பிரதிபா, 1125

Image result for பிரதீபா

அவளுக்குள்
ஒரு
கனவு இருந்தது.

கீழ்வானத்தைக் கிழித்துக்
கிளம்பும்
கதிரவனைப் போல
அவளுக்குள் அது நிரம்பியிருந்தது.

பள்ளத்தை நோக்கிப்
பாய்ந்து நிரம்பும்
அருவியைப் போல அதன்
ஆர்வம் அவளை எரித்தது !

அவளது கனவு
ஒரு
அழகான கனவு !

அவளுடைய கனவில்
வஞ்சனையின்
அம்சம் கலந்திருக்கவில்லை.

அவளுடைய கனவு
யார் முதுகையும்
குத்தவில்லை.

அவளுடைய கனவில்
வன்முறையோ
மதவெறியோ
ஊறியிருக்கவில்லை.

அதை
இலட்சியம் என
பச்சை குத்தி வைத்தாள்

கனவு
என
வானவில் ஊற்றி வளர்த்தாள்.

அவளுக்குத் தெரியவில்லை !
அவள்
குழந்தை தானே !

கனவு காண்பதற்கு
தகுதிச் சான்றிதழ் வேண்டும்
என்பதும்,
இலட்சியங்கள் கொள்ள
இலட்சங்கள் தேவை என்பதும்

அவளுக்குத் தெரியவில்லை
பாவம்
அவள் குழந்தை தானே !

ஏழைகள்
வாய் திறந்தால்
தோட்டாக்கள் நிரப்புகின்றன.

கனவுகள் திறந்தால்
தூக்குக் கயிறுகள் தொங்குகின்றன.

அவளுக்குள்
ஒரு கனவு இருந்தது.

கனவை விதைத்த
குற்றத்துக்காக
தலையிலடித்துக் கதறுகிறான்
ஒரு தந்தை.

இலட்சியத்தை விதைத்த
பாவத்துக்காய்
படிக்கட்டில் பதறுகிறாள்
ஒரு தாய்.

யாருக்கும் தெரியவில்லை
கனவுகளுக்கும்
வரிவிதிக்கும் இந்த யுகத்தில்
சுவாசிப்பதற்குக் கூட
பதுங்கு குழிகளே தேவைப்படுகின்றன.

தோட்டாக்களையும்
தூக்குக் கயிறுகளையும்
பூஜிக்கும்
எதிரிகளின் பாசறையில்

மனித நேயம்
இரத்தம் வடியும் கழுத்தோடு
பிணவறையில்
இறுதி மூச்சை இழுக்கிறது.

நாளை விடியும்
எனும் கனவு
நம்பிக்கையற்ற நம்பிக்கையாய்
நடு வீதியில்
தெருநாய்களோடு அலைந்து திரிகிறது.

*

 

புளூ வேல் ! தற்கொலை விளையாட்டு

Image result for blue whale game

கடந்த ஜூன் மாதம் 30ம் தியதி, மும்பையிலுள்ள அந்தேரி பகுதியில் ஒரு தற்கொலை நடந்தது. பதினான்கே வயதான சிறுவன் ஒருவன் ஐந்து மாடிக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். பாசமான, சுறுசுறுப்பான, நல்ல அறிவுத் திறமையுடைய அந்த சிறுவனின் மரணம் பெற்றோரைப் புரட்டிப் போட்டது. தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு வீட்டிலோ, நண்பர் வட்டாரத்திலோ, பள்ளியிலோ எந்த பிரச்சினையும் இல்லை. பின் ஏன் இந்த தற்கொலை? எனும் விசாரணை திடுக்கிடும் பல செய்திகளை வெளிக்கொண்டு வந்தது.

