Telephonic Interview (தொலைபேசி இன்டர்வியூ) TIPS

தொலைபேசி இன்டர்வியூவில் வெற்றி பெறும் வழிகளை எளிமையாக விளக்கும் வீடியோ !

தேர்வு எழுதுகிறீர்களா ?

review

மார்ச் மாதம் வந்தாலே மாணவ, மாணவியருக்குப் படபடப்பும் கூடவே வந்து தொற்றிக் கொள்கிறது. காரணம் ஆண்டு இறுதித் தேர்வு. மாணவர்கள் கொஞ்சம் சகஜமாய் இருந்தால் கூட பெற்றோரின் படபடப்பும், பரபரப்பும் எகிறிக் குதிக்கிறது.

கேபிள் இணைப்பு துண்டிக்கப்படும், சுற்றுலா, ஷாப்பிங், சொந்த பந்தங்கள் எல்லாம் தற்காலிகமாக நிறுத்தப்படும். வாசல் தாண்டுவது கூட ஆயிரம் முறை யோசித்தபின்பே அனுமதிக்கப்படும் எனுமளவில் தேர்வு காலங்கள் குடும்பங்களை தலை கீழாய்ப் புரட்டிப் போட்டு விடுகின்றன.

பயத்துக்கான காரணிகளைப் பார்த்தால், முதலாவது வந்து நிற்பது தேர்வுக்குச் சரியாகத் தயாராகாமல் இருப்பது. என்னென்ன பாடங்கள் உண்டோ அவற்றை அவ்வப்போது படிக்காமல் கடைசியில் போட்டு உருட்டுவதால் ஏற்படக் கூடிய குழப்பமே பயத்தின் முக்கியக் காரணம்.

அமெரிக்க ஜனாதிபதியாயிருந்த நிக்சன் ஒருமுறை வின்ஸ்டன் சர்ச்சிலின் மகனிடம் சர்ச்சிலின் மேடைப் பேச்சைக் குறிந்த்து வியந்து பேசிக்கொண்டிருந்தார். அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த வின்ஸ்டன் சர்ச்சிலின் மகன் சொன்னார்,’ உங்களுக்கு அந்த மேடைப் பேச்சு அருமையாக இருந்தது என்பது தான் தெரியும். அதைத் தயாரிக்க என் தந்தையாய் எடுத்துக் கொள்ளும் சிரத்தையும் பல மணி நேர பயிற்சியும் எனக்குத் தான் தெரியும்” என்று.

முறையான பயிற்சி இல்லையேல், தேர்வுகள் பயம் தரும். தேர்வுக்கான பயிற்சியை சரியான விதத்தில் செய்யவேண்டும்.

இரண்டாவது அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள் எனும் பயம். பெற்றோர் திட்டுவார்களே, நண்பர்கள் கேலி செய்வார்களே, உறவினர்கள் என்ன நினைப்பார்கள், என்னுடைய “இமேஜ்” என்னாகும்,  எனும் தேவையற்ற சிந்தனைகள் பயத்தை அதிகரிக்கின்றன.

இதற்கு முன் தோற்ற அனுபவங்கள் உண்டெனில், அல்லது குடும்பத்தில் யாரேனும் தோற்று நிகழ்ந்த கசப்பான அனுபவங்கள் உண்டெனில் இயல்பாகவே அந்தப் பயமும் வந்து தொற்றிக் கொள்ளும்.

இது தவிர உடல் நிலை சரியில்லையென்றாலும், தன்னம்பிக்கை இல்லையென்றாலும் கூடவே பயமும் வந்து விடும்.

தேர்வு எழுதுவோர் ஒன்றை மிகவும் ஆழமாக நினைவில் கொள்ளவேண்டும். தேர்வுகள் நாம் படித்திருப்பதை நினைவில் வைத்திருக்கிறோமா என்பதை சோதிக்க மட்டுமே. நமது உண்மையான திறமைகள் எல்லாம் இதில் வெளிப்படப் போவதில்லை.

தேர்வுகள் இயல்பாக அணுகப்பட வேண்டியவை. வீட்டில் நடக்கும் உரையாடல் போல அவை வெகு சகஜமானவை. அதற்காய் அதிகப்படியான அழுத்தத்தை மனதில் திணிக்கக் கூடாது. குறிப்பாக பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பதட்டப்படுத்தும் செயல்களைச் செய்யவே கூடாது.

