புராஜக்ட் மேனேஜ்மென்ட் 1
*
என் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய புதிய தலைமுறைக் கல்வி வாசகர்களை மீண்டும் ஒரு தொடர் மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த முறை மிக முக்கியமான, மிகவும் பயனுள்ள ஒரு விஷயமான புராஜக்ட் மேனேஜ்மென்ட் (Project Management) பற்றி உங்களோடு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
‘அதைப்பற்றி பேச உனக்கென்ன தகுதி’ என ஒருவேளை நீங்கள் கேட்கலாம். கடந்த இருபது ஆண்டுகளாக புராஜக்ட்களிலும், புராஜக்ட் மேனேஜ்மென்டிலும் விழுந்து, புரண்டு, அடிபட்டு, கற்றுக் கொண்டு இன்று ஒரு நிறுவனத்தில் புராஜக்ட் மேனேஜ்மென்ட் குழுவை தலைமையேற்று நடத்திக் கொண்டிருப்பதை ஒரு சிறு தகுதியாகச் சொல்லலாம். எனினும் இது தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்கவேண்டிய ஒரு திறமை என்பதால், இந்த தொடரில் நானும் உங்களோடு சேர்ந்து கற்றுக் கொள்ளப் போகிறேன். எனவே இணைந்து பயணிப்போம்.
இந்த புராஜக்ட் மேனேஜ்மென்டை தமிழில் திட்ட மேலாண்மை என அழைக்கிறார்கள். எனினும் தொழில்நுட்ப தளத்தில் பெரும்பாலும் நாம் புராஜக்ட் எனும் வார்த்தையையே பயன்படுத்த வேண்டியிருப்பதால் நாமும் அதையே பயன்படுத்துவோம்.
அதென்ன புராஜக்ட் மேனேஜ்மென்ட் ? மிக எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில் புராஜக்ட்டை மேனேஜ் செய்வது என்று புரிந்து கொள்ளலாம். இதொன்றும் நமக்குப் புதிதல்ல. வீட்டம்மாக்கள் அடிக்கடி சொல்வாங்க, “கையில ஆயிரம் ரூபா தான் இருக்கு, இந்த வாரத்தை அதை வெச்சு மேனேஜ் பண்ணணும்’ ந்னு. செய்ய வேண்டிய விஷயங்களையெல்லாம் அந்த ஆயிரம் ரூபாய்க்குள்ள செய்து முடிக்கணும் என்பது தான் அதன் பொருள். இது ஒரு மேலாண்மை. இப்படி நமது தினசரி செயல்கள் பலவற்றில் இந்த மேனேஜ்மென்டின் அம்சம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
சரி மேலாண்மை இருக்கட்டும். முதல்ல புராஜக்ட் ந்னா என்ன ? இதுக்கு விளக்கம் சொல்றது ரொம்ப ஈசி. அதாவது ஒரு நிர்ணயிக்கப்பட்ட கால அளவில் செய்து முடிக்கின்ற ஒரு தனித்துவமான விஷயம் தான் புராஜக்ட். அது திட்டமிட்டிருக்கின்ற முடிவைத் தரவேண்டும். அதாவது ஒரு தொடக்கமும், ஒரு முடிவும் உடைய ஒரு பணி, குறிப்பிட்ட தனித்துவம் உடைய ஒரு முடிவைத் தருவது தான் புராஜக்ட்.
உதாரணமாக, சென்னையில் ஒரு வீடு கட்ட வேண்டும் என வைத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு புராஜக்ட் என சொல்லலாம். காரணம் ? என்ன செய்யப்போகிறோம் எனும் தெளிவு உண்டு. ஒரு தொடக்க தினம் உண்டு. கட்டி முடிக்கின்ற ஒரு முடிவு தினம் உண்டு. கட்டி முடிக்கும் போது ஒரு தனித்துவமான வீடு நம் முன்னால் இருக்கவும் செய்யும். இப்படி இந்த மூன்று விஷயங்களும் இருக்கின்ற எந்த ஒரு பணியையும் நாம் புராஜக்ட் என அழைக்கலாம்.
