வெடிக்கும் மொபைல் போன்கள் தடுக்கும் வழிமுறைகள் !

Image result for mobile battery blast

ஒவ்வொரு நாளும் நமது கைகளிலும், பைகளிலும் வெடி மருந்தைச் சுமந்து செல்கிறோமோ எனும் அச்சத்தை உருவாக்குகின்றன சமீபத்திய நிகழ்வுகள். மும்பை உணவகம் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்தவரின் செல்போன் படீரென வெடித்துச் சிதறியது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். அந்த செல்போனை அவர் கையில் கூட வைத்திருக்கவில்லை, தனது பாக்கெட்டில் தான் வைத்திருந்தார் !

கிராடில் பண்ட் குழுவின் தலைமைச் செயல் அதிகாரி நஸ் ரீன் ஹாசன் கடந்த மாதம் அகால மரணமடைந்தார். இரவில் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது போன் வெடித்துச் சிதறியது. அவர் செய்த ஒரே தவறு தூங்கிக் கொண்டிருந்த போது அருகில் மொபைலை சார்ஜ் செய்ய வைத்திருந்தது தான்.

சில மாதங்களுக்கு முன்பு உமா ஓரம் எனும் பதின் வயதுப் பெண் உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது போன் வெடிக்க இறந்து போனார். போன் சார்ஜில் இருந்தபோதே அவர் போன் பேசியது தான் இந்த அசம்பாவிதத்தின் காரணமாய் அலசப்பட்டது.

மொபைல் போனில் இருக்கின்ற விஷயங்களைத் திருடி நமக்கு ஆபத்து ஏற்படுத்துபவர்கள் ஒரு புறம் இருக்க,  இப்படி மொபைல் போன்களே ஆபத்தாய் மாறியிருப்பது மக்களிடையே அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது.

பேட்டரி வெடிக்கும் விஷயத்தில், சாம்சங் காலக்ஸி 7 வகை போன்கள் தான் முதலில் அதிகம் பேசப்பட்டன. நிறுவனம் அந்த வகை போன்களில் 25 இலட்சம் போன்களை திரும்ப எடுத்துக் கொண்டது. இப்போது எந்த மொபைலும் பாதுகாப்பில்லை எனுமளவில் எல்லா வகை போன்களும் வெடிக்க ஆரம்பித்திருக்கின்றன.

ஸ்மார்ட் போன்கள் இல்லாத வாழ்க்கை இனிமேல் சாத்தியமில்லை என்று தான் சொல்ல வேண்டும் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வது ஒன்றே இப்போதைக்கு சிறந்த வழி.

