கட்டுரை : இடி… மின்னல்… இன்னல்

( இந்த வார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )

மழைக்காலம் வந்துவிட்டாலே இடி மின்னல் குறித்த அச்சமும் எழுந்து விடுகிறது. நாளேடுகளின் பக்கங்களில் மின்னல் தாக்கி பரிதாபமாய் உயிரை விடும் அப்பாவிகளின் செய்திகள் மனதை உலுக்குகின்றன.

எப்போது எங்கே எப்படித் தாக்கும் என அறிய முடியாத ஒரு ரகசியச் சாத்தான் போல மின்னலும் இடியும் தாக்கிக் கொண்டே இருக்கின்றன. எனவே தான் பழைய புராணங்கள் இடியையும், மின்னலையும் கடவுளின் கோபத்தின் வெளிப்பாடுகள் என புரிந்து கொண்டன.

உதாரணமாக கிரேக்க புராணங்கள் இடியை ஸீயஸ் எனும் கடவுளிடமிருந்து வருவதாக நம்பினர். வைக்கிங்ஸ் பிரிவினர் தோர் எனும் கடவுள் மேகங்களின் மீது தேரில் பவனி வரும்போது சும்மா இருக்க முடியாமல் கையிலிருக்கும் சுத்தியலால் மேகத்தின் தலையில் அடிப்பதால் தான் மின்னலும் இடியும் உண்டாகின்றன என்றனர்.

செவ்விந்தியர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் இது ஒரு மாயப் பறவையின் மின்னும் சிறகடிப்பு என்று கற்பனை விரித்தனர். அந்த பறவையின் இறக்கைகள் அடிக்கும் ஒலியே இடிச் சத்தம் எனவும் அவர்கள் சுவாரஸ்யமாகக் கற்பனை செய்து கொண்டனர்.

வானத்திலிருந்து வருகிறது என்பதைக் கொண்டு பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சூழல் மத பின்னணியில் இருந்தவர்கள் அவர்களின் கற்பனைக்கு ஏற்ப கட்டிய கதைகளில் ஏதும் உண்மை இல்லை என்பதையே இன்றைய விஞ்ஞானம் விளக்கியுள்ளது.

எனில் இடி மின்னல் தான் என்ன ? மிகவும் எளிதாகச் சொல்லவேண்டுமெனில் மின்னல் என்பது மின்சாரம். அடர் ஈர மேகங்களில் மின்சாரம் உலவிக் கொண்டே இருக்கும். அந்த மின்சாரம் உள்ளுக்குள்ளே மேலும் கீழுமாக அசையும். பொதுவாக மேகத்தின் மேல்பகுதியில் நேர் மின்சாரமும் (பாசிடிவ்), கீழ் பகுதியில் எதிர் மின்சாரமும் (நெகட்டிவ்) இருக்கும்.

மழைக்காலத்தில் நீங்கள் வானத்தில் பார்த்தால் மேகத்துக்குள்ளேயே வெளிச்சம் மின்னி மின்னி மறைவதைக் காண முடியும். அது இந்த மின்சாரத்தின் உலவல் தான். அவ்வப்போது நேர் எதிர் மேகங்கள் அருகருகே வரும்போது மேகங்களுக்கிடையேயும் இந்த மின்னல் உருவாகிறது.

இவ்ளோ சின்ன மேகத்தில் எப்படி இந்த வேலைகளெல்லாம் நடக்கும் என சிந்திக்கிறீர்களா ? மேகத்தின் அளவு நாம் நினைப்பது போல சிறியதல்ல. சாதாரணமாக சுமார் இரண்டு சதுர மைல் அளவு முதல், சுமார் இருநூறு சதுர மைல் அளவுவரையிலான பெரிய மேகக் கூட்டங்களே வானில் உலவுகின்றன.

