத்தை வை. எப்போதும் கடிதத்தில் தவறாமல் எழுதுமரணம் உயிரைப் பிரிக்கும், காதலையல்ல -! ன்னு 

இதாம்மா நடந்தது ! அவன் சொன்னான். அவள் அழுதாள். அவளுடைய கண்ணீர்துளிகள் காதலில் கரைந்து பெருமிதம் அடைந்தன !  உண்மைக் காதல் ஆழமானது ! காதலின் உண்மை வேர்களில் தெரியும். பூக்களில் அல்ல. போலிகளைப் புறக்கணியுங்கள் ! 

உயிரில் உலவும் உண்மை

அதுவே காதலின் தன்மை !

தன்னம்பிக்கை : மன்னிப்பு மகத்துவமானது !

வீல் சேரில் அமர்ந்திருந்தாள் அந்த ஐந்து வயதுச் சிறுமி கேய் லீ ஹேரியட். இடம் அமெரிக்காவின் பாஸ்டன் நகர நீதிமன்றம். 2003ம் ஆண்டில் அவளுக்கு மூன்று வயதாக இருக்கும்போது தான் அந்தத் துயரம் நடந்தது. ஒரு நாள் சகோதரியுடன் உற்சாகமாய்ப் பாட்டுப் பாடிக்கொண்டிருந்த போது மூன்று இரக்கமற்ற துப்பாக்கிக் குண்டுகள் எங்கிருந்தோ பறந்து வந்தன. அவளுடைய முதுகெலும்பை உடைத்தன. பறவைக்கு வீல் சேர் வாழ்க்கையானது. நீதிமன்றத்தில் அவளுக்கு முன்னால் நின்றிருந்தான் இருபத்து ஒன்பது வயதான ஆண்டனி வாரன். நீதிமன்றம் அவனைக் குற்றவாளி என தீர்ப்பிட்டது.  

சிறுமி கேய் அவனருக்கில் சென்றாள். திடீரென தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். பார்த்தவர்களெல்லாம் கலங்கினார்கள். பின் சிறுமி அவனிடம் சொன்னாள், “நீங்கள் செய்தது தவறு. ஆனாலும் உங்களை நான் மன்னிக்கிறேன்”. ஐந்து வயதுச் சிறுமியின் அந்தச் செயல் அந்த நீதிமன்றத்தையே நிலைகுலைய வைத்தது. பார்த்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் நெகிழ்ந்தார்கள். அதுவரை சுட்டவன் மீது கொடும் பகையுடன் இருந்த அவளுடைய தாயும் உடனடியாக அந்த நபரை மன்னித்தார் ! இந்த நிகழ்வு அமெரிக்காவின் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி பலரையும் தொட்டது.

மன்னிப்பு எனும் வார்த்தை மனுக்குலத்துக்கே உரிய  மகத்துவமானது. மிகவும் எளிதாகச் செய்யக் கூடிய இந்தச் செயலைச் செய்வதில் தான் இன்று பலருக்கும் உலக மகா தயக்கம். அதனால் தான் நமது வாழ்க்கை சண்டை, அடிதடி, வெறுப்பு, கோபம், நோய்கள் என துயரத்தின் தெருக்களில் நொண்டியடிக்கிறது.

ஒருவர் உங்களைப் பற்றி ஏதோ தவறாகச் சொல்லி விட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நபர் மீது நீங்கள் கோபம் கொள்ளும்போது உங்களுடைய மனதில் ஒரு கல்லை வைக்கிறீர்கள். அது கனக்கிறது. அந்தக் கோபத்தை மீண்டும் மீண்டும் நினைக்க நினைக்க ஒவ்வொரு கல்லாய் அடுக்குகிறீர்கள். பாரம் கூடுகிறது, உடல் நிலை பாதிக்கிறது. இரத்த அழுத்தம் எகிறுகிறது. எல்லை மீறினால் மாரடைப்பே வந்து விடுகிறது. ஆனால் இந்த நிகழ்வின் துவக்கத்திலேயே நீங்கள் அந்த நபரை மன்னித்து விட்டால் அத்துடன் சிக்கல்கள் எல்லாம் முடிந்து விடும். 

மன்னிக்கத் தெரிந்த மனிதர்கள் ஈகோ எனும் எல்லைக்கு வெளியே நின்று வாழ்க்கையை அதன் அழகியலில் லயிப்பவர்கள். மனிதத்தின் புனிதமான பாதைகளில் பயணிக்கும் பாதங்கள் அவர்களுடையவை. 

மன்னிப்பது கோழைகளின் செயல் என பலரும் நினைக்கிறார்கள். “எதிரி நாட்டு மன்னனைப் போரிட்டு அழிக்கும் பரம்பரை நாம்என மீசை முறுக்குகிறார்கள். உண்மையில் மன்னிப்பது தான் போரை விட வீரமானது. போர் உடல்களைத் தான் வெற்றி கொள்ளும், மன்னிப்பு தான் மனதையே வெற்றி கொள்ளும். இதைத் தான் மகாத்மா சொன்னார், “மன்னிப்பு பலவான்களின் செயல், பலவீனர்களால் மன்னிக்க முடியாது

நீங்கள் ஒரு நபரைப் பார்த்துக் கத்தியால் குத்தினால் அவருக்குக் காயம் ஏற்படும். ஆனால் ஒரு நபர் மீது கோபமாய் இருக்கிறீர்களென்றால் அவருக்கு எதுவும் நேராது. மாறாக அந்தக் கோபம் உங்களுக்குத் தான் கெடுதல் உண்டாக்கும். நீங்கள் யார் மீது கோபமாய் இருக்கிறீர்களோ அவர் இதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார். எனவே மன்னிப்பு என்பது முதலில் உங்களுக்கு நீங்கள் செய்யும் நல்ல செயல் என்பதை உணருங்கள்.

பல வேளைகளில் தவறிழைக்கும் நபர்கள் தவறை உணர்ந்து தட்டுத் தடுமாறி மன்னிப்புக் கேட்பதுண்டு. அப்படிப்பட்டவர்களை நிபந்தனையற்று மன்னியுங்கள். “சே.. இதுல மன்னிப்பு கேக்க என்ன இருக்குஎன்பது போன்ற வார்த்தைகள் நட்பையும், உறவையும் பலமடங்கு இறுக்கமாக்கும்.

சிலர் மன்னிப்புக் கேட்க தயங்குவார்கள். அப்படிப்பட்டவர்களுடன் பழகும்போது எந்த வித்தியாசமும் இல்லாமல் பழகுங்கள். அவர்களை மனதார மன்னித்துவிட்டதைச் செயல்களில் காட்டுங்கள். மன்னிப்புக் கேட்கும் முன்னாலேயே மன்னிப்பது உயர்ந்த நிலை!

இன்றைய மனித உறவின் பலவீனங்கள் பலவேளைகளில் திடுக்கிட வைக்கின்றன.  பெற்றோரை மன்னிக்க மறுக்கும் பிள்ளைகள், பிள்ளைகள் மீது வெறுப்பு வளர்க்கும் பெற்றோர், அரிவாளுடன் அலையும் சகோதரர்கள். வன்மத்துடன் திரியும் தம்பதியர் !. இவை எல்லாவற்றுக்குமான சர்வ ரோக நிவாரணி மன்னிப்பு என்பதை உணர்கிறீர்களா ? 

தவறே செய்யாத  மனிதர்கள் இருந்தால், அவர்கள் மன்னிப்பு வழங்கத் தேவையில்லை. நாம் தவறும் இயல்புடையவர்கள் எனும் உணர்வு நமக்கு இருந்தால் மன்னிப்பு வழங்க மறுப்பதில் அர்த்தமில்லை ! 

மன்னிப்புக் கேட்கும்போதும் அடுத்தவரைக் குற்றம் சாட்டும் மனநிலையுடனோ, பழி போடும் மனநிலையுடனோ, ரொம்பவே தற்காப்பு மனநிலையுடனோ பேசாதீர்கள். “செய்தது தவறு வருந்துகிறேன்… “ எனும் நேர்மையுடன் பேசுங்கள். உடனடியாக மன்னிப்புக் கிடைக்கவில்லையேல் பதட்டப்படாதீர்கள். சில ஈகோ பார்ட்டிகள் மன்னிப்பு வழங்க நேரம் எடுத்துக் கொள்வார்கள் என்பதை மனதில் இருத்துங்கள்.

மன்னிப்பைப் பற்றி மருத்துவம் சொல்வது கதிகலங்க வைக்கிறது. “நீங்கள் ஒரு நபர்மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது. உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது. அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது. அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகிவிடும்  என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

மன்னிக்கும் பழக்குமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள் என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள். “கேம்பைன் ஃபார் பர்கிவ்னஸ் ரிசர்ஸ்சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் தனதுலேர்ன் டு பர்கிவ்” ( மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார். 

மன்னிப்பவர்களுக்கு புற்று நோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிகல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள். மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இதுவே காரணமாம்.

இந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன. “ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்என்கிறது பகவத் கீதை. இஸ்லாம் கடவுளைஅல் கஃபிர்என்கிறது, முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம். “மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாதுஎன்கிறது கிறிஸ்தவம். ஆனால் மதங்களைப் பின்பற்றும் நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது ? விடை தெரிய வேண்டுமெனில் தினசரியைப் புரட்டினாலே போதும் !

மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை. மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது. மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால் பெற்றோர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள். குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும்போது எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும்.

அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும். குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம் கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.

பலவேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம். கோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம். எதிர் நபர் மன்னிப்புக்குத் தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம். அப்படி நினைப்பதன் மூலம் நாம் பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.  

மன்னிப்பு கடந்தகாலத்தின் நிகழ்வுகளை மாற்றாது. ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும். வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ  கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது. உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும்.

மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்.      மன்னிப்புக் கேட்காதவர்களை மன்னிக்க மறக்காதீர்கள். 

உயிரில் உலவும் உள்ளன்பு

மலர்ந்து வருதல் மன்னிப்பு

தன்னம்பிக்கை : எல்லாரும் இப்படித் தானே பண்றாங்க.  

நீங்கள் பல முறை பார்த்திருப்பீர்கள். கூட்டம் கூட்டமாக ஆடுகளை ஓட்டிக்கொண்டு போவார் ஒருவர். அவருக்குப் பின்னால் ஆடுகளெல்லாம் ஒரு தாள லயத்தில் நடந்து போகும். முன்னே செல்லும் ஆடுகள் பின்னால் செல்லும் ஆடுகளுக்கு வழிகாட்டும். முன்னால் செல்லும் ஆடுகள் குப்பையில் இறங்கினால் பின்னால் போகும் ஆடுகளும் குப்பையில் இறங்கும். முன்னால் செல்லும் ஆடுகள் ஓடினால் பின்னால் வருபவையும் ஓடும், நின்றால் நிற்கும். முன்னால் செல்லும் ஆடுகள் தான் பின்னால் வரும் ஆடுகளின் போக்கை நிர்ணயிக்கின்றன. இது நம் எல்லோருக்கும் தெரிந்த சமாச்சாரம். 

இப்போது கொஞ்சம் அமைதியாக நம்முடைய வாழ்க்கையைக் கொஞ்சம் அசைபோட்டுப் பார்ப்போம். நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது. நமது வாழ்க்கையை நாம் தான் நிர்ணயிக்கிறோமா ? இல்லை நமக்கு முன்னால் செல்லும் யாரோ நிர்ணயிக்கிறார்களா ? நிதானமாக யோசித்தால் தெரியவரும் பல விஷயங்கள் நமக்கே வியப்பாக இருக்கும்.

எல்லாரும் சொல்றாங்கஎன்பதனால் தான் எதைப் படிக்க வேண்டும் என முடிவு செய்திருப்போம். எல்லாரும் சொல்கிறார்கள் என்பதனால் தான் எங்கே முதலீடு செய்வது என்பதை முடிவு செய்திருப்போம். நமது வீடு, வேலை, திருமணம், குழந்தை வளர்ப்பு, இலட்சியம் என பல இடங்களில் முன்னால் செல்லும் மக்களுடைய சுவடுகளைத் தான் நாம் பின்பற்றியிருப்போம். அப்படித் தானே ?  

பெரிய பெரிய விஷயங்கள் என்றில்லை. தினசரி வாழ்க்கையில் நடக்கும் சின்னச் சின்ன விஷயங்களில் கூட இப்படித் தான் நடக்கிறது. அலுவலகத்தில் மீட்டிங் நடக்கும். விவாதிக்கப்படும் விஷயம் நமக்கு சுத்தமாய் உடன்பாடில்லாததாய் இருக்கும். ஆனாலும் பெரும்பாலானவர்கள் தலையாட்டினால் நாமும் தலையாட்டுகிறோமா இல்லையா ? 

