USB Drive : கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா ?

Image result for USB

‘ஃபிளாப்பி டிஸ்ட்’ பார்த்திருக்கிறீர்களா ? நீங்கள் ‘இல்லை’ என்று சொன்னாலும் நான் ஆச்சரியப் படப் போவதில்லை. காரணம் இன்றைக்கு அது அருங்காட்சியகத்தில் ஆதிமனிதனைப் போல போல சைலன்டாகப் போய் அமர்ந்து விட்டது. ஆனால் ஒரு பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிலமை இப்படி அல்ல. ஃப்ளாப்பி டிஸ்க் ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு சுற்றுவதை ஒரு கௌரவமாகவே பார்த்த தலைமுறை அது ! அதன் சேமிப்பு அளவே 1.44 மெகா பைட் தான் என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கும்.

இப்போது ஃப்ளாப்பி டிஸ்க் முற்றிலுமாக வழக்கொழிந்து போய்விட்டது. கணினி நிறுவனங்களும் தங்கள் கணினிகளை ஃப்ளாப்பியைப் பயன்படுத்தும் வகையில் உருவாக்குவதை நிறுத்தி விட்டார்கள். அதற்கு ஒரு காரணம் அதி விரைவாகவும், திறமாகவும், சக்தியுடனும் இருக்கும் யு.எஸ்.பி டிரைவ்கள் தான்.

எம்.சிஸ்டம்ஸ் எனும் இஸ்ரேல் நிறுவனத்தைச் சேர்ந்த அமிர் பார், டோவ் மோரான் மற்றும் ஓரோன் ஓக்டான் ஆகியோர் இணைந்து தான் இந்த யூ.எஸ்.பி ஃப்ளாஷ் டிரைவுக்கான முதல் முயற்சியின் வெற்றியைப் பகிர்ந்து கொண்டார்கள். ஏப்ரல் 1999ம் ஆண்டு அவர்கள் இதற்கான காப்புரிமையை வாங்கினார்கள். உலகம் 2000 எனும் மைல் கல்லை எட்டிய ஆண்டின் செப்டம்பர் மாதம் டிஸ்க்-ஆன் – கீ (Disk On Key ) எனும் பெயரில் முதல் தயாரிப்பையும் வெளியிட்டார்கள். சிங்கப்பூரிலுள்ள டிரெக் டெக்னாலஜி, நெட்டாக் டெக்னாலஜி போன்ற நிறுவனங்களெல்லாம் தாங்கள் தான் இதன் உண்மைச் சொந்தக்காரர்கள் என கேஸ் போட்டதும், மல்லுக்கு நின்றதும் இங்கே விவரிக்காத தனிக்கதை.

டிரக் டெக்னாலஜி, ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் 2000 ஆண்டில் தங்களது தயாரிப்பையும் சந்தையில் கொண்டு வந்தார்கள். இதில் டிரக் டெக்னாலஜி தனது தயாரிப்பை “தம்ப் டிரைவ்” (Thumb Drive) என்று பெயரிட்டு அழைத்தது. ஐபிஎம் தனது தயாரிப்பை டிஸ்க் ஆன் கீ என பெயரிட்டழைத்தது. முதலில் அது வெளியிட்ட தயாரிப்பில் சேமிப்பு அளவு 8 எம்பி தான். ஃப்ளாப்பி டிஸ்களை விட ஐந்து மடங்கு அதிக சேமிப்புத் திறன் என அப்போது கொட்டமடித்து அதை விற்றார்கள்.

இந்த சேமிப்பு கருவியின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இதிலுள்ள மெமரி பகுதிகளை மின் முறைப்படி அழிக்கலாம், மீண்டும் எழுதலாம் என்பது தான். EEPROM (Electrically Erasable Programmable read-only memory )  எனும் பழைய முறை தான் இதன் அடிப்படையில் இயங்கும் தொழில் நுட்பம். இந்த பழைய நுட்பம் பெரிய பெரிய மெமரி பகுதிகளை அழிக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருந்தது. புது யூ.எஸ்.பி டிஸ்க் களில் குட்டிக் குட்டி நினைவிடங்களைக் கூட துல்லியமாக அழிக்க முடியும். கூடவே பெரிய பிளாக் களை அழிப்பதும் மிக சுலபம். இதன் வேகம் அதிகமாய் இருக்க இவை தான் காரணம்.

நாம் இப்போதெல்லாம் கையில் வைத்திருக்கும் யு.எஸ்.பி ஃப்ளாஷ் டிரைவ்களில் பழைய காலத்தோடு ஒப்பிடும்போது பல ஆயிரம் மடங்கு அதிக தகவலைச் சேமிக்க முடியும். ஒரு சுண்டுவிரல் அளவுள்ள டிரைவ்கள் 256 ஜிபி கொள்ளளவு என்றெல்லாம் வியக்க வைக்கின்றன. நாளை இது பல டெராஃபைட், ஸீட்டா பைட் என எகிறிக் குதித்து ஓடும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. காரணம் 2 டெர்ரா பைட் அளவுள்ள பென் டிரைவ்களை உருவாக்கும் முயற்சி இப்போது நடந்து கொண்டிருக்கிறது

இந்த யூ.எஸ்.பி டிரைவ்களில் பெயரில் தான் ‘டிரைவ்’ இருக்கும். ஆனால் எதுவுமே நகராது என்பது இதன் பிளஸ் பாயின்ட் ! பழங்கால ப்ளாப்பி டிரைவ்கள், டிஸ்க்கள், சிடி ரோம்கள் போன்ற ஒட்டு மொத்த சங்கதிகளையும் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் போட்டுவிட்டது இந்த யூ.எஸ்.பி டிரைவ்.

இந்த யூ.எஸ்.பி டிரைவ்கள் சர்வதேச “யூ.எஸ்.பி மாஸ் ஸ்டோரேஜ்” தரத்தையே அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. இன்றைய பெரும்பாலான செயலிகளில் இயங்கக் கூடிய வகையில் அந்த தரநிர்ணயம் இருப்பது சிறப்பம்சம். வின்டோஸ் தவிர, லினெக்ஸ், மேக்,யுனிக்ஸ் போன்ற பல செயலிகளில் எந்தச் சிக்கலும் இல்லாமல் இது இயங்கும்.

ஒரு பிரிண்டட் சர்க்கியூட் போர்ட் இதனுள் இருக்கும் கூடவே ஒரு கனெக்டர். இந்த யூ.எஸ்.பி டிரைவ் வேலை செய்ய வேண்டுமென்றால் சக்தி தேவைப்படும். அந்த சக்தியை டிரைவ் ஆனது இணைக்கப்பட்டுள்ள கணினியிலிருந்தோ அல்லது வேறு மின் கருவிகளிலிருந்தோ தான் பெற்றுக் கொள்கிறது.

USB2.0 தான் மிகவும் பிரபலமான இரண்டாவது தலைமுறை யூ.எஸ்..பி இணைப்பு தொழில் நுட்பம். அதிகபட்சமாய் வினாடிக்கு 60 மெகா பைட் அளவுக்கு தகவல்களை இது எழுதவும், வாசிக்கவும் செய்யும். இதற்கு முந்தைய முதலைமுறை யூ.எஸ்.பி இணைப்பான USB 1.1 ன் சக்தி என்பது வினாடிக்கு 1.5 மெகா பைட் எனுமளவில் தகவல் பரிமாற்றத்தைச் செய்தது என்பது சுவாரஸ்யமான ஒப்பீட்டுச் செய்தி !

2008ம் ஆண்டு இதன் அடுத்த படியான USB 3.0 தயாரானது. வினாடிக்கு 625 மெகா பைட் என்பது இதன் அளவு. 2008ல் அறிமுகமானாலும் அது உடனே பயன்பாட்டில் வரவில்லை. 2010 ம் ஆண்டு முதல் இது பயன்பாட்டுக்கு வந்தது. இருந்தாலும் பழைய முறை முழுமையாக நிறுத்தப்படாமல் இன்னும் தொடர்கிறது.  இன்றைய கணினிகளை கவனித்தால் உங்களுக்கே தெரியும், அவையெல்லாம் USB 2.0 மற்றும் USB 3.0 எனும் இரண்டு வகை போர்ட் களுடனும் தான் தயாராகின்றன.

யூ.எஸ்.பி களில் முக்கியமாக நான்கு பாகங்கள் உண்டு. முதலாவது கணினிக்கும், ஃப்ளாஷ் டிரைவ்க்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்துக்கு உதவும் பிளக். இதை ஸ்டான்டர்ட் A யூ.எஸ்.பி பிளக் ( Standard A USB Plug) என்கிறார்கள். இரண்டாவது NAND ஃப்ளாஷ் மெமரி சிப். சாதாரண டிஜிடல் கேமராக்களில் பயன்படுத்தப்படுவது இந்தப் பகுதி மட்டும் தான். யூ.எஸ்பி மாஸ் ஸ்டோரேஜ் கன்ட்ரோலர். இதில் ஒரு சின்ன மைக்ரோ கன்ட்ரோலரும் இருக்கும். இது தான் யூ.எஸ்.பியின் செயல்பாடுகளை நெறிப்படுத்தும் பகுதி. இவற்றையெல்லாம் ஒரு பிளாஸ்டிக் அல்லது மெல்லிய உலோக ஆடைக்குள் அடைத்து விட்டால் நம் கையில் இருக்கும் ஃப்ளாஷ் டிரைவ் ரெடி !

ஃப்ளாஷ் டிரைவ்களில் இரண்டு விதமான தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதை மல்டி லெவல் செல் (Multi Level Cell) மற்றும் சிங்கில் லெவல் செல் (Single Level Cell) என்று அழைக்கிறார்கள். பெரும்பாலான மெமரி கார்ட்கள் மல்டி லெவல் செல் அதாவது பல அடுக்கு சேமிப்பு எனும் நுட்பத்தின் அடிப்படையிலானவையே. மிகச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் ஒரு நினைவிட துணுக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்களைச் சேமிக்க முடிந்தால் அது மல்டி லெவல் சேமிப்பு. ஒரு தகவல் மட்டும் சேமிக்க முடிந்தால் அது சிங்கிள் லெவல் செல். மல்டி லெவல் செல்லில் நீங்கள் சுமார் 10 ஆயிரம் முறை தகவல்களை அழித்து அழித்து எழுதலாம். அதுவரை தாக்குப் பிடிக்கும். அதுவே சிங்கிள் எனில் ஒரு இலட்சம் தடவை நீங்கள் அழித்து எழுதினாலும் பாழாகாது என்பது வியப்பூட்டும் அம்சம்.

இன்றைக்கு இவை ரொம்பவே குட்டி வடிவத்துக்கு வந்து விட்டதால் பல வடிவங்களில் விற்பனைக்கு வந்துவிட்டது. பேனா, வாட்ச்கள், கத்தி, விளையாட்டுப் பொருட்கள், கீ செயின் என பலவற்றிலும் இந்த ஃப்ளாஷ் டிரைவ்கள் வந்து விட்டன.  இதில் ஏகப்பட்ட மேட் இன் டுபாக்கூர்கள் உண்டு என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். எட்டு ஜிபி என கூவி விற்பார்கள். வாங்கி கணினியில் போட்டால் அது எட்டு ஜிபி என காட்டும். ஆனால் நீங்கள் சேமிக்கத் துவங்கும் போது கொஞ்சம் சேமித்த உடனே, “நான் ஃபுல் ஆயிட்டேம்”பா என கை விரிக்கும் ! எனவே இந்த டிரைவ் விஷயத்தில் நம்பிக்கையான தயாரிப்புகளை வாங்குவதே ரொம்ப நல்லது !

சரி இதை எதற்குப் பயன்படுத்தலாம் என்று கேட்டால் அடிக்க வருவீர்கள். இருந்தாலும் சொல்கிறேன். நமக்குத் தெரிந்ததெல்லாம் தகவல் சேமிப்பு தான். கொஞ்சம் எம்பி3 பாடல்கள், கொஞ்சம் திருட்டு வீடியோக்கள், அல்லது கொஞ்சம் டேட்டா ஃபைல்கள். இதைத் தாண்டிய பயன்பாடு ரொம்பவே குறைவு. ஆனால் தொழில்நுட்பம் இதை பல வேறு பயன்பாடுகளுக்குள்ளும் இட்டுச் செல்கிறது. சில மென்பொருட்கள் ஃப்ளாஷ் டிரைவகளில் வருகின்றன. அவை அங்கிருந்தே இயங்கவும் செய்கின்றன. கணினியில் மென்பொருட்களை நிறுவவேண்டும் எனும் தேவை இதன் மூலம் இல்லாமல் போய்விடுகிறது. இதை சாஃப்ட்வேர் விர்சுவலைசேஷன் (Software Virtualization) என்கிறார்கள்.

ஆப்பிள் இங்க். போன்ற சில நிறுவனங்கள் தங்கள் கணினியின் முழு ரீஸ்டோர் ஃபைல்களையும் இத்தகைய ஃப்ளாஷ் டிரைவ்களில் தந்து விடுகிறார்கள். ஒருவேளை கணினி பழுதாகிப் போனால் இந்த டிரைவைப் போட்டு இயக்க வேண்டியது தான் பாக்கி ! பழைய முறைகளான சிடி, டிவிடி போன்ற சமாச்சாரங்களெல்லாம் இதன் மூலம் ஓரங்கட்டப்பட்டு விட்டன.

இன்னொரு சுவாரஸ்யமான அம்சமாக இதில் காஃபியை ஊற்றி கணினியை உளவு பாக்கும் வேலையையும் செய்யலாம். நான் காஃபி (COFFEE) என்று சொன்னது Computer Online Forensic Evidence Extractor எனும் மென்பொருளை என முதலிலேயே சொல்லி விடுகிறேன். இதற்கு மேலும் நீங்கள் மெமரி கார்டில் காஃபி கொட்டினால் அதற்கு நான் பொறுப்பல்ல. இந்த மென்பொருள் டிரைவில் அமர்ந்து கொண்டு கணினியை முழுக்க வேவு பார்த்து சொல்லி விடும். கணினியிலுள்ள எந்த ஒரு அமைப்பையும் மாற்றாது !

அதே போல வின்டோஸ் தனது செயலியை ஒரு சின்ன டிரைவில் போட்டு “வின்டோஸ் டு கோ” என விற்பனை செய்வது இன்னொரு விஷயம். இவையெல்லாம் ஒரு சில சாம்பிள்களே, இத்தகைய பயன்கள் இன்னும் பல உண்டு.

இப்போது இத்தகைய பிளாஷ் டிரைவ் களிலும் பல அடுக்குப் பாதுகாப்புகள் வந்து விட்டன.. உங்கள் கைரேகை கொடுத்தால் தான் வேலை செய்ய ஆரம்பிப்பேன் என அடம்பிடிக்கும் பயோ மெட்ரிக் (Biometric) தொழில் நுட்பம் முதல், சொன்னதை குண்டக்க மண்டக்க என எழுதி மற்றவர்களைக் குழப்பும் என்கிரிப்ஷன்(Encryption) வரை எல்லாம் இதில் உண்டு. பயன்பாடு அதிகரிக்கும் போது பாதுகாப்பும் அதிகரிக்க வேண்டியது காலத்தின் தேவையல்லவா !

இன்றைக்கு யூ.எஸ்.பி டிரைவ் இல்லாத கணினிகளே கிடையாது. இதற்காக தனியே டிரைவர் மென்பொருட்களை நிறுவவேண்டும் எனும் காலமும் மலையேறிப் போய்விட்டது. எங்கும் எளிதில் தூக்கிச் செல்லலாம், கனம் குறைவு, பயன்பாடு அதிகம், சேதமாகும் வாய்ப்பு குறைவு போன்ற பல்வேறு நன்மைகள் இந்த டிரைவ்களின் பயன்பாட்டை வானளாவ உயர்த்தியிருக்கின்றன.

நீங்கள் அலட்சியமாய் பாக்கெட்டில் தூக்கிப் போட்டுத் திரியும் யூ.எஸ்.பி டிரைவ்க்குப் பின்னால் இத்தனை விஷயம் இருப்பதே வியப்பு தான் இல்லையா ? அடுத்த முறை கடைக்குப் போகும் போது  ‘யூனிவர்சல் சீரியல் பஸ் டிரைவ்” ஒண்ணு குடுங்க என கேட்டுப் பாருங்கள். புரியலையா ? யூ.எஸ்.பி யின் விரிவாக்கம் தான் “யூனிவர்சல் சீரியல் பஸ்” (Universal Serial Bus) என்பது ! உங்கள் மெமரியில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

Advertisements

I.O.T : நாளைய இணையம் !

Image result for IOT

“இன்டர்நெட் ன்னா என்னங்க ? ” என யாரிடமாவது கேட்டால் நம்மைப் பார்த்து அவர்கள் வயிறு வலிக்கச் சிரிக்கக் கூடும். “இந்தியாவுக்குச் சுதந்திரம் கெடச்சுடுச்சா?” என கேட்பதைப் போல அதரப் பழசான விஷயமாகிப் போய்விட்டது அது !

இணையம் வந்த காலத்தில் ஒரு மின்னஞ்சல் வைத்திருப்பது கௌரவமாகப் பார்க்கப் பட்டது. “ஒரு மெயில் அனுப்பிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு இன்டர்நெட் கஃபேக்குப் போவது அப்போதைய இளசுகளின் “ஸ்டைல்” ! அங்கே கியூவில் நின்று ஒரு மெயில் அனுப்பி விட்டு வருகையில் ஏதோ தொழில்நுட்பத்தையே கரைத்துக் குடித்த பெருமை அவர்கள் முகத்தில் மிளிரும்.

பிறகு கம்ப்யூட்டர்கள் விலை குறைந்தன. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்தது. கணினிகள் வீடுகளின் அறைகளுக்குள் வந்து விட்டன. போன் வயரைக் கனெக்ட் பண்ணி இன்டர்நெட்டில் கட்டை வண்டி மாதிரி பயணித்தோம். பிறகு அறைக் கணினிகள், மடிக்கணினிகளால் மவுசு இழந்தன. போன் வயர் டயல் இணைய சேவையானது பிராட்பேண்ட்களால் காணாமல் போச்சு.

பின்னர் டேட்டா கார்ட், வயர்லெஸ், பிராட்பேண்ட் வயர்லெஸ் என இணைய வகைகள் வந்து நிலமையை படு சுலபமாக்கிவிட்டன. இப்போது மடிக்கணினிகளும் மவுசை இழக்கத் துவங்கிவிட்டன. கைகளுக்கும், சட்டைப் பைகளுக்குமாய் ஓடித் திரியும் ஸ்மார்ட் போன்கள் இணையத்தை விரல் சொடுக்கில் தொட்டுத் திரும்புகின்றன.

இந்த நிலையைத் தாண்டி என்ன தான் வரப் போகிறது எனும் ஆர்வம் எப்போதுமே மனசில் இருக்கும். ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படம் போல ஏதோ ஒரு வசீகரம் நம்மை எப்போதுமே புரட்டிப் போடுகிறது இல்லையா ? அப்படி ஒரு வியப்பூட்டும் நிலையை இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் ( IOF : Internet Of Things ) உருவாக்கும்.

ஒரு தகவல் தேவைப்படுகிறது என வைத்துக் கொள்ளுங்கள். சட்டென “கூகிள்” பக்கத்துக்குத் தாவி வார்த்தையை டைப் செய்து மவுஸைச் சொடுக்குவீர்கள் இல்லையா ? அது உங்கள் விண்ணப்பத்துக்குத் தேவையான பக்கங்களை அள்ளிக் கொண்டு வந்து தரும். இப்போது டைப் கூட செய்யத் தேவையில்லை, பேசினாலே போதும் என்பது புது வரவு !

அப்படி வந்து சேரும் பக்கங்களில் உங்களுக்கு என்ன தேவையோ அதை எடுத்துக் கொள்ளலாம் என்பதே இன்றைய நிலை. இதில் அடிப்படை என்னவென்றால், தகவல்கள் இணையத்தில் இருக்க வேண்டும். யாரோ ஒருவர், எங்கோ ஒரு மூலையில் ஒரு தகவலை இணையத்தில் சேமித்து வைத்தால் மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும்.

அதுவும் தகவல்கள் மட்டுமே இப்போதைக்கு நமக்குக் கிடைக்கும் இல்லையா ? இதை இன்டர்நெட் ஆஃப் டேட்டா ( Internet of Data) எனலாம். அதாவது தகவல்களுக்கான இணையம்.

இதை அப்படியே கொஞ்சம் வசீகரக் கற்பனையில் விரித்துப் பாருங்கள். உலகில் இருக்கின்ற பொருட்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் ? நம்ம வீட்டுக் கொல்லையில் இருக்கும் பலா மரம் முதல், வெள்ளை மாளிகையில் இருக்கும் ஒபாமா வீட்டு நாய்க்குட்டி வரை எல்லாமே இணைக்கப் பட்டிருந்தால் எப்படி இருக்கும் ? உலகிலுள்ள எந்தப் பொருளை வேண்டுமானாலும், ஒரு தனிப்பட்ட அடையாளத்தின் மூலம் கண்டறிய முடிந்தால் எப்படி இருக்கும் ? இப்படி எழுந்த ஏகப்பட்ட “எப்படி இருக்கும்” எனும் கேள்விகளுக்கான விடையாகத் தான் வரப் போகிறது “இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்” அல்லது பொருட்களின் இணையம்.