  1. போன்களில் பேட்டரி நாசமாகிவிட்டால் அதை மீண்டும் பயன்படுத்தவே பயன்படுத்தாதீர்கள். வேறு பேட்டரி போடும்போது விலையைப் பார்க்காமல் ஒரிஜினல் பேட்டரிகளை மட்டுமே வாங்குங்கள்.
  2. போன் கீழே விழுந்து பாட்டரி அடிபட்டாலோ, அதில் சேதம் ஏற்பட்டிருந்தாலோ, விரிசலோ, கீறலோ, துளையோ ஏற்பட்டாலோ அந்த பேட்டரியை பயன்படுத்தாதீர்கள். அத்தகைய பேட்டரிகள் வெடிக்கும் வாய்ப்பு மிக அதிகம்.
  3. போன்கள் அதிக வெப்பம் படுகின்ற இடத்தில் வைத்திருக்காதீர்கள். முடிந்தவரை நிழலான, குளிரான இடமே அதற்குப் பாதுகாப்பு. அதிக வெப்பம் பேட்டரியின் உள்ளே உள்ள சின்னச் சின்ன செல்களை உடைக்கும். அது பின்னர் பேட்டரி வெடிக்க காரணமாகலாம்.
  4. இரவு முழுவதும் போனை சார்ஜில் போடவே போடாதீர்கள். சில மணி நேரங்கள் மட்டுமே சார்ஜில் வைத்திருங்கள். எக்காரணம் கொண்டும் படுக்கும் அறையில் போனை சார்ஜ் செய்யாதீர்கள். நீண்ட நேரம் சார்ஜ் செய்வது பேட்டரி உள்ளுக்குள் சூடாக காரணமாகிவிடும்.
  5. போன் கவர்களிலும் கவனம் தேவை. .முழுக்க முழுக்க காற்றோட்டம் இல்லாத கவர்களை வாங்கி போனுக்கு மாட்டி விடாதீர்கள்.  வெப்பம் உள்ளேயே தங்கிவிட அது காரணமாகி விடும்.
  6. உங்கள் பேட்டரியின் ஏதோ ஒரு பாகம் மட்டும் அதிக சூடாகிறதெனில் கவனம் தேவை. பேட்டரி செயலிழப்புக்கு அது காரணமாகிவிடும். அத்தகையை பேட்டரிகளை மாற்றி விடுவது நல்லது. குறைந்த பட்சம் சூடாகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
  7. பெரும்பாலான நேரங்களில் ‘டேட்டா’ வை அணைத்து வைத்திருந்தால் போன் சூடாவதைத் தடுக்கலாம். டேட்டா அணைக்கப்பட்ட போன் விரைவிலேயே குளிர் நிலைக்குத் திரும்பி விடும்.
  8. இன்றைக்கு நம்மிடம் புழங்கும், அதி விரைவாக சார்ஜ் செய்யும் பேட்டரிகள், பேட்டரியை சூடாக்கி விடுகின்றன. பவர் அதிகமாக அதிகமாக, பேட்டரியின் வெப்பமும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். கவனமாய் வாங்குங்கள்.
  9. போன் சூடாக இருக்கும் போது போனை சார்ஜ் செய்யாதீர்கள். அதை அணைத்து வைத்து குளிர வையுங்கள். குளிரான பின்பு மட்டுமே சார்ஜ் செய்யுங்கள்.
  10. சரியான சார்ஜரை மட்டுமே பயன்படுத்துங்கள். உங்கள் போனில் சொருக முடியும் என்கிற எல்லா சார்ஜர்களையும் பயன்படுத்தாதீர்கள். உங்கள் போனுக்குரிய சரியான மின் அளவு தருகின்ற சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்துங்கள். ஒரிஜினல் சார்ஜர்களே பாதுகாப்பானவை.
  11. சார்ஜ் போட்டுக்கொண்டே பேசுவது, பாட்டு கேட்பது, படம் பார்ப்பது போன்றவை ஆபத்தானவை. சார்ஜ் போடும்போது போனை பயன்படுத்தவே பயன்படுத்தாதீர்கள். அதே போல போனில் இணைக்காமல், சார்ஜரை மட்டுமே ஆன்பண்ணி வைத்திருப்பதையும் தவிருங்கள்.
  12. அதிக வெப்பம் படக்கூடிய இடங்களான, கார் டேஷ்போர்ட், சமையலறை, நேரடியாக சூரிய ஒளி படும் இடங்கள் இங்கெல்லாம் போனை வைக்காதீர்கள். அது ஆபத்தை விலைக்கு வாங்குவது போல.
  13. சார்ஜ் செய்யும் போது போனை ஆஃப் செய்தோ, ஏரோப்ளேன் மோட் போட்டோ, குறைந்த பட்சம் டேட்டாவை ஆஃப் செய்தோ வையுங்கள். பேட்டரி சூடாவதை அது தடுக்கும்.
  14. போனுக்கு அதிக அழுத்தம் கொடுக்காதீர்கள். போன் மீது அமர்வது, அதிக பளுவான பொருட்களை அதன் மீது வைப்பது போன்றவற்றையெல்லாம் தவிருங்கள்.
  15. பவர் பேங்க் பயன்படுத்துவதாக இருந்தால், நல்ல தரமான நிறுவனத் தயாரிப்புகளை மட்டுமே வாங்கிப் பயன்படுத்துங்கள். மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காக பெயர் தெரியாதவற்றையெல்லாம் வாங்காதீர்கள்.
  16. வைஃபை, புளூடூத் போன்றவற்றை ஆஃப் செய்தே வைத்திருங்கள். தேவையான நேரங்களில் மட்டும் அதை ஆன் செய்யும் பழக்கத்தைக் கொண்டு வாருங்கள்.
  17. போன் ஈரமாக இருந்தாலோ, மழையில் நனைந்திருந்தாலோ அதை சார்ஜ் செய்ய வேண்டாம். அதன் ஈரம் முழுமையாய் உலர்ந்த பின்பே சார்ஜ் செய்யுங்கள்.
  18. பேட்டரிகளைக் கழற்றி மற்ற உலோகங்களோடு இணைத்து வைத்திருக்க வேண்டாம். அதைத் தனியாக, பாதுகாப்பான இடங்களில் வைத்திருங்கள்.
  19. தேவையற்ற ஆப்ஸ் களை அழித்து விடுங்கள். போனில் நிறைய ஆப்ஸ் வைத்திருப்பது போனை சூடாக வைத்திருக்கும். தேவையற்ற ஆப்ஸை அன் இன்ஸ்டால் செய்வது உங்களது போனை கூலாக வைத்திருக்க உதவும்.
  20. வீடியோ சேட், ஜிபிஎஸ், வைஃபை டவுன்லோட் போன்றவை பேட்டரியை அதிகம் பயன்படுத்தும். அதன் பயன்பாட்டைக் குறையுங்கள். செட்டிங்க்ஸ் சென்று எவையெல்லாம் பேட்டரியை அதிகம் பயன்படுத்துகின்றன என்பதைப் பாருங்கள். அதையெல்லாம் நீக்க முடியுமா என பாருங்கள். ‘

