கி.மு : சேதமான சோதோமின் கதை.

 

விசுவாசத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஆபிரகாமிடம் கடவுள் அடிக்கடி நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசி வந்தார். ஆபிரகாமுக்கு ஏராளமான வாழ்த்துகளையும், வாழும் வழிமுறைகளையும் கடவுள் சொல்வது வழக்கம். ஆபிரகாமின் அண்ணன் மகன் ஒருவன் இருந்தான் அவன் பெயர் லோத்து. லோத்து சோதோம் என்னும் நகரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு ஒரு கால கட்டத்தில் கடவுள் ஆபிரகாமோடு பேசினார்.

கடவுள் ஆபிரகாமை நோக்கி, ;’ஆபிரகாம், சோதோம் , கொமோரா நகரங்களில் மக்கள் என்னுடைய கட்டளைகளைக் கடைபிடிக்கவில்லை. அவர்கள் தங்கள் மனம் போன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய மனங்களில் தீய சிந்தனைகள் மட்டுமே நிறைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட தீய சிந்தனை கொண்ட மக்கள் கூட்டம் வாழ்வதைத் தவிர அழிவதே நல்லது. எனவே அவர்களை நான் அழிக்கப் போகிறேன்’ என்றார்.

கடவுளின் திட்டத்தைப் பற்றி அறிந்த ஆபிரகாம் திடுக்கிட்டார். அங்கே தான் அவருடைய அண்ணன் மகன் லோத்து, குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்.
அவர் கடவுளை நோக்கி,’ஆண்டவரே… தீயவர்களை அழிக்கும் உமது செயல் நல்லது தான். ஆனால் அங்கே நீதிமான்களும் இருக்கக் கூடும் அல்லவா? தீயவர்களை அழிக்கும் போது நல்லவர்களையும் அழிப்பீரோ ? ஒரு வேளை அந்த நகரில் ஐம்பது நீதிமான்கள் இருக்கலாம் இல்லையா ?’ என்றார்.

அதற்கு ஆண்டவர், ‘ஐம்பது நீதிமான்கள் அங்கே இருந்தால் அவர்களுக்காக அந்த நகரை அழிக்க மாட்டேன்’ என்றார்.

‘ஆண்டவரே, நான் உமது முன்னிலையில் ஒரு தூசிக்குச் சமமானவன், ஆனாலும் கேட்கிறேன் ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இல்லாமல் நாற்பத்தைந்து நீதிமான்கள் இருந்தால் என்ன செய்வீர் ? ‘

‘ஐந்து நீதிமான்கள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்காக நான் அந்த நகரை அழிக்காமல் விட்டு விடுவேன்’

‘கடவுளே.. நான் உம்மிடம் பேசத் துணிந்து விட்டேன். எனவே பேசுவேன். ஒருவேளை அங்கே நாற்பது நீதிமான்கள் மட்டுமே இருக்கக் கண்டால் நகரை அழிப்பீரோ ?’

‘நாற்பது நீதிமான்கள் இருந்தால் அவர்களைக் காப்பாற்றும் பொருட்டு அந்த நகர் அழிக்கப் படமாட்டாது’

ஆபிரகாம் தொடர்ந்தார்,’ கடவுளே கோபம் வேண்டாம். ஒரு வேளை முப்பது நீதிமான்கள் மட்டுமே இருக்கக் கண்டால் ‘

‘ஆபிரகாம்… அந்த நகரில் முப்பது நீதிமான்கள் இருந்தால் கூட அவர்களுக்காக அந்த நகரை நான் அழிக்க மாட்டேன்’

‘ஆண்டவரே.. நான் உமது அடியேன். ஒருவேளை இருபது பேர் மட்டுமே அந்த நகரில் இருந்தால் என்ன செய்வீர் ?’

‘இருபது நீதிமான்கள் இருந்தாலும் அந்த இருபது பேருக்காக அந்த நகரை அழிக்க மாட்டேன்…’

ஆபிரகாம் மீண்டும் கடவுளிடம்,’ ஆண்டவரே… இன்னும் ஒரே ஒரு முறை கேட்பேன். கோபம் வேண்டாம். ஒருவேளை பத்து நீதிமான்கள் மட்டும் காணப்பட்டால் சோதோம் நகரை அழித்து விடுவீரோ ?’ என்று கேட்க.

‘ஆபிரகாம், உன்னுடைய விண்ணப்பத்தைக் கேட்கிறேன். அந்த நகரில் பத்து நீதிமான்கள் இருந்தால் போதும். அவர்களுக்காக அந்த நகர் காப்பாற்றப் படும்’ என்று சொல்லி விட்டு கடவுள் விலகினார்.

