முகிலே முகிலே

பாடல்   : முகிலே முகிலே
இசை   : சஞ்சே
பாடல் வரிகள்  : சேவியர்
குரல்கள்   : ரோகினி, எம்.சி ஜீவா

ஆல்பம் : பைரவன்  http://www.tamilbadboy.com/bhairavan.zip
தயாரிப்பு : TBB Entertainment, London.

Bhairavan

 பெண்

முகிலே முகிலே
உனைப்போல் எனை
மிதக்கச் செய்வாயா ?

மழையே மழையே
உனைப்போல் எனை
குதிக்கச் செய்வாயா

அடடா மனம் ஓடுதே
கடிவாளம் உடைத் தோடுதே
அடடா உயிர் தேடுதே
மெய்மறந்தேனே
பெண்

கரையைத் தாண்டும் நதியின் விரலாய்
உடலைத் தாண்டி உயிரோடும்
தரையைத் தீண்டும் பறவை இறகாய்
சத்தம் இன்றி சாய்ந்தோடும்

அடடா காற்றிலே
சிலை யார் செய்ததோ
வருடும் கைகளை
யார் கொடுத்ததோ
மெதுவாய் மெதுவாய் முத்தம் தருதோ

ஆண் :

உன் தேகம் கால் கொண்ட நிலவா
உன் பாதம் பூமிக்கு வரமா
உன் கூந்தல் விரல் நீட்டும் இரவா
நீ தேவ இனமா

You can download the song for Free @ http://www.tamilbadboy.com/bhairavan.zip

 

 

பைரவன் – கனவே, மனமே, அழகே

ஆல்பம் : பைரவன்
இசை : சஞ்சே
பாடல் : சேவியர்
குரல் : சதீஷ் & நான்சி
தயாரிப்பு : TBB Entertaninment, London

————————————————————–
ஆண் :

கனவே
மனமே
அழகே

நினைவே
நிஜமே
வரமே

தேன் சிந்தும் நட்சத்திரம் நீ தானா
பூச் சிந்தும் முத்துச் சரம் நீ தானா
தித் திக்கும் தெள் அமுதும் நீ தானா
என்னென்பேன் ?
 
பெண் :

கனவே
மனமே
அழகே

நினைவே
நிஜமே
வரமே

நேசங்கள் ஒன்றை ஒன்று சேராதா ?
நீயென்னைத் தேடி வரக் கூடாதா ?
தேகத்தில் பூப்பறித்தல் ஆகாதா ?
சொல் அன்பே

பெண்

ஏ நெஞ்சே
நான் சொட்டுச் சொட்டாய் நனைந்தேனே
ஏ கண்ணே
ஏன் தொடு வானமாகிறாய்

ஆண்

ஓர் ஆசைக் கடலின் அலையாய் அலைந்தேன்
பேராசைக் கரையில் நுரையாய்க் கிடந்தேன்
தேசத்தின் திசைகள் முழுதும் அளந்தேன்
காதலில் விழுந்தேன்

பெண்

நீருக்குள் மழையாய் காதல் பொழிந்தேன்
வேருக்கும் தெரியா பூக்கள் வளர்த்தேன்
காற்றோடு காற்றாய் நானும் நடந்தேன்
காதலில் எழுந்தேன்

ஆண்

காதல் என்பது முழுநிலவு

பெண்

அதை மறைத்தல் என்பது பகல்கனவு
அது இரவல் ஒளியில் வாழுவது

ஆண்

காதல் என்பது கடலன்பே…..

ஆண்

நீரில் பிம்பம் அலைந்தாலும் – அதைக்
கையால் பிடிக்க முடியாது

பெண்

கனவில் அடைமழை பொழிந்தாலும்
நிலம் நினையாது

ஆண்

தேன் சிந்தும் நட்சத்திரம் நீ தானா
பூச் சிந்தும் முத்துச் சரம் நீ தானா
தித் திக்கும் தெள் அமுதும் நீ தானா
என்னென்பேன் ?

பெண்

நேசங்கள் ஒன்றை ஒன்று சேராதா ?
நீயென்னைத் தேடி வரக் கூடாதா ?
தேகத்தில் பூப்பறித்தல் ஆகாதா ?
சொல் அன்பே

*

தோல்வி சுகமானது

தோற்பது சுகமானது
தன் குழந்தையிடம்.

நாலுகாலால் தவழும் போதே
ஓட்டத்தில்
ஆமையாவது
அம்மாக்களுக்கு தனி சுகம்.

யார் முதலில் எனும்
சாப்பாட்டு மேஜைகளில்
தோற்றுத் தொப்பியடிப்பது
அப்பாக்களுக்குச் சுகம்.

தோற்பது சுகமானது
தன் குழந்தையிடம்.

இவன் தான் காதலன் என
பிடிக்காத ஒருவனை
அவள்
அறிமுகப் படுத்தும் வரை !

வாக்களிக்க….

மழைக் கவிதைகள்

1

 

 

 

 

பிரியமில்லா தம்பதியரையும்
குடைக்குள்
பிணைய வைக்கிறது
பிரியமான
மழை.

