இனியெதுவும் ரகசியமில்லை !

 

Image result for Technology is following

கடந்த வாரம் எங்கள் அலுவலக அதிகாரி ஒருவர் டென்மார்க் சென்றிருந்தார். ஒரு வார கால குறுகிய கால பயணம் என்பதால் அங்குள்ள நண்பர்களிடம் தான் வருகின்ற விஷயத்தைச் சொல்லவில்லை. டென்மார்க் சென்று இறங்கி காரில் ஏறி ஹோட்டல் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அவருடைய டென்மார்க் நண்பர் போன் செய்தார்.

‘என்னப்பா, டென்மார்க் வந்திருக்கே.. சொல்லவேயில்லையே’ என நண்பர் சொல்ல அதிர்ந்து போனார் இவர்.

‘உனக்கு எப்படி தெரியும் ?’ என கேட்க அவர் சிரித்துக் கொண்டே சொன்னார். ‘நீ சொல்லாததை கூகிள் சொல்லிச்சுப்பா… ‘ !

நடந்தது இது தான் !

இணையத்தில் விமான டிக்கெட்டை புக் செய்திருந்தார் அதிகாரி. அந்த டிக்கெட் அப்படியே அவருடைய ஜிமெயிலுக்குச் சென்றது. ஜிமெயிலை வாசித்த கூகிள், அந்த டிக்கெட் டென்மார்க்கிற்கு புக் செய்திருப்பதை குறித்து வைத்துக் கொண்டது. இப்போது அந்த அதிகாரியின் நண்பர் ஒருவர் டென்மார்க்கில் இருப்பதை அது கான்டாக்ட் மூலம் அறிந்து கொண்டது.

விமான நேரம், பயணம் எல்லாமே டிக்கெட் மூலம் கூகிளின் கைவசம் வந்து விட்டது. விமானம் லேன்ட் ஆனதும் அது ஜிபிஎஸ் மூலம் அதிகாரி டென்மார்க் வந்திருப்பதை உறுதி செய்து கொண்டது. உடனே ‘நல்லது செய்கிறேன்’ என நினைத்து அவருடைய நண்பருக்கு அந்த தகவலை ஒரு நட்பு ரீதியில் பகிர்ந்து கொண்டது.

ஜிமெயில் தன்னுடைய பத்து பக்க நீளமான டேர்ம்ஸ் அன்ட் கன்டிஷனில் எல்லாவற்றுக்குமான அனுமதியை நம்மிடம் எழுதி வாங்கி விட்டது என்பது இதான் கசப்பான யதார்த்தம். அதாவது உங்களுடைய மின்னஞ்சலில் வருகின்ற எந்தத் தகவலையும் வாசிக்கின்ற உரிமையை நீங்கள் அதற்கு ஏற்கனவே கொடுத்து விட்டீர்கள். உங்களுடைய ஸ்மார்ட் போனில் நீங்கள் உங்களுடைய ஜிமெயிலை இணைக்கும் போது போனிலுள்ள ஜிபிஎஸ், கான்டாக்ட் தொடங்கி முக்கியமான பல தகவல்கள் அவர்களுக்கு எளிதில் கிடைத்து விடுகின்றன.

தாத்தா பாட்டி கையில் கூட ஸ்மார்ட் போன் சிரிக்கும் காலம் இது. நாம் எப்போது எங்கே இருக்கிறோம் என்பதை அது நமக்குத் தெரியாமலேயே பதிவு செய்து கொண்டே இருக்கிறது. ஒரு ஹோட்டலுக்குப் போனால், நீங்கள் எந்த ஹோட்டலில் இருக்கிறீர்கள் என்பது அதற்குத் தெரியும்.

இன்னும் ஒரு படி மேலே போய் நீங்கள் அந்த ஹோட்டலில் என்ன சாப்பிட்டீர்கள் என்பது வரை கூகிள் கண்டறிந்து கொள்கிறது. அதை வைத்து உங்களுடைய ரசனையை கணிக்கிறது. நீங்கள் அதற்கு முன்பு எங்கே சென்றீர்கள், அதற்குப் பிறகு எங்கே சென்றீர்கள் ? அந்த பயணத்தில் ஏதாவது குறிப்பிடத்தக்க ஒற்றுமை உண்டா என்பதைப் பார்க்கிறது. அதை வைத்து உங்களுடைய வாழ்க்கை முறையை கண்டறிகிறது. போன வருஷம் எத்தனை தடவை ஒரு ஷாப்பிங் மால் சென்றோம் என்பதை நீங்கள் நிச்சயம் மறந்து விடுவீர்கள். ஆனால் கூகிள் நினைவில் வைத்திருக்கும் !

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். நீங்கள், ஒரு திரையரங்கிற்கு ஏதோ ஒரு ஆப் மூலமாகச் சென்று டிக்கெட் புக் செய்கிறீர்கள். அந்த டிக்கெட் பற்றிய விஷயங்கள் கூகிள் சார்ந்த ஏதோ ஒரு தளத்தில் வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். அந்த டிக்கெட்டின் நேரமும், முழு விஷயமும் கூகிள் கண்டுபிடித்து விடுகிறது.

அந்த திரைப்பட நாளில் படம் துவங்கப் போகும் நேரத்தில் நீங்கள் ஒரு கடையிலோ, ஹோட்டலிலோ இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள், உடனே கூகிள் உங்களுடைய இடத்தை பதிவு செய்யும். அந்த இடத்திற்கும் திரையரங்கிற்கும் எத்தனை தூரம் என்பதைக் கண்டறியும். அந்த இடத்தின் சாலை டிராபிக்கை பார்க்கும். எப்போ கிளம்பினால் திரையரங்குக்கு சரியான நேரத்தில் செல்ல முடியும் என்பதை கண்டுபிடிக்கும். உடனே ஒரு அலர்ட் செய்தியை அனுப்பும்.

