How to Win Interviews ( இன்டர்வியூவில் வெல்லலாம் )

இன்டர்வியூகளில் வெற்றி பெறுவது எப்படி என்பதை என்பதை எளிமையான தமிழில் விளக்கும் வீடியோ.

பாருங்கள்..பகிருங்கள்.

 

 

Group Discussion ( குழு உரையாடல் )

குரூப் டிஸ்கஷன் எனப்படும் குழு உரையாடல் மிக முக்கியமான ஒரு தேர்வு முறை. இந்த கட்டத்தில் வெற்றி பெறுவது மிகவும் எளிது ! அதற்கு சில வழிகள் இருக்கின்றன. அவை என்ன என்பதை அனுபவ பாடத்திலிருந்து விளக்கும் ஒரு வீடியோ இது ! தமிழில் !

பாருங்கள்..பயனடையுங்கள்..பகிருங்கள்

 

Telephonic Interview (தொலைபேசி இன்டர்வியூ) TIPS

தொலைபேசி இன்டர்வியூவில் வெற்றி பெறும் வழிகளை எளிமையாக விளக்கும் வீடியோ !

சின்ன விஷயங்களைக் கவனியுங்க

Image result for Communication Skills

சின்னச் சின்ன விஷயங்கள் பல நேரங்களில் பெரிய பெரிய பாதிப்புகளை உருவாக்கி விடும். தவறி விழுந்த ஒரு சொல் பல குடும்பங்களை உடைத்திருக்கிறது. சின்னச் சின்ன கவனக் குறைவு மிகப்பெரிய விபத்துகளை உருவாக்கியிருக்கிறது. அதே போல, வேலை விஷயத்திலும் வேலை கிடைக்குமா, இல்லையா என்பதை முடிவு செய்வது பெரும்பாலும் சின்னச் சின்ன விஷயங்கள் தான். எனவே எதையும் அலட்சியமாய் எண்ணாமல் ரொம்ப கவனமாய் இருங்கள்.

 இன்டர்வியூவுக்காக ஒரு நிறுவனத்துக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்த நபர்கள் அந்த நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. குறிப்பிட்டுக் கேட்டால் ஒழிய அதைப்பற்றி நீங்கள் இன்டர்வியூவில் பேச வேண்டாம். “என்னோட மாமா தான் இங்கே மேனேஜரா இருக்கார்” போன்ற முந்திரிக் கொட்டை வாசகங்கள் தவிர்க்கப் பட வேண்டியவை.

இப்படிப் பேசுவது உங்களுடைய வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என நீங்கள் நினைத்தால் அந்த நினைப்பைக் கொண்டு போய் கடலில் போடுங்கள். அது எதிர் விளைவையே உருவாக்கும். நீங்கள் சிபாரிசு செய்ய முயல்கிறீர்கள் – என்பது அது சொல்லும் முதல் செய்தி. உங்களுக்குத் தன்னம்பிக்கை இல்லை,எனவே இன்னொரு ஊன்று கோல் தேடுகிறீர்கள் என்பது இன்னொரு செய்தி.

ஒருவேளை இன்டர்வியூ எடுக்கும் நபருக்கும் உங்கள் உறவினருக்கும் ஒத்து வராது என்று கூட சூழல் இருக்கலாம். “ஓ.. இவன் அவனோட ஆளா, அப்போ குடுக்கக் கூடாது” என்று கூட நினைக்கலாம். எது எப்படியோ, இத்தகைய விஷயங்களைத் தவிருங்கள். ஒருவேளை அவர்களாகவே கேட்டால் சொல்லுங்கள், அது தான் நேர்மை !

ரெஃப்ரன்ஸ் கேட்பார்கள். ஒன்றிரண்டு பேருடைய பெயர், விலாசம் போன்றவை. கவனமாய்த் தேர்ந்தெடுங்கள். அந்த நபர்கள் உங்களைப் பற்றி அறிந்தவர்களாக, உங்களைப் பற்றி நல்லவிதமாய் சொல்பவர்களாக இருக்க வேண்டியது அவசியம். கற்றறிந்தவர்கள், இதே போன்ற ஒரு வேலைச் சூழலில் இருப்பவர்களெனில் நல்லது. இன்னும் குறிப்பாக, போன் பண்ணினால் எடுத்துப் பேசக்கூடியவர்களாக இருக்கட்டும்.

பெர்ஃப்யூம்கள் எல்லோருக்கும் புடிப்பதில்லை. சிலருக்கு அது ரசனை, சிலருக்கு அது தலைவலி.  இன்டர்வியூ நடத்துபவருக்கு அந்த ஸ்மெல் பிடிக்கவில்லையெனில் எல்லாம் போச்சு. உங்களை சீக்கிரம் கிளப்பி விடுவதிலேயே குறியாகி விடுவார்கள். போடவேண்டுமெனில், ரொம்பவே மைல்ட் ஆக போடலாம். வியர்வை நாற்றமெல்லாம் வராது எனும் சூழல் இருந்தால் சென்ட் சமாச்சாரங்களை முழுமையாகவே தலை முழுகிவிட்டு இன்டர்வியூவுக்குச் செல்லலாம்.

இன்டர்வியூ நடத்துபவரை உயர்ந்தவராகவும், உங்களை ரொம்பத் தாழ்ந்தவராகவும் நினைக்க வேண்டாம். அவரை உங்கள் நண்பரைப் போலப் பாவித்துப் பேசலாம். அது இயல்பாகவும், தன்னம்பிக்கையாகவும் உங்களைப் பேச வைக்கும். ஓவர் மரியாதை குடுப்பதும் தவறு, ஓவர் உரிமை எடுத்துப் பேசுவதும் தவறு.

மேனரிசங்களைக் கவனியுங்கள். மூக்கை நோண்டுவது, காதை சுரன்டுவது போன்ற விஷயங்களை விட்டு விடுங்கள். அவையெல்லம உங்களுடைய பெயரைக் கெடுக்கும் காரணிகள்.

நம்பினால் நம்புங்கள். இன்டர்வியூவில் முதல் 15 வினாடிகள் மிக முக்கியமானவை. உங்களுடைய தன்னம்பிக்கையான பார்வை, கை குலுக்கல், மெல்லிய புன்னகை, நேராகப் பார்த்துப் பேசும் தெளிவு இவை உங்களிடம் இன்டர்வியூ நடத்துபவரை வசீகரிக்கும். முதல் வசீகரம் வெற்றிக்கான வரவேற்புக் கம்பளம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

குழுவாக இணைந்து பணியாற்றுவது உங்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்பு. அதற்கு நட்பான அணுகுமுறை மற்றும் உங்கள் பேச்சில் அந்த வாசனை வீச வேண்டியது அவசியம். குழுவாக பணியாற்றிய அனுபவங்கள் போன்றவற்றை கவனத்தில் வைத்திருந்து பேசலாம். அல்லது குழுவாகப் பணியாற்றுவதில் உங்களுக்கு உள்ள விருப்பத்தைக் குறித்துப் பேசலாம்.

இருக்கையில் எப்படி அமர்கிறீர்கள் என்பது முக்கியம். நேராக முன்னோக்கிச் சாய்ந்தது போல் அமர்வது உங்கள் ஈடுபாட்டைக் காட்டும். பின்னோக்கிச் சாயவேண்டாம் என்பது உளவியல் பாடம். கண்ணைப் பார்த்துப் பேசுங்கள். ஆனால் முறைக்க வேண்டாம். அவ்வப்போது கண்களை விட்டு பார்வையை விலக்கலாம், அப்படி விலக்கும் போது குனிந்து பார்க்காமல் இருப்பது நல்லது !

நல்ல ஆடை அணிவது, நல்ல ஷூ அணிவது, கைவிரல் நகங்களை தூய்மையாய் வைத்திருப்பது, ஆண்களெனில்  ஒழுங்காக ஷேவ் செய்வது போன்றவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்.

அதீத மேக்கப் ஆபத்து ! லிப்ஸ்டிக்கை அதிகமாய்ப் போடுவது, ஐப்ரோவை அடிக்கும்படி வைப்பது போன்றவையெல்லாம் தேவையற்றவை. உளவியல் ரீதியாக தன்னம்பிக்கைக் குறைபாட்டையே இவை வெளிப்படுத்துகின்றன. திறமையாய் சாதிக்க முடியாததை வசீகரத்தால் வீழ்த்த முயல்வது இது. பெரும்பாலும் தோல்வியே கிடைக்கும்.

நிறுவனத்துக்கு நீங்கள் என்ன பங்களிப்பைச் செய்ய முடியும் என்பதை இன்டர்வியூவில் வெளிப்படுத்துங்கள். கூடவே நிறுவனத்தில் இலக்கும், உங்கள் இலக்கும் ஒரே நேர்கோட்டில் இருப்பதைக் குறிப்பிடுங்கள். இவையெல்லாம் உங்களை ஸ்பெஷலாகப் பார்க்க வைக்கும்.

இன்டர்வியூவின் முடிவு முக்கியம். சூழல் அனுமதித்தால் கடைசியாக ஒருமுறை உங்கள் பலங்களை சுருக்கமாக இரண்டு நிமிடங்களில் மீண்டும் ஒரு முறை சொல்லலாம். மறக்காமல் நன்றி சொல்லிக் கைகுலுக்கி விடை பெறுங்கள்.

எக்காரணம் கொண்டும் இன்டர்வியூவில் கண்ணைக் கசக்காதீர்கள். “இந்த வேலை இல்லேன்னா என்னோட குடும்பமே நடுத்தெரு…. “ போன்ற சென்டிமென்ட் காட்சிகள் பயனளிக்காது.

ஒருவேளை உங்களுடைய முக்கியமான ஒரு திறமையைப் பற்றி பேசும் வாய்ப்பு வரவில்லையேல், நீங்களாகவே சொல்லலாம். “ஒரு தகவலுக்காகச் சொல்கிறேன்.. எனக்கு… “ என ஆரம்பித்துச் சுருக்கமாக உங்கள் திறமை பற்றிச் சொல்லலாம்.

நிறுவனம் ஏதேனும் பிரச்சினைகளில் இருக்கிறதா என்பதை இன்டர்வியூவுக்கு முன்னதாகவே கண்டு பிடியுங்கள். அதைத் தீர்க்கவோ, அது தொடர்பான ஏதேனும் விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவோ வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் பேசலாம். அது உங்கள் மதிப்பை உயர்த்தும்.

“சம்பளம் எவ்ளோ எதிர்பார்க்கிறீங்க” எனும் கேள்வி கேட்கப்பட்டால் அது குறித்து உங்களுக்குத் தெரியாதெனில் நீங்கள் அவர்களையே கேட்கலாம். “இந்த வேலைக்கு நிறுவனம் என்ன சம்பளம் நிர்ணயித்திருக்கிறது” என்பது போன்ற கேள்வி. ஒரு குறிப்பிட்ட எண்ணைச் சொல்லாமல் இருப்பது உசிதம். சொன்னாலும் தப்பில்லை.

இன்டர்வியூவில் கலந்து கொள்ளும்போது சூயிங்கம் மெல்வது, உணவு மணத்தோடு போவது போன்றவற்றையெல்லாம் தவிர்த்து விடுங்கள்.

எக்காரணம் கொண்டும் உற்சாகம் இல்லாதவராய் இருக்கவே இருக்காதீர்கள். ஒரு இன்டர்வியூவிலயே உற்சாகமா இல்லாதவனை வேலைக்கு யாரும் எடுப்பதில்லை. உற்சாகமாய் இருங்கள்.

எதையும் குற்றம் சுமத்திப் பேசாதீர்கள். அப்படியே ஏதெனும் இருந்தால் கூட, “சம் சேலஞ்சஸ்…” , “சில மாற்றுக் கருத்துகள்” என்பன போல பட்டும் படாமலும் சொல்லிக் கடந்து போகலாம்.

இன்டர்வியூவின் போது போனை சுவிட்ச் ஆஃப் செய்து விடுங்கள். இடையில் உங்கள் செல்போன் அலறுவதோ, உறுமுவதோ, டிங் டிங் என தட்டுவதோ வேலைக்கு வேட்டாகி விடக் கூடும்.

எந்த வேலைக்கான இன்டர்வியூ என தெரியாமலேயே சிலர் வருவதுண்டு. இது தேர்வாளர்களிடம் அதிருப்தியைத் தான் உருவாக்கும். என்ன நிறுவனம் என்ன வேலை என்பதைப் பற்றி தெரிந்து வைத்திருங்கள்.

தனிப்பட்ட விஷயங்களை ரொம்ப பேச வேண்டாம். குடும்பம், ஊர், பள்ளிக்கூடம், சொந்தக்காரங்க என நீட்டி முழக்காதீர்கள். அதே போல, “ஒங்க சொந்த ஊரு எது சார்” போன்ற பர்சனல் கேள்விகளை நீங்கள் தேர்வாளர்களிடமும் கேட்காதீர்கள்.

ரெஸ்யூமில் பொய்யான விஷயங்களைப் போடாதீங்க. தெரிந்ததை மட்டும் போடுங்கள். தெரியாதவற்றைக் கற்றுக் கொள்ள முயலுங்கள். பொய்யாய் சொல்லி வேலையில் சேர்வதை விட நேர்மையாய் இருந்து வேலையைத் தேடுவதே நல்லது.