மேகத்தில் மின்சாரம் இருக்கிறது சரி. எது எப்படி பூமியைத் தாக்குகிறது என்பது அடுத்த கேள்வி. உண்மையில் இது ஒருவகை கொடுக்கல் வாங்கல். மேகத்தின் கீழ்பகுதியில் இருக்கும் எதிர்மின்சாரத்தை பூமியிலிருக்கும் ஏதேனும் நேர் மின்சாரம் ஈர்த்தால் மட்டுமே மின்னல், இடி எல்லாம் உருவாகும். இதன் தாக்கம் மேகத்தின் அளவைப் பொறுத்து அமையும். அதாவது மிகப்பெரிய மேகத்திலிருந்து உருவாகும் மின்னல் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒரு வகையில் உண்மையில் மின்னல் வானத்திலிருந்து கீழே வரவில்லை, பூமியிலிருந்து வானத்துக்குச் செல்கிறது என்று சொல்லலாம். இந்த மின்சாரப் பாய்ச்சல் வானுக்கும் பூமிக்கும் இடையே நிகழும் போது அந்தப் பகுதியில் அதிகமான வெப்பம் உருவாகும். அது காற்றில் உருவாக்கும் துளையும், அதிர்வும், காற்றின் விரிவாக்கமும் எல்லாம் சேர்ந்தே இந்த இடிச் சத்தம் உருவாகிறது.

இந்த வெப்பம் சாதாரண வெப்பமல்ல. இது சூரியனின் பரப்பில் காணப்படும் வெப்பத்தை விட ஐந்து மடங்கு அதிகம். அதாவது 33,315 டிகிரி செல்சியஸ் வரை இந்த வெப்பம் இருக்கும். நமது சென்னை வீதிகள் சந்தித்த அதிகபட்ச வெப்பமே நாற்பதோ, நாற்பத்து ஐந்தோ செண்டி கிரேட் தான். எனில் அதைப் போல ஆயிரம் மடங்கு அதிக வெப்பத்தை யோசித்துப் கொள்ளுங்கள்.

மின்னலும், இடியும் ஒரே நேரத்தில் தான் உருவாகின்றன. ஒளியானது ஒலியை விட வேகமாய் பயணிப்பதால் தான் வெளிச்சம் முதலில் தெரிகிறது, ஒலி பின்னால் வருகிறது. ஒளியின் வேகமான வினாடிக்கு 186,000 மைல்கள் எனும் வேகத்துடன் ஒப்பிடுகையில் ஒலியின் வேகம் நத்தையின் வேகம் தான்.

பூமியிலிருந்து வானுக்கு ஒரு நேர் மின் தொடர்பு உருவாகவில்லையெனில் மின்னலோ இடியோ உருவாகாது. ஆனால் அப்படி நிகழாமல் தடுப்பது சாத்தியமில்லை. ஏனெனில் ஒரு பெரிய மரமோ, மின் கம்பமோ, தெருவுக்கு தெரு முளைத்து நிற்கும் கொடிகம்பமோ ஏதேனும் ஒன்று போதும் மின்னலை வரவேற்க.

அதனால் தான் பெரிய கட்டிடங்கள், ஆலைகள் போன்றவற்றின் உச்சியில் பெரிய இடிதாங்கியை வைப்பார்கள். இது மேகத்திலிருந்து வரும் மின்சாரத்தை அருகிலுள்ள பகுதிகளில் விழாமல் பாதுகாத்து தானே வாங்கிக் கொள்ளும். அப்படியே பூமிக்கு அடியில் அதைக் கடத்தியும் விடும். இப்படி மின்னலை இழுத்து அதிலிருந்து மின்சாரத்தைத் தயாராக்க முடியுமா எனும் முனைப்பும் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

மின்னலுக்கு நாடு, மொழி, இனம், வல்லரசு, நல்லரசு என்ற பேதமெல்லாம் கிடையாது. எல்லா மக்களையும் ஒரேபோல பாதிக்கும். அமெரிக்காவில் வெளியாகும் ஒரு புள்ளிவிவரம் சுமார் நூறு பேராவது ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவில் மின்னல் தாக்கி மரணமடைகின்றனர், பல நூறு பேர் நிரந்தர ஊனமடைகின்றனர் என துயரச் செய்தி வெளியிட்டிருக்கிறது. இது அமெரிக்காவில் சூறாவளி போன்ற மிரட்டல்களினால் நிகழும் உயிர்சேதத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு எச்சரிக்கை செய்யும் போது ஏன் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும் என்பதற்கு இது தான் காரணம். உலகில் சுமார் ஒரு இலட்சம் இடியுடன் கூடிய மழை பெய்தாலும் எல்லாமே ஆபத்தானவை அல்ல என்பது உலக வானிலை குழுவின் கருத்து.

மின்னல் தாக்காமல் காத்துக் கொள்ள என்ன செய்யவேண்டும் ?

