இந்தத் தடைகளைத் தாண்டுங்கள் !

நதியைக் கவனித்திருக்கிறீர்களா ? சமதளத்தில் மென்மையாக ஓடிக் கொண்டிருக்கும். பாறைகளின் இடையே ஓடும் போது சலசலவென தாவி ஓடும். அருவியில் வருகையில் உடைந்து வீழும். ஆனால் விழுந்த இடத்திலேயே காலொடிந்து கிடப்பதில்லை. ஆக்ரோஷம் கூட்டி இன்னும் அதிக வேகமாய் ஓடும் !
தடைகள் இல்லாத பயணமே கிடையாது. தடைகளைத் தாண்டி ஓட வேண்டும். ஐயையோ தடை வந்துவிட்டதே என உடைந்து போய் உட்கார்ந்தால் வெற்றி கிடைக்காது ! தடைகள் வரும்போது, வேகம் குறையலாம், அல்லது தாமதம் நேரலாம். ஆனால் முறியடித்து முன்னேறுவதில் தான் சாதனைகள் அடங்கியிருக்கின்றன !
இன்றைய இளைஞர்களின் முன்னே நிற்கும் முக்கியமான சிக்கல்களாக இவற்றைச் சொல்லலாம்.
போதை ! இன்று, நேற்றல்ல, எப்போதுமே ஒரு இளைஞனின் வெற்றியை வெட்டிப் போட போதைப் பழக்கம் மட்டுமே போதும். நிகோடினை நுரையீரலுக்கு நேரடியாய் இறக்கி வைக்கும் புகை அதில் முக்கியமான ஒன்று ! பள்ளிக்கூடப் படி தாண்டும் முன்பே பலருக்கும் புகை பழகிவிடுகிறது !
உலகில் எங்கே என்ன தடை செய்யப்பட்டாலும் அது நம்ம ஊரில் கிடைக்கிறது. இன்றைக்கு இளைஞர்களுக்கு போதை வஸ்துகள் எப்படி கிடைக்கின்றன என இங்கிலாட்ந்தில் ஒரு ஆய்வு நடத்தினார்கள். “நெட்ல எல்லா மேட்டரும் இருக்கு” என 64% இளைஞர்கள் பதில் சொன்னார்கள் !
தீபாவளி போன்ற விழா நாட்களில் டாஸ்மாக் விற்பனை மிரள வைக்கிறதா இல்லையா ?. போதைப் பொருட்களால் உடலுக்கு தீமை என 91% இளைஞர்கள் ஒத்துக் கொள்கின்றனர். ஆனால் அதை விட்டு விலகுவதில்லை.
புற்று நோய், மன அழுத்தம், சிறுநீரகப் பாதிப்பு, மூளை பாதிப்பு, நரம்பு பாதிப்பு என வரிசையாய் அத்தனை நோய்களையும் தந்து செல்லும் போதையைத் தாண்டுவது இளைஞர்கள் செய்ய வேண்டிய முதல் தடை தாண்டல் !
இணைய அடிமைத்தனம் ! உங்களுக்கு ஒரு அடிமை இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும் செய்வான். மாடியிலிருந்து குதிக்கச் சொன்னால் கூட குதிப்பான். எஜமானனை மீறி அவன் எதுவும் செய்ய மாட்டான். அவனுக்கு எல்லாமே எஜமானன் தான்.
இப்போது இணைய அடிமைத்தனத்துக்கு வருவோம். சிலருக்கு எல்லாமே இணையம் தான். குறிப்பாக இணையத்தில் பாலியல் சார்ந்த கிளர்ச்சிகளைத் தேடி அலையும் இளைஞர்கள் அந்த வலைக்கு முழு அடிமையாகி விடுகிறார்கள். போதைக்கு அடிமையாவது போல இணையத்துக்கு அடிமையாவதும் ஒரு மிகப்பெரிய பலவீனமே !