“இணையம் என்றால் என்ன ? “ உலக அளவிலான வலையமைப்பு ஒன்று கணினி நெட்வர்க்களை ஒரு நேர்த்தியான தகவல் பரிமாற்ற இணைப்பு மூலம் (TCP/IP) இணைப்பது. “பொருட்கள்” என்பது என்ன ? “நம்மைச் சுற்றியுள்ள ஸ்பெஷல் அடையாளம் உள்ள, அல்லது தனித்துவ அடையாளம் இல்லாத விஷயங்கள்”. இந்த இரண்டையும் இணைத்துப் பாருங்கள். நம்மைச் சுற்றியுள்ள எல்லா விஷயங்களையும் தனித்துவ அடையாளம் மூலம் இனம் காண முடியும் ஒரு வலையமைப்பு. இது தான் “இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்”. என்னால் சொல்ல முடிந்த மிக எளிய விளக்கம் இது தான். தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள், இன்டர்வியூக்களில் கேட்கப்படலாம் !

இதன் மூலம் உலகிலுள்ள பொருட்களுக்கெல்லாம் தனியே “அறிவு” வந்துவிடும். அதாவது செயற்கை அறிவு. உதாரணமாக இப்போதெல்லாம் காரில் ரிவர்ஸ் “சென்சார்கள்” இருப்பதை அறிவீர்கள் தானே. காரை பின்னோக்கி எடுக்கும்போது வண்டி எதிலாவது மோதுமா ?, எத்தனை தூரத்தில் தடை இருக்கிறது? என்பதை காரின் பின்னால் இருக்கும் சென்சார்கள் கவனித்துச் சொல்கின்றன. இதன் மூலம் காருக்கு ஒரு சின்ன “செயற்கை அறிவு” கிடைத்து விடுகிறது இல்லையா ? இப்படி ஒவ்வொரு சூழலுக்கும், ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு இடத்துக்கும் செயற்கை அறிவு கிடைப்பது தான் விஷயம்.

இதன் மூலம் பொருட்களை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், பொருட்கள் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்ளவும், சூழலோடு பேசிக்கொள்ளவும், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் முடியும். குழப்பமாக இருக்கிறதா ? ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். கூகிள் கார் கேள்விப்பட்டிருப்பீர்கள். டிரைவரே இல்லாமல் தனியே ஓடக் கூடிய கார் அது. நீங்கள் எங்கே செல்ல வேண்டும் எனும் தகவலை அதனிடம் சொல்லிவிட்டால் கார் உங்களைக் கூட்டிக் கொண்டு பத்திரமாய் அந்த இடத்தில் கொண்டு சேர்க்கும்.

சில ஆயிரம் மைல் தூரங்கள் ஆனாலும் கார் தொடர்ந்து பயணிக்கும். டிராபிக் வரும்போது வண்டியை நிதானமாக்கும், சாலை ஓரங்களில் இருக்கும் சிக்னல்களைக் கவனித்து அதன்படி நடக்கும், ஸ்பீட் லிமிட் போர்ட்கள் இருந்தால் அதன் படி காரை இயக்கும். பெட்ரோல் தீரப் போகிறது எனில் சொல்லும். கூடவே அடுத்த பெட்ரோல் பங்க் எங்கே இருக்கிறது, எவ்வளவு நேரம் ஆகும் எனும் சகல ஜாதகத்தையும் சொல்லும். மதிய வேளை ஆனால், “இன்னும் நாலு மைல் தூரத்துல ஒரு பிரியாணி கடை வருது நிப்பாட்டவா ?” என கேட்கும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சின்ன வயசில் படித்த அலாவுதீன் கதை உங்களுக்கு ஞாபகம் வருகிறதா ?

இங்கே, கார் அதைச் சுற்றியிருந்த சிக்னல் லைட், தகவல் போர்ட், டிராபிக், டைம், காலநிலை என பல விஷயங்களோடு “கம்யூனிகேட்” செய்தது. அதாவது உரையாடியது, அல்லது தகவலைப் பெற்றுக் கொண்டது ! அதன் மூலம் தனது வேலையை கட்சிதமாய் முடித்தது. இந்த முறையில் விபத்துகள் கணிசமாகக் குறையும் என கணித்திருக்கிறார்கள். இது இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் – ன் ஒரு சின்ன சாம்பிள்.

RFID – ஞாபகம் இருக்கிறதா ? NFC பற்றிப் பேசியபோது நாம் பார்த்தோம்.
ரேடியோ பிரீக்வன்ஸி ஐடன்டிபிகேஷன் ( Radio-frequency identification) என்பதன் ரத்தினச் சுருக்கம் தான் RFID. ஒரு பொருளிலுள்ள “டேக்” ( tag) வானொலி அலை மூலமாக ஒரு தகவலை பரிமாற்றுவது தான் இதன் அடிப்படை. காரில் போகும்போது காணும் ஒரு விளம்பரச் சுவரொட்டியிலுள்ள ஒரு டேக் உங்கள் கையிலுள்ள ஸ்மார்ட் போனுக்கு ஒரு தகவலைப் பரிமாற்றுவது இதன் மூலம் சாத்தியம். இந்த ஆர்.எஃப்.ஐ.டி தொழில் நுட்பம் தான் இன்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனும் கனவுக்குக் கலர் அடிக்கப் போகிறது ! அத்தோடு இணைந்து உதவப் போவது பல வகையிலான சென்சார்கள்.

உணவு, போக்குவரத்து, அலுவலகங்கள், தண்ணீர் சப்ளை, உணவுப் பொருட்கள் மேலாண்மை போன்ற விஷயங்களில் இவை மிகப்பெரிய பணியைச் செய்ய முடியும் என்கின்றனர் வல்லுநர்கள். ஐ.பி.எம் போன்ற பெரிய நிறுவனங்களெல்லாம் இன்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனும் சிந்தனையின் அடிப்படையிலான ஆயிரக்கணக்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன என்பது கவனிக்கத் தக்கது.

ஜி.இ நிறுவனம் வெள்ளோட்டம் விட்ட “ஸ்மார்ட் ஹாஸ்பிடல் ரூம்” வியக்க வைக்கிறது. இந்த அறையை அறையின் மேல்கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் மூன்று சென்சார்கள் முழு நேரமும் கவனித்துக் கொண்டே இருக்கின்றன. அவை தகவல்களை ஒரு ஸ்பெஷல் மென்பொருளுக்கு பரிமாற்றிக் கொண்டே இருக்கின்றன. எத்தனை முறை டாக்டர்கள் வருகின்றனர், நர்ஸ்கள் வருகின்றனர் என்பதை அது கவனிக்கிறது. நோயாளியைத் தொடும் முன்பும், பின்பும் டாக்டர் கை கழுவவில்லையேல் “டாக்டர், நீங்க கை கழுவ மறந்துட்டீங்க” என குரல் கொடுக்கும். நோயாளி வலியால் துடித்தால் அவருடைய முக பாவனையை வைத்தே டாக்டருக்கு அவசரச் செய்தி அனுப்பும் ! ரொம்பப் பக்கத்தில் எந்த நர்ஸ் இருக்கிறாரோ அவரை உஷார் படுத்தும். ஆச்சரியமாய் இருக்கிறது இல்லையா ? இவையெல்லாம் வரப் போகும் மாற்றத்துக்கான படிகளே.

வீடுகளுக்குப் பொருத்தப்படும் வாட்டர் சிஸ்டம், அவசர காலத்தில் நம்மை எச்சரிக்கை செய்யும் சிஸ்டம், காலநிலை மாற்றத்தை முன்னரே கண்டறியும் திட்டம் என இந்த மாற்றத்தின் கிளைகள் பல இடங்களிலும் விரிவடைந்து கொண்டிருக்கின்றன.

தற்போது தயாராகி வரும் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்றவை பெரும்பாலும் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு செயல்படக் கூடிய வகையிலேயே உருவாகின்றன. இந்தத் திட்டம் நிறைவேறவேண்டுமெனில் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. குறிப்பாக செல்போன் சேவை நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக சேவைகள், இணைய சேவை நிறுவனங்கள், சமூக வலைத்தளங்கள் என நீளும் எல்லாரும் கைகோக்க வேண்டியது ரொம்ப முக்கியம் “குளோபல் பல்ஸ்” எனும் முயற்சியின் இயக்குனர் ராபர்ட் கிர்க்பேட்ரிக். இவர் இந்த ஒருங்கிணைப்பை “டேட்டா பிலன்ந்தராபி (data philanthropy) என பெயரிட்டு அழைக்கிறார்.

2020ம் ஆண்டு நிறைவேறிவிடும் எனும் கனவுடன் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனும் முயற்சியை உலக நிறுவனங்கள் தொடர்கின்றன. இந்தக் கனவு பல சவால்களை எதிர்கொள்கிறது. ஒன்று மாறிவரும் தொழில் நுட்பம். ஆண்டு தோறும் நிகழும் பல்வேறு புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் திட்டத்தை அடிக்கடி மறுபரிசீலனை செய்து, புதுமைப்படுத்த வைக்கிறது. இரண்டாவது இதற்கு அதிகப்படியான ‘எனர்ஜி’ தேவைப்படும். அந்த சக்தியை இயற்கையிலிருந்து உருவாக்கும் சக்தி கொண்ட பொருட்களை உருவாக்குவது அவசியம். மூன்றாவது, இது தனி மனித சுதந்திரத்தை குழியில் போட்டுவிடும் எனும் அச்சம் ! இதைத் தவிரவும் ஏகப்பட்ட தொழில்நுட்ப சாவல்கள், தொழில் நுட்பம் சாராத சவால்கள் இதைச் சுற்றி உலவுகின்றன.

இங்கிலாந்திலுள்ள சவுத்ஆம்டன் பல்கலைக்கழக பேராசிரியர் நிகல் ஸேட்போல்ட் இது குறித்துப் பேசும்போது ரொம்ப உற்சாகமாகிவிடுகிறார். உலகம் இதுவரை காணாத ஒரு மிகப்பெரிய அறிவுப் புள்ளியாய் உருமாறிவிடும். உங்கள் பிரிட்ஜ் முதல் பிரிட்ஜ்க்கு உள்ளே இருக்கும் ஆப்பிள் வரை எல்லாமே தொடர்புக்குள் இருக்கும். “என்னைக் குடிக்காதே நான் காலாவதி ஆனவன்” என மருந்து பாட்டில் எச்சரிக்கும். இந்தப் பொருளை விட அடுத்த கடையில் இருக்கும் பொருள் விலைகுறைவு என பொருளே தகவல் சொல்லும். இப்படி ஒரு அறிவியல் புனைக்கதை போன்ற ஒரு உலகில் நீங்கள் உலவலாம். என வியக்க வைக்கிறார்.

இன்னும் சிறிது காலத்தில் “மூக்குக் கண்ணாடியை எங்கேடா வெச்சேன் பேராண்டி” எனக் கேட்கும் தாத்தாவுக்கு பேரன் “இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்” மூலம் தேடி எடுத்துத் தருவான் ! கட்டிலுக்கு அடியிலிருந்து.

அசத்தப் போகும், NFC !

Image result for NFC

பழைய கால “சூப்பர் ஸ்டார்” படங்களில் ஒரு காட்சி வரும். ஹீரோ ஸ்டைலாக கையைத் தூக்கி கதவை நோக்கி நீட்டுவார். கதவு திறந்து கொள்ளும். ஞாபகம் இருக்கிறதா ? கைத்தட்டல்களால் திரையே கிழிந்த காலம் அது ! இப்போது அப்படி ஒரு காட்சி வந்தால் நாம் கொட்டாவி தான் விடுவோம். காரணம், நமது அலுவலகங்களிலேயே தானே திறக்கும் கதவுகள் தான் இருக்கின்றன ! சென்சார்கள் கதவைத் திறந்து விடும் செக்யூரிடி வேலையை செவ்வனே செய்து விடுகின்றன !

அதே போல தான் அமானுஷ்ய படங்களில் சட்டென டிவி ஓடுவதும். டேப் ரிக்கார்டர் பாடுவதும் என வெலவெலக்க வைக்கும் டெக்னிக் அதரப் பழசு. யாரும் தொடாமலேயே டிவி ஓடுமா என திகிலடையும் மனசு இப்போ இல்லை. கையடக்க ஒரு குட்டி ரிமோட் கண்ட்ரோல் எல்லா வேலையையும் செய்கிறது இல்லையா ?

“இப்படி தொடாமலேயே இயங்கும்” தொழில் நுட்பம் ஒரு இனிய ஆச்சரியம். தொழில் நுட்ப வளர்ச்சியின் ஒரு முக்கியமான மைல் கல் என்று இதைச் சொல்லலாம். அது தான் “அட” என வியக்க வைக்கும் பல விஷயங்களைச் சாத்தியமாக்கித் தந்திருக்கிறது. செல்போன் முதல் வை-ஃபை(WiFi) எனப்படும் வயர்லெஸ் இணையம் வரை தொடாமல் தொடும் விஷயங்களே அக்கிரமித்திருக்கின்றன.

அதிலும் “வயர்லெஸ் இணையம்” சாத்தியமானதால் இன்றைக்கு தொழில் நுட்பம் சட்டென பல படிகள் பாய்ந்து முன்னேறிவிட்டது என்று கூட சொல்லலாம். மொபைல்கள், டேப்லெட்கள், ரீடர்கள் என எல்லா கருவிகளிலும் இப்போது வை ராஜா வை என “வை ஃபை” ஆட்சி தானே !

எப்போதும் அடுத்த கட்டத்தை நோக்கி புலிப் பாய்ச்சலாய் ஓடும் தொழில் நுட்பம் இணையம் வந்தபின் ராக்கெட் பாய்ச்சலாய் மாறியிருக்கிறது. அதன் தற்போதைய வசீகரிக்கும் அம்சம் தான் “நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன்” (Near Field Communication – NFC ). அழகிய தமிழில் இதை அருகாமைத் தகவல் தொடர்பு என்று சொல்லலாம். பெயரைப் பார்த்தாலே புரிந்திருக்கும் இதன் பயன் என்ன என்பது !

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இரண்டு ஸ்மார்ட்போன்களை செல்லமாய் ஒன்றோடொன்று தொட்டுக் கொள்வதன் மூலம் தகவலைப் பரிமாறுவது தான் இந்த நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷனின் அடிப்படை. சுருக்கமாக என்.எஃப்.சி. தொட்டும் தொடாமலும் உங்க பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் பர்ஸை அபேஸ் செய்வார்கள் இல்லையா ? அதே போல தான் இங்கும் தகவல் பரிமாற்றம் இருக்கும் ! இரண்டு கருவிகள் ஒன்றோடொன்று தொடவேண்டும், அல்லது ரொம்ப ரொம்ப அருகில் உரசுவது போல வரவேண்டும். அப்போது தான் இங்கே தகவல் தொடர்பு சாத்தியம் !

மிக எளிமையான வழி. வயர்லெஸ், புளூடூத் போல இரண்டு கருவிகளுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவது, அது இது என எக்ஸ்ட்ரா டென்ஷன் ஏதும் இல்லை. ஜஸ்ட் லைக் தேட் தொட்டால் தகவல் பரவும் !

ரேடியோ அலைவரிசைத் தகவல் பரிமாற்றம் தான் இதன் உள்ளே ஒளிந்திருக்கின்ற தொழில் நுட்ப சீக்ரெட் ! ரேடியோ பிரீக்வன்ஸி ஐடன்டிபிகேஷன் ( Radio Frequency Identification ) ஸ்டான்டர்ட் இந்த தகவல் பரிமாற்றத்தின் அடிப்படை. ISO/IEC 14443 , FeliCa போன்றவையெல்லாம் இந்த ஸ்டான்டர்களில் சில.

என்.எஃப்.சி  தொழில் நுட்பம் சாதாரணமான கிரடிட் கார்ட், எலக்ட்ரானிக் காசோலை, மொபைல் பண பரிவர்த்தனை போன்ற அனைத்து விஷயங்களையும் அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லும். கூகிள் வேலட் (google wallet ) கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? அது இந்த நுட்பத்தின் படி தான் இயங்குகிறது.

உதாரணமாக, கடையில் பொருள் வாங்கிவிட்டு என்ன செய்வீர்கள் ? கிரெடிட் கார்டைக் கொடுப்பீர்கள் ! அவர்கள் அந்தக் கார்டை மெஷினில் தேய்த்து, உங்கள் கையெழுத்து உட்பட இன்ன பிற சங்கதிகளை வாங்கி விட்டு அனுப்புவார்கள். யாராச்சும் உங்களுடைய கார்டை லவட்டிக் கொண்டு போய் பொருள் வாங்கினாலும், சந்தோசமாக வழியனுப்பி வைப்பார்கள்.

என்.எஃப்.சி  அதை பாதுகாப்பாகவும், வசதியாகவும் மாற்றுகிறது. உங்களுடைய கார்ட் தகவல்கள் எல்லாமே உங்கள் மொபைலில் பாதுகாப்பாக இருக்கும். பொருள் வாங்கிவிட்டு போனை அந்தக் கருவியில் உரசினால் போதும். எவ்வளவு பணம் செலுத்த வேண்டுமோ செலுத்தலாம். ஒரு “பாஸ்வேர்ட்” வைத்துக் கொள்ளலாம். அவ்ளோ தான் ! இது ஒரு சின்ன உதாரணம்

என்.எஃப்.சி  பயன்பாடு எதிர்காலத்தில் மிரட்டக் கூடிய அளவில் இருக்கும் என்பது சர்வ நிச்சயம். உங்கள் வீட்டுக் கதவைத் திறக்க வேண்டுமானால் மொபைலினால் தொட்டால் போதும். சாவி இல்லாமலேயே பூட்டு திறந்து கொள்ளும். போனும் போனும் உரசிக் கொண்டால் அப்படியே விசிடிங் கார்டைப் பரிமாறிக் கொள்ளலாம். அப்படியே போட்டோக்களை பரிமாறிக் கொள்ளலாம். விமான டிக்கெட் போனில் இருந்தால் போதும் என இதன் பயன்கள் எக்கச் சக்கம்.

இதன் பயன்பாடு நவீன சமூக வலைத்தளங்கள் மற்றும் விளையாட்டு மென்பொருட்களில் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

எதிர்காலத்தில் வர்த்தகத்தில் என்.எஃப்.சி கொடி நாட்டும் என வர்த்தக ஜாம்பவான்கள் கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்கிறார்கள். அதற்கு உதவுபவை இரண்டு விஷயங்கள். ஒன்று ஸ்மார்ட் போன், இன்னொன்று என்.எஃப்.சி டேக் (NFC Tag). என்.எஃப்.சி டேக் என்பதை பொருட்களில் இருக்கின்ற “பார் கோட்” போல நீங்கள் நினைத்துக் கொள்ளலாம்.  பல்பொருள் அங்காடிகளில் பொருள் வாங்கும் போது ஸ்கேன் செய்து பில் போட்டுத் தருவார்கள் இல்லையா ? அதோடு நீங்கள் ஒப்பிட்டுக்கொள்ளலாம்.

உதாரணமாக, காலையில் வீட்டுப் பேப்பரில் ஒரு ஸ்பெஷல் விளம்பரம் இந்த என்.எப்.சி டேக் சகிதம் வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் போனை அதன் மேல் தொட்டால் உங்களுக்கு அது இன்னும் பல விஷயங்களை போனில் தரும். “சிங்கப்பூர் செல்ல இன்றைக்கு ஸ்பெஷல் ஆஃபர். உடனே டிக்கெட்டை வாங்குங்கள்” என ஒரு விளம்பரம் வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். என்ன செய்வீர்கள். அந்த எண்ணுக்கு போன் பண்ணி விஷயத்தைக் கேட்பீர்கள். பிறகு அந்த அலுவலகத்துக்கோ, அல்லது ஆன்லைனிலோ உங்களுடைய டிக்கெட்களை புக் செய்வீர்கள். இது தானே வழக்கம்?

என்.எப்.சி டேக் விளம்பரமெனில் இதில் எதுவும் தேவையில்லை. உங்கள் போன் அந்த இணைப்பை வாசிக்கும். அப்படியே விவரங்கள் போனில் வரும். அங்கிருந்து உடனடியாக பணம் செலுத்தி டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாம். ஒரு காபி குடிக்கும் நேரத்தில் எல்லாம் சுபம் ! அடுத்த லண்டன் ஒலிம்பிக் டிக்கெட்களை என்.எஃப்.சி  நுட்பத்தில் எளிதில் பெற்றுக் கொள்ளும் வசதியை இப்போதே சேம்சங் போன்ற செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டு உருவாக்கி வருகின்றன.

கடை வீதிக்குப் போகிறீர்கள். போகும் வழியில் தெருக்களிலோ, கடை வாசலிலோ ஒட்டப்பட்டிருக்கும் என்.எப்.சி டேக் பக்கத்தில் உங்கள் போனைக் கொண்டு போய் “ஒரு கிலோ கத்தரிக்காய், நாலு கிலோ வெங்காயம்” என ஆர்டர் செய்து விட்டு வீட்டுக்கு அனுப்பச் சொல்லலாம். நீங்கள் வீடு வந்து சேரும் போது பொருட்களும் வந்து சேரும்.