இந்த தற்கொலைக்குக் காரணம் ஒரு ஆன்லைன் கேம். புளூவேல் எனும் இந்த விளையாட்டு உலகெங்கும் ஏற்கனவே சுமார் 130 பதின் வயதினரைப் பலிவாங்கியிருக்கிறது. ஐம்பது நாள் சவால் என அழைப்பு விடுத்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சவாலைச் செய்யச் சொல்லி படிப்படியாக பதின் வயதினரை உளவியல் ரீதியாக தற்கொலைக்குத் தூண்டுகிறது இந்த விளையாட்டு. முதலில் எளிமையாய் தோன்றும் இந்த விளையாட்டு, பின்னர் உடலைக் கீறிக் காயப்படுத்துவது, உயிரினங்களைக் கொல்வது, நரம்புகளை அறுத்துக் கொள்வது என விபரீதமாய் சென்று, கடைசியில் தற்கொலை செய்து கொண்டால் வெற்றி என முடியும்.

ஒவ்வொரு நாள் சவாலையும் வீடியோ எடுத்தோ, புகைப்படம் எடுத்தோ சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய வேண்டும். அதை ஒரு குழுவினர் நேரடியாகக் கண்காணித்து அவர்களை அடுத்த லெவலுக்குள் நுழைய அனுமதிப்பார்கள். நேரடியான சேட் மூலம் இந்த விளையாட்டு தொடரும். இந்த உளவியல் விளையாட்டை எதிர்கொள்ளும் பதின்வயதினர் கடைசியில் தற்கொலை செய்து கொள்வதை வெற்றி எனக் கருதி விடுகின்றனர். தற்கொலைக்கு முயன்று படுகாயமடைந்தவர்களும் உலகமெங்கும் பலர் உண்டு.

இந்த விளையாட்டை உருவாக்கியவன் 22 வயதான ‘பிலிப் புடேய்கின்’ எனும் ரஷ்ய இளைஞன். உளவியல் பட்டம் படித்துக் கொண்டிருந்தபோதே கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டவன். உளவியல் ரீதியாக மக்களை எப்படி தூண்டி தடுமாற வைக்கலாம் எனும் வித்தை தெரிந்தவன். 2013ம் ஆண்டு இந்த ஆன்லைன் விளையாட்டை சீரியசாக‌ ஆரம்பித்தான். முதலில் சவாலை ஏற்பவர்களிடம் ஆன்லைனில் இவனே நேரடியாய்ப் பேசி தற்கொலைக்குத் தூண்டினான். அப்படி 16 சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

பின் உலகெங்கும் ஏராளமான பதின்வயதினர் இந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்ததால் ஒரு குழுவை அமைத்து அவர்கள் மூலமாக விளையாடுபவர்களிடம் பேசி வந்தான். எல்லாருடைய சிந்தனையும் எப்படியாவது இந்த விளையாட்டு விளையாடுபவர்களை தற்கொலை செய்து கொள்ள வைக்க வேண்டும் என்பது தான். அப்படி ஒவ்வொருவர் தற்கொலை செய்து கொள்ளும் போதும்  இவர்கள் அதை கொண்டாடி மகிழ்கின்றனர்.

ரஷ்ய அரசு இந்த விஷயத்தை அறிந்ததும் அவனைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஏன் இப்படி மக்களை தற்கொலைக்குத் தூண்டுகிறாய் என கேட்டபோது, “இவங்க எல்லாம் பூமிக்கு பாரம். கோழைகள். இவர்களெல்லாம் செத்துப் போவது உலகுக்கு நல்லது. அதனால தான் அவர்களை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகிறேன். அப்படிச் செய்து நாட்டை தூய்மையாக்கும் வேலையை நான் செய்கிறேன்” என கூலாக பதிலளித்தான். இன்னும் ஏராளமான மக்கள் தற்கொலைக்குத் தயாராக இருப்பதாக அவன் சொன்னது பெற்றோரை பதட்டத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

ஒரு முறை இந்த விளையாட்டுக்குள் நுழைந்து விட்டால் வெளியேறுவது உளவியல் சவால். அப்படியே வெளியேற வேண்டும் என நினைக்கும் இளையவர்களை நிகழ்ச்சியை நடத்துபவர்கள் மிரட்டுவார்கள். கொலை செய்து விடுவோம், சொந்தக்காரர்களை கொல்வோம், வீட்டில் உள்ளவர்களை அழிப்போம் என்றெல்லாம் மிரட்டி பயப்பட வைப்பார்கள். இவர்களைக் குறித்த தகவல்கள் எல்லாம் அவர்கள் வசம் இருப்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்குவார்கள். அந்த பயமே விளையாடுபவர்களை நிலைகுலையச் செய்து விடும். இந்த மிரட்டல்களைத் தாண்டியும் பல நாடுகளிலுமுள்ள தைரியமான இளைஞர்கள் பலர் காவல்துறையினரிடம் இந்த விளையாட்டு குறித்து புகார் அளித்துள்ளனர்.

