பைபிள் கதைகள் : ரூத்

யூதா நாட்டில் ஒருமுறை கடுமையான பஞ்சம் நிலவியது. மக்கள் எல்லோரும் உயிர் பிழைப்பதற்காக தங்கள் வீடுகளைக் காலிசெய்து விட்டு வளமான இடங்களை நோக்கிக் குடிபெயர்ந்து கொண்டிருந்தார்கள். எலிமேக்கு என்பவரும் தன்னுடைய மனைவி நகோமி, மற்றும் இரண்டு மகன்களோடும் தன்னுடைய சொந்த ஊரான பெத்லேகேமை விட்டு மோவாப் என்னுமிடத்திற்குக் குடிபெயர்ந்தார்.

மோவாப்பில் எலிமேக்கு குடும்பத்தினருக்குக் குறை ஏதும் இருக்கவில்லை. அவர்கள் நிறைவாக உண்டு வளமோடு வாழ்ந்து வந்தார்கள். சில ஆண்டுகள் சென்ற பின் இரண்டு மகன்களுக்கும் மோவாபிலேயே ஓர்பாள், ரூத் என்னும் இரண்டு பெண்களைத் திருமணம் முடித்து வைத்தார்கள்.

அப்போதுதான் சோதனைப் புயல் அவர்கள் வாழ்வில் கரைகடந்தது. எலிமேக்கும் அவனுடைய புதல்வர்களும் அடுத்தடுத்து இறந்து போனார்கள். நகோமியும், அவளுடைய மருமகள்கள் இருவரும் தனித்து விடப்பட்டார்கள். ஆதரவாய் இருந்த ஆண்கள் மூன்றுபேருமே இறந்து விட்டதால் அவர்கள் மிகவும் வருத்தமடைந்தார்கள்.

நகோமி தன்னுடைய மருமகள்களை அழைத்து,’ நீங்கள் உங்களுடைய வீட்டுக்குச் செல்லுங்கள். அங்கே உங்கள் குலத்தினரோடு சேர்ந்து வாழுங்கள். இளமையோடிருக்கும் நீங்கள் கணவன் இல்லாமல் எத்தனை காலம் தான் தனியாய் வாழ்வது. மீண்டும் மணம் முடித்து உங்கள் வாழ்வைப் புதிதாய் துவங்குங்கள்’ என்றாள்.

அதற்கு அவர்கள்,’ இல்லை… நாங்கள் உங்களை விட்டு எங்கும் போக மாட்டோ ம்’ என்று அழுதார்கள்.

‘அழாதீர்கள். என்னுடைய மகன்கள் இறந்ததால் நீங்கள் மிகவும் வருந்துகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் வளமானதாக அமைத்துக் கொள்வது தான் முறை.’ என்றாள்.

அவர்களோ,’ இல்லை நாங்கள் உங்களோடு தான் இருப்போம்’ என்றார்கள்

மருமகள்களுடைய பாசத்தைக் கண்ட நகோமியின் கண்களின் கண்ணீர் நிறைந்தது. ‘ உங்கள் பாசத்தை எண்ணி நான் பெருமைப் படுகிறேன். ஆனாலும் எனக்கு வேறு பிள்ளைகள் இல்லை. இருந்திருந்தால் உங்களுக்கு அவர்களை மணமுடித்து வைத்திருப்பேன். இனிமேல் என்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. அப்படியே நான் பெற்றுக் கொண்டாலும், அவர்கள் வளர்ந்து திருமணவயதாகும் வரைக்கும் நீங்கள் காத்திருந்தால் உங்களுடைய இளமை தான் வீணாகும். எனவே பிடிவாதம் பிடிக்காமல் போய் வாருங்கள். போய் வாழுங்கள்.’ என்றாள்.

ஓர்பாள், மாமியாரின் பேச்சைக் கேட்டாள்,’ எனக்கு விருப்பமில்லை. ஆனாலும் உங்களுடைய அறிவுரையை ஏற்கிறேன். நான் என்னுடைய வீட்டுக்குப் போகிறேன்.’ என்று சொல்லி நகோமியிடம் ஆசிவாங்கிக் கொண்டு தன் வீட்டுக்குப் புறப்பட்டாள்.

ஆனால் ரூத் போகவில்லை. ‘ நீர் என்னுடைய மாமியார். இனிமேல் உங்கள் குடும்பம் தான் என் குடும்பம். உங்கள் இனம் தான் என் இனம். உங்களோடு வந்து, உங்களோடு வாழ்ந்து, உங்களோடு இறந்து போவேன்’ என்றாள்.

நகோமி எவ்வளவோ வற்புறுத்தியும் ரூத் மாமியாரை விட்டுப் போக மறுத்துவிட்டாள். எனவே நகோமி ரூத்தையும் அழைத்துக் கொண்டு தன்னுடைய சொந்த ஊரான பெத்லேகேமிற்கு வந்தார். அப்போது யூதா நாட்டில் நிலவிவந்த பஞ்சம் விலகியிருந்தது. செழிப்பான நிலங்களில் எல்லாம் வாற்கோதுமை அறுவடை நடந்து கொண்டிருந்தது.

பெத்லேகேமில் நுழைந்தவுடன் எல்லோரும் நீண்ட நாட்கள் கழிந்து வந்திருந்த நகோமியைச் சந்தித்து நலம் விசாரித்தார்கள். அவளோ, ‘ இனிமேல் என்னை நகோமி என்றழைக்காதீர்கள். மாரா என்றழையுங்கள். அந்த அளவுக்கு கஷ்டத்தை என் வாழ்வில் சந்தித்து விட்டேன். கடவுள் எனக்கு ஏராளமான சோதனைகளைத் தந்தார்’ என்றாள். மாரா என்றால் கசப்பு என்பது பொருள். மக்கள் எல்லோரும் நகோமியின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சோகத்தை அறிந்து மிகவும் வருந்தினார்கள்.

ரூத், மாமியாரிடம் மிகவும் அன்பு கொண்டு அவளை ஒரு தாய் போல பராமரித்து வந்தாள்.
ஒருநாள் ரூத் மாமியாரை நோக்கி,’ அம்மா… நான் இன்னும் எத்தனை நாள் தான் தனியே வீட்டில் உங்களுக்குப் பாரமாய் இருப்பது. இன்று நான் வயல் வெளிக்குப் போகிறேன். அங்கே நல்ல மனம் படைத்த எவருடைய வயலிலாவது போய் உதிரும் கோதுமைகளைப் பொறுக்கி வருகிறேன். நீங்கள் அதற்கு அனுமதிக்க வேண்டும்’ என்றாள்.

அந்தக் காலத்தில் ஏழைகள் அறுவடைக் காலங்களில் வயல்வெளிகளுக்குச் சென்று தரையில் உதிரும் தானிய மணிகளை வயலின் சொந்தக்காரரின் அனுமதியோடு சேகரித்துக் கொள்வது வழக்கம். நகோமி தன்னுடைய வறுமை நிலையையும், உதிரும் கதிர்களைப் பொறுக்கி வாழும் நிலைக்கு தன்னுடைய மருமகளைக் கொண்டு வந்து விட்டதையும் நினைத்து வருந்தினாள். ஆனாலும் அவளால் எதையும் மறுத்துப் பேச முடியவில்லை. அனுமதியளித்து அனுப்பிவைத்தாள்.

ரூத் வயல்வெளிக்குச் சென்றபோது ஒரு வயலில் வாற்கோதுமை அறுவடை நடந்துகொண்டிருந்தது. அவர் அங்கு சென்று அறுவடையாளர்களின் பின்னே நடந்து தரையில் உதிரும் ஒருசில கோதுமை மணிகளைப் பொறுக்கிச் சேர்த்துக் கொண்டிருந்தார். அது தன்னுடைய மாமியாரின் நெருங்கிய உறவினர் போவாசு என்பவருடையது என்பதை ரூத் அறிந்திருக்கவில்லை.

மாலையில் போவாசு தன்னுடைய நிலத்தில் அறுவடை எப்படி நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக வந்தார். வயலின் அருகே நிழலில் ஒரு அழகான இளம் பெண் படுத்து இளைப்பாறிக் கொண்டிருப்பதைக் கண்டு வேலையாட்களை அழைத்தார்.
‘யாரிந்தப் பெண் ? நான் இதுவரை பார்த்ததேயில்லையே ?’

‘தலைவரே… இவள் நகோமியின் மருமகள். அவர்கள் நீண்டகாலமாக வெளியூரிலே தங்கியிருந்து விட்டு சமீபத்தில் தான் மீண்டும் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்கள்’ வேலையாட்கள் கூறினர்.

‘ஓ.. நகோமியின் மருமகளா ? அவளுடைய கணவன் எலிமேக்கு என்னுடைய நெருங்கிய சொந்தக்காரனாயிற்றே. அவன் எப்படி இருக்கிறான் ? ‘ போவாசு விசாரித்தான்

‘தலைவரே… எலிமேக்கு இறந்து விட்டார்’

‘ஐயோ… நல்ல ஒரு மனிதர். அவர் இறந்து விட்டாரா ? அப்படியானால் ரூத்தும் , நகோமியின் மகன்களும் தான் இங்கே இருக்கிறார்களா ?’