ஜப்பான் போன்ற நாடுகளில் சில கடைகள் இதற்காகவே இருக்கின்றன. கடைகளில் பொருட்களே இருக்காது. போனால் படங்களும், அதன் விலையும், என்.எஃப்.சி விளம்பரமும் மட்டுமே இருக்கும். உங்களுக்கு எதெல்லாம் வேண்டுமோ அதையெல்லாம் தொட்டுக் கொள்ளுங்கள், பணத்தை போனிலேயே செலுத்துங்கள், வீட்டு அட்ரசைக் கொடுங்கள் வீட்டுக்கு பொருள் வந்து சேரும். வெண்டக்காயை ஒடிச்சுப் பாத்து தான் வாங்குவேன் என அடம்பிடிக்காதவர்களுக்கு இது ஒரு அற்புதமான ஷாப்பிங் ஐடியா !

பிரான்ஸிலுள்ள டோலோஸ் விமான நிலையத்தில் என்.எஃப்.சி மூலம் செக்-இன் செய்யலாம் எனும் வசதியை உருவாக்கியிருக்கிறார்கள். உங்களுடைய போர்டிங் பாஸ் எல்லாம் போனில் இருக்கும். கையை ஆட்டிக் கொண்டே விமானத்தில் ஏறுவது போல, போனை ஆட்டிக் கொண்டே உள்நுழைய அனுமதி பெறலாம் ! உலகிலேயே இந்த வசதி இந்த விமான நிலையத்தில் தான் முதன் முதலாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது ஸ்பெஷல் நியூஸ் !

2004ம் ஆண்டு மூன்று வர்த்தக ஜாம்பவான்கள் சோனி, நோக்கியா மற்றும் பிலிப்ஸ் இணைந்து இதற்கான வரைமுறையையும் விதிகளையும் நிர்ணயித்தார்கள். இன்று வரை அவையே என்.எஃப்.சியின் அடிப்படை விதிகளாக இருக்கின்றன ! இதெல்லாம் பழைய கால வரைமுறை. இதெல்லாம் மாற்றியாகவேண்டும் என்பதையும் நான் சொல்லியாக வேண்டும் !

அறிவியல் படித்திருக்கிறீர்களா ? “இன்டக்டிவ் கப்ளிங்” (Inductive coupling) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? எலக்ட்ரான்கள் ஒரு ஊடகம் வழியாகப் பாயும் போது ஒரு மின் காந்த தளத்தை உருவாக்கும். மின்காந்த தளம் மாறும் போது எலக்ட்ரான்கள் அதன் வழியாகப் பயணிக்கும். இந்த இரட்டை இயக்கம் தான் இன்டக்டிவ் கப்ளிங் எனப்படுகிறது. என்.எஃப்.சி தொழில்நுட்பத்தின் அடிப்படையும் இது தான். அதனால் தான் இந்த தொழில் நுட்பம் வேலை செய்ய வேண்டுமானால் கருவிகள் தொட்டுக்கொள்ளவேண்டும், அல்லது 4 சென்டீமீட்டர்களுக்குள் வரவேண்டும் எனும் விதி இருக்கிறது ! பத்து இருபது சென்டீமீட்டர்  வரை செயல்படும் என சிலர் வாதிடுவதுண்டு. எனினும் 4 சென்டீமீட்டர் என்பதே உத்தரவாத எல்லை !

ரேடியோ பிரீக்வென்சி ஐடென்டிபிகேஷன் (Radio frequency identification (RFID) ) பற்றிச் சொன்னேன் இல்லையா ? அதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பேசிவ் ஆர்.எஃப்.ஐ.டி, இன்னொன்று ஆக்டிவ் ஆர்.எஃப்.ஐ.டி. இரண்டாவது வகை பேட்டரியால்  சார்ஜ் செய்யப்பட்டிருக்கும் என்பதே அதி முக்கியமான வித்தியாசம். இதனால் இந்த தொடுபிணைப்பு தூரம் கொஞ்சம் அதிகரிக்கப்படும் என்பது ஒரு ஸ்பெஷல் பயன். போகும் வழியில் பஸ்ஸில் இருந்தபடியே போஸ்டரில் இருக்கும் “இணைப்பை வாசித்து” பொருளை வாங்கும் நிலை ஒருவேளை வரலாம் !

தொழில் நுட்ப அடிப்படையில் இது 13.56 மெகா ஹெட்ஸ் அலைவரிசையில் இயங்கும். வினாடிக்கு 106 முதல் 424 கிலோபைட் அளவிலான தகவல்களை பரிமாற்றும். இது என்.எஃப்.சி சார்ந்த வர்த்தகத்துக்கு போதுமான அளவு என்பது குறிப்பிடத்தக்கது. இதை பயன்பாட்டு அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். ஒன்று ரீட் அன்ட் ரைட் ( read and write ) விளம்பரங்களில் உள்ள இணைப்பை வாசிக்க இது பெருமளவில் பயன்படும். இரண்டாவது பியர் – டு – பியர் (peer to peer). இரண்டு செல்போன்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் நடத்தும் விஷயம் இது. போட்டோக்கள், பாடல்கள், விசிடிங்கார்ட் போன்றவற்றை பரிமாறிக் கொள்வது போல!. மூன்றாவது கார்ட் எமுலேஷன் மோட் ( card emulation mode ) இது கிரெடிட் கார்ட் பயன்பாடு, டிக்கெட் வாங்குவது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுவது !

எதிர்காலத்தில் என்.எஃப்.சி நிச்சயம் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் எனும் நம்பிக்கை உங்களுக்கு வந்திருக்கும் என நினைக்கிறேன் ! இப்போதெல்லாம் வெளிநாட்டுச் சமாச்சாரங்கள் இந்தியாவிலும் உடனுக்குடன் இறக்குமதியாகின்றன. யார் கண்டது ? நாளை டவுன் பஸ்ஸில் டிக்கெட் எடுக்க நம்முடைய போன் பயன்படலாம் !

பெண்ணின்றி அமையாது உலகு !

Image result for mother and child

பெண்ணில்லாத உலகத்தைக் கற்பனை செய்து பார்ப்பதே கடினமான ஒன்று ! அது ஒரு வறண்ட பாலையைப் போலவோ, நிழலில்லாத வெயில் சாலையைப் போலவோ மனதுக்குள் அனலாய் படரும்.

பெண்களின் உலகம் அழகானது ! அது உணர்வுகளால் பின்னப்பட்டது. ஆண்களின் உலகம் உழைப்பினாய் ஆனது ! பெண்களின் உலகம் உறவுகளால் ஆனது ! பெண்கள் வசிக்கும் வீடுகள் பூந்தோட்டங்களாகவும், ஆண்கள் மட்டுமே உலவும் வீடுகள் உழவு நிலங்களாகவும் காட்சியளிக்கும்.

எந்த ஒரு ஆணும் முழுமையடைய வேண்டுமெனில் அவன் மூன்று பெண்களின் அரவணைப்பில் வளரவேண்டும். அதில் முதலாவதாக வருபவர் அன்னை ! ஒவ்வோர் மனிதனுக்கும் முதல் காதல் அன்னையோடு தான். கடவுளின் அன்பை, இயற்கையின் அழகை, நேசத்தின் செயலை அவன் அறிமுகம் கொள்வது அன்னையிடம் தான் !

விழியும் விழியும் நேசம் பரிமாறும் அழகை நீங்கள் அன்னை மழலை உறவில் தான் பரவசத்துடன் காண முடியும். புன்னகைக்குள் புதையல் இருப்பதை அந்த அன்னைச் சிரிப்பில் தான் அறிய முடியும். மண்ணை மிதிக்கும் முன் மெல்லிய பாதங்கள் என்னை மிதிக்கட்டும் என கன்னம் நீட்டும் அன்பல்லவா அன்னை !

தொப்புழ் கொடியில் நேசம் ஊற்றி, மழலை வழியில் மடியில் ஏந்தி, சின்ன வயதில் தோளில் தூக்கி, பருவ வயதில் பெருமிதம் சிந்தி, கடைசி வரையில் கண்ணில் சுமப்பவளல்லவா அன்னை ! முதுமையின் முக்கால் படியில் நடக்கும் போதும் அன்னைக்கு பிள்ளை மழலையாய் தான் இருப்பான். அது தான் அன்னை அன்பின் தனித்துவம் ! மறக்க முடியா மகத்துவம்.

அன்னையின் அருகாமையில் இருப்பவன் சொர்க்கத்தின் வாசனையை நுகர்வான். தலைகோதும் அன்னையின் விரல்களில் இருப்பவன் துயரத்தின் தனிமையைத் தாண்டுவான். புன்னகைக்கும் அன்னையின் நிழலில் வாழ்பவன் முழுமையாய் வாழ்க்கையை நேசிப்பான். அன்னை, ஒரு உயிரை உலகிற்கு அறிமுகம் செய்தவள் மட்டுமல்ல !
ஒரு உயிரை உலகாக அறிமுகம் செய்து வைத்தவள்.

நம் மழலைப் பாதங்களை மண்ணில் பதிய வைத்தவள் அன்னையெனில், நமது கரங்களுக்கு சிறகுகளை முளைப்பிக்க வைத்தவள் சகோதரி தான். சகோதரிகளின் குடும்பத்தில் வளர்பவன் நீரோடையின் அருகே வளரும் மரம் போன்றவன். செழிப்பு அவனுக்கு குறைவு படாது. பெண்மையைப் போற்றும் மனிதனாக அவன் வளர்வான்.

தவறு செய்யும் ஆண்களை, ‘அக்கா தங்கச்சி கூட பொறக்கலையா ?’ என்று கேட்பார்கள். காரணம், அக்கா தங்கச்சி கூட பிறந்தவன் ஒழுக்கமானவனாக இருப்பான் எனும் நம்பிக்கை. அக்கா என்பவள் இரண்டாம் அன்னை ! தங்கை என்பவள் மூத்த மகள் ! சகோதரிகளோடு பிறந்தவர்கள் கடவுளின் கருணையை கண்களில் பெற்றவர்கள். பிறரை சகோதரிகளாய் பார்க்கத் தெரிந்தோர் கருணையாம் கடவுளை கண்களில் பெற்றவர்கள்.

வண்ணத்துப் பூச்சியின் அழகிய சிறகாய், பாறை வெளியின் நிழல் கூடாரமாய், தனிமை வெளியின் நம்பிக்கைத் துணையாய் எப்போதும் கூட வருபவர் தான் சகோதரி. பகிர்தலின் புனிதத்தை முதலில் கற்றுத் தருபவள் அவள் தான். விட்டுக் கொடுத்தலின் அழகை புரிய வைப்பவள் அவள் தான். தங்கைக்கு அண்ணனாய் இருப்பது என்பது தேவதைக்கு சிறகாய் இருப்பதைப் போல சுகமானது !

இந்தப் பணத்தில் கடைசியாய் நுழைந்து, கடைசி வரை நடப்பவர் தான் மனைவி ! இறைவன் இணையாய் கொடுக்கும் துணை ! நம் உதிரத்தின் பாகமல்ல, ஆனால் நமக்காய் உதிரம் சிந்த தயாராய் இருப்பவர். தியாகத்தின் முதல் அறிமுகம் ! தன் நிலத்தை விட்டு, தன் தோட்டத்து செடிகளை விட்டு, இடம் பெயர்ந்து போய் இன்னோர் நிலத்தில் வாசம் வீசும் மலர் !

இரண்டறக் கலத்தலின் இல்லற விளக்கம் மனைவி ! பூவாய் வாழ்ந்து இந்த பூமிக்கு புதிய பூக்களைக் கொடுப்பவள் தான் மனைவி. வெளிப்படையான அன்பின் வெளிச்சப் புள்ளி. ஒளிவு மறைவற்ற நேசத்தின் தோழி. உயிருக்குள் உயிரைப் பதியமிடும் உன்னதம் ! உயிரிலிருந்து உயிரை பிரித்தெடுக்கும் பிரமிப்பு. என மனைவியின் அன்பு மகத்தானது !

மனைவியின் மௌனம் யுத்தத்துக்கு சமமான வீரியமானது. மனைவியின் கண்ணீர் பெருங்கடலின் ஆர்ப்பரிப்புக்கு சமமானது. மனைவியின் சிரிப்பு நீள் வானத்தின் பெருமழைக்கு ஒப்பானது. மனைவி என்பவள் மனிதனோடு நடக்கும் இறைவனின் பிம்பம். இமைகளில் இடையிலும் சுமைகளைத் தாங்கும் வலிமை அவளுக்கு உண்டு. ஒரு சின்ன பிரியத்தின் விசாரிப்பில் பிரபஞ்சத்தை பரிசளிக்கும் நேசம் அவளிடம் உண்டு.

பெண்மையே ஆண்மையைக் கட்டியெழுப்புகிறது. மென்மையே வலிமையின் அடிப்படை. இந்தப் பெண்களோடு இரண்டறக் கலந்து வாழ்ந்தவர்கள் வாழ்வின் அழகையும், அர்த்தத்தையும் புரிந்து கொள்கின்றனர் !

என் அம்மாவின் முந்தானை பிடித்து நான் வளர்ந்திருக்கிறேன். புரியாமையின் பொழுதுகளில் அவரோடு வழக்காடியிருக்கிறேன். நான் செய்வதே சரி என பிடிவாதம் பிடித்திருக்கிறேன். சண்டை போட்டிருக்கிறேன். எல்லா சண்டைகளிலும் வெற்றி பெறும் வலிமை இருந்தும், அதை என் உதடுகளில் சூடி புன்னகைக்க வைத்தவர் அம்மா. அப்படித் தான் அம்மாவைப் புரிந்து கொண்டேன்.

எரிச்சலின் பொழுதுகளில், ஏமாற்றங்களின் வீதிகளில், அழுத்தங்களின் அரவணைப்பில் என் ஆயுதங்களையெல்லாம் நிராயுதபாணியான மனைவியை நோக்கி வீசியிருக்கிறேன். புறமுதுகு காட்ட மறுத்த ஈகோவின் சண்டைகளிலும் கலிங்க யுத்தமாய் காயங்களை நிரப்பியிருக்கிறேன். அவை தான் மனைவியை எனக்குப் புரிய வைத்தன‌.

சகோதரியோடு சண்டையிடாத பால்ய தினங்களை எண்ணிவிடலாம். அந்த சிறு வயதுச் சண்டைகள் தான் இன்றைக்கு சண்டையில்லாத பொழுதுகளை உருவாக்கித் தந்திருக்கின்றன. அத்தகைய சண்டைகளில், விவாதங்களில், முரண்டு பிடித்தல்களில் தான் என் சகோதரிகளை நான் புரிந்து கொண்டேன்.

பெண்களோடு இணைந்து வாழும் வாழ்க்கை நமக்கு புரிதலைக் கற்றுத் தருகிறது. பிரியத்தையும் பெற்றுத் தருகிறது.

அன்னை தெரசாவின் புன்னகை மென்மையானது ! அதுவே வலிமையான அன்பின் ஆயுதம் !பேனா மென்மையானது, வலிமையான சிந்தனைகளால் உலகைப் புரட்டும் வலிமை அதற்கு உண்டு. கண்ணீர் மென்மையானது ! மாபெரும் அரசுகளை நிலைகுலைய வைக்கும் வீரியம் அதற்கு உண்டு. பெண்மை மென்மையானது ! ஆண்மையின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வல்லமை அதற்கு உண்டு.

அன்னையின் மேகத்தில் துளியாய் உருவாகி, சகோதரி எனும் துளிகளோடு இணைந்தே பயணித்து, மனைவி எனும் மண்வெளியில் இரண்டறக் கலந்து அன்பின் நதியாய்க் கடலை அடைவதே இனிமையான வாழ்க்கை !

பெண்மையை நேசிப்போம் !
நமக்கு நேசத்தைக் கற்றுத் தந்தது அவர்கள் தான் !

பெண்மையை மதிப்போம் !
நம் மதிப்புக்கு அடிப்படை அவர்கள் தான் !!

பெண்மையை போற்றுவோம் !
எந்த ஆண்மையிலும் மெல்லிய பெண்மை உண்டு !

இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்

3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது ?

Image result for 3d

இது 3D காலம் என்று சொல்லலாம் தப்பில்லை. அவதார் என்றொரு ஆங்கிலத் திரைப்படம் வந்தாலும் வந்தது, உலகெங்கும் சட்டென 3டி ஜூரம் பற்றிக் கொண்டது. புதிது புதிதாய் 3டி படங்கள் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை வெளியாகிக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு பழைய 2D படங்களைத் தூசு தட்டி 3D யாக மாற்றும் பணிகளும் ஜகஜோராக நடந்து கொண்டிருக்கின்றன.

ஆயிரம் தான் இருந்தாலும், முதன் முதலாக 3டி படம் பார்க்கும் அனுபவம் ரொம்பவே அலாதியானது? திரையிலிருந்து சட்டென நம்மை நோக்கி நீளும் ஒரு கை ஐஸ்கிரீம் தரும். அல்லது நம்மீது ஏதோ வந்து விழுவது போல பயமுறுத்தும். மந்திரவாதியின் சாம்பல் நம் முகத்தில் மோதுவது போல் வரும். கையை எடுத்துச் சட்டெனத் தடுப்போம் ! விட்டால் அடுத்த சீட்காரரை அடித்தே கீழே தள்ளுவோம். காரணம் காட்சிகள் அவ்வளவு தத்ரூபமாக இருப்பது தான் ! அவ்வளவு எளிதில் மைடியர் குட்டிச் சாத்தானை மக்கள் மறக்கமாட்டார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

இந்த 3D எப்படிச் சாத்தியமாகிறது ? சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் 3D என்பது வேறொன்றுமில்லை நமது கண்களை ஏமாற்றும் ஒரு தந்திரம். ஆச்சரியப்படாதீர்கள். 2D யில் உள்ள திரைப்படத்தை 3D போன்ற தோற்றத்தில் தர சினிமாக் கருவிகளும், கண்ணாடிகளும் உதவுகின்றன. அதை எவ்வளவு தத்ரூபமாகத் தருகிறார்கள் என்பதில் தான் அந்த தொழில் நுட்பத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது.

3டி சமீபகாலக் கண்டுபிடிப்பு எனும் நினைப்பு உங்களிடம் இருந்தால் அந்த நினைப்பை இந்த வினாடியே குழி தோண்டிப் புதைத்து விடுங்கள். அதரப் பழசான விஷயம் அது ! பிரிட்டனிலுள்ள திரைப்பட இயக்குனர் வில்லியம் பிரீஸ் கிரீன் 1980ல் இதற்கான காப்புரிமை விண்ணப்பத்தைக் கொடுத்தார். அவருடைய தயாரிப்பு ஸ்டீரியோஸ்கோப் வகையைச் சார்ந்தது. குழந்தைகள் கண்களில் வைத்துப் பார்க்கும் ஒரு குட்டிக் கருவியைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரே மாதிரியான இரண்டு பிலிம்கள் இருக்கும், ஒரே நேரத்தில் இரண்டு கண்களாலும் அதைப் பார்க்கும் போது உள்ளுக்குள் 3டி படம் தெரியும் ! அது தான் ஸ்டீரியோஸ்கோப்பின் வடிவம். இதற்கு இரண்டு படங்களை அருகருகே திரையிட வேண்டிய தேவை இருந்தது !

அந்த கான்சப்டை அப்படியே அலேக்காகத் தூக்கி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஃப்ரடரிக் எக்வீன் என்பவர் ஒரு கேமரா கண்டுபிடித்து உடனே அதற்குக் காப்புரிமையும் வாங்கினார். இதில் 4.45 சென்டீ மீட்டர் இடைவெளியில் இரண்டு லென்ஸ்கள் இருக்கும். அப்புறம் மீண்டும் ஒரு இடைவெளிக்குப் பிறகு 1915 ஜூன் 10ம் தியதி நியூயார்க்கிலுள்ள ஆஸ்டர் திரையரங்கில் முப்பரிமாணத் திரைபடம் சோதனை ஓட்டம் போட்டது. அதை நடத்தியவர்கள் எட்வின் பார்டர் மற்றும் வில்லியம் வேடல் எனும் இருவர்.

அந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு முடியப் போகிறது. ஆனால் அப்போது இது மிகப்பெரிய பணச்செலவு, திரையிட ஏகப்பட்ட கஷ்டம் எனும் செயல்முறை சிக்கல்களால் முதுகொடிந்து கிடந்தது.  1922ம் ஆண்டு செட்பம்பர் 27ம் தியதி டிக்கெட் வாங்கிப் படம் பார்க்கும் உலகின் முதல் 3டி சினிமா வந்தது. அதன் பெயர் “த பவர் ஆஃப் லவ்” (The Power of Love). அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள அம்பாசடர் ஹோட்டல் திரையரங்கில் இது வெளியானது.

3டி ஒரு கமர்ஷியல் சினிமா சரக்காக மாறியது 1950ல் தான். அப்போதும் அது சரசரவென பற்றிப் படரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வேர் விட ஆரம்பித்தது. அந்தக் காலகட்டத்தில் வால்ட் டிஸ்னி போன்ற பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனங்களெல்லாம் 3டி தயாரிப்பில் குதித்தன. எனவே 3டி என்பது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. 1950க்கும் 1953க்கும் இடைப்பட்ட காலத்தை “3டியின் பொற்காலம்” என்கிறார்கள். ஆனால் அதன்பின் 3டி மீண்டும் படுத்தது !

இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்தது தான் அந்த சோர்வுக்குக் காரணம். இரண்டு படங்கள் தயாரிக்க வேண்டும். இரண்டும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். ஒரே வேகத்தில், கொஞ்சமும் மாற்றம் இல்லாமல் ஓட வேண்டும். தனி ஸ்பெஷல் திரை வேண்டும். ஏகப்பட்ட பணச் செலவு என அடுக்கடுக்கான காரணங்கள் தான் அந்த தொய்வுக்குக் காரணம்.

1960ல் 3டி தொழில் நுட்பத்தின் ஒரு புது புரட்சி தோன்றியது. அதுவரை 3டி படம் போட வேண்டுமெனில் இரண்டு பிலிம் ரோல், இரண்டு புரஜக்டர் என இருந்த நிலை மாறி ஒரே பிலிம் ரோலில் இரண்டு படங்களை பதிவு செய்யும் முறை அப்போது தான் அறிமுகமானது ! ஸ்பேஸ் விஷன் ( Space vision) 3டி எனும் புது அடைமொழியுடன் அது வந்தது ! இது ஏகப்பட்டத் தலைவலிகளை ஒழித்துக் கட்டி 3டி படங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியையே அளித்து விட்டது !

1980களுக்குப் பின் தான் 3டி சர சரவென வளரத் துவங்கியது. 1985க்கும் 2003க்கும் இடைப்பட்ட காலத்தை 3டியின் மறுபிறப்புக் காலம் என்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில் நிறைய முப்பரிமாணப் படங்கள் வந்து பரபரப்பூட்டின.

இருந்தாலும் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தான் அப்போதும் 3டி நுட்பத்தால் அசரடித்தவர். 2003ல் அவர் “கோஸ்ட் ஆஃப் த அபைஸ்” (Ghost of the Abyss) எனும் படத்தை வெளியிட்டார். ரியாலிடி கேமரா மூலம் எடுக்கப்பட்ட அந்தப் படம் 3டி நுட்பத்தில் மிரட்டியது.  அதற்குப் பிறகு அவர் “அவதார்” மூலம் திரையுலகையே புரட்டிப் போட்டது நாம் அறிந்த விஷயம் தான் ! இப்போது ஏறக்குறைய எல்லா ஹாலிவுட் அனிமேஷன், ஃபேன்டஸி போன்ற படங்களெல்லாம் 3டியில் தான் வருவேன் என முரண்டு பிடிக்கின்றன.

முதலிலேயே சொன்னது போல, 3டி திரைப்படங்கள் முப்பரிமாணத்தில் வருவதில்லை. இரண்டு பரிமாண படங்களை முப்பரிமாணம் போல மாற்றிக் காட்டும் வித்தையைச் செய்கின்றன. இலக்கியப் பிரியர்கள் இதை, காட்சி மயக்கம் அல்லது தோற்றப் பிழை என்று கூட அழைத்துக் கொள்ளலாம்.

அனகிலிப் (Anaglyph) என்பது இதன் ஆரம்ப கால வகை. இன்றும் கூட இது அச்சு மீடியாவில் வழக்கத்தில் உண்டு. சிவப்பு மற்றும் நீலம் ( முழுமையான நீலம் அல்ல) நிறங்களில் படங்களை ஒன்றன் மீது ஒன்றாக எடுத்து, அதை ஸ்பெஷல் கண்ணாடி மூலம் பார்ப்பது. அந்த ஸ்பெஷல் கண்ணாடியில் ஒரு கண்ணில் சிவப்பு, ஒரு கண்ணில் நீலம் இருக்கும். அவை குறிப்பிட்ட நிறத்தில் வரையப்பட்டுள்ள படத்தை முதன்மைப்படுத்தி மற்றவற்றை இருட்டாக்கும். ஒரு கண் வழியாக ஒரு ஒரு அடுக்கு மட்டுமே தெரியும். மற்ற அடுக்கு அடுத்த கண்ணில் தான் தெரியும். இப்படிப் பிரித்துக் காட்டும் போது முப்பரிமாண தோற்றம் உருவாகும் !

3டி டிவி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களே ! அதில் அடிப்படையாக இயங்கிக் கொண்டிருந்த நுட்பமும் இது தான். இப்போது பெரும்பாலான தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்கள் இந்த வழக்கத்தை விட்டு “போலராய்ட்” வகைக்குள் நுழைந்து விட்டார்கள்.

போலராய்ட் ? ஆம், அது தான் அடுத்தகட்ட வளர்ச்சி. 1950களுக்குப் பிறகு இது தான் பாப்புலர் 3டி நுட்பம். நீங்கள் சமீப காலத்தில் ஏதேனும் 3டி படம் தியேட்டரில் பார்த்திருந்தீர்களெனில் நிச்சயம் இந்தத் தொழில் நுட்பத்தில் தான் பார்த்திருப்பீர்கள். இதில் “போலராய்ட்” பில்டர்கள் மூலம் படம் திரையிடப்படும். இதிலும் இரண்டு படங்கள் ஒன்றன் மீது ஒன்றாக விழும். அதை போலராய்ட் கண்ணாடிகள் மூலம் பார்க்க வேண்டும். இந்த கண்ணாடிகள் ஒரே மாதிரித் தோற்றமளித்தாலும் உண்மையில் அதன் கோணம் இரண்டு விதமாய் இருக்கும். சாதாரணமாக 45 முதல் 135 டிகிரி வரையிலான மாற்றுக் கோணத்தில் இருக்கும். போலராய்ட் பில்டர் வழியாக வரும் படங்களில் ஒன்றை ஒரு கண்ணும் இன்னொன்றை இன்னொரு கண்ணும் பார்க்கும் படியாக இது அமைந்திருக்கும். இதனால் இரண்டு கண்களும் ஒரே படத்தை வித்தியாசமான கோணத்தில் பார்க்கும் போது நிஜமான ஒரு முப்பரிமாணக் காட்சி கிடைக்கும். ஒரு கண்ணை மூடிவிட்டுப் பார்த்தால் தெளிவில்லாத 2டி தான் தெரியும் !

ஆக்டிவ் ஷட்டர் கிளாஸஸ் (Active shutter glasses) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களா தெரியாது. அது பிரபலமான 3டி கண்ணாடி வகையில் ஒன்று. இது கொஞ்சம் ஸ்பெஷலானது. இதில் படம் திரையிடப்படும் ஸ்கீரினுக்கும், கண்ணாடிக்கும் இடையே ஒரு தொடர்பு எப்போதுமே இருக்கும். நாம் எந்த இடத்திலிருந்து படத்தைப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து நமது கண்ணாடிக்கு ஸ்கிரீன் ஒரு சிக்னலை அனுப்பும். அதன் அடிப்படையில் எந்தக் கண் வழியாக அதிக வெளிச்சம் வரவேண்டும் என்பன போன்ற அடிப்படைத் தகவல்கள் பரிமாறப்படும்.

அடிப்படையில் சொல்லப் போனால் நமது கண்கள் ஒரு பொருளைப் பார்க்கும் போது ஒரே கோணத்தில் பார்ப்பதில்லை. சந்தேகம் இருந்தால் உங்கள் கண்களை மாறி மாறி மூடி மூடித் திறந்து பாருங்கள். உங்களுக்கு முன்னால் இருக்கும் பொருள் அங்கும் இங்கும் அசைவதாய்த் தோன்றும். ஆனால் ஒரே நேரத்தில் அதைப் பார்க்கும் போது தெள்ளத் தெளிவாய் உங்களுக்குத் தெரியும். அப்படித் தெரியவில்லையேல் கண் மருத்துவரைப் பாருங்கள் என்பதே என்னுடைய சிம்பிள் அட்வைஸ்.

இப்போது 3டி தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம். இதுவரை 3டி படம் பார்க்க கண்ணாடி வேண்டும் எனும் கட்டாயம் இருந்தது இல்லையா ? அந்தக் கெடுபிடி இல்லை என்பது தான் புதுமையான நிலை. 3டி டிவியில் அந்த நிலை இப்போது வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளது. விரைவில் திரையரங்குகளிலும் கண்ணாடி இல்லாமலேயே முப்பரிமாணம் பார்க்கும் நிலை உருவாகும். அந்த வித்தையைச் செய்யும் தொழில் நுட்பம் பாரலாக்ஸ் பாரியர் (Parallax Barrier) என அழைக்கப்படுகிறது. இதில் தொலைக்காட்சித் திரையில் படங்கள் அடுக்கடுக்காய் ஒளிபரப்பாகும். அந்தத் திரைக்கு முன்னால் பாரலக்ஸ் பாரியர் திரை ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். நமது கண்ணாடி செய்ய வேண்டிய வேலையை இந்தத் திரை செய்கிறது அது தான் வித்தியாசம்.

இவையெல்லாம் 2டி படத்தை 3டி படமாக நமக்குக் காண்பிக்கும் வித்தைகள் என்பது தான் சிறப்பம்சம். ஆனால் உண்மையிலேயே 3டி படங்களையும், ஆட்களையும் காண்பிக்கும் தொழில்நுட்பங்களும் வந்து விட்டன. எந்திரன் படத்தில் ரஜினியின் 3டி உருவம் வந்து பேசுவது போல் ஒரு காட்சி வரும். அத்தகைய இமேஜ் மனிதர்கள் விமான நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் நுழையத் துவங்கிவிட்டார்கள். காற்றில் உருவம் வரையும் வித்தை அது ! எதிர்காலத்தில் ரொம்ப அன்னியோன்யமானத் தகவல் பரிமாற்றத்தை இத்தகைய உருவங்கள் செய்யும் என்பது பலத்த எதிர்பார்ப்பு.

உலகம் 3டி நுட்பத்துக்குள் புயலாய் நுழைந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த அடிப்படைத் தகவல்களை 2டியில் வாசித்துத் தெரிந்து கொள்வது நல்லது தான் இல்லையா ?!

மன அழுத்தம் தவிர்ப்போம்

Image result for stress on Girls

“உலகிலேயே அதிக மன அழுத்தம் இந்தியப் பெண்களுக்குத் தான் !! ”. அதிர்ச்சியாய் இருக்கிறதா ? வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் நடத்தப்பட்ட மிக விரிவான நீல்சன் ஆய்வு ஒன்று தான் இப்படிக் கூறி வெலவெலக்க வைக்கிறது ! சுமார் 87% சதவீதம் இந்தியப் பெண்கள் மன அழுத்தத்தில் உழல்கிறார்களாம் ! பெண்கள் முன்னேற்றத்தில் சீரான வளர்ச்சியையும், வெற்றிகளையும் சந்தித்துவரும் இந்தியாவில் ஏன் இந்த நிலை?

இந்தியப் பெண்கள், அலுவலகங்களில் 21ம் நூற்றாண்டின் புதுமைப் பெண்களாக உலா வருகின்றனர். ஆனால் பெரும்பாலான வீடுகளிலோ கற்காலக் கணவன்களின் சிந்தனைகளின் நிழலிலேயே வாழ்கின்றனர். இரண்டு வேறுபட்ட உலகங்களில் சஞ்சரிக்கும் நிலை அவளுக்கு மன அழுத்தம் தரும் நவீன காரணிகளில் ஒன்று ! இது தவிர குழந்தை, குட்டி, வீடு, வேலை, இத்யாதி இத்யாதி என மன அழுத்தத்துக்கான காரணங்கள் நீங்கள் அறியாததல்ல !

உலகில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 85 சதவீதம் பேரும் பெண்கள் தான் ! எல்லா இடங்களிலும் வெற்றி வாகை சூடும் பெண்களால் ஏன் மன அழுத்த மதில் சுவரை மட்டும் எகிறிக் குதிக்க முடிவதில்லை ?

முயன்றால் முடியாதது இல்லை  ! கவலையை விடுங்கள் ! வழிகாட்டத் தான் உங்கள் கைகளில் தேவதை இருக்கிறாளே !

  1. நோ சொல்வதும் நாகரீகமே !

இளைச்சவன் தலையில மிளகாய் அரைப்பதில் அலுவலகங்கள் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. உங்கள் தலையில் சக பணியாளர்களோ, உயர் அதிகாரிகளோ ஏகப்பட்ட வேலையைச் சுமத்துகிறார்களா ?

“சாரி, என்னால இவ்ளோ தான் செய்ய முடியும்” என நாகரீகமாக மறுக்கப் பழகுங்கள். ஏற்றுக் கொள்ளும் வேலையை முழுமையாய்ச் செய்து முடிப்பது மன அழுத்தத்தில் விழாமல் காக்கும் வழிகளில் ஒன்று !

ஏகப்பட்ட வேலைகளை ஏற்றுக் கொள்வது, தேவையற்ற மன அழுத்தத்தை வரவேற்பது போல. மறுப்பது நல்ல பழக்கம் தான் ! முதலில் முடியாததாய்த் தோன்றும், பிறகு பழகி விடும்.

“முடியும்னு சொல்ற வேலையை சரியா முடிச்சுக் குடுத்துடுவாங்க” எனும் பெயரையும் நீங்கள் சம்பாதிக்கலாம் !

  1. புதிய கோணம், புத்துணர்வு தரும்.

உங்களுடைய பார்வை ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி எடுத்துக் கொள்கிறது என்பதைக் கவனியுங்கள். “ஐயோ இதெல்லாம் முடியாது..” என எடுத்த எடுப்பிலேயே தீர்மானிக்கிறதா ? “இதையெல்லாம் செய்யக் கூடாது” என மனம் முரண்டு பிடிக்கிறதா ? கண்டுபிடியுங்கள்.

அலுவலக வேலைகளைப் பொறுத்தவரை கஷ்டமும், சிக்கலும், எரிச்சலும் எழத் தான் செய்யும். ஒரு கஷ்டமான வேலை வந்தால், “இது உங்களை நிரூபிக்க ஒரு வாய்ப்பு” என எடுத்துக் கொள்ளுங்கள். அதை விட்டு விட்டு “கஷ்டத்தை எல்லாம் என் தலையில கட்டிடுவான்” என புலம்ப வேண்டாம் !

  1. மனதுக்கு மாற்று வழி..

 

மன அழுத்தமாக உணரும் தருணங்களில் மனசுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வது, மனதை உற்சாகமாக்கும் என்பது உளவியல் பாடம். எனவே எப்போதும் கொஞ்சம் உற்சாகமான விஷயங்களை கை வசம் வைத்திருங்கள்.

அது ஒரு சின்ன பிரேக் எடுத்து ஒரு கதை படிப்பதாகவும் இருக்கலாம், டைரி எழுதுவதாகவும் இருக்கலாம், அல்லது இணையத்தில் உலவுவதாகவும் இருக்கலாம். உங்களுக்கு ஏற்ற, பிடித்த ஒரு ரிலாக்‌சேஷன் கைவசம் இருக்கட்டும்.

ஒன்றுமே இல்லையேல் கண்களை மூடி, உங்களுக்குப் பிடித்த ஒரு இனிமையான சூழலை கற்பனை செய்து கொஞ்ச நேரம் பகல் கனவு காணுங்கள். தப்பில்லை !

  1. உற்சாகமான உடல் அவசியம்

மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டுமெனில் உடல் உற்சாகமாய் இருக்க வேண்டும் என்கிறது மருத்துவம் ! அதனால் தான் மன அழுத்தம் தவிர்க்க உடற்பயிற்சியை வல்லுனர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால் மனம் உற்சாகமாக இருக்கும். அதற்கு உடற்பயிற்சி கை கொடுக்கும். மூளையிலும், உடலிலும் ஆக்சிஜன் குறைவில்லாமல் இருந்தால் மூளை உற்சாகமாய் இருக்கும். அதற்கு மூச்சுப் பயிற்சி, யோகா, தியானம் போன்றவை கை கொடுக்கும்  ! உடலைப் பேணுவதன் மூலமாக மன அழுத்தத்தை விரட்டும் வழி இது !

  1. மன அழுத்தமும், மருத்துவமும்

நமக்கு மன அழுத்தம் வரும்போது உடல் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை வெளிவிடுகிறது ! இந்த ஹார்மோன்கள் உடலை உலுக்கி எடுக்கின்றன. குருதி அழுத்தத்தை எகிற வைக்கின்றன ! இதயத் துடிப்பை தாறுமாறாய் ஏற்றுகின்றன  ! குருதியில் சர்க்கரை அளவையும் அதிகரிக்கின்றன !

இது அப்படியே படிப்படியாய் தேங்கி, இதய நோய்கள், உடல் பருமன், மன நோய்கள், உடல் வலிகள் என பல்வேறு நோய்களை இழுத்து வரும். இவ்வளவு ஏன் ? பெண்களுக்கு மாதவிலக்கு தாறுமாறாகிப் போகவும் முக்கிய காரணம் மன அழுத்தம் என்கின்றனர் மருத்துவர்கள்.

  1. அதிர்ச்சி மன அழுத்தங்கள் !

ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வைப் பார்ப்பதால் வரும் மன அழுத்தத்தை “போஸ்ட் ட்ரமாடிக் ஸ்ட்ரெஸ் டிஸார்டர் – PSTD என்கின்றனர். ரொம்ப மனசுக்குப் பிடித்தமானவர்கள் சட்டென இறந்து போனாலோ, ஒரு விபத்தையோ, வன்முறையையோ நேரில் பார்த்தாலோ, பாலியல் ரீதியான வன்முறையைச் சந்தித்தாலோ, அல்லது இப்படிப்பட்ட ஏதோ ஒரு கடினமான சூழல் காரணமாக உருவாகும் மன அழுத்தம் இது !

ஒருவகையில் துரதிர்ஷ்டவசமான சூழல் இது எனினும், இதிலிருந்து வெளி வரவேண்டியது அவசியம். நல்ல ஆரோக்கியமான நட்புகளை வளர்த்துக் கொள்வதும், பொழுதுபோக்குகளை அரவணைப்பதும், உடற்பயிற்சிகள் மூலம் தன்னம்பிக்கையை வலுவாக்குவதுமே வெளிவரும் வழிகள்.

  1. விட்டு விடுதலே பெற்றுக் கொள்தல் !

“கல்யாண வீடாயிருந்தா நான் தான் மாப்பிளையா இருக்கணும், சாவு வீடா இருந்தா நான் தான் பொணமா இருக்கணும். எந்த இடமா இருந்தாலும் மாலையும் மரியாதையும் எனக்குத் தான் கிடைக்கணும்” எனும் மனநிலை நிம்மதியின் எதிரி.

விட்டுக் கொடுத்தலும், இயல்பாய் வாழ்தலுமே மன அழுத்தத்தை விரட்டும் வழிகள். உங்களை மன அழுத்தத்துக்குள் தள்ளும் விஷயங்கள் என்னென்ன என பட்டியலிடுங்கள். சின்னச் சின்ன விஷயங்களை சரி செய்யுங்கள். தள்ளி விட முடிந்தவற்றை தள்ளி விடுங்கள்.

  1. மன்னியுங்கள் !

மன்னிப்பு மன அழுத்தமற்றவர்களின் தாரக மந்திரம். மன்னிக்கும் மனம் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் வருவதில்லை. அப்படியே வந்தாலும் அது அவர்களுக்குள் தங்குவதில்லை.

கணவன், பிள்ளைகள், தோழிகள், அலுவலகம், உறவினர்கள் என யார் தப்பு செய்திருந்தாலும் மன்னிக்கப் பழகுங்கள். அதை மனமார செய்யப் பழகுங்கள். மிகவும் கஷ்டமாய் தோன்றும் விஷயம் இது. ஆனால் பழகி விட்டால் ஈகோ இல்லாத இனிய மனம் உங்களுக்குச் சொந்தமாகும்.

  1. ஒழுங்கு நல்லது.

எல்லாவற்றிலும் அரக்கப் பரக்க ஓடி அரையும் குறையுமாய் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் சர்வ நிச்சயம். எட்டு மணி பஸ்ஸுக்கு 7.59க்கு ஓடுபவர்கள் ரிலாக்ஸாக இருக்க முடியாது. பல விஷயங்கள் இவர்களிடம் ஒழுங்கில்லாமல் இருக்கும்.

உதாரணமாக சாவியை எங்கே வெச்சேன் என 2 நிமிடம், செருப்பு எங்கே என 2 நிமிடம், புக்ஸ் எங்கே என இரண்டு நிமிடம் என எல்லாவற்றுக்கும் டென்ஷனாகி மன அழுத்தத்தை உருவாக்கிக் கொள்வார்கள். ஓடிப் போகும்போ பஸ் கிடைக்காது. அப்புறம் எல்லாத்துக்கும் மாமியார் தான் காரணம்ன்னு முணு முணுப்பில பி.பி இன்னும் எகிறும் !

கொஞ்சம் ஒழுங்கு பழகினால் இருக்கும் நேரத்தை சரியாய்ப் பயன்படுத்த முடியும், நேர மேலாண்மை மன அழுத்தமற்ற வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும்.

  1. தூக்கம் முக்கியம்.

விடியற்காலைல எழுந்து ஓடியாடி வேலை செய்பவர்கள் பெண்கள். இரவில் நல்ல ஒரு எட்டு மணிநேர தூக்கம் இல்லாவிட்டால் எல்லாம் போச்சு ! நல்ல ஆழமான தூக்கம் மனதை அடுத்த நாளைக்காய் தயாராக்கும்.