பிரான்ஸ் போன்ற நாடுகளில் காவல்துறையே இந்த விளையாட்டின் விபரீதம் குறித்து மக்கள் எச்சரிக்கையாய் இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறது. அமெரிக்கா, அர்ஜென்டீனா, சிலி, பிரேசில், பல்கேரியா, சைனா, கொலம்பியா, ஜார்ஜியா,இத்தாலி, கென்யா, பெருகுவே, போர்சுகல், ரஷ்யா, ஸ்பெயின், வெனிசூலா என உலகெங்கும் பலரை பலிவாங்கிய இந்த விளையாட்டு இப்போது இந்திய சிறுவன் ஒருவனையும் பலிவாங்கி நமக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது.

இன்றைய டிஜிடல் உலகில் சிறுவர்களை ஆன்லைன் விளையாட்டுகளை விட்டு விலக்கியே வைத்திருப்பது சாத்தியமற்ற ஒன்று. ஆனால் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதைக் கவனிப்பதும், எவ்வளவு நேரம் விளையாடலாம் என்பதை நெறிப்படுத்துவதும் எளிதான காரியம். அதை பெற்றோர் தவறாமல் செய்ய வேண்டும்.

ஆன்லைன் விளையாட்டுகள் சிறுவர்களையும், இளைஞர்களையும் வெகுவாகப் பாதிப்பதாய் பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. மன அழுத்தம், தனிமை உணர்வு, வன்முறை சிந்தனை, உடல் பலவீனம் போன்ற விளைவுகள் இதனால் சர்வ நிச்சயம் என எச்சரிக்கிறது சமீபத்தில் வெளியான‌ ‘சைக்காலஜிகல் ஹெல்த்’ ஆய்வு ஒன்று.

மாணவர்களின் உடல்நலத்தையும், அறிவையும், மனநலத்தையும் மழுங்கடிக்கச் செய்யும் டிஜிடல் விளையாட்டுகளை விட்டுப் பிள்ளைகள் எவ்வளவு தூரமாய் இருக்கிறார்களோ,அவ்வளவுக்கு  அவர்களுடைய வாழ்க்கை ஆனந்தமாய் அமையும். அத்தகைய ஆரோக்கியமான சூழலை மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோரும், நண்பர்களும் இணைந்து உருவாக்க வேண்டும்.

*

Thanks

Daily Thanthi.

தற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் !!!

நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். எப்படிச் சாவது நல்லது என்று சொல்லுங்கள்

இப்படி ஒரு கேள்வியை உங்களிடம் யாராவது கேட்டால் என்ன செய்வீர்கள் ? அந்த நபரை அழைத்து பேசி, தனியே அறிவுரை சொல்லி தற்கொலை எண்ணத்தை கைவிட உதவி செய்வீர்கள். அப்படித் தானே ?

ஆனால் எல்லா இடங்களிலும் இதே அரவணைப்பும், ஆறுதலும், வழிகாட்டுதலும் கிடைப்பதில்லை !

இப்படி ஒரு கேள்வி இணையதளத்தில் எழும்ப, உடனடியாக களத்தில் குதிக்கின்றன பல பதில்கள். எல்லோரும் பல்வேறு வழிமுறைகளை கைவசம் வைத்திருக்கின்றனர்.

இப்படிச் சாவது வலியற்ற சாவு. இப்படிச் சாக செய்யவேண்டியவை இவை, தற்கொலைக்குத் தேவையான இந்தப் பொருட்கள் இந்த இடங்களில் கிடைக்கின்றன. இந்த முறையில் சாக நினைப்பது உசிதம் ஏனெனில் சில மணி நேரங்களில் இறந்து விடலாம்.

