புதிய தலைமுறை : நேர்முகத் தேர்வு

வேலை நமதே தொடர் – 4

Image result for Job Interview

இன்டர்வியூ என்றதும் பலருக்கு கை கால் நடுக்கம் கொடுக்க ஆரம்பித்து விடும். எல்லா தெய்வங்களுக்கும் வேண்டுதல் விடுத்தாலும் அவர்களுடைய பயம் போகாது. அந்த பதட்டமே பெரும்பாலும் வேலைக்கு வேட்டு வைத்து விடுகிறது.

இன்டர்வியூ என்பது ஒரு உரையாடல். ஒரு பரிசீலனை அவ்வளவு தான். நிறுவனம் எதிர்பார்க்கும் தகுதிகள் உங்களிடம் இருக்கிறதா என்பதை நிறுவனம் சோதித்துப் பார்க்கும். உங்கள் திறமைக்கு தீனி போடும் நிறுவனம் தானா அது ? என்பதை நீங்கள் சோதித்துப் பார்ப்பீர்கள் அவ்வளவு தான். மற்றபடி இதொன்றும் குற்றவாளியிடம் போலீஸ்காரர் நடத்தும் விசாரணை அல்லை !

இங்கே நிராகரிப்பது நிறுவனங்கள் மட்டுமல்ல. ஏராளமான பணியாளர்கள், “எனக்கு இந்த கம்பெனி புடிக்கல” என கிடைக்கும் வேலையை உதறுகிறார்கள். ஐடி நிறுவனங்க‌ளில் 30% ஊழியர்கள் இப்படி நிறுவனத்தை நிராகரிக்கின்றனர்.  எனவே இது ஒரு புரஃபஷனல் டிஸ்கஷன் எனுமளவில் எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும்.

சிலர் நேர்முகத் தேர்வுக்கு வந்தமரும் போதே அவர்களுடைய கண்களும் முகமும் அவர்களுடைய பலவீனத்தைக் காட்டிக் கொடுத்து விடும். ஏதோ எஜமானன் வீட்டில் கைகட்டி வாய்பொத்தி நிற்கும், “சொல்லுங்க எஜமான்” டைப் மக்கள் ஒரு ரகம். வேட்டைக்காரன் முன்னால் மிரட்சியுடன் நிற்கும் மான்களைப் போன்ற மக்கள் இன்னொரு ரகம். அவர்களுக்கெல்லாம் வேலை கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு என்பதைப் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மெலிதான புன்னகை. தன்னம்பிக்கையான பார்வை. இவை இரண்டும் மிகவும் முக்கியம். “இந்த வேலை கிடைக்காவிட்டால் உலகமே இருண்டு விடும்” என நினைத்து மனதைப் போட்டுக் குழப்பாதீர்கள். எது நமக்குரியதோ, அது நமக்குக் கிடைக்கும் எனும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களை இயல்பாய் செயல்பட வைக்கும்.

எந்த வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குச் செல்கிறீர்கள் என்பதில் நல்ல தெளிவு அவசியம். அப்போது தான் அந்த வேலைக்குத் தேவையான தகுதிகள் நம்மிடம் இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்தவும், அந்த வேலைக்குத் தக்கபடி நம்மை முன்னிலைப் படுத்தவும் முடியும்.

கொஞ்சம் முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். எப்போது இன்டர்வியூ, எங்கே இருக்கிறது ஆபீஸ், எந்த ஃப்ளோர், யாரைச் சந்திக்க வேண்டும் போன்ற விஷயங்களைத் தெளிவாக அறிந்து வைத்திருங்கள். தடுமாற்றங்கள் குறையும், பதட்டமில்லாமல் இன்டர்வியூவைச் சந்திக்க முடியும்.

நேர்முகத் தேர்வு மதியம் நடக்கிறதெனில் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு காலையிலேயே போய் நிற்காதீர்கள். ஒரு பத்து பதினைந்து நிமிடங்களுக்கு முன்பு செல்வது போதுமானது. அதிகபட்சம் அரைமணி நேரம். அதற்கு முன் வேண்டாம்.

என்னென்ன கொண்டு செல்ல வேண்டும் என்பதை முதலிலேயே கேட்டு தெரிந்து வைத்திருங்கள். புரஃபைல், போட்டோ, சான்றிதழ்கள் என தேவைகள் எதுவாகவும் இருக்கலாம். தேவைக்குத் தக்கபடி அனைத்தையும் கைகளில் வைத்திருங்கள்.