இப்படிப்பட்ட சில விஷயங்களைக் கடைபிடித்தால் போன் வெடிக்கும் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம். விழிப்பாய் இருப்போம், வெடிக்காமல் காப்போம்.

*

சேவியர்

Puthiya thalaimurai, July 18

Advertisements

குழந்தைகளையும் குறிவைக்கும் ஆப்ஸ் !

Image result for kids playing with mobile

பிளே கிரவுண்ட் தெரியாது ! ஆனால் பிளே ஸ்டோர் தெரியும் !! இது தான் இன்றைய குழந்தைகளின் நிலை. இப்படி டிஜிடல் விளையாட்டுகளில் சிக்கிக் கிடக்கும் குழந்தைகளைக் குறிவைத்து தகவல் திருட்டுகள் நடக்கின்றன என்பது தான் இப்போதைய அதிர்ச்சித் தகவல். கூகிள் பிளேஸ்டோரில் உள்ள ஆயிரக்கணக்கான ஆப்-கள் அமெரிக்காவின் குழந்தைகள் தகவல் பாதுகாப்பு சட்டமான கோப்பா வை US Children’s Online Privacy Protection Act (Coppa)மீறுகின்றன எனும் கண்டுபிடிப்பு மிகப்பெரிய சர்ச்சையாக உருமாறியிருக்கிறது. இந்தகண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர்கள் அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள இண்டர்நேஷனல் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஸ்டிடியூர் ஆய்வாளர்கள்.

இன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் செலுத்தும் ஆதிக்கத்தைப் போல வேறெதுவும் செலுத்தவில்லை என்பது தான் உண்மை. பெரும்பாலான மக்களின் பொழுதுகள் குட்டிக் குட்டி வெளிச்சத் திரைகளில் அடங்கிவிடுகின்றன.

எட்டு வயதுக்கும், பதிமூன்று வயதுக்கும் உட்பட்ட ஆறாயிரம் குழந்தைகளை வைத்து ஒரு ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் 54 சதவீதம் குழந்தைகள், தங்கள் பெற்றோர் தங்களைக் கவனிப்பதை விட அதிக நேரம் செல்போனே கதியென கிடப்பதாய் கவலை தெரிவித்திருந்தனர்.