எது உங்களுக்குப் பிடித்தமான வேலை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கட்டும், “எது குடுத்தாலும் செய்வேங்க..” என்று சொல்வது பலனளிக்காது.

ஏதாச்சும் கேள்வி கேட்டால் “அதெல்லாம் ரெஸ்யூம்ல இருக்கு” என்று சொல்லாதீர்கள். அதைப் பற்றி சுருக்கமாக, தெளிவாகப் பேசுங்கள்.  எதையும் ஒப்பிப்பது போலப் பேசாதீர்கள். தயாராக்கி வைக்கும் கேள்விகளைக் கூட இயல்பாய் பேசுவது போல பேசுவது அதிக பயனளிக்கும்.

உங்கள் பயோடேட்டாவில் ஓவர் ஸ்டைலிஷ் வார்த்தைகள் தேவையில்லை. இயல்பான ஆங்கிலத்தில் உங்களைப் பற்றி எழுதினாலே போதும். ஓவர் பஞ்ச் டயலாக் நகைப்புக்குரியதாய் மாறிவிடும் அபாயம் உண்டு.

எனக்கு அடுத்த மாசம் கல்யாணம் நாலுவாரம் லீவ் வேணும், உங்க லீப் பாலிஸி எல்லாம் எப்படி ? ஈவ்னிங் வண்டி அனுப்புவீங்களா ? போன்ற கேள்விகள் உங்கள் மதிப்பைக் குறைக்கும். “நம்மால் நிறுவனத்துக்கு என்ன லாபம்?” என்பதையே நிறுவனம் பார்க்கும். “நிறுவனத்தால் நமக்கு என்ன லாபம்” எனும் நோக்கில் நாம் பேசிக்கொண்டிருந்தால் நிராகரிக்கப்படுவோம்.

“உங்க கம்பெனில புரமோஷன் எல்லாம் எப்படி ?” போன்ற கேள்விகளை தொண்டையிலேயே சமாதியாக்கி விடுங்கள். “வேலைலயே சேரல அதுக்குள்ள புரமோஷன் பத்தி பேசறான்” என உங்களைக் கடாசி விடுவார்கள்.

வேலை கிடைப்பதற்கு பெரிய பெரிய தேர்வுகள், கேள்விகள் எல்லாம் இருக்கும் என நாம் நினைப்போம். பல வேளைகளில் சின்னச் சின்ன விஷயங்கள் தான் நமக்கு வேலையைப் பெற்றுத் தரும். அல்லது சின்னச் சின்ன விஷயங்கள் தான் மிகப்பெரிய வாய்ப்புகளை வீணாக்கும். எனவே சின்னச் சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்துவோம்

பத்து கட்டளைகள்.

 1. “இங்கே எனக்கு ஒருத்தரைத் தெரியும்” என சொல்லாதீர்கள்.
 2. சரியான ரெபரன்ஸ்களைக் கொடுங்கள்.
 3. அடிக்கிற வாசனைத் திரவியங்களைத் தவிருங்கள்.
 4. அதீத மேக்கப்களைத் தவிருங்கள்.
 5. பயந்தமாதிரியோ, பதட்டப்படுவது மாதிரியோ காட்டாதீர்கள்.
 6. நல்ல ஆடை, சுத்தமான வருகை, நிமிர்ந்து அமர்வது என தன்னம்பிக்கையை உடல்மொழி மூலம் வெளிப்படுத்துங்கள்.
 7. சொந்தக் கதை சோகக் கதையைச் சொல்லி இரக்கம் பெற முயலாதீர்கள்.
 8. யாரையும் குற்றம் சுமத்திப் பேசாதீர்கள்
 9. தன்னம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் இருங்கள்.
 10. ஒப்பிப்பது போலப் பதில் பேசாதீர்கள்.

புதிய தலைமுறை : கம்யூனிகேஷன்

வேலை நமதே தொடர் – 10

Image result for Communication Skills

“இந்த வாய் மட்டும் இல்லேன்னா இவனை நாய் தூக்கிட்டுப் போயிருக்கும்” என ஒரு நகைச்சுவை வாசகம் சொல்வார்கள். அது பல இடங்களில் உண்மை ! குறிப்பாக வேலை தேடும் விஷயத்தில் எந்த அளவுக்கு நீங்கள் பேசுகிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

பேச வேண்டுமானால் அதற்கு முதல் தேவை கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ். தொடர்பாடல் திறன் என அழகுதமிழில் அழைக்கிறார்கள். தெளிவாக, அழகாக, நேர்த்தியாக, வசீகரமாக, எளிமையாகப் பேசுவது என எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். அடிப்படை ஒன்று தான். நீங்கள் பேசுவதை அவர்கள் அப்படியே புரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான்.

கம்யூனிகேஷன் என்பது ஆங்கிலத்தில் பேசுவது என்று பலர் நினைத்து விடுகிறார்கள். அப்படியல்ல. ஆங்கிலம் என்பது ஒரு மொழி ! ஒரு மொழியைப் பயன்படுத்தி ஒரு தகவலைத் திறமையாகச் சொல்வது தான் கம்யூனிகேஷன். எந்த மொழி என்பது நீங்கள் எந்த வேலைக்கு முயல்கிறீர்கள் என்பதையோ, எந்த இடத்தில் முயல்கிறீர்கள் என்பதையோ பொறுத்தது. சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவாக, அழகாக, வசீகரிக்கும் விதமாக, சரியாகச் சொல்லி விட்டால் நீங்கள் நல்ல கம்யூனிகேஷன் உடையவர் என்று அர்த்தம்.

இன்றைக்கு பெரும்பாலான நிறுவனங்களில் ஆங்கிலம் தேவைப்படுகிறது. கம்யூனிகேஷன் என்பது ஆங்கிலம் சார்ந்ததாகவே மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தொழில்நுட்ப உலகில் நுழைய ஆங்கிலமே பிரதானமாகி விட்டது. இந்த ஆங்கில அறிவை எப்படி வளர்த்துக் கொள்வது ?

சிறப்பான கம்யூனிகேஷனுக்கு மூன்று விஷயங்கள் அடிப்படைத் தேவை.

கவனித்தல்

உரையாடுதல்

எழுதுதல்

எவ்வளவு தெளிவாக, சரியானதை, சரியான உச்சரிப்புடன் பேசுகிறோம் என்பது முக்கியம். எவ்வளவு விரைவாக நமது உச்சரிப்பு ஸ்டைலை ஆங்கில உச்சரிப்புக்குக் கொண்டு வருகிறோம் என்பதில் வெற்றியின் சூட்சுமம்  இருக்கிறது. இது கொஞ்சம் கடினமான வேலை தான். காரணம் நாம் ஊருக்கு ஒரு தமிழ் உச்சரிப்பு வைத்திருக்கிறோம். ஆனால் ஆங்கிலத்தைப் பொறுத்தவரை ஒரே உச்சரிப்பாக இருப்பதே சிறப்பு. நமது தாய்மொழித் தாக்கம் அதில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். “இவன் இங்கிலீஷை தமிழ் மாதிரி பேசுவான்” என்று சொல்லும் வகையில் பேசக் கூடாது.

கிராமத்து மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதில் ரொம்பவே திணறுவார்கள். நகர்ப்புற மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசிப் பழகும் வாய்ப்பு அதிகம். ஆங்கில வழிக் கல்வி, பெற்றோரின் தயாரிப்பு என இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

பல கிராமத்து மாணவர்களுக்கு “ஐயையோ, நமக்கு ஆங்கிலம் தெரியாதே” என அவர்கள் நினைப்பது தான் குறை. அந்தத் தயக்கத்தை விட்டு வெளியே வரவேண்டுமெனில் நிறைய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். நண்பர்களுடன் தயக்கமில்லாமல் தப்புத் தப்பாகவேனும் ஆங்கிலம் பேச ஆரம்பிக்க வேண்டும்.

படிக்கும் காலம் ஏகப்பட்ட வசதிகளைத் தரும். அங்கே நீங்கள் சின்னச் சின்னக் குழுக்கள் அமைத்தும், விளையாட்டாக ஆங்கிலம் பேசிப் பழகலாம். புரியாத வார்த்தைகளுக்கு ஆங்கில அகராதி பயன்படுத்துங்கள். அகராதி பயன்படுத்தும் போது ஆங்கில வார்த்தைக்கு, ஆங்கில வார்த்தைகளால் பொருள் சொல்லும் அகராதிகளையே பயன்படுத்துங்கள். ஆங்கிலத்தைத் தமிழில் புரிந்துகொள்வதை நிறுத்திக் கொள்வது ஆங்கிலத்தை விரைவாகக் கற்க வைக்கும்.

நூல்கள் உங்களின் நண்பன். அதிலும் குறிப்பாக ஆடியோ நூல்கள் உங்களுக்கு ஆபத்பாந்தவன். நல்ல சில ஆடியோ நூல்களை வாங்கிக் கேளுங்கள். நீங்கள் சரியாக பேசுகிறீர்களா ? என்பதை அவை உங்களுக்குப் புரிய வைக்கும்.

இணையம் மூலம் கற்பது இன்னொரு வசீகர வழி. இணையத்தில் உலாவரும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு தளம் யூ-டியூப் (YouTube). சரியாகப் பயன்படுத்தினால் யூ-டியூப் உங்களுக்கான மிகச் சிறந்த வழிகாட்டியாக மாறிவிடும். இண்டர்வியூ டிப்ஸ் ( Interview Tips ), கம்யூனிகேஷன் டிரெயினிங் (Communication Training ), ஸ்போக்கன் இங்கிலீஷ் (Spoken English) இப்படி உங்களுக்குத் தெரிந்த சில கீ வார்த்தைகளைக் கொண்டு தேடுங்கள். கொட்டிக் கிடக்கின்றன பயனுள்ள வீடியோக்கள்.

 “எப்படி உச்சரிப்பது” – என கூகுளில் தேடினால் ஏகப்பட்ட இணைய தளங்கள் உதவிக்கு வருகின்றன. ஒரு வார்த்தையைப் போட்டுப் பொத்தானை அமுக்கினால் அந்த வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதைச் சொல்லித் தருகிறது. சரியான உச்சரிப்புடன் பேசினால் நமக்கு சட்டென மரியாதை கிடைக்கும் என்பது தான் யதார்த்தம்.

தொலைக்காட்சி இல்லாத வீடுகள் இருக்காது. அதில் சும்மா ஒரு மியூசிக் சேனலை ஓட விடுவதோ, ஜோக் சேனல்களைப் பார்த்து குலுங்குவதோ ஆங்கில அறிவை வளர்க்காது. ஒரு ஆங்கில நியூஸ் சேனலை ஓட விடுங்கள். செய்தி வாசிப்பவர்கள் என்ன பேசுகிறார்கள், எப்படிப் பேசுகிறார்கள், வார்த்தைகளை எப்படி உச்சரிக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். அவர்கள் சொல்வதை அப்படியேத் திருப்பிச் சொல்ல முயலுங்கள். இது ஒரு நல்ல பயிற்சி முறை.

பள்ளிக்கூடத்திலிருந்தே ஆசிரியர்கள் சொல்லும் அறிவுரைகளில் ஒன்று ஆங்கிலச் செய்தித்தாள்களைப் படிக்கச் சொல்வது. ஒரு ஆங்கில செய்தித்தாளை எடுத்துக் கையில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தான் செய்தி வாசிப்பாளர் என உங்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்போது கையிலிருக்கும் செய்தித் தாளை வாசியுங்கள்.

ஏற்ற இறக்கத்தோடு, தாளலயத்தோடு நிதானமாய் வாசியுங்கள். நீங்கள் பேசுவதை உங்கள் கணினி மென்பொருளிலோ, ஒரு டேப் ரிகார்டரிலோ, அல்லது உங்கள் மொபைலிலோ சேமியுங்கள். பிறகு நீங்கள் பேசுவதை நீங்களே கேளுங்கள். எங்கே தப்பு செய்கிறீர்கள் என்பது புரியும். உங்களுடைய ஆங்கிலம் மிக விரைவாகவே தெளிவான ஒரு கட்டத்தை எட்டி விடும்.

இது பிரபல பிரிட்டிஷ் இங்கிலீஷ் பயிற்சி நிலையங்களில் பின்பற்றப்படும் முறை. நாம் பேசுவதை நாமே திருப்பிக் கேட்கும் போது தான் நமது ஆங்கிலத்துக்கும், பிறருடைய ஆங்கிலத்துக்கும் இடையேயான வேறுபாடுகள் புலப்படும். வார்த்தைகளை முடிக்கும் போது சரியான உச்சரிப்புடன் சொல்லப் பழகுங்கள். அது வார்த்தைகளின் அழகை அதிகரிக்கும். தினமும் அரை மணி நேரமாவது ஆங்கிலத்தைச் சத்தமாய் வாசிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

வலைத்தளம் ஆரம்பிப்பது இப்போதைய பேஷன்களில் ஒன்று. இலவசமாய்க் கிடைக்கிறது என்பதால் இதில் செலவும் இல்லை. ஒரு பிளாக் ஆரம்பியுங்கள் ! உங்களுடைய சிந்தனைகளை, அனுபவங்களை எழுதுங்கள். எது உங்களுக்குப் பிடிக்குமோ அதை எழுதலாம். சினிமாவோ, அரசியலோ, கல்வியோ எதுவானாலும். எதை எழுதுகிறீர்கள் என்பதல்ல, எப்படி எழுதுகிறீர்கள் என்பது தான் முக்கியம். எழுதுவதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஒரு விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது, எப்படி கொண்டு போவது, எப்படி முடிப்பது எனும் மூன்று முக்கியமான விஷயங்கள் உங்களுக்குக் கைவந்தால் நீங்கள் இதில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம்.