அது ஒரு மிகப்பெரிய ராக்கெட் செய்வதாகவும் இருக்கலாம், பள்ளிப் பிள்ளைகள் தெர்மோகோலில் செய்கின்ற மாட்டு வண்டியாகவும் இருக்கலாம். அளவுகளோ, அதிலுள்ள சிக்கல்களோ, சிரமங்களோ கணக்கல்ல.துவக்கம், முடிவு, விளைவு இவையே பிரதானம்.
இன்னும் கொஞ்சம் தெளிவாக புராஜக்ட் என்றால் என்ன என்று பார்க்க இரண்டு உதாரணங்களை எடுத்துக் கொள்வோம். புதிய மாடல் கார் ஒன்றை வடிவமைக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் வேலையை தொடங்குவீர்கள். அதை ஸ்டார்டிங் டே, துவக்க நாள் என்பீர்கள். படிப்படியாக கார் உருவாக்கும் பணி வளர்ந்து, ஒரு குறிப்பிட்ட நாளில் முடிவடையும். அதை என்ட் டே என்பீர்கள். வேலை முடிவடையும் போது ஒரு கார் நம்மிடம் இருக்கும். அதை புராடக்ட்( Product) என்பீர்கள். இப்போது ஒரு புதிய கார் வடிவமைக்கும் புராஜக்ட் முடிந்து விட்டது. இதில் கார் என்பது தயாரிப்பு ( புராடக்ட்), அதை உருவாக்கிய அந்த முழுமையான செயல்பாடு ஒரு புராஜக்ட்.
இந்த வேலைக்கு பிள்ளையார் சுழி போட்டதிலிருந்து, சுபம் போடும் வரை கண்காணித்து, ஆலோசனை நல்கி சரியான நேரத்தில் முடித்து வைக்க உதவுகின்ற நபர் தான் புராஜக்ட் மேனேஜர். இந்த தொடர்மூலம் நீங்கள் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் உங்களை ஒரு நல்ல புராஜக்ட் மேனேஜராக மாற்றும்.
சரி, இப்போது ஒரு கார் உருவாக்கியாச்சு. இனிமேல் தொடர்ந்து கார்களைத் தயாரித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு ஆயிரம் கார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதை புரடக்ஷன் பிளான்ட் செய்யும். இப்போது ஒரு சின்ன கேள்வி. அங்கே உருவாகின்ற ஆயிரம் கார்களும், ஆயிரம் புராஜக்ட்களாக இருக்குமா ? அல்லது ஒரே ஒரு புராஜக்ட்டாக இருக்குமா ? இதற்கு ஒரு பதிலை உங்கள் மனதில் குறித்துக் கொள்ளுங்கள்.
இப்போது பதில் சொல்கிறேன். நீங்கள் எந்தப் பதிலைக் குறித்து வைத்திருந்தாலும் அது தவறானதே. முதலில் ஒரு காரை உருவாக்குவது தான் புராஜக்ட். அதன் பின் அதை வைத்துக் கொண்டு தொடர்ந்து கார்களை உருவாக்கிக் கொண்டே இருப்பதை, ‘ஆப்பரேஷன்ஸ்’ சின்ன(operations) என்பார்கள். இரண்டுக்கும் இடையேயான வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னொரு உதாரணம் பார்க்க வேண்டுமெனில், ஒரு அலுவலகத்தில் வருகைப் பதிவேட்டைக் கணினிமயமாக்கலைச் சொல்லலாம். தினமும் காலையில் வந்ததும் கையொப்பம் இடுகிற வழக்கத்தை மாற்றி ஒரு மென்பொருளை உருவாக்கி எல்லாவற்றையும் கணினி மயமாக்குவது என்பது தரப்பட்ட புராஜக்ட். அதை ஒரு குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிக்கிறோம். அதன் பிறகு அந்த நிறுவனம் தொடர்ந்து அந்த மென்பொருளைப் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறது. அது புராஜக்ட்டில் வராது, அது ஆப்பரேஷன்ஸ் எனும் பிரிவின் கீழ் சென்று விடும்.
