கவிதை : மகன் தந்தைக்காற்றும்….

அப்போதெல்லாம்
ஏதேனும் ஓர்
கதையுடன் வருவார் அவர்

வெள்ளைச் சட்டையில்
மையுடனும்,

புதிய வேட்டியில்
சகதிக் கைப்பதிவுடனும்,

கசங்கிப் போன
எச்சில் காலருடனும்…

எப்போதும்
சிலிர்த்துக் கொண்டே சொல்வார்
மழலை மகனின்
சில்மிஷக் கைரேகைக் கதைகளை
விழிகளில் பொங்கி வழியும் பெருமிதங்கள்.

குதிகால் ஓட்டை விழுந்த
ஒரு சோடிச் செருப்புடன்
படிப்பு, வேலையென
மகனுக்காய்
உலகைச் சுற்றினார் பின்னர்.

இப்போது
முதியோர் இல்ல
முற்றங்களில் அமர்ந்து,

.
முதுகில் விழுந்த
மகனின்
உதைகளைப் பற்றி விம்மும் அவருடைய
வயதான
விழிகளில் கொட்டுகின்றன
பேரலையின் அழுகுரல்கள்.