‘உங்களுடைய படம் இன்னும் 30 நிமிடத்தில் துவங்கும். இப்போது காரில் போனால் சரியாக இருக்கும்’ என செய்தி வரும் ! நீங்கள் வியந்து விடுவீர்கள்

தொடர்ச்சியாக இரவில் ஒரு இடத்தில் தங்குகிறீர்கள். அந்த இடத்தை ‘லொகேஷன்’ மூலம் துல்லியமாய் அறிந்து  கொள்ளும். அது ஹோட்டல் போன்ற பொதுவான இடங்களாக இல்லாதபட்சத்தில் அது உங்களுடைய வீடு என குறித்து வைத்துக் கொள்ளும்.

தினமும் நீங்கள் அலுவலகம் செல்வீர்கள். அந்த இடத்தை அறிந்து கொள்ளும், அது ஒரு அலுவலகம் எனில் அது உங்களுடைய அலுவலகம் என அது புரிந்து கொள்ளும். அலுவலகத்துக்கு நீங்கள் எப்போது செல்வீர்கள், அலுவலகத்திலிருந்து எப்போது வெளியே வருவீர்கள் என அது குறித்து வைத்துக் கொள்ளும். அதற்கு ஏற்ப உங்களை அது அலர்ட் செய்து கொண்டே இருக்கும்.

நீங்கள் கூகிளில் சென்று ஒரு விஷயத்தைத் தேடினால் கூட நீங்கள் எதைத் தேடுகிறீர்கள், ஏன் தேடுகிறீர்கள், தேடியதை வாங்கினீர்களா என பல விஷயங்களை அது பதிவு செய்யும். உங்களுடைய வங்கி எங்கே இருக்கிறது, உங்களுக்கு பிரியமான கடைகள் எங்கே இருக்கின்றன, உங்களுக்குப் பிரியமான திரைப்படம் இது என எல்லா விஷயங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையை விட கூகிள் அதிகமாய் அறிந்து கொள்ளும் என்பது தான் வினோதம்.

இப்படி இணையத்தின் கரம் உங்களை அறியாமல் உங்களின் பின்னால் ஒரு நிழலைப் போல நீண்டு கொண்டே இருக்கிறது. உங்களுக்கென ரகசியம் எதுவும் இருக்கப் போவதில்லை. எல்லாமே பொதுவில் ! இன்னொரு உதாரணம் சொல்கிறேன்,

ஒரு பாரில் நான்கு நண்பர்களோடு அமர்ந்திருக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய போன் இருக்கும் லொக்கேஷனை வைத்து நீங்கள் எந்த பாரில் இருக்கிறீர்கள் என்பதை அது அறிந்து கொள்ளும். பின் உங்கள் போனுக்கு மிக நெருக்கமாக எந்தெந்த போன்கள் இருக்கின்றன என்பதை பார்க்கும். அந்த போன் நம்பர்கள் உங்களுடைய போனில் இருக்கிறதா என்பதை துழாவும். அதை வைத்துக் கொண்டு நீங்கள் எந்த பாரில், யாராருடன், எவ்வளவு நேரம் இருந்தீர்கள் என்பதை அது மிகத் துல்லியமாய் கண்டுபிடிக்கும்! உங்கள் மீது கூகிளுக்குக் கோபம் உண்டென்றால் அந்தத் தகவல்களை அழகாக உங்கள் மனைவிக்கு பேக் செய்து விடவும் செய்யலாம்!

இப்போதைக்கு அப்படி எதுவும் நிகழ்வதில்லை. வியாபாரம், வியாபாரம் ! அது ஒன்றே இவற்றின் தாரக மந்திரம். தகவல்களையெல்லாம் எப்படி கரன்சிகளாக்கலாம் என்பதே இவற்றின் கனவு. ஆனால் வியாபாரம் தாண்டி எதையும் செய்ய மாட்டார்கள் என ஊர்ஜிதப்படுத்தி விடவும் முடியாது. காரணம் உங்கள் ஜிமெயிலில் வருகின்ற அத்தனை விஷயங்களும் அதற்கு அத்துபடி. ஜிமெயிலில் நீங்கள் செய்யும் ரிப்ளைகளும் அதற்கு அத்துபடி. எதையும் டிலீட் செய்துவிட்டேன் என தப்பிக்க முடியாது. எத்தனை காதலியருக்கு நீங்கள் ரகசியக் கடிதம் எழுதினேன் எனும் கணக்கை நீங்கள் மறந்தாலும் அது மறப்பதில்லை.

இத்தகைய தகவல்களை வியாபாரத்துக்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்காகத் தான் பிக்டேட்டா அனலிடிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. மிகப்பெரிய வர்த்தக தளம் அது.

ஆனால், நாளை இந்த விஷயங்கள் எதற்கு வேண்டுமானாலும் பயன்படலாம் எனும் அச்ச உணர்வும்  எழாமலில்லை. உதாரணமாக உங்களுடைய தினசரி பயண அட்டவணையை மிகத்துல்லியமாகத் தெரிந்து கொண்ட ஒருவர் உங்களுடைய வீட்டைக் கொள்ளையிடலாம். நீங்கள் எந்த இடத்தில் எப்போது வருவீர்கள் என தெரிந்து கொண்டு காய் நகர்த்தலாம்.

நீங்கள் அலுவலகத்தில் எவ்வளவு நேரம் இருக்கிறீர்கள் என்பதை அலுவலக வருகைப்பதிவு முறைகள் எதுவும் இல்லாமலேயே புட்டுப் புட்டு வைக்கலாம். உங்களுடைய வேலைக்கு அது அச்சுறுத்தலாய் வரலாம்.

உங்களுடைய பழக்க வழக்கங்களை அப்படியே ஒரு அறிக்கையாக்கி உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு அனுப்பலாம். அல்லது அந்தத் தகவலைக் கையகப்படுத்தும் சமூக விரோதிகள் பிளாக்மெயில் வேலைகளில் இறங்கலாம். இப்படி இதன் மிரட்டல் பயங்கள் நீண்டு கொண்டே இருக்கின்றன.