மிக முக்கியமான ஒன்றைச் செய்யுங்கள். எந்த நிறுவனத்தில் நேர்முகத் தேர்வுக்குச் செல்கிறீர்களோ அந்த நிறுவனத்தைப் பற்றிய தகவல்களை சேகரியுங்கள். இன்றைய டிஜிடல் யுகத்தில் இது ரொம்பவே ஈசி. நிறுவனத்தின் நோக்கம் என்ன ? அவர்கள் என்ன செய்கிறார்கள் ? என்ன செய்ய உத்தேசித்திருக்கிறார்கள் ? என்னென்ன தொழில் நுட்பங்கள் பயன்படுத்துகிறார்கள் போன்ற விஷயங்களைத் தெரிந்து வைத்திருங்கள்.

நிறுவனத்தைப் பற்றி நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பது உங்கள் மீதான மரியாதையை அதிகரிக்கும். நீங்கள் அந்த வேலையை ரொம்ப சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என நிறுவனம் உங்களை மதிக்கும்.

உங்கள் பயோடேட்டா மிக முக்கியம். அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் அக்கு வேறு ஆணி வேறாக உங்களுக்குத் தெரிந்திருக்கட்டும். அது ரொம்ப முக்கியம் அதுவே சரியா தெரியலேன்னா நீங்கள் சொல்வதெல்லாம் பொய் என ஒரு பிம்பம் உருவாகக் கூடும்.

சமூக வலைத்தளங்களில் உங்கள் ஈடுபாட்டை சீர் செய்து கொள்ளுங்கள். இப்போதெல்லாம் நிறுவனங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை ஃபேஸ்புக், டுவிட்டர், லிங்க்ட் இன் போன்ற சமூக வலைத்தளங்களிலிருந்து உங்களை அறியாமலேயே எடுத்து விடுகின்றன. எனவே அத்தகைய வலைத்தளங்களில் உங்களை ஒரு பாசிடிவ் மனிதனாக காட்டிக் கொள்ளுங்கள்.

நல்ல நேர்த்தியான ஆடை உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்கிறது உளவியல். எனவே இன்டர்வியூ செல்லும்போது எது உங்களுக்கு அதிகம் பிடித்தமானதாய் இருக்கிறதோ அந்த ஆடையை அணிந்து கொள்ளுங்கள். நிறுவனத்தில் எல்லைக்குள் நுழைந்த நிமிடத்திலிருந்து உங்களுடைய இன்டர்வியூ தொடங்குகிறது என நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அங்கே நடந்து கொள்ளும் விதம், பேசும் விதம், மற்றவர்களுடன் பழகும் விதம் எல்லாமே கவனிக்கப்படலாம்.

இன்டர்வியூ நடக்கும்போது தெளிவாய் இருங்கள். தெரிந்த அனைத்தையும் சொல்வதற்கானதல்ல நேர்முகத் தேர்வு. கேட்கும் விஷயங்களுக்கான பதிலைச் சொல்வது மட்டும் தான். ஒவ்வொரு கேள்விக்கான பதிலையும் இரண்டு மூன்று நிமிடங்களில் சொல்லுங்கள். விரிவாகச் சொல்லும்படி கேட்டால் மட்டும் விலாவரியாய் சொல்லுங்கள்.

கேள்விகளை கவனமாய்க் கேட்கவேண்டும் என்பது பாலபாடம். கேள்வி முடியும் முன் பதில் சொல்ல ஆரம்பிக்காதீர்கள். அதே போல, இடைமறித்துப் பேசும் பழக்கமும் வேண்டாம். கேள்வி கேட்டு முடித்தபின் அது புரிந்தது என உள்ளுக்குள்ளே ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு பதிலைச் சொல்லுங்கள்.

பழைய நிறுவனத்தைப் பற்றி எந்த எதிர்மறை கருத்துகளையும் சொல்லாதீர்கள். நிறுவனம் மாறியதற்கான காரணம் உங்களுடைய வேலையின் முன்னேற்றம் சார்ந்ததாகவோ, உங்களுடைய எதிர்கால திட்டம் சார்ந்ததாகவோ இருப்பது நல்லது.

“உங்களைப் பற்றி சொல்லுங்கள்” எனும் கேள்வி நிச்சயம் எழும். அப்போது உங்களுடைய பலம், உங்கள் ஸ்பெஷல் குணாதிசயங்கள், படிப்பு, திறமை போன்ற முக்கியமான அம்சங்களைப் பேசுங்கள். உங்களைப் பற்றி என்றதும், நீங்கள் சின்ன வயதில் ஓடி விளையாடிய கதைகளைப் பேசி போரடிக்காதீர்கள். அதுவல்ல இங்கே எதிர்பார்க்கப்படுவது !

