பேட்ட விமர்சனம்

Image result for petta

கெட்ட பயலா இருந்த காளி, பேட்ட பயலா உருமாறிய படம் பேட்ட !

ரஜினி படத்துக்கு கதை கேக்கறதும், சூரியனுக்கு நிலக்கரியை ஏற்றுமதி செய்றதும் தேவையற்ற சங்கதிகள். ரஜினி படத்தின் வெற்றி தோல்வியை கதைகளை விட, சொல்லும் விதமே நிர்ணயிக்கிறது. உடனே முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரைன்னு பேச ஆரம்பிக்காதீங்க, சில விதி விலக்குகள் உண்டு.

ரஜினியின் வெற்றிப்படங்களைக் கூட்டிக் கழித்து அலசிப் பார்த்தால் ‘பழிவாங்குடா’ எனும் ஒற்றை வரியில் அடங்கிவிடுபவை தான் பெரும்பாலானவை. அதை எப்படி திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். எப்படியெல்லாம் ரஜினியிசத்தை அள்ளித் தெளித்திருக்கிறார்கள் என்பதை வைத்தே படம் பாக்ஸ் ஆபீஸில் நிலைப்பதா, பாக்ஸ்லேயே நிலைப்பதா என்பது முடிவாகிறது.

அந்த வகையில் ரஜினியின் அத்தனை பலங்களையும் ஒவ்வொன்றாய் எடுத்து, பிரேமுக்கு பிரேம் அலங்காரப்படுத்தியிருக்கும் படம் தான் பேட்ட.

“வயசானாலும் உன் அழகும் இளமையும் இன்னும் போகல” என படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் பில்டப் கொடுப்பார். அந்த படம் வந்தே இருபது வருடங்கள் ஆகி விட்டது. அந்த வசனத்தை இந்தப் படத்திலும் பயன்படுத்தலாம் எனுமளவுக்கு, மேக்கப்பும், ஆடைகளும் கேமராவும் ரஜினியை அழகுபடுத்தியிருக்கின்றன.

அட இந்த சீன் பாஷா மாதிரி, அட இது நல்லவனுக்கு நல்லவன் ஸ்டைல், ஆஹா இது தளபதி காட்சி என ரசிகர்கள் காட்சிக்குக் காட்சி சிலாகிக்கிறார்கள். பழைய படங்களையெல்லாம் நினைவுபடுத்தி இதை ஒரு திருவிழா மாதிரி கொண்டாடுகிறார்கள். அது தான் இந்தப் படத்தின் வெற்றி.

அனிருத்தின் இசை கூட ரஜினியின் பிரபல பின்னணி இசைகளின் கோர்வையாய் இருப்பது ஒரு தனி ரசனை. அதை தனது ஸ்பெஷல் முத்திரைகளுடிடன் கலந்து கொடுத்திருக்கிறார். பொதுவாக அனிருத் இசையை ம்யூட் போட்டுக் கேட்டால் கூட காதில் இரத்தம் வடியும். இதில் அந்த சத்தங்களில் சண்டை இல்லாமல் இருப்பது ஒரு ஆறுதல்.

கதாபாத்திரமாகவே மாறிவிடும் விஜய் சேதுபதியின் உடல் மொழியும் நடிப்பும் ஆஹா ரகம் என்றால், வெறும் கண்களாலேயே நடித்து முடித்து விடும் நவாசுதீன் சித்திக் ஆஹாஹா ரகம். ஆனால் பெரிய வாழையிலையில் வைத்த ஒரு தேக்கரண்டி பிரியாணி போல அவர்களுடைய பார்ட் சட்டென முடிந்து விடுகிறது.

என்ன தான் இருந்தாலும் அந்த அக்மார்க் மதுரைக்கார பாம்படப் பாட்டியின் வீட்டில் மகேந்திரனின் ஒரு மகனாக நவாசுதீனையும் இன்னொரு மகனாக அருவா ஆறுமுக மீசையையும் பார்ப்பது உறுத்துகிறது. மகளின் முகத்திலும் மதுரை சாயல் இல்லை. சரி, குடும்பத்துல எதுக்கு பிரச்சினை கிளப்பிகிட்டு… வேண்டாம் விட்டுடுவோம்.

