TOP 10 : மிரட்டும் பேய்கள்

Image result for bloody mary in the mirror

பேய் என்றால் படையும் நடுங்கும். நம்ம ஊரில் சங்கிலிக் கருப்பன், கொம்பன் அப்படி இப்படி ஏகப்பட்ட பேய்கள் உண்டு. இதைவிட பல சுவாரஸ்யமான கதைகள் சர்வதேச அளவில் உண்டு. இந்தியாவுக்கு வெளியே உள்ள பேய்கள் எப்படி ? அவற்றில் சுவாரஸ்யமான பத்து வகை பேய்கள் இந்த வாரம்.

 1. பிளடி மேரி

வீட்டிலிருக்கும் விளக்கையெல்லாம் அணைத்து விடுங்கள். ஒரு மெல்லிய மெழுகுவர்த்தி மட்டும் எரியட்டும். ஒரு பெரிய நிலைக்கண்ணாடியின் முன்னால் நின்று கொண்டு “பிளடி மேரி” என்று மூன்று முறை சொன்னால் கண்ணாடியில் பேய் நின்று பல்லிளிக்கும். அப்படியே உங்கள் கண்களையெல்லாம் பிடுங்கிக் கொன்று விடும் என ஒரு திகில் பேய் மேலை நாடுகளில் உலவுகிறது.

தனது பிள்ளைகளையெல்லாம் கொன்ற பேயாம் இது. பொதுவாக குழந்தைகள் பாத்ரூமில் இருட்டில் நின்று இப்படிச் சொன்னால் பேய் வருமாம். கொஞ்சம் வித்தியாசமான பேய் தான். இந்தப் பெயர் பிடித்துப் போனதால் தான் அமெரிக்காவில் உற்சாகபான மிக்ஸ் ஒன்றுக்கு அந்தப் பேயின் பெயரையே வைத்து விட்டார்கள்.

 1. பிளையிங் டச் மேன்

பேய்களில் மிகவும் வித்தியாசமானது இது. இது ஒரு கப்பல். ! ஆம் கரையிலும் போகாமல் எப்போதும் கடலிலேயே இருக்கும் படி சாபம் வாங்கிய கப்பலாம். கப்பல் பயணிகளுக்குத் தான் இந்த பேயைக் கண்டால் பயம். அவ்வப்போது ஆங்காங்கே தோன்றி கப்பல்களையே அமுக்கி விடும். அடப் போங்கப்பா இதெல்லாம் கடலில் தெரியும் கானல் பிம்பங்கள் என சிலர் சொன்னாலும் பார்த்தவர்கள் அடித்துச் சொல்கிறார்கள் வெளிச்சத்தோடு வரும் இந்த கப்பலைப் பற்றிய கதைகளை !

பல பயணிகளின் குறிப்புகளில் இந்த கப்பல் இருக்கிறது. இங்கிலாந்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இதை நேரடியாகப் பார்த்திருக்கிறார். சட்டென தோன்றி வெளிச்சமாய் கண்களுக்கு முன்னாலேயே மறைந்து விடும் இந்தக் கப்பல். 16ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பமான இந்த பேய்க் கப்பல் புராணம், இன்னும் பீதி கிளப்புவதை நிறுத்தவில்லை. போய்க்கொண்டே இருக்கிற‌து.

 1. பிளினி

கி.பி 50ல் இளைய பிளினி எனும் ஒரு பேய் மஹா அட்டகாசம் செய்தது. கிரேக்க நாட்டின் முக்கிய நகரமான ஏதென்ஸில். அந்தப் பேய் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருக்கும். இந்தப் பேயின் அட்டகாசத்தை யாராலும் அடக்க முடியவில்லை. மந்திரம், தந்திரம், வித்தைகள் எதுவுமே இந்தப் பேயின் முன்னால் செல்லுபடியாகவில்லை. எந்த பாச்சாவும் பலிக்கவில்லையே என குழம்பிய மக்களுக்கு ஒருவர் அறிவுரை சொன்னார். அதன்படி, அங்கிருந்த கல்லறைகளைத் தோண்டினார்கள். ஒரு கல்லறையில் சங்கிலிகளுடன் கூடிய ஒரு எலும்புக் கூடைக் கண்டார்கள். அந்த எலும்புக் கூட்டின் சங்கிலிகளை அவிழ்ந்து. மரியாதையுடன் மறு அடக்கம் செய்த பின் ஆவி சந்தோசமாகிவிட்டதாம் ! அப்புறம் அந்த பிளினி பேயை யாரும் பார்க்கவில்லை.

பொதுவாகவே பண்டைய கிரேக்கர்களுக்கு பேய் நம்பிக்கை ஜாஸ்தி. கல்லறைகளில் பேய் உலவும் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நம்பினார்கள். பேய்கள் வந்து நாட்டிலுள்ள மக்களைக் கொல்லாதிருக்க ஒரு ஏற்பாடு செய்தார்கள். அதாவது ஆண்டுக்கு ஒருமுறை பேய்களுக்கு ஒரு மெகா விருந்து. எல்லா பேய்களுக்கும் ‘இன்விடேஷன்’ அனுப்பப்படும். இப்படி எல்லா பேய்களும் வந்து அந்த விருந்தைச் சாப்பிட்டால் அடுத்த வருஷம் விருந்து வரும் வரை பேய்கள் ரெஸ்ட் எடுக்குமாம்

பா ஜியோ கை

பெயரைக் கேட்டாலே புரிந்திருக்கும் இது ஒரு சீன பேய் என்று. சூதாடுபவர்களுக்கு இந்த பேயைப் பற்றி நன்றாகத் தெரியும். இந்த பேய்களுக்கு முருங்கை மரமல்ல, வாழை மரம் தான் ஃபேவரிட். அதன் கீழே தான் தங்கும். கையில் ஒரு குழந்தையும் இருக்கும். திகில் கிளப்பும் இந்தப் பேயை விரட்ட ஒரே ஒரு வழி தான் உண்டு.  ஒரு நீளமான சிவப்புக் கயிறை எடுத்து, அதன் ஒரு முனையை வாழை மரத்திலும், மறு முனையை நீங்கள் படுக்கும் கட்டிலிலும் கட்டவேண்டும். வாழை மரத்தில் கயிறோடு சேர்த்து சில ஊசிகளையும் குத்தி வைக்கவேண்டும்.