உடலுக்கும், மனதுக்கும், மூளைக்கும் ஓய்வு ரொம்ப அவசியம். சரியாகத் தூங்காவிட்டால் உடல் சோர்வுடன் மனமும் சோர்வடையும். மன அழுத்தம் ஓடி வந்து உட்காரும். சூடாய் ஒரு கப் பால் இரவில் குடிப்பது, டிவி நேரத்தைக் குறைப்பது, மனதை இயல்பாய் வைத்திருப்பது இவையெல்லாம் பெரியவர்கள் சொல்லும் அட்வைஸ்..

  1. பெண் என்பது பெருமை !

“பெண்ணாய்ப் பிறந்து விட்டோமே” எனும் சுய பச்சாதாபம் பலருக்கும் மன அழுத்தத்தைக் கொண்டு வருவதாக ஒரு ஆய்வு சொல்கிறது. பெண் என்பது பெருமைப்பட வேண்டிய சமாச்சாரம். ஒரு மனிதனிடமிருந்து உயிரை வெளியே எடுத்தால் அவன் பிணமாவான். ஒரு பெண்ணிடமிருந்து உயிரை எடுத்தால் அவள் தாயாகிறாள் !  பெண் மட்டுமே அந்தப் பெருமைக்குரியவள் !

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல் மாதவம் செய்திடல் வேண்டுமம்மா.. என்றே உளமார நினையுங்கள் அதுவே உண்மை. தேவையற்ற மன அழுத்தங்களை நீங்களாக உருவாக்கிக் கொள்ளவேண்டாம் !

  1. எதிர்பார்ப்புகள் குறையட்டும்

இன்றைக்கு உலகில் இருக்கின்ற நோய்களில் 75 முதல் 90 சதவீதம் நோய்களுக்குக் காரணம் மன அழுத்தம் என மிரட்டுகிறது ஆராய்சி ஒன்று ! இந்த மன அழுத்தத்தைக் குறைக்க ஒரு எளிய வழி எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்வது தான்.

அடுத்தவர்களோடு நம்மை ஒப்பீடு செய்யாமல் இருந்தாலே பாதி எதிர்பார்ப்புகள் குறைந்து போகும். டிவி சொல்வதைக் கேட்காமல் பெற்றோர் சொல்வதைக் கேட்டால் தேவையற்ற எதிர்பார்ப்புகள் ஓடியே போய்விடும். “எது இல்லாமல் ஒரு மனிதனால் வாழ முடியுமோ, அது இல்லாமல் வாழ்வதே நல்ல வாழ்க்கை” எனும் தலைவர் மொழிகள் மனதில் இருப்பது நல்லது !

  1. வித்தியாசமான காரணங்கள்.

பொதுவான மன அழுத்தங்களுக்கு பல காரணங்கள் உண்டு. ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், ஓவர் வேலை, கடன்,தேர்வு, உறவு, நட்பு இப்படி இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால் இது மட்டுமல்ல, சில வித்தியாசமான காரணங்கள் கூட மன அழுத்தம் தரலாம்.

உதாரணமாக, சிலருக்கு சத்தம் அலர்ஜியாக இருக்கும். அதிக சத்தம் கேட்டால் டென்ஷனும் மன அழுத்தமும் வந்து சேர்ந்து விடும். சிலருக்கு வெளிச்சம் மன அழுத்தத்தைத் தருமாம். சிலருக்கு சில வாசனைப் பொருட்கள் மன அழுத்தம் தருகின்றனவாம். மன அழுத்தத்துக்கு என்ன காரணம் என்பதை அறிந்து அதை விலக்குங்கள் !

  1. தவறான பழக்கங்கள்.

பெரிய நிறுவனகளிள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காண முடிகிறது தம்மடிக்கும் பெண்களை ! மேலை நாடுகளில் சர்வ சாதாரணமான இந்தக் காட்சி தமிழகத்திலும் இப்போது காண முடிவது ஒரு அதிர்ச்சி ! நல்ல விஷயங்களில் முன்னேற்றம் இருப்பதே உண்மையான பெண் முன்னேற்றம்.

நிகோடின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கின்றன பல ஆய்வு முடிவுகள். அப்படியே போதைப் பழக்கம், தண்ணியடிப்பது போன்ற விஷயங்களெல்லாம் “திரில்” என பழக நினைத்தால் மன அழுத்தமும் வந்து தொற்றிக் கொள்ளும் !

  1. நல்ல விஷயங்களில் மன அழுத்தம்

என்ன கொடுமை சரவணன் இது ? நல்ல விஷயங்களில் கூடவா மன அழுத்தம் வரும் ? என நீங்கள் புலம்புவது கேட்கிறது ! வரும் என்பது தான் பதில் !

குறிப்பாக திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். நல்ல விஷயம் தானே ? பலரும் இந்தக் காலகட்டத்தில் மன அழுத்தமாய் இருப்பார்களாம். ஒரு பதவி உயர்வு கிடைக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அப்போதும் மன அழுத்தம் சிலரை வாட்டுமாம்.

இத்தகைய நேரங்களில் தான் பலருக்கு ஆன்மீகம் கைகொடுக்கிறது. அல்லது பெற்றோர், நல்ல நண்பர்கள், வழிகாட்டிகள், பெரியவர்கள் என நம்பிக்கையானவர்களோடான உரையாடல் கை கொடுக்கும் !

  1. தகராறில்லாத தாம்பத்யம்.

கட்டில் வாழ்க்கை ஆரோக்கியமாக இருந்தால் வீட்டில் வாழ்க்கை அழுத்தமற்றதாக இருக்கும். தாம்பத்யம் தகராறாய் இருந்தாலோ வீட்டில் சமநிலை தடுமாறும். இன்றைய வாழ்க்கை முறை அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய சூழலை உருவாக்குகிறது. ஆனால் அதற்கு விலையாக தாம்பத்யத்தைக் கொடுத்தால் தம்பதியரை மன அழுத்தம் பிடிக்கும்.

கணவன் மனைவி கட்டில் உறவு ஒரு ஸ்ட்ரெஸ் ரிலீவர் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே கல்யாணம் ஆகி ரொம்ப நாள் ஆச்சு, வேலை இருக்கு, குழந்தை பொறந்துடுச்சு. அது இது என காரணங்கள் சொல்லாமல் தாம்பத்ய வாழ்க்கையைக் கட்டி எழுப்புங்கள்.

  1. தாய்மையா ? கவனம்.

“புள்ளதாச்சி கிட்டே போயாடா இதையெல்லாம் சொல்லுவே.. போக்கத்த பயலே…” என பல்லில்லாத கிழவிகள் பேசுவதை கிராமங்களில் அடிக்கடிக் கேட்கலாம். தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் நல்ல இனிமையான விஷயங்களையே கேட்கவேண்டும் என்பார்கள். காரணம் அவர்களுக்கு மன அழுத்தம் வரக் கூடாது என்பது தான்.

மாயோ கிளினிக்ஸ் என்பவர் அமெரிக்காவிலுள்ள ஒரு குழந்தைகள் நல மருத்துவர். “தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் மன அழுத்தமடைந்தால் அது குழந்தைகளையும் நேரடியாகப் பாதிக்கும்” என எச்சரிக்கிறார் அவர். அதனால் தான் கர்ப்பகாலத்தில் பெண்கள் நல்ல இசை, நல்ல நூல்கள், நல்ல கவனிப்பு என மனதை இதமாக்கும் விஷயங்கள் பெற்றுக் கொள்வது அவசியம்.

  1. பாசிடிவ் மனநிலை.

மன அழுத்தம் இரண்டு விதம். ஒன்று நமக்கு வெளியே நடக்கும் விஷயங்களால் நமக்கு வருவது. பெரும்பாலும் நம்முடைய கன்ட்ரோலில் அது இருப்பதில்லை. இன்னொன்று நம்முடைய உள்ளுக்குள்ளே எழுவது. இது முழுக்க முழுக்க நமது கட்டுப்பாட்டில் உண்டு. மனம் நேர் சிந்தனைகளினால் வலுவாக இருந்தால் வெளிப்புற செயல்கள் கூட நம்மை அதிகம் பாதிக்காது !

உதாரணமாக, சாலையில் உள்ள டிராபிக் கூட உங்களுக்கு மன அழுத்தம் தரலாம். ஆனால் உங்கள் மனம் ஓத்துக் கொண்டால் மட்டும் ! தாழ்வு மனப்பான்மையில் உழலாமல், பாசிடிவ் மனநிலையுடன் வாழ்க்கையை எதிர்கொள்பவர்கள் இதை எளிதில் வெற்றி கொள்வார்கள்.

மன அழுத்தத்தைக் காரணிகள் 10 சதவீதமும், நமது மனம் 90 சதவீதமும் நிர்ணயிக்கின்றன என்கிறார் சார்லஸ் ஸ்வின்டால் எனும் நிபுணர். எனவே மனதை வலுவாக்குங்கள்.

  1. மூன்று வகை !

மன அழுத்தம் அதனுடைய தன்மை அளவில் மூன்று வகை. அக்யூட் ஸ்ட்ரெஸ் – என்பது திடீரென நிகழும் ஒரு செயல் உங்களுக்குத் தருகிற மன அழுத்தம். இது பெரும்பாலும் தற்காலிகமானது. “இன்னிக்கு வேலை முடிய ரொம்ப லேட் ஆச்சு” டைப் திடீர் டென்ஷன்கள் இந்த வகை. அது நாளை சரியாகும் ! இந்த வகை அழுத்தம் தொடர்ந்து கொண்டே இருந்தால் அது “எபிசாடிக் அக்யூட் ஸ்ட்ரஸ்” ஆக மாறும். “டெய்லி வேலை முடிய லேட் ஆகுது” என்பது போல !

குரோனிக் ஸ்ட்ரெஸ் என்பது கொஞ்சம் டேஞ்சர் வகை. சின்ன வயசிலேயே வறுமை, பட்ட காலிலேயே படும் போல தொடர் தோல்விகள், வேலையே கிடைக்கல போன்ற வகை இது !. டிராமிக் ஸ்ட்ரஸ் – என்பது ஏதோ ஒரு அதிர்ச்சி தந்த மன அழுத்தம்.

எதுவானாலும், மன அழுத்தம் ஆபத்தானது என்பதை உணருங்கள். !

  1. குழந்தைகளும், மன அழுத்தமும்

குழந்தைகள் உங்களை இமிடேட் செய்யும் ! உங்களுடைய வாழ்க்கை முறையையே குழந்தைகளும் பழகும். உங்கள் வீட்டில் அழுத்தமான சூழலா ? குழந்தையையும் அது பாதிக்கும். உங்கள் வீட்டில் சண்டையா ? குழந்தையின் மனதை அது பாதிக்கும். இப்படி குழந்தையின் மன அழுத்தத்தின் முக்கியக் காரணி நீங்களே !

குழந்தைகளை நண்பர்களாகப் பழகுங்கள். “எப்பவும் நீதான் ஃபஸ்டா வரணும்” என்பது போன்ற முட்டாள் தனமான கட்டளைகளை இடாதீர்கள். தோல்வியும் வெற்றியும் சகஜம் எனும் மனநிலையை குழந்தைகளுக்குள் வளர்த்துங்கள். இரண்டையும் கற்று வளரட்டும் பிள்ளைகள்.

  1. நகைச்சுவை உணர்வு நல்லது.

நல்ல நகைச்சுவை உணர்வு உடையவர்களுக்கு மன அழுத்தம் எளிதில் வருவதில்லை. அவர்கள் வாழ்க்கையை ரொம்பவே இயல்பாக எடுத்துக் கொள்வார்கள். ரொம்ப மூடி டைப் ஆபத்தானது.

சிலர் சொல்வார்கள், “என் பையன் ரொம்ப அமைதி, யார் கூடவும் பேச மாட்டான், தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருப்பான். சமத்து ! ” என. அது ஆபத்து ! நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர் என கலகலப்பாக இருக்கும் பிள்ளைகளுக்கு மன அழுத்தம் வராது. கவனியுங்கள் !

நல்ல காமெடி படம் போட்டாச்சும் கொஞ்ச நேரம் சிரிங்க. மன அழுத்தம் ஓடியே போய்விடும் என்கிறார் மனநல நிபுணர் லீ பெர்க்.

  1. வெயிட்டிங் டைம் நல்லது !

எங்கேயாச்சும் போனா “வெயிட்டிங் டைம்” பலருக்கும் எரிச்சல் தரும் விஷயம். அரை மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தால் அவர்கள் டென்ஷனாகி மன அழுத்தத்தை கூப்பிடுவார்கள்.

மேலை நாடுகளில் மக்கள் அலட்டிக் கொள்வதில்லை. சட்டென ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்து விடுவார்கள். நீங்களும் அதையே செய்யலாமே ? ஒரு புக் படிக்கலாம், அன்றைய தினத்தைப் பற்றி சிந்திக்கலாம், மூச்சுப் பயிற்சி செய்யலாம், ஆன்மீக வாதிகள் செபம் செய்யலாம் எவ்வளவோ செய்யலாமே ! “கறை நல்லது” மாதிரி, “வெயிட்டிங் டைம் நல்லது” என சொல்லிப் பழகலாமே !

  1. நல்லதையே சிந்தியுங்கள்

சிலருக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எப்போதாவது நடந்த ஒரு தப்பைப் பற்றியோ தோல்வியைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். எல்லாவற்றையும் அதிலிருந்தே தொடங்குவார்கள். அதற்கு அப்புறம் எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடந்திருக்கும் அதையெல்லாம் விட்டு விடுவார்கள்.

அந்த மனநிலை உங்களுக்கு இருந்தால் முதலில் அதைத் தூக்கிப் பரணில் போடுங்கள். “நம்மால் மாற்ற முடியாதவைகளைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது” என்பது மகிழ்ச்சியின் பாலபாடம். அதை மனதில் கொள்ளுங்கள்.

  1. பிறரை நேசியுங்கள்.

பிறரை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் ஏதேனும் ஒரு செயலை தினமும் செய்ய முயலுங்கள். அது உங்களை உற்சாகமாக்கும். பிறர் நலப் பணிகள் செய்பவர்களுக்கு மன அழுத்தம் எளிதில் வருவதில்லை. உதவி தேவைப்படுபவர்களுக்கு மனமார உதவி செய்து பாருங்கள். மனம் ரொம்ப பிரஷாகும்.

அதே போல உங்களுக்குப் பிடித்தமான செயல் ஒன்றையேனும் தினமும் செய்யுங்கள். எழுதுவது ஒரு நல்ல பொழுது போக்கு. மன அழுத்தத்தை அகற்றும் ஒரு நல்ல வழி அது. அதையும் நீங்கள் செய்யலாம்.

  1. வார இறுதிகள், வரம்

வார இறுதிகளை குடும்பத்தினரோடு முழுக்க முழுக்க செலவிடுங்கள். வெளியே போய் சாப்பிடுவது, கடற்கரையில் போய் விளையாடுவது என நேரத்தைச் செலவிடுங்கள். வார இறுதிகளில் அலுவலக வேலைகளை விட்டுவிடுங்கள். வேலைகள் உங்களுக்காகக் காத்திருக்கும் என்பதே யதார்த்தம்.

அலுவல் நாட்களின் அழுத்தங்களெல்லாம் வார இறுதிகளில் வடிந்து போனால் அடுத்த வாரம் வேலை செய்ய உற்சாகம் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். !

நல்ல தம்பதியராய் வாழ்வது எப்படி ?

Image result for happy old couple

கணவன் மனைவி உறவு என்பது ஆழமானது. வாழ்க்கையின் அடிப்படை மகிழ்வு கணவன் மனைவி உறவின் ஆரோக்கியத்தில் தான் கட்டியெழுப்பப்படுகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் சமீபகாலமாக ஏகப்பட்ட தம்பதியர் மண முறிவு கேட்டு கோர்ட் படியேறுவதை காண்கிறோம். பெரும்பாலான மணமுறிவுகளுக்கான காரணங்களை அலசும்போது வியப்பாக இருக்கிறது. “அடியாத்தீ… இதுக்கெல்லாமா டைவர்ஸ்” என்று பாம்படம் போட்ட பாட்டி கணக்காக நாமும் வியக்க நேரிடுகிறது. “குறட்டை விட்டதற்காக டைவர்ஸ்” எனும் மேலை நாட்டுக் கதைகளெல்லாம் ஒரு காலத்தில் நமக்கு வியப்பின் குறியீடு. இப்போது அதை விட உப்பு சப்பில்லாத காரணத்துக்கெல்லாம் நம் நாட்டில் டைவர்ஸ் நடக்கிறது !

தமிழனாக எதுக்கெல்லாம் பெருமைபடுவது என்பதற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இந்தியாவிலேயே அதிக மணமுறிவு எனும் பெருமையும் இப்போது நமது தலையில் ஒரு முள் கிரீடமாய் வந்து அமர்ந்திருக்கிறது.

“இந்த பொண்ணுங்களைப் புரிஞ்சுக்கவே முடியல” எனும் ஆண்களின் புலம்பலும், “இந்தப் பசங்க புரிஞ்சுக்கவே மாட்டேங்கறாங்க” எனும் பெண்களின் புலம்பலும் ஒரு வட்டத்தில் ஓடிக் கொண்டே இருக்கின்றன. ஆண்களிடமும், பெண்களிடமும் தனித்தனியே பேசிப் பாருங்கள். பெரும்பாலும், “நான் வேற என்னத்த எதிர்பாக்கறேன்…” என்று சொல்லி சின்னச் சின்ன விஷயங்களைத் தான் பட்டியலிடுவார்கள்.

அப்படிப்பட்ட புலம்பல்களையும், எதிர்பார்ப்புகளையும், அலசி ஆராய்ந்து வல்லுனர்களும், அனுபவஸ்தர்களும் தரும் குறிப்புகள் இவை ! உறவுகள் வலுப்பட வாழ்த்துகள்.

நேரம் ஒதுக்குங்கள்

“அவருக்கென்ன, ஆபீஸே கதின்னு கட்டிகிட்டு அழுவாரு” என மூக்கால் அழும் மனைவியர் ரொம்ப சாதாரணம். அதே நேரத்தில் பெரும்பாலான ஆண்களின் மனதிலும் அதே போன்ற ஒரு குரல் எழும்பும். “அவளுக்கென்ன, குழந்தை, சீரியல், அது இதுன்னு  அவளோட விருப்பங்கள் தான் எப்போதும்” !  என்பது போன்ற மன ஓசையில் அது கேட்கும்.

தன் இணைக்காகவென தனியே ஸ்பெஷலாக நேரம் ஒதுக்குவது குடும்ப வாழ்க்கையின் அடிப்படை விஷயம். இதில் மாறி மாறி குற்றம் சொல்லிக் கொண்டிருந்தால் தோற்றுப் போவது தாம்பத்யம் தான். அப்படி ஒரு ஸ்பெஷல் நேரம் கிடைப்பதற்காக ஒரு சீரியலை கட் செய்வதோ, ஐ.பி.எல் மேட்சை ஆஃப் பண்ணி வைப்பதோ தாம்பத்யத்தைத் தழைக்க வைக்கும் !

ஒருவருக்கு நேரம் இருக்கும் போது அடுத்த நபர் நேரத்தை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து இணைந்து நேரம் செலவிடப் பழகவேண்டும். அதை விட்டு விட்டு, “நான் பிரியா இருக்கும்போ நீ பிஸியாயிடறே, நான் பிஸியா இருக்கும்போ நீ ஃபிரீ ஆயிடறே” என புலம்புவதிலும் அர்த்தம் இல்லை. இணைந்து அதிக நேரம் செலவிடும் தம்பதியர் வாழ்க்கையில் சிக்கல்கள் வருவதில்லை. வந்தாலும் அவை நீள்வதில்லை.

உங்கள் பெற்றோர், தாத்தா பாட்டிகளிடம் கேட்டுப் பாருங்கள். மாலை வேளைகளில் கூட்டமாய் முற்றத்தில் அமர்ந்து கதையளக்கும் காலங்களை அசை போடுவார்கள். அந்த உரையாடல்கள் தான் அவர்களுடைய குடும்ப வாழ்க்கையை பலப் படுத்திக் கொண்டிருந்தது எனும் உண்மை உணருங்கள் !


மரியாதை மனதில் மட்டுமல்ல !

 

மரியாதை என்றதும் ஏதோ, “ஐயா”, “அம்மா” என்றெல்லாம் அழைக்கச் சொல்வேனென யாரும் டென்ஷன் ஆக வேண்டாம். சொல்ல வரும் விஷயம் வேறு ! பெரும்பாலான தம்பதியர் திருமணம் ஆனதும், கணவனோ, மனைவியோ இவர் நமக்கானவர் தானே எனும் எண்ணத்தில் அலட்சியமாய் இருந்து விடுவதுண்டு. “இவரையெல்லாம் ஸ்பெஷலாய்க் கவனிக்கத் தேவையில்லை” எனும் எண்ணமும் மனதில் எழுவதுண்டு. இந்த சின்ன சிந்தனையே பல வேளைகளில் டைவர்ஸ் வரை போய் கண்ணைக் கசக்கும் !

காதல் திருமணங்கள் தோல்வியில் முடிகிறதெனில் இந்த காரணம் மிக முக்கியமானது ! என தைரியமாய் அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள். “இதெல்லாம் மனைவியோட கடமைகள் தானே,” என கணவர்கள் அலட்சியமாய் திரிய வேண்டாம். “இதெல்லாம் கணவன் செய்ய வேண்டிய விஷயங்கள் தான், இதில என்ன ஸ்பெஷன் ?” என மனைவிகள் அலட்சியப் படுத்தவும் வேண்டாம். உங்கள் இணைக்கு ஏற்ற அங்கீகாரங்களைக் கொடுங்கள். செயல்களுக்கான மரியாதையையும் கொடுங்கள்.

