நீ.. நான்… அவன்…

Brown Wooden Armchair on Brown Wooden Floor

 

நின்று தொலையாத
துன்ப அலையிலும்,
ஆலயம் பற்றிக் கிடப்பவனே
ஆத்திகன்.

நாளை செத்துப் போவேனென்று
சேதி வந்தபின்னும்
நாத்திகனாகவே
இருப்பவன் தான்
நாத்திகன்.

எந்த நிலை நாளையானாலும்
இன்றின் பகுதியில்
மனிதாபிமானக் கரங்களை
உலரவிடாதவனே
முழு மனிதன்.

வாய்ப்பில்லா இடத்தில்
வாய்மூடிக் கிடப்பதல்ல தூய்மை.

தப்பிக்கும் வாய்ப்புகள்
சுற்றிலும் கிடந்தாலும்,
தப்பு செய்யாததே
ஒப்பில்லா உயர்ந்தது.

நேர்மையின் நிலத்தில் வேர்விடு,
இல்லையேல்
இருக்கும் வேர்களுக்கு
நீர் விடு.

ஆர்வம் அபூர்வம்

Man in Black Hoodie Holding Fire

 

ஆர்வமெனும் ஆற்றில்
தான்
அறிவுத் தாமரை
விரிகிறது.

கேளுங்கள்,
மறுக்கப் பட்டாலும்
மறுதலிக்கப் பட்டாலும்
ஏதேனும்
உங்களுள் ஊன்றப் படுகிறது.

ஆர்வமற்றதும்,
தேடல்களில்லாததுமான
வாழ்க்கை
தனக்குள்ளே ஊனப்படுகிறது.

ஆர்வமில்லாத
குயில்களுக்கு சிறகுகள்
அகலமாவதில்லை,
ஆர்வமற்ற கூட்டுப் புழுக்கள்
வண்ணத்துப் பூச்சியாய்
வடிவ மாற்றம் அடைவதில்லை.

அறிய வேண்டுமெனும்
ஆவல் தானே,

கண்டுபிடிப்புகளின் கண்களை
இமை விலக்கி
இழுக்கின்றன.

வரலாறுகளின் மிச்சங்களை
இடிபாடுகளிலிருந்து
வரவைக்கின்றன.

தன்னை அறியும்
முயற்சிகள்
புனிதர்களையும்,

பிறரை அறியும்
முயற்சிகள்
நல்ல மனிதர்களையும்
தந்திருக்கின்றன.

ஆர்வம் கொள்ளுங்கள்,
ஒரு பக்கத்துக்கு மிகாமல்
எழுதும்
விடைத்தாள்களை விட,
சில
வினாத்தாள்கள் சிறந்தவைகளே.

இன்னும் கொஞ்சம்

 

Foot Stepson Grey Sands With Waters Nearing It

நட்பின் கவச குண்டலங்களை
நான்
கழற்றி எறியும்
நிதானித்திருக்க வேண்டும்
இன்னும் கொஞ்சம்.

0

பொறுமையின் முட்டையோட்டை
அவசரமாய்
உடைத்துப் பார்க்கும்
குறைப் பிரசவக் குஞ்சுகளாய்,

முளை தெரியும் முன்
தோல் உடைத்துப் பார்த்த
விவசாய விதையாய்,

சில நேரம்
என்
அவசரச் சொற்கள்
உள்ளுக்குள் உறுத்தும்.

அப்போதெல்லாம் மனசாட்சி
மேடையேறிக் கத்தும்…

பொறுத்திருக்கலாமே
இன்னும் கொஞ்சம்…

0

இன்னும் கொஞ்சம்
மகிழ்ச்சி வேண்டுமெனும்
கவலைதான்
எப்போதும் நம்மில் பலருக்கு.

0

ஆசையின் வாழைமூட்டில்
அசைபோடப்படும்
பொருளாதார இன்னும் கொஞ்சங்கள்,

தலை முறை தாண்டியும்
புதுப் புது முளைகளோடு
முளைத்துக் கொண்டே இருக்கும்.

0
மஞ்சங்களின் கொஞ்சல்களும்,
கொலுகளோடான
கெஞ்சல்களும்…

இன்னும் கொஞ்சம்
இன்னும் கொஞ்சம் என்று,
காதல் தோட்டத்தில்
விதைகளில்லாமலேயே
அமோக விளைச்சல் தரும்.

0

முயற்சிக்கான
இன்னும் கொஞ்சங்கள்
பகல்க் கனவைக் கூட
பத்திரமாய்
நனவாக்கித் தரும்.