ஓ.. சொல்ல மறந்து விட்டேன் சிம்ரன், திரிஷா இருவரையும் பார்த்த ஞாபகம். அட, சசிகுமாரைக் கூட பார்த்தேனே, ஓ பாபி சிம்ஹா கூட வந்தாரே.. இப்படித் தான் மற்ற கதாபாத்திரங்களைப் பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது. காளியை திரையுலகில் அறிமுகப் படுத்திய மகேந்திரனையே ரெண்டு காட்சியோடு மட்டையாக்கியிருக்கிறார் சுப்புராஜ்ன்னா பாத்துக்கோங்க.

தொன்னூறுகளில் ஒட்டப்படும் போஸ்டர்களில் கடைசியில் ஒரு வரி சேர்ப்பார்கள். “பாட்டு பைட்டு சூப்பர்”. அதை இதிலும் சேர்க்கலாம், ரசிக்க வைக்கிறார்கள்.

ரஜினிக்கு வயசாயிடுச்சு, அந்த நிஜத்தை ஒத்துக் கொள்ள வேண்டும். அதை முடிந்தவரை ஸ்டைலாக‌ மாற்ற கேமரா கோணங்களையும், அரையிருட்டுக் காட்சிகளையும், மெல்லிய புகைமண்டலப் போர்வைகளையும் பயன்படுத்தியிருப்பது சிறப்பு, மிகச் சிறப்பு.

முதல் பாதி அழகான இயற்கைக் காட்சிகளுடனும், சுவாரஸ்யங்களுடனும், பில்டப்களுடனும் பிரமாதப்படுத்துகிறது. பாஷாவைப் போல ! இரண்டாவது பாதி, அந்த பாஷாவின் பில்டப்பை ஈடு செய்யவில்லை என்பது தான் நிஜம். ஆனாலும் பரபரக்கிறது. ஒருவகையில் இரண்டு வில்லன் குரூப், இரண்டு கதைக் களம் என கடைசியில் இரண்டு ரஜினி படங்கள் பார்த்த உணர்வு எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

இது எதிர்பார்த்த டுவிஸ்ட் தான் என சினிமா ஜாம்பவான்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ‘அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’ என இன்னொரு டுவிஸ்ட் கொடுத்து பீட்ஸா பரந்தாமன் கார்த்திக் சுப்புராஜ் வியக்க வைக்கிறார்.

ஆங்காங்கே வைத்திருக்கும அரசியல் பொடிகள் விசிலடிப்பவர்களுக்கானது. ஒவ்வொரு காட்சியையும் ரஜினியின் அறிமுகக் காட்சியைப் போல செதுக்கியிருப்பது இயக்குனரின் உள்ளே ஒளிந்திருக்கும் ரஜினி ரசிகருக்கானது. நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாத்துலயும் ரஜினி வெறி ஊறிப்போன ஒருவனிடமிருந்து வழிந்த ஒரு படம் இது.

காலா படத்தின் ஆழமான சமூகப் பார்வையை இதில் பார்க்க முடியாது. ஆனால் ரஜினியிடம் ரசிகர்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதை இதில் நிச்சயம் பார்க்கலாம்.

போரை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டு மீண்டும் ரஜினி திரையை தேர்ந்தெடுக்கலாம். வெற்றி சர்வ நிச்சயம் என்பது இந்தப் படம் ரஜினிக்குச் சொல்லும் பாடம்.

சுருக்கமாக, இது ரஜினி 2.0

*
சேவியர்
Xavi.wordpress.com

ரஜினியும், இசைஞானியும் #HBDRaja

 Image result for ilayaraja and rajini

 

சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படங்களில் இசைஞானி இளையராஜாவின் பங்களிப்பு மறக்க முடியாதது. இன்றும் ரீங்காரமிடும் காலத்தால் அழியாத நூற்றுக்கணக்கான பாடல்களை இசைஞானி ரஜினிக்காக அளித்திருக்கிறார். அவை திரையில் ரஜினியின் ஆளுமையோடு இணைந்து நீங்கா விருந்தாக நிலைபெற்றிருக்கின்றன‌.

