பெண்ணின்றி அமையாது உலகு !

Image result for mother and child

பெண்ணில்லாத உலகத்தைக் கற்பனை செய்து பார்ப்பதே கடினமான ஒன்று ! அது ஒரு வறண்ட பாலையைப் போலவோ, நிழலில்லாத வெயில் சாலையைப் போலவோ மனதுக்குள் அனலாய் படரும்.

பெண்களின் உலகம் அழகானது ! அது உணர்வுகளால் பின்னப்பட்டது. ஆண்களின் உலகம் உழைப்பினாய் ஆனது ! பெண்களின் உலகம் உறவுகளால் ஆனது ! பெண்கள் வசிக்கும் வீடுகள் பூந்தோட்டங்களாகவும், ஆண்கள் மட்டுமே உலவும் வீடுகள் உழவு நிலங்களாகவும் காட்சியளிக்கும்.

எந்த ஒரு ஆணும் முழுமையடைய வேண்டுமெனில் அவன் மூன்று பெண்களின் அரவணைப்பில் வளரவேண்டும். அதில் முதலாவதாக வருபவர் அன்னை ! ஒவ்வோர் மனிதனுக்கும் முதல் காதல் அன்னையோடு தான். கடவுளின் அன்பை, இயற்கையின் அழகை, நேசத்தின் செயலை அவன் அறிமுகம் கொள்வது அன்னையிடம் தான் !

விழியும் விழியும் நேசம் பரிமாறும் அழகை நீங்கள் அன்னை மழலை உறவில் தான் பரவசத்துடன் காண முடியும். புன்னகைக்குள் புதையல் இருப்பதை அந்த அன்னைச் சிரிப்பில் தான் அறிய முடியும். மண்ணை மிதிக்கும் முன் மெல்லிய பாதங்கள் என்னை மிதிக்கட்டும் என கன்னம் நீட்டும் அன்பல்லவா அன்னை !

தொப்புழ் கொடியில் நேசம் ஊற்றி, மழலை வழியில் மடியில் ஏந்தி, சின்ன வயதில் தோளில் தூக்கி, பருவ வயதில் பெருமிதம் சிந்தி, கடைசி வரையில் கண்ணில் சுமப்பவளல்லவா அன்னை ! முதுமையின் முக்கால் படியில் நடக்கும் போதும் அன்னைக்கு பிள்ளை மழலையாய் தான் இருப்பான். அது தான் அன்னை அன்பின் தனித்துவம் ! மறக்க முடியா மகத்துவம்.

அன்னையின் அருகாமையில் இருப்பவன் சொர்க்கத்தின் வாசனையை நுகர்வான். தலைகோதும் அன்னையின் விரல்களில் இருப்பவன் துயரத்தின் தனிமையைத் தாண்டுவான். புன்னகைக்கும் அன்னையின் நிழலில் வாழ்பவன் முழுமையாய் வாழ்க்கையை நேசிப்பான். அன்னை, ஒரு உயிரை உலகிற்கு அறிமுகம் செய்தவள் மட்டுமல்ல !
ஒரு உயிரை உலகாக அறிமுகம் செய்து வைத்தவள்.

நம் மழலைப் பாதங்களை மண்ணில் பதிய வைத்தவள் அன்னையெனில், நமது கரங்களுக்கு சிறகுகளை முளைப்பிக்க வைத்தவள் சகோதரி தான். சகோதரிகளின் குடும்பத்தில் வளர்பவன் நீரோடையின் அருகே வளரும் மரம் போன்றவன். செழிப்பு அவனுக்கு குறைவு படாது. பெண்மையைப் போற்றும் மனிதனாக அவன் வளர்வான்.

தவறு செய்யும் ஆண்களை, ‘அக்கா தங்கச்சி கூட பொறக்கலையா ?’ என்று கேட்பார்கள். காரணம், அக்கா தங்கச்சி கூட பிறந்தவன் ஒழுக்கமானவனாக இருப்பான் எனும் நம்பிக்கை. அக்கா என்பவள் இரண்டாம் அன்னை ! தங்கை என்பவள் மூத்த மகள் ! சகோதரிகளோடு பிறந்தவர்கள் கடவுளின் கருணையை கண்களில் பெற்றவர்கள். பிறரை சகோதரிகளாய் பார்க்கத் தெரிந்தோர் கருணையாம் கடவுளை கண்களில் பெற்றவர்கள்.

வண்ணத்துப் பூச்சியின் அழகிய சிறகாய், பாறை வெளியின் நிழல் கூடாரமாய், தனிமை வெளியின் நம்பிக்கைத் துணையாய் எப்போதும் கூட வருபவர் தான் சகோதரி. பகிர்தலின் புனிதத்தை முதலில் கற்றுத் தருபவள் அவள் தான். விட்டுக் கொடுத்தலின் அழகை புரிய வைப்பவள் அவள் தான். தங்கைக்கு அண்ணனாய் இருப்பது என்பது தேவதைக்கு சிறகாய் இருப்பதைப் போல சுகமானது !

இந்தப் பணத்தில் கடைசியாய் நுழைந்து, கடைசி வரை நடப்பவர் தான் மனைவி ! இறைவன் இணையாய் கொடுக்கும் துணை ! நம் உதிரத்தின் பாகமல்ல, ஆனால் நமக்காய் உதிரம் சிந்த தயாராய் இருப்பவர். தியாகத்தின் முதல் அறிமுகம் ! தன் நிலத்தை விட்டு, தன் தோட்டத்து செடிகளை விட்டு, இடம் பெயர்ந்து போய் இன்னோர் நிலத்தில் வாசம் வீசும் மலர் !

இரண்டறக் கலத்தலின் இல்லற விளக்கம் மனைவி ! பூவாய் வாழ்ந்து இந்த பூமிக்கு புதிய பூக்களைக் கொடுப்பவள் தான் மனைவி. வெளிப்படையான அன்பின் வெளிச்சப் புள்ளி. ஒளிவு மறைவற்ற நேசத்தின் தோழி. உயிருக்குள் உயிரைப் பதியமிடும் உன்னதம் ! உயிரிலிருந்து உயிரை பிரித்தெடுக்கும் பிரமிப்பு. என மனைவியின் அன்பு மகத்தானது !

மனைவியின் மௌனம் யுத்தத்துக்கு சமமான வீரியமானது. மனைவியின் கண்ணீர் பெருங்கடலின் ஆர்ப்பரிப்புக்கு சமமானது. மனைவியின் சிரிப்பு நீள் வானத்தின் பெருமழைக்கு ஒப்பானது. மனைவி என்பவள் மனிதனோடு நடக்கும் இறைவனின் பிம்பம். இமைகளில் இடையிலும் சுமைகளைத் தாங்கும் வலிமை அவளுக்கு உண்டு. ஒரு சின்ன பிரியத்தின் விசாரிப்பில் பிரபஞ்சத்தை பரிசளிக்கும் நேசம் அவளிடம் உண்டு.

பெண்மையே ஆண்மையைக் கட்டியெழுப்புகிறது. மென்மையே வலிமையின் அடிப்படை. இந்தப் பெண்களோடு இரண்டறக் கலந்து வாழ்ந்தவர்கள் வாழ்வின் அழகையும், அர்த்தத்தையும் புரிந்து கொள்கின்றனர் !

என் அம்மாவின் முந்தானை பிடித்து நான் வளர்ந்திருக்கிறேன். புரியாமையின் பொழுதுகளில் அவரோடு வழக்காடியிருக்கிறேன். நான் செய்வதே சரி என பிடிவாதம் பிடித்திருக்கிறேன். சண்டை போட்டிருக்கிறேன். எல்லா சண்டைகளிலும் வெற்றி பெறும் வலிமை இருந்தும், அதை என் உதடுகளில் சூடி புன்னகைக்க வைத்தவர் அம்மா. அப்படித் தான் அம்மாவைப் புரிந்து கொண்டேன்.

எரிச்சலின் பொழுதுகளில், ஏமாற்றங்களின் வீதிகளில், அழுத்தங்களின் அரவணைப்பில் என் ஆயுதங்களையெல்லாம் நிராயுதபாணியான மனைவியை நோக்கி வீசியிருக்கிறேன். புறமுதுகு காட்ட மறுத்த ஈகோவின் சண்டைகளிலும் கலிங்க யுத்தமாய் காயங்களை நிரப்பியிருக்கிறேன். அவை தான் மனைவியை எனக்குப் புரிய வைத்தன‌.

சகோதரியோடு சண்டையிடாத பால்ய தினங்களை எண்ணிவிடலாம். அந்த சிறு வயதுச் சண்டைகள் தான் இன்றைக்கு சண்டையில்லாத பொழுதுகளை உருவாக்கித் தந்திருக்கின்றன. அத்தகைய சண்டைகளில், விவாதங்களில், முரண்டு பிடித்தல்களில் தான் என் சகோதரிகளை நான் புரிந்து கொண்டேன்.

பெண்களோடு இணைந்து வாழும் வாழ்க்கை நமக்கு புரிதலைக் கற்றுத் தருகிறது. பிரியத்தையும் பெற்றுத் தருகிறது.

அன்னை தெரசாவின் புன்னகை மென்மையானது ! அதுவே வலிமையான அன்பின் ஆயுதம் !பேனா மென்மையானது, வலிமையான சிந்தனைகளால் உலகைப் புரட்டும் வலிமை அதற்கு உண்டு. கண்ணீர் மென்மையானது ! மாபெரும் அரசுகளை நிலைகுலைய வைக்கும் வீரியம் அதற்கு உண்டு. பெண்மை மென்மையானது ! ஆண்மையின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வல்லமை அதற்கு உண்டு.

அன்னையின் மேகத்தில் துளியாய் உருவாகி, சகோதரி எனும் துளிகளோடு இணைந்தே பயணித்து, மனைவி எனும் மண்வெளியில் இரண்டறக் கலந்து அன்பின் நதியாய்க் கடலை அடைவதே இனிமையான வாழ்க்கை !

பெண்மையை நேசிப்போம் !
நமக்கு நேசத்தைக் கற்றுத் தந்தது அவர்கள் தான் !

பெண்மையை மதிப்போம் !
நம் மதிப்புக்கு அடிப்படை அவர்கள் தான் !!

பெண்மையை போற்றுவோம் !
எந்த ஆண்மையிலும் மெல்லிய பெண்மை உண்டு !

இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்

Advertisements

அகம் திருடுகிறதா முக நூல்

Image result for facebook

சமீப காலமாக தலைப்புச் செய்திகளில் அடித்துத் துவைத்துக் காயப்போடப்பட்ட விவாதப் பொருள் எதுவென்றால் “பேஸ்புக்” என்பதாகத் தான் இருக்கும். பேஸ்புக் தகவல்களைத் திருடுகிறது என்பது முதல், பேஸ்புக் அரசியல் முடிவுகளை நிர்ணயிக்கிறது என்பது வரையிலான தலைப்புகளில் விவாதங்களும், கட்டுரைகளும், வழக்குகளும் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கின்றன.

பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஷக்கன்பர்க் வழக்குக்காகப் கோர்ட் படியேறி தனது நிறுவனத்தைப் பற்றியும், தகவல் பாதுகாப்பு பற்றியும், இப்போது இருக்கின்ற குறைகள் பற்றியும், இனி என்னென்ன செய்யப் போகிறோம் என்பது பற்றியும் வியர்க்க விறுவிறுக்க விளக்கி விட்டார். இருந்தாலும் மக்களிடம் இருக்கின்ற பயமும், தயக்கமும் போனபாடில்லை ! இந்த பயம் நியாயமானதா ?

முதலில் ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இணைய வெளியில் பாதுகாப்பு எனும் பேச்சுக்கே இடமில்லை ! எப்போது வேண்டுமானாலும், எந்த தகவல் வேண்டுமானாலும் களவாடப்படலாம் என்பதே புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உண்மை.

இன்றைய தொழில்நுட்ப உலகத்தின் அடிப்படை மூலதனம் என்ன தெரியுமா ? “தகவல்கள்” ! நாம் பேஸ்புக்கிலோ, வாட்ஸப்பிலோ, இன்ஸ்டாகிராமிலோ, ஷாப்பிங் தளங்களிலோ அல்லது வேறெந்த இணைய தளங்களிலோ பகிர்கின்ற தகவல்கள் தான் இந்த தொழில் நுட்ப உலகின் மூலதனம். அந்த தகவல்களை அலசி ஆராய்ந்து அதை பிஸினஸாக மாற்றுவது தான் இன்றைய தொழில்நுட்ப உலகின் ‘புராஃபிட் ஸ்ட்ரேட்டஜி’, அதாவது லாப யுத்தி !

நாம் மொபைலில் தரவிறக்கம் செய்கின்ற ஆப்களானாலும் சரி, நாம் வலைத்தளங்களில் செய்கின்ற தேடுதல் ஆனாலும் சரி, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுகின்ற தகவல்களானாலும் சரி எல்லாமே வியாபார நோக்கில் தான் அணுகப்படுகின்றன. தகவல் அறிவியல் எனப்படும், டேட்டா சயின்ஸ் தொழில்நுட்பம் இன்றைக்கு கொடிகட்டிப் பறக்கக் காரணம் இந்த தகவல்கள் தான். அடுத்த ஐந்து பத்து ஆண்டுகளுக்கு தொழில் நுட்ப உலக புரட்டிப் போடப் போவதும் இந்த டேட்டா சயின்ஸ் தான் !

பேஸ்புக் நிறுவனமும் தங்களிடம் வருகின்ற அனைத்து தகவல்களையுமே சேமிக்கிறது. அந்த தகவல்களை தகவல் அறிவியலுக்கு உட்படுத்தி ஆளுக்கேற்ற விளம்பரங்களை அனுப்புகிறது. இந்த விளம்பரங்கள் தான் அதன் மூலதனம். பேஸ்புக்கை இலவசமாக நமக்குத் தருகின்ற நிறுவனம் விளம்பரங்கள் மூலம் கடந்த ஆண்டு மட்டும் சம்பாதித்த தொகை இரண்டு இலட்சத்து அறுபத்து இரண்டாயிரம் கோடி ரூபாய்கள் ! இலவசமாய் கிடைக்கின்ற பேஸ்புக்கிற்கு விலை நாம் தான் ! நமது தகவல்கள்தான் !

இதில் இன்னொரு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், உங்களிடம் பேஸ்புக் கணக்கு இல்லையென்றாலும் கூட பேஸ்புக் உங்களுடைய தகவல்களைத் திருட முடியும் என்பது தான் ! உங்களுடைய நண்பர்கள் யாருக்காவது பேஸ்புக் கணக்கு இருந்தால், அவர்களுடைய கான்டாக்ட் மூலமாக உங்களுடைய தகவல்களை பேஸ்புக் நிறுவனம் இழுத்து எடுத்துக் கொள்கிறது ! என்னிடம் பேஸ்புக் கிடையாது அதனால் என்னோட தகவல்கள் பேஸ்புக்கின் கைக்குப் போகாது என யாரும் சொல்ல முடியாது !

அதே போல, பல வலைத்தளங்கள், ஆப்கள் உள்நுழைவதற்கு பேஸ்புக் ஐடியையோ, கூகிள் ஐடியையோ கேட்பதைப் பார்த்திருப்பீர்கள். நீங்கள் ஏதோ ஒரு தகவலை உள்ளீடு செய்து உள்ளே நுழைவீர்கள். அந்த நேரத்தில் உங்களுடைய தகவல்கள் இன்னொருவர் கைக்கு இடம்பெயரும். நாம் அறியாமலேயே இயல்பாக இந்த விஷயம் நடந்து விடும்.

இன்றைய யுகத்தில் இந்தத் தகவல்களெல்லாம் செயற்கை அறிவியல் எனப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட், பிக் டேட்டா, இன்டெர்நெட் ஆப் திங்க்ஸ், மெஷின் லேர்னிங் போன்ற தொழில்நுட்பங்களின் கூட்டுக் கலவையில் அலசப்படுகின்றன. பின்னர் ஒரு நபருடைய ரசனைகள், விருப்பங்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றையெல்லாம் தகவல்கள் மூலம் தெரிந்து கொண்டு, அந்த நபருக்குத் தேவையான பர்சனலைஸ்ட் விளம்பரங்களைக் கொடுக்கின்றன.

இவை வெறும் விளம்பரங்களை அனுப்புகின்றன எனுமளவில் இதில் பெரிய ஆபத்து இல்லை. ஆனால் அது உங்களைப் பிந்தொடர்ந்து உங்கள் தகவல்களையெல்லாம் சேமிக்கிறது என்பதும், தொடர்ந்து உங்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது என்பதும் தான் ஆபத்தானது.

‘ஃபேஸ் ரிககனிஷன்’ எனப்படும் முகத்தை வைத்து அடையாளம் காணும் தொழில்நுட்ப யுத்தியின் படி உங்களுடைய படம் எங்கெல்லாம் இருக்கிறது, யாருடைய தளத்திலெல்லாம் இருக்கிறது, அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு, அவர்களுடைய ரசனைகளுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு போன்றவையெல்லாம் தகவல் அறிவியல் அலசும். பிறகு, ‘உங்க பிரண்டுக்கு புடிச்ச இந்த கார், இந்த விலைல வருது.. நீங்க வாங்கலையா’ என ஆசையைத் தூண்டும்.

இதில் அச்சப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் இந்த தகவல்களும், டேட்டா சயின்ஸும் சேர்ந்து கொண்டு இல்லாத ஒரு பிம்பத்தை இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முடியும். இதை உளவியல் யுத்தம் எனலாம். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட பத்திரிகை தான் உலகிலேயே பெஸ்ட் பத்திரிகை எனும் தோற்ற மயக்கத்தை இதால் உருவாக்க முடியும். ஒரு தேர்தலின் முடிவை மாற்றியமைக்க முடியும் !

பேஸ்புக் தளத்தை விளம்பரம் இல்லாத பணம் கொடுத்து பயன்படுத்தும் தளமாக மாற்றலாமா எனும் யோசனையை நிறுவனர் நிராகரிக்கிறார். அதனால் அவருக்கு ஏகப்பட்ட பயனர் இழப்பு ஏற்படும் என்பதும். இப்போது கிடைத்து வருகின்ற மிகப்பெரிய லாபம் நிச்சயம் கிடைக்காது என்பதும் தான் அதன் காரணம்.

இப்படி மற்றவர்களுடைய தகவல்களை சுருட்டி விளையாடும் மார்க், தனது தகவல்களை மிக ரகசியமாக வைத்திருக்கிறார். அவருடைய பாதுகாப்புக்காகவும், அவருடைய தகவல்களின் பாதுகாப்புக்காகவும் கடந்த ஆண்டு மட்டும் அவர் செலவிட்ட தொகை சுமார் 48 ஆயிரம் கோடி ரூபாய்கள் !

கடைசியாக, பேஸ்புக் உட்பட எந்த சமூக வலைத்தளமும் பாதுகாப்பானது என சொல்ல முடியாது. எதைப் பயன்படுத்தினாலும் அதிக பட்ச செக்யூரிடி ஆப்ஷனைத் தேர்ந்தெடுங்கள். முடிந்தவரை இணையத்தில் தகவல்களைப் பகிராமல் இருப்பது பாதுகாப்பானது ! டிஜிடல் உறவை விட்டு விட்டு, நிஜ உறவுக்குள் வருவது மனிதத்துகும், பாதுகாப்புக்கும் மகத்தானது !

நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.

1. பேஸ்புக் கணக்கு உங்களிடம் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள், அதை நீங்கள் டெலீட் செய்தாலும், டி ஆக்டிவேட் செய்தாலும் உங்களுடைய தகவல்கள் அழிக்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை !

2. நீங்கள் வாங்கும் பொருட்களோ, நீங்கள் செல்லும் பயணங்களோ உங்களுடைய நண்பர் வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு தெரிவிக்கப்படலாம். அது வியாபார யுத்தி. உங்களுடைய தனிமைக்கு எதிரி ! உங்கள் தகவல்களை பிற நிறுவனங்களுக்கோ, ஏன் அரசுக்கோ கூட பகிர்ந்து கொடுக்கலாம்.

3. உங்களுடைய ரசனைகள், உங்களுடைய விருப்பங்கள் போன்றவற்றை உங்களுடைய போட்டோவுடன் சேர்த்து பல இடங்களுக்கும் அனுப்பப்படலாம். நீங்கள் வெளிப்படுத்த விரும்பாத விஷயங்கள் உட்பட.

4. நீங்கள் பேஸ்புக்கை விட்டு வெளியே வந்தாலும் கூட உங்களுடைய இணைய நடமாட்டத்தைக் கவனித்து குக்கிகளில் சேமித்து, பின்னர் நீங்கள் பேஸ்புக் நுழையும் போது அவை பேஸ்புக் தளத்துக்கு பரிமாறப்படலாம்.

5. நீங்கள் ஒரு பொருளை இணையத்தில் தேட ‘டைப் செய்கிறீர்கள்’ பிறகு மனதை மாற்றிக்கொண்டு அதை டெலீட் செய்து விடுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த தகவலும் சேமிக்கப்பட்டு உங்களைப் பிந்தொடரலாம்.

*

 

குழந்தைகளையும் குறிவைக்கும் ஆப்ஸ் !

Image result for kids playing with mobile

பிளே கிரவுண்ட் தெரியாது ! ஆனால் பிளே ஸ்டோர் தெரியும் !! இது தான் இன்றைய குழந்தைகளின் நிலை. இப்படி டிஜிடல் விளையாட்டுகளில் சிக்கிக் கிடக்கும் குழந்தைகளைக் குறிவைத்து தகவல் திருட்டுகள் நடக்கின்றன என்பது தான் இப்போதைய அதிர்ச்சித் தகவல். கூகிள் பிளேஸ்டோரில் உள்ள ஆயிரக்கணக்கான ஆப்-கள் அமெரிக்காவின் குழந்தைகள் தகவல் பாதுகாப்பு சட்டமான கோப்பா வை US Children’s Online Privacy Protection Act (Coppa)மீறுகின்றன எனும் கண்டுபிடிப்பு மிகப்பெரிய சர்ச்சையாக உருமாறியிருக்கிறது. இந்தகண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர்கள் அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள இண்டர்நேஷனல் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஸ்டிடியூர் ஆய்வாளர்கள்.

இன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் செலுத்தும் ஆதிக்கத்தைப் போல வேறெதுவும் செலுத்தவில்லை என்பது தான் உண்மை. பெரும்பாலான மக்களின் பொழுதுகள் குட்டிக் குட்டி வெளிச்சத் திரைகளில் அடங்கிவிடுகின்றன.

எட்டு வயதுக்கும், பதிமூன்று வயதுக்கும் உட்பட்ட ஆறாயிரம் குழந்தைகளை வைத்து ஒரு ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் 54 சதவீதம் குழந்தைகள், தங்கள் பெற்றோர் தங்களைக் கவனிப்பதை விட அதிக நேரம் செல்போனே கதியென கிடப்பதாய் கவலை தெரிவித்திருந்தனர்.

“எங்கள் குழந்தைகளுக்கு நல்ல முன்னுதாரணமாய் தாங்கள் வாழவில்லை” என குற்ற உணர்வோடு இருக்கும் பெற்றோர் எண்பத்து இரண்டு சதவீதம் பேர் ! அதில் ஐம்பத்து இரண்டு சதவீதம் பேர், எத்தனை முயன்றாலும் இந்த ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தை விட்டு வெளியே வரமுடியவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.

இருபத்து ஐந்து சதவீதம் பெற்றோர் தங்கள் குழந்தைகள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாய் இருப்பதாகவும், எப்படியாவது அவர்களை வெளியே கொண்டு வரவேண்டும் எனவும் விரும்புகின்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

எல்லாவற்றையும் விட கவலைக்குரிய விஷயம் இது தான். “ஸ்மார்ட்போனைத் தான் எங்கள் பெற்றோர் எங்களை விட அதிகம் நேசிக்கிறார்கள்” என முப்பத்து இரண்டு சதவீதம் குழந்தைகள் கவலையுடன் தெரிவித்திருக்கின்றனர்.

உண்மையிலேயே நமது உறவுகளின் நெருக்கத்தை உடைக்கும் அளவுக்கு டிஜிடல் வலிமை பெற்று விட்டதா ? குடும்பத்தை விட அதிகமாய் சமூக வலைத்தளங்கள் நம்மை ஆதிக்கம் செலுத்துகின்றனவா ?

நம்முடைய குழந்தைகளை நாம் கவனிக்காவிட்டால் அவர்களை வேறு யாரோ கவனிப்பார்கள். குழந்தைகளை நாம் வனையாவிட்டால் அவர்களை வேறு யாரோ வனைந்து முடிப்பார்கள். அது அவர்களுடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாதிப்பாகவும், அச்சுறுத்தலாகவும் மாறிவிடும்.

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, ‘பத்து வயது குழந்தைக்கு சாதாரணமாக ஒரு ஸ்மார்ட் போன் சொந்தமாகிவிடுகிறது’ எனும் கண்டுபிடிப்பை வெளியிட்டது. இந்தியாவில் அந்த அளவுக்கு இல்லையெனினும், பெற்றோரின் ஸ்மார்ட்போன்களை சகட்டு மேனிக்கு பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகம் ! ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகள் சராசரியாக தினமும் சுமார் இரண்டரை மணி நேரம் போனில் விளையாடுகின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.

இந்த சூழலில் தான் கூகிள் பிளே ஸ்டோரின் பாதுகாப்பு விதி மீறல் அச்ச உணர்வை அதிகரித்திருக்கிறது. கூகிள் ஆப் ஸ்டோரில் உள்ள குழந்தைகளுக்கான ஆப்ளிகேஷன்களை ஆய்வு செய்ததில் 57 சதவீதம் ஆப் கள் பாதுகாப்பு விதிகளை மீறியிருக்கின்றன. இவை குழந்தைகள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிக்கின்றன. இது சட்ட விதிகளுக்கு எதிரானது.

சில ஆப்ளிகேஷன்கள் குழந்தைகளின் இருப்பிடத்தையும், காண்டாக்ட் தகவல்களையும் திருடி அனுப்புகின்றன. சில ஆப்ஸ் தனிநபர் தகவல்களை திருடி வேறு இடங்களுக்கு அனுப்புகின்றன. சில ஆப்கள் விளம்பரங்களுக்காக தகவல்களை அனுப்புகின்றன. என நீள்கிறது இந்தப் பட்டியல். பிரபலமான, சுமார் ஏழரை இலட்சம் தடவைகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்ட ஆப்கள் மட்டுமே இதில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.

இவையெல்லாம் குழந்தைகளுக்கான ஆப்ளிகேஷன்கள் என்பது தான் கவனிக்கவேண்டிய விஷயம். குழந்தைகளுக்கு கல்வி, பொழுதுபோக்கு, சிந்தனை திறன் வளர்த்தல் என வசீகரிக்கும் ஆப்களின் நிலை தான் இது என்பது கவலையளிக்கிறது.

ஏற்கனவே கூகிள் நிறுவனம் தனிநபர் தகவல்களை மிகப்பெரிய அளவில் சேகரிக்கிறது எனும் சர்வதேச சர்ச்சை உயிர்ப்புடன் இருக்கிறது. அவர்களுடைய பல்லாயிரம் கோடி ரூபாய் பிஸினசின் அடிப்படையே இப்படி சேகரிக்கும் தகவல்கள் தான்.

பாதுகாப்பு விதி முறைகளை மீறும் ஆப்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூகிள் நிறுவனம் இப்போது உறுதியளித்திருக்கிறது. குழந்தைகள், குடும்பங்கள் இவற்றின் பாதுகாப்பின் மீது எந்த விதமான தளர்வுக்கும் இடமில்லை என அது தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

நமது பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை நம்முடையது. குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்தக் கொடுப்பதை முடிந்தவரை தடை செய்வது நல்லது. முடியாத பட்சத்தில் சில விதிமுறைகளையேனும் வைக்க வேண்டியது அவசியம்.

குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் இருக்கின்றார்கள் எனில், யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் ? என்னென்ன உரையாடல் நடத்துகிறார்கள் என்பதைக் கவனிப்பது அவசியம். எக்காரணம் கொண்டும் தனிப்பட்ட தகவல்களைப் பகிரக் கூடாது. தனிப்பட்ட படங்களையும் பகிரக் கூடாது எனக் கட்டுப்பாடு விதியுங்கள். யாரேனும் வழக்கத்துக்கு மாறாகவோ, தவறாகவோ பேசினால் பெற்றோரிடம் தெரியப்படுத்த வேண்டும் என்பதை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்.

2 லொக்கேஷன் சர்வீஸ், ஜிபிஎஸ் போன்றவற்றை ஆஃப் செய்து வைத்திருக்க வேண்டும். நமது இடத்தை பளிச் எனக் காட்டும் சர்வீஸ்களை தேவைப்படும் போது மட்டும் ஆன் செய்வது உசிதம். செக்யூரிடி செட்டிங் சரியாக இருக்கிறதா என்பதை பெற்றோர் ஊர்ஜிதப்படுத்த வேண்டும். குழந்தைகளின் போன் செயல்பாடுகளைக் கவனிக்கும் ஆப்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

3. குழந்தைகள் ஸ்மார்ட்போனில் பார்க்கும் விஷயங்கள், பகிரும் விஷயங்கள் சரியானவை தானா என்பதைக் கவனிக்க வேண்டும். பாலியல் விஷயங்களைத் தாண்டி வெறுப்பை வளர்க்கும் விஷயங்கள், பிரிவினையை உருவாக்கும் விஷயங்கள், பாகுபாடு உருவாக்கும் விஷயங்கள் போன்றவற்றுக்கும் குழந்தைகளைத் தள்ளியே வையுங்கள். ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகள் மிக விரைவாக மன அழுத்தத்துக்குள் விழுந்து விடுவார்கள் என்கின்றன மருத்துவ ஆய்வுகள்.

4. குழந்தைகள் போன் விளையாட ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அந்த நேரம் தவிர பிற நேரங்களில் டிஜிடல் பொருட்களை அவர்களிடம் கொடுக்கக் கூடாது. பெற்றோரும் குழந்தைகள் இருக்கும் போது போனை கொஞ்சம் ஒதுக்கியே வைக்க வேண்டும். இரவு எட்டு மணிக்கு மேல் எக்காரணம் கொண்டும் போனைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். காலை 10 மணிக்கு மேல் மாலை எட்டு மணிக்குள் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவர்களுக்கு ஒதுக்கலாம்.

5 சமூக வலைத்தளங்கள், ஆப்கள் மூலமாக வருகின்ற ஆபத்துகள் என்னென்ன என்பதை குழந்தைகளுக்கு விளக்கமாகச் சொல்லி விடுங்கள்.

இப்படி சின்னச் சின்ன விஷயங்களில் கவனமாக இருந்தால் பெரிய பெரிய ஆபத்துகளில் விழாமல் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும். விழிப்பாய் இருப்போம், விழாமல் தடுப்போம்.

*

 

கட்டுரை : வெடிக்கும் உலகம், விழித்தல் அவசியம்

 

( இந்த வார தமிழ் ஓசை களஞ்சியம் இதழில் வெளியானது )

உலகெங்கும் வெடிகுண்டுகள் வெடிப்பது சர்வ சாதாரணமாகி விட்ட சூழல் இது. இலங்கை, ஈராக் என போர் பிரதேசங்களில் நிகழ்ந்து வந்த வெடிகுண்டுகள் இப்போதெல்லாம் எங்கு வேண்டுமாலாலும் வெடிக்கலாம் எனும் சூழல்.

கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 2765 பேர் தீவிரவாதத் தாக்குதலுக்கு பலியாகியிருக்கின்றனர். இரண்டாயிரத்து ஒன்றாம் ஆண்டு முதல் இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு முடிய இந்தியாவில் மட்டும் நிகழ்ந்த தீவிரவாதப் படுகொலைகளின் எண்ணிக்கை சுமார் பதினான்காயிரத்து ஐநூறு என்கிறது SAIR (South Asis Intelligence Review) புள்ளி விவரம்.  

எல்லைகளில் நிகழ்ந்து வந்த தாக்குதல்களும், குண்டு வெடிப்பும் இப்போது அப்பாவி மக்கள் உலவும் பொது இடங்களில் நிகழ்வதுதான் அச்சத்தை அதிகப்படுத்துகிறது. அதிலும் இந்த ஓரிரு வாரங்களில் இந்தியாவில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் மக்களை பீதியின் எல்லைக்கே தள்ளியிருக்கிறது. பொதுவிடங்களில் நின்று பேசவும், திரையரங்குகள், விற்பனை நிலையங்கள் போன்ற இடங்களுக்குச் செல்லவும் மக்கள் பெரிதும் தயங்குகின்றனர். காரணம் பெரும்பாலும் தாக்குதலுக்கு உள்ளாகும் இடங்கள் இத்தகையதே.

வெடிகுண்டு ஏற்படுத்தும் பாதிப்புகளை பல அடுக்குகளாகப் பிரிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். முதலாவது குண்டு வெடிக்கும் போது உருவாகும் வெடி அலைகள். வெடிகுண்டு வெடிக்கும் போது சுற்றியிருக்கும் பகுதி மிக அதிக அழுத்தத்துக்குள் தள்ளப்படுகிறது. இது அருகிலிருக்கும் காற்றை மிக அழுத்தத்துடனும், மிக மிக விரைவாகவும் தள்ளுகிறது. இந்த வேகம் ஒலியின் வேகத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு வினாடியை நீங்கள் ஆயிரக்கணக்காக உடைத்தால் அதில் ஒரு வினாடியில் இந்த அலை பாயும் எனக் கொள்ளலாம். இது தான் சுற்றியிருக்கும் பொருட்களையும் உடைத்து, அருகில் நிற்கும் மனிதர்களையும் கொடூரமாய் தாக்குகிறது.

இந்த அலைகளைத் தொடர்ந்து இரண்டாவதாக வருவது அதிர்வு அலைகள். மிக அதிக அழுத்தத்தில், அதிக வெலாசிடி உள்ள அதிர்வு அலைகள் உடலை ஊடுருவி உடலின் பாகங்களைச் சிதைக்கிறது. இந்த அலைகள் தாக்கினால் உடல் மிகப்பெரிய சேதத்தை சந்திப்பது உறுதி.

குண்டு வெடிக்கும்போது அருகில் இருக்கும் கண்ணாடிப் பொருட்களோ, இரும்புப் பொருட்களோ, அல்லது கனமான கூர்மையான பிற பொருட்களோ அதி வேகத்தில் வீசப்படும். இது தான் சற்றுத் தொலைவில் இருப்பவர்களைக் கூட தாக்கி அவர்கள் உயிருக்கு உலை வைக்கிறது.

குண்டு வெடிக்கும் போது ஏற்படும் வெப்பம் அருகில் இருக்கும் பொருட்களை எரித்தும், வெப்ப அலைகளை அருகிலுள்ள பகுதிகளில் நிலவச் செய்தும் முடிந்த மட்டும் பொசுக்கி விடுகிறது.

குண்டு வெடிக்கும்போது நிகழும் இன்னொரு அபாயம் என்னவெனில், வெடிக்கும் போது அதிக அழுத்தமான காற்று வெளித்தள்ளப்படுவதால் அந்த இடத்தில் மிகப்பெரிய வெற்றிடம் ஒன்று உருவாகி விடுகிறது. இந்த வெற்றிடம் அடுத்த வினாடியே அருகிலுள்ள காற்றை உள்ளிழுத்து நிரம்பிக் கொள்கிறது. இப்படி உள்ளிழுக்கும் வலிமை அருகில் இருக்கும் பொருட்களையும் உயிர்களையும் தப்ப விடாமல் செய்துவிடுகிறது.

இவையெல்லாம் குண்டுவெடிக்கும்போது நிகழ்பவை. குண்டு வெடிப்பிற்குக் காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பாதிக்கப்படுவது அதற்கு சற்றும் தொடர்பற்ற மக்கள் என்பது தான் மனித நேயம் உடையவர்களை வேதனைக்குள் தள்ளும் செய்தி.

வன்முறையற்ற, பாதுகாப்பான ஒரு சூழல் அமைய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் தெளிவான திட்டமிடுதலும், பாரபட்சமற்ற அணுகுகுறையும் அவசியம். பொதுமக்களின் பங்களிப்பு, விழுப்புணர்வு போன்றவையும் இதில் அவசியம்.

1       உங்களுக்கு அருகில் எங்கேனும் குண்டு வெடித்தாலோ, வெடிக்கும் என தெரிந்தாலோ எதற்கேனும் அடியில், மூடிக்கொண்டு படுப்பது நலம் பயக்கும். இது குண்டு வெடித்தலினால் நிகழும் அலைகளிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

.
2       உங்களுக்கு ஏதேனும் சந்தேகப்படும்படியான பொருள் தபாலில் வந்தால் அதை அனுப்பியவர் யார் என பாருங்கள். அதில் தொலைபேசி இருந்தால் பேசி தகவல் அறியுங்கள். எதுவும் இல்லையேல் அந்தப் பார்சலை பிரிக்காமல் தனியே ஒரு அறையில் வைத்துப் பூட்டி விட்டு காவல் துறைக்குத் தகவல் அளியுங்கள். மிகவும் நம்பிக்கைக்குரிய நபர் தவிர்த்து யாரிடமிருந்தும் எதுவும் வாங்காதிருங்கள்.

.
3 ஒரு முக்கியமான விஷயம், சந்தேகத்துக்குரிய பார்சல் எங்கே இருந்தாலும் அந்த இடத்திலிருந்து சுமார் 300 மீட்ட இடைவெளியில், ரேடியோ, செல்போன் போன்றவற்றைப் பயன்படுத்தாதீர்கள். முடிந்தவரை மின் பொருட்கள் எதையும் இயக்காதீர்கள்.

.
4 இங்கேயெல்லாம் யார் வருவாங்க? என்பது போன்ற ஓரமான, மக்கள் அதிகம் செல்லாத இடங்களில் ஏதேனும் பார்சல் இருந்தால் உங்கள் சிந்தனை சட்டென விழிப்படையட்டும். பார்சலின் மேல் ஏதேனும் எச்சரிக்கை வாசகங்கள் ஒட்டப்பட்டிருந்தால் உடனே காவல்துறைக்குத் தெரியப்படுத்துங்கள். எக்காரணம் கொண்டும் பார்சலைத் தொடாதீர்கள்.

.
5 வந்திருக்கும் பார்சல் சந்தேகத்துக்குரியதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது ? சில வழிமுறைகள் சொல்கின்றனர் நிபுணர்கள். உதாரணமாக, வந்திருக்கும் பார்சல் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தாலோ, அனுப்பியவர் விவரம் இல்லாமல் இருந்தாலோ, ஒழுங்கற்ற வடிவத்துடன் இருந்தாலோ, விலாசம் பிழைகளுடன் எழுதப்பட்டிருந்தாலோ, குறிப்பிட்ட நபருக்கு என்று இல்லாமல் தலைவர் இயக்குனர் என பதவிகள் குறிப்பிட்டு அனுப்பப்பட்டிருந்தாலோ, வித்தியாசமான வாசனை வந்தாலோ, ஒயர் போன்றவை தெரிந்தாலோ, அளவுக்கு அதிகமாகவே தபால்தலை ஒட்டப்பட்டிருந்தாலோ, அளவுக்கு அதிகமான எடையுடன் இருந்தாலோ,  எண்ணைப்பசை, பொடி, போன்றவை கசிந்தாலோ, உள்ளிருந்து ஏதேனும் சத்தம் வந்தாலோ அவை பிரச்சினைக்குரியவையாய் இருக்கலாம் என கருதி விழிப்படையுங்கள்.

.
6 ஒருவேளை நீங்கள் ஒரு நிறுவனத்தின் அதிகாரியாய் இருந்தால், யாரேனும் உங்கள் அலுவலகத்துக்கோ, பொது இடத்துக்கோ குண்டு வைத்திருப்பதாக போனில் சொன்னால், அந்த நபர் ஆணா பெண்ணா, அவருடைய குரல், உச்சரிப்பு முறை, பின்னணியில் ஒலிக்கும் சத்தங்கள் இவற்றைக் கவனமுடன் பதிவு செய்யுங்கள். பதட்டப்படவே படாதீர்கள். அந்த நபர் பேசி முடிக்கும் வரை அமைதியாய் கேளுங்கள். அந்த சில வினாடிகளில் நீங்கள் கவனிப்பவை மிகப்பெரிய உதவியாய் இருக்கக் கூடும்.

.
7 கட்டிடத்தில் எங்கேனும் குண்டு வெடித்து தீ பரவினால் முடிந்தமட்டும் தரையோடு குனிந்து வெளியேறுங்கள். வெப்பம் கூரைப் பகுதியில் அதிகமாய் இருக்கும். கட்டிடத்தின் அவசர வாசல்களைப் பயன்படுத்துங்கள். மின் தூக்கிகள் பக்கமே போகாதீர்கள்.

.
8 அலுவலகங்கள், வணிக வளாகங்கள், பெரிய கட்டிடங்கள் போன்ற பகுதிகளைச் சுற்றி அதிக வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்தல் அவசியம். கூடவே கண்காணிப்புக் காமராக்கள் பொருத்துவதும் அவசியம். அலுவலகத்தில் பணிபுரிவோர் இத்தகைய ஆலோசனைகளை அலுவலக தலைமைக்குச் சொல்லலாம்.

.
9 சந்தேகப்படும்படியான நபர் உங்கள் அருகே உலாவுவதைக் கவனித்தால் ரகசியமாய் சற்று நேரம் அந்த நபருடைய நடவடிக்கைகளைப் பாருங்கள். சந்தேகம் வலுத்தால் காவல் துறைக்குத் தகவல் கொடுங்கள். குறிப்பாக பல்பொருள் அங்காடிகள், திரையரங்குகள், சுரங்க நடை பாதைகள் போன்ற இடங்களில் விழிப்பாய் இருங்கள்.

.
10 யாருமே விரும்பாத இடங்களைக் கூட ஒருவர் ரகசியமாய் புகைப்படம் எடுக்கிறார் என்றால் அவர் கவனிக்கப்பட வேண்டியவர். உதாரணமாக ரயில்வே நிலையங்களின் ஓரங்கள், கழிப்பிடங்களின் பின் பக்கம், இப்படி.

.
11 குற்றவாளிகள் பெரும்பாலும் தாங்கள் குற்றவாளிகள் இல்லை என்று காட்டிக் கொள்ள பெரும் பிரயர்த்தனம் மேற்கொள்வார்கள். குறிப்பாக வெயில் காலத்திலும் கோட் சூட்டுடன் நடப்பது, எதேச்சையாய் செய்வது போல சில செயல்களை வேண்டுமென்றே செய்வது இப்படி. விழிப்பாய் இருந்தால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

.
12 குற்றம் செய்ய வருபவர்கள் பெரும்பாலும் ஒரு பையோ, சூட்கேசோ ஏதேனும் வைத்திருப்பார்கள். தாங்கள் சாதாரணமானவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ள மொழுமொழுவென புதிதாய் ஷேவ் செய்திருக்கவும் வாய்ப்பு உண்டு. மிகவும் கூர்மையான பார்வையும், அனைத்தையும் கவனத்துடன் அணுகும் மனப்பான்மையும் அவர்களிடம் இருக்கும். வேக வேகமாக நடப்பார்கள், ஆனால் ஓடவே மாட்டார்கள்.

.
13 ஒரு இடத்தில் பெட்டியை வைத்துவிட்டு சிறிது நேரத்தில் விடுட்டென பெட்டியை எடுக்காமல் பக்கத்தில் இருக்கும் கடைக்குச் செல்வதுபோல ஒருவர் அப்படியே நழுவுகிறார் எனில் கவனம் தேவை !
சமூகவிரோத செயல்களையும், தீவிரவாத நடவடிக்கைகளையும், வெடிகுண்டு போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளையும் ஒட்டுமொத்தமாக சமூகத்திலிருந்து கழுவி விட முடியாது. ஆனால் எச்சரிக்கை உணர்வு மக்களிடம் பரவினால் இத்தகைய குற்றங்களைப் படிப்படியாகக் குறைக்க முடியும்.
 
சமூக அக்கறையும், சமூகத்தில் நானும் ஓர் அங்கம் எனும் உணர்வும், சமூகப் பாதுகாப்புக்கு என்னால் இயன்றதைச் செய்யவேண்டும் எனும் பங்களிப்பு உணர்வும் அனைவரிடமும் மிளிர்ந்தால் வன்முறைகள் ஒழிந்து நன்முறைகள் சமூகத்தை வளமாக்கும்.

கட்டுரை : இடி… மின்னல்… இன்னல்

( இந்த வார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )

மழைக்காலம் வந்துவிட்டாலே இடி மின்னல் குறித்த அச்சமும் எழுந்து விடுகிறது. நாளேடுகளின் பக்கங்களில் மின்னல் தாக்கி பரிதாபமாய் உயிரை விடும் அப்பாவிகளின் செய்திகள் மனதை உலுக்குகின்றன.

எப்போது எங்கே எப்படித் தாக்கும் என அறிய முடியாத ஒரு ரகசியச் சாத்தான் போல மின்னலும் இடியும் தாக்கிக் கொண்டே இருக்கின்றன. எனவே தான் பழைய புராணங்கள் இடியையும், மின்னலையும் கடவுளின் கோபத்தின் வெளிப்பாடுகள் என புரிந்து கொண்டன.

உதாரணமாக கிரேக்க புராணங்கள் இடியை ஸீயஸ் எனும் கடவுளிடமிருந்து வருவதாக நம்பினர். வைக்கிங்ஸ் பிரிவினர் தோர் எனும் கடவுள் மேகங்களின் மீது தேரில் பவனி வரும்போது சும்மா இருக்க முடியாமல் கையிலிருக்கும் சுத்தியலால் மேகத்தின் தலையில் அடிப்பதால் தான் மின்னலும் இடியும் உண்டாகின்றன என்றனர்.

செவ்விந்தியர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் இது ஒரு மாயப் பறவையின் மின்னும் சிறகடிப்பு என்று கற்பனை விரித்தனர். அந்த பறவையின் இறக்கைகள் அடிக்கும் ஒலியே இடிச் சத்தம் எனவும் அவர்கள் சுவாரஸ்யமாகக் கற்பனை செய்து கொண்டனர்.

வானத்திலிருந்து வருகிறது என்பதைக் கொண்டு பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சூழல் மத பின்னணியில் இருந்தவர்கள் அவர்களின் கற்பனைக்கு ஏற்ப கட்டிய கதைகளில் ஏதும் உண்மை இல்லை என்பதையே இன்றைய விஞ்ஞானம் விளக்கியுள்ளது.

எனில் இடி மின்னல் தான் என்ன ? மிகவும் எளிதாகச் சொல்லவேண்டுமெனில் மின்னல் என்பது மின்சாரம். அடர் ஈர மேகங்களில் மின்சாரம் உலவிக் கொண்டே இருக்கும். அந்த மின்சாரம் உள்ளுக்குள்ளே மேலும் கீழுமாக அசையும். பொதுவாக மேகத்தின் மேல்பகுதியில் நேர் மின்சாரமும் (பாசிடிவ்), கீழ் பகுதியில் எதிர் மின்சாரமும் (நெகட்டிவ்) இருக்கும்.

மழைக்காலத்தில் நீங்கள் வானத்தில் பார்த்தால் மேகத்துக்குள்ளேயே வெளிச்சம் மின்னி மின்னி மறைவதைக் காண முடியும். அது இந்த மின்சாரத்தின் உலவல் தான். அவ்வப்போது நேர் எதிர் மேகங்கள் அருகருகே வரும்போது மேகங்களுக்கிடையேயும் இந்த மின்னல் உருவாகிறது.

இவ்ளோ சின்ன மேகத்தில் எப்படி இந்த வேலைகளெல்லாம் நடக்கும் என சிந்திக்கிறீர்களா ? மேகத்தின் அளவு நாம் நினைப்பது போல சிறியதல்ல. சாதாரணமாக சுமார் இரண்டு சதுர மைல் அளவு முதல், சுமார் இருநூறு சதுர மைல் அளவுவரையிலான பெரிய மேகக் கூட்டங்களே வானில் உலவுகின்றன.

மேகத்தில் மின்சாரம் இருக்கிறது சரி. எது எப்படி பூமியைத் தாக்குகிறது என்பது அடுத்த கேள்வி. உண்மையில் இது ஒருவகை கொடுக்கல் வாங்கல். மேகத்தின் கீழ்பகுதியில் இருக்கும் எதிர்மின்சாரத்தை பூமியிலிருக்கும் ஏதேனும் நேர் மின்சாரம் ஈர்த்தால் மட்டுமே மின்னல், இடி எல்லாம் உருவாகும். இதன் தாக்கம் மேகத்தின் அளவைப் பொறுத்து அமையும். அதாவது மிகப்பெரிய மேகத்திலிருந்து உருவாகும் மின்னல் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒரு வகையில் உண்மையில் மின்னல் வானத்திலிருந்து கீழே வரவில்லை, பூமியிலிருந்து வானத்துக்குச் செல்கிறது என்று சொல்லலாம். இந்த மின்சாரப் பாய்ச்சல் வானுக்கும் பூமிக்கும் இடையே நிகழும் போது அந்தப் பகுதியில் அதிகமான வெப்பம் உருவாகும். அது காற்றில் உருவாக்கும் துளையும், அதிர்வும், காற்றின் விரிவாக்கமும் எல்லாம் சேர்ந்தே இந்த இடிச் சத்தம் உருவாகிறது.

இந்த வெப்பம் சாதாரண வெப்பமல்ல. இது சூரியனின் பரப்பில் காணப்படும் வெப்பத்தை விட ஐந்து மடங்கு அதிகம். அதாவது 33,315 டிகிரி செல்சியஸ் வரை இந்த வெப்பம் இருக்கும். நமது சென்னை வீதிகள் சந்தித்த அதிகபட்ச வெப்பமே நாற்பதோ, நாற்பத்து ஐந்தோ செண்டி கிரேட் தான். எனில் அதைப் போல ஆயிரம் மடங்கு அதிக வெப்பத்தை யோசித்துப் கொள்ளுங்கள்.

மின்னலும், இடியும் ஒரே நேரத்தில் தான் உருவாகின்றன. ஒளியானது ஒலியை விட வேகமாய் பயணிப்பதால் தான் வெளிச்சம் முதலில் தெரிகிறது, ஒலி பின்னால் வருகிறது. ஒளியின் வேகமான வினாடிக்கு 186,000 மைல்கள் எனும் வேகத்துடன் ஒப்பிடுகையில் ஒலியின் வேகம் நத்தையின் வேகம் தான்.

பூமியிலிருந்து வானுக்கு ஒரு நேர் மின் தொடர்பு உருவாகவில்லையெனில் மின்னலோ இடியோ உருவாகாது. ஆனால் அப்படி நிகழாமல் தடுப்பது சாத்தியமில்லை. ஏனெனில் ஒரு பெரிய மரமோ, மின் கம்பமோ, தெருவுக்கு தெரு முளைத்து நிற்கும் கொடிகம்பமோ ஏதேனும் ஒன்று போதும் மின்னலை வரவேற்க.

அதனால் தான் பெரிய கட்டிடங்கள், ஆலைகள் போன்றவற்றின் உச்சியில் பெரிய இடிதாங்கியை வைப்பார்கள். இது மேகத்திலிருந்து வரும் மின்சாரத்தை அருகிலுள்ள பகுதிகளில் விழாமல் பாதுகாத்து தானே வாங்கிக் கொள்ளும். அப்படியே பூமிக்கு அடியில் அதைக் கடத்தியும் விடும். இப்படி மின்னலை இழுத்து அதிலிருந்து மின்சாரத்தைத் தயாராக்க முடியுமா எனும் முனைப்பும் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

மின்னலுக்கு நாடு, மொழி, இனம், வல்லரசு, நல்லரசு என்ற பேதமெல்லாம் கிடையாது. எல்லா மக்களையும் ஒரேபோல பாதிக்கும். அமெரிக்காவில் வெளியாகும் ஒரு புள்ளிவிவரம் சுமார் நூறு பேராவது ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவில் மின்னல் தாக்கி மரணமடைகின்றனர், பல நூறு பேர் நிரந்தர ஊனமடைகின்றனர் என துயரச் செய்தி வெளியிட்டிருக்கிறது. இது அமெரிக்காவில் சூறாவளி போன்ற மிரட்டல்களினால் நிகழும் உயிர்சேதத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு எச்சரிக்கை செய்யும் போது ஏன் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும் என்பதற்கு இது தான் காரணம். உலகில் சுமார் ஒரு இலட்சம் இடியுடன் கூடிய மழை பெய்தாலும் எல்லாமே ஆபத்தானவை அல்ல என்பது உலக வானிலை குழுவின் கருத்து.

மின்னல் தாக்காமல் காத்துக் கொள்ள என்ன செய்யவேண்டும் ?

  1. வானிலையைக் கவனியுங்கள். இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருந்தால் வெளியில் செல்லும் பயணத்தை ஒத்திவையுங்கள், அல்லது வகைப்படுத்துங்கள். வீடுகளில் பாதுகாப்பாய் இருங்கள்.
  2. பெரும்பாலான மின்னல் பாதிப்புகள் மழைவிட்ட பின்போ, மழை துவங்குவதற்கு முன்போ தான் நிகழ்கின்றன எனவே, மழை விட்டபின் ஒரு அரைமணி நேரமாவது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அதுபோலவே மழை வரும் வாய்ப்பு தெரியும் போதே கவனமாய் இருக்க வேண்டும்.
  3.  மின்னலை நாம் பார்ப்பதற்கும், தொடரும் இடிச் சத்தத்தைக் கேட்பதற்கும்  இடையேயான நேரமே நமக்கும் மின்னல் தாக்கிய இடத்தும் இடையேயான தூரத்தைச் சொல்கிறது. இந்த இடைவெளி ஐந்து வினாடிகளை விடக் குறைவெனில் சுமார் ஒரு மைல் இடைவெளியில் எங்கோ மின்னல் தாக்கியிருக்க வாய்ப்பு உண்டு என கணித்துக் கொள்ளுங்கள்.
  4. இடி மின்னல் வேளைகளில், உயரமான மரங்கள், கொடிக் கம்பங்கள், கைபேசிக் கோபுரங்கள், பேருந்து நிறுத்தங்கள், உலோகப் பொருட்கள் இருக்கும் இடங்கள் இவற்றின் அருகே நிற்காதீர்கள்.
  5. அதே போலவே வெட்டவெளியிலோ, நீர் நிலைகளிலோ, கடற்கரைகளிலோ, விளையாட்டு மைதானங்களிலோ நிற்காதீர்கள். அந்த இடங்களில் உயரமாய் இருப்பது நீங்கள் தான் என்பதால் நேர் மின்சாரத்தை மேகம் உங்கள் உடலிலிருந்து ஈர்க்கக் கூடும்.
  6. ஒருவேளை வெட்ட வெளியில் இருக்க நேர்ந்தால் தரையில் படுக்கவே படுக்காதீர்கள். குனிந்து வயல் வரப்பில் குந்தவைத்து அமர்வது போல அமருங்கள். தலையைக் குனித்து கால் முட்டியில் வையுங்கள். தரைக்கும் உடலுக்குமான தொடர்பு எவ்வளவு குறைவாய் இருக்கிறதோ அவ்வளவு நல்லது.
  7. சட்டென மயிர்க்கூச்செரிந்தாலோ, அதிர்வு உணரப்பட்டாலோ மின்னல் வெகு அருகில் தாக்கும் வாய்ப்பு உண்டு என உணர்ந்துகொள்ளுங்கள். குழுவாக இருக்காதீர்கள் பிரிந்து தனித்தனியே செல்லுங்கள்.
  8. வீட்டுக்குள்ளே இருந்தால், அந்த நேரத்தில் தொலைபேசியைப் பயன்படுத்தாதீர்கள். தொலைபேசியில் அருகே இருப்பதைத் தவிருங்கள். தொலைக்காட்சி, கணினி உட்பட அனைத்து எலக்ட்ரானிக் கருவிகளையும் சற்று ஓய்வில் இருக்க விடுங்கள். மின் இணைப்பிலிருந்து அவற்றை துண்டித்து விடுங்கள். கேபிள் டிவியின் கேபிளையும் கழற்றிவிடுங்கள்.
  9. காரில் சென்று கொண்டிருந்தால் காரின் கண்ணாடிகளை முழுவதுமாக மூடிவிட்டு ஓரமாக நிறுத்திவிட்டு அமைதியாய் இருங்கள். மரங்கள், கம்பங்கள் போன்றவற்றின் அருகே வண்டியை நிறுத்தாமல் கவனமாய் இருங்கள்.
  10. வீடுகளில் அந்த நேரங்களில் சமையல் செய்வது, குளிப்பது போன்ற வேலைகளைச் செய்யாதீர்கள். குறிப்பாக திறந்த சன்னல் அருகே நின்று வானத்தை வெறிக்காதீர்கள்.