தினமும் காலையில் தத்துப் பித்துத் தத்துவங்களை வாட்ஸப்பிலும், டுவிட்டரிலும் சுழற்றுவதை விட்டு விட்டு,  ஆங்கிலம் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கலாம். “தினம் ஒரு ஆங்கில வார்த்தை”, “தினம் ஒரு ஆங்கில வாக்கியம்” என்றெல்லாம் குழுக்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துங்கள். உங்கள் ஆங்கில அறிவு உயரும்’

நாவல் படிக்க விருப்பமுடையவர்கள் எளிதில் ஆங்கிலத்தில் வல்லவர்கள் ஆகிவிடுவார்கள் என்பது எழுதப்படாத விதி. சிட்னி ஷெல்டனோ, ஜான் கிரிஸமோ, ஜெஃப்ரி ஆர்ச்சரோ, அகதா கிறிஸ்டியோ  நாலைந்து நாவல்கள் வாங்கிப் போட்டுப் படியுங்கள். இவையெல்லாம் இலக்கிய நூல்களல்ல, சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் நிறைந்தவை. எனவே உங்களுக்கு எளிதாய் வாசிக்க முடியும். ஒரு பொழுது போக்கு உங்கள் பொழுதை ஆக்குவது இங்கே தான்.

படிக்க இப்போது தான் ஆரம்பிக்கிறீர்கள், கஷ்டமாக இருக்கிறது என்றால் காமிக்ஸ் புக்ஸ் படியுங்கள். சினிமா போல சுவாரஸ்யமாக இருக்கும். அதையும் வாசிக்கக் கஷ்டமாக இருந்தால் “ஆடியோ நாவல்கள்” வாங்குங்கள். அல்லது இணையத்திலிருந்து இறக்குமதி செய்யுங்கள்.

ஹாலிவுட் படம் பார்க்கும் விருப்பம் உடையவர்களுக்கு ஒரு நல்ல வழி உண்டு. ஹாலிவுட்டில் வெளியாகும் பிரபல திரைப்படங்கள் பெரும்பாலும் ஆங்கில நாவல்களைத் தழுவி எடுக்கப்படுபவையே. ஒரு படத்தைப் பார்த்து விட்டு அதன் நாவலைப் படியுங்கள். இப்போது கதை எளிதில் புரியும்.

ஆங்கிலப் பாடல்கள் கேட்க விரும்புபவர்கள் பாட்டு கேளுங்கள். அது வேகமான ஆங்கில உச்சரிப்பு மீதான பரிச்சயத்தைத் தரும். ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்கு இப்படிப் பொழுதுபோக்கையும் ஆங்கிலத்தையும் இணைப்பது அற்புதமான வழி.

ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளுவது முதல் கட்டம். ஆங்கிலத்தை எப்படிச் சொல்கிறோம் என்பது அடுத்த கட்டம். எதைச் சொல்லப் போகிறோம் என்பதை முதலில் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அது குறித்த தகவல்களைச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது, எப்படிப் பேசப் போகிறோம் எனும் விஷயம். அது தயாரிப்பைச் சார்ந்தே இருக்கிறது. திடீரென நேரும் உரையாடல்களைத் தவிர நேரம் தரப்படும் எந்த கம்யூனிகேஷனுக்கும் தயாரிப்பு நிச்சயம் தேவை.

பயத்தையும் தயக்கத்தையும் விட்டு விட வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. சிறப்பான தயாரிப்பும், பேசப் போகும் விஷயத்தில் நமக்கு இருக்கின்ற ஆழமான அறிவும் தான் நமது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

தன்னம்பிக்கை அதிகரித்தால் பயம் காணாமல் போய்விடும். முதல் முறை பேசும்போது எழுகின்ற தயக்கம் ஐம்பதாவது முறை பேசுகையில் எழுவதில்லை ! எனவே தான் பயிற்சி ரொம்ப முக்கியமாகிறது.

கவனியுங்கள். கவனிப்பு கம்யூனிகேஷனில் மிக முக்கியமான அம்சம். கவனிப்பு தான் என்ன கேட்கப்படுகிறது என்பது குறித்தத் தெளிவைத் தரும். அது தான் நம்முடைய பதிலைச் சரியான பாதையில் பயணிக்க வைக்கும். எனவே கவனிப்பதும், அது தொடர்பாகச் சிந்தித்துப் பதிலளிப்பதும் கம்யூனிகேஷனில் மிக முக்கிய அம்சங்கள்.

நல்ல பேச்சு என்பது குழாயில் ஓடும் தண்ணீர் போல இருக்கக் கூடாது. அது நதி போல் இருக்க வேண்டும். சில இடங்களில் மெதுவாக, சில இடங்களில் வேகமாக, சில இடங்களில் ஏற்ற இறக்கமாய், சில இடங்களில் ஒரே குரலில் எனப் பேச்சு அமைவதே சிறப்பானது. முகத்தில் புன்னகையும், கண்களில் தன்னம்பிக்கையையும் மிளிர விடுங்கள் அப்போது பேச்சுக்கு ஒரு தனி அழகு வந்து விடும்.

நேரம் ! இது கம்யூனிகேஷனில் ரொம்ப முக்கியம். நீட்டி முழக்காமல், சுருக்கிக் குழப்பாமல் சரியான அளவில் பேசுவது ரொம்ப நல்லது.  “எனக்குப் பேசத் தெரியாது” என எக்காரணம் கொண்டும் பேச்சை ஆரம்பிக்காதீர்கள். இது தாழ்மையின் அடையாளமல்ல, பலவீனத்தின் அடையாளம். அப்புறம் நீங்கள் என்னதான் நன்றாகப் பேசினாலும் அது பேசத் தெரியாதவனின் பேச்சு போலத் தான் தோன்றும் என்பது உளவியல் உண்மை.

நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்பதும் உரையாடலில் மிக முக்கியம். உங்கள் சக பணியாளர்களுடனா, உங்கள் உயரதிகாரியுடனா ? உங்கள் நிறுவனத்தின் மிக உயர்ந்த அதிகாரியுடனா? யாரிடம் பேசுகிறீர்களோ அவர்களுக்குத் தக்கபடிப் பேச வேண்டும்.

முயற்சியும், பயிற்சியும் இருந்தால் கம்யூனிகேஷன் எனும் கடலை நீந்திக் கடப்பது எளிதே. முடிவெடுங்கள், திட்டமிடுங்கள். வெற்றிகள் வசப்படும்.

Image result for Communication Skills

10 கட்டளைகள்

 1. கவனித்தல், உரையாடுகள், எழுதுதல் எனும் மூன்று நிலைகளிலும் இருக்க வேண்டும்.

 1. தன்னம்பிக்கையுடன் உரையாடுவது அவசியம்

 1. சரியான உச்சரிப்பைக் கற்றுக் கொள்ள வேண்டும்

 1. நண்பர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடுங்கள்

 1. இணையத்தில் யூடியூப் போன்ற தளங்களிலுள்ள ஆங்கிலப் பயிற்சி வீடியோக்கள் பாருங்கள்.

 1. ஆங்கிலச் செய்தித் தாள் படிப்பது, ஆங்கில நியூஸ் கேட்பது பயனளிக்கும்.

 1. ஆடியோ நூல்கள் கேளுங்கள்.

 1. எப்படி உச்சரிப்பது என்பதைக் கற்றுத் தரும் இணைய தளங்களைப் பயன்படுத்துங்கள்.

 1. நீங்கள் ஆங்கிலத்தில் பேசி, அதை ரெக்கார்ட் செய்து, தவறுகள் திருத்தி பயிற்சி எடுங்கள்.

 1. அச்சமின்றி ஏற்ற இறக்கத்தோடு பேசிப் பழகுங்கள்.

புதிய தலைமுறை : கேம்பஸ் தேர்வுக்குத் தயாராவோம் ‍ 2

வேலை நமதே தொடர் – 9

Image result for Campus Interview

கேம்ப்ஸ் இன்டர்வியூவில் சாதித்து விட்டீர்களெனில் வாழ்க்கை உங்களுக்கு வசீகரமாக இருக்கும். எனவே அதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். கடந்த வாரம் சில கருத்துகளைப் பேசினோம், இந்த வாரம்