திடீரென புதிய ஒரு ஃபேஷன் டிரஸ் சந்தைக்கு வரும். பார்த்தால் கண்றாவியாய் இருக்கும். அல்லது கற்காலத்திலேயே தூக்கிப் போட்ட ஒரு பழைய ஃபேஷனின் புதிய வடிவமாய் இருக்கும். உங்களுக்குச் சுத்தமாகப் பிடிக்காது. ஒதுக்குவீர்கள். ஆனால் அங்கும் இங்குமாக அந்த ஆடை கொஞ்சம் கொஞ்சமாய்ப் பயன்பாட்டுக்கு வரும். பிடிக்காத ஆடையைக் கூடஇது லேட்டஸ்ட் ஃபேஷன்யாஎன்று பந்தாவுக்காகவேனும் போட ஆரம்பிப்பீர்கள். கொஞ்சநாளிலேயே அப்படி ஒரு ஆடை நம்மிடம் இல்லை என்பது கவுரவக் குறைச்சல் போலத் தோன்ற ஆரம்பித்துவிடும். 

பிடிக்காத ஒரு விஷயத்தை மற்றவர்கள் செய்கிறார்களே என்பதற்காகச் செய்யத் துவங்கிவிடுகிறோம். நாம் என்ன ஆடை உடுத்த வேண்டும் என்பதை இன்னொருவர் நிர்ணயிக்கிறார் என்பது வெட்கத்துக்குரிய விஷயம் இல்லையா ? நம்முடைய தன்னம்பிக்கை என்னாச்சு ? இந்த ஆடை விஷயம் அப்படியே செருப்பு, செல்போன், வாட்ச் என எல்லா விஷயத்திலும் பொருந்திப் போகிறதா இல்லையா ?  

இப்படி குருட்டுத் தனமாய் பிறரைப் பின்பற்றும் போக்கு தான் வியாபாரிகளின் துருப்புச் சீட்டு. கருப்பு கலர் சேலை விற்காமல் தேங்கிப் போனால், “அடுத்த மாதம் கருப்புக் கலர் புடவை அணிவது புருஷனுக்கு நல்லதுஎன ஏதோ ஒரு சிந்தாமணி மூலம் சின்னப் புரளி கிளப்பி விடுவார்கள். மக்களும் கருப்புக்காக கடை கடையாக ஏறி இறங்குவார்கள். “ஏங்கா தெரியாதா.. ? அடுத்தமாசம் கருப்பு கலர் துணி போடலேன்னா, புருஷனுக்கு ஆவாதாம்ல்..” என்று சுற்றியிருக்கும் நாலு வீட்டுக்கும் விஷயத்தைப் பற்ற வைப்பார்கள். 

நான் இப்படியெல்லாம் இல்லேப்பா…”  என்று காலரையோ, துப்பட்டாவையோ தூக்கி விடும் ஜாதி நீங்களென்றால் உங்களுக்கு இதோ ஒரு பூங்கொத்து. காரணம் நீங்கள் உலகின் 5% மைனாரிட்டி குழுவில் இருக்கிறீர்கள். இதை நான் சொல்லவில்லை. இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது. உலகின் 95 விழுக்காடு மக்கள் ஆட்டு மந்தைகளாய் தான் இருக்கிறார்களாம். 

எந்த  சூழலில் எப்படி இருக்க வேண்டும் என்பதை மற்றவர்களை வைத்தே முடிவு கட்டுகிறோம். அப்படியில்லாமல் தன்னைத் தானே வழிகாட்டிக் கொள்ள வேண்டுமெனில் ஆழமான தன்னம்பிக்கை வேர்கள் நமக்குள் பதியமிடப் படவேண்டியது அவசியம்.

சாரா பெர்னார்ட் என்றொரு நடிகை இருந்தார். 1844ல் பிறந்த இவர் பிரஞ்ச் நாடக உலகையும் திரையுலகையும் ஒரு காலத்தில் ஆட்சி செய்தவர். ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கடைசிக் காட்சி. உணர்ச்சிபூர்வமாய் குதித்து நடிக்கையில் அவருடைய முட்டியில் காயம்படுகிறது. துரதிஷ்டவசமாக அந்தக் காயம் தீரவேயில்லை. அவருடைய ஒரு காலையே இழக்க வேண்டியதாயிற்று ! புகழின் உச்சியில் கொடிகட்டிப் பறக்கும் காலத்தில் ஒரு காலை இழந்தால் என்னவாகும் ? அத்துடன் அவருடைய கலை வாழ்க்கை அஸ்தமித்தது என நினைத்தார்கள். ஆனால் அவர் அசரவில்லை. மரணம் வரை தனது மயக்கும் குரலாலும், நடிப்பாலும் பிரஞ்ச் உலகையே வசீகர வலைக்குள் வைத்திருந்தார். உலகம் கண்ட பிரமிப்பூட்டும் நடிகைகள் பட்டியலில் எப்போதும் இவருக்கு முதன்மை இருக்கை உண்டு.

கால்களை இழந்தபின் முடங்கிப் போய் மடிந்து போனவர்கள் பல்லாயிரம் பேர் உண்டு. ஆனால் அந்தக் கூட்டத்தில் சேராமல் தனது மனதின் கால்களைக் கொண்டு எழுந்து நின்ற சாரா பென்னட் தான் வரலாற்றில் வந்தமர்கிறார்.

உலகம் எப்போதுமே இப்படித் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. 95 சதவீதம் மக்கள் ஆட்டு மந்தைகளாய் இருக்க, 5 சதவீதம் மக்கள் அவர்களை வசப்படுத்துபவர்களாக இருக்கின்றனர் என்கிறார் பேராசிரியர் ஜென்ஸ் கிராஸ். கூட்டம் கூட்டமா பறக்கும் பறவைகளைப் பார்த்திருப்பீர்கள். யார் வழிநடத்துகிறார்கள் என்று கண்டுபிடிப்பதே கஷ்டம். ஆனால் எல்லாமே ஒன்றைப் பின்பற்றி பறந்து கொண்டிருக்கும். 

 எல்லாரும் இதைத் தான் சொல்றாங்க அல்லது செய்றாங்கஎன்பது ஒரு வகையில் நாம் தனித்து விடப் படக் கூடாதே எனும் அச்ச உணர்விலிருந்தும் எழுகிறது. தோல்வியடைந்து விட்டால் கூட நம்முடைய கூட்டத்தில் பலர் இருக்க வேண்டும் என்பதே பலருடைய எண்ணம்.  

அதற்காக மற்றவர்கள் சொல்வதையெல்லாம் கேட்கவே கூடாது, அறிவுரைகளை  எல்லாம் அழித்து விடவேண்டும் என்பதல்ல. தன்னம்பிக்கை உடைய மனிதராக செயல்பட வேண்டும் என்பதே கவனிக்க வேண்டிய விஷயம். கூட்டம் சொல்கிறது என்பதற்காக ஒரு விஷயத்தைக் கண்மூடித் தனமாகப் பின்பற்றுவதை நிறுத்த வேண்டும். சின்ன பிள்ளைகளுக்கு நாம் வழக்கமாகச் சொல்லும் அறிவுரையார் கூட சேர வேண்டும், யார் கூடச் சேரக் கூடாதுஎன்பது தான். ஆனால் பெரியவர்களானபின் நாமே அதைக் காற்றில் பறக்க விடுகிறோம் என்பது தான் ஆச்சரியம் !

அப்படி இல்லாமல் இருப்பதில் தான் நம்முடைய சிறப்பு பல வேளைகளில் வெளிப்படுகிறது. ஆங்கில இலக்கியம் பற்றிப் பேசினால் ஜான் மில்டன் அவர்களுடையபேரடைஸ் லாஸ்ட்எனும் படைப்பைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. பதினேழாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டு இன்றும் ஆங்கில இலக்கியத்தில் அசையா இடத்தில் இருக்கிறது அந்த நூல். அதை எழுதும்போது மில்டனுக்குப் பார்வையே இல்லை என்பதை அறியும் போது அதிரவைக்கும் வியப்பு எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. 

பேஸ்பால் விளையாட்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? நம்ம ஊர் கிரிக்கெட் போல அமெரிக்காவில் விளையாடப்படும் ஒரு பிரபலமான விளையாட்டு அது. ஜிம் அபோட் என்றொரு சிறந்த வீரர் 1987 முதல் 1999 வரை சிறப்பாக விளையாடிவந்தார். பல கோப்பைகள், சாதனைகள் செய்து பலரை வியக்க வைத்த இவருக்கு பிறவியிலேயே வலது கை இல்லை ! “சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியும்என மக்களுக்கு உற்சாக உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் இப்போது ! 

சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல. மாற்றுத் திறனாளிகள் கூட கூட்டத்தோடு கோவிந்தா போடவேண்டிய கட்டாயம் இல்லை என்பதையே இத்தகைய வியத்தகு மனிதர்கள் நமக்குச் சொல்லித் தருகிறார்கள்.

எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் அளவு கோல் அடுத்தவர்கள் இதைச் செய்கிறார்களா என்பதல்ல. இதைச் செய்யலாமா ? இதைச் செய்தால் என்னென்ன விளைவுகள் வரலாம் ? நன்மைகள் என்னென்ன ? தீமைகள் என்னென்ன ? என ஒரு சின்ன அலசல் வழக்காடுமன்றத்தை மனதுக்குள்ளேயே ஓட்டிப் பாருங்கள். உங்கள் மனம் உங்களுக்கு மிகச் சரியான வழியைக் காட்டும். அந்த வழியில் செல்லுங்கள். அந்த வழி எல்லோரும் நிராகரித்த வழியாகக் கூட இருக்கலாம். எல்லோரும் நடக்கும் வழியில் புதையல் கிடைப்பதும் அரிதே !

ஓடும் கூட்டம் ஓடட்டும்உன்

மனமே உன்னை ஆளட்டும்

தன்னம்பிக்கை : நேரமே கிடைக்கலீங்க

சுத்தமா நேரமே இல்லீங்க..” எனும் வாக்கியத்தைப் பேசாமலோ, கேட்காமலோ ஏதாவது நாள் முடிந்திருக்கிறதா ? நேரம் போதவில்லை எனும் குற்றச்சாட்டு எல்லோரிடமும் இருக்கிறது. எல்லோரும், எப்போதும் எதையோ செய்து கொண்டே இருக்கிறார்கள். கடைகள் நள்ளிரவு தாண்டியும் விழித்திருக்கின்றன. வீடுகளில் விளக்குகள் ஜாமங்கள் கடந்தும் கூட அணைக்கப்படாமல் இருக்கின்றன. சூரியனுக்கு முன்பே சாலைகளில் மக்கள் வந்து விடுகிறார்கள். 

மக்கள் ரொம்பவே பிஸி. எவ்வளவு தாங்கன் பிஸியாய் இருந்தாலும் கடைசியில்நேரம் கிடைக்கலஎனும் புராணம் தான். “நேரம் பறந்து தான் போகும். ஆனால் அதை ஓட்டற பைலட் நீங்க தான்என்கிறார் மைக்கேல் ஆட்ஷர்.

கொஞ்சம் உங்களோட வாழ்க்கையைக் கொஞ்சம் ரிவைண்ட் செய்து பாருங்களேன். உங்களுடைய நேரமெல்லாம் எப்படிப் போகிறது ? ஒரு வேலை முடிந்த அதே இடத்தில் அடுத்த வேலை பிள்ளையார் சுழி போடுகிறது. நிம்மதியாய் ஒரு காபி குடிக்க முடிவதில்லை, அப்போதும் அடுத்த வேலை குறித்த நினைவுகள் தான். வார இறுதி வந்தால் வீட்டிற்காய் செய்ய வேண்டிய ஆயிரத்தெட்டு வேலைகள் வரிசையாய்க் காத்திருக்கும். 

ஆனால் சிலரைப் பாருங்கள். பெரிய பெரிய பதவியில் இருப்பார்கள். வார இறுதியில் ஹாயாக குடும்பத்தோடு பீச் போவார்கள். காலையில் நாயையும் கூட்டிக் கொண்டு ஜாகிங் போவார்கள். அவர்களுக்கும் ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன. ஆனால் அவர்களால் எல்லாவற்றையும் சமாளித்து எப்படி ஜாலியாகச் சுற்ற முடிகிறது ?. அதைப்பற்றிப் பேசுவதைத் தான்  டைம் மேனேஜ்மெண்ட் என்கிறார்கள். நேர மேலாண்மை என்று தமிழில் அழைக்கப்படும் இந்த விஷயம் சரியான வேலையை, சரியான நேரத்தில் செய்து முடிக்க வழிகாட்டுகிறது. அதில் முக்கியமான சில தகவல்களைப் பார்ப்போம்.