முயற்சிக்காத
இன்னும் கொஞ்சம்
போர்வைத் தூக்கங்கள்,
தாழ்ப்பாளுக்குள்
கனவுகளை மட்டுமே தாழிட்டு வைக்கும்.

0

ஓர் மழை இரவின்
நிலா நிழலில்,
ஒரு நாள் வாழ்வின்
கடைசித் துளியில் கிடந்து
ஈசல் பூச்சியொன்று அழக் கண்டேன்.
இன்னும் கொஞ்சம்.

0

தூக்குக்காய்
தூங்காமல் காத்திருக்கும்
ஏதேனும் ஓர் கொலையாளி
எங்கேனும் அழுதிருக்கக் கூடும்,
இரவே
இன்னும் கொஞ்சம் அருகே இரேன்.

0

நாசிகளில் நங்கூரமாய்
நகர மறுக்கும்
சுவாசத்தோடு,
மரணக் கட்டில் முனையில்
மகனைக் காத்திருக்கும் முதுமை
உயிரை இழுத்துப் பிடித்துப்
பிரார்த்திக்கக் கூடும்,
இன்னும் கொஞ்சம்…

0

திருப்திப் படாத என்
கவி மனசு
இப்போதும் சொல்கிறது.

இன்னும் கொஞ்சம்
திருத்தங்கள் செய்தால்
இந்தக் கவிதை
இன்னும் கொஞ்சம் அழகாகுமே
என்று.

0

மானிடச் சட்டங்கள்

Man Walking Near Aligned Lamp Post

 

உன்னைச் சுற்றிய
சட்டங்கள்
உன்னை ஒருவேளை
இமைக்க விடாமல் இறுக்கலாம்.
உனக்காய் நீயே
சட்டங்களைத் தயாரி.

உனக்கான ஆடைகளை
நீயே
தேர்ந்தெடுக்கும் போது,
உனக்கான செருப்புகளை
நீயே
சரிபார்த்து எடுக்கும்போது
உனக்காய் சில
சட்டங்களையும் செய்யலாமே ?

வெளியே பார்.
குருவிகள்,
பல நூறு தலைமுறையாய்
கூடுகளின் வடிவத்தைக்
கூட
மாற்றிக் கட்டவில்லை.

சிங்கங்களும்
சைவமாய்
மாறிக் கொள்ளவில்லை.

நீ மனிதன்,
உன் வாசல்
குகைகளிலிருந்து
பிடுங்கப்பட்டு
நகரத்தில் நடப்பட்டிருக்கிறது.

இது தான் நேரம்,
உனக்கு நீயே சில
சட்டங்களைச் செய்.
அவை
உரிமை மீறாது என
உத்தரவாதம் செய்.

மீறல்களை மட்டுமே
அரசியல் சட்டங்கள் பேசும்.
நீ
மனதின் நீறல்களைப் பேசு.

விலகலைப் பற்றிப் பேசிப் பேசி
விலங்குகளாய்
ஆனது போதும்.
அகலாதிரு என்னும் சட்டமே
அவசியம் இப்போது.

செய்யாதே எனும்
சட்டங்களை விட,
செய்
எனும் சட்டங்களே
மானிட வளர்ச்சிக்குத் தேவை
இப்போது.

இமைதிறந்தால் மட்டுமே
தெரியும்,
உன்னைச் சுற்றிலும்
நீளும் பட்டினிக் கரங்கள்.

விழுந்தால் எழு

boulder, cascade, creek

 

விழுந்த இடத்தில்
காலொடிந்து கிடப்பதில்லை
நதி !
அருவியின் அடிவாரம் தானே
அதன்
ஆக்ரோஷத்தின் ஆரம்பம் !!!

நீயாக இரு

adult, anger, art

உன்
முகவரியைத் தொலைத்து விடாதே.

உன் வேர்கள்
பூமிக்குள்
சொந்தப் பாதையில் நகரட்டும்
அடுத்த மரத்தின்
உயிர் உறிஞ்சவேண்டாம் .

உன் கனவுகளுக்கு
பிறரின் பாதையில்
நீ
வண்ணம் தேட முடியாது !

உன்
சுயமரியாதையை
சுயநினைவிழக்க
விட வேண்டாம்

நீ
நடக்கின்ற பாதைகள்
உன் பாதங்களுக்காக
பிறப்பிக்கப் பட்டதாகட்டும்
செருப்புக்காக காலைவெட்டி
காயப்பட வேண்டாம்

உன் சிந்தனைகள்
உனக்குள்
சிறகு முளைப்பிக்கட்டும்
புறாவின் இறகை
வண்ணத்துப் பூச்சிக்கு
ஒட்டவைப்பது சாத்தியமில்லை !!!