இப்போது அந்தப் பேய் கயிற்றைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் படுத்திருப்பவரிடம் தன்னை விடுவிக்குமாறு கெஞ்சும். அப்போது கட்டிலில் படுத்திருப்பவர், விடுவிக்கிறேன் எனக்கு முதல் பரிசு விழப்போகும் லாட்டரி நம்பர் சொல்லு என்றால் பேய் சரியாகச் சொல்லும் !  இது சீனா பேய். இப்படி சூதாட்ட விஷயத்தில் எல்லா விஷயங்களையும் புட்டுப் புட்டு வைப்பதால் தைரியசாலி விளையாட்டு வீரர்களுக்கு இந்தப் பேய் பணம் கொட்டும் பேய்.

சீனாவில் லூனார் காலண்டரின் ஏழாவது மாதத்தின் பதினைந்தாவது நாள் பேய் தினம் கொண்டாடுகிறார்கள். பேய்களுக்கு படைப்பது தான் இந்த தினத்தின் ஸ்பெஷல். டயா டீ லோஸ் முரீடோஸ் என மெக்ஸிகர்கள் கொண்டாடுவதும் ஏறக்குறைய இதே கான்சப்ட் தான் என்பது கூடுதல் தகவலுக்காக.

 1. பேய் இரயில்

பேய், கப்பலாய் மட்டும் தான் வருமா ? ரயிலாய் வராதா ? என கேட்பவர்களுக்காக இந்தப் பேய். இது ஒரு ரயில் பேய். ஒரு மாய ரயில். அவ்வப்போது ஆங்காங்கே தெரியும் பேய் ரயில் இது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தான் இந்தக் கதைகள் பிரசித்தம். ஆளில்லாத, உடைந்த நிலையில், புதர் மண்டிக் கிடக்கும் ரயில்வே டிராக்களில் திடுக் என தோன்றி தடதடத்து ஓடும் ரயில் இது. ஆபிரகாம் லிங்கனின் நினைவு நாளில் இது அடிக்கடி தோன்றிய கதைகள் உண்டு. இந்த ரயில் போகும் போது பக்கத்திலிருக்கும் எல்லா கடிகாரங்களும் நின்று விடும் என்பது ஜிலீர் சங்கதி.

இங்கிலாந்திலுள்ள ஒரு ரயில்வே லைன் மூடப்ப்பட்டு பல வருடங்கள் கழிந்தபின் ஹாயாய் போயிருக்கிறது இந்தப் பேய், 1969ல். இந்தப் பேயைப் பிடித்துக் கொண்டு ஏகப்பட்ட கதைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என சம்பாதித்தவர்கள் பலர்.

6 நூ குய்

இந்தப் பேய் தான் பொதுவாக நாம் சினிமாக்களிலாவது பார்க்கின்ற பேய். வெள்ளை உடை, நீள முடி உள்ள பெண் பேய். சிவப்பு ஆடை உடுத்திக் கொண்டே செத்துப் போன பெண் தான் இப்படிப்பட்ட பேயாய் அலைவாள் என்பது சீனர்களின் நம்பிக்கை.

“வாழும்போது என்னை கொடுமைப்படுத்தினே இல்லே.. நான் பேயா வந்து உன்னை என்ன பண்றேன் பாரு” என சவால் விடும் பேய்கள் இவை. பெண்கள் பாலியல் வன்முறையினால் கொல்லப்பட்டால், அடக்கத்தின் போது குடும்பத்திலுள்ள எல்லோரும் சிவப்பு ஆடை உடுத்திக் கொண்டு வருவார்கள். அப்படி வந்தால் இந்தப் பேய் சக்தியோடு கிளம்பி தன்னைக் கொன்றவனைப் பழிவாங்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

 1. ரெஸரக்ஸன் மேரி

ஜெரி பாலஸ் என்பவர் ஒரு அழகிய பெண்ணை அழைத்துக் கொண்டு அவளுடன் டேட்டிங் செய்தார். ஒரு நாள் முழுவதும் அவளுடன் ஆட்டம் பாட்டமென பொழுதைப் போக்கினார். அவளுடைய கையைத் தொட்டால் ஐஸ் கட்டி மாதிரி இருந்தது, அது ஒன்று தான் ஜெரிக்கு வித்தியாசமாய்ப் பட்டது. மாலையில், “சரி கிளம்பறேன், கொஞ்சம் டிராப் பண்ணுங்க” என்று சொல்லி காரில் ஏறினாள். ஜெரி அவளை டிராப் பண்ண சென்ற போது வழியில் குறுக்கிட்டது ஒரு கல்லறைத் தோட்டம். “ஜஸ்ட் ஒன் மினிட்” என்று சொல்லி காரைத் திறந்தவள் சட்டென காணாமல் போய்விட்டார். கல்லறைத் தோட்டத்தின் கதவுகள் அசைந்தன.

மிரண்டு போய் வீட்டுக்கு வண்டியை பறத்திக் கொண்டு வந்தவரிடம் மக்கள் சொல்லியிருக்கிறார்கள், “அடப்பாவி அது ரெஸரக்ஷன் மேரி பேய்டா.. இது கூட தெரியாதா ?”. அமெரிக்காவின் சிகாகோ பகுதியில் மக்களை தொடர்ந்து மிரட்டிக்கொண்டிருக்கும் பேய் இது. 1934ல் ஒரு விபத்தில் இறந்து போன போலந்து நாட்டு இளம்பெண் தான் இந்தப் பேய் என ஒரு கதை உண்டு.

 1. லா லோர்னா

லா லோர்னா என்றால் ஸ்பானிஷ் மொழியில் அழுகின்ற பெண் என்று பொருள். தான் விரும்பிய ஆடவனோடு சேர வேண்டும் என்பதற்காக தனது குழந்தைகளைக் கொன்று விடுகிறாள் ஒரு பெண். ஆனால் பரிதாபம், அந்த ஆடவன் அவளை உதாசீனம் செய்து விடுகிறான். கதிகலங்கிப் போன அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். அவள் தான் இந்த பேய். அழுது கொண்டே, தனது குழந்தைகளைத் தேடித் திரியும் ஒரு அபலைப் பெண்ணின் குரலாய் இந்தப் பேயின் குரல் இரவு நேரங்களில் வீட்டைச் சுற்றி ஒலிக்கிறது.