அது போல பின்னணி இசையில் மிரட்டிய பல்வேறு படங்களையும் இசைஞானி ரஜினிக்கு வழங்கியிருக்கிறார். பின்னணி இசைக்கு ஒரு அர்த்தம் கொண்டு வந்தது இசைஞானி இளையராஜா என தைரியமாகச் சொல்லலாம். படம் முழுவதும் இணைந்து பயணிக்கும் சீரான இசையும். சற்றும் தொய்வில்லாமல் உணர்வுகளை தாங்கிப் பிடிக்கும் இசையும். கண்களை மூடிக் கொண்டு கேட்டால் கூட படத்தின் ஒவ்வொரு காட்சியையும் துல்லியமாய் உணர முடிகின்ற பின்னணி இசையும், இசைஞானியின் அசுர பலம்.

இருவரும் திரைக்கு வெளியேயும் நெருங்கிய நட்பு பாராட்டுகின்றனர் என்பது சிறப்புச் செய்தி. இசைஞானியை ரஜினி, “சாமி” என்று தான் அழைப்பார். இசை கடவுளின் வரம், இசைக்கலைஞர் கடவுளின் வரம் பெற்றவர் எனும் கருந்து ரஜினிக்கு எப்போதுமே உண்டு. ஆன்மீகவாதியான ரஜினி, இன்னொரு ஆன்மீகவாதியான இசைஞானியுடன் பக்தியுடன் தான் பழகினார். அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொள்வதும் அன்பை பரிமாறிக் கொள்வதும் சகஜ நிகழ்வுகள். இருவரைக் குறித்தும் விமர்சனங்கள் தவறாக வந்த போதும் ரஜினியோ, இசைஞானியோ அதை கண்டு கொள்ளவில்லை. காரணம் அவர்களுடைய நட்பு எப்படி என்பதை இன்னொருவர் சொல்லி அறியும் நிலையில் அவர்கள் இல்லை என்பது தான்.

ரஜினியோடு, இசைஞானி இணைந்த முதல் படம் கவிக்குயில். சின்னக் கண்ணன் அழைக்கிறான் என மறக்க முடியாத ஒரு மெலடியுடன் ரஜினி இளையராஜா கைகுலுக்கல் ஆரம்பித்தது. பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரலும், இசைஞானியின் இசையும் கவிக்குயில் படத்தின் அடையாளமாக சின்னக் கண்ணனை நிலை நிறுத்தி விட்டன.

ரஜினியும் இசைஞானியும் கடைசியாக இணைந்த படம் வீரா. கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட எனும் பாடல் ஒன்றே போதும் வீராவின் புகழைப் பேச. அந்த அளவுக்கு ரசிகர்களையும், இசை பிரியர்களையும் கட்டிப் போட்ட பாடல் அது. அந்தப் படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள் மலைக்கோயில் வாசலில், மாடத்திலே கன்னி மாடத்திலே என பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டான படம் வீரா !

இசைஞானி ரஜினிக்கு அளித்த பாடல்கள் பெரும்பாலானவை ஹிட் ரகம் தான். அதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பாடல்கள் நிறைய உண்டு.

வயலினை வைத்துக் கொண்டு மனித உணர்வுகளை அந்த இழைகள் வழியாய் இழைத்துச் செதுக்குவதில் இசைஞானிக்கு நிகராய் இன்னொருவர் திரையுலகில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். வயலினும், கிட்டாரும் அவருடைய இசைப் பயணத்தின் வலிமையான கருவிகளாக கூடவே பயணிக்கின்றன.  தளபதி படத்தில் வரும், “சின்னத்தாயவள் தந்த ராசாவே” பாடலில் பயணிக்கும் வயலினின் உயிரோட்டம் நெஞ்சைப் பிழியும் ரகம்.

சின்னத்தாயவள் படத்தில் வயலின் மனதைப் பிழிந்தது என்றால் அப்படியே தம்பிக்கு எந்த ஊரு படத்தில் வரும், “என் வாழ்விலே வருமன்பே வா” பாடலில் சந்தோசமான மனநிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறது. ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் வருகின்ற கண்மணியே காதல் என்பது கற்பனையோ பாடலில் இழையோடும் வயலின் ஆனந்தத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது, இந்தப் பாடலில் கூடவே பயணிக்கும் வீணையும், நாதஸ்வரமும் பாடலை அற்புதமாக்கி விடுகின்றன.