எவ்வளவுதான் ஓடியாடி வேலை செய்தாலும் கடைசியிலஅடடாஇந்த வேலையைச் செய்யாம விட்டோமே. அதைச் செஞ்ச நேரத்துல நான் இதைச் செய்திருக்கலாம்எனும் ஒரு ஏமாற்றம் ஏற்படுவது இயல்பு. இதைச் சரி செய்யசெய்ய வேண்டிய பணிகளின் லிஸ்ட்ஒன்றைத் தயாராக்க வேண்டும். அடுத்த நாளைக்கான பணிகளின் பட்டியலை முந்தின நாள் இரவிலேயே தயாராக்கி வைப்பது நல்லது. 

இப்போ அந்தப் பட்டியலிலுள்ள விஷயங்களை வரிசைப்படுத்த வேண்டும். எது அவசரமான வேலை, எது அவசியமான வேலை, எது முக்கியமற்ற வேலை என அந்த பட்டியல் இருக்க வேண்டும். கடைசி இடம் முக்கியமற்ற வேலைகளுக்கு. அதையும் முடித்தபின், பட்டியலிலுள்ள விஷயங்களையெல்லாம்சின்னச் சின்னசெயல்களாக மாற்றி எழுத முயலுங்கள். ஒவ்வொரு சின்னச் சின்ன வேலையும் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை வருவதாக இருந்தால் நல்லது. “ஐயாவுக்கு ஞாபக சக்தி கெட்டிஎன பந்தா விடாமல், இந்த விஷயங்களையெல்லாம் ஒரு பேப்பரில் எழுதிப் பழகினால், நீங்கள் டைம் மேனேஜ்மெண்டின் முக்கியமான ஒரு விஷயத்தைக் கற்றுத் தேர்ந்தாகிவிட்டது என்று பொருள். 

ஒரு வேலையைச் செய்யும் போது, ஒரு வேலையை மட்டும் செய்ய வேண்டும். நாம் பெரும்பாலும் அப்படி செய்வதில்லை. ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் போதே மெயில் வாசிப்போம், இணையத்தில் உரையாடுவோம், ஃபேஸ் புக்கில் புரள்வோம்,  விரலில் எஸ்.எம்.எஸ் இருக்கும், காதில் போன் இருக்கும், மனதில் சிந்தனைகள் இருக்கும். இப்படி, ஒரு வேலை செய்வதாக நாம் சொல்லிக் கொள்ளும் நேரத்தின் பெரும்பகுதியை மற்ற சில்லறை வேலைகளே பிடுங்கிக் தின்னும். இதை விட்டு விட்டு, ஒரு நேரத்தில் ஒரே ஒரு வேலையை மட்டும் செய்தால் உண்மையிலேயே வேலை சீக்கிரம் முடியும், சரியாகவும் முடியும்.  

சில வேலைகளைத் தூக்கி ஓரமாகவே போட்டு வைப்போம். அது ஒரு பெரிய தலைவலியாக மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட வேலைகளை சின்னச் சின்ன பாகங்களாகப் பிரித்து அதில் ஒரு பாகத்தை முதலில் செய்ய ஆரம்பியுங்கள். அது உங்களை ரொம்பவே ரிலாக்ஸாக வைக்கும்.

யார் என்ன வேலை கொடுத்தாலும் சரிங்கையா.. என தலையாட்டிக் கொண்டே வாங்கிக் குவிக்காதீர்கள். உங்கள் நேரமெல்லாம் புதை குழியில் போய் விடும். உங்களுக்கு நேரமில்லையேல்சாரி டைம் இல்லைஎன சிம்பிளாக மறுத்து விடுவது உசிதம்.

அதேபோல செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் ஒரே நேரத்தில் ஆரம்பிப்பதும் ஆபத்தானது. இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்தால் இரண்டுமே உங்களைக் கவிழ்த்து விட வாய்ப்பு உண்டு. இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்வது பெரும்பாலும் நேர விரயத்தில் தான் முடியும் என்கின்றன ஆராய்ச்சிகள்.

உக்காந்தா சீட்டை விட்டு எழும்பவே மாட்டான்என்று சிலரைப் பற்றிக் கூறுவார்கள். அதெல்லாம் டேஞ்சர். வேலைக்கு நடுவே இடையிடையே ஓய்வு எடுப்பது வேலையில் சுறுசுறுப்பையும், கவனத்தையும், தெளிவையும் தரும் என்கின்றனர் உளவியலார் 

எல்லா நேரத்திலும் எல்லா வேலைகளையும் செய்ய முடியாது. காலையில் உங்களுக்கு உற்சாகமாய் இருக்கும் நேரத்தில் முக்கியமான வேலைகளைச் செய்யுங்கள். மூணு மணிக்கு தூக்கம் வரும். அந்த நேரத்தில் அங்கும் இங்கும் நடந்து செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யுங்கள். இது உங்களுடைய எனர்ஜிக்கேற்ப உங்களை இயக்கும்.

நீங்கள் தாமதமாகலாம். ஆனால் டைம் எப்பவுமே கரெக்டான நேரத்துக்கு வந்து விடும்என்கிறார் பெஞ்சமின் பிராங்கிளின். ஒரு வேலையைத் திட்டமிடுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒரு டைம் லிமிட் செட் பண்ணிக்கொள்ளுங்கள். “வாசிப்புன்னு ஒரு செயல் இருந்தால் அதற்கு ஒன்றோ, இரண்டோ மணி நேரம் என உங்களுடைய வசதிப்படி நேரம் ஒதுக்குங்கள். ஒவ்வொரு வேலையையும் இவ்வளவு நேரத்தில் செய்து முடிப்பேன் என ஒரு எல்லை உருவாக்கி அந்த நேரத்துக்குள் அந்த வேலையை செய்து முடியுங்கள். 

எப்போதுமே பிஸி பிஸி என சொல்லிக் கொண்டிருக்கும் நபர்களுடைய வேலைகளைக் கொஞ்சம் கவனமாய்ப் பாருங்கள். அரட்டை, சினிமா, பாட்டு, போன், மெயில் என ஏகப்பட்ட நேரத்தை தேவையில்லாமல் அழித்துக் கொண்டிருப்பார்கள். நம்மிடம் இருப்பது ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம் மட்டுமே. செலவிடாத நிமிடங்கள் சேமிக்கப்படும் நிமிடங்கள் என்பது நினைவில் இருக்கட்டும்.

எல்லாத்தையும் நான் தான் செய்யணும்என சர்வத்தையும் தன் தலையில் அள்ளிப் போடுவது சிலருடைய பழக்கம். அடுத்தவர்களிடம் வேலை வாங்குவது ஒரு கலை. அதைக் கற்றுக் கொள்ளுங்கள். யாரிடம் என்ன வேலை கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுங்கள். கொடுத்தபின் அது அவர்களுடைய வேலையாகிவிடும். அதில் போய் மூக்கை நுழைத்து நேரத்தை அழிக்காதீர்கள்.

காத்திருக்கும் நேரம் சுத்த வேஸ்ட் என்பது தான் பலருடைய எண்ணம். திட்டமிட்டால் அந்த நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட முடியும். ஒரு ரிப்போர்ட் வாசிக்க வேண்டியிருக்கலாம், ஐடியாக்கள் கண்டு பிடிக்க வேண்டியிருக்கலாம், கணக்கு போட வேண்டியிருக்கலாம். இப்படிப்பட்ட வேலைகளை வெயிட்டிங் டைமில் அமைத்துக் கொண்டால் நேரத்தை மிச்சப்படுத்தலாம். “அடடா.. ஒரு மணி நேர வெயிட்டிங்கா, ஒரு பேப்பரும் பேனாவும் இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமேன்னு கடைசி கட்டத்துல  யோசிக்காதீங்க !

நாம எதையும் ஒழுங்கு படுத்தி வைக்காததால் நிறைய நேரம் வீணாகிறது என்கிறார்கள் வல்லுநர்கள். அலுவலகத்தில் ஒரு தகவலாகலாம், வீட்டில ஒரு பொருளாகலாம். எங்கே வெச்சேன்னு தெரியாம குப்பையைக் கிளறுவதில் எக்கச்சக்க நேரம் கரைஞ்சு போகுதாம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இடம் உண்டு. அது அங்கங்கே இருந்தால் நேரம் ரொம்ப மிச்சமாகும் என்பது சிம்பிள் அட்வைஸ்.

எல்லாத்துலயும் பெர்பெக்டா இருக்கணும்ன்னு எதிர்பார்ப்பது நமக்கு தேவையற்ற டென்ஷனைத் தான் தரும். சிலர் ஷூவுக்கு பாலீஷ் போடவே ஒரு மணி நேரம் எடுத்துப்பாங்க. அப்படியே அது தேவையான்னு யோசிங்க. அந்த வேலையை அஞ்சு நிமிஷத்துல முடிச்சா உங்களுக்கு எவ்ளோ நேரம் கிடைக்கும் ! அதுல என்னென்ன வேலைகள் செய்யலாம்ன்னு யோசிங்க. குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடித்தால், அப்படியே உங்கள் கையை வளைத்து உங்கள் முதுகைத் தட்டிக் கொடுங்கள். அப்படியே கொஞ்சம் ரிலாக்ஸ் எடுத்து, தேனீர் அருந்தி அந்த இடைவேளையைக் கொண்டாடுங்கள். 

கடைசியாக முக்கியமான ஒரு விஷயம். வேலைகளையெல்லாம் ஒழுங்குபடுத்தி வரிசையா செய்யும்போ உங்களோட வாழ்க்கையை மறந்துடாதீங்க. ஓய்வு, உணவு, உடற்பயிற்சி, குடும்பத்தோடு செலவிடும் நேரம், தூக்கம் எல்லாம் நிறைவா இருக்கட்டும்.

மணித்துளி என்பது காலக் கணக்கு

சரியாய் செலவிடு வெற்றிகள் உனக்கு.

தன்னம்பிக்கை : குறை சொல்தல் வேண்டாமே !

முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்ட தங்கதேசத்தில் வாழ நேர்ந்தால் கூட, “சேஎங்கே பாத்தாலும் மஞ்சளா இருக்கேஎன குறை சொல்லும் மக்கள் இருக்கிறார்கள் என்கிறார் லார்ட் ஜெஃப்ரி. குறை சொல்தல் சர்வதேசக் கெட்ட குணம். 

சிலர் மனிதர்களைக் குறி வைத்து குறை சொல்வார்கள். சிலர் மனிதர்கள் என்றில்லை, விலங்குகள், தெய்வங்கள், அஃறிணைப் பொருட்கள் என எல்லாவற்றையும் குறை சொல்வார்கள். இதொன்றும் இன்று நேற்று தோன்றிய சமாச்சாரமல்ல. ஆதி மனிதன் ஆதாமே பழத்தைச் சாப்பிட்டு விட்டுநீர் தந்த இந்த ஏவாள் தான் பழத்தைக் கொடுத்து சாப்பிடச் சொன்னாள்என்று தானே கடவுளிடம் சொன்னார் !

நம்முடைய ஒரு நாள் வாழ்க்கையைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம். காலையில் எழும்பி அலுவலகத்துக்குப் புறப்படும் அந்த சின்ன இடைவெளியிலேயே குற்றம் சொல்ல ஆரம்பிக்கிறோம். பின் அலுவலகம், போகும் வழி, வரும் வழி என எல்லா இடங்களிலும் அந்த குறை சொல்தல் தொடர்கதையாகிறது.  

குறை சொல்வதால் மனதுக்கு ஒரு இனம்புரியாத திருப்தி கிடைக்கிறது. அதனால் தான் பலரும் குறை சொல்கிறார்கள்என்கிறது உளவியல். குறை  சொல்லுதல் மனதுக்கு தற்காலிகமான ஒரு இளைப்பாறுதலைத் தருகிறது. அதே வேளையில் பலரைக் காயப்படுத்துகிறது. 

எதையாவது அடைய வேண்டுமென முயல்கிறோம். தொடர்ந்து அதை நோக்கிப் பயணிக்கிறோம். ஆனால் முடியவில்லை. நமது இயலாமையை ஒப்புக்கொள்ள நமது ஈகோ இடம் கொடுக்காது. சட்டென பழியைத் தூக்கி இன்னொருத்தன் தலையிலே போட்டு விட்டால் வேலை முடிந்தது ! அப்படிச் சொல்வதால் உண்மையான தோல்வியின் காரணங்கள் பிடிபடுவதே இல்லை. தோல்விக்கான காரணமே தெரியாவிடில் வெற்றிக்கான பாதையை எப்படித் தேர்வு செய்வது ?