சில நேரங்களில் தனியே நடந்து திரியும் குழந்தைகளை தன் குழந்தைகள் என நினைத்து இந்தப் பேய் தூக்கிச் சென்றுவிடுவதும் உண்டு. நெகிழவைக்கும் ஒரு தாயின் அழுகுரலும், அலைந்து திரியும் ஒரு பேயின் மூர்க்கமுமாக இந்தப் பேய் மக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

 1. ஆனி போலின்

எட்டாம் ஹென்ரியின் இரண்டாவது மனைவி தான் இந்த ஆனி. முதலாம் எலிசபெத் ராணியின் தாய். அதி அற்புத அழகி. அவளுடைய‌ ஒழுக்கத்தின் மீது சந்தேகப்பட்ட கணவன் அவள் மீது இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி மரண தண்டனை விதித்தான். வாளால் வெட்டிக் கொல்ல வேண்டும் என்பது தண்டனை. கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தாள் ஆனி. “என் வாளைக் காணோமே” என பேசிக்கொண்டே சரேலென தலையை வெட்டினான் வீரன்.

ஆனி பேயானாள். இங்கிலாந்தில் அவளைப் பேயாய்க் கண்ட சாட்சிகள் எக்கச்சக்கம். அழகிய பெண்ணாக அவளைக் கண்டவர்கள் பலர். தலையில்லாத முண்டமாய் அவளைக் கண்டவர்கள் பலர். இதே மாதிரி தலையில்லாத இன்னொரு பேயும் உண்டு. அதன் பெயர் வூ டோ குய். பொதுவா மரண தண்டனை விதிக்கப்பட்ட பேய்கள் தான் இவை. ராத்திரி கதவைத் தட்டி “என் தலையைப் பாத்தீங்களா பாஸ்” என அப்பாவியாய் கேட்குமாம். சமயத்தில் கையில் தலையை வைத்துக் கொண்டு “கொஞ்சம் பிக்ஸ் பண்ணுங்களேன் பிளீஸ்” என்றும் கேட்குமாம் !

10 த வயிட் லேடி

இது ஹைவே பேய். காரில் போய்க்கொண்டிருக்கும் போது ரோட்டின் நடுவே சட்டென தோன்றி தலைவிரி கோலமாய் நிற்கும் பெண் இவள். பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்தப் பேய் மிகப்பிரபலம். நடு நிசி தாண்டிய நேரத்தில் யாராவது தனியே பயணம் செய்தால் சொல்லாமல் கொள்ளாமல் பின் சீட்டில் வந்து உட்காரும். அதற்காகவே இரவில் வண்டி நிறைய ஆட்களை ஏற்றிக் கொண்டு தான் பயணம் செய்கின்றனர். இதெல்லாம் கட்டுக்கதை என சிலர் சொன்னாலும், பெரும்பாலான பிலிப்பைன்ஸ் மக்கள் இது உண்மை என்று கற்பூரம் கொளுத்தாமல் சத்தியம் செய்கின்றனர்.

சரி கெட்ட பேய்களைப் பற்றி மட்டுமே சொன்னால் எப்படி, இதோ கொசுறாக ஒரு நல்ல பேய். இதன் பெயர் புனியன். காடுகளில் தான் பொதுவா இது வசிக்கும். காட்டில் வழிதப்பிப் போனால் இந்தப் பேய் வந்து வழி சொல்லுமாம் ! . “ரைட் எடுத்து லெப்ட் கட் பண்ணுங்க மெயின் ரோட் வந்துடும்.!!

TOP 10 : புராண வில்லன்கள்

Image result for asmodeus

புராணங்களிலும், காவியங்களிலும், ஆன்மீக நூல்களிலும் பல வில்லன்கள் உலா வருகின்றனர். நிகழ்கால வில்லன்களுக்கு சவால் விடும் வகையில் அவர்களுடைய வாழ்க்கை இருக்கிறது. புனைவாகவும், நிஜமாகவும் இருக்கும் அத்தகைய இதிகாச, காவிய வில்லன்களில் ஒரு பத்து பேர் இந்த வாரம்.

 • குரோனஸ் (Cronus )

கிரேக்கக் கதைகள் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் வைக்காதவை. கதாநாயகர்களும் வில்லன்களும் நிரம்பி வழியும் கிரேக்கப் புராணங்களில்  மிக முக்கியமான கடவுள் ஸீயஸ். இவருக்கு ஒரு அதி பயங்கர வில்லன் இருந்தான். அது வேறு யாருமல்ல, அவருடைய அப்பா குரோனஸ் தான். குரோனஸ் சர்வ வல்லமை பொருந்திய கடவுளாய் இருந்தான். அந்த பதவியே தந்தையிடமிருந்து அவன் தந்திரமாய்ப் பறித்தது தான். இதனால் குரோனஸின் அம்மாவுக்கு மகன் மீது கடும் கோபம். “ஒர் நாள் உன் பையனே உன்னை வீழ்த்துவான் பாரேன்” என சாபம் கொடுத்துவிடுகிறார்.

விடுவாரா குரோனஸ். தனக்குப் பிறந்த குழந்தைகளையெல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டான். மனைவி ரேயாவுக்கு மிகுந்த கவலை. அதனால் கடைசியாய் பிறந்த குழந்தையை மட்டும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என நினைத்தாள். குழந்தை பிறந்த செய்தி கேட்டு குழந்தையை விழுங்க வந்தவனிடம், துணியில் ஒரு கருங்கல்லைச் சுற்றிக் கொடுக்க, அவனும் அதை விழுங்கி விடுகிறான்.  அப்படித் தப்பியவர் தான் ஸீயஸ்.

ரேயாவால் தனியே ஒரு குகையில் வளர்க்கப்பட்ட ஸீயஸ் வளர்ந்து பெரியவனாகி வந்த பின் கிளைமேக்ஸ். முதலில் தந்தையை வாந்தியெடுக்க வைத்து வயிற்றிலிருந்த தனது சகோதரர்களையெல்லாம் வெளியே கொண்டு வந்து. தந்தைக்கு எதிராக பல ஆண்டுகள் கடுமையாகப் போராடி வெல்வது மீதி !

ஸீயஸ் கிரேக்கக் கடவுள்களுக்கெல்லாம் மன்னன். வானம் இடி எல்லாமே இவருடைய கட்டுப்பாட்டில் தான் என்பது கிரேக்க நம்பிக்கை. அப்படிப்பட்ட ஸீயஸுக்கே வில்லனாய் வந்த குரோனஸ், கிரேக்க புராணங்களின் முக்கிய வில்லன்.

 • யூதாஸ் இஸ்காரியோத்து

காந்தியைத் தெரிந்தவர்களுக்கெல்லாம் கோட்சேயைத் தெரிவது போல, இயேசுவைத் தெரிந்தவர்களுக்கெல்லாம் தெரிந்த பெயர் யூதாஸ் இஸ்காரியோத். இயேசுவுக்கு நெருங்கிய நண்பர்களாய் இருந்தவர்கள் பன்னிரண்டு பேர். அவர்களில் ஒருவர் இந்த யூதாஸ்.  