உங்களுடைய கல்வி நாட்கள், அல்லது வேலை நாட்களில் ஏதேனும் சிறப்பு அங்கீகாரங்கள், விருதுகள், சாதனைகள் பெற்றிருந்தால் அதை நிச்சயம் குறிப்பிடுங்கள். அவை உங்களுக்கு வெற்றி பெறும் வாய்ப்பை அதிகரிக்கும்.

எந்த இன்டர்வியூவுக்குச் செல்லும் முன்பும் ஒரு சோதனை இன்டர்வியூ நடத்திப் பாருங்கள். நண்பரை உதவிக்கு அழையுங்கள். யாரும் கிடைக்கவில்லையேல் உங்கள் வீட்டுக் கண்ணாடியே கூட போதும். குறிப்பாக இன்டர்வியூக்களில் கேட்கப்படும் பொதுவான கேள்விகளை மாதிரியாய் வைத்துப் பயிற்சி செய்யுங்கள். அப்படிப்பட்ட கேள்விகளை எழுதி வைத்துக்கொண்டு அதற்கு எப்படி பதிலளிக்கலாம் என பயிற்சி எடுங்கள். நிறைய பயிற்சி எடுத்தால் உங்களுக்கு நேர்முகத் தேர்வுகள் பதட்டம் தராது.

ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் இடையே இடைவெளி இருந்தால் காரணத்தை நிச்சயம் கேட்பார்கள். சரியான ஒரு பதிலைச் சொல்லுங்கள். அது உண்மையாகவும், அவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்திலும் இருக்கட்டும்.

உங்களுடைய பலவீனம் எது என்பதைத் தெரிந்து வைத்திருங்கள். ஒருவேளை அந்த வேலை உங்களுக்கு செட் ஆகாது என தோன்றினால் முதலிலேயே சொல்லி விடுங்கள். பிடிக்காத வேலையில் பிரகாசிக்காமல் போவதை விட, பிடித்த வேலையில் கலக்குவதே நல்லது.

ஒன்றை மறந்து விட்டேன், உடல் மொழி ! நேர்முகத் தேர்வின் மிகப்பெரிய பலம் உங்களுடைய உடல் மொழி தான். புன்னகை, உற்சாகம், நேரடியாகப் பார்த்துப் பேசுவது, தன்னம்பிக்கையுடன் நிமிர்ந்து அமர்வது என உங்கள் உடலைப் பேச விடுங்கள் !

நேர்மையாகவும், உண்மையாகவும் பதிலளியுங்கள். தவறான தகவல்களைத் தருவதோ, தவறான நம்பிக்கைகளை உருவாக்குவதோ தேவையற்றது. அலுவலகப் பணி என்பது நீண்டகால பந்தம். வாழ்க்கை பொருளாதாரத்தினால் அளவிடப்படுவதல்ல, உங்கள் நேர்மையான வாழ்வின் அழகினால் அளவிடப்படுவது. எனவே வேலைக்காக உங்கள் மதிப்பை குறைக்க வேண்டாம்.

“ஏதாவது கேள்வி இருக்கிறதா ? ” என உங்களிடம் கேட்டால் நல்ல ஒரு கேள்வியைக் கேளுங்கள். உங்களைப் பற்றிய அபிப்பிராயத்தை உயர்த்தும் கேள்வியாய் அது இருக்கட்டும். அது நிறுவனத்தின் பணி, எதிர்காலத் திட்டம் போன்றவை சார்ந்ததாய் இருப்பது நல்லது. அப்படி எதுவும் தோன்றவில்லையேல், “நோ தேங்க்ஸ்” என புன்னகைப்பது உசிதம்.

கடைசியில் ஒரு ஃபீட் பேக் அதாவது அவர்களுடைய அபிப்பிராயம் என்ன என்று கேட்கலாம். அது எதிர்மறையாய் வந்தால் வாதிடத் தேவையில்லை. “நான் அப்படியல்ல என சண்டையிடவும் தேவையில்லை”. உங்கள் கருத்துக்கு நன்றி, என்னிடம் அந்தத் திறமை இல்லை, ஆனால் அதே போன்ற இந்த திறமை இருக்கிறது என சொல்லலாம். எதுவானாலும், “நன்றி” என கைகுலுக்கி விடைபெறுங்கள்.

பத்து கட்டளைகள்

Image result for Job Interview

 1. நேர்முகத் தேர்வு என்பது நிறுவனத்துக்கு நீங்கள் தகுதியானவரா என்று பார்ப்பதும், நிறுவனம் உங்களுக்குத் தகுதியானதா என்பதைப் பாப்பதுமே.

 1. சரியான நேரத்தில், சரியான தயாரிப்புடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுங்கள்.

 1. நேர்த்தியான ஆடை அவசியம். தெளிவான பார்வை, புன்னகை இருக்கட்டும்.

