மேக்கப் விபரீதம் : அகத்தின் அழகை, முகத்தில் அணிவோம்

Image result for makeup

ஆறே வாரத்தில் சிவப்பழகு ! சிவப்பாய் இருப்பதே அழகு !! என்பதெல்லாம் பெண்களுக்கு எதிராய் வியாபாரிகள் விரிக்கின்ற வசீகர வலைகள். இந்த வஞ்சக வலைகளில் அறிந்தும், அறியாமலும் விழுந்து தத்தளிப்பவர்கள் ஏராளமானோர். ஒரு விதத்தில் சிலந்தி வலையில் சிக்கிக் கொள்ளும் சின்ன ஈயாய் அவர்களுடைய வாழ்க்கை பிடிக்கப்பட்டு விடுகிறது.

அழகின் இலக்கணம் பெண்கள் தான். அவர்களுடைய அழகு அவர்களுடைய செயல்களில், அவர்களுடைய அன்பின், அவர்களுடைய நடவடிக்கைகளில் வெளிப்படுகிறது. அதனால் தான் உலக அளவில் பெண்மையைப் போற்றுவது போல யாரும் ஆண்மையைப் போற்றுவதில்லை !

இயல்பிலேயே அழகாய் இருப்பதால் அவர்களுக்கு அழகுணர்ச்சியும் ரொம்ப அதிகம். எதையும் அழகாய்ச் செய்ய ஆசைப்படுவார்கள். ஒரு மொபைல் கவர் வாங்கினால் கூட ஓரத்தில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டி ஸ்டைலாக்க முயல்வார்கள். இது பெண்கள் சிறுமியராய் இருக்கும்போதே தொடங்கிவிடுகிறது.

ஒரு இளம்பெண்ணின் பையை திறந்து பார்த்தால் அதில் ஒரு மினி அழகுசாதன நிலையமே இருக்கும். ஐபுரோ, ஐ ஷேடோ, ஐ லேஷல், ஐ லைனிங் இப்படி கண்ணுக்கு மட்டுமே ஏகப்பட்ட பொருட்களை வைத்திருப்பார்கள். பெரும்பாலும் விளம்பர உலகின் மாயாஜால பேச்சுகளிலோ, உடன் பழகும் மற்ற பெண்களின் தாக்கத்திலோ விளைந்தவையாய் இருக்கும்.

உளவியல் சொல்லும் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். “அதிக மேக்கப் போடுவது, தன்னம்பிக்கை இன்மையின் வெளிப்பாடு” என்கிறது அது ! தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளியே வர பெண்கள் கையிலெடுக்கும் ஆயுதங்களில் ஒன்றே மேக்கப் என்கின்றது உளவியல். சரி, உளவியல் எதையோ சொல்கிறது என விட்டு விடலாம், ஆனால் உடலியல் என்ன சொல்கிறது தெரியுமா ? அழகுப் பொருட்கள் ஆபத்தானவை !! மிக மிக ஆபத்தானவை !!

இந்த மேக்கப் பொருட்களில் இருக்கும் வேதியல் பொருட்களையும் அமிலப் பொருட்களையும் பட்டியலிட்டுப் பார்த்தால் ஏதோ ஒரு கெமிஸ்ட்ரி லேபில் நுழைந்த‌ ஒரு உணர்வு வருகிறது. அந்த அளவுக்கு எதிலும் அமிலங்கள், அமிலங்கள். இந்த அமிலங்கள் அலர்ஜி முதல் கேன்சர் வரை உருவாக்கும் என்பது தான் பலருக்கும் தெரியாத அதிர்ச்சிச் செய்தி. எல்லாவற்றுக்கும் மேலே, மேக்கப் பொருட்களில் இருக்கும் சில கெமிக்கல்ஸ் பெண்களோட பெண்மைத் தன்மைக்கே கேடு விளைவிக்கும் என்கின்றன ஆய்வுகள்.

இத்தனை ஆபத்தான பொருட்கள் எப்படி சந்தைக்கு வருகின்றன ? எப்படி மக்களை ஏமாற்றுகின்றன ? அரசியல் ரீதியாகச் சொல்லவேண்டுமெனில் ஊழல் எனலாம். சட்ட ரீதியாகச் சொல்ல வேண்டுமெனில் மேக்கப் பொருட்களுக்கு கடுமையான தரக் கட்டுப்பாடு விதிகள், அமைப்புகள் ஏதும் இல்லை என சொல்லலாம்.