இயேசு அன்றைய யூத சட்டங்களுக்கு எதிராகவும், மத வாதிகள், மறை நூல் வல்லுநர்களுக்கு எதிராகவும் தீவிரமாய் முழங்கியவர். இவரைத் தலைவராக்க வேண்டுமென்பது மக்களின் திட்டம். இந்தத் தலைவலியை இல்லாமலாக்க வேண்டும் என்பது மதவாதிகளின் திட்டம். தந்திரமாய் இயேசுவைப் பிடிக்க அவர்கள் பிடித்தது யூதாஸை ! அவனுடைய பணத்தாசை அவர்களுக்கு துருப்புச் சீட்டாகிப் போனது.

படைவீரர்களை அனுப்புகிறோம். ஆளை மட்டும் நீ காட்டிக் கொடுத்தால் போதும். இதோ முப்பது வெள்ளிக்காசு. இவ்வளவு தான் ஒப்பந்தம். “நான் யாரை முத்தமிடுவேனோ அவர் தான் இயேசு. புடிச்சுக்கோங்க” என்றான் யூதாஸ். திட்டம் நிறைவேறியது. இரவில் இயேசு ஜெபித்துக் கொண்டிருந்த இடத்துக்கு யூதாஸ் போனார். இயேசுவை முத்தமிட்டார்.

“நண்பா… முத்தமிட்டா என்னைக் காட்டிக் கொடுக்கிறாய்”  என இயேசு சொன்னதையும் காதில் வாங்காமல் நைசாக நழுவினான் யூதாஸ்.  

 • இப்லிஸ் ( iblis)

இப்லிஸ் இஸ்லாமிய மதத்தின் வில்லன். குரானின் அடிப்படையில் பார்த்தால், கடவுளின் பேச்சைக் கேட்காமல் சுவர்க்கத்திலிருந்து துரத்தப்பட்டவன். கடவுள் ஆதாமைப் படைத்தபின் எல்லா தேவதைகளையும் கூப்பிட்டு ஆதாமுக்கு முன்னால் மண்டியிட்டு வணங்கச் சொன்னார். கடவுளின் பேச்சைத் தட்டாமல் எல்லோரும் ஆதாமைப் பணிந்தனர், ஒருத்தரைத் தவிர. அவர் இப்லிஸ் !

நான் ஒரு தெய்வப் பிறவி. நெருப்பிலிருந்து பிறந்தவன். ஆதாம் ஒரு மனிதப் பிறவி. கேவலம் களி மண்ணிலிருந்து பிறந்தவன். என்னை விடத் தகுதியில் குறைந்த அவனுக்கு முன்னால் நான் மண்டியிடுவதா ? முடியாது என்பதே இப்லிஸ் நிலைப்பாடு.  அப்புறமென்ன கோபம் கொண்ட கடவுள் அவனை அங்கிருந்து துரத்தி விட்டார்.

போகும் போது கடவுளிடம் ஒரு விஷயம் கேட்டான் இப்லிஸ். அதாவது கடைசி காலம் வரை எனக்குத் தண்டனை தராமல் இருந்தால் நான் யார் எனக் காட்டுவேன். பூமியிலுள்ள ஆதாமின் சந்ததியினரை எல்லாம் தீய வழியில் கொண்டு செல்வேன் என்றான். கடவுள் ஒப்புக் கொண்டர். சைத்தான் என பெயரைப் பெற்ற இவன் தான் பின்னர் பாம்பாய் வந்து ஏவாளை ஏமாற்றியதாம். மக்கள் தீய வழியில் செல்கிறார்களெனில் அதன் காரணம் இப்லிஸ் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை.

 • யங் வான் ( எமன் )

புத்தமதத்திலும் எமன் உண்டு. புத்தமதத்தின் சில பிரிவுகளில் நான்கு எமன்கள் வரை உண்டு. எமனோட வேலை மக்களை நல்வழிப்படுத்த நோயையும், முதுமையையும் , கஷ்டங்களையும் மக்களுக்குக் கொடுப்பது. அப்படியும் அவர்கள் வழிக்கு வராமல் செத்துப் போய்விட்டால் கடைசியில் எமனிடம் தான் வந்தாக வேண்டும். அவர்களை அடுத்து நரகத்தில் எறிவதா, சுவர்க்கத்துக்கு அனுப்புவதா அல்லது மீண்டும் பூமிக்கு அனுப்புவதா என முடிவெடுப்பது இவர் தான்.  

சீன மதத்தில் எமனோட பெயர் யன் வாங். யங் வாங்- கிற்கு சாவின் கடவுள் எனும் பெயர் தான் சீனாவிலும். கொரியன் மொழியில் இவரை யோம்ரா என்கிறார்கள் ஜப்பானியர்கள் யம்மா என அழைக்கின்றனர். எல்லாமே எமனுடைய வேறு வேறு வெர்ஷன்கள் தான். ஆனால் சீனா வகையறாக்களில் எமனுக்கு கெட்டப் வேறு. சிவந்த முகம், பெரிய உருவம், நீளமான தாடி என மிரட்டும் கெட்டப். என்னதான் கடவுளாக இருந்தாலும், நம்ம உயிரை எடுப்பதனால் யங் வாங் கும் சீன மத “வில்லன்” லிஸ்டில் தான் வருகிறார்.

 • சாத்தான்கள் ( Demons )

அதிபயங்கர சக்தி, நினைத்த நேரத்தில் நினைத்த உருவத்தில் வருவது, எங்கே வேண்டுமானாலும் சர்வ சாதாரணமாய் தோன்றுது என சர்வ சக்தி வில்லன் சாத்தான். சாத்தான்கள் என பொதுப்படையாகச் சொல்லப்படும் எல்லாமே வில்லன் வகையறாக்கள் தான். ஒவ்வொரு மதமும் சாத்தானைப் பார்க்கும் பார்வையில் மட்டும் ஏகப்பட்ட வித்தியாசம்.  

கிறிஸ்தவ மதத்தில் சாத்தான்கள் வேறுயாருமல்ல, சுவர்க்கத்திலிருந்து துரத்தப்பட்ட ஏஞ்சல்ஸ் தான் !. சுவர்க்கத்தில் நிரம்பியிருந்த தூதர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு புகழ் ஆசை வந்தது. அதனால் அவர்களையும், அவர்களுடைய தலைவன் லூசிபரையும் கடவுள் சுவர்க்கத்திலிருந்து கீழே தள்ளிப் போட்டார். அவர்களெல்லாம் பூமியில் வந்து விழுந்தார்கள் என்பது கிறிஸ்தவக் கதை. இந்து மத நம்பிக்கைப்படி ராட்சதர்கள், அசுரர்கள், வேதாளம், பிசாசுகள் என பல பெயரில் உலவுபவர்களை இந்த டீமன்ஸ் கணக்கில் சேர்க்கலாம்.  

