ரஜினியும், இசைஞானியும் #HBDRaja

 Image result for ilayaraja and rajini

 

சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படங்களில் இசைஞானி இளையராஜாவின் பங்களிப்பு மறக்க முடியாதது. இன்றும் ரீங்காரமிடும் காலத்தால் அழியாத நூற்றுக்கணக்கான பாடல்களை இசைஞானி ரஜினிக்காக அளித்திருக்கிறார். அவை திரையில் ரஜினியின் ஆளுமையோடு இணைந்து நீங்கா விருந்தாக நிலைபெற்றிருக்கின்றன‌.

அது போல பின்னணி இசையில் மிரட்டிய பல்வேறு படங்களையும் இசைஞானி ரஜினிக்கு வழங்கியிருக்கிறார். பின்னணி இசைக்கு ஒரு அர்த்தம் கொண்டு வந்தது இசைஞானி இளையராஜா என தைரியமாகச் சொல்லலாம். படம் முழுவதும் இணைந்து பயணிக்கும் சீரான இசையும். சற்றும் தொய்வில்லாமல் உணர்வுகளை தாங்கிப் பிடிக்கும் இசையும். கண்களை மூடிக் கொண்டு கேட்டால் கூட படத்தின் ஒவ்வொரு காட்சியையும் துல்லியமாய் உணர முடிகின்ற பின்னணி இசையும், இசைஞானியின் அசுர பலம்.

இருவரும் திரைக்கு வெளியேயும் நெருங்கிய நட்பு பாராட்டுகின்றனர் என்பது சிறப்புச் செய்தி. இசைஞானியை ரஜினி, “சாமி” என்று தான் அழைப்பார். இசை கடவுளின் வரம், இசைக்கலைஞர் கடவுளின் வரம் பெற்றவர் எனும் கருந்து ரஜினிக்கு எப்போதுமே உண்டு. ஆன்மீகவாதியான ரஜினி, இன்னொரு ஆன்மீகவாதியான இசைஞானியுடன் பக்தியுடன் தான் பழகினார். அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொள்வதும் அன்பை பரிமாறிக் கொள்வதும் சகஜ நிகழ்வுகள். இருவரைக் குறித்தும் விமர்சனங்கள் தவறாக வந்த போதும் ரஜினியோ, இசைஞானியோ அதை கண்டு கொள்ளவில்லை. காரணம் அவர்களுடைய நட்பு எப்படி என்பதை இன்னொருவர் சொல்லி அறியும் நிலையில் அவர்கள் இல்லை என்பது தான்.

ரஜினியோடு, இசைஞானி இணைந்த முதல் படம் கவிக்குயில். சின்னக் கண்ணன் அழைக்கிறான் என மறக்க முடியாத ஒரு மெலடியுடன் ரஜினி இளையராஜா கைகுலுக்கல் ஆரம்பித்தது. பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரலும், இசைஞானியின் இசையும் கவிக்குயில் படத்தின் அடையாளமாக சின்னக் கண்ணனை நிலை நிறுத்தி விட்டன.

ரஜினியும் இசைஞானியும் கடைசியாக இணைந்த படம் வீரா. கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட எனும் பாடல் ஒன்றே போதும் வீராவின் புகழைப் பேச. அந்த அளவுக்கு ரசிகர்களையும், இசை பிரியர்களையும் கட்டிப் போட்ட பாடல் அது. அந்தப் படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள் மலைக்கோயில் வாசலில், மாடத்திலே கன்னி மாடத்திலே என பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டான படம் வீரா !

இசைஞானி ரஜினிக்கு அளித்த பாடல்கள் பெரும்பாலானவை ஹிட் ரகம் தான். அதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பாடல்கள் நிறைய உண்டு.

வயலினை வைத்துக் கொண்டு மனித உணர்வுகளை அந்த இழைகள் வழியாய் இழைத்துச் செதுக்குவதில் இசைஞானிக்கு நிகராய் இன்னொருவர் திரையுலகில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். வயலினும், கிட்டாரும் அவருடைய இசைப் பயணத்தின் வலிமையான கருவிகளாக கூடவே பயணிக்கின்றன.  தளபதி படத்தில் வரும், “சின்னத்தாயவள் தந்த ராசாவே” பாடலில் பயணிக்கும் வயலினின் உயிரோட்டம் நெஞ்சைப் பிழியும் ரகம்.

சின்னத்தாயவள் படத்தில் வயலின் மனதைப் பிழிந்தது என்றால் அப்படியே தம்பிக்கு எந்த ஊரு படத்தில் வரும், “என் வாழ்விலே வருமன்பே வா” பாடலில் சந்தோசமான மனநிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறது. ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் வருகின்ற கண்மணியே காதல் என்பது கற்பனையோ பாடலில் இழையோடும் வயலின் ஆனந்தத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது, இந்தப் பாடலில் கூடவே பயணிக்கும் வீணையும், நாதஸ்வரமும் பாடலை அற்புதமாக்கி விடுகின்றன.

சர்வதேச அளவில் இசைஞானிக்கு அங்கீகாரம் கொடுத்த ராக்கம்மா கையத் தட்டு பாடலில் துள்ளி விளையாடும் வயலினின் விஸ்வரூபம் இசை ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் எப்போதுமே இருக்கும். உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்தில் வருகின்ற, “கண்ணில் என்ன கார் காலம்” பாடல் காதலின் நினைவுகளைத் தூண்டி எழுப்பும் ரகம். கிட்டாரும், வயலினும் தலைகாட்டாத இசைஞானி பாடல்கள் உண்டா என்பதில் எனக்கு சந்தேகமே.

தங்க மகன் படத்தில் வரும், “ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ” பாடல் புதுமையானது. அதில் முழு சரணத்தையுமே பெண் பாடல் குழு வைத்து பண்ணியிருப்பார் ராஜா. கிட்டாரின் இனிமையையும், பாடகர்களின் குரலையும் இணைத்துக் கட்டிய அந்தப் பாடல் ஒரு புதுமையான அனுபவம்.  கூட்டிசையின் நுணுங்கள் ராஜாவுக்கு அத்துபடி என்பதன் சின்ன உதாரணம் தான் இது.