உணவுப் பொருளுக்கு இருப்பது போல சரியான தர நிர்ணய அமைப்பு இருந்தால் நிறைய சிக்கல்கள் தீர்ந்து போய் விடும். ஒரு சின்ன உதாரணம் சொல்ல வேண்டுமெனில்,” ஐரோப்பிய யூனியன்ஸ் காஸ்மெடிக் டைரக்டிவ்” அமைப்பு ஆரம்பித்த பின், யூ.கே யில் தரமான மேக்கப் பொருட்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன என்பதைச் சொல்லலாம்! விஷத் தன்மை எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்த்த பிறகே அங்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அமெரிக்காவில் லிப்ஸ்டிக்கை சோதனை செய்து பார்த்தார்கள். சொன்னா; நம்ப மாட்டீர்கள் 61 சதவீதம் லிப்ஸ்டிக் விஷத்தன்மையோடு இருந்தது. அதிலும் 30 சதவீதம் உதட்டுச் சாயங்களில் மிக அதிக அளவு விஷத்தன்மை இருந்தது. அவையெல்லாம் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டன.

தினமும் லிப்ஸ்டிக் போடும் பழக்கமுடைய ஒரு பெண் தன்னோட வாழ்நாளில் தன்னை அறியாமலேயே சுமார் நாலரை கிலோ அளவுக்கு லிப்ஸ்டிக்கை சாப்பிடுகிறாராம். இது மனச் சிதைவு, கருச் சிதைவு, சிறுநீரகக் கோளாறு, பெண்மைத் தன்மை இழப்பு இப்படி ஏகப்பட்ட சிக்கல்களை உருவாக்கலாம் என்று எச்சரிக்கிறார் அமெரிக்க ஆராய்ச்சியாளர் பீட்டர் டிங்கில்.

மேலை நாடுகளில் இப்படி. நம்ம ஊரில் ? திருவிழா பொட்டிக் கடை முதல், ரங்கநாதன் தட்டு கடை வரை எங்கும் மலிவு விலை பொருட்கள். பவுடர், பாடி ஸ்ப்ரே, லிப்ஸ்டிக், ஐ புரோ, ஹெயர் ஸ்ப்ரே, டியோடரண்ட், ஷாம்பூ, ஷவர் ஜெல், ஹேண்ட் வாஷ் என எல்லாமே ரொம்ப மலிவான விலைல கிடைக்கும். அந்த மலிவு விலைக்குக் காரணம் அதில் இருக்கும் பொருட்கள் தரமற்ற ஆபத்தான பொருட்கள் என்பது தான். ! இங்கேயெல்லாம் ரொம்ப கட்டுப்பாடான தர நிர்ணயத்தை எதிர்பாக்க முடியாது. சோ, நாம தான் விழிப்பா இருக்கணும்.

மேலை நாடுகளிலெல்லாம் நிராகரிக்கப்படும் விஷத்தன்மையுடைய அழகுசாதனப் பொருட்கள் குறிவைப்பது வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா போன்ற பெரிய வர்த்தகத் தளங்களைத் தான். சட்டத்தை வளைப்பதோ, புழக்கடை வழியாக வியாபார ஒப்பந்தங்கள் நடப்பதோ இத்தகைய வளரும் அல்லது பிந்தந்திங்கிய நாடுகளில் மிக எளிது. உதாரணமாக, ஸ்வீடன் நாட்டில் தடைசெய்யப்பட்ட பார்மால்டிஹைட் நம்ம ஊர் ஷாம்பூ, ஹேண்ட் வாஷ் எல்லாவற்றிலும் சர்வ சுதந்திரமாய் உலவுவதைச் சொல்லலாம். இது தலைவலிக்கும், அலர்ஜிக்கும் கேரண்டி தரக் கூடிய பொருள்.

பாரபீன்ஸ் மற்றும் பாத்தலேட்ஸ் என்பவை விஷத்தன்மையுடைய இரண்டு பொருட்கள். இவை நமது வாசனைப் பொருட்கள், டியூட்ரன்ட் போன்றவற்றில் அதிகம் உண்டு. இதைத் தொடர்ந்து சுவாசிப்பது உயிருக்கே ஆபத்தானது. இந்தப் பொருட்களை பயன்படுத்தும் மக்களுடைய உடலில் இந்த விஷத் தன்மை இருக்கும். 20 க்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களின் உடலில் பாரபீன்ஸ் நிறைய இருக்குமாம். இவை ஹார்மோன்களையே சேதப்படுத்திவிடும். அப்படியே மார்பகப் புற்று நோய்க்கும் இதற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு என்பது திகில் செய்தி.