 1. கேம்பஸ் இன்டர்வியூவில் நீங்கள் ஒரு அழுத்தமான சூழலை எப்படி சமாளிக்கிறீர்கள் என்பதை சோதிக்கும் வாய்ப்பு உண்டு. அழுத்தமான சூழலை நீங்கள் இலகுவாகக் கையாள்வது உங்கள் மீதான மரியாதையை அதிகரிக்கும். அழுத்தமான சூழலை எப்படி சமாளிப்பீர்கள் என்பதைக் கண்டறிய சில தந்திரங்கள் வைத்திருப்பார்கள். பெரும்பாலும் ஒரே நேரத்தில் நான்கைந்து பேர் இன்டர்வியூ பேனலில் அமர்ந்து கேள்விகளை வீசுவார்கள். ஒரு பதில் சொல்லி முடிக்கும் முன் அடுத்த கேள்வியை தருவார்கள். உங்கள் பதிலை கொஞ்சம் கிண்டலடிப்பார்கள். உங்களை கடுப்படிக்க வைப்பார்கள். என்னதான் நடந்தாலும் நிதானம் தவறாதீர்கள் ! புன்னகையுடன் பதிலளியுங்கள்.
 2. தன்னம்பிக்கை, உற்சாகம், பாசிடிவ் மனநிலை மூன்றும் மிக முக்கியம். பாசிடிவ் மனநிலையுடன் வாழ்க்கையை அணுகுபவர்களுக்கு நிறுவனங்கள் எப்போதும் முன்னுரிமை கொடுக்கும். “என்னத்த படிச்சு…” என ஒரு சோர்வு மனநிலையில் இருப்பவர்கள் நிராகரிக்கப்படுவார்கள். உற்சாகமும் சோம்பலும் தொற்று நோய்கள். ஒருவருக்கு என்ன இருக்கிறதோ அது அந்த குழுவிலுள்ளவர்களையும் பற்றிப் படரும். எதையெடுத்தாலும் எதிர்மறையாய்ப் பேசுபவர்களையும் நிறுவனங்கள் நிராகரிக்கும் !
 3. “உங்களோட வீக்னெஸ் என்ன?” எனும் கேள்வி சாதாரணம். எல்லா மனிதர்களுக்கும் பலவீனங்கள் உண்டு. எனவே ‘எனக்கு வீக்னெஸே கெடையாது சார் என கதை விடாதீர்கள்”. பலவீனங்களைச் சொல்வதே நல்லது. அதையும் பாசிடிவ் ஆகச் சொல்லுங்கள். “எனக்கு இந்த பலவீனம் இருக்கு. ஆனா அதை நான் சீக்கிரம் வெற்றி கொள்வேன். அதற்காகத் தான் இன்னின்ன முயற்சிகளை எடுத்திருக்கிறேன்” போன்ற பதில்கள் சிறப்பானவை. அந்த பலவீனங்கள் வேலை கிடைக்க இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, “எங்கே போனாலும் யார் கூடயாவது சண்டை போட்டுட்டே இருப்பேன், அதான் என் வீக்னஸ்” என்பன போன்று உளறாதீர்கள். கிடைக்க வேண்டிய வேலையும் கிடைக்காமல் போய்விடும்.
 4. நேர்மையாய் இருக்க வேண்டியது மனிதத் தன்மை ! அதையே நிறுவனங்களும் எதிர்பார்க்கும். எனவே உங்கள் பேச்சிலும் செயலிலும் நேர்மை மிளிரட்டும். நேர்மையற்று நடப்பவர்களை நிறுவனங்கள் உடனுக்குடன் கழற்றி விடும். பொய்சொல்லி வேலையில் சேர்வது, அலுவலக பொருட்களைத் திருடுவது, தப்பான பில் கொடுத்து பணம் வாங்குவது போன்றவையெல்லாம் நிறுவனங்களுக்கு அலர்ஜி ஏற்படுத்தும் விஷயங்கள். வேலை பறிக்கப்படுவது சர்வ நிச்சயம். நீங்கள் நேர்மையானவராய் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான எதிர்பார்ப்பு !
 5. ஒவ்வொரு நிறுவனமும் சில சட்ட திட்டங்களை வைத்திருக்கும். அவற்றை நீங்கள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த சட்ட திட்டங்களுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர நமக்கு ஏற்ப அந்த சட்ட திட்டங்கள் மாற்றம் பெற வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. மனித வள இன்டர்வியூவில் அது சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். “இதெல்லாம் என்ன திட்டம், சரியில்லையே’ என்றெல்லாம் உங்கள் மேதாவித்தனத்தைக் காட்டாதீர்கள். நிறுவன விதிவரம்புகளுக்குள் செயல்படுவேன் எனும் உறுதியை மட்டும் அளியுங்கள் போதும்.
 6. “என்ன எதிர்பார்க்கிறீங்க?” எனும் ஒரு கேள்வி கேட்கப்படும். பல மாணவர்கள் இது சம்பளத்தை மட்டுமே குறிக்கும் கேள்வி என நினைத்து விடுவதுண்டு. உங்கள் எதிர்பார்ப்பு எதுவாகவும் இருக்கலாம். நன்றாக வேலை கற்றுக் கொள்வதாகவும் இருக்கலாம். நல்ல வேலைச் சூழல், சவாலான வேலை, பிடித்தமான வேலை என விஷயங்கள் எதுவாகவும் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
 7. “நாங்க ஏன் உங்களைத் தேர்வு செய்ய வேண்டும்?” எனும் கேள்வி திடீரென கேட்கப் பட்டால் என்ன செய்வீர்கள் ? தடுமாறுவீர்கள் தானே ? முதலிலேயே அந்த கேள்விகளை உங்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நிறுவனங்கள் ஏன் உங்களைத் தேர்வு செய்ய வேண்டும் ? நீங்கள் பணக்காரர் என்பதாலா ? அழகானவர் என்பதாலா ? ஏழை என்பதாலா ? கிடையவே கிடையாது. அவர்களுக்கு ஆட்கள் தேவை. அவர்களுடைய பணிகளைச் செய்ய திறமையான ஊழியர்கள் தேவை. அவ்வள்வு தான். அதை மனதில் கொண்டு ,”உங்களுடைய பணித் தேவைகளை நிச்சயம் என்னுடைய முழுப் பங்களிப்பையும் செலுத்தி நிறைவேற்றுவேன்” என்பது போல பதில் சொல்வது நல்லது.
 8. உங்களுடைய நீண்டகாலத் திட்டம், குறுகிய காலத் திட்டம் போன்றவற்றை ஹைச்.ஆர் இன்டர்வியூக்கள் கேட்கும். குறுகிய காலத் திட்டம் “நிறுவனத்துக்கு உங்களுடைய முழுமையான பங்களிப்பு !” எனுமளவில் இருப்பது நல்லது. நீண்டகாலத் திட்டம், நிறுவனத்தில் நல்ல வளர்ச்சி இருந்தால் நிறுவனத்தோடு இணைந்து வளர்வது எனும் பாணியில் இருப்பது சிறப்பு. எதுவானாலும், பணத்தை அடிப்படையாகக் கொண்டு உங்கள் திட்டங்களை வரையறுக்காதீர்கள்.
 9. ஒரு சிக்கலான சூழலைச் சொல்லி இந்த சூழலில் நீ என்ன முடிவெடுப்பாய் ? என்பது போன்ற கேள்விகளை ஹைச்.ஆர் கேட்க வாய்ப்பு உண்டு. உங்களுக்குத் தோன்றும் ஒரு நல்ல பதிலைச் சொல்லுங்கள். பதிலைச் சொல்லும்போது இரண்டு விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். ஒன்று, அது நிறுவனத்தின் கொள்கைகள், மதிப்பீடுகளுக்கு எதிரானதாய் இருக்கக் கூடாது. இரண்டு, ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பதிலாய் இருக்க வேண்டும். ஒருவேளை உங்கள் பதில் இன்டர்வியூ எடுப்பவரை “அட ! “ போட வைத்தால் உங்களுக்கு வாய்ப்பு பிரகாசம் !
 10. கேம்பஸ் தேர்வுக்கு உங்களுடைய கல்லூரி சார்ந்த விஷயங்கள் தான் முதல் இடம் பிடிக்கும். எனவே, நீங்கள் கல்லூரியில் செய்த புராஜக்ட் வேலை, தீசிஸ், பிராக்டிகல், வயிட் பேப்பர்ஸ் போன்றவற்றையெல்லாம் நன்றாகப் படித்து வைத்திருங்கள். கேள்விகள் நிச்சயம். பயோடேட்டாவில் குறிப்பிட்டிருக்கும் எல்லா விஷயங்களையும் மிகச் சரியாகத் தெரிந்து வைத்திருங்கள்.
 11. நிறுவனம் எப்போதுமே ஆர்வமும், உற்சாகமும், திறமையும் உடையவர்களையே தேடும். நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பமுடையவர்களை விட, நிறுவனத்தின் பாகமாகவே மாறிவிடத் துடிக்கும் இளைஞர்கள் அவர்களை வசீகரிப்பார்கள். “நிறுவனத்தின் இந்த கொள்கைகள் என்னை வசீகரித்தன. அதனால் இந்த நிறுவனத்தில் இணைவதில் மிகுந்த ஆர்வமாய் இருக்கிறேன்” எனும் டைப்பில் அவ‌ர்களுடன் உரையாடுங்கள்.
 12. நிறுவனங்களுக்கு கடின உழைப்பாளிகளை விட, ஸ்மார்ட் உழைபாளிகளை ரொம்பப் பிடிக்கும். புதுமையான சிந்தனைகள் தொழில்நுட்பத் துறையில் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கப் படும். எனவே அதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் கல்லூரி காலத்தில் அப்படி ஏதேனும் செய்திருந்தால் குறிப்பிட மறக்கவேண்டாம். பிரில்லியன்ட் என உங்கள் பதில்கள் பச்சை குத்தி வைத்திருக்கட்டும்.

இந்த சில டிப்ஸ்களை மனதில் எழுதுங்கள். தன்னம்பிக்கை, தைரியம், உற்சாகம் இவற்றை மனதில் கொள்ளுங்கள். கேம்பஸ் தேர்வில் வெற்றி பெற்றே தீருவேன் எனும் முழுமையான அர்ப்பணிப்புடன் தயாராகுங்கள். இப்போது கஷ்டப்பட்டால் எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கை மிகவும் அழகானதாக இருக்கும். இப்போது நண்பர்களுடன் சேர்ந்து பொழுதை வீணடித்தால், பின்பு வேலை தேடும் போது நண்பர்கள் அருகில் இல்லாமல் இருக்கும் சூழலும் ஏற்படலாம்.

கடைசியாக ஒன்று ! வெற்றிக்காக முழுமையாய் உழையுங்கள். ஆனால் தோல்வி வந்தால் துவண்டு விடாதீர்கள்.  வாழ்க்கை தோல்விகளைத் தாண்டியும் உங்களை அரவணைக்கும். வாழ்க்கை அழகானது. ஒரு தோல்வியுடன் எதுவும் முடிந்து விடுவதில்லை.

சமூக வலைத்தளங்களும், வேலையும் !

வேலை நமதே தொடர் – 12

Image result for Social media

இன்றைக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. எதையும் ரகசியமாய்ச் செய்வது என்பது இயலாத காரியம். உலக அளவில் பல்வேறு வழக்குகளுக்கு சமூக வலைத்தளப் பதிவுகள் ஆதாரமாய் சமர்ப்பிக்கப்படுகின்றன. பல திருமண முறிவுகளுக்கு சமூக வலைத்தளப் பதிவுகளே காரணமாய் இருக்கின்றன.

எனவே தான் சமூக வலைத்தளங்களில் வேலை தேடுவோரின் நடவடிக்கைகளும் நல்ல முறையில் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இல்லையேல் கிடைக்க வேண்டிய‌ வேலைக்கு அது மிகப்பெரிய சவாலாய் அமையும். கிடைக்க இருக்கின்ற வாய்ப்புகள் கிடைக்காமல் போவதற்கும் சமூக  வலைத்தள பதிவுகள் காரணமாய் இருக்கக் கூடும்.

நேர்முகத் தேர்வில் நீங்கள் சொல்லும் விஷயங்களைச் சரிபார்க்கவோ, அல்லது உங்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கலாமா என்பதை முடிவு செய்யவோ நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கும் புதிய வழி தான் சமூக வலைத்தள அலசல். சமூக வலைத்தளங்களில் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை அலசி ஆராய்ந்து உங்களைப் பற்றி தெரிந்து கொள்வார்கள். உலக அளவில் சுமார் 60 சதவீதம் நிறுவனங்கள் இப்படி சமூக வலைத்தளங்களை அலசி ஆராய்வதாக கேரியர் பில்டர்ஸ் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவித்தது.

சமூக வலைத்தளங்களில் உங்களுடைய ஈடுபாடு பாசிடிவ் ஆக இருக்க வேண்டியது ரொம்ப அவசியம். உங்களுடைய நடவடிக்கைகள் தவறாக இருக்குமானால் நீங்கள் நிராகரிக்கப்படுவீர்கள். எனவே சமூக வலைத்தளங்களில் உங்களுடைய செயல்பாடுகளை வகைப்படுத்திக்கொள்ளுங்கள்.

சமூக வலைத்தளங்களில் நீங்கள் வேலை செய்யும் நிறுவனங்களைப் பற்றிய எந்த செய்தியையும் போடாதீர்கள். குறிப்பாக உங்களுடைய பழைய பாஸ் பற்றி குறை சொல்வது, அல்லது நிறுவனத்தில் நடந்த விவாதங்கள் போன்றவற்றை பதிவு செய்வது போன்றவை தவிருங்கள். அது உங்கள் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கும். “இவனையெல்லாம் வேலைக்கு சேர்ந்தா நாளைக்கு நம்ம கம்பெனி பெயர் கெட்டுப் போய்விடும்” என அவர்கள் நினைக்கக் காரணமாகிவிடும்.

ஒரு நிறுவனத்திலிருந்து வேலைக்குச் சேர உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அந்த நிறுவனத்தில் சேரும் வரை அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடாதீர்கள். அது உங்களுக்கு தேவையற்ற சங்கடங்களை உருவாக்கி விடும். சில வேளைகளில் கிடைத்த வேலை பறிபோகவும் அது காரணமாகிவிடும். குறிப்பாக அந்த வேலை ஆஃபர் பற்றிய கான்ஃபிடன்சியல் விஷயங்களைச் சொல்லவே சொல்லாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் உங்களுடைய புகைப்படங்களை வெளியிடும்போது மிகவும் கவனம் தேவை. புகைப்படங்கள் தவறாய் பயன்படுத்தப்படும் என்பதும், ஜியோ டேக் மூலமாக உங்களுடைய இருப்பிடம் கண்டறியப்படலாம் என்பதும் தனிப்பட்ட அச்சுறுத்தல்கள். வேலைக்கும் அவை அச்சுறுத்தலாய் அமையும். கண்ணியமற்ற நடத்தைகளோ, ஓவர் பார்ட்டி கலாட்டா புகைப்படங்களோ உங்களைப் பற்றிய தவறான பிம்பத்தையே நிறுவனங்களுக்குத் தரும். நீங்கள் நிராகரிக்கப்படலாம்.

உங்களுடைய தளங்களில் தகவல்களைத் திருடியோ, காப்பிரைட் எழுத்துகளை அனுமதி வாங்காமலோ பதிவு செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கருத்துத் திருட்டு என்பது சீரியசான விஷயம். ஒரு படம் போட்டால் கூட அது உங்களுடையது இல்லையெனில் எடுத்தவர் பெயரைப் போடுவது நல்ல பழக்கம். அது தான் நேர்மையும் கூட. அத்தகைய செயல்கள் உங்கள்  மீதான மரியாதையை அதிகரிக்கும்.

சாதி, மத, இன, மொழி, அரசியல் சார்ந்த வெறுப்புணர்வைத் தூண்டும் எந்த ஒரு செய்தியையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யாதீர்கள். அப்படி பதிவு செய்த பலர் வேலையை இழந்த கதைகள் இன்றைக்கு உண்டு. நல்ல விஷயங்களைப் பதிவு செய்து உங்களுடைய இமேஜை அதிகரிக்க முயலுங்கள்.

ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்களில் பொழுதைக் கழிக்காமல், லிங்க்ட் இன் போன்ற தளங்களில் உங்களுடைய கருத்துகளையும், சிந்தனைகளையும் தொடர்ந்து பதிவு செய்யுங்கள். கவனிக்கப்படுவீர்கள். இன்றைக்கு இருக்கும் சமூக வலைத்தளங்களில் லிங்க்ட் இன் முழுமையான புரஃபஷனல் வெப்சைட். அதில் நீங்கள் தொடர்ந்து தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களையோ, பாசிடிவ் ஆன மற்ற விஷயங்களையோ பகிர்ந்து கொள்ளலாம். அது உங்களுக்கு வேலையைக் கூட எளிதில் பெற்றுத்தரும்.

உங்களுடைய டுவிட்டர், அல்லது ஃபேஸ்புக்கில் நண்பராக இணைந்து உங்களை தொடர்ந்து சிலநாட்கள் கண்காணிக்கும் நிறுவனங்கள், தேர்ட் பார்ட்டி நபர்கள் உண்டு. அவர்களுக்கு நீங்கள் திறமைசாலியாகவும், உற்சாகமான பாசிடிவ் சிந்தனையாளராகவும் தெரிய வேண்டும். எனவே கவனமாய் இருங்கள். யாரோ ஒருவர் கவனிக்கிறார் எனும் எண்ணம் மனதில் இருந்தால் போதும் எழுத்துகள் கண்ணியம் பெற்றுவிடும்.