குரல்களை வைத்து ஜாலம் காட்டிய இசைஞானியின் பாடல்கள் இதே போல எக்கச்சக்கம் உண்டு. அத்தகைய முயற்சிகளில் ஆரம்ப காலங்களில் அசத்தியது கழுகு படத்தில் இடம்பெற்ற பொன் ஓவியம் பாடல்தான். இன்றும் அந்தப் பாடலில் இசைஞானி பயன்படுத்தியிருக்கும் குரல்களின் கோர்வை, நல்லிணக்கம், கூட்டிசை வியக்க வைக்கிறது. இன்றைய தொழில்நுட்பத்தில் அந்த சாத்தியம் எளிது, எந்த தொழில் நுட்ப ஒட்டு வேலைகளும் இல்லாத அந்த காலத்தில் அவர் செய்த அந்தப் பாடல் அசாத்தியமானது. அதே போல ஜானி படத்தில் வரும் ஆசையக் காத்துல தூது விட்டு பாடலில் இடையிடையே வருகின்ற கூட்டிசை பிரமிப்பானது.

சோகத்தைப் பிழிந்தாலும் கூடவே உணர்வுகளின் ஊர்வலத்தை இணைக்கும் இசைஞானியின் பாடல்கள் எக்கச்சக்கம். எப்போதும் மறக்காத பாடல்களில் ஒன்றாக ரஜினியின் மன்னன் பட பாடலைச் சொல்லலாம். அந்த பாடலுக்கு கரையாத மனம் உண்டோ ? இசை பிரியர்கள் முதல் சாதாரண ரசிகர்கள் வரை அந்தப் பாடல் உருவாக்கிய அதிர்வு எக்கச்சக்கம்.

பிரியா படத்தில் பாடல்கள் எல்லாமே அற்புத வகை. முதன் முதலாக ஸ்டீரியோ போனிக் அறிமுகப்படுத்தி பாடல்களையெல்லாம் ராஜா இதில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கினார். பிரியா படத்தின் பெரிய‌ வெற்றிக்கு இது முக்கிய காரணமானது.

தளபதி, ஜானி, படிக்காதவன், வீரா, எஜமான், உழைப்பாளி, மன்னன், தர்மதுரை, பணக்காரன், மாப்பிள்ளை, ராஜாதிராஜா, தர்மத்தின் தலைவன், வேலைக்காரன் போன்ற படங்களில் எல்லா பாடல்களுமே அற்புதப் பாடல்களாய் அமைந்திருந்தன என்று சொல்லலாம். படத்தின் வெற்றிக்கு பெரிய பங்களிப்பை இசை ஆற்றிய படங்களில் இவை முக்கியமானவை.

தர்மயுத்தம் படத்தில் மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி குரலில் ஒலிக்கும் ஆகாய கங்கை பாடல் எப்போதும் சிலிர்ப்பூட்டுகிறது. முரட்டுக்காளையில் மலேஷியா வாசுதேவனின் மந்திரக் குரலில் ஒலிக்கும் அண்ணனுக்கு ஜே பாடலும், ஜானகி குரலில் எந்தப் பூவிலும் வாசம் உண்டு பாடலும் இசைஞானியில் முத்திரைகள்.

சந்தனக் காற்றே, செந்தமிழ் ஊற்றே சந்தோசப் பாட்டே வாவா.. என மனதை இழுக்கின்ற தனிக்காட்டு ராஜா பாடலில் இசைஞானியும், எஸ்.பி.பி ஜானகி இணையும் போட்டி போட்டிருப்பார்கள். காதலின் நயாகரா காதுகளில் கொட்டும் இன்பம் அந்தப் பாடலுக்கு உண்டு

இசைஞானியின் இசையில் மறக்க முடியாத இன்னொரு ரஜினி படம் புதுக்கவிதை. வெள்ளைப் புறா ஒன்று பாடல் ரஜினி பாடல்களில் மிக முக்கியமானது. இதே படத்தில் வருகின்ற இன்னொரு அசத்தல் பாடலாக வா வா வசந்தமே பாடலைச் சொல்லலாம்.

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா… பாடலுக்கு ஆடாத கால்கள் இருக்க முடியாது. அடுத்த வாரிசு படத்தின் வெற்றிக்கும், பிரபலத்துக்கும் இந்தப் பாடல் ஒரு முக்கிய காரணியாய் அமைந்தது. ஆசை நூறு வகை அதிரடி என்றால், இன்னொரு பாடலான பேசக் கூடாது பாடல் இரவின் தனிமையில் ஒலிக்கின்ற காதலின் புல்லாங்குழலாய் மனதை வசீகரிக்கிறது.

நான் மகான் அல்ல படத்தில் வருகின்ற, மாலை சூடும் வேளை பாடலும் சரி, தங்க மகன் படத்தில் வரும் வா வா பக்கம் வா பாடலும் சரி ரஜினியின் முத்திரைப் பாடல்கள். இரண்டு வேறுபட்ட மனநிலையில் ரசிக்க வைக்கின்ற பாடல்கள். தங்க மகன் படத்தில் இன்னொரு சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் என்றால் அது ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ பாடல் தான். எஸ்பிபி ஜானகி இணையின் இன்னொரு மிரட்டல் ஹிட் பாடல் அது.

முத்துமணிச் சுடரே.. வா என மனதை பிசையும் பாடலான அன்புள்ள ரஜினிகாந்த் பாடல், படத்தில் பார்வையாளர்கள் கொண்டிருக்கும் உணர்வு பூர்வமான தொடர்பை நீட்டிப்பதாக இருக்கும். இந்தப் பாடல் அந்தப் படத்திற்கு எவ்வளவு தூரம் பக்க பலமாய் இருந்தது என்பது கண்கூடு.

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே பாடல் என்னை எப்போதுமே இனிமையாய் இம்சை செய்யும் பாடல்களில் ஒன்று. இசையும், குரலும், படமாக்கலும் என எல்லா வகையிலும் மனதுக்குள் ரீங்காரமிடும் பாடல்களில் ஒன்று இது. அதே போல, கை கொடுக்கும் கை படத்தில் வருகின்ற, தாழம் பூவே வாசம் வீசு பாடல் ஒரு வகையில் மனதுக்குள் நுழைந்து இம்சிக்கின்ற பாடல்.

அற்புதமான தாளகதி இசைஞானியின் பாடல்களின் உயிர் நாடி. ஒரு கிளாசிக் உதாரணம் சொல்ல வேண்டுமானால் நித்தம் நித்தம் நெல்லுச்சோறு பாடலைச் சொல்லலாம். முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. தபேலா, மிருதங்கம், கதம் என இந்தியக் கருவிகள் அழகான தாளகதியில் உலவும் ஒரு பாடல் இது.

தபேலா, மொரோக்கோ, டிரம்ஸ் எனும் மூன்று தாளக் கருவிகளையும் ஒரு அற்புதமான புதுமை வரிசையில் இணைத்து கூடவே புல்லாங்குழலையும் நுழைத்திருக்கும் ஒரு பாடல் “அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது” எனும் பாடல். தங்க மகன் படத்தில் இடம்பெற்றிருக்கும் அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று.