ஈரமான இறகு உலர
வெயில் போதும்
தீ மூட்டி
தீய்க்க வேண்டாம்.

கடன் வாங்கிய
கனவுகள்
நிஜத்தில்
நினைவிழந்து போகலாம்.

நீ
நீயாக இரு.

வேறுபட்ட சிந்தனைகளும்
மாறுபட்ட பாதைகளும் தான்
மனுக்குலத்தின் மகத்துவங்கள் .

நீரோடை
நடக்கின்ற பாதையில்
நடக்கட்டும்.

கிணற்றுக்குள் தான்
இருக்க வேண்டுமென்று
கடலுக்குக்
கட்டளையிட முடியாது .

உன் வேர்களும்
உன் கிளைகளும்
ஒரே விலாசத்தில் இருப்பது தான்
உனக்குப் பெருமை !!
*

யார் என் காதலி ?

Photo of Man Wearing Gray Sweater and Track Pants Leaning on Wall
காதலர் தினம்
எனக்கு இன்னொரு
காலண்டர் தினம் தான்.

பூப்பூக்காத செடிகளுக்கு
ஏது
பூக்காரன் கவலை?

பட்டாம்பூச்சி இல்லா தேசத்தில்
வண்ணங்களுக்குள் ஏது
வழக்காடுமன்றம்.

என் கானகத்தில் மட்டும்
கனிகள்
கிளி தேடிக் காத்திருக்கின்றன,
நதிகள்
துளிதேடித் தவமிருக்கின்றன.

அழகாய் வரும் அருவிகள் எல்லாம்
பாறையின் வெப்பத்தில்
ஆவியாகி விடுகின்றன.

எப்போதேனும் மனசுக்குள்
சாரலடிக்கும்
பார்வைக் கொம்புகள்
பதியனிடுமுன் பட்டுவிடுகின்றன,
முளை விடுமுன்
விதைகள் கெட்டுவிடுகின்றன.

காதல்,
எதையோ எடுக்கும்
புடவைக்கடை புரட்டலல்ல.
அது
தேவைகளின் திரட்டலுமல்ல.

காத்திருக்கிறேன்,
இந்த கால்நூற்றாண்டு வயதின்
காலடியில்,
வால் மிதிபட்ட நாகங்கள்
கால் கடிக்கும் கலியுகத்தில்,
ஓர்
கற்பனை நிஜத்துக்காய்
காத்திருக்கிறேன்.

ஒற்றைப் புள்ளியுடன்
காகிதம் ஒன்று என்னிடமிருக்கிறது
என் கவிதை வந்து
அமரும்போது மட்டுமே
முற்றுப் பெறும் மூச்சுடன்.

ஆசனம் ஒன்று இருக்கிறது,
காதல் பாசனம் தேடி.
காதலிக்கும் கிளிகள்
கடந்து வரலாம்.

ஒரு விலைமகள் விழித்திருக்கிறாள்

 

Image result for prostitute india paintingஎன்
படுக்கை விழித்திருக்கிறது…

என் கதவு,
தாழ்ப்பாள் விலக்கிக் காத்திருக்கிறது.
எந்தக் கோவலனால்
அழியப்போகுதோ
இன்றைய என் அலங்காரம்.

உணர்வுகள் எல்லாம்
ரணமாகி,
பின் மரணமாகிப் போயின.
இப்போது இருப்பதெல்லாம்
இரவுக்குக் காத்திருக்கும்
இந்த
தற்கொலைத் தாமரை மட்டும் தான்.

பகலில்
புரவிச் சவாரி செய்யும்
பல பாண்டிய மன்னர்கள்
இரவில் மணிமுடி கழற்றிவிட்டு
என்
கொல்லைப்படி தேடி வருவதுண்டு.

பகலில்
தோளில் கம்பீரமாகும் துண்டு
இரவில் சிலருக்கு இடம்மாறி
தலையிலும் முகத்திலும்
தற்காப்புக்கவசம் ஆவதுண்டு.

மனைவியின் சண்டையும்,
பிரிவின் வலியும்,
சுமந்து சுமந்தே
இந்த உடம்பு
கட்டில் கால்களுக்குள் கசங்கிப் போனது.

இயலாமையில் இதயம்
எரியும் போதெல்லாம்
வயிற்றுத்தீ வந்து
தண்­ணீர் வார்த்துப் போகும்.