ஆபிரகாம் தம் இல்லத்துக்குத் திரும்பிச் சென்றார்.

கடவுள் தம்முடைய தூதர்களை சோதோம் நகருக்கு அனுப்பினார். ஆண்டவரின் தூதர்கள் சோதோம் நகர நுழைவாயிலில் ஆபிரகாமின் அண்ணன் மகனான லோத்துவைச் சந்தித்தனர். புதிய நபர்களைக் கண்டவுடன் விருந்தோம்புதலில் சிறந்தவனான லோத்து அவர்களைப் பணிந்து வணங்கி தம்முடைய இல்லத்துக்கு வருமாறு அழைத்தான். அவர்களும் அவனோடு சென்று தங்கினர். லோத்து அப்பங்களைச் சுட்டு அவர்களை உபசரித்தான். அவர்கள் கடவுளின் தூதர்கள் என்பது லோத்துவுக்குத் தெரியாது.

அவர்கள் அப்பங்களை உண்டுவிட்டு உறங்கச் சென்றபின் சோதோம் நகர ஆடவர்கள் ஏராளமானோர் லோத்தின் வீட்டுக்கு வந்து, இங்கே வந்த அந்த இரண்டு பேரையும் எங்களோடு அனுப்பு. நாங்கள் அவர்களோடு உறவு கொள்ளவேண்டும் என்று அவர்கள் கூச்சலிட்டனர். சோதோம் நகரம் முழுவதும் தீச்செயல்களின் காற்றே வீசிக் கொண்டிருந்தது. விரும்பத்தகாத ஓரினச் சேர்க்கை போன்ற செயல்களில் அவர்களுடைய மனம் மூழ்கிக் கிடந்தது.

லோத்து மனம் கலங்கினான். அடைக்கலமாய் வந்தவர்களை அவமதித்தலாகாது, அவர்களுக்கு எந்த தீங்கும் வரக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தான். அவன் அந்த கூட்டத்தினரை நோக்கி, ‘ நண்பர்களே… தயவு செய்து அவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். அவர்கள் என்னுடைய வீட்டுக்கு அடைக்கலமாக வந்திருக்கிறார்கள். அவர்களை விட்டு விடுங்கள்’ என்று கெஞ்சினார்.

‘நீ எங்களுக்கு அறிவுரை செய்கிறாயா ? எங்கிருந்தோ வந்த நீ.. இங்கேயே இருக்கும் எங்களோடு முரண்டு பிடிக்கிறாயா ? உடனடியாக அவர்களை அனுப்பு’ கூட்டம் கத்தியது.

‘தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள். உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். போய்விடுங்கள்’ லோத்து மீண்டும் கெஞ்சினார்.

‘உடனே அவர்களை வெளியே அனுப்புகிறாயா ? இல்லை நாங்கள் உள்ளே போய் அவர்களை இழுத்து வரவா ?’ கூட்டம் தொடர்ந்து கத்தியது.

அப்போது லோத்து எந்தத் தந்தையுமே செய்யத் துணியாத ஒரு காரியத்தைச் செய்தார். அவன் கூட்டத்தினரை நோக்கி , ‘ அடைக்கலமாக வந்தவர்களைக் காப்பது என்னுடைய கடமை. எனக்கு இரண்டு மகள்கள் உண்டு. அவர்கள் இன்னும் ஆண்வாசனை அறியாதவர்கள். அவர்களை வேண்டுமானால் உங்களோடு அனுப்புகிறேன்’ அழுதுவிடும் நிலையில் சொன்னார் லோத்து.

கூட்டத்தினர் அதற்கும் உடன்படவில்லை, ‘ நீ போ… அவர்கள் தான் எங்களுக்கு வேண்டும். உன் மகள்கள் வேண்டாம். அனுப்பப் போகிறாயா இல்லையா ? ‘ எனக் கேட்டு லோத்தை கடுமையாகத் தாக்கினர். கடவுளின் தூதர்கள் இதையெல்லாம் உள்ளே இருந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் லோத்தை வீட்டுக்குள் இழுத்துக் கதவைப் பூட்டினார்கள்.