நல்லவனுக்கு நல்லவன் படத்தில் எல்லா பாடல்களுமே சிறப்பானவை என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு பாடல் கண்ணீரை வரவழைக்கும் என்றால், நம்ம முதலாளி பாடல் உற்சாகத்தை ஊற்றெடுக்க வைக்கும், உன்னைத் தானே பாடல் காதலின் பறவைப் பாடலாய் காதுகளில் கூடுகட்டும், வச்சிக்கவா பாடல் சில்மிசத்தின் சிலந்தி வலையாய் நெஞ்சுக்குள் மஞ்சமிடும். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம்!

நான் சிகப்பு மனிதன் படத்தில் வருகின்ற, பெண் மானே சங்கீதம் பாடவா பாடலும், மிஸ்டர் பாரத் படத்தில் வரும் என்னம்மா கண்ணு பாடலும், வள்ளி படத்தில் வரும் என்னுள்ளே என்னுள்ளே பாடலும் எப்போதுமே ரசிகர்களின் காதுகளை நிராகரித்து நகர்வதில்லை.

இசைஞானி ஆன்மீகத்தின் கரைகளில் நடந்து திரியும் ஒரு சங்கீதப் பறவை. அவருடைய திருவாசகத்தின் அழுத்தம் இசைப் பிரியர்கள் நன்கு அறிந்தது. ஆடல் கலையே தெய்வம் தந்தது பாடலின் தெய்வீகத்தை இழைத்திருப்பார். ஸ்ரீராகவேந்திரா பாடல் ஏசுதாஸ் குரலில் இசைஞானியின் இன்னொரு முத்திரை !

ரஜினிக்கு இசைஞானி அளித்த ஹிட் பாடல்களைப்ப் பற்றிப் பேசினால் அது ஒரு தனி நூலாகவே வெளியிடும் அளவுக்கு சுவாரஸ்யமானது. அதை விட முக்கியமாக இசைஞானி அவர்கள் ரஜினிக்கு அளித்த பின்னணி இசைக்கோர்வை தான் மிரட்டலானது. பல படங்கள் வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தில் இருக்கின்றன.

முள்ளும் மலரும், ஜானி, பிரியா, தளபதி என நிறைய படங்கள் பின்னணி இசையின் அற்புத பயணத்துக்கு உதாரணங்கள்.

இசைஞானி இளையராஜா தமித் திரையுலகிற்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றால் மிகையல்ல. சூப்பர் ஸ்டாரின் பாடல்கள் ஹிட் ஆவதற்கு இசைஞானி தான் வேண்டுமென்பதில்லை. ரஜினியின் திரை ஆளுமை, அவருடைய ஸ்டைல், மாஸ் மேனரிசம் அனைத்துமே பாடல்களை ஹிட்டாக்கி விடும். ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, சங்கர் கணேஷ், சந்திரபோஸ், வித்யாசாகர் என பலரும் ரஜினிக்கு மிகப்பெரிய ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆனால் ரஜினியோடு பல மொழிகளில் மொத்தம் 65 படங்கள் வரை பணியாற்றியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. ரஜினியின் அதிக படங்களுக்கு இசை இவர் தான். ரஜினியின் படங்களில் இன்றும் மென்மையாய் வருடும் பாடல்களில் பெரும்பாலானவை இசைஞானி இளையராஜா பாடல்களே. இளையராஜாவைத் தவிர்த்துவிட்டு ரஜினி படங்களின் இசையைப் பற்றிப் பேச முடியாது என்பதே யதார்த்தம் !

இசை மேதைகளைப் பற்றி அறிந்து கொள்வதல்ல முக்கியமான விஷயம், இசைக்கு நீ என்ன பங்களிப்பு செய்திருக்கிறாய் என்பதே முக்கியம் என்பார் இளையராஜா. அந்த வகையில் இசைஞானியின் இசைப் பங்களிப்பு தலைமுறை தாண்டியும் காற்றில் உலவும் கல்வெட்டாய் மாயம் காட்டி நிலைக்கும்.

இன்று 73வது பிறந்த நாள் காணும் இசைஞானிக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள்

TOP 10 : மூளையின் புத்திசாலித்தனம்

Image result for human brain

மனித மூளை ஒரு அற்புத சாதனம். இறைவனின் படைப்பின் உச்சத்தை உரக்கச் சொல்லும் ஒரு விஷயம்ம. மனித மூளைய ஒத்த ஒரு கருவியைப் படைக்க மனிதனால் இன்று வரை முடியவில்லை. இனிமேலும் சாத்தியமாகப் போவதில்லை. காரணம் அதன் நுட்பங்கள் அந்த அளவுக்கு இருக்கின்றன. நம்முடைய அனுமதி இல்லாமலேயே தினமும் மூளை பல்வேறு விஷயங்களைச் செய்து கொண்டே இருக்கிறது. மூளையைப் பற்றிய வியப்பான பத்து விஷயங்கள் இந்த வாரம்.

 1. தகவல் வடிகட்டல்

தினம் தோறும் நமது கண்கள் மூலமாகவும், காதுகள் மூலமாகவும், உணர்வுகள் மூலமாகவும் பல்வேறு தகவல்களை மூளை சந்தித்துக் கொண்டே இருக்கிறது. அந்த தகவல்கள் எல்லாம் நமக்குத் தேவைப்படுவதில்லை. அத்தகைய தேவையற்ற தகவல்களையெல்லாம் மூளை தானாகவே வெளியேற்றிக் கொண்டே இருக்கிறது.

உதாரணமாக, நாம் இன்றைய தினம் முதலில் சந்தித்த நபர் யார். அவர் என்ன கலர் ஆடை அணிந்திருந்தார். இரண்டாவதாக யாரைப் பார்த்தோம் ? போன்ற தகவல்களையெல்லாம் மூளை பதிவு செய்து வைப்பதில்லை. இதை “செலக்டிவ் அட்டென்ஷன்” என்கிறது விஞ்ஞானம். தேவையற்ற தகவல்களை விலக்கி, தேவையான தகவல்களை சேமிக்கும் அற்புத ஞானம் அதற்கு உண்டு. எனவே சில விஷயங்கள் மறந்து போச்சே என்றால் கவலைப்படாதீர்கள்.

இதே போல கவலையளிக்கும் விஷயங்களை மறந்தும், ஆனந்தமான விஷயங்களை நினைவிலும் வைக்கும் மனம் இருந்தால் ரொம்ப நல்லது இல்லையா ?

