
அந்த
சாம்பல் நிறக் குருவி
குஞ்சுகளைக்
கூட்டிக் கொண்டு
கூட்டுக்கு வெளியே
பறக்கத் துவங்கியிருக்கிறது.
இந்த சன்னல் திரையின்
கண்கள் வழியே தெரிகிறது,
ஈரத் தரையின்
புற்கள் இடையே
அதன்
அலகுப் பற்கள் அலையும் அழகு,
காணும் பட்டத்தின் பின்
நீளும் வாலாய்,
தாயின் பின்னால்
குஞ்சுகள் தத்தும் அழகு,
உச்சரிக்கும் பூவாய்,
எச்சரிக்கும் காற்றாய்,
தாயை
நச்சரிக்கும் குரலாய்,
காதில் பூச்சொரியும்
கீச்சுக் குரலழகு,
அதன்
சிறகுச் சூட்டில் சிலநேரம்
சிக்கிக் கிடக்கும்
என் குளிர் கண்கள்.
சில காலம் முன்
சுள்ளி சேகரித்த
காலத்திலேயே எனக்குள்
அது
கூடு கட்டிக் குடியேறி விட்டது.
இப்போது,
தேனீர்,
அலுவல்,
குருவிக் கவனிப்பென்பது
வழக்கமான பழக்கமாகிவிட்டது.
நான்
பேசியதில்லை.
ஆனாலும்
பிரிய நண்பன் போல்
உள்ளுக்குள் தோன்றல்.
அது பேசும் பாஷைகளில்
தமிழை விட
தொன்மை வாடை.
அதன் அழகுக் கழுத்தில்
மலரை விட
மென்மை ஆடை.
மனசில் சிதறும் தானியங்களை
அவை
தரையில் அமர்ந்து
கொத்துகின்றன.
அவை கொத்தித் தின்னும்
அழகில்
என்
மனசின் தானியங்கள்
முளை விடுகின்றன.
அதன்
சத்தங்களின் சரணாலயமாய்
என்
நினைவுச் செடியின்
நீண்ட கிளைகள்.
மனம் மட்டும்
கவனமாய் கவலைப்படும்.
நாளை
சிட்டுக்கள் மீண்டும் வருமோ ?
இல்லை ஏதேனும்
வேடந்தாங்கலை
வேண்டிச் செல்லுமோ ?
*
: சேவியர் கவிதைகள் காவியங்கள் நூலிலிருந்து.
Like this:
Like Loading...