சிறுவர் பேச்சுப் போட்டி : இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயர கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்

அவையோருக்கு என் அன்பின் வணக்கம்.

குலோத்துங்க சோழ மன்னனின் மணி சூட்டும் விழாவுக்கு வந்திருந்தார் ஔவைப் பாட்டி. வந்திருந்த புலவர்களெல்லாம் பாக்களைப் பாடி மன்னனைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். ஔவைப் பாட்டியின் முறை வந்தபோது அவர் எழுந்தார். “வரப்புயர…” என்று ஒரே ஒரு வார்த்தை சொல்லிவிட்டு அமர்ந்தார்.

அரசவை அமைதியானது.
எல்லோரும் குழம்பினர்.

ஒற்றை வார்த்தையில்
ஒப்பற்ற மன்னனுக்குப் பாராட்டா ? அதுவும் வாழ்க எனும் வார்த்தை கூட அதில் இல்லையே என திகைத்தனர்.

மன்னர் கேட்டார், புலவரே நீர் சொன்ன வார்த்தையின் பொருள் என்ன ?

ஔவைப் பாட்டி அழகாய் விளக்கினார். மன்னரே வரப்பு உயர்ந்தால் தான் வயலில் நீர் அதிகம் நிற்கும். அப்படி நின்றால் தான் நெல் விளைச்சல் அமோகமாக இருக்கும். அப்படி விளைந்தால் தான் மக்கள் சுபிட்சமாக இருப்பார்கள். மக்கள் நலமாக இருந்தால் தான் அது நல்ல ஆட்சி என புகழப்படும். நல்ல ஆட்சி என புகழப்படுவது தான் ஒரு மன்னனுக்கு மிகப்பெரிய பாராட்டு என்றார் ஔவை. அவை மகிழ்ச்சியில் நிறைந்தது. இதைவிடப் பெரிய புகழ்ச்சி இல்லையென மன்னனும் நெகிழ்ந்தான்.

வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. அது கம்பீரமாக இருக்கும் போத் தான் ஒரு நாடு நிமிர்ந்து நிற்கும். இன்றைக்கு வேளாண்மையின் பயனை பலரும் உணரவில்லை. பலரும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே பெரிது என தப்புக் கணக்கு போடுகின்றனர். உழவு இல்லையேல் வாழ்வு இல்லை. உழவு இல்லையேல் உயர்வு இல்லை.

அந்த வேளாண்மையும் நமது முன்னோர்கள் காட்டிய வழியில் இயற்கையாய், இயற்கையினால் அமையும் போது தான் உடலுக்கும், சுற்றுப் புறத்துக்கும் பயனுள்ளதாக மாறுகிறது.

விரைவாய் விளைச்சல் வேண்டுமென்றும், அதிக விளைச்சல் வேண்டுமென்றும் பேராசைப்படும் மனித இனம், செயற்கை உரங்களைக் கொண்டு விளைச்சலை உருவாக்குகிறது. இது தானியங்களின் தரத்தைப் பாதிக்கிறது. நிலத்தின் வளத்தை அழிக்கிறது. உண்பவர்களின் நலத்தைக் கெடுக்கிறது. மொத்தத்தில் மனுக்குலத்துக்கே ஆபத்தாய் மாறுகிறது.

இயற்கைக்குத் திரும்புவோம்.

மண்புழு என்பது மண்ணின் தோழன்,
செயற்கை உரத்தால் அதை சாகடிக்காதிருப்போம்.

மரபு விதைகள் நமது உழவு விதைகள்.
அதை கலப்பின விதைகளால் அழிக்காதிருப்போம்.

சாகுபடி விதிகள் நம் முன்னோரின் மொழிகள்.
அதை நவீனத்தின் கதைகளால் மறக்காதிருப்போம்.

கால்நடைக் கழிவுகள் வளத்தின் தோழர்கள்
மேனாட்டு விஷத்தால் அதை விரட்டாதிருப்போம்

உழவன் என்பவன் உலகத்தின் மையம்
வறுமையால் அவனைக் கொல்லாதிருப்போம்.

இயற்கைக்குத் திரும்புவோம், வாழ்க்கை வளம் பெறும்.
உழவினை விரும்புவோம், மனுக்குலம் நலம் பெறும்

உழவை விட்டுவிட்டு எதையும் வாழ்வில் சிந்திப்பது அறிவீனம். எனவே தான் வள்ளுவர் சொன்னார்

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை !

உழவினை மதிப்போம், உழவனை மதிப்போம் எனக் கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்

*

SCHOOL ESSAY : பெண்கல்வி

Image result for women education

முன்னுரை 

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். ‍ என கல்வியின் மேன்மையைப் பற்றி உலகப் பொதுமறையாம் திருக்குறள் பேசுகிறது. மனிதனின் ஆறறிவை செழுமையாய் வைத்திருப்பதில் கல்வி மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இந்தக் கல்விக்கு ஆணென்றும், பெண்ணென்றும் பேதமில்லை. மனிதராய்ப் பிறந்த அனைவருமே கல்வி கற்கவேண்டியது அவசியம். அப்படிப்பட்ட கல்வி இன்று பெண்களுக்குக் கிடைக்கிறதா ? இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் போன்றவற்றை நாம் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

பொருளுரை

1. இந்தியாவின் சவால்

வளர்ந்த நாடுகளைப் போல குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள் இந்தியாவில் இல்லை. சுமார் முப்பது இலட்சம் குழந்தைகள் இன்னும் தெருக்களில் வாழ்கின்றனர். இன்னும் ஒன்றரை கோடி சிறுவர் சிறுமியர் கொத்தடிமைகளாக வேலைசெய்கின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். சுமார் பதினெட்டு சதவீதம் பெண் குழந்தைகள் தங்களது பதினைந்தாவது வயதைக் கூட காணாமல் மடிந்து விடுகின்றனர். ஆண்டுக்கு பத்து இலட்சம் குழந்தைகள் முதல் பிறந்த நாளைக் காணாமலேயே இறந்து விடுகின்றன. இந்தியாவின் எதிர்காலம் குழந்தைகளிடம் என்கிறோம். ஆனால் அவர்களுக்கு அடிப்படை வசதிகளே இல்லை. உணவு, உடை, உறைவிடமே இல்லாத சூழலில் கல்வியை வழங்குவது நமது தேசத்தின் முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால்.

2. பெண்கல்வியின் நிலை

இந்தியாவில் இன்று கல்வியறிவு பெற்ற பெண்கள் வெறும் 54.16 சதவீதம் தான். ஆண்களில் சுமார் 76 சதவீதம் பேர் அடிப்படைக் கல்வி அறிவைப் பெற்றிருக்கின்றனர். நகர்புறம், கிராமப்புறம் எனும் வேறுபாடு எதுவும் இன்றி பெண்களுக்கான கல்வி குறைவாகவே இருக்கிறது. கேரளா, தமிழகம் உட்பட சில மாநிலங்கள் கல்வியில் வளர்ச்சி நிலையை நோக்கி நகர, வட மாநிலங்களான பீகார் போன்றவை கல்வியில் மிகவும் பிந்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன.

3. நமது சமூக அமைப்பு

நமது சமூக அமைப்பு பெண்கல்வியை ஊக்குவிக்கவில்லை. பெண்கள் வீட்டை ஆள வேண்டும், ஆண்கள் நாட்டை ஆளவேண்டும் என பிரித்திருந்தன. எனவே பெண் என்பவள் வீட்டு வேலைகளைச் செய்து, குழந்தைகளையும் கணவனையும் கவனிப்பவராக மாறிப் போனார். ஆண்கள் கடும் உழைப்பைச் சிந்தி வீட்டுக்கான பொருளாதாரத் தேவையை நிறைவேற்றும் பணியை மேற்கொண்டார்கள். வீட்டை ஆளும் பெண்களுக்கு கல்வி தேவையில்லை என்பது ஆணாதிக்க மனநிலையாய் இருந்தது.

4. இன்றைய சமூக மாற்றம்.

இன்றைய உலகம் பெண்கல்வியை ஊக்கப்படுத்துகிறது. பெண்கள் கல்வியறிவு பெற்று பல்வேறு உயர் பதவிகளை இன்று வகிக்கின்றனர். நாட்டின் தலைவர்களாகவும், பெரிய நிறுவனங்களின் தலைவர்களாகவும் பெண்கள் இன்று இடம்பிடித்திருக்கின்றனர். சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வே இதன் காரணமாகும். இன்றைய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆண்களுக்கு இணையான அளவு பெண் ஊழியர்களும் இருக்கின்றனர். ஆனாலும் உயர் பதவிகளைப் பொறுத்தவரை சுமார் 80 சதவீதம் பதவிகள் ஆண்கள் வசமே இருக்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.