 1. இமைத்தல்

மனிதன் இரண்டு முதல் பத்து வினாடிகளுக்கு ஒரு முறை இமைக்கிறான். அதாவது ஒரு நிமிடத்துக்கு 30 முறை வரை விழிகள் இமைத்துக் கொண்டே இருக்கின்றன. நாம் அதைப் பற்றிய கவனமே இல்லாமல் இருப்போம். இதை முழுமையாக செயல்படுத்துவது நமது மூளை தான். நமது கண்ணுக்குத் தேவையான ஈரப்பதம் எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்வது தான் இதன் முக்கிய வேலை.

கண்களின் ஓரங்களில் உருவாகும் கண்ணீரை கண்ணுக்கு சரியாக அனுப்பி, அழுக்கை அகற்றி கண்ணை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த இமைத்தல் உதவுகிறது. யாராவது சட்டென எதையாவது எடுத்து முகத்தில் எறிந்தால் முதலில் கண்ணை மூடுவது கூட மூளை சட்டென செய்யும் தற்காப்பு நடவடிக்கையே !

 1. நாவின் அசைவு

கமலஹாசனைப் போலவோ, ரஜினிகாந்தைப் போலவோ அசாதாரணமாக மிமிக்ரி செய்யும் மக்களைப் பார்த்திருப்பீர்கள். குறிப்பிட்ட நபர்களின் வார்த்தை உச்சரிப்பை வைத்து அதே போல பயிற்சி எடுத்து பேசுவது தான் இவர்களின் திறமை. ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு விதமான உச்சரிப்புக்கும் நமது நாக்கு எப்படி சுழல்கிறது, எப்படி அசைகிறது என்பது தான் மிக முக்கியமான விஷயம். இந்த அசைவுகளையெல்லாம் மூளை தனது அதி அற்புதமான திறமையினால் தாமாகவே முடிவு செய்து கொள்கிறது !

நாம் பேசுகிறோம், ஆனால் நாக்கு எங்கெல்லாம் அசைகிறது என்பதை நாம் கவனிப்பதில்லை. என்ன பேசுகிறோம் என்பதை மட்டும் நாம் கவனித்தால் போதும், எப்படி பேசுகிறோம் என்பதை மூளை முடிவு செய்கிறது. ஒருகுறிப்பிட்ட ஸ்டைலில் நாம் பேச ஆரம்பித்தால் அந்த ஸ்டைலுக்குத் தக்கபடி நாவின் இருப்பிடத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும் வேலையை மூளை மின்னலென செய்கிறது.

நாம் ஒரு குறிப்பிட்ட வாக்கியத்தைப் பேச ஆரம்பிக்கும் போது, நாம் பேசத் துவங்கும் முன்பே நாக்கு தயாராகி விடுகிறது என்பது வியப்பான விஷயம் இல்லையா ?

 1. உடலின் வெப்ப நிலை

நமது நிலத்தில் எல்லா காலநிலைகளும் மாறி மாறி வருகின்றன. குளிர்காலம், வெயில்காலம், வசந்தகாலம் என வெப்பநிலை மாறி மாறி வருகிறது. இது போதாதென்று அடிக்கடி நாம் ஏசி அறைகளில் போய் அடைபட்டு விடுகிறோம் உடலுக்கு குளிரெடுக்கிறது. வெயிலில் அலைகிறோம் உடல் சூடாகிறது !

நமது உடல் சீராக இயங்க வேண்டுமெனில் நமக்கு 37 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உடலில் இருக்க வேண்டும். அப்போது தான் நமது செரிமான அமைப்பு உட்பட உள் உறுப்புகள் எல்லாமே சிறப்பாகச் செயல்படும். அந்த வெப்பத்தை ஊர்ஜிதப்படுத்தும் வேலையை மூளை செய்கிறது. இதை நாம் அறிவதில்லை. சட்டென குளிரும் போது நமது உடலில் முடியெல்லாம் சிலிர்ப்பது வெளி வெப்பத்தை உறிஞ்சி எடுக்கும் ஒரு வழிமுறை. வெயிலில் உடல் வியர்ப்பது அதிக வெப்பம் உடலைத் தாக்காமல் உடலைக் குளிர வைக்கும் முயற்சி. இவை அனைத்தையுமே மூளை தன்னிச்சையாகச் செய்கிறது என்பது வியப்பு.

 1. காட்சிகளை உருவாக்கும்.

சம்பவம் நடந்த அன்றைக்கு நீங்கள் பார்த்த நபர் கண்ணாடி போட்டிருந்தாரா ? வீட்டு சன்னல் உடைந்திருந்ததா ? என வக்கீல் கேட்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த சாட்சிக்காரர் தெளிவாக‌ ஞாபகம் வைத்திருக்காவிட்டால் கண்ணாடி போட்டிருப்பது போலவோ, சன்னல் உடைந்திருப்பது போலவோ மூளையானது காட்சிகளை சட்டென உருவாக்கி நம்மை நம்பவைத்து விடும்.

உளவியலார்கள் எலிசபெத் லோஃப்டஸ் மற்றும் ஜான் பால்மர் இருவரும் செய்த ஆராய்ச்சி மிகப்பிரபலம். அது சொல்லும் விஷயம் இது தான். மூளை தான் கண்ட காட்சியைப் பதிவு செய்து வைக்கிறது. அதனோடு சேர்த்து புதிய தகவல்களை நாம் கொடுக்கும் போது மூளை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கும் காட்சியை இந்த புதிய தகவல்களுக்குத் தக்கபடி மாற்றி அமைக்கிறது ! நாம் பார்க்காத ஒரு விஷயத்தைக் கூட பார்த்தது போல மாயத் தோற்றம் அமைக்க மூளையால் முடியும்.

காலைல இதே டேபிள் மேல தான் வீட்டுச் சாவியை வைத்தேன் என ஒருவர் சொல்லும் போது மூளை அவர் சொல்வது உண்மை என அவரையே நம்பச் செய்து விடுகிறது. எனவே அடுத்தமுறை யாராவது அப்படிச் சொன்னால் திட்டாதீர்கள். மூளையின் காட்சி உருவாக்கம் தான் அதன் காரணம்.