குறை சொல்வது மனிதனுடைய குறைபாடு !  அடுத்தவர்களை மட்டம் தட்டுவதன் மூலம் தனது உயரத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சி இது. ஆழ்மனதில் உறைந்து கிடக்கும் நமது விரோதத்தின் வேர்களே இந்த குறையெனும் முட்களை விளைவிக்கின்றன.

பிடிக்காதவர்கள் மீது தான் குறையும், குற்றமும், விமர்சனமும் போர்த்தப்படுகிறது.  உன் மேல எனக்கு அன்பு ரொம்ப ஜாஸ்தி, அதனால எப்போதும் குறை சொல்வேன்என்று யாரும் சொல்வதில்லை. அடுத்தவருடைய வளர்ச்சியோ, நிம்மதியோ, புகழோ, அழகோ மனசுக்குள் விதைக்கும் பொறாமை விதைகள் தான் பெரும்பாலும் குறைகளாய் முளை விடும். தன்னிடம் இல்லாத ஒன்றின் பள்ளத்தாக்கை நிரப்ப முயலும் மனதின் விகார முயற்சிகளில் இதுவும் ஒன்று.

குறை சொல்தல் பயத்தின் வேர்களிலிருந்தும் முளைப்பதுண்டு. குறிப்பாக அலுவலக சூழல்களில் தனது வேலையைத் தக்க வைத்துக் கொள்ளவும் , தங்களுடைய புரமோஷன், வளர்ச்சி போன்ற விஷயங்களுக்கும் அடுத்தவர்களை அழிக்கும் விமர்சனங்கள் எழுவதுண்டு. 

நம்முடைய பொறுப்புகளை விட்டுத் தட்டிக் கழிக்க விரும்பும் போதும் முன்னே வருவது இந்தக் குறை சொல்தலும், சாக்குப் போக்கும் தான். “வயிறு வலிக்குதுநான் ஸ்கூலுக்குப் போகலஎன சிணுங்கும் சின்ன வயதுப் பையன் ஞாபகத்துக்கு வருகிறானா ? 

ஈகோ எனும் ஆலமரத்தின் கிளைகள் இந்தக் குறை எனும் விழுதுகள். ஈகோ இருக்கும் மனிதர்கள் மனிதர்கள் பிறரிடமுள்ள குறைகளை பூதக்கண்ணாடி கொண்டு பார்த்துத் திரிவார்கள். இல்லாததை இருப்பது போலச் சோடித்து மகிழ்வார்கள். ஈகோவை விலக்க வேண்டுமென முடிவெடுத்தால் இந்த கெட்ட பழக்கம் உங்களை விட்டுப் போய்விடும்.

பிறருடைய கவனத்தை ஈர்ப்பதற்காகவும் சிலர் குற்றம் குறைகளை அள்ளி விடுவதுண்டு. பிறர் தன்னைக் கவனிக்க வேண்டும் எனும் ஆர்வம் அவர்களுக்கு. உளவியல் இதை, தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு என்கிறது.

தன்னை புத்திசாலியாய்க் காட்டிக் கொள்ளவும் சிலர் குறை சொல்வதைக் கையில் எடுப்பதுண்டு. அடுத்தவர்களையோ, அவர்களுடைய செயல்களையோ விமர்சித்து, குறை சொல்லும்போது தன் தலைக்கு மேல் ஒரு ஒளி வட்டம் உருவாவது போல் கர்வம் அவர்களுக்குள் நுழையும்.

இப்படி குறை சொல்வது நமது வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டிருக்கிறது. ஒரு டிராபிக் சிக்னலில் கூட குறை சொல்லாமல் நம்மால் இருக்க முடிவதில்லை. ஹோட்டலில் வெயிட்டர் பத்து நிமிடங்கள் நமது டேபிளுக்கு வரவில்லையேல் குறையும், குற்றமும் சொல்ல வாய் துறுதுறுக்கிறது. 

வாய்ப்பு வந்து வாசல்க்கதவைத் தட்டும்போது கூட சத்தமா இருக்கே என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள் என்கிறார் ஆஸ்கர் வைல்ட். 

குறை சொல்வது நமது வளர்ச்சியை நாமே குழி தோண்டிப் புதைக்கும் செயல். குறை சொல்வதை விட்டு வெளியே வரவேண்டுமெனில் முதலில் நாம் குறை சொல்லும் பார்ட்டிகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் கேளுங்கள் நீங்கள் குறை சொல்லும் பார்ட்டியா என உண்மையான பதில் கிடைக்கும். இல்லையேல் நெருங்கிய நண்பர்களிடம் கேளுங்கள்.

குறை சொல்வது உங்களுக்கு எந்த நன்மையையும் தந்து விடப் போவதில்லை. இந்தப் பழக்கத்தால் என்ன நன்மை ஏற்பட்டது என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பெரும்பாலும்உங்களுடைய நேரமும், உங்கள் நண்பர்களுடைய நேரமும் வெட்டியாய் செலவானது தானே மிச்சம் ? 

உங்களை யாராவது குறை சொன்னாலோ, நேர்மையற்று விமர்சித்தாலோ நீங்கள் அதைக் கைதட்டி ரசிப்பீர்களா என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இல்லை என்பது தானே உங்கள் பதில் ?. அதே மனநிலைதான் உங்களால் கிண்டலடிக்கப்படும் நபருக்கும் இருக்கும் என்பதை உணருங்கள்.  

பிறரை ஏற்றுக் கொள்ளும் மனம் இருந்தால் குறை சொல்தல் விலகிவிடும்.   பிறரை ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டுமெனில் முதலில் நம்மை நாமே ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே முதலில் உங்களை உங்கள் இயல்புகளோடே ஏற்றுக் கொள்ளும் தன்னம்பிக்கையைக் கொண்டிருங்கள்.

குறை சொல்தல் உறவுகளிடையேயான பிணைப்பை உடைத்து விடும். பல விவாகரத்துகளுக்கே இந்தக் குறை சொல்தல் காரணமாகி விடுகிறது. அன்பு உருவாகும் இடத்தில் குறை சொல்வது இருப்பதில்லை. ஆத்மார்த்தமான அன்பை உள்ளத்தில் தேக்குங்கள் அடுத்தவர்களைக் குறை சொல்லும் பழக்கம் ஓடியே போய்விடும். 

குறையைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பவர்கள் அந்த குறைகளைப் போக்கும் வழியைப் பற்றிச் சிந்திக்க மறந்து போய் விடுகிறார்கள். இருட்டைப் பற்றியே குற்றம் சொல்லிக்கொண்டு இருக்காமல் ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தும் வழியைப் பாருங்கள் என்கிறார் கன்ஃபூஷியஸ்.

இருப்பதை வைத்து மகிழ்வாக வாழும் மனநிலை உடையவர்கள் பெரும்பாலும் குறை சொல்வதில்லை. அவர்கள் மகிழ்வாக வாழும் வழியை யோசிப்பார்கள். எதைத் தேடுகிறோமோ அதுமட்டுமே நமக்குக் கிடைக்கும் !

கடின உழைப்பாளிகள் குறை சொல்வதில் தங்கள் நேரத்தை வீணடிப்பதில்லை.  சோம்பேறிகள், கடின உழைப்பைத் தவிர்ப்பதற்காக குறை சொல்லும் பாணியைக் கையாள்கிறார்கள். குறை சொல்வது எதிர்மறை சக்தி. அதன் விளைவுகள் எதிர்மறையாகவே இருக்கும். தான் சரி என நிரூபிக்க மற்றவை எல்லாம் தவறு என மதிப்பிடும் மனநிலை மனதின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு எதிரி.

குறை சொல்வதிலிருந்து வெளியே வர விரும்பினால் பாராட்டப் பழகுங்கள். ஒரு நாளைக்கு ஐந்து பேரையாவது பாராட்டுவேன் என முடிவெடுங்கள். ஒரு நபரிடமிருக்கும் குறைகளைத் தாண்டி நிறைகளைக் கண்டு பிடிப்பீர்கள்.  

அதே போல, குறை சொல்லும் நண்பர் கூட்டத்திலிருந்து வெளியே வாருங்கள். குறைந்த பட்சம் குறை சொல்லும் பேச்சை ஆதரிக்காமல் இருங்கள். குறை சொல்வது உங்களுக்குப் பிடிக்காது என்பது உங்கள் நண்பர்களுக்குப் புரிந்து விடும். அது உங்களுக்கு மரியாதையையும் பெற்றுத் தரும்.

எதையும் மாற்ற முடியாது என்று தெரிந்தால் கூடஎன்னய்யா வெயில் மண்டையைப் பொளக்குது, என்னய்யா மழை படுத்துது, இதென்ன ஒரே தூசு மண்டலமா இருக்கு  என எடுத்ததுக்கெல்லாம் சலித்துக் கொள்ளும் மனிதர்கள் வாழ்வின் ஆனந்த தருணங்களை இழந்து விடுகிறார்கள்.

இன்றிலிருந்து ஒரு மாதம் குறையே சொல்ல மாட்டேன், நல்ல விஷயங்களைப் பாராட்டுவேன் என முடிவெடுத்துப் பாருங்கள். இந்த போட்டியில் ஜெயித்து விட்டால் உங்களுடைய அடிப்படை இயல்பே மாறிவிடும். ஒரு வேளை தோற்று விட்டால், அந்த நாளிலிருந்து அடுத்த ஒரு மாதம் முயற்சி பண்ணுங்கள். ! 

குற்றம் சொல்வதை நீங்கள் நிறுத்தும் வினாடியில் உலகம் உங்கள் கண்ணுக்கு முன்பாக அழகாகத் தெரியும். உங்கள் உறவுகள் அழகாகத் தெரிவார்கள். உங்களுக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கை ஆனந்தமானவையாக மாறும். செடியில் இருக்கும் முட்களைத் தாண்டி, முட்களிடையே இருக்கும் ரோஜா கண்களில் தெரியும்.  வாழ்க்கை ஆனந்தமாய் மாறும்.

குறைகள் சொல்தல் இழிவாகும்

உயர்வும் இதனால் அழிவாகும்

தன்னம்பிக்கை : கல்லூரிக்குச் செல்கிறீர்களா ?

கல்லூரிக் காலம் மகிழ்வுகளின் வேடந்தாங்கல். கவலைகளின் திவலைகளுமின்றி ஆனந்த மழையில் இளமை ஆர்ப்பரிக்கும் காலம். முதியவர்களுடைய ஞாபக அடுக்குகளைக் கொஞ்சம் அலசிப் பார்த்தால் கல்லூரி காலக் களேபரங்களின் சுகமான ராகம் கேட்கக் கூடும். பள்ளிக்கூட மாணவர்களின் மனதில் கல்லூரிக் காலம் குறித்த கனவுகளின் வண்ணச் சாலை நீளமாகத் தெரியும்.

கல்லூரிக் காலம் வரங்களின் காலம். இந்தக் காலத்தில் என்ன விதைக்கிறோம் என்பதை வைத்தே எதிர்கால விளைச்சல் அமையும். நமது களஞ்சியம் தானியங்களுக்கானதா, பதர்களுக்கானதா என்பதை கல்லூரி வாழ்க்கை தான் நிர்ணயம் செய்கிறது. பலரும் கல்லூரி வாழ்க்கையை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் குழம்பிப் போய் வாழ்க்கையைக் குழப்பங்களின் கூடாரமாக்கிவிடுகிறார்கள்.

ஊடகங்கள் காட்டும் கல்லூரி வாழ்க்கை பெரும்பாலும் நாடகங்களாகவே ஆகிவிடும். காதல், கிண்டல், கலாட்டா, சண்டை இவைகளை மட்டும் தானே சினிமா படம் பிடிக்கிறது. இவற்றைத் தாண்டிய கல்வி, ஒழுக்கம், தன்னம்பிக்கை, திறமை என ஏகப்பட்ட விஷயங்கள் இந்த வகுப்பறைகளுக்குள் இருக்கின்றன. 

கல்லூரிக்குச் செல்கிறீர்களெனில் முதலில் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்றுண்டு. “இந்தியாவில் பல கோடி மக்களுக்குக் கிடைக்காத அருமையான வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறதுஎனும் எண்ணம் தான் அது. இந்த எண்ணம் மனதில் இருந்தால் ஏனோ தானோ எனும் சிந்தனைகளுக்கு முதலிலேயே ஒரு முட்டுக் கட்டை போட முடியும். கிடைத்திருக்கும் வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும் எனும் உந்துதலும் கிடைக்கும். 