இணைய அடிமைகள் அடிமையாகும் இடங்கள் என்னென்ன தெரியுமா ? பாலியல், விளையாட்டு, சமூக வலைத்தளம், வலைப்பூக்கள், மின்னஞ்சல், சேட்டிங், ஷாப்பிங் இவையெல்லாம் தான் !
மருத்துவம் இதை இன்டர்நெட் அடிக்ஷன் டிஸார்டர் ( IAD ) என்கிறது. இணையம் எனும் அற்புதமான ஊடகம் சரியாகப் பயன்படுத்தினால் பாற்கடல். அதற்கு அடிமையாகிவிட்டாலோ அதுவே விஷமாகி மாறிவிடும் விஷயம் அது !
இளைஞர்கள் இன்றைக்குத் தாண்ட வேண்டிய இன்னொரு தடை இந்த இணைய அடிமைத்தனம்
வன்முறை சிந்தனை ! வீரத்தையும், சண்டித்தனத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ளும் இளைஞர்களிடம் தேவையற்ற வன்முறை சிந்தனை மேலோங்கி இருக்கிறது.
ஒரு காலத்தில் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் மட்டும் தான் பள்ளி, கல்லூரிகளில் வன்முறை வெறியாட்டம் நடக்கும். இன்று நமது தெருக்களிலும் நடக்கின்றன. அமெரிக்காவில் கல்வி நிலையங்களில் கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் மட்டும் 147. மொத்த எண்ணிக்கை 359 என்கிறது ஒரு புள்ளி விவரம்.
ஆசிரியையை கத்தியால் குத்திக் கொல்கிறான் மாணவன், ஆசிரியர் அடித்ததால் மாணவனுடைய கை செயலிழந்து விட்டதாய் வேளச்சேரி வீதிப் போராட்டம் நடத்துகிறது. ஆசிரியர் அடித்ததால் மாணவனின் காது கேட்கவில்லை என இன்னோர் மாநிலத்தில் குரல் எழுகிறது.
சமீபத்தில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்கள் செய்த நிகழ்வு நெகிழ வைத்தது. 50 ஆண்டுகளுக்குப் பின் தங்கள் ஆசிரியர்களையெல்லாம் வரிசையாய் நிற்க வைத்து அவர்கள் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்தார்கள். பழைய ஆசிரியர் – மாணவர் உறவு இப்படி இருந்தது. ஆசிரியர்களிடம் மாணவர்களை பெற்றோர் முழுமையாய் ஒப்படைத்தார்கள். ஆசிரியர்களை தெய்வங்களாய் மதிக்குமளவுக்கு அவர்களுடைய வழிகாட்டல் இருந்தது.
இப்போது எல்லாம் மாறிவிட்டது. ஆசிரியர்களை பாடங்கள் சொல்லித் தரும் பணியாளர்களாய் தான் பெற்றோர் பார்க்கின்றனர். பெரும்பாலான ஆசிரியர்களும் இதை மாத ஊதியம் தரும் ஒரு வேலையாகத் தான் பார்க்கிறார்கள். மாணவர்களின் மனதில் வன்முறை எண்ணங்கள் பெருக நல்வழிப்படுத்தாத ஆசிரியர்கள் ஒரு காரணம். ஆசிரியர்களுக்கு அந்த உரிமையைக் கொடுக்காத பெற்றோர் இன்னொரு காரணம்.
போதாக்குறைக்கு தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், போன்றவை வன்முறையையும், அதன் நுணுக்கங்களையும் சொல்லித் தந்து விடுகின்றன. தார்மீகக் கோபம் கொண்டு சமூக அவலங்களுக்கு எதிராகப் போராட வேண்டியது இளைஞனின் பணி. மற்றபடி தேவையற்ற வன்முறை சிந்தனை இளைஞர்கள் தாண்ட வேண்டிய இன்னொரு தடை !