 1. உடலின் சமநிலை

யாராவது கூப்பிட்டா சட்டுன்னு எழும்பி போறோம். மாடிப்படில ஏறுகிறோம், கீழே குதிக்கிறோம். ஆனா கீழே விழுவதில்லை. நமது உடல் எப்படி சமநிலையை பெற்றுக் கொள்கிறது ? அதைப் பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. நமது மூளை நமது உடலை சமநிலையில் வைத்திருக்கிறது. நமது கண்கள், மூட்டு இணைப்புகள், தசைகள் உட்பட பல்வேறு உறுப்புகள் மூளைக்கு சிக்னல்களை அனுப்பிக் கொண்டே இருக்கின்றன. அந்த சிக்னல்களை மைக்ரோ வினாடிகளில் அலசி ஆராய்ந்து நமது உடலின் சமநிலைக்கு ஏற்ப நமது உடலின் அமைப்பை மாற்றுகிறது மூளை.

கண்கள் நமக்கு முன்னால் இருக்கும் ஒரு பள்ளத்தைப் பார்க்கிறது. அந்த சிக்னல் மூளைக்குச் சென்று காலை எட்டி வைக்கிறோம். அப்போது உடலின் எடை முன்பகுதிக்குச் செல்கிறது, அப்போது நமது மூட்டுகள் சிக்னலை மூளைக்கு அனுப்புகின்றன. மூளை நமது உடலை அதற்குத் தக்கபடி வளைக்கிறது. இந்த எல்லா வேலைகளையும் மைக்ரோ வினாடியில் செய்து நமது உடலில் சமநிலை தவறாமல் மூளை நம்மை பாதுகாக்கிறது என்பது பிரமிப்பு தான் இல்லையா ?

7 நடுக்கம்

அதிக குளிரான இடத்தில் நிற்கும் போது சட்டென உடல் நடுங்க ஆரம்பிக்கும். சில வேளைகளில் நடுங்காமல் இருக்க வேண்டும் என நினைத்தாலும் முடியாமல் போகும். நடுங்கிக் கொண்டே இருப்போம். இதுவும் மூளையின் செயல்பாடு தான். உடலுக்குத் தேவையான வெப்பம் இல்லாத சூழல் உருவாகும் போது, உடல் மூளைக்கு சிக்னலை அனுப்புகிறது. உடனே மூளை உடலுக்கு நடுக்கத்தைக் கட்டளையிடுகிறது.

நடுக்கம் உடலில் வெப்பத்தை அதிகரிக்க உதவுகிறது. இந்த நடுக்கம் தீரவேண்டுமெனில் நாம் சூடான இடத்திற்குச் செல்ல வேண்டும், அல்லது போர்வைகளால் போர்த்தி உடலை தேவையான வெப்ப நிலைக்குக் கொண்டு வர வேண்டும். நடுக்கம் என்பது உடலை வெப்பமாய் வைத்திருக்க உதவும் பாதுகாப்பு அம்சம் தான். நடுக்கம் வருகிறதெனில், அதற்குக் காரணமான‌ மூளையிலுள்ள ஹைபோதலாமாஸ் பகுதிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

 1. சிரிப்பு

எங்கே சிரிக்கணும், எங்கே சிரிக்கக் கூடாதுன்னு விவஸ்தை இல்லையா என சிலர் கேட்பதுண்டு. சிரிக்கக் கூடாத இடத்தில் சில வேளைகளில் சிரிப்பு பொத்துக் கொண்டு நம்மை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடுவதும் உண்டு. இதற்கெல்லாம் காரணம் மூளை தான்.மூளையின் சில இடங்களில் நடக்கின்ற மாற்றங்கள் நமக்கு சிரிப்பை உண்டு பண்ணி விடுகின்றன.

ஒரு சிரிப்பு பொறிக்கு மூளை வேறு பல இடங்களிலிருந்து கிடைக்கின்ற தகவல்களை இணைத்து அடக்க முடியாத பெரிய‌ சிரிப்பை உருவாக்கி விடுகிறது. மூளை நமது உடல் அசைவுகளையும் மாற்றிவிடுகிறது. மூளையின் சில பகுதிகளை தூண்டும் போது அடக்க முடியாத சிரிப்பு வருவதை விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றனர். அடுத்த தடவை யாராவது சிரித்தால், மூளையின் சித்து வேலை என சைலன்டாகப் போய்விடுங்கள்.

9 சுவை

சுவை விஷயத்தில் மூளை கொஞ்சம் மக்கு என்பது வியப்பான விஷயம். ஒரு சுவையான உணவைச் சாப்பிடும்ப்போது கண் அந்த உணவைப் பார்த்து மூளைக்கு சிக்னல் அனுப்புகிறது. மூக்கு அந்த வாசனையை அப்படியே மூளைக்கு சிக்னல்கள் மூலம் அனுப்புகிறது. அதை வைத்துத் தான் மூளை சுவை என்ன என நிர்ணயிக்கிறது. அல்லது சரியான சுவையை நாவுக்கு தருகிறது.

கண்களைக் கட்டிக் கொண்டு, மூக்கையும் பொத்திக் கொண்டு ஒரு துண்டு ஆப்பிள் பழத்தைச் சாப்பிட்டாலும், ஒரு துண்டு உருளைக்கிழங்கைச் சாப்பிட்டாலும் எது என்ன என்பதை அறியாமல் மூளை குழம்பிவிடும். வைன் சுவைஞர்கள் என ஒரு பணி உண்டு. வைனை சுவைத்துப் பார்ப்பது தான் அவர்களுடைய வேலை. அவர்களுடைய கண்களைக் கட்டி, மூக்கைப் பொத்தினால் வேலையில் முட்டை மார்க் வாங்கிவிடுவார்கள்.

 1. முகம்

மேகத்தைப் பாத்தேன் அப்படியே ஒரு மனுஷனோட முகம் மாதிரியே இருந்துச்சு. அந்த கல்லு கிடக்கிற ஸ்டைல பாத்தா மனுஷ முகம் மாதிரியே இருக்கு. இப்படியெல்லாம் உரையாடல்கள் கேட்டிருப்போம். இதுவும் மூளையின் சித்து விளையாட்டுகளில் ஒன்று தான். மூளையின் ஒரு பாகம் மனித முகங்களை அடையாளம் காண, பதிவு செய்ய, முக பாவங்களை அறிய என டெடிகேட் செய்யப்பட்டுள்ளது.

மனித வாழ்க்கையில் மனித முகங்களின் குறுக்கீடு தான் அதிகம் எனவே தான் மூளையில் அப்படி ஒரு வசதி. இதன் காரணமாகத் தான் காணும் இடங்களிலெல்லாம் மனித முகங்களை ஒத்த சாயல் இருக்கிறதா என அந்த பகுதி பார்த்துக் கொண்டே இருக்கிறது. இரண்டு புள்ளிகளை வைத்து உற்றுப் பார்த்தால் கூட ஒரு மனித முகம் உங்களுக்குத் தெரியலாம். இனிமேல் நள்ளிரவில் நடு ரோட்டில் ஏதோ முகம் தெரிந்தால், மூளையின் மாயாஜாலம் என நினையுங்கள், பேய் என பதறாதீர்கள்.