 • ஸ்டிரிகோய் ( Strigoi )

நிறைவேறாத ஆசைகளுடன் செத்துப் போனால் ஆவியாய் அலைவார்கள் எப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இதே சமாச்சாரம் தான் ரோம புராணங்களிலும். இங்கே  நிம்மதியற்ற ஆத்மாக்களின் பெயர் ஸ்டிரிகோய். கல்லறைகளில் நிம்மதியாய் உறங்க முடியாமல் எப்போது எழும்பி யாரைப் பிடிக்கலாம் என அலைந்து திரிபவை தான் இவை.

விட்ச் என சொல்வது இந்த ஸ்டிரிகோய் வகைகளின் பெண் வடிவம். மனிதர்கள், விலங்குகள் என கிடைத்த கேப்பில் புகுந்து அட்டகாசம் செய்கின்றன இந்த ஸ்டிரிகோய்கள். சிவப்பு முடி, நீல நிறக் கண்கள், இரண்டு இதயம் என திடுக் திடுக் வடிவத்தை இவற்றுக்குக் கொடுத்திருக்கிறது ரோம மித்தாலஜி.

இந்த ஸ்டிரிகோரிகளிடமிருந்து தப்புவதொன்றும் பெரிய விஷயமில்லையாம். ஒரு பாட்டில் விஸ்கியை அவர்களுடைய கல்லறை அருகே புதைத்து விட வேண்டும். அவை அதைக் குடித்து விட்டு மயங்கிவிடுமாம். அட ! அவன் தானா நீ !! நம்ம ஊரில் பட்டை சாராயம் !  

 • லூகாரூ ( Loogaroo )

லூகாரூ கரீபியன் மித்தாலஜியிலுள்ள ஒரு வில்லன். வில்லன் என்பது தவறு இது ஒரு வில்லி. இதுவும் சாத்தானும் அக்ரீமெண்ட் போட்டுக் கொண்டு மனிதர்களைச் சாவடிப்பது தான் வேலை. சாத்தான் இதற்கு நிறைய மந்திர சக்தியெல்லாம் கொடுத்திருக்கிறது. பதிலுக்கு இது கொடுக்க வேண்டியது மனித இரத்தம். அப்படி கொடுக்காவிட்டால் அவ்வளவு தான், லூகாரூவின் இரத்தத்தையே சாத்தான் குடித்துவிடும். அதனால் எப்படியாவது இரத்தம் வேண்டும் என வெறியுடன் இவை அலைந்து திரியுமாம்.  இராத்திரியில் ஒரு ஒளியையோ, நீல நிற ஒளிப் பந்தையோ, பார்த்தால் அது லூகாரூ தான் என்கின்றனர் கரீபியன்ஸ்.  

சரி இதன் பிடியிலிருந்து எப்படி தப்புவது. வெரி சிம்பிள். வீட்டு வாசலில் ஒரு மூட்டை நெல்லையோ, அரிசியையோ, அல்லது குறைந்த பட்சம் மணலையோ வைக்க வேண்டுமாம். லூகாரூ வீட்டு முன்னால் மூட்டையைப் பார்த்தவுடன் பிரித்து ஒவ்வொன்றாய் எண்ண ஆரம்பிக்குமாம். எண்ணி முடிக்கும் முன் சூரியன் வந்து விடுவான். அடடா ஏமாந்துட்டோமே என லூகாரூவும் ஓடி விடுமாம்.  அட முட்டாள் லூகாரூ ! தினமுமா ஏமாறுவே ?

 • அஸ்மோதேயுஸ் ( Asmodeus)

நரகம் இருக்கிறது என்பதை பெரும்பாலான மதங்கள் ஒத்துக் கொள்கின்றன.  அஸ்மோதேயுஸ் நரகத்திலுள்ள சாத்தான்களின் தலைவன். நரகத்தில் ஏழு சாத்தான் மன்னர்கள் உண்டாம். ஒவ்வொருவருக்கும் பெருமை, பொறாமை, காமம் என ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்.  அஸ்மோதேயுஸின் டிபார்ட்மெண்ட் காமம்.  இவனுடைய ஆசையெல்லாம் மக்களுடைய காம ஆசையைத் தட்டி எழுப்புவது தான்.

பீச் ஓரங்களில் கைகளைக் கோர்த்து அலையும் காதலர்களிடம் இவனுடைய வேலை வெகு எளிதாய் வொர்க் அவுட் ஆகி விடுகிறது. ஆசையைத் தூண்டி விட்டு மக்கள் தப்பு செய்தால் இவனுக்கு வெற்றி. அவர்களெல்லாம் கடைசியில் இவனுடைய கட்டுப்பாட்டில் உள்ள இரண்டாவது நரகத்துக்கு வந்து சேர்வார்களாம்.

 • இன்குபஸ் ( incubus)

இன்குபஸ் என்பது சுமேரியர்களுடைய வில்லன். இந்த வில்லன் கொஞ்சம் விவகாரமானவன். தூங்கும் பெண்களின் மீது உறவு கொள்ள ஆசைப்பட்டு அலைவான். இந்த வில்லன் குழுவில் வில்லிகளும் உண்டு. அவற்றுக்கு சுகுபஸ் என்பது பெயர்.   வில்லிகள் ஆண்களை நாடுவார்கள். இன்குபஸோ, சுகுபஸோ ஒருத்தரைப் பிடித்து விட்டால் அவருடைய உடல் இளைத்து, ஆரோக்கியம் போய்,  கடைசியில் மரித்து  விடுவார்களாம்.  

சரி இன்குபஸ் வந்திருப்பதை எப்படிக் கண்டுபிடிப்பது ? இராத்திரி திடீரென கனவு கண்டு விழிப்பது, தூக்கத்தில் அசைவற்றுப் போவது  உட்பட “வாலிப வயோதிக அன்பர்களே” டாக்டர்கள் சொல்லும் எல்லாமே இதன் அறிகுறிகள் தானாம்தா. சுமேரியர்களிடமுள்ள இந்த நம்பிக்கை ஜெர்மன், பிரேசில், அமேசான் காட்டுப் பகுதிகள், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் உண்டாம்.