கேலிகளின் நீள் நாக்கு குத்தி
காதுகள் கிழியும் போதெல்லாம்
கண்ணீ­ர்க்கால்வாய்கள் ஓடி வந்து
ஒட்டுப்போடும்.

அம்மா
எனும் மழலைக்குரலுடன்
என் முந்தானை முனை இழுக்கும்
மூன்று வயது மூத்தமகன்.

கணவன் வரவுக்காய்
இருண்ட வாசலில் வெளிச்சமாய்
விளக்கேற்றிக் காத்திருக்கும்
என் முகம்.

கனவுகள் அவ்வப்போது வந்து
கதவு திறக்கும் போது
அவிழ்க்க மட்டுமே பழக்கப்பட்ட
ஏதோ ஒரு பாம்புக் குரல் வந்து
முடிச்சிட்டு இழுக்கும்.

மாங்கல்யக் கனவுகளின்
முற்றுப்புள்ளியாய்
என் முந்தானை முடிச்சுகள்
மீண்டும்
கழன்று வீழும்.
*

வெள்ளையடிக்கப்பட்ட

art, beautiful, bloom

வேஷதாரிகளே
உங்கள் அங்கிகளை எப்போதுதான்
அகற்றப் போகிறீர்களோ ?

பொதுவிடங்களில்
உங்கள் உதடுகளுக்கு
மகாத்மாச் சாயம் பூசுகிறீர்கள்
உள்ளுக்குள்
கசாப்புக் கடை நடத்துகிறீர்கள்.

புண்ணியங்கள்
விற்பனை செய்து
புண்ணிய பூமி வாங்குகிறீர்கள்
அங்கே
மனிதாபிமானத்தைப் புதைக்கிறீர்கள்.

தெருச்சந்திப்புகளில்
தகரத்தட்டுகளுக்குச்
சில சில்லறைகள்,
சில
சம்பிரதாயச் சமாதானங்கள்.
உள்ளுக்குள் உங்களுக்கே
பிணவாடை அடிக்கவில்லையா ?

விளம்பரம் செய்து செய்தே
நீங்கள்
புனிதனாகப் பார்க்கிறீர்கள்.

எப்போதேனும்
இடக்கைக்குத் தெரியாமல்
தானம் தந்திருக்கிறீர்களா ?

தோப்புக்கு
விளம்பரம் செய்யாமல்
குருவிகளுக்கு
கூடு கட்டிக் கொடுத்திருக்கிறீர்களா ?

போதுமே.

எட்டாத உயரத்தில்
சிம்மாசனம் செய்தாகிவிட்டது.
புதைந்துபோன
மனிதாபிமானத்தைக்
கொஞ்சம்
தோண்டி எடுக்கத் துவங்குங்களேன்.

வெள்ளைக் காகிதம்

 

Buildings Surrounded by Treesஒவ்வொரு காலையும்
உன்னிடம்
ஓர்
வெள்ளைத் தாளை
கிள்ளித் தருகிறது.

சில நாட்கள் அதை
நீ
கண்­ணீர் விட்டு
ஈரமாக்குகிறாய்.

சில தினம்
குருதி தொட்டு
கோரமாக்குகிறாய்.

என்ன செய்வதென்னும்
யோசனையில்
வெள்ளையாகவே
பலநாள்
ஒதுக்கி வைக்கிறாய்.

அன்பு பூசி
அழகாக்குவதும்,
வம்பு பேசி
அழுக்காக்குவதும் உண்டு.

கோபத்தின்
குப்பைக் கூடையில்
அதை நீ
கசக்கியும் எறிவதுண்டு.

அந்தக் காகிதம்
சிறுகதைக்குத் தேறாதென்று
நீ
அதில்
கட்டுரை கூட எழுதாமல்
கிழித்தெறியும் தருணங்களும்,

ஹைக்கூ எழுத
கோரப்பாய் எதற்கென்று
மூலையில் கிறுக்கி விட்டு
சுருண்டு படுத்து
சேதமாக்கும் தருணங்களும்,

எழுதத் தெரியாதவன்
கைகளுக்கு
காகிதம் எதற்கென்னும்
கேள்வித் தருணங்களும்
தவறாமல் விளைவதுண்டு.

வெள்ளையாய் இருப்பது
மட்டுமே
அதன் கைகளில்.

ஓவியம் வரைந்து
அதை பத்திரப் படுத்துவதும்,
கொல்லையில் அதை
கொன்று புதைப்பதும்
உன் கைகளில் தான் !

எது எப்படியானாலும்,
நாளையும்
ஓர் வெள்ளைக் காகிதம்
உனக்காகக்
காத்திருக்கும்.