*

நன்றி : தினத்தந்தி

 

TOP 10 : திரையில் முதன் முதலாய்

இன்றைய திரையுலகம் அனிமேஷன், மோஷன் கேப்சரிங், கிராபிக்ஸ், நவீன தொழில்நுட்பம் என பல்வேறு நிலைகளில் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால் திரையில் இந்த அம்சங்களெல்லாம் முதன் முதலாய் எப்போது தோன்றின ? அவை எப்படி இருந்தன என்பதை அறிந்து கொள்வது சுவாரஸ்யமே. அத்தகைய பத்து சுவாரஸ்யங்கள் இந்த வாரம்.

Image result for la vie et passion to christ

 1. கலர் படம்

முதன் முதலில் கலர் அவதாரம் காட்டிய படம் எனும் பெருமை ஒரு பிரஞ்ச் படத்தையே சாரும். லா வி எட் பேஷன் டு கிரைஸ்ட் என்பது தான் அந்தப் படத்தின் பெயர். இயேசுவின் வாழ்க்கையும், பாடுகளும் என்பது அதன் பொருள். 1903ம் ஆண்டு இந்தப் படம் உருவானது. ஒரே நீள படமாக இல்லாமல் 32 சிறு சிறு பாகங்களாக உருவான படம். இது இயற்கை நிறங்களின் அடிப்படையிலான படம் அல்ல, நிறம் பூசப்பட்ட திரைப்படம்.

இயற்கையான நிறத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட படம் ‘வித் அவர் கிங்ஸ் அன்ட் குயீன்ஸ் த்ரோ இந்தியா’ எனும் படம். இந்தியாவில் பிரிட்டிஷ் அரசின் வருகை, வரவேற்பு பற்றிய படம். 1912ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. நீமோகலர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டது. இந்த படம் டாக்குமென்டரி வகையில் சேர்கிறது.

முதல் முழுநீள திரைப்படமாக வெளியான படம் த வேர்ல்ட், த ஃளஷ் அன்ட் த டெவில் எனும் படம். நீமோகலர் முறையில், இயற்கை வர்ணத்தோடு வெளியான முதல் முழு நீள திரைப்படம் எனும் புகழ் இதற்கு உண்டு. 1914ம் ஆண்டு இந்த படம் வெளியானது.

Image result for the man in the dark 3d

 1. முதல் 3டி படம்

3டி என்றதும் நமக்கு மை டியர் குட்டிச் சாத்தான் நினைவுக்கு வரும். உலக அளவில் புவானா டெவில் எனும் படம் தான் முதல் முப்பரிமாணப் படம் எனும் பெருமையைப் பெறுகிறது. 1952ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. 1898களில் நடந்த உகாண்டா ரயில்வே கட்டுமானம் தொடர்பான உண்மை நிகழ்வுகளின் பதிவாக இந்தப் படம் அமைந்தது.

முதல் 3டி படத்தை மக்கள் வியப்புடனும், அச்சத்துடனும் பார்த்தார்கள். இதற்கு அடுத்த ஆண்டு த மேன் இன் த டார்க் எனும் 3டி படம் வெளியானது.

Image result for gone with the wind

 1. முதல் நூறு மில்லியன் டாலர் படம்

ஒரு படம் நூறு கோடி சம்பாதிப்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணம். அதுவும் ஆங்கிலப் படங்கள் ஆயிரம் கோடி சம்பாதிப்பது வெகு சாதாரணம். அவதார் திரைப்படம் இந்திய மதிப்பில் 19 ஆயிரம் கோடி ரூபாய்கள் வசூலித்துக் கொடுத்த திரைப்படம். கான் வித் த வின்ட் எனும் 1939ம் ஆண்டே 390 மில்லியன் டாலர்கள் சம்பாதித்தது. அதாவது 39 கோடி டாலர்கள். இன்றைய மதிப்பில் பார்த்தால் சுமார் 23 ஆயிரம் கோடி டாலர்கள் என்கின்றனர்.

அப்படிப் பார்த்தால் இன்று வரை உலகிலேயே அதிகம் சம்பாதித்த படம் எனும் பெருமை அவதாருக்கு அல்ல, கான் வித் த வின்ட் திரைப்படத்திற்குத் தான்.

Image result for toy story

 1. முதல் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் படம்

டாய் ஸ்டோரி படம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகப் புகழ் திரைப்படம் அது. 1995ம் ஆண்டு வெளியானது. அதற்கு முன்பும் பல கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வந்திருக்கின்றன. ஆனால் முழுக்க முழுக்க சி.ஜி.ஐ எனப்படும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இன்டர்பேஸ் மூலம் கதாபாத்திரங்களை உருவாக்கி, அவர்களை மையப்படுத்தி வந்த முழு நீள திரைப்படம் இது தான்.

27 அனிமேஷன் ஸ்பெஷலிஸ்ட் சேர்ந்து 1.14 இலட்சம் பிரேம்கள் வரைந்து உருவான படம் இது. ஒவ்வொரு பிரேமும் இரண்டு முதல் 15 நாட்கள் வரை செலவிட்டு உருவானது. முதலில் உருவங்களை களிமண்ணினால் உருவாக்கி, அதை கணினியில் இணைத்து அதற்கு அசைவு கொடுத்து உருவான படம் இது. வூடி எனும் இதன் முதன்மைக் கதாபாத்திரத்துக்கு மட்டும் 723 கணிமண் பொம்மைகள் உருவாக்கப்பட்டன. எட்டு இலட்சம் மணி நேர மெஷின் உழைப்பு இந்தப் படத்திற்கு தேவைப்பட்டது. 30 மில்லியன் செலவில் எடுக்கப்பட்டு 375மில்லியன் டாலர்கள் சம்பாதித்துக் கொடுத்த படம் இது.