“எங்கள் குழந்தைகளுக்கு நல்ல முன்னுதாரணமாய் தாங்கள் வாழவில்லை” என குற்ற உணர்வோடு இருக்கும் பெற்றோர் எண்பத்து இரண்டு சதவீதம் பேர் ! அதில் ஐம்பத்து இரண்டு சதவீதம் பேர், எத்தனை முயன்றாலும் இந்த ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தை விட்டு வெளியே வரமுடியவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.

இருபத்து ஐந்து சதவீதம் பெற்றோர் தங்கள் குழந்தைகள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாய் இருப்பதாகவும், எப்படியாவது அவர்களை வெளியே கொண்டு வரவேண்டும் எனவும் விரும்புகின்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

எல்லாவற்றையும் விட கவலைக்குரிய விஷயம் இது தான். “ஸ்மார்ட்போனைத் தான் எங்கள் பெற்றோர் எங்களை விட அதிகம் நேசிக்கிறார்கள்” என முப்பத்து இரண்டு சதவீதம் குழந்தைகள் கவலையுடன் தெரிவித்திருக்கின்றனர்.

உண்மையிலேயே நமது உறவுகளின் நெருக்கத்தை உடைக்கும் அளவுக்கு டிஜிடல் வலிமை பெற்று விட்டதா ? குடும்பத்தை விட அதிகமாய் சமூக வலைத்தளங்கள் நம்மை ஆதிக்கம் செலுத்துகின்றனவா ?

நம்முடைய குழந்தைகளை நாம் கவனிக்காவிட்டால் அவர்களை வேறு யாரோ கவனிப்பார்கள். குழந்தைகளை நாம் வனையாவிட்டால் அவர்களை வேறு யாரோ வனைந்து முடிப்பார்கள். அது அவர்களுடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாதிப்பாகவும், அச்சுறுத்தலாகவும் மாறிவிடும்.

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, ‘பத்து வயது குழந்தைக்கு சாதாரணமாக ஒரு ஸ்மார்ட் போன் சொந்தமாகிவிடுகிறது’ எனும் கண்டுபிடிப்பை வெளியிட்டது. இந்தியாவில் அந்த அளவுக்கு இல்லையெனினும், பெற்றோரின் ஸ்மார்ட்போன்களை சகட்டு மேனிக்கு பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகம் ! ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகள் சராசரியாக தினமும் சுமார் இரண்டரை மணி நேரம் போனில் விளையாடுகின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.

இந்த சூழலில் தான் கூகிள் பிளே ஸ்டோரின் பாதுகாப்பு விதி மீறல் அச்ச உணர்வை அதிகரித்திருக்கிறது. கூகிள் ஆப் ஸ்டோரில் உள்ள குழந்தைகளுக்கான ஆப்ளிகேஷன்களை ஆய்வு செய்ததில் 57 சதவீதம் ஆப் கள் பாதுகாப்பு விதிகளை மீறியிருக்கின்றன. இவை குழந்தைகள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிக்கின்றன. இது சட்ட விதிகளுக்கு எதிரானது.

சில ஆப்ளிகேஷன்கள் குழந்தைகளின் இருப்பிடத்தையும், காண்டாக்ட் தகவல்களையும் திருடி அனுப்புகின்றன. சில ஆப்ஸ் தனிநபர் தகவல்களை திருடி வேறு இடங்களுக்கு அனுப்புகின்றன. சில ஆப்கள் விளம்பரங்களுக்காக தகவல்களை அனுப்புகின்றன. என நீள்கிறது இந்தப் பட்டியல். பிரபலமான, சுமார் ஏழரை இலட்சம் தடவைகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்ட ஆப்கள் மட்டுமே இதில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.