உடல் நலம் பேணாமை ! மேலைநாட்டு பிரச்சினையாய் இருந்த “ஒபிசிடி” எனும் அதிக உடல் பருமன் இன்றைக்கு வீட்டுக்கு வீடு ! காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை மற்றும் உணவு முறை !
பழைய வாழ்க்கை இளைஞர்களை நடக்க வைத்தது. அவர்கள் உடல் உழைப்பை செலுத்தினார்கள். ஓய்வு நேரத்தில் நீச்சலடித்தார்கள், ஓடியாடி விளையாடினார்கள். உடல் கட்டுக் கோப்பாய் இருந்தது.
இன்றைக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அலுவலகத்துக்கே காரோ, பைக்கோ தேவைப்படுகிறது. முதலாவது மாடிக்கு மூச்சிரைக்காமல் போக லிஃப்ட் தேவைப்படுகிறது. ஓய்வு நேரத்தில் ஆடாமல் அசையாமல் தொலைக்காட்சி ! இன்னும் நேரம் கிடைத்தால் வீடியோ கேம், அல்லது இன்டர்நெட்.
இப்படி, உடலானது பராமரிப்பில்லாத ஒரு கூடாரம் போல சிதிலமடைந்துக் கிடக்கிறது. பல இளைஞர்கள் பெயரளவில் இளைஞர்கள், உடலளவில் முதியவர்கள் என்பது தான் உண்மை ! இளைஞர்கள் தாண்ட வேண்டிய இன்னொரு தடை இது !
நாகரீகமின்மை ! மருத்துவ மனை வாசலில் டாக்டருக்காய் கவலையுடன் காத்திருக்கும் இடைவெளியில் ஒலிக்கிறது ஒரு இளைஞனின் தொலைபேசி. “ஒய் திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி..”. மருத்துவமனையில் பல்வேறு கவலைகளுடனும், துயரங்களுடனும் காத்திருக்கும் மக்களுக்கு எரிச்சலை உருவாக்குகிறது அது ! இளைஞனோ எதையும் கண்டு கொள்ளவில்லை, ஆமை வேகத்தில் தொலை பேசுகிறான் !
மருத்துவமனை, நூலகம், தொழுகை கூடங்கள் இவற்றிலெல்லாம் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும் என்பது அடிப்படை நாகரீகம் !
பொது இடத்தில் அமைதியைக் கடை பிடிப்பது. பண்புடன் நடந்து கொள்வது. பெரியவர்களிடம் அன்புடன் நடந்து கொள்வது. சமூகக் கடமையோடு இருப்பது என இளைஞர்கள் கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு.
“இந்தக் காலத்துப் பசங்க நாகரீகம் இல்லாதவங்க….” எனும் குற்றச்சாட்டைத் தாண்ட ஒரு கட்டாயத் தாவல் அவசியம்.
தவறான முன்னுதாரணங்கள் ! “ஒரு முன்னுதாரணத்தைப் போல நம்மைப் பாதிப்பது எதுவும் இல்லை” என்கிறார் ஃபிரஞ்ச் மேதை பிரான்கோயிஸ்.
பண்டைய காலத்தில் குருகுலத்தில் குருவை முன்னுதாரணமாய்க் கொண்டு அறிவிலும் ஞானத்திலும் வளர்ந்தார்கள் நமது தமிழ் இளைஞர்கள். இன்றைக்கு அவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பவர்கள் பெரும்பாலும் திரை வசீகரங்களோ, விளையாட்டு வீரர்களோ, அல்லது பணக்கார தலைவர்களோ தான்.
அதிலென்ன தப்பு என்று கேட்பவர்கள் உண்டு. வெற்றியாளர்களின் வாழ்க்கையை அலசி, நல்ல அம்சங்களை எடுத்தால் பாராட்டலாம். ஆனால் பெரும்பாலும் நாம் அவர்களுடைய புகழ் பாடும் சுவரொட்டிகளாக மாறி விடுகிறோம்.