  1. வானிலையைக் கவனியுங்கள். இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருந்தால் வெளியில் செல்லும் பயணத்தை ஒத்திவையுங்கள், அல்லது வகைப்படுத்துங்கள். வீடுகளில் பாதுகாப்பாய் இருங்கள்.
  2. பெரும்பாலான மின்னல் பாதிப்புகள் மழைவிட்ட பின்போ, மழை துவங்குவதற்கு முன்போ தான் நிகழ்கின்றன எனவே, மழை விட்டபின் ஒரு அரைமணி நேரமாவது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அதுபோலவே மழை வரும் வாய்ப்பு தெரியும் போதே கவனமாய் இருக்க வேண்டும்.
  3.  மின்னலை நாம் பார்ப்பதற்கும், தொடரும் இடிச் சத்தத்தைக் கேட்பதற்கும்  இடையேயான நேரமே நமக்கும் மின்னல் தாக்கிய இடத்தும் இடையேயான தூரத்தைச் சொல்கிறது. இந்த இடைவெளி ஐந்து வினாடிகளை விடக் குறைவெனில் சுமார் ஒரு மைல் இடைவெளியில் எங்கோ மின்னல் தாக்கியிருக்க வாய்ப்பு உண்டு என கணித்துக் கொள்ளுங்கள்.
  4. இடி மின்னல் வேளைகளில், உயரமான மரங்கள், கொடிக் கம்பங்கள், கைபேசிக் கோபுரங்கள், பேருந்து நிறுத்தங்கள், உலோகப் பொருட்கள் இருக்கும் இடங்கள் இவற்றின் அருகே நிற்காதீர்கள்.
  5. அதே போலவே வெட்டவெளியிலோ, நீர் நிலைகளிலோ, கடற்கரைகளிலோ, விளையாட்டு மைதானங்களிலோ நிற்காதீர்கள். அந்த இடங்களில் உயரமாய் இருப்பது நீங்கள் தான் என்பதால் நேர் மின்சாரத்தை மேகம் உங்கள் உடலிலிருந்து ஈர்க்கக் கூடும்.
  6. ஒருவேளை வெட்ட வெளியில் இருக்க நேர்ந்தால் தரையில் படுக்கவே படுக்காதீர்கள். குனிந்து வயல் வரப்பில் குந்தவைத்து அமர்வது போல அமருங்கள். தலையைக் குனித்து கால் முட்டியில் வையுங்கள். தரைக்கும் உடலுக்குமான தொடர்பு எவ்வளவு குறைவாய் இருக்கிறதோ அவ்வளவு நல்லது.
  7. சட்டென மயிர்க்கூச்செரிந்தாலோ, அதிர்வு உணரப்பட்டாலோ மின்னல் வெகு அருகில் தாக்கும் வாய்ப்பு உண்டு என உணர்ந்துகொள்ளுங்கள். குழுவாக இருக்காதீர்கள் பிரிந்து தனித்தனியே செல்லுங்கள்.
  8. வீட்டுக்குள்ளே இருந்தால், அந்த நேரத்தில் தொலைபேசியைப் பயன்படுத்தாதீர்கள். தொலைபேசியில் அருகே இருப்பதைத் தவிருங்கள். தொலைக்காட்சி, கணினி உட்பட அனைத்து எலக்ட்ரானிக் கருவிகளையும் சற்று ஓய்வில் இருக்க விடுங்கள். மின் இணைப்பிலிருந்து அவற்றை துண்டித்து விடுங்கள். கேபிள் டிவியின் கேபிளையும் கழற்றிவிடுங்கள்.
  9. காரில் சென்று கொண்டிருந்தால் காரின் கண்ணாடிகளை முழுவதுமாக மூடிவிட்டு ஓரமாக நிறுத்திவிட்டு அமைதியாய் இருங்கள். மரங்கள், கம்பங்கள் போன்றவற்றின் அருகே வண்டியை நிறுத்தாமல் கவனமாய் இருங்கள்.
  10. வீடுகளில் அந்த நேரங்களில் சமையல் செய்வது, குளிப்பது போன்ற வேலைகளைச் செய்யாதீர்கள். குறிப்பாக திறந்த சன்னல் அருகே நின்று வானத்தை வெறிக்காதீர்கள்.

இயற்கையின் மொழிகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற செயல்களைச் செய்வதே ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியமாகும்.