கல்லூரியில் சேர்ந்திருப்பது கல்லூரியைக் கட் அடித்து ஊதாரித் தனமாய் திரிவதற்கல்ல என்பது உங்களுக்கே தெரியும். வேறு வேலையில்லாமலோ, வெறுமனே பொழுதைப் போக்கவோ நீங்கள் கல்லூரிக்குள் வரவில்லை என்பதில் உங்களுக்குத் தெளிவு இருக்கும். எனவே அதைப்பற்றி நான் தனியே சொல்லத் தேவையில்லை.

அதிகாலையில் எழுந்து ஒரு வரி விடாமல் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து தேர்வு அறையில் ஜெராக்ஸ் எடுக்கும் காலம் பள்ளிக்கூடத்தோடு போய் விட்டது. கல்லூரிக் காலம் கொடுப்பதைப் படிப்பதல்ல, படிப்பதைத் தேடிப் பிடிப்பது. முன்பெல்லாம் கல்லூரி மாணவர்கள் அரசு நூலகங்களின் தூசுகளுக்கிடையே தும்மித் தும்மித் தான் தகவல்களைத் தேடினார்கள். எலியைப் பிடிக்க மலையைப் புரட்டும் கடினம் அதில் இருந்தது.

இன்றைய யுகம் மாணவர்களின் வேலையை மிக மிக எளிதாக்கியிருக்கிறது. இணையம் எனும் கடலிலிருந்து ஒரு மௌஸ் கிளிக் மூலம் கப்பல் நிறைய தகவல் மீன்களை அள்ளி எடுக்க முடியும். உலகின் பல்வேறு மூலைகளிலுமுள்ள அறிஞர்களின் சிந்தனைகளை ஏசி அறையில் இருந்து கொண்டே அறிந்து கொள்ளவும் முடியும். இந்த வாய்ப்பு இந்தத்  தலைமுறையின் கரத்தில் இருக்கும் வரம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

சமூக வலைத்தளங்கள் இன்னொரு வரப்பிரசாதம். ஆர்குட், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் பெரும்பாலும் நட்புக் கைக்குலுக்கலுக்கே பயன்படுகிறது. அதே தளங்களை ஆர்வமுடையவர்கள் கல்வியைச் செழுமைப்படுத்தவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கேள்வி கேட்டு உடனுக்குடன் பதில் பெறும் முறையை பல்வேறு கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் டுவிட்டர் மூலம் மேற்கொள்கிறார்கள்.

கல்வியறிவு பெற்ற ஒருவர், தான் சார்ந்த சமூகத்துக்குப் பயனுள்ள நபராக இருக்க வேண்டியது அவசியம். அதற்கான சமூகக் குழுக்களில் தயங்காமல் இணையுங்கள். கல்லூரிக்கு உள்ளே கவின்கலை மன்றம், அறிவியல் குழுக்கள், என்.சி.சி என ஏகப்பட்ட வாய்ப்புகள் அணிவகுக்கும். குழுக்களில் இணைந்து பணியாற்றுவது நாளை அலுவலகங்களிலும், சமூகத்திலும், குடும்பங்களிலும் கலந்து வாழும் பக்குவத்தைப் பயிற்றுவிக்கும்.

குழுக்களில் இணையும்போது ஒரு சின்ன எச்சரிக்கை மணியை மனதில் கட்டி வையுங்கள். சாதி, மதம், மொழி, இனம் என பிரிவினையை ஊக்குவிக்கும் எந்தக் குழுவிலும் இணையாதீர்கள். அப்படிப்பட்ட தேவையற்ற செயல்களில் ஈடுபடும் நேரத்தை அலுவலக நூலகங்களிலோ, ஆசிரியர்களுடன் உரையாடுவதிலோ செலவிடுங்கள். 

கனியிருக்கக் காய் கவர்ந்தற்றுஎன்பது கல்லூரி வாழ்க்கைக்குச் சாலப் பொருந்தும். எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்தாலும் மது, மாது, பாலியல் என தவறானவற்றையே பெரும்பாலான சினிமாக்கள் நமக்குச் சொல்லித் தருகின்றன. அத்தகைய பிழைகளில் விழுந்தால் எதிர்காலம் பிழையாகிப் போகும் என்பது உறக்கத்திலும் உங்களுக்குத் தெரிந்தே இருக்கட்டும்.

எதிர்காலத்தில் என்னவாகப் போகிறீர்கள் எனும் இலட்சியம் உங்களிடம் இருக்கும். அதை நோக்கிய பயணத்தைக் கல்லூரிக் காலத்திலேயே துவங்குங்கள். படிப்பில் கவனம் செலுத்துவது முதல், தகவல்களைச் சேமிப்பது வரை உங்கள் கவனம் இலட்சியம் சார்ந்து இருப்பது சிறப்பு. 

பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டி, பட்டி மன்றம் போன்றவற்றில் இணையுங்கள். கல்லூரிக் காலத்திலேயே நீங்கள் உங்கள் கூச்ச சுபாவத்துக்குக் கொள்ளி வைத்தால் எதிர்காலத்தில் இண்டர்வியூ, குழு உரையாடல் போன்றவற்றில் வெற்றிக் கொடி கட்ட உங்களுக்கு ரொம்பவே வசதியாய் இருக்கும். 

தாழ்வு மனப்பான்மைகளில் மாணவர்கள் தடுக்கி விழும் காலம் கல்லூரிக் காலம் என்கின்றன புள்ளி விவரங்கள். பெரும்பாலும் படிப்பு குறித்த கவலையோ, பிற மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் மீதான கருத்து வேறுபாடோ, காதல் நினைவுகளோ இத்தகைய மனநிலைக்கு மாணவர்களை இட்டுச் செல்வதுண்டு. அத்தகைய மன அழுத்தங்களை பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ விவாதித்து மனதைத் தெளிவு படுத்திக் கொள்வது அவசியம்.

கல்லூரிக் காலத்தில் மாணவர்கள் கவனிக்காமல் விட்டு விடும் முக்கியமான ஒரு விஷயம் உடல்நலம். கண்டதையும் தின்பது, கெட்ட பழக்கங்களில் விழுவது, இரவு தூங்காமல் நீண்டநேரம் விழித்திருப்பது என பலருக்கும் உடல்நலம் குறித்த கவலையே இருக்காது. அது பிற்காலத்தில் பிரச்சினையை உண்டாக்கிவிடும். உடற்பயிற்சி, சரியான உணவு, உறக்கம் இவையெல்லாம் ரொம்ப ரொம்ப முக்கியம்.

காலையில் அலறி அடித்து எழும்பி, பிரேக் பாஸ்ட் சாப்பிடாமல் காலேஜ் ஓடுவது காலேஜ் பசங்களுக்கே உரிய ஒரு கெட்ட பழக்கம். ரொம்பநேரம் படுக்கையில் புரண்டு சோம்பலில் புரளாமல் காலையில் எழும்பி ஒரு சின்ன உடற்பயிற்சியோடு தினத்தை ஆரம்பித்துப் பாருங்கள். உங்கள் உடலில் குடிகொள்ளும் உற்சாகம் மனதையும் இளசாக்கி வைக்கும்.

எதையும் அசட்டுத் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் காலம் கல்லூரிக் காலம். தினவெடுத்த தோள்களும், உரம்படைத்த மனமும் வாய்க்கும் காலமும் கல்லூரிக் காலம் தான். இந்தக் காலத்தில் வம்புகளில் போய் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது முக்கியம்.

இரவில் அலைந்து திரிவது, கல்லூரி விதிமுறைகளை கொஞ்சம் மீறிப் பார்ப்பது போன்றவையெல்லாம் உங்களை ஆயுள் கால தவிப்பில் விட்டு விடக் கூடும் என்பதை மறக்காதீர்கள். நண்பர்கள் வற்புறுத்துகிறார்களே என்பதற்காக உங்களுக்கு விருப்பமில்லாத எந்த செயலையும் செய்யாதீர்கள். தேவைப்படும்போது தயங்காமல் ஆசிரியர் உதவியை நாடுங்கள்.

பாட புத்தகங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வதைத் தாண்டி, மனிதர்களிடமிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவும் கல்லூரிக் காலம் உதவும். கல்லூரிக் காலம் உங்களுக்கு ஏகப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கும். எனவே நீங்கள் சந்திக்கும் மனிதர்களிடமிருந்து நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். 

படிப்பில் ஆர்வமுடைய நண்பர்களைக் கொண்டிருங்கள். இணைந்து படிப்பது கல்வியின் ஆழத்தை அதிகரிக்கும். குறிப்புகள் எடுத்துப் படிப்பது, வகுப்பறையில் கவனமாய் இருப்பது போன்ற அடிப்படை விஷயங்கள் எப்போதும் மனதில் இருக்கட்டும். எடுத்த குறிப்புகளைக் குப்பை போல சேர்த்து வைக்காமல் கணினியில் சேமித்து வைப்பது ரொம்பவே பயன் தரும்.

மிக முக்கியமான ஒரு விஷயம், வெற்றியும் தோல்வியும் வாழ்வின் பாகங்கள் என்பதை உணருங்கள். வெற்றிகளை தாழ்மையுடனும், தோல்விகளை இயல்பாகவும் ஏற்றுக் கொள்ளப் பழகினால் தேவையற்ற மன அழுத்தங்களைத் தவிர்க்கலாம்.

கல்லூரியில் பிள்ளைகளை அனுப்பி வைத்தவுடன் தனது கடமை முடிந்து போய்விட்டது போல ஹாயாக ரெஸ்ட் எடுக்கும் பெற்றோர் பலர் உண்டு. கல்லூரியில் பிள்ளைகள் என்ன பாடம் எடுத்திருக்கிறார்கள், அவர்களுடைய ஆசிரியர்கள் யார், வகுப்பறை எங்கே இருக்கிறது, என எதையுமே அவர்கள் அறிந்திருப்பதில்லை. பெற்றோர் இந்த விஷயத்தில் மாணவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும்.

பிள்ளைகள் என்னென்ன குழுக்களில் இணைந்திருக்கிறார்கள், அவர்களுடைய கல்லூரி வருகை எப்படி இருக்கிறது, அவர்களுடைய நண்பர்கள் யார் எனும் சில விவரங்களை அறிந்து வைத்திருங்கள். அதே நேரம் பிள்ளைகள் சுயமாக முடிவுகளை எடுக்க ஊக்கப்படுத்துங்கள்.  பள்ளிக்கூடக் காலத்துக்கும், கல்லூரிக் காலத்துக்குமிடையே மாணவர்களுடைய செயல்பாடுகளில் வேறுபாடுகள் தெரியும். பெற்றோர் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். குய்யோ முய்யோ என கத்தி நிலமையை விபரீதப்படுத்தாமல், சில நெறிப்படுத்தும் வழிகாட்டல்களோடு தங்கள் பணியை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கல்லூரி என்பது அறிவின் நீரூற்று ! மாணவர்கள் அந்த அறிவைப் பருக வந்திருக்கும் பறவைகள். எனவே கல்லூரிக் காலத்தை வீணாக்காமல் அறிவையும் நல்ல பண்புகளையும் பெற்றுக் கொள்வதில் நீங்கள் உங்கள் நேரத்தைச் செலவிட்டால் வாழ்க்கை உங்களை வசந்தச் சிறகுகளோடு வரவேற்கும்.

அறிவுச் சிறகு விரியட்டும்

வானம் கண்ணில் தெரியட்டும்.

தன்னம்பிக்கை : பாராட்டுங்கள்

மனித மனம் தனது ஆழத்தில் பாராட்டுக்காக ஏங்குகிறது” – என்கிறார் வில்லியம் ஜேம்ஸ்.  தான் முக்கியமானவனாகக் கருதப்படவேண்டும், தான் அங்கீகரிக்கப் படவேண்டும், பிறரால் விரும்பப்படவேண்டும் எனும் ஆசையின் சல்லி வேர்கள் எல்லா மனிதர்களுக்குள்ளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

இப்போதெல்லாம் பாராட்டும் பழக்கமே குறைந்து விட்டதுஎன்று சொன்னால் உடனே எல்லோரும் தலையாட்டுவீர்கள். “ஆமாம். யாருமே யாரையுமே பாராட்டுவதில்லை. எல்லோருக்கும் ஈகோஎன சட்டென பதில் வரும். அந்த பேச்சை அப்படியே ஒரு நிமிடம் நிறுத்தி விட்டுக் கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்.

