யெஸ். பாலபாரதியின் “அவன் – அது = அவள்” : நூல் விமர்சனம்

நேற்று யெஸ்.பாலபாரதி அவர்கள் எழுதிய “அவன் – அது = அவள்” எனும் நாவலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

திருநங்கையர் குறித்த அக்கறையும், பாசமும் சமீபகாலமாக அதிகரித்திருப்பது மனித நேயத்தின் வேர்களில் இன்னும் ஈரம் உலராமல் இருக்கிறது என்பதை உணர்த்திக் கொண்டே இருக்கிறது.

கிழக்கு வெளியிட்ட நான் வித்யா, தோழமை வெளியிட்ட அரவாணிகள் இரண்டு நூலையும் தொடர்ந்து மூன்றாவதாக வாசிக்கும் நூல் இது என்பதால் இந்த நாவல் தரும் அனுபவம் வலி கூட்டுகிறது.

திருநங்கையரின் உண்மையான அனுபவங்களின் வாக்கு மூலங்களையும், அவர்களுடைய வாழ்க்கையின் துயரங்களையும் ஓர் ஆவணமாக்கிய விதத்தில் பாலபாரதி வெற்றியடைந்திருக்கிறார்.

எளிமையான தெளிவான நடையும், சொல்லும் விஷயங்களை வரிசைப்படுத்திய நேர்த்தியும் நூலின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. பல இடங்களில் நூலை மூடி வைத்துவிட்டு சற்று இடைவெளி கொடுத்து, கனத்த இதயத்தை எடையிழக்க வைத்து, வாசிப்பைத் தொடர வேண்டியிருந்தது என்பது கலப்படம் இல்லாத உண்மை.

குறிப்பாக ‘கோபி’ யின் முதல் துயரம் சக மனிதன் மீதான கரிசனையற்ற ஓர் காட்டு வாசிக் கூட்டத்தின் ஆணிவேர்களில் கோடரியாய் இறங்கியிருக்கிறது. வாசிக்கும் போதே அந்த சமூகக் கூட்டத்தில் ஓர் புழுவாய் நெளியும் அவஸ்தையும், அவமானமும் சூழ்ந்து கொள்கின்றன.

கடைசி கட்டத்தில் நிர்வாணச் சடங்கை விவரிக்கும் போது திருநங்கையரின் துயரத்தின் ஆழம் மனதை மூழ்கடிக்கிறது. துயரங்களின் புதைகுழியையே வாழ்க்கையின் இருப்பிடமாகக் கொண்ட சகோதரிகளின் கண்ணீர் துளிகளின் பிரதிகள் நம்மிடமிருந்தும் வழிகின்றன.

அழுகையின் அடர் இரவில் எழும் மின்மினிகளின் பளிச்சிடுதலாய் திருநங்கையரின் காதல் உணர்வுகளையும், மோகப் பகிர்வுகளையும் விரிவாகவே ஆசிரியர் விளக்குமிடத்தில் ஆபாசத்தையும் மீறி கண்கள் பனிக்கின்றன.

இன்றைய அவசர உலகம் கவனிக்க மறுத்த துயரங்களில் கூடாரத்தில் இவர்களுடைய வாழ்க்கையும் அடங்கும். இதை நாவல் என சொல்லவேண்டாம் என ஆசிரியர் கேட்டுக் கொண்டாராம். வலி மிகுந்த உண்மைகளே இதில் வலம் வருகின்றன என்பதால் இருக்கலாம்.

எடுத்துக் கொண்ட கருவுக்காக பாலபாரதியை முழுமையாகப் பாராட்டலாம். நாவல் எனும் வகையில் சில குறைகளையும் காண முடிகிறது. குறிப்பாக ‘நிர்வாணம்’ உட்பட சில காட்சிகளை அழுத்தமாய் விவரித்த அளவுக்கு நாவலின் முடிவுப் பகுதியும் விளக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிறைவுப் பகுதி ஓடும் பஸ்ஸிலிருந்து சட்டென குதித்துவிட்ட அவஸ்தையையே தருகிறது. முழுமையாக அந்த பகுதிக்குள் நுழைய முடியாமல் அந்த அவசரம் தடுத்துவிடுகிறது. இந்த நிலை நாவலின் இடையிடையே நேர்கிறது.

எனினும், தனது முதல் நாவலின் மூலமாக ஓர் அழுத்தமான களத்தை எடுத்துக் கொண்டு அதற்காய் சமரசங்கள் செய்து கொள்ளாமல், நிஜத்தின் வலியையும், வலியின் நிஜத்தையும் ஆழமாய் பதிவு செய்த வகையில் ஆசிரியர் தனித்துவம் பெறுகிறார்.

——————————– ——————————– ——————————– 

பல ஆண்டுகளுக்கு முன் திருநங்கையர் பற்றி நான் எழுதிய கவிதையின் சில வரிகள் நினைவுக்கு வருகின்றன.

அவர்கள் என்ன
விண்ணப்பம் செய்து
விண்ணிலிருந்து
விழுந்தவர்களா ?
ஏதோ ஒரு கருவறையின்
கதவுதிறந்து பிறந்தவர்கள் தானே.

——————————– ——————————– ——————————– 

தோழமை வெளியீடு
9444302967
பக்கங்கள் 184
விலை  : 120