உங்களுடைய குணாதிசயம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள நிறுவனங்கள் ஆர்வம் கொள்கின்றன. குறிப்பாக உங்களுடைய ஹாபி என்ன என்பதை உற்று நோக்கும் நிறுவனங்கள் உண்டு. நீங்கள் ரிஸ்கி பேர்வழியா, இனிமையானவரா, அடிக்கடி ஊர் சுற்றக் கிளம்பும் பார்ட்டியா என பல விஷயங்களை இந்த ஹாபி புட்டு புட்டு வைத்து விடும். எனவே ஹாபி விஷயத்தில் கவனமாய் இருங்கள்.

சமீபத்தில் நடந்த ஆராய்ச்சி ஒன்று சமூக வலைத்தளங்கள் எப்படி வேலைக்கு வேட்டு வைத்து விடுகின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஆட்களைத் தேர்வு செய்யும் பிரிவிலுள்ள இரண்டாயிரம் பேர் கலந்து கொண்ட ஆய்வில் எப்படியெல்லாம் மக்கள் வேலை வாய்ப்பை இழக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.

46% நிராகரிப்புகளுக்குக் காரணம் தேவையற்ற புகைப்படங்களும், பகிரப்பட்ட தவறான தகவல்களும்.

41% நிராகரிப்புகளுக்குக் காரணம் பார்ட்டி தண்ணி புகைப்படங்கள்.

36% நிராகரிப்புகளுக்குக் காரணம் பழைய நிறுவனம் பற்றியும் தலைவர் பற்றியும் தவறாக பேசியது.

32% நிராகரிப்புகள் கம்யூனிகேஷன் சரியில்லை என காரணம் கூறின‌

28% நிராகரிப்புகள்  வெறுப்பைத் தூண்டும் கருத்துகளுக்காக நிகழ்ந்தன.

எனவே இத்தகைய செயல்கள் எதையும் சமூக வலைத்தளங்களில் செய்யாமல் கவனமாய் இருங்கள்.

அதே நேரத்தில் நல்ல விஷயங்களைப் பதிவு செய்திருப்பதைப் பார்த்து வேலை கிடைப்பதும் உண்டு. எனவே சமூகவலைத்தளங்களை விட்டு ஓடிவிடாமல், அங்கே நல்ல விஷயங்களைப் பதிவு செய்யுங்கள். சமூக வலைத்தளங்களை அலசி தான் ஆட்களை எடுப்போம் என 46% நிறுவனங்கள் கூறியிருக்கின்றன. அவை பார்ப்பது நல்ல பதிவுகள், நல்ல புகைப்படங்கள், பாசிடிவ் செய்திகள், வெறுப்பைத் தூண்டா செயல்கள் போன்றவையே.

ஒருவேளை உங்களுடைய சமூக வலைத்தளம் எங்கேனும் தவறான செய்திகளோ, படங்களோ இருந்தால் உடனே அதை நீக்கி சுத்தம் செய்யுங்கள். நல்ல செய்திகளால் அவற்றை நிரப்புங்கள்.

ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், கூகிள் பிளஸ், லிங்க்ட் இன் இப்படி எத்தனை சமூக வலைத்தளங்களில் இருக்கிறீர்களோ எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான தொனி எழுவது போல பார்த்துக் கொள்ளுங்கள். லிங்க்ட் இன் தளத்தில் ஒரு மாதிரியும், ஃபேஸ் புக்கில் இன்னொரு மாதிரியும் இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

லிங்க்ட் இன் தளங்களில் உங்களுடைய நண்பர் வட்டாரத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை வைத்து உங்களுடைய மரியாதை அதிகமாகும் என்பதை மனதில் கொள்ளுங்கள். அதற்கு ஏற்ற நண்பர்களை உங்களுடைய வட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய சிறப்புத் தகுதிகள், நீங்கள் பெற்ற வெற்றிகள், உங்களுடைய சாதனைகள் போன்ற விஷயங்கலெல்லாம் உங்களுடைய லிங்க்ட் இன் தளத்தில் இருக்கட்டும். அவை நிறுவனங்களின் தேடலுக்குள் சிக்கிக் கொள்ளும். உங்களுக்கான கதவைத் திறக்க அது உதவும்.

ஒரு சின்ன ஐடியா சொல்கிறேன். உங்கள் பயோடேட்டாவில் என்ன போட்டிருக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள். அதை நிரூபிப்பது போன்ற விஷயங்களை நீங்கள் உங்களுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிடுங்கள். உதாரணமாக, தலைமைப் பண்பு இருக்கிறது என நீங்கள் பயோடேட்டாவில் குறிப்பிட்டிருந்தால் அத்தகைய விஷயங்களை முதன்மைப் படுத்தும் விஷயங்கள் உங்களுடைய வலைத்தளங்களில் இருக்கட்டும். ஸ்டேட்டஸ் அப்டேட், கட்டுரைகள், புகைப்படங்கள் எல்லாம் அதை சார்ந்து இருக்கட்டும். உங்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாகும்.

சுருக்கமாக, இன்றைக்கு சமூக வலைத்தளங்கள் உங்களுடைய குணாதிசயங்களை எடைபோடும் இடமாக இருக்கின்றன. எனவே அதை பாசிடிவ் ஆகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வளவே !

10 கட்டளைகள்

 1. சமூக வலைத்தளங்களில் விரோதப் பதிவுகள் வேண்டாம்.

 1. தவறான படங்கள், தண்ணியடிக்கும் படங்கள் வேண்டாம்.

 1. அலுவலகம் சார்ந்த குற்றச்சாட்டுகள் வேண்டாம்.

 1. நல்ல நண்பர்களை உங்கள் வட்டத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

 1. பயோடேட்டாவுக்கும் உங்கள் வலைத்தளத்துக்கும் சம்பந்தம் இருக்கட்டும்.

 1. சாதி, மத, இன, அரசியல் சார்பு தீவிரம் வேண்டாம்.

 1. நிறுவன சட்ட திட்டங்களைக் கிண்டலடிப்பது வேண்டாம்.

 1. நிறுவன கான்ஃபிடன்சியல் விஷயங்கள் (சம்பளம் உட்பட) எதுவும் பதிவிட வேண்டாம்.

 1. நல்ல ஆரோக்கியமான செய்திகளை, உங்கள் குணாதிசயத்தை உயர்த்தும் செய்திகளைப் பகிருங்கள்.

 1. யாரோ நமது தளத்தைக் கவனிக்கிறார்கள் எனும் உணர்வுடன் பதிவுகளை பகிருங்கள்.

 

புதிய தலைமுறை : கேம்பஸ் தேர்வுக்கு தயாராவோம் – 1

வேலை நமதே தொடர் – 8

Image result for Campus Interview

வேலை கிடைப்பது இப்போதெல்லாம் எளிமையாக இல்லை. கணினி போன்ற நிறுவனங்களிலேயே வேலை கிடைப்பது மிகக் கடினமாகி விட்டது. பத்து பேர் தேவை என விளம்பரம் கொடுக்கும் நிறுவனத்துக்கு குறைந்த பட்சம் ஐநூறு பேர் விண்ணப்பிக்கின்றனர். முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பது மிகப்பெரிய சவாலாக மாறி வருகிறது. புதியவர்கள் வேலைக்குத் தேவை என நிறுவனங்கள் அழைப்பு விடுத்தால் பத்தாயிரம் பேர் படையெடுக்கின்றனர். எத்தனை பேர் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்த இதுவே போதும் !

இத்தகைய போட்டி நிறைந்த உலகில் வேலை கிடைக்க மிகச் சிறந்த வழி “கேம்பஸ் தேர்வு” என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. கல்லூரியை விட்டு வெளியே வந்து முயற்சி செய்வதில் பத்து சதவீதம் கஷ்டப்பட்டாலே கல்லூரி கேம்பஸ் தேர்வில் வெற்றி பெற முடியும். எனவே கல்லூரி மாணவ மாணவியர் கேம்பஸ் தேர்வை மிக மிக சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கேம்பஸ் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டீர்களெனில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மிக முக்கியமான எதையோ ஒன்றைச் சாதித்து விட்டீர்கள் என காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் இன்டர்வியூ பற்றி முழுமையாய் தெரிந்திருக்காது. கேம்பஸ் இன்டர்வியூவில் என்ன நடக்கும் ? எப்படி அதை எதிர்கொள்ளவேண்டும் ? போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்வது அதில் வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்க உதவும்.