இன்றைக்கு சந்தையில் கிடைக்கும் அனைத்து பிரபல டியோடரண்ட்களிலும் புரோப்பலீன் கிளைகோள் எனும் கெமிகல் உண்டு. இது தோலை நாசமாக்கி, இரத்ததில விஷத் தன்மையைக் கலக்கும். கூடவே மூளை, லிவர், சிறுநீரகம் போன்றவற்றுக்கெல்லாம் பாதிப்புகளை உருவாக்கும்.இது மவுத்வாஷ், மற்றும் பற்பசைகளில் கூட உண்டு என்பது பயமுறுத்தும் உண்மை.

சோடியம் லாரில் சல்பேட், சோடியம் லாரத் சல்பேட் இப்படி இரண்டு கெமிகல்ஸ் நுரை தரும் பல மேக்கப் பொருட்கள்ல உண்டு. உதாரணமா ஷாம்பூ, சோப்பு, ஷவர் ஜெல். இது கண்பார்வைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ! இதே மாதிரி எத்தனோலமின் எனும் வேதியல் பொருளும் இந்த மாதிரி பொருட்களில் உண்டு. இது கிட்னி, லிவர் இரண்டுக்கும் எதிரி. ஐசோபுரோபைல் ஆல்கஹால் ங்கர ஒரு கெமிகல் மன அழுத்தத்தைக் கூட கொண்டு வரும்.

இப்போது ஆயுர்வேதிக், இயற்கை மூலிகைத் தயாரிப்பு, ஆர்கானிக் என்றெல்லாம் முகமூடி போட்டுக்கொண்டு வருகின்ற பொருட்களை கண்ணை மூடிக்கொண்டு நம்பாதீர்கள். எல்லாவற்றிலும் விஷத்தன்மை உண்டு.

வெயில் காலம் வந்தால் உடனே மாயிஸ்ட்ரைஸர் வாங்கிக் கொள்கிறோம். உடலில் அதைத் தேய்த்தால் புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம் என்றும், உடல் எப்போதும் ஈரப்பதத்துடன் வறட்சியடையாமல் இளமையாய் இருக்கும் எனவும் நம்புகிறோம். உண்மை என்னவெனில் இத்தகைய மாயிஸ்ட்ரைசர்களில் பாரஃபீன்ஸ், மினரல் ஆயில், டிட்டர்ஜன்ட் போன்றவை உண்டு. இவை தோலுக்குள் சென்று தோலை சேதப்படுத்தும் அபாயம் உண்டு. சும்மா வெயிலில் போனால் வைட்டமின் டி ஆவது கிடைக்கும். அது உடலுக்கு ரொம்ப நல்லதும் கூட !

இறைவன் படைப்பில் அனைத்துமே அழகு தான். ரோஜாவுக்கு ஒரு அழகு என்றால், முல்லைக்கு இன்னொரு அழகு, சாமந்திக்கு வேறொரு அழகு. ஒவ்வொரு அழகுமே இறைவனின் படைப்பின் மகத்துவம் தான். இறைவன் தருகின்ற உடலை அப்படியே ஏற்றுக் கொள்வதில் இருக்கிறது பெண்மையின் பலமும், பெண்மையின் தன்னம்பிக்கையும். அப்படி ஏற்றுக் கொள்ளாமல் செய்யும் ஒவ்வொரு செயலுமே ஆபத்து தான். முடியை நேராக்குவோம் என‌ ஹெயர் ஸ்ட்ரெயிட்டனிங் பண்ணுவது கூட பார்மால்டிஹைட் உடலில் நுழையக் காரணமாகி கேன்சரைக் கூட கொண்டு வரும்.