 • வாம்பையர்

நீண்ட நீண்ட பற்கள். கூரிய நகங்கள். சட்டென சந்தர்ப்பம் கிடைத்தால் கழுத்தைக் கடித்து இரத்தம் குடித்து கோரமாய் சிரிக்கும் உருவம் தான் வாம்பையர். அரைத்த மாவையே அரைக்கும் ஹாலிவுட் திரைப்படங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகவும் ஆகிப் போனது இந்த வாம்பையர் பயங்கரங்கள்.  

வாம்பையர் ஒரு அதிபயங்கர வில்லன் என்பதில் பல்வேறு நாடுகள் ஒத்துப் போகின்றன.  வாம்பையர்களுக்கு இரும்புப் பற்கள் உண்டு, அவை குழந்தைகளைக் குறி வைத்து அலையும் என கதைகள் பல்வேறு விதமாய் உலவுகின்றன.  கரீபியன் தீவுகள், அமெரிக்கா , சிலி, கொலம்பியா, ஆசியா, என எல்லா நாடுகளிலும் வாம்பையர் கதைகள் உலவுகின்றன. என்ன, தங்கள் பின்னணிக்குத் தக்கபடி கற்பனை வடிவத்தை மட்டும் மாற்றிக் கொள்கின்றனர்.

தாசனாகும் தகுதி தா. . . தாசனே

Image result for Bharathi dasan painting

பாரதி தாசனே.
உன்னை
எழுதும் தகுதியேனும்
எனக்கிருக்கிறதா ?

இரவல் ஒளிவாங்கி
இரவில் விரிக்கும்
சந்திரப் பாடல்களோடு
சிந்திப்பவர்கள் நாங்கள்,
நீயோ
சூரியனிடம் சங்கமித்து
இன்னோர்
சூரிய குடும்பத்தையே சந்தித்தவன்.

மூட நம்பிக்கையின்
மூலைகளெங்கும்
நீ அடித்துச் சென்ற வெளிச்சம்
இன்னும்
ஈரம் காயாமல் இருக்கிறது.

பாட்டுக்குள் உயிர் வைத்த
பாரதியை
உயிருக்குள் வைத்து
உடனிருந்தாயே,
அந்த பிரமாண்டப் பாக்கியம்
சத்தியமாய் எமக்குச் சாத்தியமில்லையே.

கிறுக்கன் என்றெல்லாம்
எழுதி எழுதி,
நீ
தெளிய வைத்தவைகள் தான்
எத்தனை எத்தனை ?

உன் அனல் கவிதைகளின்
சுடு மூச்சில்
எங்கள்
பட்டாம்பூச்சிக் கவிதைகள்
சிறகுகள் இழக்கின்றன.

நாங்கள்
சுதந்திரமாய் எழுதுகிறோம்
நீ
சுதந்திரத்துக்காய் எழுதினாய்.

கவிதை எழுதி,
கர்வக் கிரீடம் சூட்டி
நீ கனவுகளுக்குள் பயணிக்கவில்லை,
போராட்டக் கால
புகலிடப் புலிக்குகையானாய்.
இருந்த பொருளை
இந்தியாவுக்காய் இறைத்தாய்.

சாதிச் சங்கிலிகளின் கனத்தில்
மானிடக் கழுத்துகள்
தலைகுனிந்து கிடந்ததை,
நிமிர்ந்து நின்று எழுதினாய்.

நதியைக் காண
கடல் கரை தாண்டுமா ?
உன் பாடலின் பிரமிப்பில்
பெரியார் பலநாள்
பரவசப் பட்டாராமே?

எழுந்த போது கதிரவனாகவும்
விழுந்த போது
விழுதாகவும் தான்
உன் பயணம்.
விறகுக் கூட்டில் பயிரான
சிறகுச் காடு நீ,
பறப்பதற்கு என்றுமே பயப்பட்டதில்லை.

நீ,
உருக்காலைகளை
உற்பத்தி செய்தவன்.
வெயிலுக்கெல்லாம் பயந்து
முதுகெலும்பை என்றும்
முறித்துக் கொண்டதில்லை.

தன்மான இயக்கத்தின்
தரமான தயாரிப்பல்லவா நீ.
அன்னிய மொழி நம்
அடுக்களை வந்தபோது,
தமிழ் தாகத்தால்
அருவிகளை எரிக்கவே
ஆயுதமெடுத்தவன் அல்லவா நீ.

தமிழ் சுவாசிக்க
சங்கடப் பட்டவர் காலத்தில்,
சுவாசச் செடி
பயிரிட்டவனல்லவா நீ.

உன்,
எழுத்துக்களின்
கால்வாசியைக் கூட
என்
பாய்மரக் கப்பல்
படித்துக் கடந்ததில்லை.

இப்போது,
கவிதைச் சுக்கானோடு
கரையிலமர்கிறேன்.
கோபித்துக் கொள்ளாதே.

0

சாயம் போன வீரம்

Image result for lion in cage painting

மிருக காட்சி சாலை.
சைவச் சிறுத்தைகளின்
சரணாலயம்
இந்த மிருக காட்சி சாலை.
இங்கு
வெளியே நிற்கும் மனிதர்களை
வேடிக்கை பார்க்கின்றன விலங்குகள்.

வெறித்துப் பார்க்கும்
வேங்கையின் விழிகளில்
வேர்க்கடலை எறிந்து விளையாடும்
விடலைக் கூட்டம்.

சீறுவதை மறந்து
சிரித்துக் கொண்டிருக்கின்றன
சிங்கங்கள்.
அதன் மூக்கின் மேல்
சிறுகல் எறிகிறார்கள் சிறுவர்கள்.

சங்கிலிகளின் நீளம் கொண்டு
சாம்ராஜ்யத்தின் எல்லை வரையும்
யானைகள்.
எட்டாத் தூரத்திலிருந்து எட்டிப் பார்க்கும்
குழந்தைகள்.

பற்கள் பிடுங்கப் பட்ட
பாம்புகள்
படமெடுப்பதை மறந்து போயிருக்க
பார்வையாளர்கள்
படமெடுக்கிறார்கள்.

காட்டெருமைகளும்
காண்டா மிருகங்களும்
கம்பிகளுக்குள் விழுந்து கிடக்கின்றன
கொம்புகளை மடக்கி வைத்து விட்டு.

எங்கும்,
எங்கும், கூண்டுகள் !!
எல்லா அறைகளுக்குள்ளும்
சாயம் போக்கப்பட்ட.
துருப்பிடித்துப் போன வீரம்.

வெளியே விட்டால் கூட
வெயிலடிக்கிறதென்று
கூண்டுக்குத் திரும்பக் கூடும்
இந்த
பரம்பரைப் புலிகள்.