 

 

2

 

 

ஒழுகாத கூரையும்
நனையாத படுக்கையும்
பசிக்காத வயிறும்
இருந்தால்
ரசிக்க வைக்கும்
எல்லா மழையும்.

.

.

.

3
மழைத்துளி விழுந்து
மண்ணின் மணம் எழுந்தது
எழுதினேன்,
கூவத்தின் மணம் கிளம்பும்
சென்னையில் இருந்து கொண்டு.

.

.

.

 

 

 

 

வெப்பம் தணித்த மழை
கிளப்பி விடுகிறது
பன்றிக் காய்ச்சல்
பீதியை

 

.

.

5.
 

ஜலதோஷம் பிடிக்கிறது…
என்றாலும்
குழந்தைக்கு
நனைவதே பிடிக்கிறது !

.

.

6

ஒவ்வோர் மழையும்
சில விவசாயிகளை
அழ வைக்கிறது
சில விவசாயிகளைத்
தொழ வைக்கிறது !

 

.

.

.

 

  

7

ஒவ்வோர் மழையும்
ஏதோ ஓர்
மேகத்தைப் பிரிகிறது
ஏதோ ஓர்
மோகத்தைப் பிழிகிறது

.

.

 

8

அடுத்த அடி
மரணத்தின் மடியிலா ?
டிரெயினேஜ் பயத்தில்
பாதங்கள் பதறுகின்றன
முழங்காலளவு மூழ்கிய சாலையில்

.

.

 

9
 

செல்போனில்
சிக்னல் கிடைக்காத காதலர்களும்
டிவியில்
சீரியல் தெரியாமல் பெண்களும்.
பெய்யெனப் பெய்யும் மழையை
நிறுத்தாமல் வைகிறார்கள்.

 

.

.

10

 

முதல் மழையில் நனையாதே
சுகக்கேடு வரும்.
பாட்டியின் குரல்
இன்னும் ஒலிக்கிறது
ஒவ்வோர் முதல் மழை தரிசனத்திலும்.

 

.

.

.11
கூரை ஓட்டிலிருந்து
அருவியாய்க் கொட்டும்
மழையில் நனைந்த
அரைடிராயர் சுகம்
அடுக்குமாடி தேனீர் சன்னல்களில்
சுத்தமாய் இல்லை.

.

.

 

12

 

 

மழைத் துளியல்ல,

சோர்வின் வடுக்களைச்
அழுத்தித் துடைக்க
மேகப் பருத்தி நெய்து
இறக்கும்
மழைத் துணி !

பிடித்திருந்தால்… வாக்களிக்கலாமே….

பாடல் : வெட்கம் வழியும் இரவில்

பீலிபெய் சாகாடும்
                 மெல்லமே மெல்லமே 
தேனும் திகட்டிவிடும்
                  செல்லமே செல்லமே

உன்னழகு மட்டுமேனோ திகட்ட மறுக்குதடி
தின்னத் தின்னத் தீராம பசியைப் பெருக்குதடி.

உறுமீனைக் காத்திருந்த
                       ஒத்தக்காலு கொக்குநான்
கண்டபின்னே சுத்திச் சுத்தி
                      சொக்குகிற செக்குநான்.

1

ஆண்:

ஆறு மீட்டர் அருவி இழுத்து
போர்த்திக் கிட்டுப் படுப்பமா ?

பெண்

நூறு மீட்டர் காற்றை இறுக்கி
தலையணையாக் கொடுப்பமா ?

ஆண்

மின்மினிகள் கூட்டி வந்து
ஓரமாய் நிறுத்தவா
மின்னுமந்த சின்ன ஒளி
பாரமாய் இருக்குமா ?

பெண்

நான்கு கண்கள் சிந்தும் ஒளி
காமனுக்குப் போதுமே
மின்மினிகள் கூட்டி வந்தால்
வெட்க ஒளி கூடுமே.

2

 

ஆண்

நட்ட நடு ராத்திரியில்
அச்சப் புயல் அடிக்குமே,

பெண்

விட்டு விட நினைக்குமுன்னே
மோக மழை நனைக்குமே.

ஆண்

எட்டிப் பார்க்கும் வட்ட நிலா
வெட்கம் கொண்டு சிரிக்குமே
ஓடுகின்ற முகிலுக்குள்ளே
வட்ட முகம் மறைக்குமே.

பெண்

வானநிலா நாணம் கண்டு
மாடிநிலா நாணுமே
மூட ஆடை இல்லையென
ஆளை மூடிக் கொள்ளுமே.

0

கவிதை : பழைய இலைகள்

 

ஏதேனும் வேண்டும் என்றால்
என் கரம் கோர்த்து
புருவங்களைப் பிதுக்கி கண்களால் கேட்பாய்.
உன் உதட்டில்
பிரமிப்பின் புன்னகையைப் பிடித்து வைக்க
எனக்குப் பிடிக்காததையும் வாங்கித்தருவேன்.