இயற்கையின் மொழிகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற செயல்களைச் செய்வதே ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியமாகும்.

லிஃப்ட் : ரணமும், காரணமும்.

( இந்த வார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை )

வாழ்வின் வலிமிகுந்த தருணங்கள் நமக்கு சகமனிதனின் மீதுள்ள ஆத்மார்த்தமான கரிசனையையும், அன்பையும் வெளிப்படுத்துகின்றன. கூடவே அத்தகைய தருணங்களை எதிர்கொள்ளும் வழிகளையும் நமக்குக் கற்றுத் தருகின்றன, அல்லது எச்சரிக்கை செய்கின்றன.

சமீபத்தில் சென்னையில் லிப்டில் மாட்டி உயிரிழந்த இளைஞனின் சோகம் உயிரை பதை பதைக்க வைக்கிறது. இனிமேல் யாருக்கும் இத்தகைய கொடூர மரணங்கள் நேரக்கூடாது என மனம் நினைக்கும் அதே வேளையில் மனதில் கொள்ள வேண்டிய எச்சரிக்கை உணர்வுகளும் மேலிடுகின்றன.

லிப்ட் – ல் நிகழும் இத்தகைய துயர நிகழ்வுகள் மிகவும் அபூர்வமானவை. உதாரணமாக ஒரு கோடி பேர் பயணிக்கும் போது ஒரு நபர் காயமடைகிறார் என்றது அமெரிக்காவில் பத்து ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு புள்ளி விவரம். தற்போதைய நவீன லிப்ட்கள் அதை இன்னும் குறைத்திருக்கின்றன. எனினும், தமிழகத்தில் மட்டும் சுமார் பத்தாயிரம் லிப்ஃகள் பாதுகாப்பு இல்லாமலும், அனுமதி இல்லாமலும் இயங்கக் கூடும் எனும் ஐயம் கவலையுறச் செய்கிறது, எச்சரிக்கை உணர்வையும் அதிகரித்திருக்கிறது.
லிப்ட்டைப் பயன்படுத்தும்போது சிலவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

1. தானாகவே திறக்கும் லிப்ட்களில் லிப்ட் கதவு திறக்கவில்லையெனில் எந்தவிதமான பரிசோதனை முயற்சிகளும் செய்யாமல் உரியவர்களிடம் சொல்லி விடுங்கள். அல்லது ஓரமாய் இருக்கும் படிக்கட்டைப் பயன்படுத்துங்கள்.

.
2. நாமாகவே திறக்க வேண்டிய கிரில் கதவுகள் எனில், லிப்ட் அந்த தளத்தில் நிற்கிறதா என்பதை பார்த்து உறுதி செய்து விட்டு திறக்கவும். திறந்தபின் உள்ளே நுழையும் போதும், பராக்கு பார்த்து விட்டு நுழையாமல் அதீத கவனத்துடன் நுழையுங்கள்.

.
3. மின் தட்டுப்பாடு உள்ள காலங்களில் லிப்டைப் பயன்படுத்தாமல் படிகளைப் பயன்படுத்துவது உடல் நலத்துக்கும், பாதுகாப்புக்கும் ஏற்றது.

.
4. ஒருவேளை லிப்ட் பாதி வழியில் நின்று விட்டால் பதட்டப்படாதீர்கள். நிச்சயமாக லிப்ட்டுக்குள் அலாரம், அவசர தொலைபேசி ஏதேனும் இருக்கும் அதைப் பயன்படுத்துங்கள். உங்கள் கையில் கைபேசி இருந்தால் உதவி நாடுங்கள்.

.
5. எக்காரணம் கொண்டும் வழியில் நின்றுவிட்ட லிப்ட் டில் இருந்து வெளியேறும் வழியை யோசிக்கவே யோசிக்காதீர்கள். உதவி வரும் வரை நிதானமாய் இருங்கள். உதவியும் அதிகாரப்பூர்வ இடத்திலிருந்து வருகிறதா என கவனியுங்கள். காவல்துறை, தீயணைப்புத் துறை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து வருகிறதா என பாருங்கள். வேடிக்கை பார்ப்பவர்கள் கை நீட்டி இழுக்க முயன்றால் வேண்டாம் என ஒதுங்கிவிடுங்கள்.

.
6. தீ, எச்சரிக்கை மணி போன்றவற்றுக்காக அவசரமாய் வெளியேறுகிறீர்கள் எனில் படிகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.

.
7. மின் தடை ஏற்பட்டதாய் உணர்ந்தாலும் கவலைப்படாதீர்கள், பெரும்பாலான லிப்ட்களுக்கு தனி ஜெனரேட்டர் வசதி உண்டு என்பதையும், அவசர காலத்தில் முதல் தளம் வரை லிப்டை இறக்கும் மின்சக்தி எப்போதுமே சேமிக்கப்பட்டிருக்கும் என்பதையும் உணருங்கள்.

.
8.  லிப்ட் ஒன்றும் கடவுளல்ல, போனால் மறுபடியும் திரும்ப வரும் எனவே அவசரம் வேண்டாம். ஒவ்வொரு முறை நீங்கள் லிப்டைப் பயன்படுத்தாமல் படிகளைப் பயன்படுத்தும் போதும் உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

.
9. குழந்தைகள், செல்லப்பிராணிகள் உங்களுடன் வந்தால் அவர்களை மிகவும் கவனமுடன் கண்காணியுங்கள். குறிப்பாக குழந்தைகளின் ஆடைகள் கதவு இடுக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் கவனமாய் இருங்கள்.

.
10. லிப்ட் டுக்குள் வேறெந்த பரீட்சார்த்த முயற்சிகளையும் எடுக்காதீர்கள். தேவையான பொத்தானை அழுத்திவிட்டு அமைதியாய் கதவை விட்டு தள்ளியே நில்லுங்கள்.

லிப்டைக் கண்பாணிப்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். லிப்ட்டில் பயணம் செய்வோர் அவர்களை முழுமையாய் நம்புகிறார்கள் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

லிப்டிலுள்ள எச்சரிக்கை மணி, தொலைபேசி, கணினி இணைப்பு, போன்றவற்றை அடிக்கடி சரி செய்ய வேண்டும்.

லிப்டின் பராமரிப்பை வருடாந்தர காப்பீடுக்கு உட்படுத்தி பிழையின்றி பராமரிக்க வேண்டும். மின் தடை உண்டெனில் உடனுக்குடன் லிப்ட் வாசலில் அறிவிப்புப் பலகைகள் போடவேண்டும்.

முடிந்தால் அதிக நெருக்கடியான இடங்களில் ஒரு நபரை பணிக்கு அமர்த்தி லிப்ட்டை இயக்கலாம்.

இன்றைய குடியிருப்பு வாழ்க்கையில் தவிர்க்க முடியாததாகி விட்டது லிப்ட்டில் பயணிப்பது. அதை பாதுகாப்பானதாய் ஆக்கிக் கொள்ளும் கடமை நம்மிடம் இருக்கிறது. வாழ்க்கை துயர நிகழ்வுகளின் தொகுப்பல்ல. எனவே கவனத்துடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள எச்சரிக்கை உணர்வுகளை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.