இப்போது உங்களுடைய கேள்வி என்ன என்பது எனக்குத் தெரியும். “இதுக்கெல்லாம் தீர்வு தான் என்ன ?” என்பது தானே ? கற்காலத்துக்குத் திரும்புவதை விட வேறு எளிய தீர்வு எதுவும் இல்லை. அது சாத்தியமும் இல்லை. எனவே, ஜிபிஎஸ் மொபைல்களை தூக்கிக் கொண்டு திரிவதை முடிந்த அளவு குறைக்கலாம். மற்றபடி, இப்படியெல்லாம் அச்சுறுத்தல்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வதும், அதற்குத் தக்கபடி நமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதுமே மிக மிகத் தேவையானது.

*

Thanks : Daily Thanthi

21/Aug/2017

சிறுகதை : ரகசியம்

மார்த்தாண்டம் காவல் நிலையம் திடீர்ப் பரபரப்புக்குள் விழுந்தது. செய்தியைக் கேட்டதும் இன்ஸ்பெக்டர் கனகராஜ் திடீரென நிமிர்ந்து உட்கார்ந்தார். எதிரே உட்கார்ந்திருந்த நபருக்கு ஒல்லியான தேகம். லுங்கி, சட்டையுடன் அக்மார்க் கிராமத்து வாசம். மார்த்தாண்டத்தைச் சுற்றியிருப்பவை எல்லாமே கிராமங்கள் என்பதால் அந்தப் பகுதிகளிலிருந்து மார்த்தாண்டம் வருபவர்கள் லுங்கி, சட்டையுடன் வருவது சர்வ சாதாரணம்.

இன்னொரு தடவை தெளிவா சொல்லுங்க. கனகராஜ் நெற்றியைச் சுருக்கி அவரை உற்றுப் பார்த்துக் கேட்டார்.

நான் அப்பாவு நாடார் கடையில இருந்து ஒரு துணி வாங்கிட்டு வெளியே வந்தேன். அப்போ ரெண்டு பேரு செல்போன்ல பேசிட்டிருந்தாங்க. அவங்க சொன்னது இது தான். “பார்ட்டி கிட்டே நூறு கோடி கேட்டிருக்கேன். அதுல அம்பது சி பிளாக்கா வரும். மிச்சம் ஒயிட்டா வரும். ஐட்டத்தை பார்ட்டிகிட்டே குடுத்துடணும். ஜெர்மன் பார்ட்டி. விஷயம் வெளியே தெரியவே கூடாது”. இதாங்க அவங்க பேசிகிட்டிருந்தது.

ரெண்டு பேரும் எப்படி இருந்தாங்க ?

பேன்ட் சட்டை போட்டிருந்தாங்க. ஒருத்தரைப் பாத்தா வெளியூரு மாதிரி இருந்துது. அப்பாவு நாடார் கடைக்கு மேலே இருக்கில்லியா ஒரு லாட்ஜ், அதுல தான் தங்கியிருக்காங்கன்னு நெனக்கிதேன்.

ஏன் அப்படி நினைக்கிறீங்க.

போன் பண்ணி முடிச்சதும் ரெண்டு பேரும் பேசிகிட்டாங்க. ஐட்டம்ஸ் எல்லாம் ரூம்ல இருக்கு. பூட்டிட்டியா ? ன்னு ஒருத்தன் கேட்டான். அதுக்கு, மற்றவன் சொன்னான். மத்த ரெண்டு பேரும் மேல தான் இருக்காங்கன்னு. அப்படி பாத்தா நாலுபேரு இருப்பாங்கன்னு நெனக்கிதேன்.

ம்…. கனகராஜ் நெற்றியைச் சுருக்கிக் கொண்டே, அருகில் நின்றிருந்த ஏட்டு புஷ்பராஜைப் பார்த்தார்.

நீரு மஃப்டில போய் அந்த லாட்ஜ்ல தங்கியிருக்கிறவங்களோட லிஸ்டை எல்லாம் வாங்கிட்டு வாரும். விஷயம் வெளியே தெரியாண்டாம். லாட்ஜ் பக்கத்துல தானே இருக்கு. இவங்க யாரு, இவங்களோட நோக்கம் என்னன்னு கண்டு பிடிக்கணும். விஷயம் கொஞ்சம் சீரியஸ் போல தான் தெரியுது. நான் எதுக்கும் டிப்பார்ட்மென்ட் க்கு விஷயத்தை சொல்லிடறேன்.

சரி சார். ரூம்ல ரெண்டு பேரு இருக்காங்கன்னா இப்பவே போய் அமுக்கிடலாமா ?

வேண்டாம். என்ன வெச்சிருக்காங்கன்னு தெரியாது. வெடிகுண்டு மாதிரி சமாச்சாரமா ? நாம போனா வெடிக்க வெப்பாங்களா ன்னு ஒரு எழவும் தெரியாது. தங்கியிருக்கிறவங்க டீட்டெயில்ஸ் வாங்குங்க நேரம் அஞ்சு மணி ஆக போவுதுல்லியா. இதுக்கு மேல ரூமை காலி பண்ண மாட்டாங்கன்னு நெனக்கிறேன். அந்த லாட்ஜ் ஓணர் பேரென்னது ?

அது அப்பாவுவோட மருமவன் சசி நடத்தற லாட்ஜ்.

ஓ, அவனா. அவந்தான் இன்னும் நடத்தறானா ?

ஆமா. பண்டே அவன் தான். ஆளு மாறல.

அப்போ பிரச்சினை இல்லை. யாராச்சும் இன்னிக்கு ரூமை காலி பண்ணினா உடனே நமக்கு தகவல் தர சொல்லு. அவனை இந்த விஷயம் எல்லாம் சொல்லி பயமுறுத்தாதே. ஒரு சின்ன சந்தேக கேசுன்னு மட்டும் சொல்லு.

சரி சார். உடனே போய் விசாரிக்கிறேன்.

டிரஸ்ஸை மாத்திட்டு போவும் ஓய்… உம்ம கிட்ட ஒரு விஷயம் சொன்னா ஒழுங்கா செய்றீரா…

இதோ.. மாத்திடறேன் சார்.