இத்தகைய ஆபத்துகள் குழந்தைப் பொருட்களைக் கூட விட்டு வைப்பதில்லை. குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் எண்ணை பெரும்பாலும் மினரல் ஆயில் என்கின்றது புள்ளி விவரம் ஒன்று. இந்த மினரல் எண்ணை உடலின் மேல் ஒரு மெல்லிய மெழுகுப் படலத்தை ஏற்படுத்தி தோலின் இயல்புத் தன்மையைப் பாதிக்கிறது. இதை அதிக அளவு பயன்படுத்தும் போது உடல் தனது இயல்பான பணிகளைச் செய்ய முடியாமலும், உடலின் நச்சுத் தன்மையை வியர்வை மூலம் வெளியேற்ற முடியாமலும் சோர்வுறுகிறது. முகப்பூச்சு பயன்படுத்துவது கூட கெடுதலானது எனவும், குறிப்பாக குழந்தைகள் முகப்பூச்சுத் துகள்களை சுவாசிக்க நேர்வதனால் ஆஸ்த்மா போன்ற பல பிரச்சனைகள் வர காரணமாகிறது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பதின் வயதுப் பிள்ளைகள், பள்ளிப் பிள்ளைகளுக்கு நகங்களில் கலர் கலராக டிசைன் வரைவது ஃபேஷன். முன்பெல்லாம் ஒரே நிறத்தைப் பூசுவார்கள். இப்போது ஒரே நகத்தில் நான்கைந்து நிறங்களைப் பூசிக் கொள்வது வழக்கம். இந்த நகப்பூச்சுகளில் அசிடோன் இருந்தால் நகத்தை வலுவிழக்கச் செய்யும். தொடர்ந்து அடிக்கும் நிறத்தில் நகப்பூச்சுகள் பூசுவது நகத்தின் வசீகரத்தையும், வலிமையையும் அழித்து விடும் என்பது அதிர்ச்சிகரமான உண்மை.

விளம்பரம் சொல்கின்ற வரையறைகள் தான் அழகு என நம்பும் போது நாம் ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோம். நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஏன் அவர்கள் நிர்ணயிக்க வேண்டும் ? நாம் கருப்பாய் இருப்பது அழகல்ல என ஏன் அவர்கள் நம்மை கிண்டலடிக்க வேண்டும் ? அதை ஏன் பெண்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு அவர்களுடைய கல்லாவில் பணத்தைக் கொண்டு கொட்ட வேண்டும் ? சிந்திக்க வேண்டிய விஷயமல்லவா ?

இப்படி அழகு சாதனப் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவது ஒரு வித அடிமை மனநிலைக்குள் நம்மைத் தள்ளி விடுகிறது. பின்னர் அந்த அழகு சாதனப் பொருள் இல்லாமல் ஒரு முழுமை தோன்றுவதேயில்லை. எந்த அழகு சாதன ஷாம்பூக்களும் இல்லாத காலத்தில் நமது பாட்டிமார் நூறு வயதிலும் கருகரு கூந்தலோடு வலம் வந்தனர். இன்றைக்கு பதின் வயது தாண்டியதும் வெண்நரையுடன் தானே உலவுகின்றனர் ? அப்புறம் அதை மாற்ற கூந்தலுக்கு கலர் அடிக்கிறோம். அந்த டையில் பி‍‍.பெனிலைன்டையாமின் இருக்கிறது. அது எக்கச்சக்க பிரச்சினைகளை உடலுக்குக் கொண்டு வருகிறது.

அழகு என்பது என்பது வெளியில் இல்லை ! மனதில் இருக்கிறது. என்னைக் கேட்டால் உலகிலேயே அழகான பெண் அன்னை தெரசா என்பேன். சுருக்கம் நிறைந்த உடல். கூனல் விழுந்த தோற்றம். ஆனால் அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அன்பில் வார்த்தெடுத்தவை. அவருடைய செயல்கள் ஒவ்வொன்றும் கருணையில் குளிப்பாட்டியவை. அவை அன்னையை அழகாக்கிக் காட்டுகின்றன.

“என் அம்மா அழகாயில்லை” என சொல்கின்ற ஏதேனும் ஒரு குழந்தையைக் காட்ட முடியுமா ? அம்மா காட்டுகின்ற அன்பில் தான் குழந்தை அழகின் அர்த்தத்தை அறிந்து கொள்கிறது. அம்மா பூசும் முகப்பூச்சில் அல்ல‌. அதனால் தான் உலகிலேயே ரொம்ப அழகு என் அம்மா தான் என குழந்தைகள் குதூகலித்துச் சொல்லும்.

தாய்மைக்காலத்தில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தவே பயன்படுத்தாதீர்கள் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். டாக்டர் என்ஜெல்மேன் எழுதிய கட்டுரையொன்றில் ஏகப்பட்ட அழகுசாதனப் பொருட்களை பட்டியலிட்டு அவற்றைத் தவிர்க்க வேண்டுமென தாய்மை நிலையிலுள்ள பெண்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். இது கடந்த ஆண்டு உலகின் பிரபல பத்திரிகையான வோக் இதழில் வந்து பரபரப்பைக் கிளப்பியது.