 1. முதலாவது இங்கே போட்டி குறைவு. கேம்பஸ் தேர்வில் நாம் போட்டியிடப் போவது அதிகபட்சம் சில நூறு நபர்களுடன் தான். கல்லூரிக்கு வெளியே இந்தப் போட்டி சில ஆயிரங்கள் என எகிறும். எனவே அதிகபட்சக் கவனத்துடன் கேம்பஸ் இன்டர்வியூவை எதிர்கொள்ளுங்கள். கொஞ்சம் கூடுதல் முக்கியத்துவம் கொடுங்கள்.
 2. அடுத்தவர்களை விட ஒரு அடி முன்னே நிற்க முயலுங்கள். வெற்றியாளருக்கும், தோல்வியடைந்தவனுக்கும் இடையே இடைவெளி மிக மிகக் குறைவாகவே இருக்கும். அரை வினாடி நேரத்தில் கோப்பையை இழக்கும் விளையாட்டுப் போட்டிகளைப் போலவே கேம்பஸ் தேர்வையும் அணுகுங்கள். கொஞ்சமும் அலட்சியமோ, விளையாட்டுத் தனமோ வேண்டாம்.
 3. மற்றவர்களை விட வித்தியாசமாய் உங்களிடம் என்ன இருக்கிறது ? அடுத்தவர்களை விட அதிகமாய் உங்களுக்கு என்ன தெரியும் என்பதை யோசித்துப் பாருங்கள். அது தொழில்நுட்பம் சார்ந்த‌ சான்றிதழாகவும் இருக்கலாம். அல்லது கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், லீடர்ஷிப் ஸ்கில்ஸ் போன்ற மென் திறமையாகவும் இருக்கலாம் ! ஒரு ஸ்பெஷாலிடியாவது உங்களிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் !
 4. பலரும் தங்களுடைய அறிவு என்பது தொழில் நுட்ப ரீதியான படிப்பு மட்டும் என நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு ! கம்யூனிகேஷன், நட்பு, சமூக அனுசரிப்பு, மரியாதை, விவாதத் திறமை, பற்றுறுதி, உரையாடல் திறமை, தலைமைப் பண்பு என ஏகப்பட்ட விஷயங்கள் சாஃப்ட் ஸ்கில்ஸ் எனப்படும் திறமையின் கீழ் வரும். எனவே அவற்றிலும் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.
 5. உங்கள் கையிலிருக்கும் மார்க் ஷீட் உங்களுடைய கண்ணாடி. உங்களுடைய படிப்பு ஆர்வத்தையும், கடின உழைப்பையும் அது தான் காட்டிக் கொடுக்கும். கல்லூரி காலம் முழுதும் ஒழுங்காகப் படித்து மதிப்பெண் பட்டியலில் ஒரு நல்ல ஸ்கோர் வைத்திருக்க வேண்டியது உங்கள் கடமை ! அதிக சதவீதம் வைத்திருக்கும் மாணவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் என்பது நீங்கள் அறிந்ததே !
 6. ஆங்கில அறிவு மிக மிக அவசியம். அதற்காக நீங்கள் சேக்ஸ்பியரைப் போல கவிதை எழுத வேண்டுமென்பதில்லை. நீங்கள் சொல்ல வரும் விஷயத்தை மிகத் தெளிவாக சொல்லக் கூடிய அளவுக்கு அழகான ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றையெல்லாம் ஆங்கிலம் கற்றுக் கொள்ளப் பயன்படுத்துங்கள். அது உங்களுக்குப் பயன் தரும்.
 7. கம்யூனிகேஷன் என்றதும் நமக்குத் தெரிவது பேச்சும், எழுத்தும் தான் இல்லையா ? இன்னொரு வகை உரையாடலும் உண்டு. அது உடல்மொழி ! வார்த்தைகளற்ற உரையாடல் அது ! 60 சதவீதம் செய்திகளை உங்கள் உடல்மொழியே சொல்லிவிடும் என்பது கணக்கு ! எனவே உடல் மொழியில் கவனம் தேவை. பதட்டம், பயம், தடுமாற்றம் போன்ற எதையும் உங்கள் உடல் மொழி பேசாதிருப்பது நல்லது !
 8. உடல் மொழியில் சில அடிப்படை விஷயங்கள் உண்டு. கைகளை விரித்து வைத்துக் கொண்டு பேசினால் நீங்கள் உண்மையுள்ளவர், திறந்த மனமுடையவர் என்று பொருள். பின்னால் சாய்ந்து கொண்டு பேசினால் உங்களுக்கு விஷயத்தில் விருப்பமில்லை என்று பொருள். நேராக அமர்ந்து சிரித்துக் கொண்டே பேசினால் நீங்கள் ரொம்ப ஆர்வமாய் இருக்கிறீர்கள் என்று பொருள். விரல்களைத் தட்டிக்கொண்டே இருப்பது நீங்கள் பொறுமை இழந்து இருக்கிறீர்கள் என்று சொல்லும், நகம் கடிப்பது பதட்டம் என்று சொல்லும்.
 9. தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தடுமாறிப் போவார்கள். உங்களுடைய கண்களில் தன்னம்பிக்கை ஒளிரட்டும். நேர்த்தியான உடை உடுத்திக் கொண்டு நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளுங்கள். ஒரு முக்கியமான விஷயம், தன்னம்பிக்கை என்பது செயற்கைத் தனம் இல்லாமல் வெளிப்பட வேண்டியது அவசியம். ‘நான் ரொம்ப தன்னம்பிக்கை உடையவன் சார்’ என சொல்லாமலேயே அது தெரியவேண்டும். ஒரு புன்னகை, ஒரு தைரியமான பதில், ஒரு பாசிடிவ் மனநிலை இவையெல்லாம் உங்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும்.
 10. டைம் மேனேஜ்மென்ட் எனப்படும் மேலாண்மை ரொம்ப முக்கியம். காலம் தவறாமை என்றதும், இன்டர்வியூவுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடி போறது தானே அது ? என கேட்பவர்கள் உண்டு. எழுத்துத் தேர்வை நீங்கள் எதிர்கொள்ளும் விதம், குழு உரையாடலில் செயல்படும் விதம், இன்டர்வியூவில் நடந்து கொள்ளும் விதம் என எல்லாவற்றையும் அது தொட்டுச் செல்லும் !
 11. சுருக்கமான ஒரு விஷயம். எல்லா நிறுவனங்களும் மூன்று விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு தான் இயங்கும். குவாலிடி, காஸ்ட், டைம் இவை தான் அந்த மூன்று விஷயங்கள். தரம், விலை, காலம் ! உயர்ந்த தரத்தில், குறைவான விலையில், சொன்ன நேரத்தில் வேலையை முடிப்பதே முக்கியம். இந்த தத்துவத்தை மனதில் வைத்திருங்கள். பயன்படும்.
 12. நேர்முகத் தேர்வுக்கு நல்ல ஃபார்மல் ஆடை அணியுங்கள். கல்லூரி வாழ்க்கை வேறு இன்டர்வியூ வேறு. கல்லூரியில் போவது போல ஜீன்ஸ், சாயம் போன டீ-ஷர்ட் எல்லாம் ஒதுக்குங்கள். நேர்த்தியான ஆடை, டை இருந்தால் அணியலாம். நண்பர்கள் கிண்டலடிப்பார்கள் போன்ற சிந்தனைகளையெல்லாம் ஒதுக்குங்கள். “ஓவர் ஃபார்மல்” என்று எதுவும் கிடையாது என்பதை மனதில் கொள்ளுங்கள். பெண்கள் ரொம்ப ஃபேன்ஸியாகவோ, ரொம்ப இறுக்கமாகவோ இல்லாத நல்ல ஃபார்மல் உடைகளை அணிவது சிறப்பானது.
 13. உங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், சாதனைச் சான்றிதழ்கள், பயோடேட்டாக்கள், புகைப்படங்கள், பேனா , பேப்பர் என அனைத்தையும் ஒரு ஃபைலில் போட்டு அழகாக நேர்த்தியாக வரிசையாக வைத்திருங்கள். உங்களுடைய ஒழுங்கு அதில் பிரதிபலிக்கட்டும். உங்களுக்கும் தேவையற்ற பதட்டம் குறையும்.
 14. நேர்முகத் தேர்வுக்கு முந்தைய நாள் என்ன செய்வீர்களோ இல்லையோ, நன்றாகத் தூங்குங்கள். காலையில் சோர்வின்றி எழும்புங்கள். சிறிதாய் உடற்பயிற்சி செய்யுங்கள். தண்ணீர் குடியுங்கள். நல்ல உற்சாகமாய் நேர்முகத் தேர்வுக்கு வாருங்கள். எக்காரணம் கொண்டும் முந்திய இரவில் தூங்காமல் விழித்திருந்து சோர்வில் சிக்கி, சிக்கலில் மாட்டாதீர்கள்.
 15. “உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்பது தான் பெரும்பாலான நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்படும் முதல் கேள்வி. இந்தக் கேள்வி தான் நமக்கான துருப்புச் சீட்டு. இந்த கேள்விக்கான பதிலை ரொம்ப சூப்பராகத் தயார் செய்து கொள்ளுங்கள். நிறுவனம் எதை எதிர்பார்க்குமோ அதைச் சொல்லுங்கள். உங்கள் பிளஸ் பாயின்ட்கள் எல்லாம் அதில் வரட்டும். தேவையில்லாத விஷயங்களை ஒதுக்குங்கள். “அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் ஐயா தான் கிங்க்” என்பது போன்ற விஷயங்களை விட்டு விடலாம்.
 16. கேள்விக்குப் பதில் சொல்லும் போது பராக்குப் பார்க்கவே கூடாது. கேள்விக்கும் பதிலுக்கும் ரொம்ப கவனம் செலுத்துங்கள். செல்போனை அணைத்து வைத்திருங்கள். ரொம்ப வேகமாகப் பேசாதீர்கள். “உங்களுக்கு ஏதாவது கேள்வி இருக்கா ?” என கேட்பார்கள். அதன் பொருள் நிறுவனத்தைப் பற்றி ஏதாவது கேள்வி இருக்கிறதா என்பது தான். “எந்த மாதிரி வேலை இருக்கும்” என்பது போன்ற கேள்விகள் ஏதேனும் இருந்தால் கேட்கலாம். அதை விட்டு விட்டு தனிப்பட்ட கேள்விகளைக் கேட்கவே கேட்காதீர்கள்.
 17. பேசும்போது குரலும், உடல்மொழியும் இணைந்தே பேச வேண்டும். ஒரு புன்னகை நிச்சயம் தேவை. கண்ணில் பார்த்து தன்னம்பிக்கையுடன் பேசுவது நல்லது. அதே போல பேசுவதை பாதி விழுங்கி மீதியை துப்பாமல் தெளிவாய்ப் பேசுங்கள். சொல்லும் விஷயம் தப்பாய் இருந்தால் கூட சொல்லும் முறை தப்பில்லாமல் இருக்க வேண்டும் !
 18. நீங்கள் எவ்வளவு தூரம் மாற்றங்களை ஏற்றுக் கொள்வீர்கள் என்பது கவனிக்கப்படும். சென்னை, பங்களூர், ஹைதராபாத் இப்படி எங்கே வேணும்னாலும் வேலை செய்வேன் என்பவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகம். ‘சென்னையைத் தவிர வேற எங்கேயும் போக முடியாது பாஸ்’ – என முரண்டு பிடித்தால் வாய்ப்புகள் குறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
 19. உங்களுக்கு தனித் திறமைகள் இருக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் நிறுவனங்களின் வெற்றி என்பது குழுவாக இணைந்து பணியாற்றுவதில் தான் இருக்கிறது. உங்களிடம் அந்த விருப்பமும், ஆர்வமும் இருக்க வேண்டும். குழுவாகப் பணி செய்த அனுபவங்கள் இருந்தால் அதை மறக்காமல் தெரியப்படுத்துங்கள். உதாரணமாக, என்.எஸ்.எஸ், என்.சி.சி, கலைக்குழு போன்றவை !
 20. அழுத்தமான சூழல்களை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பது முக்கியமாய் கவனிக்கப்படும். எளிதில் டென்ஷனாகும் பார்ட்டியா நீங்கள் ? கடினமான சூழல்களில் நீங்கள் சமாளிக்க முடியுமா ? அல்லது சவால்களை நீங்கள் விரும்பி ஏற்றுக் கொள்வீர்களா ?இந்த கேள்விகளுக்கான பதில்களை கண்டறியுங்கள். அழுத்தமான சூழல்களிலும் நிதானம் தவறாமல் இலட்சியங்களை நோக்கி உழைப்பவர்களையே நிறுவனங்கள் விரும்பும்.

புதிய தலைமுறை : இதெல்லாம் தப்பு !

வேலை நமதே தொடர் – 7

Image result for Interview

“ஆமா.. என்னத்த இன்டர்வியூ, போயிட்டா மட்டும் கிடச்சுடவா போவுது” எனும் சலிப்புடன் இன்டர்வியூக்களுக்கு செல்பவர்கள் உண்டு. அவர்களுடைய மனதில் இதெல்லாம் வெறும் கண்துடைப்பு எனும் சிந்தனை வலுவாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் போர்த்துப் படுத்து தூங்குவது சாலச் சிறந்தது.

இன்டர்வியூவுக்குப் போகும் போது நல்ல பாசிடிவ் சிந்தனையுடன் போக வேண்டும். என்னால எவ்வளவு பெஸ்டா பெர்ஃபாம் பண்ண முடியுமோ அவ்வளவு பண்ணுவேன் எனும் தெளிவான முடிவுடனும் தான் போக வேண்டும். நெகடிவ் சிந்தனைகளுடன் போகவே கூடாது.

“வேலை கிடைக்காது”  என மனதில் சிந்தனை எழுந்தால் உங்களுக்கு வேலை கிடைக்காது !

நான் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம். எனக்கு தெரியாதது ஏதும் இல்லை ! என நினைப்பவர்கள் பெரும்பாலும் இந்த கீழ்க்கண்ட விஷயங்களை மனதில் வைத்திருப்பார்கள்.

 1. “எல்லாமே கண்துடைப்புக்கான இன்டர்வியூ” என்பது முதல் தவறான சிந்தனை. சில குறிப்பிட்ட இடங்களில் அது நடக்கலாம். ஒட்டுமொத்தமாக எல்லா இன்டர்வியூக்களும் தவறானவை என்று சொல்லி விடக் கூடாது.

பெரும்பாலான இன்டர்வியூக்கள் சரியான எண்ணத்தில் நடப்பவையே. ஒரு இன்டர்வியூ என்பது நிறுவனத்தின் பணம், நேரம், உழைப்பு என பல்வேறு செலவுகளை உள்ளடக்கியது. நிறுவனங்கள் பணத்தை அப்படிச் செலவு செய்யத் தேவையில்லையே. எனவே இன்டர்வியூ என்றாலே கண்துடைப்பு தான் எனும் சிந்தனையை விட்டுத் தள்ளியே நில்லுங்கள்.

 1. “எளிமையா பேசறது தப்பு” என்பது இன்னொரு சிந்தனை. அதற்காக சிலர் கஷ்டப்பட்டு கடினமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்த முயல்வார்கள். அது மிகத் தவறான அணுகுமுறை. எளிமையாய், கேட்கும் கேள்விகளுக்கான விடையைச் சொல்வதே சிறப்பானது. எளிமையான ஆங்கிலத்தில் யதார்த்தமாய்ப் பேசும் வாக்கியங்கள் தான் ரொம்ப பவர்ஃபுல்.

அதே போல நீங்கள் ஏதேனும் கேள்வி கேட்க வேண்டியிருந்தால் அதற்கும் எளிமையான கேள்விகள் போதும். ரொம்ப அறிவு ஜீவியாய் உங்களைக் காட்டிக்கொள்ள நினைத்து கஷ்டமான கேள்விகளைத் தயாராக்கி வைக்க வேண்டாம்.

இன்னொன்று, கேள்விகளைக் கேட்கும் போது ரொம்ப தர்மசங்கடமான கேள்விகளையும் கேட்காதீர்கள். அது உங்கள் மீது ஒரு தவறான முத்திரை விழக் காரணமாகி விடும். உதாரணமாக, “உங்க ஆபீஸ் மாடில இருந்து ஒரு பொண்ணு கீழே குதிச்சு தற்கொலை பண்ணிச்சாமே.. பேப்பர்ல படிச்சேன்” போன்ற கேள்விகள் முட்டாள்தனமானவை. உங்கள் வேலைக்கும், நிறுவனத்தில் இலட்சியங்களுக்கும் இடையேயான கேள்விகளே சிறந்தவை.

 1. “விடையெல்லாம் பெர்பக்டா, முழுசா, பெருசா இருக்கணும்” என்பது இன்னொரு சிந்தனை. தவறான சிந்தனை. இன்டர்வியூக்களில் எல்லா கேள்விகளுமே ஒரே பதிலை நோக்கியவையாய் இருக்காது. இந்தியப் பிரதமர் யார் – என்பன போன்ற நேரடிக் கேள்விகளுக்கு ஒரு சரியான பதில் இருக்கிறது.

ஆபீஸ்க்கு லேட்டா வந்தா என்ன காரணம் சொல்லுவீங்க என்பதற்கு ஒரே பதில் விடையாய் இருக்க முடியாது இல்லையா ? ஒரு பிரச்சினையைச் சொல்லி, இதன் தீர்வு என்ன ? என்பன போன்ற கேள்விகளுக்கும் ஒரே விடை கிடையாது. எனவே விடைகள் முழுமையாக, பெர்பெக்டாக, சரியாக இருந்தாகணும் எனும் சிந்தனையை முதலில் ஒதுக்கி வையுங்கள்.

ஒரு பதில் சொல்லும்போது எந்த நிறுவனம், எந்த வேலைக்கான இன்டர்வியூ போன்ற விஷயங்களையும் மனதில் கொள்ளுங்கள். கேள்விகளுக்கான பதில்களை உங்களுடைய பார்வையில் சுருக்கமாக தெளிவாகச் சொல்ல வேண்டும் அவ்வளவுதான்.