கூட்டம் கதவை உடைப்பதற்காக முரட்டுத் தனமாக ஓடி வந்தது. கடவுள் அந்தக் கூட்டத்தினரின் கண்களைக் குருடாக்கினார். அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் மோதிக் கொண்டார்கள். யாருக்கும் எதுவும் தெரியவில்லை. அவர்களால் கதவையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. திடீரென கண்கள் இருண்டு போனதால் பயந்துபோன கூட்டத்தினர் பதறியபடி கிடைத்த திசையில் தடுமாறித் தடுமாறி உருண்டோ டினார்கள்.

ஆண்டவரின் தூதர்கள் லோத்திடம்,’ நாங்கள் கடவுளின் தூதர்கள். இந்த நகரின் நிலவரத்தை நேரில் காண்பதற்காக வந்தோம். நகரம் தீய செயல்களின் விளைநிலமாகிக் கிடக்கிறது. இனிமேல் இந்த நகரை அழிக்காமல் விட்டுவைப்பது தவறு. எனவே இந்த நகரை அழிக்கப் போகிறோம். ஆனாலும் உன்னுடைய நல்ல எண்ணத்துக்காக உன்னையும் உன் குடும்பத்தினரையும் அழிக்கமாட்டோ ம். நீ உன் மனைவியையும், உன் உறவினர்களையும் அழைத்துக் கொண்டு நகருக்கு வெளியே ஓடிப் போ. ‘ என்றார்.

அதைக் கேட்ட லோத்து அஞ்சி நடுங்கினார். தூதர்களின் பாதங்களில் விழுந்து வணங்கினார்.

அவர் தன் மருமக்களிடம் ஓடிச் சென்று,’ வாருங்கள் நாம் இந்த நகரை விட்டு ஓடிப் போவோம். இந்த நகரைக் கடவுள் அழிக்கப் போகிறார். ‘ என்றார்.

அவர்கள் சிரித்தார்கள். ‘ கடவுளின் தூதரா ? நகரை அழிக்கப் போகிறாரா ? என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா உமக்கு ?’ என்று கேட்டு நகைத்தார்கள்.
லோத்து அவர்களிடம் கெஞ்சி மன்றாடினார். ஆனால் அவர்கள் அவரைப் பொருட்படுத்தாமல் மதுவருந்திக் கொண்டிருந்தார்கள்.
லோத்து தளர்ந்து போனவராய் தன் வீட்டுக்குத் திரும்பினார்.

காலம் கடந்து கொண்டிருப்பதைக் கண்ட கடவுளின் தூதர்கள் லோத்தையும், மனைவியையும், அவருடைய இரண்டு மகள்களையும் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போய் ஊருக்கு வெளியே விட்டார்.

‘லோத்து. நீ உன் மனைவி பிள்ளைகளுடன். உயிர்காக்க ஓடிப் போ. உன் பேச்சைக் கேட்காத மக்கள் அழியட்டும். அவர்கள் நீதிமான்களெனில் உன்னுடன் வர சம்மதித்திருப்பார்கள். அவர்கள் மனமும் தீய செயல்களையே நாடுகிறது. எனவே அவர்களைப் பற்றிக் கவலைப் படாதே. நீ விரைந்து செல். சமவெளிகளில் தங்காதே. மலையை நோக்கி ஓடிப் போ. இந்த நகர் அழியப் போகிறது. இங்கே பலத்த சத்தம் கேட்கலாம், மிகப்பெரிய ஒளிவெள்ளம் தோன்றலாம். ஆனால் நீ திரும்பிப் பார்க்கவே கூடாது.’ கட்டளையிட்டார் தேவதூதன்.

லோத்து அவரிடம்’தூதரே… என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி ஆனால் என்னிடம் தயவு காட்டுங்கள். மலையை நோக்கி ஓடும் தெம்பு எனக்கில்லை. அருகிலிருக்கும் சிறிய நகருக்குள் செல்ல அனுமதி தாருங்கள்’ என்றார்.

தேவதூதர் அவரிடம்’ ஆண்டவர் உமக்கு இதிலும் கருணை காட்டினார். அந்த சிறிய நகருக்குள் நீங்கள் செல்லுங்கள். அதை அழிக்கமாட்டேன்… பொகும் போது திரும்பிப் பார்க்காதீர்கள். இது மிகவும் முக்கியம் ‘ என்றார்.

லோத்தும் மனைவி மக்களும் தூரத்திலிருந்த அந்த நகரை நோக்கி விரைந்தோடினர். அப்போது விடியத் துவங்கியிருந்தது. அப்போது கடவுள் சோதோம் நகரை கந்தகத்தினாலும், நெருப்பினாலும் எரித்தார்.

