விவசாயம் காப்போம்
விவசாயி காப்போம்

மண் !
மனிதனின் முதல் தோழன்
மண்
மனிதனின் கடைசி எதிரி !
கருவறை தாண்டிய பாதங்கள்
மண்ணின் முதுகு மிதித்து
புழுதி பிடித்து
உரண்டு புரண்டு உறவாடுகின்றன !
கல்லறை நோக்கிய பயணங்கள்
மண்ணின் அறை திறந்து
நிரந்தர நித்திரையில்
சலனம் தொலைத்து துயில்கின்றன !
மண் !
மனிதனின் முதல் தோழன்
மண்
மனிதனின் கடைசி எதிரி !
*
கடவுள்
மண்ணின் முதல் விவசாயி !
மனிதன்
கடவுள் படைத்த முதல் விவசாயி !
கடவுள்
மண்ணில் கைதொட்டு
உயிரை உருவாக்கினார் !
மனிதன்
மண்ணில் கைதொட்டு
பயிரை உருவாக்கினான் !
கடவுளே
உலகின் முதல் விவசாயி !
மனிதன்
உலகின் இரண்டாம் விவசாயி.
*
மனிதனுக்கு
கடவுள் தந்த முதல் வேலை
விவசாயம் !
நிலத்தைப் பண்படுத்து !
என்பதே இறைவன் கொடுத்த வேலை
அவனோ
படைப்பைப் பண்படுத்தாமல்
படைத்தவனைப் புண்படுத்தினான்.
ஏதேன் எனும்
மண்ணக சொர்க்கம் விடைபெற்றது
இனி
மண்ணை சொர்க்கமாக்கு
வியர்வையை விலையாக்கு
என
அனுப்பி வைத்தார் ஆண்டவர் !
முதல் விவசாயி
களமிறங்கினான் !
நிலமிறங்கினான்
*
விவசாயி
இறைவன் எனும் முதலாளியின்
முதல் ஊழியன் !
விவசாயம்
மனிதன் எனும் படைப்பாளியின்
முதல் ஊழியம்!
விவசாயம்
ஆதி மனிதனின்
நீதித் தொழில் !
மண்ணின் மைந்தனின்
வியர்வைத் தொழில் !
விழுந்த மனிதன்
உழுத தொழில் !
விவசாயம்
இறைவனால் எழுதப்பட்ட பணி !
விவசாயம்
மனிதனின் முதல் அப்பாயின்ட்மென்ட் லெட்டர் !
இன்று ??
*
இன்று
விவசாயம்,
தற்கொலையின் திறவுகோல் !
பட்டினியில் படுக்கை !
துயரத்தின் இருக்கை !
கண்ணீரின் அருவி !
பயிர்களின் வேர்களில்
புதைபடுகிறான் விவசாயி !
நீரற்ற பூமியில்
வேரற்ற நிலங்களில்
சோறற்ற வயிறுடன்
வதைபடுகிறான் விவசாயி !
வெடித்த வயலின்
வறண்ட நாக்குகளில்
அவனது
உயிரின் கடைசிச் சொட்டும்
உலரத் துவங்குகிறது !
நீர் வற்றிய
ஆறுகளில் அவனது கனவின்
முதல் சுவடும்
களவாடப்பட்டு விட்டது !
ஆறுகள்
நீரைத் தொலைத்தன !
நீரற்ற ஆறுகள்
தம்மையே தொலைத்து விட்டன.
சுயநலச் சுருக்குப் பைகள்
மணலை அகழ்ந்தன !
தன்னல மனங்கள்
ஆக்கிரமித்து நகைத்தன !
விழுகின்ற மழையும்
தங்க இடமின்றி
அழுதழுது அலைந்து திரிகிறது !
இன்று விவசாயம்
நிச்சயத் தோல்வியின்
நிதர்சன வெற்றி !
*
இறைவன்
நீரையும் நிலத்தையும் பிரித்தார் !
மனிதன்
நீரை நிலத்தினில் ஒளித்தான் !
கர்நாடக எல்லையில்
தண்ணீருக்குக் காவல்
தமிழக எல்லையில்
கண்ணீருடன் காவல் !
இறைவன் மழையை
பொதுவாய்ப் பொழிந்தார் !
மனிதன்
பொதுவை தனியே பிரித்தான்
இறைவன் வளங்களை
பொதுவாய் வைத்தார்
மனிதன்
வளங்களை களவில் வைத்தான்.
