
தியானம் என்பது
தற்காலிக மரணம்
மரணம் என்பது
நிரந்தர தியானம்.
வாழ்வின் அடிக்கோடிட வேண்டிய வார்த்தைகளில் ஒன்று விடுதலை எனக் கொளல் நலம். விடுதலை தேவை என்னும் உணர்வே நாம் அடிமையாய் இருக்கிறோம் என்னும் புரிதலில் தான் துவங்குகிறது. எனில் புரிதல் என்ற ஒன்று விரியாமலேயே சென்று விடுமெனில் நாம் விடுதலை என்பதை விளங்கிக் கொள்ளாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. கூண்டில் பிறக்கும் சிங்கக் குட்டிக்கு கூடே உலகமாகி விடுவதும், கூடுகள் கட்டாத குயிலுக்கு உலகமே கூடாகி விடுவதும் நாம் சராசரியாய் சந்திக்கும் நிகழ்வுகள் தானே. எது உலகம் என்பதை அறிந்து கொள்தலில் இருக்கிறது சிங்கத்தின் விடுதலை தேடலில் முதல் சுவடு. எனினும் விடுதலை தேடாத மனங்கள் கூட்டிலிருந்து திறந்து விடப்பட்ட புறாக்களைப் போல கூடுகளைச் சுற்றியே அலைந்து திரியும்.
வாழ்வின் சராசரி சோகங்கள் தற்காலிக விடுதலையைத் தேடுகின்றன. ஒதுக்கி வைக்கப் படும் தற்காலிக சோகங்கள் வட்டிகளுடன் வாசலுக்கு வெளியே மறு நாள் காத்திருக்கும். தொடர் காத்திருப்பின் பின் தப்பிக்க இயலா சோகங்களின் அரணுக்குள் சிக்கிக் கொள்கையில் தற்கொலை தேவை என்னும் அவசர முடிவு நிதானமாய் மனதை நிறைக்கிறது.
விடுதலை என்பது வெளியேறுதலில் மட்டுமல்ல. கொசுக்களிலிருந்து தப்பிக்க கொசுவலைக்கு உள்ளே மனிதன் அடைபட்டுக் கொள்வது போல, சில வருத்தங்களின் வழிகளை நிராகரிக்க சில சந்தோசங்களுக்குள் அடிமையாகி விடுதல் ஆறுதலளிக்கிறது. அடிமையாய் இருப்பதே சில வேளைகளில் விடுதலை என்னும் சிந்தனையை இவை மீண்டும் மீண்டும் நியாயப்படுத்துகின்றன. நிச்சயமற்ற நிறக்கலவையாக வாழ்க்கை முன்னால் விரியும்போது அதை நவீன ஓவியமாய்ப் பார்த்து அங்கீகாரம் வழங்குதல் அனைவருக்கும் சாத்தியமாவதில்லை. சில வேளைகளில் விடுதலை தேவை என்ற நினைப்பே நம்மை அடிமையாக்கி விடுகிறது.
ஆயுள் கைதி கூண்டுக் கிளியிடம் சென்று விடுதலைக்கு வாய்ப்பிருக்கிறதா என்று கேட்பது போலத் தான் இன்றைய விடுதலை விரும்பிகளின் அணுகுமுறை இருக்கிறது. தெளிவும், தெரிவும் வாழ்வின் மிக முக்கியமான சங்கதிகள் என்பதை உணர்தலில் இருக்கிறது நடை முறை வாழ்வின் வெற்றிகள்.
முதலில் விடுதலை என்ற ஒன்று எதனிடமிருந்து தேவை என்பதைப் புரிந்து கொள்ளல். சோர்வில் தூங்கும் கணவனின் குறட்டைச் சத்தத்திலிருந்து விடுதலை பெற விவாகரத்தே ஒரே வழி என்று நினைப்பதையும், காலம் காலமாக அடிமைத் தனத்தில் உழலும் அழுத்தப்பட்ட மக்கள் விடுதலை வேண்டும் என நினைப்பதையும் ஒரே தராசில் நிறுத்து விட முடியாது. எதிலிருந்து விடுதலை வேண்டும் ? மனதின் அழுக்குகள் அலைக்கழிக்கும் போது மனதைச் சலவை செய்ய வேண்டும் என்று நினைப்பதில் இருக்கும் நியாயமான உணர்வையும், சுண்டெலித் தொல்லைக்குத் தீர்வாக குடிசைக்குத் தீயிடுவதையும் விரிவான அலசலுக்குள் உட்படுத்தினால் புரியும்.
நம்மீது திணிக்கப்பட்ட போலித்தனமான மதிப்பீடுகள், அல்லது நாம் யார் என்று பிறர் நம்மை நிர்ணயம் செய்திருக்கும் முகமூடி அடுக்குகள் இவற்றிலிருந்து தேடும் விடுதலையே முதல் தேவை எனக் கொள்ளலாம். நம்மிடமிருந்து நமக்கு விடுதலை. நம்மை நாமே அறிந்து கொள்வதற்காக ! நாம் யார் என்பதை அறிந்து கொள்கையில் நாம் பல வேளைகளில் தேடும் விடுதலைகள் அடிமைத்தனங்களை நோக்கிய அடியே என்பது விளங்கும்.
நாம் நம்மை அறிந்து கொள்கையில் நம் வாழ்க்கையின் அர்த்தத்தை, அல்லது நம்முடைய இருப்பின் தேவையை விளங்கிக் கொள்கிறோம். அப்போது தான் அடுத்த மனிதனின் விடுதலைக்காக போராடுதலே நம் உண்மையான விடுதலை. நம் சுய நல எண்ணங்களிலிருந்து விடுபடும் விடுதலை எனவும் சொல்லிக் கொள்ளலாம். மனித நேய எண்ணங்களை மூடி வைத்திருக்கும் நம் கர்வத்தின், அல்லது இருப்பதாய் நாம் நினைத்துக் கொள்ளும் அந்தஸ்தின் திரைச்சீலையை கழற்றி எறிவதிலும் இருக்கிறது விடுதலை. விடுதலை என்பது பெறுதலில் மட்டுமல்ல விடுதலிலும் தான்.
விடுதலை என்னும் தலைப்பிலிருந்து இப்போதைக்கு விடுதலை பெறுகிறேன்.
Like this:
Like Loading...