இப்படி ஏராளமான அதிர்ச்சியூட்டும் வழிமுறைகள் தற்கொலையை உற்சாகப்படுத்துகின்றன. இந்தக் கட்டுரையில் நான் விளக்க விரும்பாத அந்த வழிமுறைகளில், திரைப்படங்களில் நாம் பார்த்துப் பழகிய தற்கொலை வழிகள் முதல் அதிர்ச்சியில் உறைய வைக்கும் அதி நவீன முறைகள் வரை உள்ளன என்பது பகீர் பயங்கரம்.

“நன்றி… இது தான் என் விலாசம். நான் தற்கொலை செய்யப் போகிறேன்.” சொல்லி விட்டு விடைபெறுகிறான் ஒரு பதின் வயது இளைஞன். கடமையில் கருத்தாய் இருப்பதாய் கருதிக் கொண்டு செத்துப் போகிறான்.

எல்லோரும் அவனை உற்சாகமாய் வழியனுப்பி வைக்கிறார்கள். ஒரு உயிர் அநியாயமாய் செத்துப் போகிறது. அதன் பின்னணியில் எழும் ஒரு குடும்பத்தின் அழுகுரலைப் பற்றிய எந்த விதமான உறுத்தலும் இன்றி விவாதம் தொடர்கிறது.

“நான் தனியா தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். யாராவது சேர்ந்து தற்கொலை செய்யலாம் வருகிறீர்களா?”  அழைப்பு விடப்படுகிறது. உடனே உற்சாகமாக கும்பல் சேர்ந்து விடுகிறது.

அந்த கும்பல் ஐந்து பேரோ, ஐம்பது பேரோ குவிகின்றனர். தங்களுக்குள்ளாகவே எப்படிச் சாவது ? எங்கே சாவது ? எப்போது சாவது என பேசி முடிவெடுக்கின்றனர்.

அனைவரும் கை கோர்த்துக் கொள்கிறார்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இதெல்லாம் பரபரப்பூட்டும் திரைக்கதையோ, நாவலோ அல்ல. அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி என்று சொன்னால் உள்ளம் பதறுகிறது அல்லவா?

உலகெங்கும் இத்தகைய இணைய தளங்கள் தற்கொலை விரும்பிகளால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ரஷ்யாவில் மட்டும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட இணைய தளங்கள் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இளம் வயதினர் உறுப்பினராக இருக்கும் பல இணணய தளங்கள் உள்ளன. இத்தகைய தளங்கள் பலரை தற்கொலைக்கு வழியனுப்பி வைத்துக் கொண்டே இருக்கின்றன.

இதில் அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவெனில், யாரேனும் தனக்கு ஒரு பிரச்சனை இருப்பதாகச் சொன்னால் உடனே தற்கொலையே தீர்வு என பலர் அறிவுரை செய்கின்றனர்.
யாரும், தற்கொலை செய்ய வேண்டாம் என்றோ, அது தவறு என்றோ சொல்வதே இல்லை. எப்போதேனும் எழும் சிறு சிறு குரல்களும் வெளிவராமல் அடங்கிவிடுகிறது.

தற்கொலை செய்வதா ? வேண்டாமா எனும் மனநிலையில் சிக்கித் தவிக்கும் இளைஞர்கள் இத்தகைய தளங்களில் வந்தால் செத்துப் போவது உறுதி என்கின்றனர்.

சுமார் பதினொன்று முதல் இருபத்து ஐந்து வரையிலான வயதினரே இத்தகைய தளங்களில் இணைந்து விவாதிக்கின்றனர். இத்தகைய இணைய தளங்களின் கொடிய விளைவாக ரஷ்யாவில் மாதம் ஒன்றுக்கு சுமார் இருபது பதின் வயதினர் தற்கொலை செய்து கொள்கின்றனர், மிக மிக மகிழ்ச்சியுடன்.