சர்வதேச அளவில் இசைஞானிக்கு அங்கீகாரம் கொடுத்த ராக்கம்மா கையத் தட்டு பாடலில் துள்ளி விளையாடும் வயலினின் விஸ்வரூபம் இசை ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் எப்போதுமே இருக்கும். உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்தில் வருகின்ற, “கண்ணில் என்ன கார் காலம்” பாடல் காதலின் நினைவுகளைத் தூண்டி எழுப்பும் ரகம். கிட்டாரும், வயலினும் தலைகாட்டாத இசைஞானி பாடல்கள் உண்டா என்பதில் எனக்கு சந்தேகமே.

தங்க மகன் படத்தில் வரும், “ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ” பாடல் புதுமையானது. அதில் முழு சரணத்தையுமே பெண் பாடல் குழு வைத்து பண்ணியிருப்பார் ராஜா. கிட்டாரின் இனிமையையும், பாடகர்களின் குரலையும் இணைத்துக் கட்டிய அந்தப் பாடல் ஒரு புதுமையான அனுபவம்.  கூட்டிசையின் நுணுங்கள் ராஜாவுக்கு அத்துபடி என்பதன் சின்ன உதாரணம் தான் இது.

குரல்களை வைத்து ஜாலம் காட்டிய இசைஞானியின் பாடல்கள் இதே போல எக்கச்சக்கம் உண்டு. அத்தகைய முயற்சிகளில் ஆரம்ப காலங்களில் அசத்தியது கழுகு படத்தில் இடம்பெற்ற பொன் ஓவியம் பாடல்தான். இன்றும் அந்தப் பாடலில் இசைஞானி பயன்படுத்தியிருக்கும் குரல்களின் கோர்வை, நல்லிணக்கம், கூட்டிசை வியக்க வைக்கிறது. இன்றைய தொழில்நுட்பத்தில் அந்த சாத்தியம் எளிது, எந்த தொழில் நுட்ப ஒட்டு வேலைகளும் இல்லாத அந்த காலத்தில் அவர் செய்த அந்தப் பாடல் அசாத்தியமானது. அதே போல ஜானி படத்தில் வரும் ஆசையக் காத்துல தூது விட்டு பாடலில் இடையிடையே வருகின்ற கூட்டிசை பிரமிப்பானது.

சோகத்தைப் பிழிந்தாலும் கூடவே உணர்வுகளின் ஊர்வலத்தை இணைக்கும் இசைஞானியின் பாடல்கள் எக்கச்சக்கம். எப்போதும் மறக்காத பாடல்களில் ஒன்றாக ரஜினியின் மன்னன் பட பாடலைச் சொல்லலாம். அந்த பாடலுக்கு கரையாத மனம் உண்டோ ? இசை பிரியர்கள் முதல் சாதாரண ரசிகர்கள் வரை அந்தப் பாடல் உருவாக்கிய அதிர்வு எக்கச்சக்கம்.

பிரியா படத்தில் பாடல்கள் எல்லாமே அற்புத வகை. முதன் முதலாக ஸ்டீரியோ போனிக் அறிமுகப்படுத்தி பாடல்களையெல்லாம் ராஜா இதில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கினார். பிரியா படத்தின் பெரிய‌ வெற்றிக்கு இது முக்கிய காரணமானது.

தளபதி, ஜானி, படிக்காதவன், வீரா, எஜமான், உழைப்பாளி, மன்னன், தர்மதுரை, பணக்காரன், மாப்பிள்ளை, ராஜாதிராஜா, தர்மத்தின் தலைவன், வேலைக்காரன் போன்ற படங்களில் எல்லா பாடல்களுமே அற்புதப் பாடல்களாய் அமைந்திருந்தன என்று சொல்லலாம். படத்தின் வெற்றிக்கு பெரிய பங்களிப்பை இசை ஆற்றிய படங்களில் இவை முக்கியமானவை.

தர்மயுத்தம் படத்தில் மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி குரலில் ஒலிக்கும் ஆகாய கங்கை பாடல் எப்போதும் சிலிர்ப்பூட்டுகிறது. முரட்டுக்காளையில் மலேஷியா வாசுதேவனின் மந்திரக் குரலில் ஒலிக்கும் அண்ணனுக்கு ஜே பாடலும், ஜானகி குரலில் எந்தப் பூவிலும் வாசம் உண்டு பாடலும் இசைஞானியில் முத்திரைகள்.

சந்தனக் காற்றே, செந்தமிழ் ஊற்றே சந்தோசப் பாட்டே வாவா.. என மனதை இழுக்கின்ற தனிக்காட்டு ராஜா பாடலில் இசைஞானியும், எஸ்.பி.பி ஜானகி இணையும் போட்டி போட்டிருப்பார்கள். காதலின் நயாகரா காதுகளில் கொட்டும் இன்பம் அந்தப் பாடலுக்கு உண்டு

இசைஞானியின் இசையில் மறக்க முடியாத இன்னொரு ரஜினி படம் புதுக்கவிதை. வெள்ளைப் புறா ஒன்று பாடல் ரஜினி பாடல்களில் மிக முக்கியமானது. இதே படத்தில் வருகின்ற இன்னொரு அசத்தல் பாடலாக வா வா வசந்தமே பாடலைச் சொல்லலாம்.

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா… பாடலுக்கு ஆடாத கால்கள் இருக்க முடியாது. அடுத்த வாரிசு படத்தின் வெற்றிக்கும், பிரபலத்துக்கும் இந்தப் பாடல் ஒரு முக்கிய காரணியாய் அமைந்தது. ஆசை நூறு வகை அதிரடி என்றால், இன்னொரு பாடலான பேசக் கூடாது பாடல் இரவின் தனிமையில் ஒலிக்கின்ற காதலின் புல்லாங்குழலாய் மனதை வசீகரிக்கிறது.

நான் மகான் அல்ல படத்தில் வருகின்ற, மாலை சூடும் வேளை பாடலும் சரி, தங்க மகன் படத்தில் வரும் வா வா பக்கம் வா பாடலும் சரி ரஜினியின் முத்திரைப் பாடல்கள். இரண்டு வேறுபட்ட மனநிலையில் ரசிக்க வைக்கின்ற பாடல்கள். தங்க மகன் படத்தில் இன்னொரு சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் என்றால் அது ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ பாடல் தான். எஸ்பிபி ஜானகி இணையின் இன்னொரு மிரட்டல் ஹிட் பாடல் அது.

முத்துமணிச் சுடரே.. வா என மனதை பிசையும் பாடலான அன்புள்ள ரஜினிகாந்த் பாடல், படத்தில் பார்வையாளர்கள் கொண்டிருக்கும் உணர்வு பூர்வமான தொடர்பை நீட்டிப்பதாக இருக்கும். இந்தப் பாடல் அந்தப் படத்திற்கு எவ்வளவு தூரம் பக்க பலமாய் இருந்தது என்பது கண்கூடு.

காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே பாடல் என்னை எப்போதுமே இனிமையாய் இம்சை செய்யும் பாடல்களில் ஒன்று. இசையும், குரலும், படமாக்கலும் என எல்லா வகையிலும் மனதுக்குள் ரீங்காரமிடும் பாடல்களில் ஒன்று இது. அதே போல, கை கொடுக்கும் கை படத்தில் வருகின்ற, தாழம் பூவே வாசம் வீசு பாடல் ஒரு வகையில் மனதுக்குள் நுழைந்து இம்சிக்கின்ற பாடல்.

அற்புதமான தாளகதி இசைஞானியின் பாடல்களின் உயிர் நாடி. ஒரு கிளாசிக் உதாரணம் சொல்ல வேண்டுமானால் நித்தம் நித்தம் நெல்லுச்சோறு பாடலைச் சொல்லலாம். முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. தபேலா, மிருதங்கம், கதம் என இந்தியக் கருவிகள் அழகான தாளகதியில் உலவும் ஒரு பாடல் இது.

தபேலா, மொரோக்கோ, டிரம்ஸ் எனும் மூன்று தாளக் கருவிகளையும் ஒரு அற்புதமான புதுமை வரிசையில் இணைத்து கூடவே புல்லாங்குழலையும் நுழைத்திருக்கும் ஒரு பாடல் “அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது” எனும் பாடல். தங்க மகன் படத்தில் இடம்பெற்றிருக்கும் அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று.