வானம் முழுவதும் வெளிச்சக் கடலாய்க் கிடந்தது. மின்னல் மின்னுவதுபோல ஒளி விட்டு விட்டுப் பாய்ந்தது. பின்னால் நகரில் மிகப் பெரிய அலறலும் சத்தமும் வானில் முளைத்த வெளிச்சத்தைக் கண்டு, லோத்தின் மனைவிக்கு திரும்பிப் பார்க்கவேண்டும் என்னும் ஆசை உள்ளுக்குள் ஊற்றெடுத்தது. ஆனால் லோத்தும் அவருடைய மகள்களும் சஞ்சலத்துக்கு இடம் தராமல் விரைந்து கொண்டிருந்தார்கள். லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். திரும்பிப் பார்க்காதே என்னும் கடவுளின் கட்டளையை மீறினாள்.

உடனே உப்புத் தூணாய் உறைந்து போனாள்.

லோத்தும் அவருடைய மகள்களும் அருகிலிருந்த நகருக்குள் நுழைந்தார்கள். அந்த நகரில் அவர்களால் சிலநாட்களே தங்க முடிந்தது. அங்குள்ள மக்களின் விரோதப் போக்கினால் லோத்து தன் மகள்களையும் அழைத்துக் கொண்டு மலைக்குச் சென்று ஒரு குகையில் குடியேறினார்.

லோத்தும் அவருடைய இரண்டு மகள்களும் மட்டுமே அந்த குகையில் தனித்திருந்தார்கள். அங்கே வேறு மக்கள் நடமாட்டமே இல்லை. சிறிது காலம் சென்றபின் , ஒருநாள் லோத்தின் மூத்த மகள் இளையவளை நோக்கி,
‘ நம் தந்தைக்கு வயதாகிறது. நாம் குகையில் வசிக்கிறோம். இப்பகுதியில் ஆடவர் எவரும் இல்லை, அழிந்து போன நகரில் நம் கணவன்களும் இறந்து போயிருப்பார்கள். நம் வம்சம் தழைக்காதோ என்று மிகவும் கவலையாக இருக்கிறது’ என்றாள்.

‘எனக்கும் அந்தக் கவலை தான். எப்படியாவது நம்முடைய வம்சத்தை விருத்தி செய்யவேண்டும். அதற்குத் தகாத வழியில் கூட இறங்கலாம் என்று என் மனம் சொல்கிறது’ மூத்தவள் சொன்னாள்.

‘தகாத வழியென்றால் ?’ இளையவள் புரியாமல் கேட்டாள்.

‘அமைதியாகக் கேள். நம் வம்சம் தழைக்க நம் முன்னால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. இப்போதைக்கு நாம் அணுகும் தூரத்தில் இருக்கும் ஆண் நம்முடைய தந்தை மட்டும் தான். நாம் கருத்தரிக்க வேண்டுமானால் அது நமது தந்தையின் மூலம் தான் ஆகும்.’ மூத்தவள் சொல்லி நிறுத்தினாள்.

இளையவள் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

‘இது தவறு என்பது எனக்குத் தெரிகிறது. ஆனால் நமக்கு வேறு வழி இல்லை. என்ன சொல்கிறாய் ?’ மூத்தவள் கேட்டாள்.

‘தந்தை இதற்கு ஒத்துக் கொள்வாரா ?’

‘ஐயோ.. நாம் இதைப்பற்றி அவரிடம் பேசவே கூடாது. அவருக்குத் தெரியாமல் தான் அவருடன் உறவு கொள்ளவேண்டும்.’

‘அது எப்படி ?’

‘ நாம் அவருக்கு அளவுக்கு அதிகமான மது அளித்து அவர் மயங்கிக் கிடக்கும் போது அவருடன் உறவு கொள்ளலாம். இன்று நான் அவருடன் உறவு கொள்கிறேன். நாளை நீ உறவு கொள்’ மூத்தவள் சொல்ல, இளையவள் ஒத்துக் கொண்டாள்.

அதன்படியே லோத்துடன் மகள்கள் இருவரும் தந்தைக்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து அவர் மயங்கிக் கிடந்தபோது முதல் நாள் மூத்தவளும், இரண்டாம் நாள் இளையவளுமாக அவரோடு உறவு கொண்டனர். லோத்து இதை எதையுமே அறியாதவராய் போதையில் கிடந்தார்.

இவ்வாறு தந்தையின் மூலமாகவே மகள்கள் இருவரும் கருத்தரித்து தங்கள் வம்சம் அழியாமல் காப்பாற்றிக் கொண்டார்கள்.