இந்தத் தளங்களில் இணைபவர்களில் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றவர்களும் உண்டு அவர்கள் தங்கள் அனுபவங்களை இதில் பதிவு செய்கின்றனர்.

இப்படிப்பட்ட தளங்கள் வேறு விதமான முகமூடி அணிந்து நல்ல பிள்ளையாய் காட்சியளிப்பதால் இதை தடை செய்யும் வழியும் தெரியாமல் விழிக்கின்றனர்.

பதின் வயது துடிப்புடனும், உற்சாகத்துடனும் செலவிட வேண்டிய வயது. இந்த வயதில் தற்கொலை செய்ய வேண்டும் எனும் எண்ணம் ஏன் இவர்களுக்கு வருகிறது என்பதற்கு உளவியலார் பல்வேறு காரணங்களைச் சொல்கின்றனர்.

முதலாவதாக, எங்கும் நிறைந்திருக்கும் பதின் வயதுக் காதல். அவனோ, அவளோ இல்லையேல் வாழ்க்கை இல்லை என நினைக்கும் முட்டாள்தனமான பாலியல் ஈர்ப்புகள் தற்கொலைக்குத் தூண்டுகின்றன. பெரும்பாலும் பெண்கள் இத்தகைய வசீகர வலையில் சிக்கி தற்கொலையே தீர்வு என முடிவெடுத்து விடுகின்றனர். 

இரண்டாவதாக பெற்றோருடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பதின் வயதினரை சட்டென உணர்ச்சி பூர்வமான முடிவுக்குள் தள்ளி விடுகின்றன. தனக்குத் தண்டனை தந்த பெற்றோரைத் தண்டிக்க வேண்டும் எனும் உணர்வு நிலை உந்துதல் தற்கொலைக்குத் தூண்டுகிறது.

மூன்றாவதாக சகவயதினரின் கேலி, கிண்டல், படிப்பில் ஏற்படும் தோல்வி, இயலாமை என சிறி சிறு பலவீனங்களின் தற்கொலைக்குத் தூண்டுகின்றன.

நான்காவதாக, மரணத்துக்குப் பின் வாழ்க்கையில் ஏதோ மிக மிக அதிக சந்தோசமும், சுவர்க்கமும் இருக்கின்றன எனும் நம்பிக்கை. என்னதான் இருக்கிறது என்பதை அறிய வேண்டுமே எனும் ஆவல். பதின் வயதினரின் ஆர்வக் கோளாறு தற்கொலைக்குத் தூண்டுகிறது.

இந்த இணைய தளங்களில் சென்று தற்கொலை செய்வதாக சொன்னால் மனம் மாற வாய்ப்பே தராமல் கூடவே நின்று சாவதை உறுதி செய்து விடுகின்றனர். குறிப்பாக குழுவினராக தற்கொலை செய்ய நினைப்பவர்கள் இடையில் விட்டு விலக வாய்ப்பு மிக மிகக் குறைவு. காரணம் மற்ற தற்கொலை விரும்பிகளின் கட்டாயம்!

கடந்த முப்பது வருடங்களில் இந்த தற்கொலை விகிதம் முப்பது மடங்கு அதிகரித்திருப்பதாக ரஷ்ய இணைய தளம் ஒன்று தெரிவிக்கிறது.

நவீனயுகம் பல்வேறு வசதிகளைச் செய்து தருகிறது, அவை நன்மையின் பாதையிலும், தீமையும் பாதையிலும் தடங்களைப் பதித்துக் கொண்டே செல்கிறது. தண்ணீர் விடுத்து பாலை எடுக்கும் சங்க கால அன்னப் பறவை போல தீமை விடுத்து நல்லதை எடுக்க வேண்டியது அவசியம்.

பதின் வயதுப் பருவம் என்பது மதில் மேல் அமர்ந்திருக்கும் பூனையைப் போன்றது. அது சரியான திசையில் குதிப்பதும், குதிக்காததும் குடும்பத்தினரின் அரவணைப்பையும், வழிகாட்டுதலையும் பொறுத்தது.

( இந்த வாரம் களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )