கட்டுரை : புகைப் பழக்கத்தை எளிதில் விரட்டலாம்

( தமிழ் ஓசை களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை )

சமீபகாலமாக சமூக அக்கறை கொண்ட அரசியல்வாதிகளாலும், சமூக அமைப்புகளினாலும் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பரவலாக உருவாகியுள்ளது கண்கூடு. புகைத்தலை விட வேண்டும் எனும் எண்ணம் புகைப்பழக்கம் உடைய அனைவருக்குமே உண்டு என்கிறது ஆய்வு ஒன்று. ஆனால் பெரும்பாலானவர்கள் புகைத்தலை விட முயன்று முயன்று படு தோல்வி அடைந்தவர்களே.

உலக அளவில் புகைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களில் பத்து விழுக்காடு பேர் இந்தியர்கள் என்பது கவலைக்குரியது. சீனா இந்த விஷயத்திலும் முதலிடத்தில் உள்ளது, அங்குள்ள மக்களில் சுமார் முப்பது விழுக்காட்டினர் புகைப் பழக்கத்துக்கு அடிமையாய் இருக்கின்றனர்.

இன்னும் இருபது ஆண்டுகளில் புகைப் பழக்கத்தினால் இறக்கும் மனிதர்களில் 80 விழுக்காட்டினர் பிந்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில் இருப்பார்கள் என்பது புகைப் பழக்கத்துக்கு எதிரான போராட்டம் வலிமையடைந்தே ஆகவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

உலக அளவில் தினமும் சுமார் 15, 000 பேர் புகைப் பழக்கத்தினால் மடிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை படிப்படியாய் வளர்ந்து கொண்டிருப்பது மிகப்பெரிய சவாலாய் உருவெடுத்துள்ளது.

அடுத்த நூற்றாண்டு முளைக்கும் போது நூறு கோடி பேர் புகைக்கும் பழக்கத்தினால் புதையுண்டு போயிருப்பார்கள் என்கிறது உலக நலவாழ்வு நிறுவன ஆய்வறிக்கை.

உலகெங்கும் சுமார் 200 பில்லியன் டாலர்கள் (சுமார் 88 ஆயிரம் கோடி ரூபாய் ) அரசுகளுக்கு வரியாக வந்து சேர்கின்றன சிகரெட் பொருட்கள் மூலம், ஆனால் அதில் 0.2 விழுக்காடு கூட புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக அரசுகள் செலவிடுவதில்லை என்கிறது உலக நலவாழ்வின் அறிக்கை.

அரசுகள் புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என நலவாழ்வு நிறுவனம் எச்சரிக்கிறது. குறிப்பாக புகையிலைப் பொருட்களுக்கான வரியை அதிகப்படுத்துகள், புகைத்தலுக்கு எதிரான விளம்பரங்களைத் தீவிரப்படுத்துதல், புகையிலை பொருட்களுக்கான சலுகைகள் அனைத்தையும் நிறுத்துதல், பொது இடங்களில் புகைத்தலை தடை செய்தல், புகையிலையின் கொடுமையை மக்களுக்குப் புரிய வைத்தல், புகைப் பழக்கத்தை விட விரும்புபவர்களுக்கு உதவுதல் என ஆறு வகைகளில் அந்த நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என அது வலுயுறுத்தியுள்ளது.

உலக நலவாழ்வு நிறுவனத்தின் அறிக்கை 179 நாடுகளின் புகை பழக்கம் குறித்த தகவல்களை துல்லியமாய் தருகிறது. அதன்படி 74 நாடுகள் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்களில் புகைத்தலை அனுமதிக்கிறது !, உலகின் ஐம்பது விழுக்காடு நாடுகள் அரசு அலுவலகங்களில் புகைத்தலை அனுமதிக்கிறது, வெறும் இருபது நாடுகள் மட்டுமே புகைக்கு எதிரான கடினமான கொள்கைகளை வகுத்துள்ளது.

பெற்றோரின் புகைப் பழக்கம் பிறக்கப் போகும் குழந்தையைக் கூட தாக்கும் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும். அதிலும் குறிப்பாக தாய்க்கு புகைக்கும் பழக்கம் இருந்தால் குழந்தையின் இதயம் பாதிக்கப்படும் என்கிறது ஆய்வு ஒன்று.

உலகின் ஐந்து மரணங்களில் ஒன்று புகைத்தலினால் வருகிறது. புகைத்தலினால் அல்சீமர் போன்ற நோய்கள் விரைவிலேயே தாக்குகிறது என்று புள்ளி விவரங்களும், மருத்துவத் தகவல்களும் தொடர்ந்து மக்களை எச்சரித்துக் கொண்டே இருந்தாலும் இன்னும் புகைப் பழக்கம் ஒழியவில்லை.

மைக்கேல் ராய்சன் மற்றும் மெஹ்மெட் எனும் மருத்துவர்கள் ஒன்றிணைந்து புகைத்தலை நிறுத்துவதற்கான வழி முறை ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.

இது நான்கு படிகளைக் கொண்டது.

முதல் படி, புகை பழக்கமுடையவர் தன்னுடைய புகைப் பழக்கத்தைக் குறித்த முழு அறிவைப் பெறுதல். அதாவது ஒரு நாள் எத்தனை சிகரெட் பிடிக்கிறார், தனியாக புகை பிடிக்கிறாரா, நண்பர்களுடன் புகை பிடிக்கிறாரா ? காலையில் அதிகம் பிடிக்கிறாரா ? இரவிலா ? போன்ற அனைத்து விவரங்களையும் தயாராக்குதல்.

இரண்டாவது படி, புகைக்க வேண்டும் எனும் ஆர்வத்தைத் தூண்டும் காரணிகளைக் கண்டறிந்து விலக்குதல். உதாரணமாக சிலருக்கு காபி குடித்தவுடன் புகைக்கத் தோன்றும், சிலருக்கு உண்டபின் புகைக்காவிட்டால் தலையே வெடித்துவிடும், சிலருக்கு மாலை நேரத்தில் நண்பர்களோடு இருக்கும்போது நிறுத்தாமல் புகைக்க வேண்டும் இப்படி பலப் பல காரணிகள். இவற்றைக் கண்டறிந்து விலக்க வேண்டும். மாற்று வழிகள் யோசிக்க வேண்டும், உதாரணமாக உண்ட பின் கொஞ்ச நேரம் நடப்பது போல.

மூன்றாவது படி, நீங்கள் நீண்ட நாட்களாக புகைக்கிறீர்கள், நிறைய புகைக்கிறீர்கள் எனில் ஒரு மருத்துவரின் ஆலோசனை பெறுவது. அதாவது புகை வெறுப்பு மருந்துகள், புகைக்கு மாற்று மருந்துகள் போன்றவற்றைக் குறித்த தகவல்களுக்காக.

நான்காவது படி, புகைப்பதை நிறுத்தியதை மிகப்பெரிய சாதனையாய் கருதி, உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வது. காரணம் பல கோடி பேர் முயன்று முடியாததை நீங்கள் சாதித்திருக்கிறீர்கள் என்பது கர்வத்துக்குத் தக்கதே.

 
பெரும்பாலான புகை அடிமைகள் தங்கள் பழக்கத்தை பதின் வயதுகளிலேயே பெற்று விடுகின்றனர். எனவே தான் பதின் வயதுகளில் புகை சார்ந்த பழக்கம் வராதபடி பார்த்துக் கொள்தல் அவசியமாகிறது. குறிப்பாக அவர்களைக் கவரும் ஊடகங்கள், நண்பர்கள், சூழல் இவை புகை இல்லாததாய் இருத்தல் அவசியம்.

புகையை நிறுத்த கீழ்க்கண்ட வழிகளை முயன்று பாருங்கள்.