நாம் என்ன நிறத்தில் இருக்க வேண்டும், எந்த எடையில் இருக்க வேண்டும், எந்த உயரத்தில் இருக்க வேண்டும் என்பதை அடுத்த வீட்டு நபர் சொன்னால் எரிச்சலடைகிறோம். அதே விஷயத்தை வரவேற்பறையில் இருக்கும் தொலைக்காட்சி சொன்னால் ஒத்துக் கொள்கிறோம். அதுவும், பிடித்த நடிகரோ நடிகையோ சொன்னால் அவ்வளவு தான். அமெரிக்காவில், லண்டனில் என்று பீலா விட்டால் போயே போச்சு. இதெல்லாம் தேவையா என ஒரு சுய பரிசோதனை செய்து கொள்வோம்.

அமெரிக்காவில் பெண்கள் ஆண்டுக்கு சுமார் 35 மில்லியன் டாலர்களை செலவிட்டு உடலைக் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். கடைசியில் பலர் அனரோக்ஸா எனும் நோய்க்குள் விழுந்து உயிரையும் இழக்கின்றனர். நம்மை நாமே ஏற்றுக் கொள்ள வேண்டும். நம்மை நாமே ஏற்றுக் கொள்ளாவிட்டால் பிறகு எப்படி அடுத்தவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் ?

பெண்கள் வெறும் போகப் பொருட்கள். அவர்கள் பிறருடைய கண்களுக்கு வனப்பான உடலோடு வலம் வரவேண்டும் எனும் மனநிலையை விளம்பர உலகம் வலிந்து திணிக்கிறது. அதை பெண்கள் நிராகரிக்க வேண்டும். பெண்கள் இன்று சமூகத்தின் அத்தனை உயரிய இருக்கைகளிலும் கம்பீரமாய் அமர்ந்திருக்கின்றனர். தொழில் நுட்ப உலகம் பெண்களை வியந்து பார்க்கிறது. அழகைக் காட்டி வசீகரிக்க வேண்டிய அவசியம் இன்று இல்லை, அறிவை நீட்டி உலகை வியக்க வைக்கலாம்.

எனவே புற அழகை புறந்தள்ளி, அக அழகை அணிந்து கொள்வோம். அந்த அகத்தின் அழகு முகத்தை அழகாக்கும். அகத்தின் அன்பு முகத்தை எழிலாக்கும். அகத்தின் குணம் முகத்தை வசீகரமாக்கும். அந்த அழகே நிரந்தரம். அதுவே உயர் தரம்.

*

அமிலம் கக்கும் அழகுசாதனப் பொருட்கள்

( இந்த வார பெண்ணே நீ இதழில் வெளியான எனது கட்டுரை )

அழகாய் தோன்ற வேண்டும் எனும் உந்துதல் பெரும்பாலானவர்களிடம் இயல்பாகவே காணப்படுகிறது. அழகு குறித்த அதீத கவலை ஆண்களை விட பெண்களிடம் அதிகமாகவே இருக்கிறது என்பது கண்கூடு.

காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தனது உடல் அழகைக் கொண்டு மட்டுமே சபைகளிலும், மனங்களிலும் அங்கீகாரமும், மரியாதையும் பெற்றார்கள் என்று வரலாறு கடந்த கால பெண்களின் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளது. பெண்களிடம் இயல்பாகவே எழும் அழகு குறித்த கவலை இங்கிருந்து முளை விட்டிருக்கலாம்.

ஆனால் இன்றைய சமூகம் அப்படிப்பட்டதல்ல. பெண்கள் தங்கள் அழகைக் காட்டி பிறருடைய கவனத்தை ஈர்க்க வேண்டிய காலம் மலையேறிவிட்டது. தங்கள் அறிவினாலும், ஆற்றலினாலும் பெண்கள் இன்று சமூகத்தில் அங்கீகாரங்களையும், புகழையும் மிக எளிதில் பெற்று விடுகின்றனர். ஆணும் பெண்ணும் சமமெனும் சொல்லே பெண்கள் ஆண்களை விட உயர்ந்தவர்கள் இல்லை என பறைசாற்றுவதற்காகத் தானோ என எழுச்சியுடன் பெண்கள் கேட்கும் காலம் இது.

ஆனால், பழைய மரபின் தொடர்ச்சியாக இன்றும் பெண்கள் அழகான உடல் வேண்டும், வசீகரிக்கும் முகம் வேண்டும் என அதீத கவலை கொண்டு திரிவது வியப்பையும், வேதனையையும் அளிக்கிறது. செயற்கை முகப்பூச்சுகளையும், பல்வேறு அழகு சாதனப் பொருட்களையும் கைகளிலும், பைகளிலும் அடக்கி இன்றைய பெண்கள் அலுவலகங்களுக்கு விரைவது தனது இயல்பின் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது எனலாம்.