உதவிகள் செய்கையில் சொல்கின்ற நன்றியில் ஆனாலும் சரி, பேசுகையில் எழுகின்ற புன்னகையில் ஆனாலும் சரி, முடிவுகளில் கலந்தாலோசிக்கும் மனநிலையிலும் சரி. “உன்னை நான் மதிக்கிறேன். உன்னுடைய பங்களிப்புக்கு நான் மரியாதை செலுத்துகிறேன்” எனும் தொனி எழட்டும் ! அது உங்கள் மணவாழ்க்கையை உற்சாகமாக செயல்பட வைக்கும்.

ரசனையை மதியுங்கள்.

கணவனுக்குப் பிடித்த விஷயங்கள் மனைவிக்குப் பிடித்திருக்க வேண்டுமென்பதில்லை. அதே போல மனைவிக்குப் பிடித்த விஷயங்கள் கணவனுடைய ரசனைக்குரியதாய் இருக்க வேண்டுமென்பதுமில்லை. ஆனால் அடுத்தவர் ரசனைக்கு மரியாதை செலுத்துங்கள். அது ரொம்ப முக்கியம்.

“ஆமாம்.. இவளுக்கு எப்பவும் படம் வரையறதே பொழப்பா போச்சு.” என கிண்டலடிப்பதிலோ. “ஆமா, இவரு ஜிம்முக்கு போய் கும்முன்னு இருந்து என்ன பிரயோசனம். வேற வேலையே இல்லையா ?” என நக்கலடிப்பதிலோ எந்த பயனும் இருக்கப் போவதில்லை.

அடுத்த நபருடைய விருப்பங்களையும் ரசனைகளையும் உற்சாகமாய் ஊக்கப்படுத்துங்கள். ஊனப்படுத்தாதீர்கள். “இந்த வயசுலயும் உனக்கு இப்படி ஒரு கலை தாகம் இருக்கே. சூப்பர், ரொம்ப நல்லா இருக்கு என உற்சாகமூட்டுங்கள்”. வீடுகளில் உற்சாகம் கிடைக்காதவர்கள் கலைஞர்களாகவோ, வெற்றியாளர்களாகவோ மாறுவதில்லை. அப்படியே மாறினாலும் அது அவர்களுக்கு முழு நிறைவைத் தருவதில்லை.

உங்கள் வாழ்க்கைத் துணையின் விருப்பங்களை மதியுங்கள். அவர்களுடைய ரசனைகளை ஊக்கப்படுத்துங்கள். அந்த ரசனைகளை அவர்கள் வளர்த்தெடுக்க, உங்களுடைய நேரத்தையும், உழைப்பையும், ஆதரவையும் கொடுங்கள். குடும்ப உறவு பலப்படும். அதை விட்டுவிட்டு அடுத்தவர்களுடைய ரசனைகளை விமர்சித்துத் திரிந்தால் காயங்கள் மட்டுமே கடைசியில் மிஞ்சும்.

குடும்பம் வேறு, கூட்டுக் குடும்பம் வேறு !

 

உங்கள் குடும்பம் என்பது நீங்களும், உங்கள் வாழ்க்கைத் துணையும், குழந்தைகளும் தான். மற்ற அனைவரும் உங்கள் குடும்பம் எனும் உள் வட்டத்துக்கு வெளியே வரையப்பட்டிருக்கும் வட்டங்கள் தான். எனவே உங்களுடைய முதல் கவனமும், முன்னுரிமையும் உங்கள் குடும்பத்தைக் கட்டியெழுப்புவதில் இருக்கட்டும். அதுவே குடும்ப உறவை வலுப்படுத்தும்.

“எங்க அம்மா சொன்னாங்க”, “ உங்க அம்மா முகத்தை திருப்பிக் கிட்டாங்க” என்றெல்லாம் உப்பு சப்பில்லாத காரணங்களுக்காக வாக்குவாதங்கள் செய்தால், அவை மனதுக்குள் போய் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளும். அதன் பின் யார் பெரியவர், யாருக்கு அதிக பவர், யாரை மதிப்பது, யாரை தாக்குவது என்றெல்லாம் சிந்தனைகள் தாறுமாறாய் ஓடும்.

பிறரை மதிப்பதும், நேசிப்பதும் மனிதனுக்கே இருக்க வேண்டிய இயல்புகள். அதே நேரத்தில் தனது குடும்பத்தை நல்வழியில் கட்டியெழுப்புவதே கணவன் மனைவியின் முதன்மைப் பணி என்பதில் எந்த விதமான சமரசமும் வேண்டாம். எனவே உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல முன்மாதிரிகையான தம்பதியராய் வாழ்வதில் ஆர்வம் காட்டுங்கள்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். குழந்தைகள் எப்போதுமே தங்கள் பெற்றோர் என்ன செய்கிறார்களோ அதையே கவனித்து பின்பற்றும். நீங்கள் “உங்கம்மா, எங்கம்மா” என சண்டை போட்டால் அதையே குழந்தைகளும் கற்றுக் கொண்டு உங்களுக்கு ஷாக் டிரீட்மென்ட் தரும் !

தனியே, தன்னந்தனியே !

திருமணமாகி ஒரு குழந்தை பிறந்து விட்டால் அப்புறம் குழந்தை அம்மாவின் கையில் ஒரு பச்சை போல குத்தப்பட்டுவிடுவது இயல்பு. அப்புறம் குழந்தை இல்லாமல் தம்பதியரை எங்கேயும் வெளியே பார்க்கவே முடியாது ! அது தப்பு என்கின்றனர் வல்லுனர்கள்.

கணவன் மனைவி உறவு வலுப்பட அவ்வப்போது தனியே தன்னந்தனியே வெளியே போய் வாருங்கள் என்கின்றனர். தனியே மனைவியை அழைத்துக் கொண்டு பீச்சில் போய் சுண்டல் வாங்குவது, குறைந்த பட்சம் காற்று வாங்குவது, ஒரு ஹோட்டலுக்குப் போய் ரிலாக்ஸாக அமர்ந்து எதையாச்சும் சாப்பிட்டுக் கொண்டே “கடலை” போடுவது என தனிப்பட்ட பிரியமான நிமிடங்கள் அவசியம்.

ஜோடியாகப் போய் சினிமா பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. அது ஒரு வகையில் வீட்டிலிருந்து சீரியல் பார்ப்பது போலத் தான். நீங்கள் போய் உட்கார்ந்து கொட்டக் கொட்ட சினிமா திரையை வெறித்துக் கொண்டே இருப்பீர்கள். அதற்குப் பதிலாக பார்க், பீச், காட்சியகங்கள் போன்ற இடங்களுக்கு போகலாம். அது உங்கள் துணை மீது தனிக்கவனம் செலுத்த உதவும்.

குழந்தைகளை ஒரு நாள் அம்மா அப்பாவிடமோ, உறவினர்களிடமோ விட்டு விட்டு ஒரு ரொமான்டிக் டவுண்ட் அப் செய்யுங்கள். உங்களுடைய காதலை மீட்டெடுக்கும் தருணங்கள் மிகவும் அவசியமானவை. உறவு பலப்படவும், காதல் ஆழமடையவும், குடும்ப வாழ்க்கை உறுதிப்படவும் இத்தகைய ரம்மியமான தனிமைப் பொழுதுகள் நல்லவை.  அதற்கான சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள் !

இனிய ஆச்சரியங்கள் அவசியம் !

கல்யாணத்துக்கு முன்னாடி காதலர்கள் ரொம்பவே கிரியேட்டிவ் மனசோட இருப்பாங்க. “எதைக் கொடுத்து ஆளைக் கவுக்கலாம்”, “என்ன பரிசு கொடுத்து அசத்தலாம்” என்ற நினைப்பிலேயே அவர்களுடைய பெரும்பாலான பொழுது ஓடியே போய்விடும். “நம்ம ஆளு இருமிய நாள் இது” என சர்வ தினங்களையும், மணிகளையும், ஏன் நிமிடங்களையும் கூட நெஞ்சுக்குள் கல்வெட்டாய் செதுக்கி வைப்பார்கள்.

திருமணம் முடிந்துவிட்டால் எல்லாம் பரணில் போடப்படும். பிறந்த நாளே மறந்த நாளாகிப் போகும். “முன்னாடியெல்லாம் நம்மாளுக்கு நம்ம மேல கரிசனை அதிகம். இப்பல்லாம் நாம முக்கியமில்லாம போயிட்டோம்” என கணவனும், மனைவியும் கவலை கொள்ள இது ஒரு முக்கியமான காரணம் !

அதற்கு என்ன செய்யவேண்டுமென கேட்டால், ‘பிறந்த நாள், திருமண நாள் இவற்றையெல்லாம் நினைவில் வைத்து பரிசு கொடுக்க வேண்டும், வாழ்த்து சொல்ல வேண்டும்’ என நீங்கள் சொன்னால் நீங்கள் சாதாரண தம்பதி !

அதை விட ஒரு படி மேலே போய், உங்க ஆள் நினைக்காத நேரத்தில் ஏதேனும் வாங்கிக் கொடுத்து அசத்த வேண்டும். “கடைக்குப் போனேன், இந்த கம்மல் பார்த்தேன். உனக்கு சூப்பரா இருக்கும்ன்னு தோணிச்சு, சட்டுன்னு வாங்கிட்டேன்”. “இந்த வாட்ச் உங்க கைக்கு நல்லா இருக்கும்னு தோணிச்சு, அதான் வாங்கிட்டு வந்தேன்” என்று அவ்வப்போது ஒரு இனிய ஆச்சரியம் கொடுத்துப் பாருங்கள். உங்கள் திருமண வாழ்க்கை முறுக்குக் கம்பிகளை விட இறுக்கமானதாய் மாறிவிடும்.

இனிய ஆச்சரியங்களை காஸ்ட்லி பரிசுகள் மூலம் தான் கொடுக்க வேண்டுமென்பதில்லை. அவ்வப்போது ஒரு நன்றி சொல்வது, ஒரு சாக்லேட் வாங்கிக் கொடுப்பது, ஒரு பூ வாங்கிக் கொடுப்பது என எந்த விதத்திலும் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கை கொடுக்கும் கை

மனைவிகளுக்கு உரிய மிகப்பெரிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, “வீட்ல எதையுமே செய்ய மாட்டேங்கறாரு” என்பது. கணவர்களோ, “சொல்ற எல்லா வேலையும் செய்றோமில்ல” என்பார்கள். “இதெல்லாம் சொல்லாமலேயே செய்யணும்” என பதில் பாட்டு வரும். இந்த உரையாடல் இப்படியே நீண்டு, ஒரு சின்ன சண்டையாகி, “இனிமே நீ சொல்றதையும் செய்யப்போறதில்லை” என ஈகோ இடித்து நிற்கும் !

இதை ரொம்ப சிம்பிளாகக் கையாளலாம். மனதில் இருக்கும் வேறு ஏதோ ஒரு எரிச்சலை பரஸ்பரம் எறிந்து விளையாடுவதை முதலில் நிறுத்த வேண்டும். “ இதைச் செய்யுங்கள் “  என ஒரு வேலையைக் கொடுப்பதில் ஒன்றும் குறைந்து போவதில்லை. அப்படியே ஒரு வேலை உங்கள் கண் முன்னால் கிடந்தால் அதை தானாகவே முன்வந்து செய்வதிலும் தப்பேதும் இல்லை.

இப்படி இரண்டு பேருமே வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும் போது அன்பு தழைக்கும். “ஏதாச்சும் வேலையிருக்கா” என்று கேட்டால், “எவ்ளோ இருக்கு, தேடிப் புடிச்சு செய்யுங்க” என்று சொல்லி எரிச்சலூட்டாமல் ஒரு சக நண்பனைப் போல பழகுங்கள். வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தனது மனைவி தனது பணிகளில் உதவுகிறாள் என்பதில் கணவன் மிகவும் புளகாங்கிதம் அடைவான். தனது கணவன் தனக்கு ஒத்தாசை செய்கிறார் என்பதில் மனைவிகள் ரொம்பவே பெருமிதம் அடைவார்கள்.

அப்புறமென்ன, கை கொடுக்கும் கையாய் இணைந்து செயல்படுங்கள். குடும்ப வாழ்க்கை ஆலமரம் கணக்கா செழித்து வளரும் !

செவிமடுங்கள் !

பேசுவது எல்லோருக்கும் ரொம்பப் பிடித்தமான விஷயம். பால்ய கால கதைகள் முதல், நேற்றைக்கு சீரியலில் நடந்த விஷயம் வரை அலசிக் காயப் போடுவதில் அப்படி ஒரு அலாதி இன்பம். ரொம்ப நல்லது ! பேசுவது மன அழுத்தத்தை ரொம்பவே குறைக்கும் என்கின்றனர் வல்லுனர்கள்.

நியூட்டனின் மூன்றாம் விதி தெரியும் தானே ? “எல்லா விசைக்கும் சமமான எதிர் விசை ஒன்று உண்டு”. அப்படி இருந்தால் தான் ஒரு சமநிலை கிடைக்கும். நீங்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருந்தால் அந்த சமநிலை பாதிக்கப்படும். பேசுவதும் கேட்பதும் கலந்த மனநிலையே நமக்கு அழகு ! எனவே கேளுங்கள்.

உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உங்களிடம் சொல்ல ஏராளம் கதைகள் இருக்கும். அன்றைய தினம் நடந்த நிகழ்ச்சிகளையோ, சோகங்களையோ, மகிழ்வுகளையோ எதையேனும் சொன்னால் கேளுங்கள். உன்னிப்பாகக் கேளுங்கள். சும்மா டிவி பார்த்துக்கொண்டோ, செய்தித் தாள் வாசித்துக் கொண்டோ, செல்போன் நோண்டிக்கொண்டோ கேட்பது போல பாவனை செய்ய வேண்டாம்.

பேசுவதை ஆத்மார்த்தமாய்க் கேட்பது, தம்பதியரிடையே இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பு. சொன்னால் நம்புங்கள் ! உங்கள் வாழ்க்கையில் இறுக்கத்தை இந்த ஒரு சின்ன விஷயம் அதிகரிக்கும் என்பது சர்வ நிச்சயம் !

தவறு, தவறு தான் !

பெரும்பாலான சிக்கல்களுக்குக் காரணம் தவறுகளை நியாயப்படுத்த முயல்வது தான். செய்தது தவறு தான் என்று அப்பட்டமாய் தெரிந்தால் கூட அந்தச் செயலுக்கு ஒரு அட்டகாசமான காரணம் இருப்பதைப் போல ஜோடிக்க முயல்வது உறவை பலவீனப்படுத்தும்.

“ஆமா, அது தப்பு தான்.. சாரி” என சொல்வதற்கு பலருக்கும் வாய் வருவதில்லை. காரணம் ஈகோ. இல்லையென்று சொல்பவர்கள் கொஞ்சம் ரீவைன்ட் செய்து ‘எப்போது நீங்கள் செய்த ஒரு தவறை ஒப்புக் கொண்டீர்கள்’ என்று யோசித்துப் பாருங்கள். அப்போது புரியும். இப்போது கூட ‘நான் தப்பே செய்யாதவன்’ என நீங்கள் நினைத்தால் நீங்கள் ஈகோவின் உச்சத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்

தவறு செய்யாத மனிதர்கள் இல்லை. மேலதிகாரியிடம் செய்யாத தப்புக்கெல்லாம் மன்னிப்புக் கேட்கக் கூச்சப்படாத நாம் வீட்டில் மட்டும் செய்த தப்புக்கே மன்னிப்புக் கேட்க உலக மகா தயக்கம் காட்டுவோம் இல்லையா ?

இயல்பாய் இருங்கள். தவறு செய்தால் அதைத் தவறு என ஒத்துக் கொள்ளுங்கள். சிலர் தவறே செய்யாவிட்டால் கூட,”சரி பரவாயில்லை இது என்னோட தப்பு தான்” என இன்னும் ஒரு படி மேலே போய் தாழ்மையாய் இருப்பார்கள். அத்தகையவர்களுடைய வாழ்க்கை சூப்பர் ஸ்ட்ராங் ஆக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எனவே தப்பை ஒத்துக் கொள்வதில் இம்மியளவும் தயக்கம் வேண்டாம். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் தானே தவறை ஒத்துக் கொள்கிறீர்கள் ! சந்தோசத்துல பெரிய சந்தோசம் அடுத்தவங்களைச் சந்தோசப் படுத்திப் பார்ப்பது தானே !

பெருமை பேசுவது நல்லது.

இந்த விஷயத்தில் பெண்கள் சூப்பர் ஸ்டார்கள் தான். எப்போதுமே தனது கணவனை பொது இடத்தில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். வீட்டில் என்ன தான் போர்க்களம் நடந்தாலும் மற்றவர்களிடம் பேசும்போது கணவன் ஒரு சூப்பர் சாது போல சொல்லி சந்தோசப்படுவார்கள்.

இப்படி தம்பதியர் மாறி மாறி தங்கள் துணையைப் பற்றி நல்லதாகப் பேசும் போது மனதிலும் நல்ல சிந்தனைகள் வளரும். உயர்வுகளும், தாழ்வுகளும் கலந்தே வருவது தான் வாழ்க்கை. அந்த நிலையில் ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடிக்கும் மனநிலை ஆரோக்கியமானது. ஒருவருடைய பலங்களைப் பற்றி அதிகம் சிந்திப்பதும், அதை கௌரவப் படுத்துவமும் குடும்ப உறவை ஆரோக்கியமாக்கும்.

பலவீனங்களையும், பலங்களையும் கூட்டிக் குழைத்த ஒரு கூட்டாஞ்சோறு தான் வாழ்க்கை.  உங்கள் துணையின் பலத்தை நீங்கள் பெருமையாய் பாருங்கள். அவருடைய பலவீனங்களைப் பற்றி பிறருடன் பேசவே பேசாதீர்கள். பலவீனங்களை பலங்களாக மாற்ற உங்கள் துணைக்கு உதவுங்கள்.

உங்கள் வாழ்க்கைத் துணையின் பலவீனங்களைப் பட்டியலிடத் துவங்கினால் குடும்ப வாழ்க்கை தோல்வியடையும். பெரும்பாலான தவறான உறவுகளுக்கு இத்தகைய மனநிலையே காரணம். எனவே எச்சரிக்கையாய் இருங்கள்.

எந்தச் சூழலிலும் உங்கள் துணை தாழ்வு மனப்பான்மையோ, அவமானமோ ஏற்பட வழி வகுக்காதீர்கள். அது உங்கள் அன்னியோன்யத்தையே அழித்து விடும்.

தீர்ப்பிடாதீர்கள் !

தம்பதியர் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று தீர்ப்பிடுவது. “உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா ? நீ எப்பவுமே அப்படித்தான்” என்பது ஒரு உதாரண வாக்கியம். நீ இப்படித்தான் என்று ஒரு நபரை சொல்வது அந்த நபரை ஊனமாக்கும். ஒருவேளை அந்த திட்டுக்குத் தகுதியில்லாதவர் எனில் அது இரட்டைப் பாதிப்பை உருவாக்கும்.   எல்லோரும் மன திடத்துடன் இத்தகைய விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதில்லை. எனவே கவனம் தேவை.

எப்போதோ ஒரு தடவை நடந்த தவறை குத்திக் காட்டிக் கொண்டே இருப்பது சிலருக்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவம். இது ஒரு வகையில் ஒரு மனநோய் என்கின்றனர் உளவியலார். பிறரை காயப்படுத்துவதன் மூலமாக தனது மனசுக்கு மகிழ்ச்சி உருவாக்கிக் கொள்ளும் சேடிஸ்ட் மனநிலையின் வடிவம் இது. இந்த பழக்கம் யாருக்காவது இருந்தால் மூட்டை கட்டி கண்காணாத தேசத்தில் எறிந்து விட்டு அடுத்த வேலையைப் பாருங்கள். இது ரொம்ப டேஞ்சர்.

தவறுகள் நடப்பதும், சண்டைகள் நடப்பதும் இயல்பு. அப்படி நடக்காவிட்டால் தான் ஏதோ பிரச்சினை என்று அர்த்தம். எனவே சின்னச் சின்ன சண்டைகளுக்காக கவலைப்படாதீர்கள். அவற்றை வைத்துக் கொண்டு அடுத்தவரை தீர்ப்பிட்டு ஆறாக் காயத்தை உண்டுபண்ணாதீர்கள். அது உங்களுடைய குடும்ப வாழ்க்கையை ரொம்பவே பலவீனப்படுத்தி விடும்.

விட்டுக் கொடுத்தல்

கொஞ்சம் பழைய காலத்துத் தம்பதியரை சந்தியுங்கள். உங்கள் ஊர் தாத்தா பாட்டியிடம் போய் குடும்ப வாழ்க்கையைப் பற்றி அவ்வப்போது பேசுங்கள். அவர்கள் வாழ்க்கையின் ரகசியங்களைச் சொல்வார்கள். அப்படிச் சொல்லும் விஷயங்களில் நிச்சயமாய் “விட்டுக் கொடுத்தல்” இருக்கும்.