Image result for The fall of the nation

 1. முதல் “இரண்டாம் பாகம்” படம்

இப்போதெல்லாம் பார்ட் 2, பார்ட் 3 என படங்கள் வருவது சகஜம். இதன் பிதாமகன் எந்தத் திரைப்படம் என பார்த்தால் 1916ம் ஆண்டு வெளியான “த ஃபால் ஆஃப் எ நேஷன்” படத்தைத் தான் சொல்ல வேண்டும். முந்தைய ஆண்டு வெளியான, பர்த் ஆஃப் எ நேஷன் படத்தின் தொடர்ச்சியாய் அமைந்த கதை இது

தாமஸ் டிக்சன் இயக்கிய இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அப்போதே 10 மில்லியன் டாலர்கள் சம்பாதித்த படம் இது. அமெரிக்காவுக்கு எதிரான கதையம்சம் கொண்ட படம். எனினும் எல்லா அமெரிக்க விமர்சகங்களும் படத்தை வெகுவாகப் பாராட்டின. தொழில்நுட்ப உத்திகள் பலவற்றை பரிசோதித்த படம் இது. குளோஸப், ஜம்ஸ் ஷாட்ஸ், டீப் ஃபோக்கஸ் என பல விஷயங்கள் முதன் முதலாய் இதில் செய்து பார்க்கப் பட்டன.

Image result for el apostol

 1. உலகின் முதல் கார்ட்டூன் படம்

1917ம் ஆண்டு வெளியான எல் அப்போஸ்டல் திரைப்படம் தான் உலகின் முதல் கார்ட்டூன் திரைப்படம். ஒரு மணி நேரம் பத்து நிமிடம் ஓடக்கூடிய இந்த திரைப்படம் ஒரு வினாடிக்கு 14 பிரேம்கள் எனுமளவில் ஓடுமாறு உருவாக்கப்பட்ட‌ படம். மொத்தம் 58 ஆயிரம் பிரேம்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்தப் படத்தின் எந்த காப்பியும் இப்போது கைவசம் இல்லை என்பது கவலைக்குரிய விஷயம். ஆனால் வெளியான காலத்தில் பிரமிப்பாய் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட படம் இது.

Image result for First Special effect

 1. முதல் ஸ்பெஷல் எஃபக்ட்

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாத காலகட்டம். 1890களில் வெளியான ஒரு படம் அது. தாமஸ் எடிசன் உருவாக்கிய படம். ஸ்காட்லாந்து அரசி கொலை மேடையில் தலையை வைக்கிறார். ஒருவர் வாளை உயர்த்தி அவரது கழுத்தில் இறக்க தலை துண்டாகிறது. அந்த காலத்தில் அந்தக் காட்சியைப் பார்த்த மக்கள் வெலவெலத்தனர். அந்த நடிகை படத்துக்காக தன் உயிரைக் கொடுத்தார் என நினைத்தவர்கள் அனேகர்.

முதன் முதலாய் உருவான ஸ்பெஷல் எபக்ட் காட்சி அது தான். அதை எப்படி எடுத்தார்கள் ? நடிகை வருகிறார். தலையை கொலை மேடையில் வைக்கிறார். கொலைகாரர் வாளை ஓங்குகிறார். அப்படியே எல்லா நடிகர்களும் சிலை போல நிற்கிறார்கள். கேமரா நிறுத்தப்படுகிறது. இப்போது நடிகை மட்டும் விலக ஒரு பொம்மை அந்த இடத்தில் வைக்கப்படுகிறது. மீண்டும் கேமரா இயங்க, கொலைகாரர் கத்தியை இறக்க, நடிகையின் கழுத்து துண்டாகிறது !! அந்த காலத்தில் எல்லா ஸ்பெஷல் எஃபக்ட்களும் இப்படி டிரிக்ஸ் மூலமாகத் தான் உருவாயின என்பது குறிப்பிடத் தக்கது.

Image result for the haunted castle

 1. முதல் திகில், பேய் படம்

1896ம் ஆண்டு வெளியான “த ஹான்டட் கேசில்” திரைப்படம் தான் உலகின் முதல் திகில் படம் என நம்பப்படுகிறது. இப்போது பார்த்தால் காமெடியாகத் தோன்றும் இந்தப் படம் அந்தக் காலத்தில் விழிகளை வியக்க வைத்த படம். பாழடைந்த அரண்மனை ஒன்றில் திடீரென தோன்றும், உருவங்கள், பேய், வவ்வால் பறந்து வந்து மனிதனாவது என காட்சிகள் அமைந்திருந்தன.

வெட்டி, வெட்டி ஒட்டி எடுக்கப்பட்ட இந்தப் படம் அப்போது மிகப்பெரிய மாயாஜாலப் படம் போல காட்சியளித்ததில் வியப்பில்லை. ஜோர்ஜிஸ் மெலிஸ் இயக்கிய இந்தப் படம் தொலைந்து போனதாகவே நம்பப்பட்டது. அதிர்ஷட வசமாக இதன் ஒரு பிரதி நியூசிலாந்தில் 1988ல் கண்டெடுக்கப்பட்டது.

Image result for the sprinkler sprinkled

 1. முதல் காமெடி படம்

ஒரு குட்டிப் படம். 1895ம் ஆண்டு வெளியானது. ஒருவர் செடிக்கு தண்ணீர் ஊற்றுகிறார் ஒரு சிறுவன் பின்னால் வந்து குழாயை மிதிக்கிறான். தண்ணீர் நின்று விடுகிறது. தண்ணீர் ஊற்றுபவர் என்ன ஆச்சு என குழாயை உற்றுப் பார்க்கும் போது சிறுவன் காலை எடுக்கிறான், தண்ணீர் அவர் முகத்தில் பீய்ச்சி அடிக்கிறது. அவர் சிறுவனை விரட்டிப் பிடிக்கிறார். அடிக்கிறார். இவ்வளவு தான் படம்.

த ஸ்பிரிங்க்லர் ஸ்பிரிங்கில்ட் என பெயரிடப்பட்ட இந்தப் படம் தான் உலகின் முதல் காமெடி படம் என நம்பப்படுகிறது. லூமினர் சகோதரர்கள் இந்தப் படத்தை உருவாக்கினார்கள்.

Image result for roundhay garden first movie

 1. உலகின் முதல் படம்

 

உலகின் முதல் படம் எது என்பதில் மாறுபட்ட கருத்துகள் உண்டு. ஆனால் கின்னஸ் உலக சாதனை குறித்து வைத்திருக்கும் படம் 1888ம் ஆண்டு வெளியான ரவுன்டரி கார்டன் காட்சி தான். சில வினாடிகளே ஓடும் காட்சி மட்டுமே கிடைத்திருக்கிறது. ஒரு தோட்டத்தில் சிலர் நடப்பது தான் காட்சி.

லூயி லி பிரின்ஸ் இயக்கிய இந்தப் படம் மோஷன் கேமராவைக் கொண்டு படமாக்கப்பட்டது என்பது சிறப்பு. இதே இயக்குனர் இதற்கு முந்தைய வருடம் ஒரு மனிதன் நடக்கும் படத்தை இயக்கியிருந்தார். அதில் சில ப்ரேம்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. ஓரிரு வினாடிகள் அது ஓடுகிறது.