உளவியல் ரீதியாக இது பெண்களின் தன்னம்பிக்கைக் குறைவின் வெளிப்பாடாகவும், தாழ்வு மனப்பான்மையின் தாழ் திறக்கும் சங்கதியாகவும் தெரியும் அதே வேளையில் இது ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாகவும் இருக்கிறது என்பது கவலையளிக்கக் கூடிய செய்தியாகும்.

உலகிலேயே அதிக அளவு அழகுசாதனப் பொருட்களை உபயோகிப்பது பெண்கள் தான் என்பதை பிரிட்டனின் ஆய்வு ஒன்று சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதில் வியப்பு ஏதுமில்லை. ஆனால் அந்த அழகு சாதனப் பொருட்கள் உண்மையிலேயே அழகைக் கூட்டுகின்றனவா, அவை தேவையானவை தானா என ஆராய்ந்தால் கிடைக்கும் செய்திகள் அதிர்ச்சியளிப்பவையாக இருக்கின்றன.

இளமையாகவும், அழகாகவும், வனப்பாகவும் காட்டுவேன் என விளம்பரங்களில் வாக்குறுதி அளிக்கும் அழகு சாதனங்கள் உண்மையில் அழகையும், வனப்பையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது என்பதே அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும். இந்த அழகு சாதனப் பொருட்களில் கலந்துள்ள வேதியல் பொருட்களைப் பார்த்தால் ஆய்வுக் கூடத்தில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு அமிலப் பட்டியலாய் அவை அச்சமூட்டுகின்றன.

பெண்களின் அழகுசாதனப் பொருட்கள் பலவற்றிலும் விஷத் தன்மையுள்ள பொருட்கள் கலந்திருக்கின்றன என்பதும், இந்த விஷத் தன்மைகள் ஒவ்வாமை முதல் புற்று நோய் வரையிலான பல்வேறு விதமான நோய்களைத் தோற்றுவிக்கக் கூடியவை என்பதும், இவை பெண்மையைக் கூட வலுவிழக்கச் செய்யும் தன்மை வாய்ந்தவை என்பதுமே இந்த அழகுசாதனப் பொருட்கள் குறித்த உண்மையாகும்.

உணவுப் பொருட்களுக்கு இருக்கக் கூடிய தர நிர்ணய அமைப்புகள் போல அழகு சாதனப் பொருட்கள் விஷயத்தில் அமைப்புகள் முழுமையாக இல்லை. பல மேலை நாடுகளில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இந்த தர நிர்ணய சட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இத்தகைய அமைப்புகள் உள்ள நாடுகளில் அழகுப் பொருட்கள் குறைந்த பட்ச உத்தரவாதத்தைத் தர முடியும். உதாரணமாக, யூரோப்பியன் யூனியன் காஸ்மெடிக் டைரக்டிவ் ( European Union’s cosmetics directive ) எனும் அமைப்பு 2006ல் ஆரம்பிக்கப்பட்ட பின் யூ.கே வில் அழகு சாதனப் பொருட்களில் விஷத்தன்மையுள்ள பொருட்களோ, அமிலங்களோ கலப்பது பெருமளவில் குறைந்துள்ளன.

சமீபத்தில் அமெரிக்காவில் உதட்டுச் சாயங்களில் காணப்படும் விஷத் தன்மையைக் கண்டறிவதற்கான சோதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அதில் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிரபலமான உதட்டுச் சாயங்களில் 61 விழுக்காடு விஷத் தன்மை உடையதாக காணப்பட்டன. முப்பது விழுக்காடு உதட்டுச் சாயங்களில் இந்த விஷத் தன்மை அளவுக்கு மிக மிக அதிக அளவில் இருந்ததால் அவற்றைத் தடை செய்திருக்கிறது அமெரிக்க அரசு.

தொடர்ந்து உதட்டுச் சாயம் போடும் பழக்கம் உடைய ஒரு பெண் சுமார் நான்கரை கிலோ எடையளவுக்கு லிப்ஸ்டிக்கை தன்னன அறியாமலே உட்கொள்கிறார் எனவும், இது மனச் சிதைவு, கருச் சிதைவு, சிறுநீரகக் கோளாறு, பெண்மைத் தன்மை இழப்பு உட்பட பல்வேறு சிக்கல்களை உருவாக்கக் கூடும் எனவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் பீட்டர் டிங்கில் தெரிவிக்கிறார்.