நேற்றைய தினம் நாம் எத்தனை பேரைப் பாராட்டினோம் ?” ஏதேனும் நினைவுக்கு வருகிறதா ? சரி, போன வாரத்தில் ? போன மாதத்தில் ? – ஒவ்வொரு படியாக பின்னோக்கிப் போய் சிந்தித்துப் பார்த்தால், நாமே யாரையும் பாராட்டவில்லை எனும் உண்மை உறைக்கும். “பாராட்டு என்பது நம்மைத் தவிர மற்ற எல்லோரும் செய்ய வேண்டிய விஷயம்என ஒவ்வொருவரும் நினைத்துக் கொள்கிறோம் !

மனதாரப் பாராட்டுவது மனிதனுக்கே இருக்க வேண்டிய மிக மிக முக்கியமான பண்பு. எந்தச் செலவும் இல்லாத விஷயம் இது. ஆனால் பணத்தினால் உருவாக்க முடியாத ஒரு ஆரோக்கியமான சூழலை பாராட்டுவதன் மூலமாய் உருவாக்கிவிட முடியும். 

நமது தினசரி வாழ்க்கையில் நாம் எத்தனையோ நபர்களைச் சந்திக்கிறோம். காலையில் காபி குடிப்பது முதல், அலுவலகம் சென்று, வேலை முடித்து, வீடு வந்து சேர்வது வரை ஏராளமான நபர்களோடு நாம் உரையாடுகிறோம். அவர்களில் எத்தனையோ பேர் பாராட்டுக்கு உரியவர்களாய் இருக்கிறார்கள் என்பது தான் நிஜம்.

பலரும் செய்யும் ஒரு தவறு, பாராட்டு என்பது அலுவலக சமாச்சாரம் என நினைப்பது தான். பாராட்டு என்பது நல்ல எந்த ஒரு செயலுக்குமே உரியது ! எந்த இடத்திலும் வழங்கப்படக் கூடியது. எந்த நபருக்கும் கொடுக்கக் கூடியது !

சின்னச் சின்ன விஷயங்களையும் பாராட்டுங்கள். சில ஆண்டுகளுக்குப் பின், நீங்கள் திரும்பிப் பார்க்கும் போது, நீங்கள் விதைத்த அந்த சின்னச் சின்னப் பாராட்டுகள் பூஞ்சோலையாய் வளர்ந்து புன்சிரிக்கக் காண்பீர்கள்.

பணம் வாங்கறாங்க, வேலை பாக்கறாங்கஎனும் மனநிலையிலிருந்து நாம் வெளியே வர வேண்டியது முதல் தேவை. உதாரணமாக உங்கள் வீட்டை அழகாகத் துடைத்து வைக்கும் வேலைக்காரப் பெண்ணுக்குக் கொடுக்கலாம் ஒரு பாராட்டு ! வீட்டில் தோட்ட வேலை செய்யும் ஒருவருக்கும் வழங்கலாம் பாராட்டு. பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்பவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள் அல்ல எனில் நம்மில் பலரும் பாராட்டுக்கு உரியவர்களாக இருக்க மாட்டோம் இல்லையா ?

ஏன் பாராட்ட வேண்டும் என்று கேட்கும் பலருக்கும் பாராட்டுகள் செய்யும் மாயாஜாலங்கள் புரிவதில்லை. பாராட்டு ஒருவருடைய தன்னம்பிக்கையை வளர்க்கிறது. பாராட்டு, வேலை சரியான பாதையில் செல்கிறது என்பதை ஒருவர் சரிபார்க்க உதவுகிறது. பாராட்டு, ஒரு நபர் தன்னை உற்சாகப்படுத்திக் கொண்டு பயணிக்க உதவுகிறது. 

பாராட்டில் இருக்க வேண்டிய ஒரே விஷயம், அது ஆத்மார்த்தமானதாய் இருக்க வேண்டும் என்பது தான். போலித்தனமான பாராட்டுகளைத் தோண்டிப் பார்த்தால் உள்ளே சுயநலமே ஒளிந்திருக்கும்.  

பாராட்டுவதற்கு பாசிடிவ் மனநிலை வேண்டும். வாழ்க்கையை இனிமையாகவும், ஆனந்தமாகவும், உற்சாகமாகவும் எதிர்கொள்பவர்களே பாராட்டுவதில் தயக்கம் காட்டுவதில்லை. சிடுமூஞ்சிகள் பாராட்டுவதற்குக் காசு கேட்கும் பார்ட்டிகள். இதில் நீங்கள் எந்த வகை ? தப்பான பக்கம் நிற்கிறீர்களெனில் உடனே நேர் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என புலம்புபவர்கள் ஒரு வகை. எந்தப் பூவில் எந்தத் தேன் இருக்குமோ என்று பார்ப்பவர்கள் இன்னொரு வகை. நேர் சிந்தனை உள்ளவர்கள் பிறரிடம் இருக்கும் நல்ல விஷயங்களைத் தேடுவார்கள். அப்போது அவர்களுக்குப் பாராட்ட நிறைய விஷயம் கிடைக்கிறது. குறை சொல்பவர்கள் எல்லா செயலுக்கும்உள் நோக்கம்கற்பிப்பதிலேயே காலத்தைச் செலவிடுவார்கள். அவர்களுக்குப் பாராட்டும் மனமே வருவதில்லை.

சந்திரனுக்கு ராக்கெட் விடுவது போன்ற சாதனை செய்தால் தான் பாராட்ட வேண்டும் என சிலர் கங்கணம் கட்டிக் கொள்வதுண்டு. அது தப்பு ! சின்னச் சின்ன செயல்களில் உங்கள் அன்பான பாராட்டு வெளிப்படவேண்டும். உங்கள் பையன் பத்தாம் வகுப்பில் முதல் மாணவனாக வந்தால் மட்டுமா பாராட்டுவீர்கள் ? எல்.கே.ஜி யில் ஹோம் வர்க் செய்யும் போதே பாராட்டுவீர்களல்லவா ? அதே உற்சாகத்தைப் பிறரிடமும் காட்டுங்கள். !

நல்ல விஷயத்தைப் பாராட்டுவதில் முதல் ஆளாய் நில்லுங்கள். உங்களைப் பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயமும் பிறரிடம் உருவாகும். பாராட்ட வேண்டும் என முடிவெடுத்துப் பாருங்கள் உங்கள் கண்ணுக்கு பிறருடைய நல்ல விஷயங்கள் தெரிந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு பாராட்டும் ஒருவகையில் தனிமனித முன்னேற்றத்துக்கு உதவுகிறது. தனிமனித வளர்ச்சி தானே சமூக வளர்ச்சியின் ஆதாரம் ! 

ஒரு கூட்டத்தில் ஒருவர் பாராட்டும் பண்பு உடையவராக இருந்தாலே போதும். பூவோடு சேர்ந்த பூக்கூடையும் மணப்பது போல, கூட இருப்பவர்களுக்கும் அந்த பழக்கம் தொற்றிக் கொண்டு விடும். எனவே அத்தகைய நண்பர்களோடு நீங்கள் இணைந்து இருப்பதே சிறப்பானது.

பாராட்டு அடுத்தவர்களுடைய மனதில் மகிழ்ச்சியை வரவழைக்கும். மகிழ்ச்சி என்பது அருவி போல, அது அருகில் இருப்பவர்களையும் நனைக்கும். அந்த மகிழ்ச்சி உங்களையும் ஈரமாக்கும். உங்களுடைய மனமும் உற்சாகமடையும். உற்சாகமான மனம் ஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் என்பதையே மருத்துவம் சொல்கிறது !

ஒரு சூழல் எப்படி மோசமாய் இருக்கிறது என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது ஒரு வகையான மனநிலை. அந்த சூழலை என்ன செய்தால் சீர்செய்யலாம் என யோசிப்பது இன்னொரு மனநிலை. பாராட்டும் குணமுடையவர்கள் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்களாய் இருப்பார்கள்.

அன்பு ! அதுவே பாராட்டும் மனதுக்கான அஸ்திவாரம். மனதளவில் அன்பு இருந்தால் பாராட்டு தானாகவே ஊற்றெடுக்கும். பலருக்கு இந்த அஸ்திவாரம் வலுவற்றதாக இருப்பது தான் துயரம். ஆரம்பத்தில் பாராட்டுபவர்கள் கூட பாராட்டப்பட்ட நபர் வளர்ச்சியடைந்தால் பிறகு பாராட்டமாட்டார்கள். அடுத்தவர்களின் வளர்ச்சியில் பொறாமை படும் குணம் பாராட்டை அனுமதிப்பதில்லை.  

ஒருவரைப் பாராட்டும் போது அவருடைய திறமையை அளவுகோலாய் வைத்தே பாராட்டுங்கள். உங்களுடைய திறமையை வைத்தல்ல. அப்போது தான் பலவீனமான மனிதனும் பாராட்டுக்குரியவனாய் தெரிவான். ஒவ்வோர் சூழலுக்கும் ஒவ்வொரு விஷயம் தேவையானதாய் இருக்கும். மிருதங்கத்தில் துளைகள் இருந்தால் அது வீண். புல்லாங்குழலில் துளைகள் இல்லையேல் அது வீண். சூழலோடு பொருந்தி பாராட்டுகள் வெளிப்படுவது நல்லது.

என்னதான் செய்தாலும் அவனைப் பாராட்டவே முடியாதுஎன ஒருவரைப்பற்றி நீங்கள் முடிவெடுத்தால் கூட அவரிடம் இருக்கும் நல்ல செயல்கள் என்னென்ன என பட்டியலிடுங்கள். அந்தப் பட்டியல் கொஞ்சம் கொஞ்சமாய் விரிவடைவதைப் பார்க்க உங்களுக்கே வியப்பாக இருக்கும். அதன் பின் அவரைப் பாராட்ட காரணங்கள் உங்கள் கையிலேயே இருக்கும் !

நம்பிக்கை வையுங்கள். ஒரு நபர் மீது நீங்கள் நம்பிக்கை வைக்கும் போது அவருடைய வளர்ச்சி உங்களுக்கு பிரியமானதாய் மாறுகிறது. அவர் மீதான நம்பிக்கை அவரைப் பாராட்டச் செய்கிறது. அந்தப் பாராட்டு அவரை வெற்றியை நோக்கி நகர்த்தும். எனவே மனிதர்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.

மிக முக்கியமாக, பாராட்டும் பழக்கம் வீடுகளிலிருந்து துவங்க வேண்டும். வீடுகளில் விதைப்பது, வீதிகளில் முளைவிடும். பாராட்டு தனது முதல் சுவடை வீட்டில் வைக்கும் போது அதன் பயணச் சாலைகள் நாட்டில் விரிவடையும். கணவனோ, மனைவியோ பாராட்டுக்கு அப்பாற்பட்டவர்களல்ல. பெற்றோரையும் பாராட்டுங்கள். பிள்ளைகளையும் பாராட்டுங்கள். முதியவர்கள் மனதளவில் குழந்தைகள். அவர்களுக்கும் உங்கள் பாராட்டு ரொம்பவே அவசியம். 

நேரடியாகப் பாராட்டுகையில் உடல் மொழி ரொம்பவே முக்கியம். உடல் மொழி உற்சாகமாக இருந்தால் தான் பாராட்டின் முழுப் பரிமாணமும் பாராட்டப் படுபவரைப் போய்ச் சேரும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

யாரையேனும் விமர்சித்தால் கூட, சகட்டு மேனிக்கு குறைகளை மட்டுமே அடுக்காதீர்கள். அவர்களுடைய ஒரு நல்ல பண்பையாவது பாராட்டுங்கள். விமர்சனங்கள் பக்குவமாகப் பரிமாறப்படவேண்டியவை, பாராட்டுகள் மறைக்காமல் பகிரப்படவேண்டியவை !

வெறும் வார்த்தைகளிலான பாராட்டுகளைத் தாண்டி அடுத்த நிலையில் சின்னச் சின்னப் பரிசுகள் கொடுத்துப் பாராட்டுவது ரொம்பவே சிறப்பானது. அந்த பரிசு அவர்களுக்கு உங்கள் பாராட்டை தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கும். அது அபரிமிதமான உற்சாகத்தையும் ஊட்டும்.

பாராட்டு என்பது அன்பின் விதைகளில் முளைத்தெழும் அழகிய கொடி. அது பின்னிப் படரும் சமூகம் ஆனந்தத்தின் கானகமாய் வசீகரிக்கும்.

மனம்தரும் எந்தப் பாராட்டும்

வெற்றியின் வீதியில் தேரோட்டும்

தன்னம்பிக்கை : வெற்றியின் குறுக்கே கோபம்

 “கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்என்கிறார் ரால்ஃப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர் துருவங்களில் வேர்விட்டு அமர்ந்திருப்பதை அவருடைய வார்த்தைகள் சுட்டிக் காட்டுகின்றன.