இரும்புக் கம்பிகள்
இடையே இருப்பதால்
இரண்டடி தூரத்தில்
தைரியம் சுமந்து திரியும் மக்கள்.

நமக்கெல்லாம்
வேடிக்கை பார்ப்பது
தேசியப் பொழுதுபோக்காகிவிட்டது.

இல்லையேல்
நம் வீரத்தை சுரண்டி,
பற்களைப் பிடுங்கி
கூண்டுக்குள் அடைத்தவர்களைப் பார்த்தே
கோஷமிட்டுக் கிடப்போமா ??

இன்னும் சில பக்கங்கள்..

Related image

நண்பர்களே
ஏன் இந்த சிந்தனை ?

போர்கள் வாழை மரங்கள்,
ஒன்றின் முடிவில்
இன்னொன்று முளைக்கும்.
போர்ப்பயிரை நிறுத்துங்கள்.

பாதுகாப்புக்காய்
எழுபது விழுக்காட்டை ஒதுக்கி,

பாட்டாளிகளைப்
பட்டினிக்குள் பதுக்கி,
வறுமைக்கோட்டை
இறுக்கிக் கட்டும்
இந்த மண்டையோட்டு அறுவடை
இருபதாம் நூற்றாண்டிலுமா ?

ஒவ்வோர்ப்
போரின் பின்னாலும்
பலியிடப்படும் பொருளாதாரம் !
தீயிடப்படும்
தியாகிகளின் உயிர் !!
மிஞ்சுவதெல்லாம்
மட்கிப்போன தடயங்கள் மாத்திரம்.

உலகத்தைக் கோரைப்பாயாய்
சுருட்டிக் கட்டியவர்கள் எல்லாம்,
விரலிடுக்கில்
சிறு வெண்கலம் கூட
எடுத்துச் சென்றதில்லை.

நீயா.. நானா போட்டிகள்
எப்போதுமே
மூன்றாவது மனிதனென்று தானே
முடிவாகியிருக்கிறது !

மலைச்சரிவுகளில் ஞானிகள்
முளைக்கலாம்.
ஆனால்
மனச் சரிவுகளில் தான்
மனிதர்கள் முளைக்க முடியும்.

தேசியப்பறவையாய்
மயில் இருந்தும்
வல்லூறுகளை மட்டும்
வழிபடுவது நியாயமில்லை என்பதால்,

இதோ.
முதல்
சமாதானப் புறாவை பறக்கவிடுகிறேன்
தயவு செய்து அதை
சமையலுக்குப் பயன்படுத்தாதீர்கள்.

வெள்ளையடிக்கப்பட்ட…

Image result for Mask man painting
வேடதாரிகளே
உங்கள்
அங்கிகளை எப்போதுதான்
அகற்றப் போகிறீர்களோ ?

பொதுவிடங்களில்
உங்கள் உதடுகளுக்கு
மகாத்மாச் சாயம் பூசுகிறீர்கள்
உள்ளுக்குள்
கசாப்புக் கடை நடத்துகிறீர்கள்.

புண்ணியங்கள்
விற்பனை செய்து
புண்ணிய பூமி வாங்குகிறீர்கள்
அங்கே
மனிதாபிமானத்தைப் புதைக்கிறீர்கள்.

தெருச்சந்திப்புகளில்
தகரத்தட்டுகளுக்குச்
சில சில்லறைகள்,
சில சம்பிரதாயச் சமாதானங்கள்.
உள்ளுக்குள் உங்களுக்கே
பிணவாடை அடிக்கவில்லையா ?

விளம்பரம் செய்து செய்தே
நீங்கள்
புனிதனாகப் பார்க்கிறீர்கள்.

எப்போதேனும்
இடக்கைக்குத் தெரியாமல்
தானம் தந்திருக்கிறீர்களா ?

தோப்புக்கு
விளம்பரம் செய்யாமல்
குருவிகளுக்குக்
கூடு கட்டிக் கொடுத்திருக்கிறீர்களா ?

போதுமே..

எட்டாத உயரத்தில்
சிம்மாசனம் செய்தாகி விட்டது.

புதைந்துபோன
மனிதாபிமானத்தைக்
கொஞ்சம்
தோண்டி எடுக்கத் துவங்குங்கலாமே

கோலத்தைப் புறக்கணித்த புள்ளிகள்.

 

Image result for man thinking painting

வாழ்க்கை என்னும்
பேருந்து
நிறுத்தங்களைப் புறக்கணித்து,
தொலைவில் போய் நிற்கிறது.
துரத்திப் பார்த்து
தோற்றுப் போன மக்கள்,
நெற்றி வியர்வையை
விரல் வளைத்து துடைத்தெறிந்து
மீண்டும்
நிறுத்தங்களுக்கேத் திரும்புகின்றனர்.

0

முத்துக்களின் விளைச்சலுக்காய்
சிப்பிகள்,
பாறை முதுகுகளில்
வாய் திறந்து
காத்திருந்துக் காத்திருந்து,

வறண்டு போன மேகத்தின் தேகம் கண்டு
பாசி தேடி
இடுக்குகள் நோக்கி
இடம் பெயர்கின்றன.

0

கார்மேகம் வந்தால்
அரங்கேற்றம் நடத்தலாம் என,
தோகை துலக்கி
காத்திருந்த ஒற்றை மயில்,

மேகம் தன்
கார்குழலில் வானவில் சொருகி
மெல்லச் சிரித்த மாலைப் பொழுதில்
பார்வையின்றி
படுத்துக் கிடந்தது.

0

கதிருக்காக காத்திருந்த
வயல்களில்,
மாடப் புறாக்களையும்,
மாடுகளையும் துரத்தி
ஓய்வாய்ப் படுத்த போது,

மரணம் வந்து
மேய்ந்து போனது !.

0

ஏதேதோ வடிவத்தில்
யாரார்க்கோ ஏதேதோ
மறுக்கப் படும் போதும்,
இன்னும்
தொடர் தவங்கள்
தொடரத்தான் செய்கின்றன,
அதே
நம்பிக்கையுடன்.

0

தேர்தல்

Related image

ஒரு
யுத்த காண்டம்
படைவீரனைக் கொன்று
அரசனைக் காப்பாற்றும்
சதுரங்கப் போர்.

சுருக்குக் கயிரோடும்
கண்ணி வலைகளோடும்
காத்திருக்கின்றன
சுயநலச் சிங்கங்கள்
வெள்ளைப் பசுவின் தோல் போர்த்தி.