நல்லவனுக்கு நல்லவன் படத்தில் எல்லா பாடல்களுமே சிறப்பானவை என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு பாடல் கண்ணீரை வரவழைக்கும் என்றால், நம்ம முதலாளி பாடல் உற்சாகத்தை ஊற்றெடுக்க வைக்கும், உன்னைத் தானே பாடல் காதலின் பறவைப் பாடலாய் காதுகளில் கூடுகட்டும், வச்சிக்கவா பாடல் சில்மிசத்தின் சிலந்தி வலையாய் நெஞ்சுக்குள் மஞ்சமிடும். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம்!

நான் சிகப்பு மனிதன் படத்தில் வருகின்ற, பெண் மானே சங்கீதம் பாடவா பாடலும், மிஸ்டர் பாரத் படத்தில் வரும் என்னம்மா கண்ணு பாடலும், வள்ளி படத்தில் வரும் என்னுள்ளே என்னுள்ளே பாடலும் எப்போதுமே ரசிகர்களின் காதுகளை நிராகரித்து நகர்வதில்லை.

இசைஞானி ஆன்மீகத்தின் கரைகளில் நடந்து திரியும் ஒரு சங்கீதப் பறவை. அவருடைய திருவாசகத்தின் அழுத்தம் இசைப் பிரியர்கள் நன்கு அறிந்தது. ஆடல் கலையே தெய்வம் தந்தது பாடலின் தெய்வீகத்தை இழைத்திருப்பார். ஸ்ரீராகவேந்திரா பாடல் ஏசுதாஸ் குரலில் இசைஞானியின் இன்னொரு முத்திரை !

ரஜினிக்கு இசைஞானி அளித்த ஹிட் பாடல்களைப்ப் பற்றிப் பேசினால் அது ஒரு தனி நூலாகவே வெளியிடும் அளவுக்கு சுவாரஸ்யமானது. அதை விட முக்கியமாக இசைஞானி அவர்கள் ரஜினிக்கு அளித்த பின்னணி இசைக்கோர்வை தான் மிரட்டலானது. பல படங்கள் வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தில் இருக்கின்றன.

முள்ளும் மலரும், ஜானி, பிரியா, தளபதி என நிறைய படங்கள் பின்னணி இசையின் அற்புத பயணத்துக்கு உதாரணங்கள்.

இசைஞானி இளையராஜா தமித் திரையுலகிற்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றால் மிகையல்ல. சூப்பர் ஸ்டாரின் பாடல்கள் ஹிட் ஆவதற்கு இசைஞானி தான் வேண்டுமென்பதில்லை. ரஜினியின் திரை ஆளுமை, அவருடைய ஸ்டைல், மாஸ் மேனரிசம் அனைத்துமே பாடல்களை ஹிட்டாக்கி விடும். ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, சங்கர் கணேஷ், சந்திரபோஸ், வித்யாசாகர் என பலரும் ரஜினிக்கு மிகப்பெரிய ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆனால் ரஜினியோடு பல மொழிகளில் மொத்தம் 65 படங்கள் வரை பணியாற்றியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. ரஜினியின் அதிக படங்களுக்கு இசை இவர் தான். ரஜினியின் படங்களில் இன்றும் மென்மையாய் வருடும் பாடல்களில் பெரும்பாலானவை இசைஞானி இளையராஜா பாடல்களே. இளையராஜாவைத் தவிர்த்துவிட்டு ரஜினி படங்களின் இசையைப் பற்றிப் பேச முடியாது என்பதே யதார்த்தம் !

இசை மேதைகளைப் பற்றி அறிந்து கொள்வதல்ல முக்கியமான விஷயம், இசைக்கு நீ என்ன பங்களிப்பு செய்திருக்கிறாய் என்பதே முக்கியம் என்பார் இளையராஜா. அந்த வகையில் இசைஞானியின் இசைப் பங்களிப்பு தலைமுறை தாண்டியும் காற்றில் உலவும் கல்வெட்டாய் மாயம் காட்டி நிலைக்கும்.

இன்று 73வது பிறந்த நாள் காணும் இசைஞானிக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள்