நண்பர்கள்

 

Image result for friends gif

உலக வாழ்வின்
உயிர் நாடிகள்.

ஈரமான என்
மெல்லிய சிறகுகளை
உலர்த்தி என்னை
உயரப்பறத்தியவர்கள்.

வேதனை வெயில்
வீசும்போது
ஈர நேசத்தை
என்னுள் தெளிப்பவர்கள்.

மகிழ்ச்சியின்
மறுபதிப்புகள்.

சிதறிய சொற்களுக்குள்
சிரிப்பைப்
புகுத்துபவர்கள்.

வார்த்தைச் சாரலில்
வாழ்க்கைக் காயத்துக்கு
களிம்பு
பூசுபவர்கள்.

நான்
நண்பர்களை
நேசிக்கிறேன்.

என் பாதங்களுக்கு
புதுப்பாதைகளை
அறிமுகப்படுத்தியவர்கள்
நீங்கள்.

என் கண்களுக்கு
பார்வையை
பரிசளித்தவர்கள்
நீங்கள்.

என் கரங்களுக்கு
கவிதை எழுத
கற்றுக்கொடுத்தவர்கள்
நீங்கள்.

அமாவாசை இரவில்
கரம்பிடித்து
என்னை
சூரியத்தெருவுக்குள்
சுவடுபதிக்கச் செய்தவர்கள்
நீங்கள்.

உங்கள்
நினைவுகளில் தான்
என்
நாட்கள் நகர்கின்றன.

நட்பு மட்டும்
எதிர்பார்ப்புகள்
ஏதுமில்லா
அதிசய நேசம்.

நட்புக்குள்
உலகம் சுற்றுகிறது.

தாயின் நேசம்
தந்தையின் பாசம்
பிறப்பின் பந்தம்

காதலியின் நேசம்
உறவினர் பாசம்
தொடர்வின் பந்தம்.

ஆனால்.

உங்கள்
அன்பு மட்டும்
அனைத்தும் அடங்கியது !
எதுவும் இல்லாமல்!!!

நண்பன் என்பவன்..

செல்லுமிடமெல்லாம்
குட்டிகளைக் கவ்விச் செல்லும்
பூனையாய்
தூக்கித் திரிகிறாய்
உன் வீர தீர பராக்கிரமங்களை.

அமைதியின் சாலையில்
அதிசயமாய் வரும்
தூரத்து நண்பன் போல
எப்போதேனும் வாய்க்கும்
சுகமான இளைப்பாறுதல்களில்
சிலுவை சாய்க்கிறாய்.

உன்னை
செயற்கைப் புன்னகையுடன்
எதிர்கொண்டு எதிர்கொண்டே
என்
நிஜமான புன்னகை
மறந்து போய் விட்டது.

எப்போது தான்
புரிந்து கொள்வாய் ?
சந்திப்பு என்பது
பெருமைகளைப் பறைசாற்றும்
பொதுக்கூட்டமல்ல என்பதை ?