ஊக்கம் ஊட்டுதல், தைரியமாக தேர்வை எதிர்கொள்ள வலுவூட்டுதல், நேர்மையாக தேர்வை அணுக அறிவுறுத்துதல், அவர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால்  நிறைவேற்றுதல். இத்துடன் நின்று விட வேண்டும் பெற்றோரின் பணி.

மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகும் கடைசி வாரத்தில் புதிதாக எதையும் படிக்காமல் இருப்பதே நல்லது. ஏற்கனவே படித்தவற்றை திரும்பிப் பார்க்கும் வகையிலேயே கடைசி தயாரிப்பு நாட்கள் இருக்க வேண்டும். இல்லையேல் தெரியாத பாடங்கள் கண்ணுக்கு முன்னால் மலைபோல காட்சி தந்து பயத்தை உண்டுபண்ணிவிடும்.

தேர்வு காலங்களில் அதிக நேரம் விழித்திருந்து படிப்பது, அல்லது வெகு அதி காலையிலேயே விழிப்பது போன்ற பழக்கமற்ற செயல்களை புதிதாய் செயல்படுத்தவே கூடாது. அவை உடல் நலத்தைக் கெடுத்து, நினைவாற்றலையும் மழுங்கடித்துவிடும்.

தேர்வுக் காலங்களில் மற்ற செயல்களையெல்லாம் ஒதுக்கி விட்டு முழு நேரமும் அறையிலேயே அடைந்து கிடந்து படிப்பதும் தவறு. சத்தான உணவுகளை உண்பது. சரியான உடற்பயிற்சிகள் செய்வது, அவ்வப்போது ஓய்வு எடுத்து வெளியே சென்று வருவது என எல்லா செயல்களும் வழக்கம் போல நடக்க வேண்டும். இவையெல்லாம் மூளையை சுறுசுறுப்பாய் வைத்திருக்க உதவும்.

தேர்வுக்குத் தயாராகும் போது காபி, தேனீர் போன்றவற்றை அருந்துவதைத் தவிர்த்து பழச்சாறுகள், பால் போன்றவற்றை அருந்துதல் நல்லது.

அதிக குளிரான பொருட்களை தேர்வுக் காலங்களில் குடிக்காதீர்கள். நீங்கள் எதிர்பாராத நேரத்தில் ஜலதோசமோ, காய்ச்சலோ வந்து உங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும்.

தேர்வை குறுக்கு வழியில் எப்படி வெல்வது என்பதைக் குறித்து சிந்திக்கவே சிந்திக்காதீர்கள். நேர்மையாய் தேர்வை அணுகுங்கள். குறுக்கு வழியைப் பற்றிப் பேசும் நண்பர்களை விட்டு ஒதுங்கியே இருங்கள்.

நேர் எண்ணங்களையே மனதில் கொள்ளுங்கள். எதிர்மறைச் சிந்தனைகள் அலைக்கழித்தால் உங்கள் மூளை சோர்வடையும், பலவீனமாகும்.

“உங்கள் நினைவாற்றல் அதிகரிக்க வேண்டுமா .. இதைச் சாப்பிடுங்கள், அதைச் சாப்பிடுங்கள்” என தேர்வுக் காலத்தில் நிறைய திடீர்க் கடைகள் முளைக்கும். திரும்பியே பார்க்காதீர்கள். தேர்வு மேஜிக் அல்ல. அப்படியே மருத்துவ ஆலோசனை தேவைப்பட்டால் நல்ல மருத்துவரை அணுகுவதே நல்லது.

படிக்காத பாடங்களைப் பற்றிய கவலையை விட, படித்த பாடங்களை நன்றாகப் படிப்பதிலேயே கவனம் செலுத்துங்கள். எவ்வளவு படித்திருக்கிறீர்களோ அந்த பகுதிகளிலிருந்து வரும் கேள்விகளை எதிர்கொள்ளுங்கள். படிக்காதவற்றைக் குறித்த கவலை படித்தவற்றையும் அழித்துவிடும்.

அதீத நம்பிக்கை ஆபத்து. நிஜத்தை நம்புங்கள். அதீத நம்பிக்கை வைத்ததால் கவிழ்ந்து போன வரலாறுகள் ஏராளம் உண்டு டைட்டானிக் கப்பல் உட்பட.