வருவாய்க் கணக்கை
வகுத்து வகுத்து
சுவரொட்டிகளுக்குச் செலவு செய்யும்
முன்னாள் மந்திரிகள்.

முன்னுதாரணங்களின்
முகவுரையுடன்
அரசியல் சந்தையில்
முதலீடு செய்யும் முதலாளிகள்.

சம்பாத்தியங்களின் அடிப்படையில்
சட்டசபைக் கூட்டணியின்
தோள் துண்டு தரித்துக் கொள்ளும்
சந்தர்ப்ப சகாக்கள்

எல்லா வல்லூறுகளும்
அலகு திறந்து
குறிவைத்துக் காத்திருக்கின்றன
விரிந்து கிடக்கும்
விலா எலும்புகள் நோக்கி.

அறியாமையின்
தெருக்கோடியில் இருக்கும்
ஏழைத் தொண்டர்கள்
அரசியல் எச்சில்களை
இரத்தம் தோய்த்து சுவர்களில் ஒட்டுகிறார்கள்

இந்த வேட்டை முடிந்தபின்
வழக்கம் போல
உணவுகொடுத்த கானகம்
உலைக்குள் திணிக்கப்படும்.

சீதை தீயிடப்படுவாள்.

கும்பகர்ணனின் கூட்டுக்குள்
கோப்புக்கள் குறட்டை விடும்.

அங்குசங்கள்
அயலானின் காது கிழிக்கும்.

ஓட்டுப் போட்ட ஒட்டிய வயிறுகளில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
கனவுகள் எல்லாம்
ஒட்ட நறுக்கப்படும்.

பெட்டிகளுக்குள் அடைக்கப்படும்
தன்மானம்
கோட்டைக்குள் சிறையிடப்படும்
மனிதாபிமானம்.

இந்த முறையேனும்
விடியுமெனும் நம்பிக்கையில்
விரல் நீட்டிக் கொண்டிருக்கும்
வாக்குச் சாவடி முன்
ஓர்
வறுமைக் கூட்டம்.

பேச்சுவார்த்தை

Image result for peace talks

வாருங்கள்.
பிரியத்துக்குரிய
பேச்சுவார்த்தைப் பிரதிநிதிகளே
வாருங்கள்.

போர்க்களங்களை இந்த
விவாதக் களங்கள்
அழித்துவிடுமென்றால்,

எல்லைக்கோடுகளை
அவசரக் கூட்டங்கள்
அவிழ்த்துவிடுமென்றால்,

போராட்டங்களை இந்த
பேச்சுவார்த்தைகள்
பிரிக்குமென்றால்
ஆயுதங்களை அறுத்தெறிந்துவிட்டு
வாருங்கள்.

முடியவில்லை எங்களால்.
போர்க்களத்துக்கு வீரர்களை அனுப்பி
புள்ளி விவரங்களை மட்டும்
பொறுக்கி எடுக்க
இனியும் முடியவில்லை.

ஒவ்வொரு எல்லையிலும்
சத்தமின்றி சரிந்து கொண்டிருக்கும்
ஜீவன்களுக்கு
ஆயுதங்கள் செரிக்கவில்லை
இப்போதெல்லாம்.

எதற்கெடுத்தாலும் வெட்டரிவாள் தூக்கி
பீரங்கிகளுக்குள் பிடிவாதம் திணித்து
நானா நீயா போட்டியில்
இருவருமே தோற்றுப்போக
இன்னும் ஏன் தொடர்ப்போராட்டம் ?

புன்னகை
இன்னொரு வெற்றி
அது
உள்ளங்கையில்
ஆயுள் ரேகையை நீளமாக்கும்
உள்ளத்துக்குள்
நிம்மதியின் அருவியை ஆழமாக்கும்.

பதுங்குகுழிகளுக்குள் படுத்து
சவப்பெட்டி தயாரிப்பில் மூழ்கி
மலர்வளையங்களுக்காய் தோட்டம் செய்து
எத்தனை நாள் தான்
மகிழ்ச்சிக்கு விஷம் அளிப்பது ?

பூமி அழகானது,
வாழ்க்கையின்
ஒவ்வோர் வினாடிகளும் அழகானவை.
அதை இன்னும்
விரோதத்தின் விரல்களுக்கே விற்றுவிடுவதா ?

பேசுங்கள் !
வார்த்தைகளின் பரிமாற்றத்தில்
ஆறறிவின் பரிமாணத்தை அறியுங்கள்.

பேசும்போது,
தீர்ப்புக்களோடு பேசாதீர்கள்
தீர்வுகளுக்காய் பேசுங்கள்

பட்டினிப் படுக்கைகள்.

Image result for poor people india

நம்ப முடியவில்லை
இந்தியாவில் இன்னும்
பட்டினிச் சாவுகளின்
பட்டியலா ?

ம‌தத்துக்காய்
இரத்தம் சிந்தியவர்கள்
பாரதத்துக்காய்
கொஞ்சம் கண்­ணீர் சிந்தியிருக்கலாம்.

இன்னும்
சுயநலக் கிணறுகளில் தான்
அரசியல் குழுக்கள்
குடும்பம் நடத்துகிறதா ?
வியாபார இடங்களில் மட்டும் தான்
விளக்குகளை எரிக்கிறதா ?

மலைவாழ் மக்களுக்கு
மண்செரிக்கும் வயிறுகளை
ஆண்டவன் வைக்கவில்லை.
ஆள்பவரோ,
நிலவுக்கு செல்லும் வேகத்தில்
நிலத்துக்குச் செல்ல நினைக்கவுமில்லை.

செயற்கை மழை செய்யும்
சிந்தனை வாதிகளே.
மழைக்காய் ஆட
உங்களால் ஓர்
செயற்கை மயிலை செய்ய இயலுமா ?

இருட்டும் இருட்டும்
குருடாகிக் கிடக்கும் காட்டுப் பாதையில்,
சிறுவர்கள் கிழவர்களாய்
உருமாறிக் கிடக்கும் கிராமங்களில்,
இனியேனும் ஏதேனும் ஏற்றுமதியாகுமா ?

இல்லை,
வாக்குப் பெட்டிகள் மட்டுமே
மனசாட்சியின்றி
முகம் காட்டுமா ?

இந்த வேட்டிக் கரைகளுக்காய்
வேதனைப்படும்
அரை வேக்காடு அரசியலில்
வறுமைக் கறைகள்
கழுவப்படாமலேயே உலர்த்தப்படுமா ?

பாரத்துக்குத் தேவை
இன்னொரு
பிச்சைப்பாத்திரமல்ல.
சில அட்சய இதயங்கள்.