இவையெல்லாம் குழந்தைகளுக்கான ஆப்ளிகேஷன்கள் என்பது தான் கவனிக்கவேண்டிய விஷயம். குழந்தைகளுக்கு கல்வி, பொழுதுபோக்கு, சிந்தனை திறன் வளர்த்தல் என வசீகரிக்கும் ஆப்களின் நிலை தான் இது என்பது கவலையளிக்கிறது.

ஏற்கனவே கூகிள் நிறுவனம் தனிநபர் தகவல்களை மிகப்பெரிய அளவில் சேகரிக்கிறது எனும் சர்வதேச சர்ச்சை உயிர்ப்புடன் இருக்கிறது. அவர்களுடைய பல்லாயிரம் கோடி ரூபாய் பிஸினசின் அடிப்படையே இப்படி சேகரிக்கும் தகவல்கள் தான்.

பாதுகாப்பு விதி முறைகளை மீறும் ஆப்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூகிள் நிறுவனம் இப்போது உறுதியளித்திருக்கிறது. குழந்தைகள், குடும்பங்கள் இவற்றின் பாதுகாப்பின் மீது எந்த விதமான தளர்வுக்கும் இடமில்லை என அது தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

நமது பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை நம்முடையது. குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்தக் கொடுப்பதை முடிந்தவரை தடை செய்வது நல்லது. முடியாத பட்சத்தில் சில விதிமுறைகளையேனும் வைக்க வேண்டியது அவசியம்.

குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் இருக்கின்றார்கள் எனில், யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் ? என்னென்ன உரையாடல் நடத்துகிறார்கள் என்பதைக் கவனிப்பது அவசியம். எக்காரணம் கொண்டும் தனிப்பட்ட தகவல்களைப் பகிரக் கூடாது. தனிப்பட்ட படங்களையும் பகிரக் கூடாது எனக் கட்டுப்பாடு விதியுங்கள். யாரேனும் வழக்கத்துக்கு மாறாகவோ, தவறாகவோ பேசினால் பெற்றோரிடம் தெரியப்படுத்த வேண்டும் என்பதை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்.

2 லொக்கேஷன் சர்வீஸ், ஜிபிஎஸ் போன்றவற்றை ஆஃப் செய்து வைத்திருக்க வேண்டும். நமது இடத்தை பளிச் எனக் காட்டும் சர்வீஸ்களை தேவைப்படும் போது மட்டும் ஆன் செய்வது உசிதம். செக்யூரிடி செட்டிங் சரியாக இருக்கிறதா என்பதை பெற்றோர் ஊர்ஜிதப்படுத்த வேண்டும். குழந்தைகளின் போன் செயல்பாடுகளைக் கவனிக்கும் ஆப்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

3. குழந்தைகள் ஸ்மார்ட்போனில் பார்க்கும் விஷயங்கள், பகிரும் விஷயங்கள் சரியானவை தானா என்பதைக் கவனிக்க வேண்டும். பாலியல் விஷயங்களைத் தாண்டி வெறுப்பை வளர்க்கும் விஷயங்கள், பிரிவினையை உருவாக்கும் விஷயங்கள், பாகுபாடு உருவாக்கும் விஷயங்கள் போன்றவற்றுக்கும் குழந்தைகளைத் தள்ளியே வையுங்கள். ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகள் மிக விரைவாக மன அழுத்தத்துக்குள் விழுந்து விடுவார்கள் என்கின்றன மருத்துவ ஆய்வுகள்.

4. குழந்தைகள் போன் விளையாட ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அந்த நேரம் தவிர பிற நேரங்களில் டிஜிடல் பொருட்களை அவர்களிடம் கொடுக்கக் கூடாது. பெற்றோரும் குழந்தைகள் இருக்கும் போது போனை கொஞ்சம் ஒதுக்கியே வைக்க வேண்டும். இரவு எட்டு மணிக்கு மேல் எக்காரணம் கொண்டும் போனைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். காலை 10 மணிக்கு மேல் மாலை எட்டு மணிக்குள் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவர்களுக்கு ஒதுக்கலாம்.