எனக்குக் கோபமே வராதுங்கஎன்று யாராவது சொன்னால் அவர் பொய் சொல்பவராக இருக்க வேண்டும். அல்லது அதிசயப் பிறவியாய் இருக்க வேண்டும். கோபம் தும்மலைப் போன்றது. சாதி மத நிற பேதமில்லாமல் எல்லாருக்குமே வரும். சிலரிடம்நீங்க அடிக்கடி கோபப்படுவீங்களாமே?” என்று கேட்டால் கூடஎவண்டா அப்படிச் சொன்னது ? ” என கோபப்பட ஆரம்பித்து விடுவார்கள்.

இதில் சமர்த்துக் கோபம் ஒன்று உண்டு. “வரையறுக்கப்பட்ட, கட்டுக்குள் இருக்கக் கூடிய, நிலை தடுமாற வைக்காதகோபத்தை அப்படி அழைக்கிறார்கள். உதாரணமாக உங்கள் குழந்தை கீழ்ப்படிதல் இல்லாமல் வளர்கிறதெனில் உங்களுக்குள் கோபம் எழும். அதன் வெளிப்பாடு கத்தலாகவோ, சண்டையாகவோ இல்லாமல் வரையறுக்கப்பட்ட நிலையில் வெளிப்படும் போது வழிகாட்டும் அறிவுரையாய் மாறி விடுகிறது.  

மேனேஜர் கோபப்படுறதுலயும் ஒரு நியாயம் இருக்குப்பா. இன்னிக்கு வேலையை  முடிக்கலேன்னா சிக்கல் பெரிசாயிடும்ல…” என பேசிக்கொள்ளும் ஊழியர்கள் மேலதிகாரியின் நியாயமான கோபத்தைப் பேசுகிறார்கள். 

ஆனால் கண்கள் விரிய, கைகளை நீட்டி, குரலை உயர்த்தி ஆவேசமாய்ப் பேசும் கோபம் எந்த இடத்திலும், எந்த சூழலிலும் கொண்டாடப்படுவதில்லை என்பதே உண்மை. 

கோபத்தை ஒரு மிகப்பெரிய கோடு கிழித்து இரண்டு பாகமாக பிரிக்கிறார்கள். ஒன்று வெளிப்படையான கோபம். “நீ.. எப்படிய்யா என் மனைவியைப் பற்றி பற்றி தப்பாப் பேசலாம்என நரம்புகள் புடைக்கக் கத்தும் கோபம் அது. இதை எக்ஸ்ப்ளோசிவ் ஆங்கர் என்பார்கள். 

இரண்டாவது உள்ளுக்குள் உடைந்து சிதறும் கோபம். இதே பிரச்சினையில் எதிராளி கமிஷனராகவோ, அரசியல் வாதியாகவோ இருக்கும்போது கோபத்தை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே அடக்கி விடுகிறோம். அது ஒரு கண்ணி வெடிபோல உள்ளுக்குள் வெடித்துச் சிதறும். இதை இம்ப்ளோசிவ் ஆங்கர் என்பார்கள். 

எந்த வகைக் கோபமாக இருந்தாலும் அது நமது உடலையும் மனதையும் ஒரு கை பார்க்காமல் விடாது என்பது தான் உண்மை. சண்டை, அடிதடி, பிரிவுகள், தோல்வி, உடல் பலவீனம் எல்லாவற்றுக்கும் அடிப்படையில் இந்த கோபமே படுத்துக் கிடக்கிறது.

மாரடைப்பு, மன அழுத்தம், தலைவலி, வயிற்று வலி, உயர் குருதி அழுத்தம், தோல் வியாதிகள், வலிப்பு என பல நோய்களுக்கும் கோபமே அடிப்படையாய் இருப்பதாய் மருத்துவம் நீட்டும் பட்டியல் திகிலூட்டுகிறது.  அமெரிக்காவின் ஒஹாயோ பல்கலைக்கழக ஆய்வு ஒன்று இன்னும் ஒரு படி மேலே போய், நோய்கள், காயங்கள் போன்றவை தீராமல் இருப்பதன் காரணமும் கோபமே என்கிறது !

கோபத்தின் கொடுமையான விளைவுகளைச் சிறைக் கைதிகளின் கதைகள் துயரத்துடன் பேசுகின்றன. ஏதோ ஒரு ஆவேசத்தில் தன்னிலை மறந்து யாரையோ தாக்கிவிட்டோ, கொன்று விட்டோ, பழி தீர்ப்பதாய் நினைத்துக் கொண்டோ பலரும் சிறைச்சாலையில் வந்து விடுகிறார்கள். பின் தங்களுடைய கோபத்தின் மீதே கோபம் கொண்டு மிச்ச வாழ்க்கையைக் கண்ணீரின் கரைகளில் வாழ்ந்து முடிக்கிறார்கள்.

இருபத்து ஆறு ஆண்டுகள் சிறையில் வாடிவிட்டு வெளியே வந்தபோது நெல்சன் மண்டேலாவுக்கு சிறை அதிகாரிகளின் மீது கடுமையான கோபம் வந்தது. ஆனால் அடுத்த நிமிடமே அதை அழித்து விட்டு, சிறையின் கோபங்கள் சிறையுடனே போகட்டும் என வெளிச்சத்தை நோக்கி நடை போட்டாராம். இதை அவருடைய சிறை அனுபவக் குறிப்புகள் பேசுகின்றன.

உறவுகளுக்கிடையே வரும் பிளவுகளும் கோபத்தின் குழந்தைகளே. “கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்என்றோ, “ கொஞ்சம் நிதானமாய் நடந்திருக்க வேண்டும்என்றோ தான் விவாகரத்துக்களின் சோகக் கதைகள் புலம்பித் திரிகின்றன. கத்துவது, அவமானப் படுத்துவது, அடுத்தவரை குற்றவாளியாக்குவது, பழி சுமத்துவது, நான் சொல்வதே சரியென நிறுவுவது, நீ எப்பவுமே இப்படித்தான் என பாய்வது என மணமுறிவுக்கான காரணங்கள் எக்கச் சக்கம். 

அலுவலகத்தில் வெற்றியைத் தட்டிப் பறிப்பதும், புரமோஷனைக் கெடுப்பதும் பல வேளைகளில் இந்த பாழாய்ப் போன கோபமே தான். “கொஞ்சம் கோபப்படாம இருந்திருக்கலாம் …”, “மெயில் அனுப்பித் தொலச்சுட்டேன்..” . என்பது போன்ற உரையாடல்கள் அலுவலக வராண்டாக்களில் உலவித் திரிவதை அடிக்கடிக் கேட்க முடியும்.

மொத்தத்தில் கோபம் எனும் ஒரு கொலைக் கருவி வெட்டிப் புதைத்த வாழ்க்கையின் கணக்குகள் எண்ணிலடங்காதவை. 

கோபமும் மன்னிப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை. நான் செய்வதும் சொல்வதும் சரியானவை, மற்றவர்கள் செய்வது தவறு எனும் புள்ளியிலிருந்தே பெரும்பாலான கோபங்கள் புறப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் சுயநலமே கோபத்தின் அடிப்படை ! மன்னிக்கும் மனதை வளர்த்துக் கொண்டால் கோபத்தின் தளிர்கள் காய்ந்து விடும். இதையே எல்லா மதங்களும், மகான்களும் போதித்துச் செல்கின்றனர்.

அவரு வள் வள் ன்னு எரிஞ்சு விழறார். காலைல வீட்ல சண்டை போட்டுட்டு வந்திருப்பார் போல… ” என்பது சர்வ சாதாரணமான ஒரு பேச்சு. இது கோபத்தின் மிக முக்கியமான ஒரு பண்பை வெளிப்படுத்துகிறது. கோபம் என்பது எங்கோ ஒரு இடத்தில் உருவாகி அங்கேயே முடிந்து விடுவதில்லை. அடுத்தடுத்த இடங்களில் அது தொடர்ந்து அந்த கோபம் மறையும் வரை நாம் செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் அதன் பாதிப்பு நேர்ந்து விடுகிறது என்பதே அது! 

நான் ஒரு கோபக்காரன் என்பதைப் புரிந்து கொள்வது தான் கோபத்தை வெற்றி கொள்வதன் முதல் படி. எனக்கு நோயே இல்லை என்பவர்கள் குணமடைவதில்லை. கோபம் இருப்பதைப் புரிந்து கொண்டால், “இந்தக் கோபத்துக்குக் காரணம் நான் மட்டுமே. நான் நினைத்தால் இந்தக் கோபத்தை எப்படி வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியும்எனும் எண்ணத்தையும் மனதில் எழுதிக் கொள்ளுங்கள். 

கோபத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு வழிகளை பலரும் பரிந்துரை செய்கின்றனர். வல்லுநர்களின் ஒருமித்த பார்வையின் அடிப்படையில் கிடைக்கும் சில பரிந்துரைகள் இவை.

  1. யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளப் பழகுங்கள். எல்லாமே நம்முடைய விருப்பப்படியும், திட்டத்தின் படியும் நடக்கப் போவதில்லை. வாழ்க்கையின் இந்த உண்மை நிலையைப் புரிந்து கொள்வது தேவையற்ற கோபங்கள் எழுவதைத் தவிர்க்கும்.
  2. கோபத்தை அன்பினால் நிரப்பப் பழகுங்கள். இன்னா செய்தாரை ஒறுத்தலும், நன்னயம் செய்தலும் உறவுகளுக்குடையே நீண்டகால பந்தத்தை உருவாக்கும். “அடுத்தவர்கள் என்ன செய்யவில்லைஎனும் பார்வையிலிருந்து, “நான் என்ன செய்தேன்என பார்வையை மாற்றுவதே இதன் அடிப்படை.
  3. கோபத்தை மூட்டைக் கட்டிக்கொண்டு திரியாதீர்கள். கோபம் உடனுக்குடன் கரைவதே நல்லது. அப்படியே நீடித்தாலும் ஒரு நாளின் கோபம் அடுத்த நாள் வரை போகவே கூடாது என்பதில் உறுதியாய் இருங்கள். இந்த நாள் புத்தம் புதுசு என்றே ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளுங்கள்.
  4. கோபம் வந்தவுடன் அதை உணர்ந்து கொள்ளுங்கள். மூச்சுப் பயிற்சி, பார்வையை வேறு இடத்துக்கு மாற்றுவது, மகிழ்ச்சியான ஒரு பகல் கனவில் மூழ்குவது, நூறிலிருந்து ஒன்று வரை தலைகீழாய் எண்ணுவது என உங்கள் கவனத்தை மாற்றுங்கள். கோபம் தற்காலிகமாய் தள்ளி நிற்கும்.
  5. பாசிடிவ் மனநிலையுள்ள மனிதர்களுடன் உங்களுடைய சகவாசத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கோபம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்,.
  6. நமக்குப் பிடிக்காதவர்களைப் பற்றிய சிந்தனைகளைக் கொஞ்சம் ஒதுக்கி விட்டு, நமக்குப் பிடித்த நண்பர்கள், உறவினர்கள், அவர்கள் செய்த நல்ல விஷயங்கள் இவற்றைப் பற்றியும் அடிக்கடி அசை போடுங்கள். 
  7. சிரிக்கப் பழகுங்கள். நகைச்சுவைத் திரைப்படங்கள், கார்ட்டூன் படங்கள் பாருங்கள். நகைச்சுவை நூல்களை வாசியுங்கள். மற்றவர்களோடு சிரித்து மகிழ்ந்து இருப்பவர்களுடைய உடலில் கோபத்தைக் கிளறும் வேதியல் பொருட்கள் அதிகமாய் சுரக்காது என்பது மருத்துவ உண்மை.
  8. இப்போது கோபத்தைத் தூண்டிய இந்தச் செயல் சில ஆண்டுகள் கழித்தும் கோபம் கொள்ளச் செய்யுமா என யோசியுங்கள். டிராபிக்கில் கத்துவதும், வரிசையில் ஒருவர் புகுந்தால் எரிச்சலடைவதும் தேவையற்றவை என்பது புரியும்.
  9. இந்தச் செயல் உங்கள் மீது திட்டமிட்டே செய்யப்பட்டதா ? அடுத்த நபரின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் ? இதே தவறை நீங்கள் செய்தால் உங்கள் மீதே கோபம் கொள்வீர்களா என யோசியுங்கள். பெரும்பாலான கோபங்கள் காணாமல் போய்விடும்.
  10. 10.மனதார மன்னியுங்கள். இந்த ஒரே ஒரு பண்பு உங்களில் இருந்தால் கோபத்தை மிக எளிதாக வெல்லவும் முடியும், வெற்றியை ஆனந்தமாய் மெல்லவும் முடியும்.

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்

ஆனந்தத்தை அள்ளி வைப்போம்.

தன்னம்பிக்கை : இந்த வயசுலயா ?

இந்த வயசுல இதெல்லாம் முடியாது .. “ எனும் வாக்கியத்தை எல்லா இடங்களிலும் வெகு சகஜமாய்க் கேட்கலாம். பல சந்தர்ப்பங்களில் நாமே கூட இதைப் பயன்படுத்தியிருப்போம். நமது பிள்ளைகளிடமோ, நண்பர்களிடமோ அல்லது நாம் சந்திக்கும் ஏதோ ஒரு நபரிடமோ போகிற போக்கில் சொல்லி விட்டுப் போயிருப்போம்.

இந்தச் சின்ன வாக்கியம் மனதில் உருவாக்குகின்ற பாதிப்பு எவ்வளவு என்பதை நாம் பெரும்பாலும் உணர்வதில்லை. நாம் ஜஸ்ட் லைக் தேட் சொல்லிவிட்டுப் போகும் இந்த வாக்கியம் ரொம்பவே ஆக்ரோஷமானது. இதைப் பெற்றுக் கொள்ளும் நபருடைய தன்னம்பிக்கையின் மீதும், இலட்சியங்களின் மீதும் ஒரு இடியாக இறங்கவும் வாய்ப்பு உண்டு.

பல குழந்தைகளுடைய ஆர்வமும், வேட்கையும் இத்தகைய வாக்கியங்களால் அணைத்து விடுவதுண்டு. பல இளைஞர்களுடைய இலட்சியங்கள் இதனால் சோர்வடைவதுண்டு. பல முதியவர்களுடைய இனிமையான பொழுதுகள் இதனால் சிதிலமடைவதுமுண்டு.

பெரும்பாலான மக்கள் என்ன செய்கிறார்களோ அதுவே சரியானது எனும் முடிவுக்கு நாம் சீக்கிரமே வந்து விடுகிறோம். ஒரு செயலைச் செய்வதற்கு இது தான் சரியான வயது என்பதை மற்றவர்களுடைய வாழ்க்கையிலிருந்து தான் பொறுக்கி எடுக்கிறோம். அந்த வயதுக்கு முன்போ, அந்த வயதைத் தாண்டியோ அந்த செயலைச் செய்வது நிச்சயம் தோல்வியில் தான் முடியும் என்று பிள்ளையார் சுழி போடும் போதே முடிவு கட்டி விடுகிறோம். 

இது சரிதானா ? சாதனையாளர்களுடைய பட்டியலைப் புரட்டிப் பார்த்தால் அவர்களுடைய சாதனைக்கு வயது எப்போதுமே ஒரு தடையாய் இருந்ததில்லை எனும் உண்மை புரியும். எதை அடைய வேண்டும் எனும் தெளிவான இலட்சியமும் அதை நோக்கிய பார்வையுமே அவர்களிடம் இருக்கும். அர்ஜுனரின் கண்ணுக்குத் தெரிந்த பறவையின் ஒற்றைக் கண்ணைப் போல நேர்த்தியான கூர்மையான இலட்சியப் பார்வை.

ஒருவர் ஒரு நூலை எழுதிப் பதிப்பிக்க வேண்டுமெனில் எத்தனை வயதாகவேண்டும் என்பதைப் பற்றி எல்லோருக்கும் ஒரு அபிப்பிராயம் இருக்கும். அடாவ்டோ கோவால்ஸ்கி டா சில்வா எனும் பிரேசில் நாட்டு எழுத்தாளர்அப்ரெண்டே லேஎனும் நூலை எழுதியபோது அவருடைய வயது என்ன தெரியுமா ? ஐந்தரை!.  பால் குடிக்கும் வயதில் நூல் வடித்திருக்கிறார் அவர்.  

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்திலுள்ள எமிலி ரோஸாவுக்கு மருத்துவம் மற்றும்  அறிவியல் மீது அலாதி பிரியம். சின்ன வயதிலேயே அதைக் குறித்த நூல்கள், ஆய்வுகளையெல்லாம் படிக்க ஆரம்பித்தார். அவருடைய முக்கியமான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் இதழில் வெளியானது. அப்போது அவருக்கு வயது வெறும் 11. 

பனினொன்று வயதிலேயே ஆராய்ச்சியா என கின்னஸ் புத்தகம் அவசர அவசரமாய் அவரது பெயரை சாதனைப் பட்டியலில் பதிவு செய்து வைத்தது. அவர் நிறுத்தவில்லை உளவியலில் தனது முதுகலைப் பட்டத்தை டென்வரிலுள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தில் முடித்தபோது வயது 22. 

ஐந்து வயதென்றால் ஒன்றாம் வகுப்பில் படிக்க வேண்டும் என்பது தான் உலக வழக்கம். அந்த வயதில் ஒரு நூலை எழுதுவதென்பது யாரும் நினைத்துப் பார்க்காத ஒன்று. “இந்த வயசுல உனக்கெதுக்கு இந்த வேலை, நாலு ரைம்ஸ் சொல்லுஎன்று யாரேனும் சொல்லியிருந்தால் அந்த நூல் அரங்கேறியிருக்காது. எமிலி ரோஸாவிடம்முதல்ல நீ ஸ்கூல், காலேஜ் எல்லாம் முடி, அப்புறம் ஆராய்ச்சி பற்றிப் பேசலாம்என பெற்றோர் சொல்லியிருந்தால் அவருடைய சாதனை நிகழ்ந்திருக்காது !

நியதிகளை மீறிய செயல்களே சாதனைகளாய்ப் பதிவாகின்றன. வயதைக் காரணம் காட்டி செயல்களைத் தாமதப் படுத்தும் போது அவை சாதாரண வெற்றியாய்க் கூட  மாறாமல் போய்விடுகின்றன. இந்தியாவின் கிஷன் சிரீகாந்த் தன்னுடைய முதல் படத்தை இயக்கியபோது அவருக்கு வயது வெறும் ஒன்பது ! இயக்குனராய் வெற்றிக் கொடி கட்ட வயது ஒரு தடையல்ல என்பதை அவருடைய சாதனைப் படம் நிரூபித்துக் காட்டியது.

இளைஞர்களால் மட்டுமே செய்ய முடியும் எனும் சாதனைகளைச் சிறுவர்களாலும் செய்ய முடியும். சிறு வயதினரால் செய்ய முடிகின்ற விஷயங்களை முதியவர்களாலும் செய்ய முடியும். எதைச் செய்வதற்கும் வயது ஒரு தடையல்ல எனும் அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்டாலே போதுமானது !

ஜப்பானிலுள்ள டாமே வாட்டன்பே எனும் பெண்ணுக்கு எவரெஸ்டின் உச்சியை எட்டிப் பிடிக்க வேண்டும் எனும் ஆர்வம். தளராத முயற்சியின் முடிவில் அவர் எவரெஸ்டை எட்டிப் பிடித்தார். ஆனந்தத்தில் அவர் தனது கரங்களை உயர்த்தியபோது அவருக்கு வயது 63 !

வெற்றிபெறுவதற்கான முதல் தேவை வெற்றி பெற வேண்டும் எனும் வேட்கை தான். அந்த வேட்கையும் தேடலும் இருப்பவர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பதில்லை. எங்கே வாய்ப்புக் கிடைக்கிறது என்பதை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்தப் பயணத்தில் ரிஸ்க் எடுக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. இயங்கிக் கொண்டே, தேடிக்கொண்டே, பயணித்துக் கொண்டே இருப்பவர்கள் தான் வெற்றியடைகிறார்கள். ஓய்ந்து விட்டால் நம்மைச் சுற்றி தோல்வியின் கரையான்கள் கூடு கட்டி விடும். தலைக்கு மேல் வேதனையின் வல்லூறுகள் வட்டமிடவும் துவங்கும்.

நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டியது வெற்றிக்கான தேடலின் இன்னொரு தேவை. நம்மைச் சுற்றியிருக்கும் மக்கள் நமக்கான உற்சாகத்தை பல வேளைகளில் வழங்குவதில்லை. பெரும்பாலும் நமது உயர்வுகளுக்குக் குறுக்கே மதில் சுவர் கட்ட முடியுமா என்றே பார்ப்பார்கள். எனவே நம்மிடம் இருக்கும் தெளிவான இலக்கும், அதை நோக்கிய பயணத்தில் நம்மை நாமே உற்சாகப் படுத்திக் கொள்வதும் ரொம்பவே அவசியம்.

வெற்றிக்கு மிக அருகில் வந்து விட்டோம் என்பதை உணராமல் பலர் தங்கள் முயற்சிகளைக் கைவிட்டு விடுகிறார்கள். இதுவே மிகப்பெரிய தோல்விஎன்கிறார் தாமஸ் ஆல்வா எடிசன். பலரும் வெற்றி ஃபாஸ்ட் புட் போல சட்டென கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதனால் தான் ஏழே நாட்களில் வெள்ளையாகலாம், முப்பதே நாட்களில் ஒல்லியாகலாம், மூன்றே மாதத்தில் கோடீஸ்வரன் ஆகலாம் எனும் கூக்குரல்களுக்குப் பயங்கர கிராக்கி. பல்லாயிரம் முறை தோல்வியடைந்தாலும் வெற்றியடையும் வரை ஓடும் வேட்கையே சாதனைகளுக்குத் தேவை. தாமஸ் ஆல்வா எடிசன் அதையே செய்தார் !

கான்ஸ்டண்டைன் காலியாஸ் எனும் கிரீஸ் நாட்டு எழுத்தாளர் கிளான்ஸ் ஆஃப் மை லைஃப்எனும் நூலைக் கடைசியாக எழுதினார். 169 பக்கங்களுடன் நேர்த்தியாக எழுதப்பட்ட அந்த நூலை அவர் எழுதி வெளியிட்டபோது அவருக்கு வயது 101 ! 2003ம் ஆண்டு அவர் இந்த நூலை வெளியிட்டார். உலகின் மிக முதிய நூலாசிரியர் இவர் தான். ஒருவருடைய வயது, அவருடைய விருப்பத்துக்கும், இலட்சியத்துக்கும் இடையே நிற்க முடியாது என்பதை அவருடைய சாதனை எடுத்துக் காட்டுகிறது. 

சாதனையாளர்களெல்லாம் வெற்றியை ஏதோ சகஜமாக எட்டிப் பிடிக்கவில்லை, அதன் பின்னால் உழைப்பு உறைந்து கிடக்கிறது. “செயல்படக் கூடிய சின்ன அறிவு, செயல்படாமல் கிடக்கும் கடலளவு அறிவை விடப் பெரியதுஎன்கிறார் கலீல் ஜிப்ரான். ஐடியாக்களை மனதில் போட்டுப் புதைத்து வைப்பது பயனளிக்காது, அதை எப்படிச் செயல்படுத்துகிறோம் என்பதே முக்கியம் என்பதையே அவருடைய கருத்து படம் பிடிக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த சுவாமிநாத ஐயருக்கு படிப்பின் மீது அதீத ஆர்வம். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கணிதவியலில் அவர் எம்பில் பட்டம் பெற்றபோது வயது 84 ! உலகிலேயே முதிர் வயதில் தத்துவயிலலில் முதுகலைப் பட்டம் பெற்றவரும் இவரே. தனது 83வது வயதில் அந்த பட்டத்தை அவர் பெற்றார். கல்விக்கும், ஆர்வத்துக்கும், இலட்சியத்துக்கும் வயது எப்போதுமே தடையாய் இருப்பதில்லை என்பதையே அவருடைய பட்டங்கள் நமக்கு சத்தியம் பண்ணிச் சொல்கின்றன.

துணிச்சலும் ஆர்வமும் உடையவர்களை வெற்றி ஏமாற்றுவதில்லை. தங்கள் சொகுசு வளையத்தை விட்டு வெளியே வருபவர்கள் மட்டுமே அதை விட உன்னதமான இடங்களை அடைய முடியும். 

வெற்றி என்பது நீங்கள் எடுக்க வேண்டிய முடிவு என்கிறார் எழுத்தாளர் ஹென்ரிக் எட்பர்க். வெற்றி பெற வேண்டும் எனும் முடிவை நீங்கள் எடுத்து விட்டால் உங்களை யாரும் தோல்வியடையச் செய்ய  முடியாது என்கிறார் அவர். 

கடைசியாக ஒன்று ! வெற்றிக்கான தேடுதல் ஓட்டத்தில் நேர்மை, உண்மை, நம்பகத் தன்மை போன்றவற்றை தவற விடாதீர்கள். இல்லையேல் நீங்கள் அடையும் வெற்றி உண்மையான வெற்றியாய் இருப்பதில்லை.

வெற்றிக்கு வயதொன்றும் தடையல்ல

முயலாமல் முடங்குதல் விடையல்ல !