கனகராஜ் திரும்பி போனை எடுத்தார். எண்களைச் சுழற்றி விட்டுக் காத்திருந்தார். மறுமுனையில் உயர் அதிகாரியாய் இருக்க வேண்டும். கனகராஜ் தொண்டையைக் கனைத்து விட்டுக் காத்திருந்தார்.

ஐயா.. ஒரு இன்ஃபர்மேஷன். கனகராஜ் முழுசாய் மூன்று நிமிட நேரங்கள் எடுத்துக் கொண்டு எல்லாவற்றையும் விளக்கினார்.

“…”

எனக்கு தெளிவா தெரியலீங்கய்யா. சவுத்தை குறி வெச்சு ஏதாச்சும் பாம்ப் வைக்கிறாங்களாங்கறது ஒரு சந்தேகம். அப்படின்னா அது ரொம்ப டேஞ்சர், ஏன்னா இந்த ஏரியா மக்கள் அதை எப்பவுமே எதிர்பார்க்க மாட்டாங்க. ஒருவேளை கடத்தல் விஷயமா இருக்கலாம். அப்படின்னா ஒரு பெரிய நெட்வர்க்கை நாம புடிக்க முடியும்ன்னு நினைக்கிறேன். கேரளாவுக்குக் கடத்தற விஷயமா கூட இருக்கலாம். அதனால தான் இந்த பார்டர் ஏரியாவான மார்த்தாண்டத்தை சூஸ் பண்ணியிருக்கலாம்.

“…”

ஆமாங்கய்யா… ஜெர்மன் பார்ட்டி இன்வால்வ் ஆகி இருக்கிறதனால தான் விஷயம் சீரியஸா இருக்கும்ன்னு ஒரு பயம் இருக்கு. அது வேற நூறு கோடி டீல் ங்கறது கொஞ்சம் ஷாக்கிங் விஷயம்.

“…”

இந்த ஊர் மக்கள் எல்லாம் வெகுளிங்கங்கறதனால கூட பப்ளிக்ல பேசியிருக்கலாமில்லையா. அதனால நாம விஷயத்தை கொஞ்சம் சீரியஸா தான் டீல் பண்ணணும்ன்னு நெனக்கிறேன்.

“…”

சரி சார். காலைல ரெண்டு மணிக்கு நான் பண்றேன். களியக்காவிளை, கொல்லங்கோடு அப்புறம் தக்கலை, மூணு ஸ்டேஷன்ல இருந்தும் ஆட்களை கூப்பிடறேன் சார். உங்களுக்கு ஆபரேஷன் முடிஞ்சதும் தகவல் சொல்றேன்.

கனகராஜ் போனை வைத்து விட்டு நிமிர எதிரே அந்த தகவல் கொண்டு வந்த நபர் திகிலோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

“ஓ… நீங்க இன்னும் போகலையா.. சரி சரி, இங்க பேசின விஷயங்களையெல்லாம் யார் கிட்டேயும் சொல்லாதீங்க. பேசாம வீட்ல போய் ரெஸ்ட் எடுங்க. ஸ்டேஷன்ல பேசிக்கிட்ட விஷயங்களையெல்லாம் மறந்துடுங்க.”

சரிங்கய்யா.. என்று எழுந்தவரின் தோளைத் தொட்டார் கனகராஜ். “ரொம்ப நன்றி. ஒரு சந்தேகம் வந்ததும் போலீஸ் கிட்டே வந்தீங்க பாருங்க, அது தான் ஒவ்வொருத்தருக்கும் இருக்க வேண்டிய குணம். தாங்க்ஸ்”.

கேட்டவர் வாயெல்லாம் பல்லாக சிரித்துக் கொண்டே விடைபெற்றார்.

அதன்பின் ஒரு ஹாலிவுட் திரைப்படக் காட்சிகள் போல பரபரவென விஷயங்கள் நடந்தேறின. லாட்ஜில் தங்கியிருந்தவர்கள் நான்குபேர் என்றும் அவர்களுடைய பெயர் முதலான விஷயங்களும் லாட்ஜ் மேனேஜரிடமிருந்து வாங்கப்பட்டது. ஒருவேளை பொய்த்தகவலாய்க் கூட இருக்கலாம் எனும் முன்னுரையோடு. நள்ளிரவில் அந்தப் பக்கமான டிராபிக் கொஞ்சம் வழிமாற்றி காளை சந்தை பக்கமாய்  விடப்பட்டது. அவர்கள் தங்கியிருந்த ரூம் நம்பர் 207.

சர்வ ஜாக்கிரதையாக அவர்களைப் பிடிக்கும் காட்சி காலை இரண்டு மணிக்கு நடந்தது. அறையின் கதவைத் தட்ட, தூக்கத்தில் வந்து திறந்தவருடைய லுங்கி வழுக்கியது. மற்ற மூன்று பேரும் ஆழ்ந்த உறக்கத்தில் ஒழுங்கில்லாமல் கிடந்தார்கள்.

சார்..நீங்க… என்று அவர் பேசி முடிக்கும் முன், நான்கைந்து போலீஸ்காரர்கள் உள்ளே புகுந்து அவர்களைக் கோழி அமுக்குவது போல அமுக்கினார்கள். அவர்கள் நான்கு பேரையும் அள்ளிக் கொண்டு ஸ்டேஷனில் போட, மற்ற போலீஸ்காரர்கள் அறையை தங்கம் தேடும் தட்டானைப் போல துழாவினார்கள். கிடைத்தவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு அறையைப் பூட்டி, மேனேஜருக்கு நன்றி சொல்லி வெளியேறினார்கள்.

மார்த்தாண்டம் காவல் நிலையம் அந்த அதிகாலை மூன்று மணி வேளையில் பரபரப்பானது.