5 சமூக வலைத்தளங்கள், ஆப்கள் மூலமாக வருகின்ற ஆபத்துகள் என்னென்ன என்பதை குழந்தைகளுக்கு விளக்கமாகச் சொல்லி விடுங்கள்.

இப்படி சின்னச் சின்ன விஷயங்களில் கவனமாக இருந்தால் பெரிய பெரிய ஆபத்துகளில் விழாமல் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும். விழிப்பாய் இருப்போம், விழாமல் தடுப்போம்.

*

 

திகிலூட்டும் திரும்பிப் பார்த்தல்

couple talking

( வெற்றிமணி – ஜெர்மனி, இதழில் வெளியான கட்டுரை )

அலுவலக காண்டீனில்
சந்தித்துக் கொள்கிறோம்,
தளும்பத் தளும்ப
தேனீர் நிறைத்து
ஒரே மேஜையில் வந்தமர்கிறோம்.

உன்
செல்போனும்,
என்
செல்போனும் கிணுகிணுக்கின்றன.

தொலைபேசியில் யாருடனோ
பேசிப் பேசி
தேனீரை முடித்துவிட்டு
விடைபெற்றுக் கொள்கிறோம்.

இன்னும்
நீடிக்கிறது நம் நட்பு
ஏழு வருடங்களுக்கு முன்பு எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது. இன்றைக்கு நிலமை இன்னும் மோசம் என்பதே உறைக்கும் உண்மையாகும்.

கையில் ஆறாவது விரலைப் போல தான் இன்றைக்கு செல்போன் எல்லோரிடமும் தொங்கிக் கொண்டிருக்கிறது. செல்போனை ஒருவேளை மறந்து வீட்டில் வைத்து விட்டு வந்தால் பார்க்க வேண்டுமே. ஏதோ வாழ்க்கையையே தொலைத்து விட்டதைப் போலப் பதட்டப் படுவார்கள். சட்டென தனிமைத் தீவிலே மாட்டிக் கொண்டது போல பதறித் தவிப்பார்கள்.

செல்போன் வந்த காலத்தில் அது ஒரு அந்தஸ்தின் அடையாளம். இன்றைக்கு அது உணவு, உடை, உறைவிடம், செல்போன் என முதன்மைப் பட்டியலுக்கு முன்னேறி விட்டது. இழப்பது எதுவென்றே தெரியாமல் இந்த செல்போன் எனும் சுருக்குக் கயிறுக்குள் நாம் விரும்பியே சுருக்குப் போட்டுக் கொண்டோம் என்பது தான் வேதனையான விஷயம். காரணம் இப்போது மொபைல் என்பது பேசுவதற்கானது என்பதே பலருக்கும் மறந்து விட்டது. அது இணையத்தை தன்னுள் இறுக்கி ஒரு குட்டிக் கணினியாய் தான் எல்லோரிடமும் இருக்கிறது.

இன்றைக்கு எந்த ஒரு நண்பருடனாவது நேரில் ஒரு மணிநேரம் தொடர்ந்து உரையாட முடியுமா ? நினைத்துப் பாருங்கள். அந்தப் பேச்சுக்கு இடையில் நான்கு எஸ்.எம்.எஸ் கள் வந்து கவனத்தைச் சிதைக்கும். அல்லது ஒரு ரெண்டு போன்கால் வரும். அல்லது ஃபேஸ் புக், வாட்ஸ்அப், டுவிட்டர் என ஏதோ ஒரு ஆப்ளிகேஷன் “ட்வைங்” என மண்டையில் மணியடிக்கும். அல்லது சும்மாவாச்சும் மொபைலில் விரல்கள் எதையோ நோண்டிக்கொண்டிருக்கும். சரிதானே ?  இப்போ சொல்லுங்கள். கடைசியாய் எப்போது மொபைலின் தொந்தரவோ, நினைப்போ இல்லாமல் நண்பருடன் சில மணி நேரங்களைச் சுவாரஸ்யமாய்ச் செலவிட்டீர்கள் ?