மலிவு விலை உதட்டுச் சாயம், கண்களை அழகுபடுத்தும் மை, முகத்தில் பூசப்படும் ரோஸ் பவுடர், நகப் பூச்சு, பாடி ஸ்பிரே, ஹெயர் ஸ்ப்ரே, டியோடரண்ட், வாசனைத் திரவியம், ஷாம்பூ, ஷவர் ஜெல், ஹேண்ட் வாஷ் என எங்கும் அழகுசாதனப் பொருட்களின் சந்தை பரவலாய் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் அத்தகைய கட்டுக்கோப்பான தர நிர்ணயத்தை எதிர்பார்க்க முடியாது. கூடவே, தரக் கட்டுப்பாட்டைப் பார்த்து அழகுப் பொருட்களை வாங்க வேண்டும் எனும் விழிப்புணர்வே பெரும்பாலானோருக்கு இல்லை என்பதே உண்மை.

பாரபீன்ஸ் ( parabens )  மற்றும் பாத்தலேட்ஸ் ( phthalates) போன்ற அமிலங்கள் வாசனைத் திரவியங்களிலும், பாடி ஸ்பிரேக்களிலும் உள்ளன. இவை காற்றில் கலந்து உடலுக்குள் புகுந்து ஊறு விளைவிக்கக் கூடியவை. அழகுப் பொருட்களை அதிகம் பயன்படுத்தும் 20 வயதுமுதல் 40 வயதுக்குள்ளான இன்றைய பெண்களிடம் இந்த பாரபீன்ஸ் மிக அதிக அளவில் இருக்கின்றன. இவை ஹார்மோன்களைச் சேதப்படுத்தும் அச்சுறுத்தலையும் தருகின்றன. இந்த பாரபீன்ஸ் விஷத் தன்மை வாய்ந்தவை என்பதும், மார்பகப் புற்று நோய்க்கும் இதற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு என்பதும் ஏற்கனவே பல ஆராய்ச்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

புரோப்பலீன் கிளைகோள் எனப்படும் தோலை சேதப்படுத்தி குருதிக் குழாய்களில் அமிலத்தன்மை கரைக்கும் வேதியல் பொருள் இன்றைய மிகப்பிரபலமான டியோடரண்ட் களில் காணப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். இது மூளை, லிவர், சிறுநீரகம் போன்றவற்றின் இயக்கத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்த வல்லது. இந்த விஷத் தன்மை மவுத்வாஷ், மற்றும் பற்பசைகளில் கூட காணப்படுகின்றன என்பது கவனிக்கத் தக்கது.

ஸ்வீடன் நாட்டில் தடைசெய்யப்பட்ட பார்மால்டிஹைட் எனப்படும் பொருள் நமக்குக் கிடைக்கும் ஷாம்பூ, ஹேண்ட் வாஷ் போன்ற பொருட்களில் இருக்கின்றது. இவை தலைவலி, அலர்ஜி போன்ற பல உபாதைகளைத் தந்து செல்கிறது. ஷாம்பூ, மற்றும் நுரை தரக்கூடிய பல அழகு சாதனப் பொருட்களில் சோடியம் லாரில் சல்பேட், மற்றும் சோடியம் லாரத் சல்பேட் எனும் இரண்டு வேதியல் பொருட்கள் காணப்படுகின்றன. இவை மிக மிக ஆபத்தானவை. குழந்தைகளின் கண்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் சக்தி இவற்றுக்கு உண்டு. இவை தோலினூடாக எளிதில் உடலுக்குள் கடந்து உடலுக்குள் விஷத்தன்மையை இறக்குமதி செய்துவிடுகிறது.

அழகுப் பொருட்களில் எத்தனோலமின் எனும் பொருள் நானோ, டை மற்றும் டிரை  எனும் மூன்று வகையாகக் காணக்கிடைக்கிறது. இவை ஷாம்பூ, ஷவர் ஜெல், சோப், ஃபேஷியல் கிளீனர்ஸ் உட்பட பல்வேறு அழகுப் பொருட்களில் உள்ளன. இவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது சிறுநீரகப் புற்றுநோய், லிவர் புற்று நோய் உட்பட பல கொடிய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

இன்னொரு முக்கியமான விஷயம், இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டது என விளம்பரப்படுத்தப்படும் அழகுப் பொருட்கள் பெரும்பாலானவற்றில் இந்த விஷத்தன்மை உண்டு. அமிலங்களுடன் ஒரு சில இயற்கைப் பொருட்களையும் கலந்து அவற்றை இயற்கைப் பொருள் என விளம்பரப் படுத்துவது விளம்பர உத்தி தவிர வேறில்லை என்பதை விளங்கிக் கொள்ளல் அவசியம்.