‘இல்லை. எலிமேக்கின் இரண்டு மகன்களும் கூட இறந்து விட்டார்கள். இப்போது ரூத்தும், நகோமியும் மட்டும் தான் தனியே தங்கியிருக்கிறார்கள்’ வேலையாட்கள் விவரித்தனர்

போவாசு அதிர்ந்தார். ‘ ஐயோ… பாவம். கணவன் இறந்தால் ரூத்தை அவளுடைய சொந்த வீட்டுக்கு அனுப்பியிருக்கலாமே. பாவம் இந்தப் பெண்ணும் இங்கே வந்து கஷ்டப்பட வேண்டுமா ?’ போவாசு வருந்தினார்.

‘இல்லை தலைவரே… அந்தப் பெண் கணவனின் இனத்தின் மீதும், தன்னுடைய மாமியாரின் மீதும் அளவுகடந்த மரியாதை வைத்திருக்கிறாள். இனிமேல் இந்த குலம் தான் என் குலம் என்று சொல்லி இங்கே வாழ வந்திருக்கிறாள். நகோமி எவ்வளவோ வற்புறுத்தியும் ரூத் அவளைவிட்டு விட்டுப் போக மறுத்துவிட்டாள்’ என்றனர் வேலையாட்கள்.

போவாசு, ரூத்தின் மன உறுதியையும், நல்லெண்ணத்தையும் நினைத்து வியந்தார். அவர் வேலையாட்களிடம்,’ இவள் என்னுடைய உறவினர் மகள். இவளைக் காப்பாற்றும் கடமை எனக்கு உண்டு. எனவே நீங்கள் கதிரறுக்கும் போது நிறைய கதிர்களை உருவி விடுங்கள். அவள் அதைப் பொறுக்கிக் கொள்ளட்டும்’ என்றார்.

சொல்லிவிட்டு ரூத்தை எழுப்பினார்.
‘ ரூத்… நான் தான் இந்த நிலத்தின் உரிமையாளன். உன்னுடைய மாமனாரின் நெருங்கிய உறவினர். உன்னைப் பற்றி நான் நிறைய கேள்விப் பட்டேன். உன்னுடைய நல்லெண்ணத்தை நினைத்து மகிழ்கிறேன். இனிமேல் நீ வேறெங்கும் போய் கதிர் பொறுக்க வேண்டாம். என்னுடைய வயலில் மட்டும் கதிர் பொறுக்கு. இங்குள்ள வேலையாட்களோ, கண்காணிப்பாள்ர்களோ உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள்’ என்றாள்.

ரூத் அவருடைய கால்களில் விழுந்து,’ அயல்நாட்டுப் பெண்ணான என்னைக் கூட சொந்த இனப் பெண்ணைப் போல பாசமாய் நடத்துகிறீர். உங்களுக்கு மனமார்ந்த நன்றி’ என்றாள்

போவாசு அன்றைய மாலை உணவை அவளோடு அந்த வயலோரத்தில் பகிர்ந்து உண்டார்.

அதன் பின் போவாசு கிளம்பினார். வேலையாட்கள் அவர் சொல்லியிருந்தபடி ஏராளமான கதிர்களை வயலில் உருவி விட்டனர். ரூத் மறுபடியும் கதிர் பொறுக்க வயலில் இறங்கியபோது வயல் முழுதும் ஏராளம் கதிர்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டாள். எல்லாவற்றையும் பொறுக்கிச் சேகரித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் தன்னுடைய வீடு திரும்பினாள்.

ரூத் நடந்தவற்றையெல்லாம் தன்னுடைய மாமியாரிடம் சொல்ல, மாமியார் மகிழ்ந்தார்.
‘ மகளே கவலைப்படாதே… போவாசு நம் நெருங்கிய உறவினர் தான். எனவே நீ தைரியமாக அவருடைய நிலத்தில் மட்டும் சென்று வா. மற்ற இடங்களுக்குப் போனால் உன்னுடைய அழகைக் கண்டு ஆண்கள் உன்னை பலவந்தம் செய்யக் கூடும். உனக்குப் பாதுகாப்பு இருக்காது’ என்றாள்.

ரூத்தும் மாமியாரின் சொற்படி போவாசின் நிலத்தில் மட்டுமே சென்று வந்தாள்.

சில நாட்கள் கடந்தபின் நகோமி ரூத்தை அழைத்து,’ ரூத்… நீ நன்றாகக் குளித்து நல்ல தூய்மையான ஆடையை உடுத்திக் கொண்டு, நறுமணத்தைலங்களை உடலெங்கும் பூசிக் கொண்டு இன்றிரவு களத்துக்குப் போ. போவாசு வாற்கோதுமையைத் தூற்றிக் கொண்டிருப்பார். அதன் பின் அவர் உறங்குவதற்காகக் கூடாரத்துக்குள் போவார். கொஞ்ச நேரம் கழிந்து நீயும் அவருடைய கூடாரத்துக்குள் போய் அவருடைய கால்களை மூடியிருக்கும் போர்வையை விலக்கிவிட்டு அங்கேயே படுத்துக் கொள்’ என்றாள்.