இது ஒரு சின்ன டெஸ்ட் தான். ஆனால் நாம் இழப்பது எது என்பதை நமக்குப் புரிய வைக்கிறது இல்லையா ? தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது, தினமும் ஊரில் இருக்கும் அம்மாவிடம் பேசலாம், வீட்டில் நினைத்த நேரத்தில் குழந்தைகளுடன் ஸ்கைப்பலாம் எல்லா வசதிகளும் இருக்கின்றன. அவை ஒரு வகையில் தூரங்களால் பிரிந்தவர்களை இணைக்கிறது. ஆனால் அருகிலேயே இருப்பவர்களை விலக்கியும் வைக்கிறது இல்லையா ?

எப்போது உங்கள் எதிர் தெரு நபரை நேரில் சென்று பார்த்துப் பேசினீர்கள் ? எப்போது உங்கள் உறவினர் ஒருவரை நேரில் போய் பார்த்து “சும்மா பாக்கலாம்ன்னு வந்தேன்” என்றீர்கள் ? கடைசியாக எப்போது உங்கள் பெற்றோரையோ, சகோதர சகோதரிகளையோ நேரில் சென்று சந்தித்தீர்கள் ? நேரிலேயே பார்த்தால் கூட “ஹே… ஐ வில் கால் யூ” என்று சொல்லி விட்டுப் போகும் சந்தர்ப்பங்கள் தானே அதிகம் ? இல்லையா ?

ரயில் ஸ்னேகம் எனும் வார்த்தையே இன்றைக்கு அன்னியமாகிவிட்டதா இல்லையா ? தொலை தூர ரயில் பயணம் என்றால் முன்பெல்லாம் பயணம் முடியும் போது நான்கு புதிய நட்புகள் கிடைக்கும். அந்த நட்பு தொடரவும் செய்யும். அல்லது பயணங்கள் குடும்பத்தினர் சந்தோஷமாய் பேசி மகிழ ஒரு சூழலை அமைத்துக் கொடுக்கும். இப்போது நிலமை என்ன ? மகன் ஒரு புறம் போனில் ஃபேஸ்புக்கில் இருப்பான், மகள் இன்னொரு புறம் எஸ்.எம்.எஸ் ல் சிரிப்பாள், சின்னப் பிள்ளைகள் கேம்ஸ் ல் இருப்பார்கள். அவ்வளவு தான். நள்ளிரவு வரை மொபைலை நோண்டிவிட்டு தூங்கிப் போவார்கள். இணைந்தே இருக்கிறோம், ஆனால் தனித் தனியாக இல்லையா !?

இதனால் குடும்ப உறவுகள் பலவீனப்பட்டிருக்கின்றன என்பதையே ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. 33% மொபைல் பயன்பாட்டாளர்கள் ‘தாம்பத்ய’ உறவை விட அதிகமாய் மொபைலை நேசிக்கிறார்களாம். தென்கொரிய அரசு சமீபத்தில் மாணவர்களிடம் எழுந்துள்ள செல்போன் அடிமைத்தனத்தைக் குறித்துக் கவலைப்பட்டதும், அதற்கான தீர்வுகளை நோக்கி திட்டமிடுவதும் இது ஒரு சர்வதேச பிரச்சினை என்பதைப் புரிய வைக்கிறது.

உடல் ஆரோக்கியத்தைக் கூட இது பாதிக்கிறது. கண்ணுக்கு அதிக அழுத்தம். மனதுக்கு அதிக வேலை. தூக்கம் நிச்சயமாய் குறைகிறது. காரணம் தொடர்ந்து மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்தால் தூக்கத்தைத் தூண்டும் மெலடோனின் எனும் வேதியல் பொருள் உடலில் வெகுவாகக் குறைத்து தூக்கம் வருவதைத் தாமதப்படுத்தும் ! தூக்கம் இல்லாவிட்டால் மன அழுத்தம், வேலையில் சோர்வு, விபத்துகள் என பட்டர்ஃப்ளை தியரி போல விளைவுகள் தொடர்கதையாகும்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 95% மக்கள் தூங்குவதற்கு முன் மொபைலில் இணையத்தில் சுற்றுவதையோ, சமூக வலைத்தளங்கள் மேய்வதையோ, மெசேஜ் அனுப்புவதையோ வழக்கமாகக் கொண்டிருப்பதாய் தெரியவந்தது. 90 சதவீதம் இளசுகள் மொபைலை படுக்கையிலேயே வைத்திருக்கிறார்களாம். ஒரு செல்ல பொம்மை போல !