 

காஞ்சிவரம் : எனது பார்வையில்

kanchivaram-2

காஞ்சிவரம். ஒரு தொழிலாளியின் இயலாமையின் உச்சத்தை வெளிப்படுத்தும் காவியம். ஏழையாய்ப் பிறந்தவன் இந்த உலகில் குறைந்த பட்ச ஆசைகளைக் கூட கொண்டிருக்கக் கூடாதா ? என நெஞ்சில் ஈட்டிக் கேள்விகளை இறக்கி வைக்கிறார் இயக்குனர் பிரியதர்சன்.

வாழ்நாள் முழுதும் உழைத்தாலும் ஒரு பட்டுப் புடவை வாங்க முடியாத ஒரு நெசவாளியின் நெகிழ்ச்சியான வாழ்க்கையையும், அந்த இயலாமையின் உச்சமும், மகள் மீதான நேசத்தின் உச்சமும் சேர்ந்து வேங்கடம் எனும் திறமையான தொழிலாளியின் வாழ்க்கையை எப்படியெல்லாம் அலைக்கழிக்கின்றன என்பதை கனக்கக் கனக்க திரைப்படமாய் தந்திருக்கிறார் பிரியதர்ஷன்.

1948ம் ஆண்டு சிறையிலிருந்து முகம் முழுக்க கனமான சோகத்துடன் ஒரு மழையிரவில் அழைத்து வரப்படும் நாயகன், பிரகாஷ்ராஜ், தனது கடந்த கால நிகழ்வுகளை அசைபோட்டுக் கொண்டே வருகிறார்.

திருமணம், அழகான மனைவி, மிகவும் அழகான குழந்தை, பாசமான வாழ்க்கை என ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாய் காட்சிகளினூடே வலியைக் கலந்து செல்லும் நாயகன் வேங்கடத்தின் வாழ்க்கை ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய காஞ்சிபுர நெசவாளர்களின் பட்டுப் போன வாழ்க்கையின் இழைகளை நெய்திருக்கிறது.

மகளுக்குப் பட்டு வாங்க வைத்திருந்த பணம் சகோதரியின் கணவனுக்கு வரதட்சணையாய் சென்று விட, கொஞ்சம் கொஞ்சமாய் பட்டு நூலை வாயில் நுழைத்துத் திருடி வந்து, சேமித்து, பட்டு நெய்யத் துவங்கும் வேங்கடம் திசை தெரியாத பறவையின் அழுகுரலாய் மனதுக்குள் சலனமேற்படுத்துகிறார்.

மோட்டார் வாகனத்தைப் பார்ப்பதற்கு குடும்பத்துடன் சென்று காத்திருக்கும் ஏழைத் தொழிலாளர்கள். அவர்களுக்கு முன்னால் கொஞ்சம் கூட வேகம் குறைக்க விரும்பாக கர்வம் கொண்ட முதலாளியின் வேகப் பயணம், கூலியைக் கூட்டிக் கொடுக்க மறுத்து மைசூரிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வருவேன் என கொக்கரிக்கும் முதலாளித்துவ ஆணவம், மகளின் திருமணத்துக்காக எப்படியாவது தனது போராட்டத்தை தானே நிறுத்தவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படும் இயலாமையின் கைப்பிள்ளையான நாயகன் என நெய்யப்பட்ட காட்சிகள் காஞ்சிவரத்தை வலுவடைய வைக்கின்றன.

தன் ஆயுள் காலம் முழுதும் உழைத்தும் பிரிய மனைவிக்கோ, உயிருக்கு உயிரான மகளுக்கோ ஒரு பட்டுப் புடவையை தொட்டுப் பார்க்கும் வாய்ப்பை கூட வழங்கமுடியாமல் போன ஒரு நெசவாளியின் கனவுகள் மனதை சலனப்படுத்துகின்றன.

உயிரை மட்டும் சுமந்து நகரமுடியாத ஒரு பொம்மையாய் கிடக்கும் மகளுக்கு உதவ யாருமே இல்லாமல் போக, உருகி உருகி, கண்களிலும் முகத்திலும் ஏக்கத்தைக் காட்டி, வேறு வழியின்றி சோறூட்டி மகிழ்ந்த மகளுக்கு விஷமூட்டி கருணைக் கொலை செய்கிறார் நாயகன் என படத்தை முடிக்கும் போது திகைத்துப் போகிறது மனசு.

பிரகாஷ்ராஜ் இயல்பாகச் செய்திருக்கிறார். அவரை விட பிரமாதப் படுத்தியிருக்கிறார் ஷ்ரேயா ரெட்டி.

மழைநேர வாகனப் பயணத்தை இருட்டில் படமாக்கியிருக்கும் திருவின் ஒளிப்பதிவு வியக்க வைக்கிறது. கூடவே இருட்டான படப்பிடிப்பு என்பது 1948ம் ஆண்டைய சூழலை சிரமப்படுத்தாமல் கொண்டு வர இயக்குனர் கைக்கொண்டிருக்கும் உத்தி எனவும் கொள்ளலாம். எனினும் சாபுசிரில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

இந்தப் படத்தில் நிச்சயமாய் இருந்திருக்க வேண்டிய ஒரு நபர் இளையராஜா. அவர் இல்லாமல் போன குறை படம் முழுக்க தெரிகிறது. சோகமான காட்சிகளில் ஒலிக்க வேண்டிய இசை மலையாளச் சாயலில் வலுவிழந்து போனது ஒரு குறை. ஒரு பாடலில், ஒரு மௌனத்தில், ஒரு இசைக் கோர்வையில் அழ வைக்க வேண்டிய காட்சிகள் ஏராளம் இருந்தும் இசையின் வலிமை குறைவினால் அது இயலாமல் போகிறது.

முன்பெல்லாம் பிரியதர்ஷனின் மலையாளப் படங்களெனில் எந்த விதமான விமர்சனங்களும் எதிர்பார்க்காமல் செல்வதுண்டு. அதிலும் மோகன்லாலுடன் இணைந்து பிரியதர்ஷன் இயக்கிய படங்கள் எல்லாமே குறைந்த பட்ச நகைச்சுவைக்கு உத்தரவாதம். அந்தப் படங்களின் எந்த சாயலுமே இல்லாமல் ஒரு படத்தை இயக்கும் கலையும் இயக்குனருக்கு இருக்கிறது என்பதை இந்த படம் நிரூபித்திருக்கிறது.

காஞ்சிவரம், நிஜமாய் இருக்கக் கூடாதே என பதை பதைக்க வைக்கும் ஒரு தமிழ்க்காவியம்.