ஒரு நல்ல முன்னுதாரணத்தையும், ஒரு நல்ல வழிகாட்டியையும் கொண்டிருப்பது வெற்றிக் கதவை தொட்டுத் திறக்க அவசியத் தேவை !
தவறான முன்னுதாரணங்களைத் தாண்டி ஓட வேண்டியது இளைஞர்கள் செய்ய வேண்டிய அடுத்த தாவல் !
உறவுகளோடான சிக்கல்கள் : “பிரண்ட் என் கூட பேச மாட்டேங்கறா… நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று எழுதி வைத்து விட்டு பதின் வயது மாணவி தற்கொலை செய்து கொள்கிறாள். “விடுதியில் மாணவர்கள் கிண்டலடிக்கிறார்கள்” என்று சொல்லி விடுதி மாணவன் தூக்கில் தொங்குகிறான். காதலி மறுத்தாள் என அவள் வீட்டு முன்னால் உயிரை மாய்க்கிறான் காதலன்.
இளைஞர்கள் உறவு ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லாமல் இருக்கிறார்களோ என அச்சமாக இருக்கிறது. தனது சாவின் மூலம் இன்னொருவருக்குப் பாடம் புகட்ட நினைக்கும் தவறான மனநிலை இது. நண்பனுக்கு இன்னோர் நண்பன் கிடைப்பான், தோழிக்கு இன்னோர் தோழி, காதலிக்கு இன்னோர் காதலன். இழப்பு என்னவோ இறந்தவனுக்கு மட்டுமே ! இதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மூன்று விஷயங்கள் முக்கியத் தேவை. விமர்சனங்களில் உடைந்து போய்விடாத மனம். அடுத்தவர்களோடு ஒப்பிட்டு தாழ்வு கொள்ளாத மனம். இணைந்து வாழும் ஆனந்த மனம். அவ்வளவு தான். இணைந்து வாழும் இளைஞர்கள் மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்கிறது உளவியல் !
உறவுச் சிக்கல்கள், இளைஞர்கள் தாண்டவேண்டிய இன்னொரு தடைக்கல்.
மனம் சார்ந்த சிக்கல்கள்: இளைஞர்களுடைய மன அழுத்தம் பெரும்பாலும் அடுத்தவர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. முதல் மார்க் வாங்காவிட்டால் ஏதோ சாவான பாவம் செய்தது போல பிள்ளைகளைப் பார்க்கும் பெற்றோர் உண்டு. விருப்பமில்லாத படிப்புக்காய் தலையணை புத்தகங்களுடன் மன அழுத்தத்தைச் சுமக்கும் மாணவர்கள் உண்டு.
போதாக்குறைக்கு சினிமா, விளம்பரங்கள், ஊடகங்கள் போன்றவை ஏகப்பட்ட நிர்ப்பந்தங்கள் இடுகின்றன. “உங்கள் வாழ்க்கை இப்படி இருக்க வேண்டும்”, “இந்த வீடு தான் வேண்டும், இந்தக் கார் தான் வேண்டும், இந்த சுற்றுலா வேண்டும்” என்றெல்லாம் ஊடகங்கள் சொல்லும் விதிமுறைகள் இளைஞர்களை மன அழுத்தத்தில் தள்ளுவதுண்டு.
தன்னை அறிந்து, தன் ஆழ்மன விருப்பத்துக்கேற்ற ஒரு இலட்சியத்தை அமைத்துக் கொள்வதும், வெற்றியும் தோல்வியும் வாழ்வின் பாகங்கள் என புரிந்து கொள்வதுமே இளைஞர்களின் தேவை.
மன அழுத்தத்தையும் இளைஞர்கள் தாண்டி விட்டால் அவர்கள் வெற்றியின் முற்றத்தை எட்டி விட்டார்கள் என்பதே பொருள்.
துருவான மனதைத் துலக்கு
வெற்றி மட்டுமே இலக்கு
Like this:
Like Loading...