விட்டுக் கொடுத்தல் நீண்டகால குடும்ப வாழ்க்கைக்கு ரொம்ப அவசியம். அதே நேரத்தில் விட்டுக் கொடுத்தலை விருப்பத்துடனும், மகிழ்வுடனும் செய்யவேண்டும். “உனக்காக நான் விட்டுக் கொடுக்கிறேன்” என்று சொல்வது விட்டுக் கொடுத்தலின் அர்த்தத்தையே அழித்து விடும்.

சிலர் விட்டுக் கொடுத்தலை தியாகம் போல செய்வார்கள். அது அவர்களுடைய தலையில் ஒரு கர்வக் கிரீடத்தைச் சூட்டும்., அது தவறு என்பதை நான் சொல்லத் தேவையில்லை. விட்டுக் கொடுத்தல் இயல்பாக நடக்க வேண்டும். ஒரு பிரச்சினையை சுமூகமாகத் தீர்ப்பதிலோ, அடுத்த நபருடைய தன்மானத்தைக் காக்கும் நிலையிலோ எப்படி வேண்டுமானால் அது நிகழலாம்.

எனவே விட்டுக் கொடுத்தல் பழகுங்கள். அது தான் குடும்பத்தின் அன்பையும், கண்ணியத்தையும் கட்டிக் காக்கும். நீண்டகால உறுதியான பந்தத்துக்கும் உத்தரவாதம் நல்கும்.

நோயில் உடனிருத்தல்

நோய்கள் விரும்பத் தகாதவை. ஆனால், உங்களுடைய ஆழமான அன்பைப் பகிர்ந்து கொள்ளக் கிடைக்கும் வாய்ப்புகளாக அவற்றைக் கருதலாம். தீயதிலும் ஒரு நன்மை உண்டு என்று சொல்வதைப் போல ! இத்தகைய தருணங்களில் உங்களுடைய அன்பான கவனிப்பில் உங்கள் துணையின் மனதை வலிமைப்படுத்துங்கள்.

“உடம்பு சரியில்லாம இருந்தப்போ தாங்க என்னோட மனைவியைப் பற்றித் தெரிஞ்சுகிட்டேன்” அல்லது “எனக்கு உடம்பு சரியில்லேன்னதும் லீவ் போட்டு வீட்லயே இருந்து கவனிச்சுகிட்டாரு” என்பன போன்ற உரையாடல்கள் உங்கள் காதலின் ஆழத்தை சொல்லிச் செல்பவை.

உடல் பலவீனமாய் இருந்தாலும் சரி, மன பலவீனமாய் இருந்தாலும் சரி, அந்த சூழலில் உங்கள் வாழ்க்கைத் துணையின் கரம்பற்றி அவர்களுக்கு பணிவிடை செய்யுங்கள். காதலுடன் கவனிப்பதைப் போல அன்பின் ஆழத்தைப் பறைசாற்றும் விஷயங்கள் அதிகம் இல்லை.

எக்காரணம் கொண்டும் நோயாகவோ, பலவீனமாகவோ இருக்கும் போது உங்கள் துணை தனிமையில் வாடும்படி செய்யாதீர்கள். அது அவர்களுடைய மனதைப் புண்படுத்தும். உங்களுடைய குடும்ப வாழ்க்கையையும் பலவீனப்படுத்தும்.

சின்னச் சின்ன விஷயங்களின் கூட்டுத் தொகையே அன்பான வாழ்க்கை. அது பெரிய பெரிய நிகவுகளினால் கட்டியெழுப்பப் படுவதாய் பலரும் நினைத்து விடுகிறார்கள். சின்னச் சின்ன உடல் பலவீனங்களில் கூட உங்களுடைய அன்பையும் கவனிப்பையும் வெளிப்படுத்துங்கள். அது உங்கள் குடும்ப வாழ்க்கையை பலப்படுத்தும்.

தாம்பத்யம் தழைக்கட்டும்

காதலிக்கும் போது காதலர்கள் கரங்கள் இரண்டையும் சேர்த்து காங்கிரீட் போட்டது போல இணை பிரியாமலேயே இருப்பார்கள். கண நேரம் கையை விட வேண்டுமென்றால் கூட அவர்களுக்கு உலக மகா கஷ்டமாய் தோன்றும். சின்னச் சின்ன சில்மிஷங்களில் மனம் சிறகு கட்டிப் பறக்கும்.

அப்படியே திருமணம் நடந்த பிறகும் அந்த உறவு நீடிக்கும். ஹனிமூன் கால சிலிர்ப்புகளும், சந்தோசங்களும் நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சமாக குறையத் துவங்கும். அதற்குப் பிறகு கணவன் மனைவியரிடையே சில்மிஷங்களும், சிலிர்ப்புகளும் இடைவெளி விட்டே தொடரும்.

இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு, குழந்தைகள் பிறந்த பின் அந்த இடைவெளி ஏகப்பட்ட தூரமாகிவிடும். காதலிக்கும் போது இருந்த சிலிர்ப்புகளெல்லாம் காணாமல் போயிருக்கும். படுக்கையறையில் பெரும்பாலும் குறட்டைகளே நிரம்பி வழியும்.

குடும்ப உறவு பலமடைய வேண்டுமெனில், படுக்கையறை பந்தம் ஆரோக்கியமாய் வளர வேண்டும். படுக்கையறை பலமாய் இருக்க, படுக்கையறைக்கு வெளியே தம்பதியரிடம் அன்பும், நிம்மதியும், மகிழ்வும் நிரம்ப வேண்டும். “இனிமே இதெல்லாம் எதுக்கு..” என ஒதுங்கும் மனப்பான்மைகள் கள்ளத் தொடர்புகளுக்கு அழைப்பு விடுக்கும்.

எனவே படுக்கையறை உறவைப் பலப்படுத்துங்கள், அது குடும்ப வாழ்க்கைக்கு ரொம்ப அவசியம்.

சந்தேகம் வேண்டாம்

தம்பதியரிடையே எது வந்தாலும் வராவிட்டாலும் சந்தேகம் மட்டும் வரவே கூடாது ! சந்தேகமே இல்லாமல் இதுதான் வேர்களில் விழும் விஷம் ! ஒரு சின்ன நெருப்புப் புள்ளியாய் விழும் விஷயம் தான் சந்தேகம். அந்த சந்தேகத்துக்கான காரணிகளை முதலில் கண்டறிந்து அதை விலக்க வேண்டியது ரொம்ப அவசியம்.

மனம் திறந்த உரையாடல்கள் சந்தேகத்தை விலக்கும். அதிலும் குறிப்பாக அலுவல் தொடர்பான நண்பர்கள், தோழிகள் போன்றவர்களை தம்பதியர் இருவருமே நன்கு அறிந்து வைத்திருப்பது நல்லது. அது சந்தேகங்களை கொஞ்சம் விலக்க உதவலாம். ஒருவருக்கு சந்தேகம் வருவது போல தோன்றினால் உடனே காச் மூச் என கத்தாமல் நிதானமாய் விளக்க முயலவேண்டும். அதுவே சிறந்த வழி.

“ஆமா ஊர்ல எல்லாருக்கும் அஞ்சுமணிக்கு வேலை முடியுது, இவருக்கு மட்டும் ஒன்பது மணிக்கா” என உசுப்பேத்தி விடும் பெருசுகளையோ, பக்கத்து வீட்டு விஷமிகளையோ தூர ஒதுக்க வேண்டியது முதல் வேலை ! “ஏதோ விஷயம் இருக்கு ..” என ஊகித்துக் கொன்டு துப்பறியும் சாம்புவாக நீங்கள் மாறாமல் இருக்க வேண்டியது இரண்டாவது வேலை.

சந்தேகம் வந்து விட்டால் உங்கள் உரையாடலை அதிகப்படுத்துங்கள். அடுத்த நபருடைய மனநிலையை புரிந்து கொள்ள முயலுங்கள். பதட்டப்படாதீர்கள் ! பொறுமையும், அன்பும் இத்தகைய சூழலில் மிகவும் அவசியம்.

“காமலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்” ங்கற பழமொழி எதுல உண்மையோ இல்லையோ, இங்கே சர்வ சத்தியம். சந்தேகத்தோட பார்க்கும்போ செல்போன் சிணுங்கினா கூட சந்தேகம் வரும். சந்தேகத்தை மனதில் வைத்துக் கொண்டிருந்தால் அன்பு பாதிக்கப்படும். உறவு பலவீனப்படும். பிறகு அதற்கும் காரணம் ஏதோ ஒன்று என சந்தேகப்பட ஆரம்பித்து விடுவீர்கள் !

நன்றியும், பாராட்டும் ! 

நம்ம ஊரில் மருந்துக்குக் கூட கிடைக்காத விஷயங்கள் இந்த நன்றியும், பாராட்டும். அதுவும் குடும்பத்துக்கு உள்ளே இவையெல்லாம் பரிமாறப்படுமா என்றால் அது குறிஞ்சிப் பூ போல ரொம்பவே அபூர்வம் என்பதை ஒத்துக் கொண்டு தான் ஆகவேண்டும். “வீட்ல இருக்கிறவங்களுக்கு எதுக்கு நன்றி சொல்லணும் ?” என்று சிலர் வெளிப்படையாகவே பேசுவதும் உண்டு.

இன்னும் சிலர் “சந்திரனுக்கு ராக்கெட் விட்டா மட்டும் தான் பாராட்டுவேன்” கணக்கா ரொம்ப பிகு பண்ணுவார்கள். ‘இதுக்கெல்லாம் எதுக்கு பாராட்டணும். இது அவ வேல தானே’ என முணுமுணுப்பார்கள். மனசே ரிலாக்ஸ் பிளீஸ் ! பாராட்டு என்பது மலையைத் தூக்கிட்டு வந்தா மட்டுமே குடுக்க வேண்டிய சமாச்சாரமல்ல ! அப்படின்னா அனுமாரை மட்டும் தான் நீங்க பாராட்ட முடியும். ஒரு சின்ன வேலையை அழகாகச் செய்தாலே பாராட்டலாம் !

வீடு சுத்தமாய் இருந்தால், சமையல் நடந்தால், தோட்டத்துக்கு தண்ணி ஊற்றினால், கூட மாட ஒத்தாசை செய்தால் என எந்த விஷயத்துக்கு வேண்டுமானாலும் நீங்கள் நன்றிகளையும் பாராட்டையும் கொடுக்கலாம். ஒருபணியைச் செய்தாலே நீங்கள் நன்றி சொல்லலாம். காரணம், குடும்பத்தில் நடக்கும் எல்லா செயல்களிலும் ஒரு அன்பும் கரிசனையும் நிச்சயம் இருக்கும்.

சின்னச் சின்ன விஷயங்களுக்கு நன்றியும், பாராட்டும் சொல்லும் போது தம்பதியரிடையே அன்னியோன்யமும், அன்பும் அதிகரிக்கும். இருவருக்கும் இடையே நல்ல புரிதலும் வளரும்.

இணைந்தே முடிவெடுங்கள்.

கணவன் மனைவியிடையே இறுக்கம் அதிகரிக்க வேண்டுமா ? ஒரு எளிய வழி இது. எல்லா விஷயங்களையும் நீங்கள் இருவரும் சேர்ந்தே முடிவெடுங்கள். ஒரு வீடு வாங்குவது போன்ற பெரிய விஷயம் ஆனாலும் சரி, ஒரு செடி வாங்குவது போன்ற சின்ன விஷயமாய் இருந்தாலும் சரி. இருவருமாக கொஞ்சம் பேசி முடிவெடுத்தால் ரொம்பவே அன்னியோன்யம் வளரும்.

நாம் மதிக்கப்படுகிறோம், நமது ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன என்பது உளவியல் ரீதியாக மனதைத் தெம்பாக்கும் ! இரண்டாவது, எல்லா விஷயங்களிலும் பங்களிப்பு இருக்கும் போது மனம் அதில் ரொம்ப அதிகமாக ஈடுபாடு காட்டும்.

“இந்த விஷயங்களையெல்லாம் பொம்பளைங்க கிட்டே கேக்கக் கூடாது. நாமளா முடிவெடுத்துடணும்” எனும் முனகல்களை கணவர்கள் ஒத்தி வையுங்கள். “ அவருக்கு இந்த விஷயங்களெல்லாம் தெரியாது” எனும் டயலாக்களை மனைவிகள் கொஞ்சம் ஒத்தி வையுங்கள். எந்த முடிவையும் இருவரும் சேர்ந்து இணைந்தே எடுங்கள்.

இணைந்து முடிவெடுப்பதில் உரையாடலும், விட்டுக் கொடுத்தலும், ஆரோக்கியமான விவாதங்களும் எல்லாம் கலந்திருக்கும். விஷயங்களை அலசும் போது தனிப்பட்ட விமர்சனங்கள், தாக்குதல்கள் எல்லாம் கூடவே கூடாது ! அப்புறம் ‘உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா’ என புலம்ப வேண்டி வரலாம் !

அடுத்த நபராய் மாறி சிந்தியுங்கள்

கரண்ட் கட் இல்லாத வீடு கூட இருக்கலாம். ஆனா சண்டை இல்லாத வீடு இருக்கவே இருக்காது. ஆனா அந்த சண்டை எவ்ளோ நேரம் நீளுது, எவ்ளோ சீக்கிரம் முடிவுக்கு வருது என்பதை வைத்துத் தான் குடும்பத்தோட வெற்றி நிர்ணயிக்கப்படும்.

சூரியன் அணைவதுக்கு முன்னாடி உங்க கோபங்கள் எல்லாம் அணைந்து போச்சுன்னு வெச்சுக்கோங்க, உங்க குடும்பம் அக்மார்க் அட்டகாசம். அதே சண்டை, கோபம், எரிச்சலோட தூங்கறீங்கன்னா கொஞ்சம் கஷ்டம். மறுநாளும் அதே எரிச்சலோட எழுந்தீங்கன்னா ரொம்பவே கஷ்டம். எனவே சண்டை போடுங்க, ஆனா எவ்ளோ சீக்கிரம் அதை சமரசப் புள்ளியில் இணைத்து சகஜமாக முடியுமோ அதைப் பண்ணுங்கள்.

அதுக்கு ஒரு சிம்பிள் டெக்னிக் இருக்கிறது. எந்த ஒரு சண்டையிலும், விவாதத்திலும் நீங்கள் அடுத்த நபராய் மாறி சிந்திக்க வேண்டும். “அறிவே கிடையாதா உனக்கு” என்று நீங்கள் உங்கள் கணவரைத் திட்டறீங்க என வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தை ஒரு சண்டைக்கான முதல் புள்ளியாய் இருக்கலாம். ஒருவேளை இதே வார்த்தையை உங்கள் கணவர் உங்களிடம் சொன்னால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள். “சே.. அப்டி சொல்லியிருக்கக் கூடாது” என உள்மனம் சொல்லும்.

இப்படி  ஒவ்வோர் நிகழ்விலும், ஒவ்வோர் சந்தர்ப்பத்திலும், ஒவ்வோர் விவாதத்திலும் நீங்கள் அடுத்த நபராய் மாறி சிந்தியுங்கள். “எங்க அம்மாவுக்கு போன் பண்ணும்போ அவர் திட்டினா எப்படி இருக்கும் ?”, “என் பிரண்ட் கிட்டே பேசும்போ மனைவி திட்னா எப்படி இருக்கும் ?” என்ற சிந்தனைகள் நிச்சயம் உங்களைப் பக்குவப் படுத்தும்.

இப்படிச் சிந்திப்பதில் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று நீங்கள் திட்டுவதையும், சண்டை போடுவதையும் குறைப்பீர்கள். இரண்டாவது, மன்னிப்புக் கேட்கும் மனதை உருவாக்கிக் கொள்வீர்கள்.

 தொட்டதுக்கெல்லாம் குறையா ?

சிலர் தொட்டதுக்கெல்லாம் குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். நின்னா குற்றம், நடந்தா குற்றம், பேசினா குற்றம் என நச்சரிக்கும் தம்பதியரின் குடும்ப வாழ்க்கை ஒரு நரகம் என்பதில் சந்தேகமே இல்லை. வெளியே சிரித்து ஆனந்தமாய் இருந்தாலும் அந்த கணவனோ மனைவியோ உள்ளுக்குள் மன உளைச்சலிலேயே இருப்பார்கள்.

அப்புறம் தும்மினா கூட, “ஐயோ இது அவருக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ ? திட்டுவாரோ கத்துவாரோ” என மனதுக்குள் கேள்விகள் ஓடும். எந்த செயலைச் செய்தாலும், “ஐயோ பொண்டாட்டி கத்துவாளோ” எனும் குரல் கணவனுக்குள் ஓடும். இந்த சிந்தனைகள் இருந்தால் இயல்பாக இருக்கவே முடியாது. எப்படா ஆள் வீட்ல இல்லாம இருக்கும், கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம் என்று தான் மனம் சொல்லும்.

சின்னச் சின்ன விஷயங்களைப் பெரிது படுத்தாமல் இணைந்து செயல்படுவதே ஆரோக்கியமான விஷயம். “கொஞ்சம் செடிக்கு தண்ணி ஊத்தறீங்களா ? ” என்று சொல்வதும் “வீட்ல ஒரு வேலையும் செய்றதேயில்ல, செடிக்கு தண்ணியாவது ஊத்தலாம்ல… வெட்டியா இருக்கிறதுக்கு… எல்லாத்தையும் நானே செய்யணும்ன்னா எப்படி ?” என நீளமான வெடிப்பதும் ஒரே விஷயத்தைத் தான் சொல்கின்றன. ஆனால் இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.

முதலாவது வாக்கியம் மகிழ்வுடன் வேலையைச் செய்ய வைக்கும். இரண்டாவது வாக்கியம் எரிச்சலுடன் வேலையைச் செய்ய வைக்கும். வேலை நடக்கும் ஆனால் அன்னியோன்யம் அகலப்படும். எனவே உங்களுடைய வார்த்தைகளைக் கவனியுங்கள். குறை சொல்லாமல் இருப்பதற்கும், உங்கள் வாக்கியங்களில் கனிவு கலப்பதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

மனித நேயம் பழகுங்கள்.

குடும்ப வாழ்க்கை என்பது வெறுமனே நான்கு சுவர்களுக்குள் முடிந்து போகும் விஷயமல்ல. குடும்பங்களில் விதைக்கப்படும் செயல்கள் சமூகத்தில் அறுவடையாகும். சமூகத்தோடு ஒத்து வாழாத குடும்பங்கள் வலிமையான குடும்பமாக வளர்வதில்லை. சமூக வீதியில் மக்களோடு நாம் எப்படிப் பழகுகிறோம் என்பதை வைத்தே ஒரு குடும்பத்தின் பெருமை நிலைநாட்டப்படும்.

மனித நேயம் மனதில் நிரம்பி இருக்கும் மக்களுக்கு சமூகத்தோடு வாழ்தல் மிகவும் எளிதாகிவிடுகிறது. சமூகம் என்பது நம்மைச் சுற்றிய மக்களின் கூட்டுத் தொகை தானே ! பக்கத்து நபர்களுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்வது, வேலைக்காரர்களையும் நம்மைப் போன்ற மனிதர்களாய் மதிப்பது, ஏழைகளின் வயிற்றில் அடிக்காமல் இருப்பது போன்ற அடிப்படை விஷயங்களில் நமது மனித நேயம் வெளிப்படும்.

“அவளோட மேக்கப்பைப் பாத்தாலே தெரியல, அவ ஆள் புடிக்கத் தாண்டி போறா என்பன போன்ற பிறருடைய பெயரைக் காயப்படுத்தும் உரையாடல்களை அடிக்கடி கேட்கலாம். இந்த புறணி, பிறர் விமர்சனம், கிசுகிசு, பொல்லாங்கு போன்றவையெல்லாம் சமூக உறவுகளை உடைக்கும் காரணிகள். நல்ல விஷயங்களையே பேசுங்கள். முதலில் உங்களை கிண்டலடிப்பார்கள், பிறகு கொஞ்சமாய் தங்களையே அவர்கள் மாற்றிக் கொள்வார்கள். நீங்கள் மனித நேயம் மிக்கவராய் இருப்பதைப் பார்க்கும் உங்கள் பக்கத்து நண்பர்களும் அதே போல மாறினால் அது ஒரு சமூக மாற்றத்துக்கான ஆனந்த அறிகுறிதான்.

நீங்கள் எப்படியோ அப்படியே உங்கள் பிள்ளைகளும் அப்படித் தான் வளரும். எனவே உங்கள் எதிர்கால சந்ததியை மனித நேயம் மிக்கவர்களாக வளர்க்க வேண்டுமெனில்  நீங்கள் முதலில் மனித நேயம் மிக்கவர்களாய் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் !