மொபைலை அதிகம் பயன்படுத்தும் இளசுகளுக்கு செல்போன் அடிக்‌ஷன் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதென்ன மொபைல் அடிக்‌ஷன். நைட்ல எப்போ எழும்பினாலும் உடனே மொபைலை செக் பண்ணுவது, கொஞ்ச நேரம் மெசேஜ், அழைப்புகள் எதுவும் வராவிட்டால் போனில் ஏதாச்சும் பிரச்சினையோ என நினைப்பது, போன் கையில் இல்லாவிட்டால் எதையோ பறிகொடுத்தது போல பரிதவிப்பது, செல்போன் கனெக்‌ஷன் போனால் பதறித் தவிப்பது, குடும்ப உறவுகளுடன் ஆனந்தமாய் இருக்கும் போது கூட செல்போனை நோண்டுவது, வண்டி ஓட்டும்போது கூட மெசேஜ் அனுப்புவது இப்படிப்பட்ட விஷயங்கள் உங்களிடம் இருந்தால் கொஞ்சம் உஷாராகி விடுங்கள் என மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.

சமீபத்தில் மேரிலேன்ட் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி ஒரு மிகப்பெரிய விஷயத்தை நமக்குப் புரிய வைக்கிறது. இதுவரை மனித வாழ்க்கையின் மையமாக அம்மாவோ, அப்பாவோ அல்லது ஏதோ ஒரு உறவோ தான் இருந்து வந்தது. இப்போது அந்த இடத்தை மொபைல் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறது என அது அச்சுறுத்துகிறது. ஒரு புற்று நோய் போல அதன் பாதிப்புகள் குடும்ப உறவுகளை அசைக்கத் துவங்கியிருக்கின்றன.

கடிதத்தைக் கைப்பட எழுதும் பழக்கம் எப்படி காலாவதியாகி, அருங்காட்சியகத்துக்குச் சென்று விட்டதோ, அதே போல நண்பர்களையும், உறவினர்களையும் நேரில் பார்த்துப் பேசும் விஷயம் கூட மருகி மருகி ஏறக்குறைய இல்லாத நிலைக்குச் சென்று விடும் அபாயம் உண்டு. அதை விட்டு தப்பிக்க வேண்டுமெனில் செல்போனை மிக மிகத் தேவையான நேரங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும். தேவையற்ற எஸ்.எம்.எஸ் களைத் தவிர்ப்பது, செல்போனில் இருக்கும் தேவையற்ற ஆப்ஸ்களை அழிப்பது, மற்றவர்களுடன் நேரடியாகப் பேசும்போது செல்போனை அணைத்தோ, சைலன்ட்லோ வைப்பது என பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும் விட முக்கியமானதும், வலிமையானதும் பிறருடன் கொள்ளும் நேரடியான உறவே என்பதை மீண்டும் ஒரு முறை மனதில் எழுதிக் கொள்ளுங்கள். அம்மாவின் கைகளை வருடி விடும் அன்னியோன்யத்தையும், உணர்வு பூர்வமான அன்பையும் ஆயிரம் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்கள் தந்து விட முடியாது என்பதையும் உணர்ந்து கொள்வோம்.

கருவிகளை அடிமையாய் வைத்திருப்போம், கருவிகளுக்கு அடிமையாய் அல்ல !.

சேவியர்

 நன்றி : வெற்றிமணி, ஜெர்மனி.