ஐசோபுரோபைல் ஆல்கஹால் (Isopropyl Alcohol)  எனும் விஷத்தன்மையுள்ள பொருள் அன்றாடம் பயன்படுத்தும் ஆஃப்டர் ஷேவ் லோஷன்(after-shave lotions), ஹெயர் கலர் ரின்சஸ்(hair color rinses), ஹேண்ட் லோஷன்(hand lotions)  உட்பட பல்வேறு அழகு பொருட்களில் கலந்துள்ளது. தலைவலி, வாந்தி, மன அழுத்தம் போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு இந்தப் பொருள் காரணமாகிறதாம்.

குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் எண்ணை பெரும்பாலும் மினரல் ஆயில் என்கின்றது புள்ளி விவரம் ஒன்று. இந்த மினரல் எண்ணை உடலின் மேல் ஒரு மெல்லிய மெழுகுப் படலத்தை ஏற்படுத்தி தோலின் இயல்புத் தன்மையைப் பாதிக்கிறது. இதை அதிக அளவு பயன்படுத்தும் போது உடல் தனது இயல்பான பணிகளைச் செய்ய முடியாமலும், உடலின் நச்சுத் தன்மையை வியர்வை மூலம் வெளியேற்ற முடியாமலும் சோர்வுறுகிறது.

முகப்பூச்சு பயன்படுத்துவது கூட கெடுதலானது எனவும், குறிப்பாக குழந்தைகள் முகப்பூச்சுத் துகள்களை சுவாசிக்க நேர்வதனால் ஆஸ்த்மா போன்ற பல பிரச்சனைகள் வர காரணமாகிறது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அழகின் மீது அதீத மோகம் ஏற்படும் போது உடல் எடையைக் குறைக்க வேண்டும் எனும் தீவிர உந்துதலும் பெண்களிடம் எழுகிறது. ஊடகங்கள் மிகைப்படுத்தும் அழகும், இளமையுமே உண்மை என நம்பி அதே போல நகலெடுக்க தனது உடலைக் கொடுமைப்படுத்தும் டயட் முறைகள் இன்று உலகெங்கும் பரவியிருக்கின்றன. அமெரிக்கர்கள் ஆண்டுக்கு சுமார் 35 மில்லியன் டாலர்கள் இத்தகைய உடல் குறைப்பு பொருட்களுக்காகச் செலவிடுகின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

இத்தகைய மோகம் அதிகரிக்கும் போது உயிரிழப்புகள் கூட நேரிடுகின்றன. சமீபத்தில் மாஸ்கோவில் 35 வயதான பெண் ஒருவர் அளவுக்கு அதிகமாக உடலை இளைக்க வைக்கும் மருந்துகளை உட்கொண்டதால் மரணமடைந்திருக்கிறார். உலகெங்கும் அவ்வப்போது நிகழும் இத்தகைய நிகழ்வுகள் மாத்திரைகளினால் அழகைத் தேடுவோருக்கான எச்சரிக்கை மணி எனக் கொள்ளலாம்.

இன்னும் சிலருக்கு ஆடையின் வண்ணத்துக்கு ஏற்ப அழகிய காண்டாக்ட் லென்ஸ் அணிவது ஒரு பிரியமாக இருக்கிறது. இது கண்ணுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் கண் மருத்துவர்கள்.

இன்றைய இளம் பெண்களிடையே தங்கள் கூந்தலை நேராக்க வேண்டும் எனும் மோகமும் மிகுந்து வருகிறது, அந்த முறைக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களில் பார்மால்டிஹைட் எனப்படும் வேதியல் பொருள் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. இது புற்று நோய் வரும் வாய்ப்பை அதிகரிக்கும் என உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

இயற்கையை விட்டு விலகி செயற்கைப் பொருட்களின் அருகாமையை அதிகப்படுத்திக் கொள்ளும் ஒவ்வோர் செயலும் உடலின் இயல்புக்கு ஊறு விளைவிக்கக் கூடியது என்பதில் ஐயமில்லை. ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க ஒரே வழி அழகுப் பொருட்களின் மீதான அதீத நாட்டத்தைக் குறைப்பதே. ஊடகங்களும், திரைப்படங்களும் மிகைப்படுத்துபவையே அழகெனும் மாயையிலிருந்து இளம் பெண்கள் வெளிவரும்போது தான் ஆரோக்கியமான சூழல் நிலவும் என்பது திண்ணம்.