ரூத் அவ்வாறே செய்தாள்.

இரவில் கண்விழித்த போவாசு தன்னுடைய கால்களின் அருகே அழகுப் பதுமை ரூத் படுத்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.

‘யார் நீ…. எப்படிக் கூடாரத்துக்குள் வந்தாய்’ என்று சினந்தார்.

‘மன்னியுங்கள். நான் தான் ரூத். உங்களுக்கு என்மீது உரிமை உண்டு. நீங்கள் விரும்பினால், இந்தப் போர்வையை எடுத்து என் மீது போர்த்துங்கள் அப்போது நான் உங்கள் உடமையாவேன்’ என்றாள்.

போவாசு மகிழ்ந்தார்.’ ரூத். நீ இளமையானவள், அழகானவள். என்னிடமோ இளமையும் அழகும் இல்லை’ என்றார்.

‘இளமையும், அழகும் எனக்கு முக்கியமில்லை. உங்களுக்குத் தானே என்மீது அதிக உரிமை’ என்றாள் ரூத்.

‘ரூத், இளமையானவர்களைத் தேடிப் போகாமல், உரிமையுள்ளவனைத் தேடிவந்த உன்னை நினைத்து நான் மகிழ்கிறேன். ஆனாலும் என்னைவிட உன்மீது அதிக உரிமையுள்ளவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் முதலில் பேசுவது தான் முறை. அவனிடம் நான் உன்னைப் பற்றிப்பேசுகிறேன். அவன் அழகும் இளமையும் நிறைந்தவன். ஒருவேளை அவன் உன்னை நிராகரித்தால் நான் மிகவும் மகிழ்வோடு உன்னை ஏற்றுக் கொள்வேன்’ என்றார். ரூத் சம்மதித்தாள். மறுநாள் விடியும் முன் யார் கண்ணிலும் படாமல் கூடாரத்தை விட்டு வெளியேறினாள்.

போவாசு, ரூத் மீது அதிக உரிமையுள்ள அந்த மனிதரைச் சந்தித்தார்.

‘நகோமி தன்னுடைய சொத்தில் ஒருபாகத்தை விற்கப் போகிறாராம் வாங்குகிறீரா ?’ போவாசு கேட்டார்.

‘கண்டிப்பாக வாங்குவேன். எனக்குத் தான் அதிக உரிமை’ என்றார் அவர்.

‘அத்தோடு கூடவே அவருடைய மருமகள் ரூத்தையும் நீரே மணமுடித்துப் பாதுகாக்க வேண்டும்’ போவாசு சொன்னார்.

‘ஐயோ… அதெல்லாம் முடியாது. வேறு குலத்தைச் சேர்ந்த அவளையெல்லாம் என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது. நிலத்தை மட்டுமென்றால் வாங்குவேன். கூடவே கிடக்கும் ரூத் எனக்குத் தேவையில்லை’ என அந்த நபர் மறுத்தார்.

‘இல்லை… நீர் மறுப்பதாய் இருந்தால் இரண்டையும் மறுக்கவேண்டும். அப்படி மறுத்தால் அந்தக் குடும்பத்தின் மீது உங்களுக்கு இனிமேல் எந்தவிதமான உரிமையும் இருக்கப் போவதில்லை. அதற்கு உடன்பட்டால் ஊர் பெரியவர்கள் முன்னிலையின் உம்முடைய செருப்பைக் கழற்றி என் கைகளில் வையும்’ என்றார்.

அவர் சம்மதித்து, ஊர்ப் பெரியவர்களின் முன்னிலையில் தன்னுடைய செருப்பைக் கழற்றி போவாசின் கைகளில் கொடுத்தார். அப்படிச் செருப்பைக் கழற்றிக் கைகளில் வைத்தால் இனிமேல் அந்தப் பொருளில் எனக்கு எந்த உரிமையும் இல்லை என்பது பொருள்.

போவாசு மகிழ்ந்தார். ரூத்தை தன்னுடைய மனைவியாக ஏற்றுக் கொண்டார். தன் கணவனுடைய குலத்தின் மீதும், குடும்பத்தின் மீதும் பற்றுக் கொண்டிருந்த ரூத்துக்கு அனைத்து செல்வங்களையும் கொடுத்து நன்றாகக் கவனித்துக் கொண்டார்.

தமிழிஷில் வாக்களிக்க…