கனகராஜ் முகத்தில் ஒரு பெரிய நிம்மதி. ஆட்களைப் பிடித்தாயிற்று. இருவருடைய அடையாளங்கள் காலையில் சொன்னவருடைய வாக்குமூலத்தோடு பொருந்திப் போய்விட்டது !

ஓரமாய் அமர்ந்திருந்த ஒருவரை கனகராஜ் உற்றுப் பார்த்தார்.

வாய்யா இங்கே…

ஐயா…

என்னய்யா பண்ணிட்டிருக்கீங்க இங்கே ?

ஐயா.. அது வந்து…

ஓங்கி மிதிச்சேன்னா வரமாட்டே.. ஒரேயடியே போயிடுவே. என்னய்யா பண்றீங்க ?

ஐயா.. ஒரு பிஸினஸ் பண்றோம்…

என்ன பிஸினஸ் ? உங்களைப் பாத்தா டீ குடிக்க காசு இல்லாதவங்களா தெரியுது, நீங்க பிஸினஸ் பண்றீங்களா ? அப்படி என்ன பிஸினஸ்.

ஐயா… அது…

அதைத் தான் கேக்கறேன். நூறு கோடி ரூபா பிஸினஸாமே ! அதுல அம்பது உங்களுக்கு பிளாக்ல வருமாமே !

ஐயா.. இதெல்லாம் உங்களுக்கு ?

யோவ் .. போலீஸ்காரன் என்ன பூப் பறிக்க போயிருக்கான்னு நினைச்சீங்களா ? சிட்டிக்குள்ள ஒரு சின்ன காக்கா ஆய் போனா கூட அது போலீஸ்காரன் மூக்குல நாறும்யா… நீ என்னடான்னா ஜெர்மன் காரன் கூட பிஸினஸ் பண்றதை நான் கண்டுபிடிக்க மாட்டேன்னு நினைக்கிறே ? கனகராஜ் இருக்கையிலிருந்து எழுந்து சினிமாவில் வரும் போலீஸ்காரர் போல மேஜையின் நுனியில் வந்து அமர்ந்தார்.

பிஸினஸ் பேசிட்டிருக்கோம்யா.. இன்னும் முடியல.

நீங்க தீவிரவாத கும்பலுக்குக் கையாள்களா ? இல்லை கடத்தல் வேலை பண்றீங்களா ? கஞ்சா, அபின் மாதிரி ?

ஐயோ.. நாங்க அப்படியெல்லாம் இல்லைய்யா… இது வேற பிஸினஸ்.

ஏட்டு.. அவங்களோட பையை எல்லாம் பாருய்யா.. ஏதாச்சும் டீட்டெயில்ஸ், போன் நம்பர், துப்பாக்கி ஏதாச்சும் இருக்கா பாரு. கேர்புஃல்…. ரிமோட், போன் சமாச்சாரங்கள் ஏதாச்சும் இருந்தா அமுக்கிடாதே.சொல்லி விட்டுத் திரும்பினார் கனகராஜ்.

என்ன விஷயம்ங்கற உண்மையை நீங்க என் கிட்டே சொன்னா உங்களோட உடம்பு தப்பும். காலைல ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம் வருது. அவங்க வந்தா நொங்கெடுத்துருவாங்கடே. நொங்கெடுக்கிறதுன்னா தெரியும்ல..

ஐயா.. சொல்லிடறேன்.. உண்மையை எல்லாம் சொல்லிடறேன். பம்மியமடி நின்றிருந்தவன் திகிலுடன் சொல்லத் தொடங்கியபோது ஏட்டு கூப்பிட்டார்.

சார்… பைல எல்லாம் ஒண்ணுமே இல்லை. வெறும் பேப்பர். அதுவும் அழுக்கடஞ்ச பத்திரம் போல பேப்பர்கள். கிழிஞ்சு போன ரூபா நோட்டு. கொஞ்சம் காயின்ஸ்.. அப்புறம் ஏதோ தகடு எல்லாம் இருக்கு.

கனகராஜ் குழப்பத்துடன் முன்னால் நின்றிருந்தவனைப் பார்த்தார். அவன் தொடர்ந்தான்.

ஐயா.. நாங்க நாலுபேரும் பண்ற பிஸினஸ் இது தான் சார். இதுல இருக்கிறதெல்லாம் வெறும் பேப்பர் இல்லை. இதுக்கு தான் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு இருக்கு !

பல ஆயிரம் கோடியா ?

ஆமாங்கய்யா… கிழிஞ்ச நோட்டுக்கா ?

ஒவ்வொரு நோட்டும் ஒவ்வொரு ரேட் போகும் சார். இப்போ ஐஞ்சு ரூபா நோட்டுல அஞ்சு மயில் இருக்கிற மாதிரி படம் இருந்தா ஐம்பது லட்சம் வரைப் போவும். காயின் எல்லாம் ரொம்ப ரேட். ஒவ்வொரு காயினும் ஒவ்வொரு ரேட். அதுல இருக்கிற தகடு இரிடியம் தகடு சார். அது ரேட்டே தனி. ஒரு சதுர இஞ்ச் க்கு இரண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் விலை.

அவன் சொல்லிக் கொண்டே போக கனகராஜ் சிரித்தார். முன்னால் நிற்பவர்களுக்கு ஒருவேளை மூளை கலங்கியிருச்சோ என்று யோசித்தார். அப்போது ஓரமாய் இருந்த இன்னொருவர் பேசினார்.

ஆமாங்கய்யா.. நாங்க தீவிரவாதிங்க எல்லாம் இல்லை. இப்படிப் பட்ட ஸ்பெஷல் ஐட்டங்களையெல்லாம் ஜெர்மன் பார்ட்டிக்கு விக்கிறவங்க.

ஓ.. உனக்கு ஜெர்மன் மொழி தெரியுமா ? எப்படிப் பேசுவே அவன் கிட்டே ? – கனகராஜின் குரலில் இப்போது நக்கல்.