1. புகையை நிறுத்தவேண்டும் என மனதில் முடிவெடுங்கள். ஒரு நாளை தீர்மானியுங்கள். அன்றிலிருந்து முழுமையாக விட்டு விடுங்கள். உடனே வீட்டில் இருக்கும்  லைட்டர், ஆஷ் டிரே எல்லாவற்றையும் தூக்கி வீசுங்கள். இன்று மட்டும் ஒன்று – எனும் எண்ணத்தை அறவே ஒழியுங்கள். இல்லையேல் புலி வால் பிடித்த கதையாய்  மாறிவிடும்.

.
2. புகையைத் தூண்டும் காரணிகளை விலக்குங்கள். காபி குடித்ததும் புகைக்கத் தோன்றினால் காபியை விட்டு விடுங்கள். உண்டபின் சிகரெட் பிடிக்கத் தோன்றினால் சற்று  தூரம் நடந்து விட்டு வாருங்கள். வழக்கமாக சிகரெட் வாங்கும் கடைப்பக்கமாய் கடைக்கண் பார்வையும் வைக்காதீர்கள்.

.
3. உடற்பயிற்சி செய்யுங்கள். யோகா பழக முடிந்தால் யோகா பழகுங்கள், காலையில் முப்பது நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள், புகைக்கும் விருப்பத்தை இவை  மட்டுப்படுத்தும். அலுவலகங்களில் படிகளில் ஏறி இறங்குவது, நடப்பது என உங்களை உற்சாகமாய் வைத்துக் கொள்ளுங்கள்.

.
4. புகையை விட்ட சில நாட்கள் சோதனைக் காலம். நான் உனக்கு அடிமையாக மாட்டேன் – என உள்ளுக்குள் உறுதி கொள்ளுங்கள். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்  கொள்ளுங்கள்.

.
5. உங்கள் சூழலை மாற்றுங்கள். புகைக்கும் நண்பர்களை நேரில் சந்திப்பதைத் தவிருங்கள், புகைக்கும் கடை பக்கமாய் ஒதுங்குவதை விடுங்கள். புது சூழலை  உருவாக்குங்கள். புகைக்கத் தோன்றினால் உடலுக்கு ஊறு விளைவிக்காத சூயிங்கம் போன்றவற்றை மெல்லலாம்.

.
6. புகைக்காமல் கடந்து போகும் ஒவ்வொரு நாளையும் கொண்டாடுங்கள். உங்கள் குடும்பத்தினருக்காய் வாழும் வாழ்க்கையின் நீளம் அதிகரிக்கும் என ஆனந்தம்  அடையுங்கள். பாராட்டிக் கொள்ளுங்கள், பெருமிதம் கொள்ளுங்கள்.

.
7. அலைபாயும் மனமே புகையின் தோழன். மனதை கட்டுக்குள் வைத்திருக்க தியானம், நல்ல இசை என பழகுங்கள்.

.
8. மூச்சுப் பயிற்சி பழகுங்கள். ஆழமாக மூச்சை விடும் பயிற்சி உடலுக்கு உயிர்வளியை அதிகம் கொண்டு வரும். அது உடலை தெம்பாக்கி, புகைக்கும் விருப்பத்தைக்  குறைக்கும்.

.
9. ஊறு விளைவிக்காத சிகரெட் என எதுவுமே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிகரெட்டை விட்டபின் சற்று உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உங்கள்  உடலின் சுரப்பிகளும், செரிமானமும் மீண்டும் சரிவர செயல்பட ஆரம்பித்ததன் அறிகுறி அது. உணவை வகைப்படுத்துங்கள். முடிந்தமட்டும் இயற்கை உணவுகளை உண்ணுங்கள்.

.
10. சரியான தூக்கம் கொள்ளுங்கள். சரியான தூக்கம் இருந்தால் உடல் உற்சாகமடைந்து தேவையற்ற சிந்தனைகள் மறையும்.