முழுசையும் சொல்கிறேன் என நீட்டி முழக்கினால் நாம் சொல்ல வரும் விஷயத்தை முழுமையாக கேள்வி கேட்பவர் புரிந்து கொள்ளாமல் போகலாம். மட்டுமல்லாமல் கேள்வி கேட்பவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளாமல் ஏகப்பட்ட விஷயங்களைத் திணிக்க முயல்வதும் தப்பு. அப்படி சந்தேகம் இருந்தால், “இந்தக் கேள்வியில் இந்த நான்கு அம்சங்கள் உண்டு, இதில் எதைப் பற்றி குறிப்பிட்டுக் கேட்கிறீர்கள் ?” என்பன போன்ற விளக்கக் கேள்வி கேட்டு பின்னர் பேசலாம்.

 1. “இன்டர்வியூ நடத்தறவங்க நம்முடைய குற்றம் குறைகளைத் தோண்டித் துருவிக் கேட்பதற்காக அமர்ந்திருப்பவர்கள்” எனும் எண்ணம் பலருக்கும் உண்டு. அப்படி ஒரு சிந்தனையோடு போனால் எப்படி அந்த கேள்விகளை எதிர்கொண்டு நாம் குற்றமற்றவன் என நிரூபிக்கலான் என்பதிலேயே சிந்தனை ஓடும். அந்த சிந்தனை உங்களுடைய திறமைகளைப் பற்றியும், சாதனைகளைப் பற்றியும் சொல்ல விடாமல் உங்களைத் தடுக்கும்.

உண்மையில் நீங்கள் எந்த இடத்தில் பலவீனமாக இருக்கிறீர்கள் என்பதை விட எந்த இடத்தில் பலமாக இருக்கிறீர்கள் என்பதையே இன்டர்வியூ நடத்துபவர் கவனிப்பார். ஒவ்வொரு கேள்வியையும் கவனமாய் எதிர்கொண்டு உங்களுடைய “பெஸ்ட்” பதிலைக் கொடுங்கள். நினைவில் கொள்ளுங்கள், உங்களுடைய குற்றம் குறைகளைக் கண்டு பிடிப்பதல்ல இன்டர்வியூ நடத்துபவரின் வேலை. உங்களுடைய திறமைகளை அடையாளம் காண்பதே !

 1. “ரொம்ப சீரியஸா தான் இன்டர்வியூல இருக்கணும்” – என்பது இன்னொரு தவறான சிந்தனை. பெரும்பாலான இன்டர்வியூக்களில் இன்டர்வியூ நடத்துபவர்கள் இன்டர்வியூவுக்கு வருபவர்களிடம் நட்புடன் தான் கேள்விகளைக் கேட்பார்கள்.

“நலமா ? “,

“ரூட் கண்டு பிடிக்க ரொம்ப கஷ்டப் பட்டீங்களா ?”,

“ பிரிட்ஜ் வேலை நடக்குது அதனால ரொம்ப டிராபிக்கா இருந்திருக்குமே” போன்ற சில கேள்விகளைக் கேட்டு உங்களை முதலில் இலகுவாக்கப் பார்ப்பார்கள். அதற்கு புன்னகையுடனும், இயல்பாகவும் பதில் சொல்லுங்கள்.

அந்தக் கேள்விகளுக்கான பதிலை நீட்டிக் கொண்டு போகாதீர்கள். இயல்பாக இருங்கள். அதற்காக ஜோக் அடித்து சிரித்துக் கொண்டே, ஏனோ தானோ என இருப்பது இயல்பாய் இருப்பது என நினைத்துக் கொள்ளாதீர்கள். கேள்விகளை டென்ஷன் இல்லாமல் எதிர்கொள்ளுங்கள்.

 1. “எல்லா கேள்விக்கும் பதில்” சொன்னா தான் வேலை கிடைக்கும் என்பது இன்னொரு தவறான சிந்தனை. ஒரு இன்டர்வியூவில் வேலை கிடைப்பதற்கும், கிடைக்காமல் இருப்பதற்கும் ஏகப்பட்ட காரணங்கள் இருக்கலாம். “எல்லா கேள்விக்கும் விடை சொல்லிட்டேன். வேலை எனக்குத் தான் கிடைக்கும்” என்றோ, “சரியாவே ஆன்சர் பண்ணல, சோ.. வேலை கிடைக்காது” என்றோ நாம் சொல்லி விட முடியாது.

கேள்வி கேட்பவர் நீங்கள் தகவல் களஞ்சியமா என்பதைப் பார்க்க மாட்டார். அல்லது அதை மட்டுமே கவனிக்க மாட்டார். வேறு பல விஷயங்களையும் கவனிப்பார். முக்கியமாக உங்களுடைய குணாதிசயம், இணைந்து பணியாற்றும் தன்மை, தலைமைப் பண்பு, வசீகர அணுகுமுறை இப்படி ஏதாவது சிறப்புக் காரணங்கள் உங்களை தேர்வு செய்ய வைக்கலாம்.

அல்லது அத்தகைய சிறப்புப் பண்புகளில் உள்ள குறைபாடு உங்களுக்கு தோல்வியைத் தரலாம். எனவே கேள்விகளுக்கான விடைகளை மட்டும் வைத்து வேலை கிடைக்கும் எனும் தவறான சிந்தனையிலிருந்து வெளியே வாருங்கள்.

 1. “வசீகரமா இருக்கிறவங்களுக்குத் தான் வேலை” கிடைக்கும் என்பது இன்னொரு மாயை. அலுவலகங்கள் மாடல்களை வேலைக்கு எடுப்பதில்லை, வேலை செய்வதற்கான ஊழியர்களையே தேர்ந்தெடுக்கிறது.

எனவே உங்களுடைய தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியே வாருங்கள். அழகாய் இருக்கும் ஆண்கள் தான் வேலைக்குச் சேரவேண்டுமெனில் இன்றைக்கு மக்கள் படிப்பதற்குப் பதிலாக பியூட்டி பார்லர்களைத் தஞ்சமடைந்திருப்பார்கள்.

நேர்த்தியான ஆடை, தன்னம்பிக்கையான புன்னகை இவை இரண்டும் இருந்தாலே உங்களை அழகாய்க் காட்டி விடும்.

சில ஆய்வுகள் அழகாய் இருக்கும் பெண்கள் எளிதில் வேலை வாங்குவதாக குறிப்பிட்டுள்ளன. அதே நேரத்தில் கவர்ச்சிகரமான உடை அணிந்த பெண்கள் வேலைக்கு எளிதில் சேர்வதில்லை என்றும் சில ஆய்வுகள் சொல்லியிருக்கின்றன.

அத்தகைய ஆய்வுகளெல்லாம் மிக மிகக் குறிப்பிட்ட சதவீதத்துக்குள் அடங்கிவிடும். நிறுவனங்கள் இன்றைக்கு மிகவும் தரம் வாய்ந்த ஊழியர்களையே தேடுகிறது. காரணம் அவை பார்ப்பது மூன்று விஷயங்களை. காஸ்ட், குவாலிடி மற்றும் டைம்.

குறைந்த செலவில் வேலை செய்து முடியவேண்டும், நல்ல தரத்தில் இருக்க வேண்டும், குறைந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். அதுவே முக்கியம். எனவே உங்களுடைய தோற்றம் குறித்த சிந்தனையை ஒதுக்கித் தள்ளுங்கள்.

 1. “எல்லாமே தெரிஞ்சது மாதிரி காட்டிக்கணும்” – என்பது இன்னொரு தவறான சிந்தனை. அது தேவையில்லை. எல்லாம் தெரிந்த மனிதர்கள் இல்லை. எதுவும் தெரியாத மனிதர்களும் இல்லை. கேள்வி கேட்பவர்களுக்கும் நிறைய விஷயங்கள் தெரியாது. பதில் சொல்பவர்களுக்கும் பல விஷயங்கள் தெரியாது. எனவே கேட்கும் கேள்விகளில் உங்களுக்கு சுத்தமாகத் தெரியாத கேள்விகள் இருந்தால். “மன்னிக்கவும், எனக்குத் தெரியவில்லை. அதை நான் கற்றுக் கொள்ள முடியும் என நம்புகிறேன்” என்ற பதிலையே சொல்லுங்கள்.

ஒருவேளை கேட்ட கேள்விக்கான பதில் அரைகுறையாய்த் தெரியுமெனில். “எனக்குச் சரியாகத் தெரியாது, ஆனால் என்னுடைய புரிதலின் அடிப்படையில் அதை விளக்க முயலவா ?” என்று கேட்டு விட்டு பதில் சொல்வது நல்லது. தெரிந்தவற்றை தன்னம்பிக்கையோடு சொல்வதும், தெரியாதவற்றை மறைக்காமல் ஒத்துக் கொள்வதும் இரண்டுமே முக்கியமான தேவைகள். அதனால எல்லாமே தெரிஞ்சமாதிரி காட்டிக்கணும் தவறான விஷயத்திலிருந்து வெளியே வாங்க.

 1. “புடிக்கலேன்னா ஓவர் குவாலிஃபைட்” ந்னு சொல்லிடுவாங்க எனும் சிந்தனை பலருக்கும் உண்டு. ஓவர் குவாலிஃபைட் ந்னு வயசானவங்களைத் தான் சொல்லுவாங்க என சிலர் சொல்வதையும் கேட்டிருக்கிறேன்.

ரொம்ப போட்டுக் குழப்பிக்காதீங்க. ஓவர் குவாலிஃபைட் ந்னு சொன்னால், அந்த வேலைக்குத் தேவையான தகுதியை விட அதிக தகுதி உங்களுக்கு இருக்கு என்பது தான் அதன் பொருள். சொல்லாத பொருளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

ஒரு வேளை இளங்கலைப் பட்டம் தான் எதிர்பார்ப்பு என இருக்கும் நிலையில் நீங்கள் பி.ஹைச்.டி யோடு போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஓவர் குவாலிஃபைட் என்பார்கள். இளங்கலை என்றால் 10 ஆயிரம் சம்பளம் கொடுத்தால் போது. உங்களுக்கு அதிகம் தரவேண்டி இருக்கும். செலவு அதிகமாகும் அது தான் மேட்டர்.

 1. எங்கிட்டே ரொம்ப நேரம் பேசலை, சோ வேலை கிடைக்காது. இதுவும் ஒரு தவறான அபிப்பிராயம் தான். ஒரு நபரை முதல் சில நிமிடங்களிலேயே எடை போட்டு விடுவார்கள். அதன்பின் சரியாய் எடை போட்டிருக்கிறோமா என்பதை கேள்விகள் மூலம் பரிசோதித்துப் பார்ப்பார்கள் அவ்வளவு தான்.

எனவே, கொஞ்சம் நேரம் பேசினால் வேலை கிடைக்காது. ரொம்ப நேரம் பேசினால் கிடைக்காமல் இருக்காது போன்ற சிந்தனைகளை விட்டு விடுங்கள்.

அடுத்த முறை இன்டர்வியூ செல்லும்போது இத்தகைய தவறான அபிப்பிராயங்கள் இருந்தால் அதை மாற்றி விட்டு தன்னம்பிக்கையோடு சென்று வாருங்கள், வென்று வாருங்கள்.

பத்து கட்டளைகள்

 1. பாசிடிவ் மனநிலையோடு இருங்கள், நெகடிவ் சிந்தனைகளை ஒதுக்குங்கள்.

 1. எல்லா தேர்வுகளும் கண்துடைப்புக்கானதல்ல. பெரும்பாலானவை நேர்மையானவையே.

 1. எளிய ஆங்கிலத்தில் பிழையின்றி பேசுங்கள். கடின வார்த்தைப் பிரயோகங்கள் தேவையில்லை.

 1. உங்களுக்குத் தெரிந்தவற்றைச் சொல்லும் இடம் இது. உங்களைக் குற்றம் கண்டுபிடிக்க யாரும் முயல்வதில்லை.

 1. இயல்பாய் இருங்கள். ரொம்ப சீரியஸாய் இருக்கத் தேவையில்லை.

 1. தெரியாத கேள்விகள் இருக்கலாம் பதட்டப்படத் தேவையில்லை. எல்லா கேள்விகளுக்கும் விடை சொன்னால் தான் வேலை கிடைக்கும் என்பதில்லை.

 1. உடல் அழகு வேலை வாங்கித் தராது. நேர்த்தியாய் ஆடை அணிந்து புன்னகையுடன் இருங்கள் போதும்.

 1. எல்லாமே தெரிந்தமாதிரி காட்டிக்கொள்ளத் தேவையில்லை.
 2. ரொம்ப நேரம் பேசினா தான் வேலை கிடைக்கும் என நினைக்காதீர்கள்.

 1. தன்னம்பிக்கை மிளிர, புன்னகையோடு, தைரியமாய்ப் பேசுங்கள். வணக்கம் சொல்லி ஆரம்பித்து, நன்றி சொல்லி விடைபெறுங்கள்.

புதிய தலைமுறை : எழுத்துத் தேர்வு

வேலை நமதே தொடர் – 6

Related image

முதன் முதலாக ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்குப் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக ஐடி போன்ற நிறுவனங்களுக்கு வேலைக்கு முயற்சி செய்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். “எழுத்துத் தேர்வு” நிச்சயம் இருக்கும். உலக அளவில் 70% நிறுவனங்கள் எழுத்துத் தேர்வை தங்களுடைய செலக்ஷன் முறைகளில் ஒன்றாக வைத்திருக்கின்றன.