அதுக்கு வேற பார்ட்டி இருக்கு சார். அவன் வந்து டெஸ்ட் பண்ணி, சரியான பொருளுன்னா நமக்கு பணம் தருவான். சின்ன பிஸினஸ் னா நூறு கோடி… பெருசுன்னா ஆளுக்கு அம்பதாயிரம் கோடி வரை கூட வரும். ஏன்னா பெரிய இரிடியம் தகடுக்கு இரண்டரை இலட்சம் கோடி ரூபாய் வரை உண்டு.

காலங்காத்தால தூக்கத்தைக் கெடுத்துட்டாங்களே இந்தக் கபோதிங்க என்று மனசுக்குள் திட்டிக் கொண்டே என்ன செய்வதென்று சுற்று முற்றும் பார்த்தார் கனகராஜ். ஒருவேளை இவர்கள் நடிக்கிறார்களோ ? நம்ம கவனத்தைத் திசைதிருப்ப நடிக்கிறார்களோ ? என்ற யோசனை தாக்க, மீண்டும் தனது மிடுக்கை கண்களில் கொண்டு வந்து “ம்ம்.. சொல்லு… சொல்லு.. வேற பார்ட்டின்னு சொன்னியே அவன் எங்கே இருக்கான் ? ”

அவன் கொடைக்கானல்ல இருக்கான் சார்.

அவன் தான் டெஸ்ட் பண்ணுவானா ? அவன் என்ன லேப் வெச்சிருக்கானா ?

அவன் டெஸ்ட் பண்ண மாட்டான் சார். அவன் டெஸ்ட் பண்ண வேண்டிய ஆளைக் கூட்டி வருவான். அவங்க தான் டெஸ்டிங் பொருட்களோட வருவாங்க.

பொருட்களா ?

ஆமா சார்… ஒவ்வொரு டெஸ்டுக்கும் ஒவ்வொரு பொருள் சார். இப்போ பாருங்க, இரிடியம் இருக்குன்னு வெச்சுக்கோங்க. அதுக்கு ரெண்டு மூணு டெஸ்ட் இருக்கு. ஃபஸ்ட் ஃப்ளேம் டெஸ்ட்… தீயில பண்றது. ஒரு இரிடியம் தகடை வெச்சு அதுக்குப் பக்கத்துல ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வைக்கணும். அப்போ அந்த வெளிச்சத்தை அப்படியே இந்த இரிடியம் இழுத்து எடுக்கும் சார். அப்படி புல்லா இழுத்துப் புடிச்சா அது நல்ல தரம். நாகேஷைப் போலவே எக்ஸ்ப்ரஷனுடன் சொன்னான் அவன்.

ஓ.. அப்படி இழுத்துச்சுன்னா உங்களுக்கு இரண்டாயிரம் கோடி கிடைக்கும்.. அப்படித் தானே ? கனகராஜ் சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டார்.

அது ஒரு டெஸ்ட் தான் சார். ரெண்டாவது டெஸ்ட் ரைஸ் புல்லிங். அதுக்குப் பக்கத்துல அரிசியை வெச்சா, அரிசியை அது இழுத்து எடுக்கும். சில சமயம் நெல்லைக் கூட இழுத்து எடுக்கும். இது ரைஸ் புல்லிங் டெஸ்ட் சார்.

ஓ… வேற…

தண்ணில கொஞ்சம் நீலம் கலக்கி, இந்த தகடை அதுல தொடணும். நீலம் அப்படியே தண்ணில இருந்து பிரிச்சு தூரமா நிக்கும். தண்ணி நடுவுலயும், நீலம் சைட்லயும் நிக்கும். அது தான் கலர் டெஸ்ட். இன்னொரு டெஸ்டும் இருக்கு. அது ரொம்ப பெரிய டெஸ்ட். அது ஆனா காயின்ல உள்ள டெஸ்ட். 1947 ல இந்தியன் கவர்மென்ட் அஞ்சு காயின் போட்டுது. அதில ஒரு காயின் மட்டும் தான் இப்போ இந்தியால உண்டு. அதோட வெல இரண்டு லட்சம் கோடி ரூபா. அதை டெஸ்ட் பண்றது தான் ரொம்ப பெரிய கஷ்டம்.

ஓ.. ரெண்டு லெட்சம் கோடி ! டூ ஜீ யை விடப் பெரிசு. நம்ம நாட்டு பட்ஜெட் எவ்ளோன்னு தெரியுமா ? அவ்ளோ வெலையுள்ள காயின் ஏன் இந்தியன் கவர்மென்ட் இப்போ போடமாட்டேங்குது ? சிரிப்பை அடக்கிக் கொண்டு கனகராஜ் தொடர்ந்தார்.. ம்ம்ம் சரி சரி.. சொல்லு அதை எப்படி டெஸ்ட் பண்ணுவாங்க ?

அதை ஒரு கப்பல்ல கொண்டு போய் நடுக்கடல்ல வெச்சு தான் டெஸ்ட் பண்ணுவாங்க. எப்படி டெஸ்ட் பண்ணுவாங்கன்னு தெரியல. ஆனா, பெரிய பவர்புல் காயின் அது. ஏன்னா அதோட பவர்னால வானத்துல போற பிளேனையே இழுத்துத் தரையில தள்ளிப் போடும்.

யோவ்.. போதும்யா.. நிறுத்து… லூசு மாதிரி பேசாதே. அப்படி ஒரு காயின் இருந்தா ஆர்மிக்கு அது போதுமே. கவர்மென்ட் சிம்பிளா நாலு காயின் அடிச்சு வித்து அரசாங்கத்தை ஒட்டிடுமே. இதெல்லாம் உங்களுக்கு யாருய்யா சொன்னது ?

பார்ட்டி கேப்பான் சார், நாங்க தேடி புடிப்போம்.

இதுவரை எத்தனை பிஸினஸ் பண்ணியிருக்கீங்க ?

மூணு முடிஞ்சிருக்கு. ஆளுக்கு முன்னூறு கோடி கிடைச்சிருக்கு.

வாட்… 300 கோடி சொத்து இருக்கா உங்க கிட்டே. இப்போது கனகராஜ் முகத்தில் வியப்பு !