பெண்கல்வி எங்கும் கிடைக்கும் போது நமது நாட்டின் வறுமை நிலையும் மறையும். பொருளாதாரம் வளர்ச்சியடையும். சமூகம் மறுமலர்ச்சியடையும்.

5. பெண்கல்வியின் தேவை

பெண்கல்வி நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. குழந்தைகளை வளர்க்கும் பெரும் பொறுப்பு இன்றைக்கு பெண்களிடம் தான் இருக்கிறது. பெண்களின் கல்வியறிவு சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு சரியான அறிவையும், அறிவுரைகளையும் வழங்க உதவும். குடும்பத்தின் பொறுப்புகளைச் சுமக்கின்ற பெண் வேர்களைப் போன்றவர். வேர்கள் வலுவாக இருக்கும் போது தான் மரம் செழுமையாக இருக்க முடியும். பெண்கல்வி அந்த வேர்களை பலப்படுத்தும். இதன் மூலம் குடும்பம் வலிமையாகும். குடும்பம் வலிமையாகும் போது ஒரு சமூகம் வலிமையாகும். சமூகம் வலிமையாகும் போது நாடு வலிமையடையும்.

6. பெண் சமத்துவம்

பெண்கல்வி பெண்களுக்கு சமூகத்தில் தனி மரியாதையைப் பெற்றுத் தருகிறது. ஆணுக்கு இணையாகவோ, ஆண்களை விட பெரிய அளவிலோ பெண்கள் வளர பெண்கல்வியே மிகவும் தேவையாகிறது. ஆணும் பெண்ணும் சமம் எனும் நிலை சமூகத்தில் உருவாகவேண்டுமெனில் பெண் கல்வி மிகவும் அவசியம்.

பண்டைய உலகில் வேலை செய்ய உடல் உழைப்பு மிக அதிகமாகத் தேவைப்பட்டது. எனவே வலிமையுடைய ஆண்கள் வேலைக்குச் செல்வது சகஜமாய் இருந்தது. இன்றைய உலகை மன பலமும், அறிவு பலமும் தான் ஆள்கின்றன. புஜ பலம் அல்ல. எனவே அறிவார்ந்த சமூகமே இன்றைய தேவை. அதற்கு பெண்கல்வி அவசியம்.

7. பெண் துணிச்சல்

கல்வி ஒரு மனிதனுக்கு துணிச்சலைக் கொடுக்கிறது. அதிலும் குறிப்பாக மென்மையான பெண்களுக்கு கல்வி தான் மிகப்பெரிய துணிச்சல் ஆயுதமாய் இருக்கிறது. சங்க காலத்துப் பெண்கள் உடல் வலிமையிலும், மன வலிமையிலும் சிறந்து தான் விளங்கினர். இடைக்காலத்தில் தான் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என பெண்களின் வலிமையை உடைத்தனர். ஆனால், பாரதிதாசன் போன்ற பல கவிஞர்கள் பெண்கல்விக்கு ஆதரவாக வலிமையான பாடல்களை எழுதினர்.

கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம்
அந்நிலத்தில் புல் விளைந்திடலாம் ! நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை !’

எனும் பாரதிதாசனின் பாடல் ஒரு உதாரணம்

முடிவுரை

பெண்கல்வி என்பது புள்ளி விவரங்களை பலப்படுத்த அல்ல, பூமியை வலுப்படுத்த. வெறுமனே வீட்டு விளக்காய் இருக்கும் பெண்கள், ஏடெடுத்துப் படித்து நாட்டுக்கே வெளிச்சம் வீசுபவர்களாக மாற வேண்டும். பெண் என்பவள் சமூகத்தின் விதை. விதைகள் வலுவாக இருக்கும் போது தான் செடிகள் வலுவடையும். அவை தான் வளமான கனிகளைத் தர முடியும். தனிமனித வளர்ச்சி, குடும்ப வளர்ச்சி, சமூக வளர்ச்சி, நாட்டு வளர்ச்சி என அனைத்திற்கும் மிக முக்கியமான