பெண்கள் : வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்

 Image result for Working from home Women

  1. சமையல் திறமை இருந்தால் வீடுகளில் இருந்தபடியே ஊறுகாய், வடகம், அப்பளம் என போட்டுத் தாக்கலாம். காலம் காலமாக நிரூபிக்கப்பட்ட பெண்களுக்கான நவேலை இது.
  2. டே கேர் செண்டர் ஆரம்பிக்கலாம். கணவனும் மனைவியும் அலுவலகம் ஓட, குழந்தைகளை எப்படி கவனிப்பதென கைகளைப் பிசையும் தம்பதியர் தான் உங்கள் கஸ்டமர். பொழுது சிறப்பாகப் போகும், வருமானம் வஞ்சகமில்லாமல் வந்து சேரும் !
  3. நல்ல டைப்பிங் தெரிந்தால் டேட்டா எண்ட்ரி வேலை செய்யலாம். வீட்டில் இருந்தபடியே தரும் ஆவணங்களை கம்ப்யூட்டரில் டைப் செய்து ஏற்றவேண்டும். பெரும்பாலும் அது தான் வேலை !
  4. “ஆன்லைன்” கால் செண்டர் வேலைகள் வீட்டிலிருந்தபடியே கூட செய்ய முடியும். அதற்கான இடங்கள் எங்கே இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து முயன்றால் பலன் கிடைக்கும்.
  5. டிரான்ஸ்கிரிப்ஷன் ஒரு நல்ல வேலை. ஒலிவடிவில் வரும் பைல்களைக் கேட்டு அதை வார்த்தைகளாக டைப் செய்ய வேண்டும். அது தான் வேலை. ஆனால் என்ன, குரல் சொல்வதைப் என்பதைப் புரிந்து கொள்ள சிறப்புப் பயிற்சி எடுக்க வேண்டியிருக்கும். ஒரு வார்த்தைக்கு இத்தனை காசு என நல்ல லாபம் தரக்கூடிய வேலை.
  6. கைவினைப் பொருட்கள் செய்வதும் நீண்டகாலமாக பெண்கள் வெற்றிகரமாகச் செய்து வரும் ஒரு வேலையே.
  7. வெட்டிங் பிளானர் – என்பது திருமணங்களுக்குத் தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுக்கும் பணி. கார்ட் எங்கே அச்சடிக்கலாம் முதல் சாம்பார் எங்கே சமைக்கலாம் என்பது வரை பிளான் பண்ணும் வேலை. திறமையான சிலர் வேலைக்கு இருந்தால் மொத்தமாக ஆர்டர் பிடித்து நல்ல லாபம் ஈட்டலாம்.
  8. பிறந்த நாள் கேக் போன்றவை செய்வது ஒரு நல்ல சுவாரஸ்யமான வேலை. கேக் டெக்கரேஷன் பண்ணுவதே ஒரு கலை. அதைக் கற்றுக் கொண்டால் இதில் பிரகாசிக்கலாம். அருகிலுள்ள பேக்கரி, ஹோட்டல் போன்றவற்றை அணுகுவது பயனளிக்கும்.
  9. கார்ட்டூன் போடும் கலை உங்களுக்கு வாய்த்திருக்கிறதா ? பத்திரிகைகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு கார்ட்டூனிஸ்டாகக் களமிறங்கலாம்.
  10. நல்ல டிரெய்னிங் திறமை இருந்தால் நிறுவனங்களுக்கு டிரெயினராகப் போகலாம். பல நிறுவனங்கள் தேவைக்கேற்ப நிறுவனங்களுக்குச் சென்று டிரெயினிங் எடுக்கின்றன.
  11. ஃபாஷன் டிசைனிங் – வீட்டிலிருந்தபடியே செய்யக் கூடிய ஒரு நல்ல வேலை. நல்ல கற்பனை வளமும், உலக ஞானமும் இருந்தால் இதில் சாதிக்கலாம்.
  12. செல்லப்பிராணிகளைக் கவனிப்பது, அதற்குப் பயிற்சி கொடுப்பது இவையெல்லாம் நகர்ப்புறங்களில் நல்ல வருவாய் தரக்கூடிய பணி. செல்லப்பிராணிகளுக்குப் பயிற்சி கொடுப்பது ஒரு மணி நேரத்துக்கு சராசரியாக 200 ரூபாய் பெற்றுத் தரும். இதற்கு அருகிலுள்ள பெட் ஷாப் மற்றும் கேனல்களில் தொடர்பு கொள்வது மிகவும் முக்கியமானது.
  13. டெய்லரிங் பெண்களுக்குப் பொருத்தமான வேலை. நன்றாகக் கற்றுக் கொண்டால் வீட்டில் இருந்தபடியே நன்றாகச் சம்பாதிக்கலாம்.
  14. டெய்லரிங் போலவே எம்பிராய்டரி போடுவதும் ஒரு நல்ல வேலை. சரியான பயிற்சி இருக்க வேண்டியது முக்கியம்.
  15. “கிளாஸ் பெயிண்டிங்” இப்போது மிகவும் பாப்புலர். நல்ல கவன சக்தி இருந்தால் போதும். கண்ணாடி பெயிண்டிங்கில் கலக்கலாம்.
  16. ஃபாஷன் ஜூவல்லரி உருவாக்குவது இப்போதைய சூப்பர் பிஸினஸ். வேலையில் இருக்கும் பெண்கள் கூட ஓய்வு நேரங்களில் இதில் இறங்கி நல்ல காசு பார்க்கிறார்கள். இதற்கும் பயிற்சி நிலையங்கள் எக்கச் சக்கமாக உள்ளன.
  17. வீட்டைச் சுற்றி கொஞ்சம் இடம் இருந்தால், நல்ல செடிகளுடன் கூடிய நர்சரி வைக்கலாம்.
  18. வெப் டெவலப்பர் – இப்போதைய ஹாட் வேலைகளில் ஒன்று. வீட்டில் இருந்தபடியே தனியாருக்குத் தேவையான வலைத்தளங்கள் உருவாக்குவது தான் இந்த வேலையே. ஒரு விளம்பரம் கொடுத்தால் வேலை தேடி வர வாய்ப்பு உண்டு.
  19. யோகா நன்றாகத் தெரியுமெனில், ஒரு யோகா டீச்சர் ஆகிவிடுங்கள். உடலுக்கும், மனதுக்கும் பயிற்சி. நல்ல வருமானமும் வரும்.
  20. “புரூஃப் ரீடிங்” , எடிட்டிங் போன்ற வேலைகள் வீட்டிலிருந்தபடியே செய்யலாம். பதிப்பகங்கள், நிறுவனங்களுடன் தொடர்பு இருக்க வேண்டியது அவசியம். இன்றைய இண்டர்நெட் வாழ்க்கை ஆன்லைன் புரூஃப் ரீடிங்கை வளமாக்கியிருக்கிறது.
  21. பல மொழிகளில் உங்களுக்குப் புலமை இருக்கிறதா ? நீங்கள் லக்கி தான். இன்றைக்கு டிரான்ஸ்லேஷன் வேலைக்கு நிறைய தேவை இருக்கிறது ! வீட்டில் இருந்தபடியே செய்யலாம் இதை.
  22. முன்பணம் அனுப்புங்கள், வேலை உங்கள் வீடு தேடி வரும் என வரும் அழைப்புகளை நிராகரியுங்கள். எந்த தொழிலில் இறங்கும் முன்னரும் முழுமையான புரிதலுடன் இறங்குங்கள்.
  23. கிராமப்புறப் பெண்களுக்கு கயிறு திரித்தல், பாய் முடைதல், பனை ஓலையில் கலைப் பொருட்கள் செய்தல் என வாய்ப்புகள் பல.
  24. ஊதுபத்திகள் செய்வது மத நம்பிக்கை இருக்கும் வரை லாபமான பிசினஸ் தான். அதற்குரிய தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொண்டால் எளிதில் செய்ய முடிகின்ற வேலை தான்.
  25. மிதியடிகள் செய்வது ஒரு நம்பிக்கை தரும் வேலை. துணி, கயிறு, நைலான், என பல்வேறு பொருட்களைக் கொண்டு மிதியடிகள் செய்யலாம். விற்பனைக்கான வழியை முடிவு செய்த பிறகே இதில் இறங்குங்கள்.
  26. இ-பே போன்ற நம்பிக்கையான வலைத்தளங்களில் பொருட்களை வாங்கி விற்பது ஒரு லாபகரமான வேலை. சிறிது நாள் இந்த இ-பே செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்தபின் களத்தில் இறங்குவது நல்லது.
  27. நீங்களே ஒரு வலைத்தளம் உருவாக்கலாம், அது பிரபலமாகிவிட்டால் விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கலாம். அதிலேயே ஆன்லைன் ரேடியோ ஆரம்பிக்கலாம். இவற்றுக்கெல்லாம் விளம்பரங்கள் மட்டுமே வருமானம். எனவே முன் அனுபவம் உடையவர்களைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.
  28. வீட்டுத் தயாரிப்பாக அழகுப் பொருட்கள், பாட்டி வைத்திய மருந்துகள் போன்றவற்றைத் தயாரிக்கலாம்.
  29. எந்தப் பொருளைத் தயாரிக்க விரும்பினாலும் அதற்குரிய விற்பனை வழிகள் உண்டா என்பதைக் கவனிக்க வேண்டும். அந்தப் பொருள் அந்த சூழலுக்குத் தேவையானது தானா ? அதை மக்கள் வாங்குவார்களா எனும் ஒரு சிறிய அளவிலான சர்வே நடத்துவது மிக முக்கியம்.
  30. எவ்வளவு பணம் தேவைப்படும் என கணக்கிடுங்கள். அதைப் போல இரண்டு முதல் மூன்று மடங்கு வரை பணம் செலவாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  31. தோல்வி குறித்த பயமின்மையும், சரியான தெளிவும், போதிய பண வசதியும் சிறு தொழில்கள் துவங்க முக்கியமான மூன்று தேவைகள்.
  32. இன்சூரன்ஸ் ஏஜெண்ட் ஆவது திறமையானவர்களுக்கு ஒரு நல்ல பிசினஸ்.
  33. கம்ப்யூட்டர் ஹார்ட் வேர் தெரிந்தால் வீட்டிலேயே ரிப்பேர் கடை ஒன்றை ஆரம்பிக்கலாம். இது கம்யூட்டருக்கு என்றல்ல, எந்தெந்த ஏரியாவில் ரிப்பேர் பார்க்கும் திறமை உண்டோ அதிலெல்லாம் நுழையலாம்.
  34. விளம்பர நிறுவனங்களுக்கு டிசைன் செய்து கொடுப்பது, வாசகங்கள் வடிவமைத்துக் கொடுப்பது போன்ற விளம்பர நிறுவனம் சார்ந்த பல வேலைகள்.
  35. பியூட்டி பார்லர் ஒன்றை ஆரம்பிப்பது ஒரு சிறப்பான வருமானம் தரக்கூடிய வேலை. உங்கள் வீடு நல்ல இடத்தில் இருந்தால் ஆரம்பிக்கலாம். அதற்குரிய பயிற்சி எடுக்க வேண்டியது அவசியம்.
  36. அனிமேஷன் வேலைகள் பெரும்பாலும் வீடுகளில் இருந்து செய்யக்கூடிய வகையில் வந்து விட்டன. முன் அனுபவம் உடைய யாரையாவது அணுகினால் நல்ல தகவல்கள் கிடைக்கும்.
  37. குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி கொடுப்பது ஒரு நல்ல வேலை. அளவான வருமானத்துக்கும், பொழுது போக்குக்கும் உத்தரவாதம்.
  38. நல்ல சமையல் கில்லாடியெனில் சமையல் பள்ளி ஒன்றை ஆரம்பித்துப் பாருங்களேன். புதுமையாகவும் இருக்கும், சமைக்கத் தெரியாதவர்களுக்கு நல்ல வழிகாட்டுதலாகவும் இருக்கும் !
  39. பொம்மை செய்வது பெண்களுக்கு எளிதான ஒரு பணி. பொம்மை உருவாக்கும் கம்பெனிகளிடமிருந்து ஆர்டர் பெற்று வீட்டிலேயே பொம்மை தயாரிக்கலாம்.
  40. ஈவண்ட் மேனேஜ்மெண்ட் – இளம் பெண்கள் திறமையாய் செய்யக் கூடிய ஒரு வேலை. பெரிய நிறுவனங்களுடன் கை கோர்த்துக் கொண்டால் இலட்சக்கணக்கில் கூட சம்பாதிக்கலாம் !
  41. பறவைக் கூடுகள், மீன் தொட்டிகள் போன்றவற்றை அழகாக வடிவமைத்து விற்கலாம்.
  42. பொக்கே, பலூன் பொம்மை போன்றவை தயாரிக்கலாம்.
  43. போட்டோ பிரிண்டிங், பிரேமிங் போன்றவை ஆரம்பிக்கலாம். கொஞ்சம் முதலீடு இதற்கு அவசியம்.
  44. வீடு, அலுவலகங்கள் போன்றவற்றின் – இண்டீரியர் டிசைனர் வேலை, இதற்கு அனுபவமும், விருப்பமும், பொறுமையும் தேவை.
  45. செல்லப்பிராணிகளைப் பாதுகாப்பது, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்பி வைப்பது, பெட் ஷாப் வைப்பது, டிரெயிங் கொடுப்பது என செல்லப்பிராணிகளைச் சுற்றி நிறைய வேலைகள் செய்யலாம்.
  46. வேலைக்கான வழிகாட்டுதல், ரெஸ்யூம் தயாராக்குதல், கன்சல்டன்சி வைத்தல் என புதியவர்களுக்கு வழிகாட்ட நிறைய வேலைகள்.
  47. போட்டோக்களை வீடியோக்களாக்குவது, வீடியோவில் எடிட்டிங் செய்வது என கம்ப்யூட்டர் சார்ந்த சில வேலைகளைத் திட்டமிடலாம்.

Thanks : Devathai, Monthly

SCHOOL ESSAY : பெண்கல்வி

Image result for women education

முன்னுரை 

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். ‍ என கல்வியின் மேன்மையைப் பற்றி உலகப் பொதுமறையாம் திருக்குறள் பேசுகிறது. மனிதனின் ஆறறிவை செழுமையாய் வைத்திருப்பதில் கல்வி மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இந்தக் கல்விக்கு ஆணென்றும், பெண்ணென்றும் பேதமில்லை. மனிதராய்ப் பிறந்த அனைவருமே கல்வி கற்கவேண்டியது அவசியம். அப்படிப்பட்ட கல்வி இன்று பெண்களுக்குக் கிடைக்கிறதா ? இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் போன்றவற்றை நாம் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

பொருளுரை

1. இந்தியாவின் சவால்

வளர்ந்த நாடுகளைப் போல குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள் இந்தியாவில் இல்லை. சுமார் முப்பது இலட்சம் குழந்தைகள் இன்னும் தெருக்களில் வாழ்கின்றனர். இன்னும் ஒன்றரை கோடி சிறுவர் சிறுமியர் கொத்தடிமைகளாக வேலைசெய்கின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். சுமார் பதினெட்டு சதவீதம் பெண் குழந்தைகள் தங்களது பதினைந்தாவது வயதைக் கூட காணாமல் மடிந்து விடுகின்றனர். ஆண்டுக்கு பத்து இலட்சம் குழந்தைகள் முதல் பிறந்த நாளைக் காணாமலேயே இறந்து விடுகின்றன. இந்தியாவின் எதிர்காலம் குழந்தைகளிடம் என்கிறோம். ஆனால் அவர்களுக்கு அடிப்படை வசதிகளே இல்லை. உணவு, உடை, உறைவிடமே இல்லாத சூழலில் கல்வியை வழங்குவது நமது தேசத்தின் முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால்.

2. பெண்கல்வியின் நிலை

இந்தியாவில் இன்று கல்வியறிவு பெற்ற பெண்கள் வெறும் 54.16 சதவீதம் தான். ஆண்களில் சுமார் 76 சதவீதம் பேர் அடிப்படைக் கல்வி அறிவைப் பெற்றிருக்கின்றனர். நகர்புறம், கிராமப்புறம் எனும் வேறுபாடு எதுவும் இன்றி பெண்களுக்கான கல்வி குறைவாகவே இருக்கிறது. கேரளா, தமிழகம் உட்பட சில மாநிலங்கள் கல்வியில் வளர்ச்சி நிலையை நோக்கி நகர, வட மாநிலங்களான பீகார் போன்றவை கல்வியில் மிகவும் பிந்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன.

3. நமது சமூக அமைப்பு

நமது சமூக அமைப்பு பெண்கல்வியை ஊக்குவிக்கவில்லை. பெண்கள் வீட்டை ஆள வேண்டும், ஆண்கள் நாட்டை ஆளவேண்டும் என பிரித்திருந்தன. எனவே பெண் என்பவள் வீட்டு வேலைகளைச் செய்து, குழந்தைகளையும் கணவனையும் கவனிப்பவராக மாறிப் போனார். ஆண்கள் கடும் உழைப்பைச் சிந்தி வீட்டுக்கான பொருளாதாரத் தேவையை நிறைவேற்றும் பணியை மேற்கொண்டார்கள். வீட்டை ஆளும் பெண்களுக்கு கல்வி தேவையில்லை என்பது ஆணாதிக்க மனநிலையாய் இருந்தது.

4. இன்றைய சமூக மாற்றம்.

இன்றைய உலகம் பெண்கல்வியை ஊக்கப்படுத்துகிறது. பெண்கள் கல்வியறிவு பெற்று பல்வேறு உயர் பதவிகளை இன்று வகிக்கின்றனர். நாட்டின் தலைவர்களாகவும், பெரிய நிறுவனங்களின் தலைவர்களாகவும் பெண்கள் இன்று இடம்பிடித்திருக்கின்றனர். சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வே இதன் காரணமாகும். இன்றைய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆண்களுக்கு இணையான அளவு பெண் ஊழியர்களும் இருக்கின்றனர். ஆனாலும் உயர் பதவிகளைப் பொறுத்தவரை சுமார் 80 சதவீதம் பதவிகள் ஆண்கள் வசமே இருக்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.

பெண்கல்வி எங்கும் கிடைக்கும் போது நமது நாட்டின் வறுமை நிலையும் மறையும். பொருளாதாரம் வளர்ச்சியடையும். சமூகம் மறுமலர்ச்சியடையும்.

5. பெண்கல்வியின் தேவை

பெண்கல்வி நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. குழந்தைகளை வளர்க்கும் பெரும் பொறுப்பு இன்றைக்கு பெண்களிடம் தான் இருக்கிறது. பெண்களின் கல்வியறிவு சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு சரியான அறிவையும், அறிவுரைகளையும் வழங்க உதவும். குடும்பத்தின் பொறுப்புகளைச் சுமக்கின்ற பெண் வேர்களைப் போன்றவர். வேர்கள் வலுவாக இருக்கும் போது தான் மரம் செழுமையாக இருக்க முடியும். பெண்கல்வி அந்த வேர்களை பலப்படுத்தும். இதன் மூலம் குடும்பம் வலிமையாகும். குடும்பம் வலிமையாகும் போது ஒரு சமூகம் வலிமையாகும். சமூகம் வலிமையாகும் போது நாடு வலிமையடையும்.

6. பெண் சமத்துவம்

பெண்கல்வி பெண்களுக்கு சமூகத்தில் தனி மரியாதையைப் பெற்றுத் தருகிறது. ஆணுக்கு இணையாகவோ, ஆண்களை விட பெரிய அளவிலோ பெண்கள் வளர பெண்கல்வியே மிகவும் தேவையாகிறது. ஆணும் பெண்ணும் சமம் எனும் நிலை சமூகத்தில் உருவாகவேண்டுமெனில் பெண் கல்வி மிகவும் அவசியம்.

பண்டைய உலகில் வேலை செய்ய உடல் உழைப்பு மிக அதிகமாகத் தேவைப்பட்டது. எனவே வலிமையுடைய ஆண்கள் வேலைக்குச் செல்வது சகஜமாய் இருந்தது. இன்றைய உலகை மன பலமும், அறிவு பலமும் தான் ஆள்கின்றன. புஜ பலம் அல்ல. எனவே அறிவார்ந்த சமூகமே இன்றைய தேவை. அதற்கு பெண்கல்வி அவசியம்.

7. பெண் துணிச்சல்

கல்வி ஒரு மனிதனுக்கு துணிச்சலைக் கொடுக்கிறது. அதிலும் குறிப்பாக மென்மையான பெண்களுக்கு கல்வி தான் மிகப்பெரிய துணிச்சல் ஆயுதமாய் இருக்கிறது. சங்க காலத்துப் பெண்கள் உடல் வலிமையிலும், மன வலிமையிலும் சிறந்து தான் விளங்கினர். இடைக்காலத்தில் தான் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என பெண்களின் வலிமையை உடைத்தனர். ஆனால், பாரதிதாசன் போன்ற பல கவிஞர்கள் பெண்கல்விக்கு ஆதரவாக வலிமையான பாடல்களை எழுதினர்.

கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம்
அந்நிலத்தில் புல் விளைந்திடலாம் ! நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை !’

எனும் பாரதிதாசனின் பாடல் ஒரு உதாரணம்

முடிவுரை

பெண்கல்வி என்பது புள்ளி விவரங்களை பலப்படுத்த அல்ல, பூமியை வலுப்படுத்த. வெறுமனே வீட்டு விளக்காய் இருக்கும் பெண்கள், ஏடெடுத்துப் படித்து நாட்டுக்கே வெளிச்சம் வீசுபவர்களாக மாற வேண்டும். பெண் என்பவள் சமூகத்தின் விதை. விதைகள் வலுவாக இருக்கும் போது தான் செடிகள் வலுவடையும். அவை தான் வளமான கனிகளைத் தர முடியும். தனிமனித வளர்ச்சி, குடும்ப வளர்ச்சி, சமூக வளர்ச்சி, நாட்டு வளர்ச்சி என அனைத்திற்கும் மிக முக்கியமான