கைல பணம் வரல. பிஸினஸ் முடிஞ்சிருக்கு. நாங்க நாலு பேரும் பல வருஷமா இதைத் தான் பண்றோம். ஒரு அமௌண்ட் வந்தா போதும் செட்டில் ஆயிடுவோம். இன்னும் கைக்கு பணம் வரல. இனிமே தான் அவன் பேங்க்ல போடுவான். கவர்மென்ட் ஏதோ தடுத்து வெச்சிருக்காம். ஜெர்மன் பணம் இல்லையா. அதான்.

இப்போது கனகராஜ் இரண்டு கைகளாலும் முகத்தைப் பொத்திக் கொண்டார். ஐயோ..ஐயோ.. என்று மனசு சொன்னது. வெளியே மெல்ல மெல்ல விடியத் துவங்கியிருந்தது.

சரி.. எல்லாரும் ஓரமா போய் நில்லுங்க. உங்க வீட்ல போன்பண்ணி எல்லாரோட பொண்டாட்டிகளையும் உடனே இங்கே வரச் சொல்லுங்க. ஏட்டய்யா.. இவங்களோட செல்போன்ல இருக்கிற புல் டீட்டெயில்ஸ் எடுத்துக்கோங்க. சைபர் கிரைம் கிட்டே பேசி இவங்க நம்பர்ல இருந்து போற வர கால் டீட்டெயில்ஸ் வேணும்ன்னு கேளுங்க.

விடிவதற்கு முன்பாகவே அவர்களுடைய பொண்டாட்டிகள் ஒவ்வொருவராக அலறி அடித்துக் கொண்டு ஸ்டேஷன் வாசலில் வந்தார்கள்.

ஐயா… என் புருஷன் பாவம்யா. அவன் ஒரு லூசு. பத்து வருஷமா தெரவியம் கொண்டு வரேன், மைரு கொண்டு வாரேன்னு ஒரு வேலையும் செய்யாம அங்கே இங்கே ஓடிட்டிருக்கான். அவனோட சாய குடிக்கு நான் தான் பைசா குடுக்கிறேன். எப்ப பாத்தாலும் யாருகூடயாச்சும் பேசிகிட்டு, பழைய நோட்டையெல்லாம் நோண்டிட்டே இருப்பாருங்க.

ஐயா.. வாழ்க்கையையே பாழாக்கிட்டான். கூலி வேலைக்குப் போனா கூட கஞ்சி குடிக்க காசு கிடைக்கும். இவன் ஊருபுல்லா சுற்றி இருக்கிற பணத்தையெல்லாம் அழிச்சுட்டான். பிள்ளைங்களைப் படிக்க வெக்க நான் செங்கல் சூளைக்கு போயிட்டிருக்கேன். ஏதோ கிரீன் கார்ட் குடுப்பாங்களாம், ரேஷன் வாங்கவே வக்கில்ல… இடுப்புச் சேலையை உருவி மூக்கைத் துடைத்தாள் இன்னொருத்தி.

எப்ப பாத்தாலும் ” ஏம்பா.. அந்த ஆயிரம் சி.ஆர் வந்துச்சா ? என்ன நூறு சி.ஆர் ஆ ? நூறு சி.ஆர்னா வேண்டாம். ஆளுக்கு ஆயிரம் சி.ஆர் ஆவது வேணும்” ன்னு பேசிகிட்டே இருப்பாரு என் புருஷன். சி.ஆர் னா கோடியாம். கோடிக்கு எத்தனை சைபருன்னு தெரியாது. எத்தனை சைபரைப் போட்டாலும் கோடி வராதுன்னும் தெரியாது. வரவன் போறவன் கிட்டேயெல்லாம் “நான் உனக்கு நாலு கோடி தரேன்”, ” எல்.ஐ.சி யை விலைக்கு வாங்கலாமா” – இப்படியே பேசிட்டு திரிவாருங்க…

வந்தவர்கள் ஆளாளுக்கு கரிச்சுக் கொட்டிக்கொண்டிருக்கும் போதே போன் அடித்தது. கனகராஜ் எடுத்தார்.

ஐயா… உங்களை தூக்கத்துல எழுப்ப  வேண்டாமுன்னு தான் பாத்தேன். விஷயம் சப்ப மேட்டர். போன வருஷம் கோயில் கலசத்துல இருக்கிற செம்புக் குடம் மேல இடிவுழுந்து செம்பு குடம் இடிரியம் ஆயிடுச்சு, பத்தாயிரம் கோடி ரூபா போவும்ன்னு ஒரு கும்பல் சண்டை போட்டாங்க இல்லையா ? கொல்லங்கோடு ஸ்டேஷன்ல நடந்துதே… அது மாதிரி ஒரு மேட்டர். சும்மா இரிடியம் விக்கிறேன், காயின் விக்கிறேன், கிழிஞ்ச நோட்டு விக்கறேன்னு கிளம்பற பார்ட்டி. வீட்ல இருந்து பொண்டாட்டிங்க வந்திருக்காங்க. ஸ்டேட்மென்ட் வாங்கிட்டிருக்கேன்.

“…..”

ஆமாங்கய்யா.. அதெல்லாம் பாக்காம இருப்பேனா. அவங்க கிளீன் பார்ட்டி தான். கொஞ்சம் லூசு. தமிழ்நாடு புல்லா இதை மாதிரி ஆயிரக்கணக்கான மக்கள் இருக்காங்க. அடுத்த வாரம் பணம் வருது, பார்ட்டி வருது ன்னு சொல்லிச் சொல்லியே ஏமாத்திட்டு திரிய வேண்டியது. கைல இருக்கிற கொஞ்ச நஞ்ச காசையும் கோட்டை விட்டுட்டு நாளைக்கு யானை கிடைக்கும்ன்னு ஏமாத்திட்டு இருக்க வேண்டியது. இது பாவப்பட்ட மக்களோட வாழ்க்கையையே ஸ்பாயில் ஆக்கிடுது சார்.