தேர்வுக்கு முந்தைய நாள் நன்றாகத் தூங்குங்கள். தேர்வைப்பற்றி ஏதும் நினைக்காமல் நிம்மதியாகத் தூங்குங்கள்.

தேர்வுக்கு அரை மணி நேரம் முன்னதாகவே தேர்வுக் கூடத்தை அடையும் படி திட்டமிடுங்கள். கடைசி நேரத்தில் கிளம்பி, போக்குவரத்து நெரிசலைச் சபித்து, திடீரென ஏற்படும் தடங்கல்களுக்கு எரிச்சலடைந்தால் படித்தவையும் மறந்து போகும்.

தேர்வுத்தாளில் கேள்விகள் எப்படி இருக்கும் என்பது போன்ற வடிவங்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பக்க கேள்விகள் எத்தனை, ஒரு பத்தி கேள்விகள் எத்தனை போன்ற விவரங்கள் தெரிந்திருப்பது நல்லது.

மொத்தம் எத்தனை கேள்விகள் ?  சராசரியாய் ஒரு கேள்விக்கு எத்தனை நிமிடங்கள் ஒதுக்கலாம் என்பதை பழைய தேர்வுத் தாள்களை வைத்து தேர்வுக்கு முன்னமே ஒரு முறை திட்டமிடுங்கள். இறுதியில் தெரிந்ததை எழுதவும் நேரமில்லாமல் அல்லாடும் நிலையைத் தவிர்க்கலாம்.

கேள்வித் தாளைப் பார்த்தவுடன் பயப்படாதீர்கள். இயல்பாக இருங்கள். இந்தத் தேர்வுடன் உலகம் முடிந்து விடாது என்பதை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்துங்கள். நன்றாகத் தெரிந்த கேள்விக்கான விடையை முதலில் எழுதுங்கள். அது முடிந்தவுடன் அடுத்த கேள்விக்கான பதில் தானே நினைவுக்கு வரும்.

தேர்வு எழுதும் போது நேரமிருக்குமோ இருக்காதோ எனும் பயம் இருந்து கொண்டே இருக்கும். அதைப் பற்றிக் கவலைப்படாமல் எழுதுங்கள். திட்டமிட்டு எழுதினால் அனைத்தையும் எழுதி முடித்து, எழுதியவற்றை திரும்ப வாசித்துப் பார்க்கவும் நேரமிருக்கும்.

முக்கியமாக தேர்வு அறைக்கு நுழையும் முன் மற்றவர்கள் என்ன படித்திருக்கிறார்கள், என்ன படிக்கிறார்கள் என்பதையெல்லாம் கண்டு கொள்ளாதீர்கள். அவை வீணான பதட்டத்தைத் தந்துவிடக் கூடும். கூடுமானவரை தனியே அமைதியாய் அமர்ந்திருங்கள்.

தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போதும் “ஐயோ அடுத்தவர்கள் இரண்டாவது கேள்வி எழுதுகிறார்களே, பத்து பக்கம் எழுதிவிட்டார்களே” எனும் பதட்டம் ஏதும் கொள்ளாதீர்கள். உங்கள் கேள்வித்தாளையும், விடைத்தாளையும் மட்டும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்.

மிக முக்கியமாக ஒரு தேர்வு எழுதும் போது அடுத்த தேர்வைக் குறித்து சிந்திக்கவே சிந்திக்காதீர்கள்.

தேர்வு வாழ்க்கையை வளமாக்கும் ஒரு பாதை, ஆனால் அதுவே வாழ்க்கையல்ல. வெற்றியோ தோல்வியோ அது ஒரு நிகழ்வு அவ்வளவே. நீங்கள் காரோட்டும் போது டயர் பழுதுபட்டால் டயரை மாற்ற முயல்வீர்களா ? காரையே எறிந்து விடுவீர்களா ? டயர் பழுது படுதல் என்பது ஒரு நிகழ்வு. எத்தனை முறை டயர் பழுது பட்டாலும் மாற்றிக் கொண்டு ஓடும் காரைப் போல வாழ்க்கையும் ஓடவேண்டும்.

தேர்வில் நிகழும் தோல்வி என்பது நிரந்தரத் தோல்வியல்ல. சற்றே தூரமாய் நிறுத்தி வைக்கப்பட்ட வெற்றி அவ்வளவே.

நன்றி : பெண்ணே நீ