கவிதை : ஒற்றை மோகம்.


தொட்டு விட விரல்கள்
துடி துடிக்கும்
அருகினில் நீயின்றி
படபடக்கும்
இருவிழி ஓரங்கள்
நீர்துளிர்க்கும்
அதிலும் உன்முகம்
எதிரொளிக்கும்

கனவுக்குள் உன் பிம்பம்
குடை பிடிக்கும்
அதிகாலை போர்வைக்குள்
அடம்பிடிக்கும்
போலியாய் துரத்தினும்
மனம் அதட்டும்
குளியலைறைக் கதவையும்
அதுதிறக்கும்.

நீயின்றி நீயிருப்பாய்
மனம்சிலிர்க்கும்
என்றேனும் பிரிவாயோ
உயிர்வியர்க்கும்
உறவுக்குப் பெயரென்ன
தலைகுழம்பும்
பெயருக்கு தேவையென்ன
உள்வினவும்

எப்போது பூக்கவேண்டும்
செடி அறியும்
தப்பாமல் அதுபூக்கும்
நிலை நிலைக்கும்
இப்போது ஏன்பூத்தாய்
வினா வினவும்
கேள்வியே மூடமடா
மனம் சிரிக்கும்.

அரும்பியதை விரும்பியதை
உயிர் அணைக்கும்
திரும்பியதும் திசையெங்கும்
அனல் அடிக்கும்
உரிமையென உள்நெஞ்சம்
உனை அணைக்கும்
இல்லையென சொல்னால் மெய்
வெந்து தணியும்.

பிடித்திருந்தால் வாக்களிக்கலாமே…

கவிதை : எதிரேறும் மீன்கள்

ஆளில்லாத தீவிலெனில்
இந்த
சில்மிஷம்
இத்தனை சுவையாய்
இருந்திருக்குமா ?

விரலில் வழியும்
தேனுக்கு இருக்கும்
சுவை
தேனில் அமிழ்ந்திருந்தால்
கிடைத்திருக்குமா ?

கவசங்களே
தேவைப்படாத காதல்
இனித்திருக்குமா ?

பின்னிருக்கைப்
பயணங்கள் தரும் பேருந்து,

கிசுகிசுப்புப்
பேச்சுக்களுக்கான
தொலைபேசி நிறுத்தங்கள்

யார் கண்ணிலும்
படாமல்
உன்னை வந்தடையும்,
பின்னிரவில் எழுதப்பட்ட
மோக மின்னலடிக்கும்
கடிதங்கள்,

இவை தானடி
இனிப்பு.
என்று தான் பேசமுடிகிறது.

படகுக் கரையில்
பயந்தபடி அமர்ந்திருக்கும்
மாலையில்.

தமிழிஷில் வாக்களிக்க…