“…”

எஸ்..சார். வார்ன் பண்ணி வுடறேன். டீட்டெயில்ஸ் வாங்கி வைக்கிறேன். வாரம் ஒரு தடவை ஸ்டேஷன் வந்து பாக்க சொல்றேன். பார்ட்டி பார்ட்டி ன்னு சொல்ற ஆட்களோட டீட்டெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டிருக்கேன். இந்த நெட்வர்க்கை அழிக்கணும். இல்லேன்னா ஒரு சைலன்ட் கில்லர் மாதிரி மக்களை இது ஏமாத்தியே அழிச்சுடும் சார்.

பேசிவிட்டு போனை வைத்த கனகராஜ் திரும்பினார். உங்களையெல்லாம் உள்ளே தள்ளி நாலு வருஷம் ஜெயில்ல போட்டா தான்யா நீங்க எல்லாம் திருந்துவீங்க. பத்து வருஷமா கூட்டம் சேர்ந்து கோடி புடிக்க நடக்கறீங்க. இந்த உழைப்பை வேற எதுலயாச்சும் காட்டியிருக்கலாம்ல. எல்லாரும் சேர்ந்து ஒரு மீன் கடை போட்டா கூட இன்னிக்கு கோடி சம்பாதிச்சிருக்கலாமேய்யா. இவ்ளோ தீவிரமா இருக்கீங்க, இவ்ளோ ராத்திரி பகல் பாராம அலையறீங்க ஒரு சின்ன தள்ளுவண்டி வெச்சிருந்தா கூட பத்து வருஷத்துல ஒரு பெரிய மார்க்கெட் வெச்சிருக்கலாம்ல… அதையெல்லாம் விட்டுட்டு லாட்டரி அடிக்கும்ன்னு ஓடறீங்களே. இதெல்லாம் பித்தலாட்டம். போலீஸ்காரன் நான் சொல்றேன். இது எல்லாமே செட்டப். இதோட ஃபுல் டீட்டெயில்ஸும் எனக்குத் தெரியும். நெல்லை வேக வெச்சு அதுக்குள்ள இரும்பு துகள் வெச்சு அப்புறம் அதை அரிசியாக்கி ரைஸ் புல்லிங் பண்றது வரை எல்லாம் எனக்குத் தெரியும். அதனாலதான் சொல்றேன். இதையெல்லாம் விட்டுடுங்க… குடும்பத்தைக் கவனிங்கய்யா.

கனகராஜ் நாயகன் பட கமல் மாதிரி அட்வைஸ் செய்ய அந்த நான்கு பேரும் அசையாமல் நின்றார்கள்.

இப்பவாச்சும் வாயைத் தொறந்து சரின்னு செல்லுங்க.. கொறஞ்சு போயிட மாட்டீங்க – மனைவிகள் எரிச்சல் பட்டார்கள்.

“ஐயா.. இனி ஜென்மத்துக்கும் இந்த பிஸினஸ்ல போக மாட்டோம்” என சத்தியம் பண்ணிச் சொன்ன பிறகு போலீஸ் பார்மாலிடி ஸ்டேட்மென்ட், அது இது என நேரம் மத்தியானம் ஆனது.

சரி, போங்க. சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கில்லியா ? இதெல்லாம் சட்ட விரோதச் செயல். வாரத்துக்கு ஒருவாட்டி இங்கே வந்து நீங்க ஒழுங்கா இருக்கீங்கன்னு சொல்லிட்டு போகணும், இல்லேன்னா வீட்ல பொண்டாட்டிங்க நிம்மதியா இருக்க முடியாது. எல்லாம் ஜெயில்ல கிடக்க வேண்டி வரும் – கனகராஜ் எச்சரித்தார்.

சார், அந்த பை எல்லாம்….

அதெல்லாம் இங்கேயே கெடக்கட்டும். அது கைல இருந்தா உங்களுக்கு மறுபடியும் புத்தி முருங்க மரம் ஏறும். கிளம்புங்க ! இரவு முழுவதும் கண்விழித்திருந்து பயந்து பதட்டப்பட்ட விஷயம் சிம்பிளாக முடிந்து விட்டதில் கனகராஜுக்கு சோர்வும், மகிழ்ச்சியும் ஒரு சேர எழுந்தது. ஏழை மக்களை எப்படியெல்லாம் பகடைக் காயா பயன்படுத்தறாங்க சுயநலவாதிங்க.. என்று கவலையுடன் சொல்லிக் கொண்டார்.

அந்த நான்குபேரும் மார்த்தாண்டம் சந்திப்பில் இருந்த அந்த சின்ன ஹோட்டலில் ஏறி அமர்ந்தார்கள். முபாரக் ஹோட்டல். ராத்திரி முழுக்க மிரண்ட அனுபவத்தில் இப்போது கொலைப் பசி எடுத்தது.

தோச குடுங்க – சொல்லிக்கொண்டே கண்ணைக் கசக்கினார் ஒருவர். எல்லாம் போச்சு. இவ்ளோ வருஷம் கஷ்டப்பட்டதுக்கு பலன் இல்லாம போச்சு. இன்னிக்கு பிஸினஸ் முடிஞ்சிருக்கும். ஒரு நூறு சி.ஆர் ஆச்சும் கிடைச்சிருக்கும். என்ன செய்றது இப்போ ? சாதனம் எல்லாம் அவன் கிட்டே இல்லியா இருக்கு ! இனிமே அது கிட்டுமான்னு தெரியல.

ஒரு ஐடியா சொல்லவா ?

சொல்லுடே

மெட்ராஸ்ல ஆவடின்னு ஒரு இடத்துல மண்ணுளிப் பாம்பு இருக்காம். நாலரை கிலோ வெயிட் இருந்தா அதுக்கு அம்பது சி.ஆர் வரை கிடைக்குமாம். அதுல ஒண்ணு கிடைக்குமா பாக்கலாமா ? பார்ட்டி ரெடியா இருக்கு. பேசிக்கொண்டிருந்தபோது சுடச் சுட தோசை வந்தது !