எழுத்துத் தேர்வு கட்டத்தைத் தாண்டாமல் அடுத்தடுத்த‌ நிலைகளுக்குப் போக முடியாது. எனவே இதை கொஞ்சம் சீரியசாகவே மனதில் கொண்டிருங்கள்.

எழுத்துத் தேர்வுக்கு தயாராகும் காலகட்டம் கல்லூரியில் படிக்கும் காலம் தான். படிக்கும் போதே இன்டர்வியூவுக்கான சிந்தனைகளும் மனதில் இருக்கட்டும். இப்போதெல்லாம் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே பள்ளிக்கூடங்களில் இத்தகைய தேர்வுகளுக்கான பயிற்சிகளை ஆரம்பித்து விடுகிறார்கள். அல்லது பள்ளி நேரத்துக்குப் பிறகு தனியார் வகுப்புகள் மூலம் இத்தகைய பயிற்சிகளைக் கொடுக்கின்றனர். கல்லூரி முடித்து விட்டு வெளியே வரும்போது இந்த தேர்வுக்கு நீங்கள் நன்றாகத் தயாராகி வரவேண்டும் என்பதை மனதில் வைத்திருங்கள்.

தேர்வுகள் பெரும்பாலும் இரண்டு கட்டமாக நடக்கும். ஒன்று டெக்னிகல் தேர்வு. இந்த டெக்னிகல் தேர்வில் பெரும்பாலும் நீங்கள் படித்த பாடங்களிலிருந்து தான் கேள்விகள் வரும். படிக்கும் போது ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயத்தையும் கவனித்துப் படியுங்கள். தேர்வில் மதிப்பெண் எடுக்க வேண்டும்ம் எனும் ஒரே நோக்கில் மனப்பாடம் செய்வதைத் தவிருங்கள். எந்த வேலைக்காக முயற்சி செய்கிறீர்களோ அந்த தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களைக் கொஞ்சம் விரிவாகவே தெரிந்து வைத்திருங்கள்.

டெக்னிகள் தேர்வுக்காக‌, கணிதம், அறிவியல் போன்ற பாடங்களுக்கு அதிக கவனம் கொடுத்து படியுங்கள். அந்த பாடங்களின் நுணுக்கங்கள் தான் பெரும்பாலும் டெக்னிகல் தேர்வில் கேட்கப்படும். கணினி துறையெனில் கணினி சார்ந்த விஷயங்களும் இருக்கும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

இரண்டாவது, உளச்சார்பு எனப்படும் ஆப்டிடியூட் தேர்வு. இன்றைய டிஜிடல் உலகில் எந்தக் கேள்விக்கான விடையையும் இணையத்திலிருந்து மிக எளிதாகப் பொறுக்கி எடுக்க முடியும். அல்லது அது சார்ந்த அதிகப்படியான விஷயங்களை மிக எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும். ஆனால் தனிநபர் சிந்தனை வலிமை, சிந்திக்கும் வேகம், வித்தியாசமாய் சிந்திப்பது போன்றவற்றை இணையம் அதிகரிக்காது. அது நமக்கு இயல்பாகவே இருப்பது மற்றும் நமது பயிற்சிகளின் மூலமாக வலுவாக்கிக் கொள்வது.

இன்றைய நிறுவனங்கள் வெறுமனே கேள்விகளுக்குப் பதில் சொல்லும் மாணவர்களை வேலைக்கு எடுப்பதில்லை. கேட்கும் கேள்விகளுக்கான விடைகளை வித்தியாசமாய்ச் சிந்திக்கும் இளைஞர்களே அவர்களுக்குத் தேவை. எனவே உங்கள் சிந்தனையை வலுப்படுத்தும் ஆப்டிடியூட் கேள்விகளை நிறைய பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.

சிலர் சோடுகு போன்ற எண் விளையாட்டுகளை மிக எளிதாக ஊதித் தள்ளுவார்கள், சிலருக்கு அது குதிரைக் கொம்பு. சிலர் செஸ் விளையாட்டில் பின்னிப் பெடலெடுப்பார்கள், சிலருக்கு அது பயமுறுத்தும் விளையாட்டு. உண்மையில், சரியான பயிற்சி எடுத்துக் கொண்டால் சொடுகு வையோ, செஸ்ஸையோ நீங்கள் எளிதில் வசப்படுத்தி விட முடியும். கடினம் எனத் தோன்றும் விஷயம் முயற்சியும், பயிற்சியும் இருந்தால் கைவரும்.

இந்த ஆப்டிடியூட் தேர்வு விஷயமும் அப்படித் தான். இன்றைக்கு இணையத்தில் பல்லாயிரக் கணக்கான மாதிரி தேர்வுகள் கிடைக்கின்றன. அதைப் பார்த்து நீங்கள் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். ஸ்மார்ட்போன் ஆப்ஸ் பல கல்வி சார்ந்து கிடைக்கின்றன, தேவைக்கேற்ப அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய டெக்னாலஜி ஏதும் வேண்டாம் என நினைப்பவர்களுக்கு, கடைகளிலும் ஏராளம் புத்தகங்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த எழுத்துத் தேர்வுக்கு நுழைவதற்கே உங்களுடைய மதிப்பெண் ஒரு மிகப்பெரிய காரணியாய் இருக்கும். எனவே பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போது அதிக மதிப்பெண் பெறவேண்டும் எனும் இலக்கை விட்டு விலகாதீர்கள். ஒரு காலத்தில் அறுபது விழுக்காடு என்பது நல்ல மதிப்பெண். இன்றைக்கு தொன்னூறு விழுக்காடு என்பதே சர்வ சாதாரணமாகி விட்டது. எனவே மதிப்பெண்ணிலும் கவனம் செலுத்துங்கள். குறிப்பிட்ட அளவு மதிப்பெண்கள் எடுக்காத மாணவர்கள் எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த எழுத்துத் தேர்வுகள் பெரும்பாலும் வடிகட்டும் முயற்சியே. நூறு பேர் தேவைப்படும் இடத்திற்கு ஆயிரம் பேர் வருகிறார்கள் என‌ வைத்துக் கொள்ளுங்கள். எல்லோரையும் தனித்தனியே இன்டர்வியூ செய்வது சாத்தியமில்லை. எனவே முதலில் எல்லோருக்கும் ஒரு எழுத்துத் தேர்வு நடக்கும். அதில் டாப் 100 பேரை தேர்ந்தெடுப்பார்கள். சிம்பிள் !!

நிறைய தேர்வுகளை எழுதிய அனுபவம் உங்களுக்கு இருக்கும். எனவே பதட்டப்படத் தேவையில்லை. இங்கே கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வாய்ப்பு அதிகம். சில வேளைகளில் ஒரே கேள்வி இரண்டு தடவை கேட்கப்படலாம். அதன் விடைகளை நீங்கள் இரண்டு விதமாகச் சொன்னீர்களெனில் உங்களுக்கு விஷயம் தெரியவில்லை, குருட்டாம் போக்கில் எ,பி,சி,டி என டிக் அடிப்பதாய் நினைக்க வாய்ப்பு அதிகம். உங்கள் மீதான மரியாதை குறையும்.

தொடர்ச்சியாக பல கேள்விகளுக்கு விடை “எ” அல்லது “பி” என வருவதுண்டு. எல்லாத்துக்கும் ஒரே ஆன்சர் வராதே என உங்களைக் குழப்பும் உத்தி இது. எனவே அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். எது சரியென தோன்றுகிறதோ அதை நீங்கள் தைரியமாக டிக் செய்யுங்கள்.

தேர்வு நேரத்தில் டென்ஷன் தேவையில்லை. எத்தனையோ தேர்வுகளை நீங்கள் எழுதியிருப்பீர்கள். எனவே ஒரு எக்ஸ்ட்ரா டென்ஷன் தேவையில்லை. அப்படி ஒரு தேர்வு என்றே நினைத்து எழுதுங்கள். ரிலாக்ஸாக இருப்பது தேர்வில் வெற்றி பெற முதல் தேவை !

டைம் ரொம்ப முக்கியம். சரியான நேரத்தில் தேர்வு முடிந்து விடும். இப்போது நிறைய தேர்வுகள் ஆன்லைனிலேயே தருகின்றனர். நீங்கள் கணினியிலேயே விடைகளை அமுக்கிக் கொண்டே செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே அது முடிந்து விடும். எனவே தேர்வு எழுதும்போது நேரத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பக்கத்தை ரொம்பக் கவனமாகப் படியுங்கள். அதில் சில சர்ப்ரைஸ் விஷயங்கள் இருக்கக் கூடும். விதிமுறைகளைப் படித்து விட்டு பதில் எழுதத் தொடங்குங்கள். முதல் பத்து கேள்விகளுக்கு எந்த மதிப்பெண்களும் கிடையாது என ஒரு விதிமுறை இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் அந்த கேள்விகளை விட்டு விட்டு அடுத்த கேள்விக்கு தாவலாம். விதிமுறைகள் படித்தால் மட்டுமே இது சாத்தியம்.

தெரிந்த கேள்விகளுக்கான விடைகளை முதலில் எழுத வேண்டும் என்பது சின்ன வயதிலிருந்தே நமக்கு ஆசிரியர்கள் சொல்லித் தரும் பாடம். அதை மறக்காதீர்கள். பென்சில் பேனா போன்ற தேவையான பொருட்களைக் கொண்டு செல்வது, தண்ணி பாட்டில் கொண்டு செல்வது போன்ற குட்டிக் குட்டி விஷயங்கள் மனதில் இருக்கட்டும்.

தேர்வுகளில் உங்களுடைய சரியான விடைகள் மட்டுமே உங்களுடைய திறமையைச் சொல்லும். நேர்முகத் தேர்வு போல இங்கே பாரபட்சங்களுக்கு இடமில்லை. உங்களுடைய தோற்றமோ, உடையோ, உடல்மொழியோ இங்கே தெரிவதில்லை. எனவே உங்களுடைய உண்மையான திறமையை தேர்வாளர்கள் அறிந்து கொள்ளும் ஒரு எளிய வழி இது.

பர்சனாலிடி தேர்வு எனப்படும் உங்களுடைய தனித்தன்மை குறித்த கேள்விகள் ஆங்காங்கே இருக்கும். அவற்றுக்கு கவனமுடன் பதிலளியுங்கள். உங்களுடைய குணாதிசயம், உங்களுடைய தீர்வு சொல்லும் திறன் ஆகிய அனைத்தும் இதன் மூலம் பரிசோதிக்கப்படும்.

ஒரு கேள்விக்கு முப்பது முதல் அறுபது வினாடிகள் என்பது தான் பொதுவான கணக்கு. அந்த நேரத்துக்குள் நீங்கள் சரியான விடையை கண்டு பிடிக்க வேண்டும். அல்லது ஊகிக்க வேண்டும். ஒரு கேள்விக்குத் தரப்பட்டிருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானது போல தோன்றவும் வாய்ப்பு உண்டு. அத்தகைய சூழல்களில் ‘ரொம்பச் சரி’ யாய் இருக்க சாத்தியமுள்ள விடையைத் தேர்ந்தெடுங்கள்.

எழுத்துத் தேர்வாய் இருந்தால் கூட நேர்த்தியான உடை உடுத்தி அலுவலகம் செல்லுங்கள். உங்களுடைய நடவடிக்கைகளைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

Image result for Written test girl

பத்து கட்டளைகள்

 1. தேர்வுக்கு சரியான நேரத்தில் செல்லுங்கள். தேவையான விஷயங்களை எடுத்துச் செல்லுங்கள்.
 2. டெக்னிகல் தேர்வு, ஆப்டிடியூட் தேர்வு இரண்டும் நிச்சயம் இருக்கும், தயாராகிக் கொள்ளுங்கள்.
 3. தேவையான அளவு பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். இணையம் ஒரு வரப்பிரசாதம், இணையத்தில் ஏராளமான பயிற்சி விஷயங்கள் இருக்கின்றன அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 4. விதிமுறைகளைக் கவனமாகப் படித்து விட்டு தேர்வு எழுதத் துவங்குங்கள்.
 5. தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதில் எழுதுங்கள். நேரம் ரொம்ப முக்கியம், குறிப்பிட்ட நேரத்தில் முடியுங்கள்.
 6. கல்லூரியில் அதிகபட்ச மதிப்பெண் பெறுங்கள். அது முக்கியம், அதுவே உங்களுடைய நுழைவுத் தகுதி.
 7. உங்களைக் குழப்பும் கேள்விகள் பல இருக்கும் பொறுமையாய் பதிலளியுங்கள்.
 8. ஒரே கேள்வி பல முறை வந்தாலும் ஒரே விடையை அளியுங்கள். அவை உங்கள் குணாதிசயத்தை சோதிக்கும் கேள்விகள்.
 9. பல கேள்விகளுக்கு ஒரே விடை வந்தாலும் அதையே அளியுங்கள்.
 10. நேர்த்தியான ஆடை அணிந்து, நேர்முகத் தேர்வுக்குச் செல்வது போலவே செல்லுங்கள்.