கவிதை : மரணம் நடந்த வீதி

சத்தமிட்டு
கால்களைக் கட்டிக் கொண்டு
கதறி அழுது
புலம்பியது சுற்றம்.

கதறி அழாதவர்கள்
அன்பு குறைந்தவர்களாய்
கருதப்பட்டார்கள்.

திரட்டிய
கண்ணீர் துளிகளை
முந்தானைகளில் சேமித்து
கூட்டம்
கடந்த பின்,

ஜாமங்களின்
குறட்டை ஒலிகளையும்
மீறி
இருட்டின் விழிகளிலிருந்து
விழுந்து கொண்டிருந்தன
மெளனமான கண்ணீர் துளிகள்.

மின்மினிப் பூச்சிகளின்
மெல்லிய வெளிச்சத்தில்
பளீரிட்டது
இறந்து போனவரின்
கண்ணீர் விழிகள்.

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

கவிதை : ம.பி

மரணம் என்ன
அழுத்தமாய் வரைந்த
ஓர்
கருப்புக் கோடா ?

ஆரம்பத்துக்குள் இழுக்கும்
கண்ணாடிக்
கதவா ?

ஆழ்நிலை உறக்கத்தின்
பேழையா ?

மத நாடகங்களின்
ஒப்பனை கலைந்த
ஒப்பந்த மேடையா ?

அதற்குப் பின் கேட்கும்
ஒப்பாரிக்குப் பொருள்
என்ன ?

ஆண்டவனை
ஒத்துக் கொள்ளாததற்காகவா ?
இல்லை
ஒத்துக் கொண்டதற்காகவா ?

அங்கே நடக்கும்
அறுவை சிகிச்சை
அறிவியலின் மீதா ?
இல்லை ஆன்மீகத்தின் மீதா ?

அது
விழித்துக் கொண்டதாய்க்
கனவு கண்டு,
கனவு காண்பதாய்
விழித்துக் கிடக்கும்
மயக்க நிலையின் இயக்கமா ?

சொல்லத் தவறும்
விடைகளுக்காக,
யாரும்
கேட்கத் தவறாத கேள்விகள்.

தரித்துக் கொள்ள
ஆசை தான் உண்மையின் ஆடையை.
ஆனாலும்
மரித்துப் போக சம்மதமில்லை
ஆண்டவன் அழைக்கும் வரை.