யாருமே இல்லாத மாலைப்பொழுதுகளில்
சீண்டாதீர்கள் என்று சிணுங்குவாய்.
முரணாய்ப் பேசி முரண்டு பிடிப்பாய்,
புரிந்துகொண்டு
முத்தமிட்டு மூச்சுப்பெறுவேன்.

கால்வலிக்கிறது என்பாய்.
கண்ணில் தூசி என்பாய்.
புதிதாய் வாங்கிய மாலையைப் பார் என்பாய்.
நமக்கிடையே இருக்கும்
இடைவெளியைக் குறைக்க
நீ இடும் அறிக்கைகள் இவையென்றறிந்து,
காற்று காயம் படும் இறுக்கத்தில்
கட்டிக் கொள்வேன்.

இப்போதும்
மங்கலாய்க் கசியும் நினைவிடுக்குகளில்
உன் குரல் கேட்காமலில்லை.

‘மாறிவிட்டேன்’ என்ற ஒற்றைச்சொல்லில் என்னை
தூக்கிலிடும் முன், என்
கடைசி ஆசையை மட்டும்
நீ கேட்கவேயில்லை.

கேட்டாலும் சொல்வதற்கு என்ன இருக்கிறது
நீ – எனும் சொல்லைத் தவிர.

பாடல் : நறியவும் உளவோ நீயறியும் பூவே

( சினிமா பாடல் போல… )

நக்கீரா… நக்கீரா…
சங்குதனை அறுத்தாலும் சத்தியம் இதென்றாய்.
மங்கை தன் கூந்தலுக்கு மணமில்லையென்றாய்.

நக்கீரா … நக்கீரா
பொங்குமெழில் எந்தன் மங்கை கண்டதுண்டா நீ – அவள்
கங்கைக்குழல் நுனிவாசம் கொண்டதுண்டா நீ.

1

என் மங்கையவள் மலர் சூடிக் கொண்டதில்லை பார் – அவள்
கூந்தல் சூடிக் கொண்ட நடமாடும் மலர் காண்.
மெல்ல எந்தன் நாசி மீதில் உரசிச் செல்கையில் – ஓர்
சொர்க்க வாசம் உள்ளுக்குள்ளே கரையுடைக்கும் காண்.

சொக்கும் மணத்தின் சொந்தக்காரி –  எனில்
விக்கல் வார்க்கும் வித்தைக்காரி.
கோடிக் கரத்தால் என்னை வாரி – உயிர்
மூடிக் காக்கும் பந்தக்காரி.
2

சாலையோரம் எந்தன் சோலை நடந்து செல்கையில் – அட
பட்டாம் பூச்சிக் கூட்டம் மொய்க்கும் கூந்தல் நிலை காண்
தோட்டம் வந்து மாலை நேரம் படுத்துக் கொள்கையில் – மக
ரந்தம் தேடி வண்டுக் கூட்டம் வட்டமிடும் காண்.

ஏஞ்சல் கூட்டச் சொந்தக்காரி – எனில்
ஊஞ்சல் ஆடும் தென்றல்காரி
நெஞ்சில் ஊறும் வெள்ளை ஏரி – மனம்
கொஞ்சச் சொல்லும் கொள்ளைக்காரி.

0

யுத்தக் களமும், முத்தக் குளமும்


யுத்தக் களத்தில்
முத்தக் குளத்தில்
கவசம் கழற்றிக் குதிப்போமா ?
பித்தக் கடலில்
மொத்த உடலில்
அச்சம் அவிழ்த்துக் குளிப்போமா ?

இப்படித் தானே செப்படிக் காதல்
பொற்படி தேடி ஓடிவரும்,
எப்படியேனும் ஒப்படை என்று
கைப்பிடிக்குள்ளே ஊறிவரும்.

0

காதல் என்னும் அற்புதம் கொண்டு
பாற்கடல் ஒன்றைக் கடைவோமா ?
காதல் கொண்டு காதல் கடைந்து
அமிர்தம் கையில் அடைவோமா

0

வள்ளுவர் கோட்டச் சக்கரம் பின்னே
சாய்ந்து கிடப்பது காதலா
அலையின் முன்னால் படகின் பின்னால்
சில்மிஷம் செய்தல் காதலா
பூக்கள் இல்லாப் பூங்காப் புதரில்
வெட்கம் பூப்பது காதலா
யாரும் இல்லாத் தனிமைச் சந்தில்
அவசர முத்தம் காதலா

காதல் என்பது தாய்மை போல
விலகிய பின்னும் நினைவிருக்கும்
காதல் என்பது செடியைப் போல
பூக்கா விடினும் வேர் வளரும்

0

மோகம் வந்து விரலில் தங்கி
தேகம் வழிதல் காதலா
நரம்புகள் வழியே நதியாய் பாயும்
சிற்றின்பம் தான் காதலா
எங்கும் பொங்கி அங்கம் தங்கி
நுரையாய்க் கரைதல் காதலா
தொடுதல் படுதல் படர்தல் விடுதல்
இதுதான் மொத்தக் காதலா ?

காதல் என்பது வாய்மை போல
சொல்லும் போதே உயிர்மலரும்,
காதல் என்பது காற்றைப் போல
தானாய் உயிரில் தினமுலவும்.