கவிதை : பெத்த மனசு

Xavi.wordpress.com1

.

சும்மா சும்மா
ஊரைச் சுத்திட்டு இரு
செக்கு மாடாட்டம்.

படிப்பும் வேலையும்
லேகியம் மாதிரி
பாட்டில்ல வராதுடா
உருட்டி விழுங்க…

ஏழு கழுதை வயசாச்சு
பொறுப்பு மட்டும் வரலை
பொறுக்கிப் பசங்க சகவாசம்
இன்னும் விடலை.

அப்பாவின் திட்டுகளில்
இல்லாத தன்மானம்
சொல்லாமல் எழும்ப
வெளியேறும் மகனை,

கொல்லையில் நிறுத்தி
சொல்லுவாள் அன்னை.
‘மத்தியானம் மறக்காம
சாப்பிட வந்துடுப்பா’

நன்றி : கல்கி

கவிதை : இரவின் பாதையில்

கைத்தடி உடைந்த
குருட்டுக்கிழவன்போல்
தடுமாறி நகரும் கும்மிருட்டு.

சின்ன வாய்க்காலின் எல்லையில்
தென்னம் ஓலைகளோடு
ஒப்பந்தம் செய்து கொண்ட என் குடிசை.

காலையில் பெய்த மழையில்
தலைக்குளித்து
மாலை வெயிலில் மஞ்சள் பூசி
கருப்புக் கரைத்த காற்றுடன்
தலையசைத்துப் பேசிக்கொண்டிருக்கும்
அந்த நீள வயல்..

சேற்றுக் குழிகளுக்குள்
குரல்வளை நொறுங்க
கத்திக் கொண்டிருக்கும்
ஈரத்தவளைகள்.

சொட்டுச் சொட்டாய்
தென்னைமரம் உதிர்க்கும்
சேமிப்புத் துளிகளின்
சலங்கைச் சத்தம்.

சுவர்க்கோழிகளின் ரீங்காரத்தில்
தூக்கம் கலைந்து
சுவடு சுவாசித்து அலையும்
எறும்புக்கூட்டங்கள்
வழிமாறிக் கடிக்கும் குத்தூசிச் சின்னங்கள்

ஆங்காங்கே கும்மிருட்டுக் குடிசை
திண்ணைகளில் கூந்தலசைத்துச்
சிரிக்கும்
மண்ணெண்ணை தீபங்கள்.

போர்வைகளைத் துளைக்கும்
சில்மிஷக்காற்று..

கவிதை போல் காதுகளுக்குள்
கூடாரமடித்துக் கிடக்கும்
ஓர் மழைக்காலக் குருவியின்
மழலைப்பாடல்.

கை தொடும் தூரத்தில்
விட்டத்தில் கட்டிய தொட்டிலில்
விரல் மடித்துக் கடித்துக் கிடக்கும்
என் மூன்று மாதக் குழந்தை..

தொட்டில் கயிறின் முனைபிடித்து
படுக்கைக் கரையில்
முந்தானை முனைகள் மெலிதாய்க் கலைய
விரல் தொடும் தூரத்தில்
அழகாய்த் துயிலும் என் வெண்ணிலா.

மழலைக்காய் அவள் இசைக்கும்
தாலாட்டில் தான்
தூங்கிப் போகவேண்டுமென்று
ஆழமாகிப் போன பின்னிரவிலும்
பிடிவாதமாய் விழித்திருக்கிறது
என்
ஒற்றை மனசு.

(கவிதைப் போட்டி ஒன்றில் கவிஞர் பாவண்ணன் அவர்களால் முதல் பரிசுக்குரியதென தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை )

அம்மாவின் கடிதம்

 

அம்மாவின்
தடுமாறும் எழுத்துக்களில்
நெளியும்
பாசத்தின் வாசனை
சுமந்து வரும்
இன்லெண்ட் லெட்டர்கள்
இல்லாமல் போய்விட்டன.

மடிக்கும் இடங்களிலும்
ஒடித்து ஒடித்து எழுதி அனுப்பும்
அப்பாவின்
நலம் விசாரித்தல் சுகம்
தொலைந்துவிட்டது.

தபால் அட்டைகளில்
விலாசத்துக்கான இடஒதுக்கீடையும்
அரைமனதுடன்
அனுமதிக்கும்
கடுகுமணி எழுத்துக்களும்
காணாமல் போய்விட்டன.

தனிமை வறுக்கும்
பின்னிரவுப் பொழுதுகளில்
நெஞ்சோடு அணைத்துத் தூங்க
கசங்கிப் போன
கடுதாசிகளே இல்லையென்றாகிவிட்டது.

தொலை பேசிகளும்
கைபேசிகளும்
மின்னஞ்சல்களும்
கடுதாசிக் கலாச்சாரத்தை
விழுங்கிச் செரிக்க,

நவீனங்களின் வளர்ச்சி
தத்தெடுத்துக் கொண்ட
என்
மின்னஞ்சல் பெட்டிகளிலும்
கிராமத்துப் புழுதிநெடியின்றியே
வந்து அமர்கின்றன
தகவல்கள்.

கல்வெட்டிகளின் காலடியில்
கசிந்துருகும்
இயலாமை மனம்போல
மறந்து போன
தபால்காரரின் முகத்தை
மீண்டெடுக்கும் முயற்சியில் மனசு.

நிறைவேறுமா எனும் ஆசையில்
முளைக்கிறது கடைசி ஆசை.
கண்ணீரிலும்
வியர்வையிலும்
அழிந்துபோன அம்மாவின் கடிதம்.