புராஜக்ட் முடியும், ஆனால் புராஜக்ட் உருவாக்கித் தருகின்ற புராடக்ட் முடிவதில்லை. அவை நீண்டகாலம் இருக்கும். டாவின்சி, மோனலிசா ஓவியத்தை வரைந்தது ஒரு புராஜக்ட். அந்த புராஜக்ட் முடிவடைந்துவிட்டது. வரையப்பட்ட ஓவியமான மோன லிசா முடிந்து போய்விடவில்லை. பாம்பன் பாலத்தைக் கட்டியது ஒரு புராஜக்ட். அந்த புராஜக்ட் முடிந்து விட்டது, ஆனால் பாலம் தொடர்ந்து செயல்படுகிறது. அதாவது புராஜக்ட் என்பது தற்காலிகமானது, புராடக்ட் என்பது நீண்டகாலம் தொடர்வது.
சரி, எல்லா எல்லா புராஜக்ட்களும் ஒரு பொருளை உருவாக்கியே தீரவேண்டும் எனும் கட்டாயமுண்டா ? இல்லை என்பது தான் பதில். அத்தகைய புராஜக்ட்களை சர்வீசஸ் புராஜக்ட்ஸ் (Services Projects ) என்பார்கள். குறிப்பாக ஒரு பணியை மேற்பார்வையிடுவது ஒரு புராஜக்ட் ஆக இருக்கலாம், ஏற்கனவே இருக்கின்ற மென்பொருளில் ஒரு பாதுகாப்பு அம்சத்தை இணைப்பது ஒரு புராஜக்ட் ஆக இருக்கலாம், அல்லது கணக்கு வழக்கு சரிபார்த்தல் ஒரு புராஜக்ட் ஆக இருக்கலாம். இவற்றிலெல்லாம் ஒரு தயாரிப்பு பொருள் கிடைக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் அவையும் புராஜக்ட் என்றே அழைக்கப்படும்.
ஏனெனில் அவையும் புராஜக்டுக்குரிய இயல்புகளில் தான் முடியும். நிர்ணயிக்கப்பட்ட கால அளவு, கொடுக்கப்பட்ட பணியின் முடிவு.
இன்று எல்லா துறைகளிலும் புராஜக்ட்களைத் திறமையாக செயல்படுத்தி முடிக்கக் கூடிய நபர்கள் தேவைப்படுகின்றனர். ஐடி துறையென்றில்லை, மெக்கானிக் துறையென்றில்லை எல்லா இடங்களிலும் திறமையான ஆட்கள் தேவைப்படுகின்றனர். ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், ஏரியாவுக்குத் தக்கபடி புராஜக்ட் மேனேஜ்மென்ட் மாறுவதில்லை. பொதுவான ஒரு நேர்த்தியான கட்டமைப்புக்குள் அடக்கிவிடலாம்.
இந்த தொடரில் நாம் பார்க்கப் போவது அந்தப் பொதுவான புராஜக்ட் மேனேஜருக்கான விஷயங்களைத் தான். இதன் மூலம் எந்தத் துறையில் வேண்டுமானாலும் பரிமளிக்கக் கூடிய திறமையை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். குறைந்த பட்சம் புராஜக்ட் மேனேஜ்மென்ட் குறித்த நல்ல புரிதலை நிச்சயம் பெற்றுக் கொள்ள முடியும்.
எந்த ஒரு புராஜக்ட்டையும் நாம் ஐந்து நிலைகளில் அடக்கி விட முடியும்.
1. தொடக்கம்
2. திட்டமிடல்
3. உருவாக்குதல்
4. கண்காணித்தல்
5. முடித்தல்
என்பவையே அந்த ஐந்து நிலைகள். இந்த ஐந்து நிலைகளைத் தாண்டி எதுவும் கிடையாது. இந்த ஐந்து நிலைகளிலும் சிறந்து விளங்க எட்டு திறமைகள் தேவைப்படுகின்றன. அவை என்னென்ன ? அதை வளர்த்துக் கொள்வது எப்படி என்பதையெல்லாம் வருகின்ற வாரங்களில் விரிவாகப் பார்ப்போம்.
( தொடரும் )