கடலுக்கு அனுப்ப
அனுமதிக்கும் நீர் கூட
தமிழனின்
உடலுக்கு அனுப்ப
அனுமதிக்கவில்லை மனிதன் !
அணைகளில் துயிலும் நீரை,
மனிதனின்
துணைக்கு அனுப்ப
துளியும் விரும்பவில்லை
சுயநல மனிதன் !
பலருக்கு
தண்ணீர் என்பது
அரசியல் சதுரங்கம் !
விவசாயிக்கோ
தண்ணீர் என்பது
இசையின் மிருதங்கம் !
நீரற்ற நிலம்
இசையற்ற கருவியாய்
சலனமற்றுக் கிடக்கிறது !
இறைவன்
படைத்தான் !
மனிதன்
உடைத்தான் !
*
எப்போது விழிப்பாய் தமிழா !
எப்போது விழிப்பாய் மனிதா !
புலம் பெயர்ந்தவன் கூட
புலன் பெயரவில்லை
நீ
நிலம் பெயராமல் இருக்கிறாய்
ஆனால்
நிஜம் உணராமல் இருக்கிறாயே !
வரப்புயர நீருயரும்
பொய்யாகிறதே !
இங்கே வரப்புகள் மட்டும் தானே
உயர்கின்றன !
வளங்கள் அழிகையில்
தலைமுறை அழியும்!
நிலங்கள் அழிகையில்
நிலவாழ்வு அழியும் !
முகசாயம் அழிகையில்
நாடகம் முடியும் !
விவசாயம் அழிகையில்
தேசம் அழியும் !
நிலத்தில் காங்கிரீட் நட்டோம்
மழை விடைபெற்றது !
நிலத்தில் முட்களை நட்டோம்
வளம் விடைபெற்றது !
நிலத்தை கவனிக்காமல் விட்டோம்
உறவு விடைபெற்றது !
இன்று
நிலங்கள் அனாதைகளாகிவிட்டன.
அதன் தொப்புள் கொடிகளுக்கு
நீரில்லை !
ஒளிச்சேர்க்கைக்கு
வழியில்லாமல்
இலைகளெல்லாம் தலையிழந்தன.
மரங்களெல்லாம் களையிழந்தன.
எப்போது விழிப்பாய் தமிழா !
எப்போது விழிப்பாய் மனிதா !
*
ஒன்று படுவோம் !
பூமி என்பது
தன்னலத் தாழ்பாழ்களில்
சிரச்சேதம்
செய்யபடுவதற்கானதல்ல !
பூமி என்பது
வெறுப்புகளின் விதைகளினால்
உயிர்சேதம்
செய்வதற்கானதல்ல !
நீரின்றி அமையாது
நிலம் !
பயிரின்றி அமையாது
உயிர் !
இணையம்
தகவலைத் தரலாம்
வலைத்தளம்
கலைகளைத் தரலாம் !
அரிசியை எங்கே
டவுன்லோட் செய்வது ?
தண்ணீரை எங்கே
தரவிறக்கம் செய்வது ?
ஒன்றுபடுவோம் !
வேர்கள்
நீரில் வித்தியாசம் பார்ப்பதில்லை !
மனிதர்கள் ஏன் பார்க்கவேண்டும் ?
தமிழகப் பசிக்கும்
கர்நாடகப் பட்டினிக்கும்
வித்தியாசம் இல்லை
பகிர்தலில் எதற்கு பதட்டம் ?
ஒன்றுபடுவோம் !
எங்கே விழுந்தாலும்
மழை ஈரமாகவே விழுகிறது !
எங்கே இருந்தாலும்
மனம் ஈரமாகவே இருக்கட்டும் !
நிலம் உலர்வது
மனிதம் உலர்வதின் அடையாளம் !
நிலம் செழிப்பது
மனிதம் செழிப்பதன் உத்தரவாதம் !
ஒன்றுபடுவோம்
உணர்வுகளால் ஒன்றுபடுவோம் !
அரசியல்
நில
இன எல்லைகள் களைவோம் !
மனிதம் என்பது
நமக்குள் இருப்பது
பிறரின் வார்த்தைகளால்
அதை கொல்லாமல் இருப்போம் !
விவசாயம்
வாழவேண்டும் !
விவசாயி
ஆள வேண்டும் !
அப்போது தான் பூமி சிரிக்கும்
சோகம் மரிக்கும் !
விவசாயம்
வாழவேண்டும் !
விவசாயி
ஆள வேண்டும் !
அப்போது தான் பூமி சிரிக்கும்
சோகம் மரிக்கும் !
Like this:
Like Loading...