 1. நிறுவனத்தைப் பற்றிய தகவல்களையும், உங்கள் வேலை பற்றிய தகவல்களையும் முழுமையாய் தெரிந்து வைத்திருங்கள்.

 1. சுருக்கமாய் நேர்த்தியாய் பதிலளியுங்கள். அதற்காக நல்ல பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.

 1. சமூக வலைத்தளங்களில் உங்கள் பங்களிப்புகள் ஆரோக்கியமானதாய் இருக்கட்டும்.

 1. நிறுவனத்தின் எல்லைக்குள் கவனமாய் நடந்து கொள்ளுங்கள். பேசுதல், பழகுதல் போன்றவற்றில் கவனம் தேவை. அது மறைமுக இன்டர்வியூவாக கூட இருக்கலாம்.

 1. உடல் மொழியை சரியாய் பயன்படுத்துங்கள். நீங்கள் சொல்லும் விஷயத்தை அது சரியாய் கொண்டு சேர்க்கும்.

 1. உங்களைப் பற்றிய தகவல்கள், பலம், பலவீனம் எல்லாமே அத்துபடியாய் இருக்கட்டும்.

 1. நேர்மையாய் இருங்கள். இன்டர்வியூ முடிந்ததும் புன்னகையுடன் நன்றி சொல்லி கைகுலுக்க மறவாதீர்கள்.

 

புதிய தலைமுறை : ஹைச்.ஆர் இன்டர்வியூ

வேலை நமதே தொடர் – 3

Image result for HR Discussion

அப்பாடா எல்லா தேர்விலயும் ஜெயிச்சாச்சு, எல்லா இன்டர்வியூவிலும் ஜெயிச்சாச்சு, இனிமே வேலைக்கான ஆர்டர் வரவேண்டியது தான் பாக்கி என நினைத்துக் கொண்டிருக்கும் போது சொல்வார்கள். “உங்களுக்கு ஹைச்.ஆர்.இன்டர்வியூ பாக்கி இருக்கு !”

என்னது ஹைச்.ஆர்.இன்டர்வியூவா என ஒரு நிமிடம் குழம்பி வேறு வழியில்லாமல் மீண்டும் பதட்டத்துக்குள் விழுந்து விடுவோம். அதெல்லாம் தேவையில்லை. ஹைச்.ஆர்.இன்டர்வியூ என்றால் என்ன ? அதில் என்னென்ன நடக்கும் ? என்னென்ன கேட்கப்படும் ? போன்ற விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தால் அதையும் மிக எளிதாகக் கடக்கலாம்.

மற்ற இன்டர்வியூக்களுக்கும் இதற்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. மற்ற இன்டர்வியூக்களிலெல்லாம் என்ன படிச்சோமோ அதைச் சார்ந்து தான் கேள்விகள் இருக்கும். அல்லது வேலைக்கு என்ன தேவையோ அது சார்ந்த கேள்விகள் மட்டும் தான் இருக்கும். ஆனால் எச்.ஆர். இன்டர்வியூவில் எதையுமே யூகிக்க முடியாது ! காரணம், எச்.ஆர்.இன்டர்வியூ உங்களுடைய திறமையைச் சோதிப்பதல்ல, உங்களுடைய இயல்பைச் சோதிப்பது.

எச்.ஆர்.இன்டர்வியூவில் சொல்லும் பதில்களை வைத்து மட்டும் நீங்கள் அளவிடப்படுவதில்லை. சொல்லாத பதில்களும் அங்கே கணக்கில் எடுக்கப்படும். அலுவலக ரிஷப்சனில் நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள் ? பொறுமையாய் அமர்ந்திருந்தீர்களா ? பதட்டமாய் இருந்தீர்களா ? அங்கே இருந்த வரவேற்பாளரிடம் நீங்கள் புரஃபஷனலாக நடந்து கொண்டீர்களா ? அங்கே நின்றிருந்த செக்யூரிடியிடம் கனிவாக நடந்து கொண்டீர்களா ? என எல்லா விஷயங்களும் கவனிக்கப்படலாம்.

எல்லா இடங்களிலும் உங்களை ரகசியக் கேமராவால் கண்காணிப்பார்கள் என்று அர்த்தமல்ல. அப்படி ஒரு கவனிப்புக்கு சகல சாத்தியக் கூறுகளும் உண்டு என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான்.

கணிதத்தில் 2 + 2 = 4 என்பது போல எச்.ஆர்.இன்டர்வியூவில் இது தான் சரியான‌ விடை என்று எதுவும் இல்லை. நீங்கள் சொல்வதை வைத்து உங்களுடைய குணாதிசயத்தைப் புரிந்து கொள்வார்கள்.

உதாரணமாக, இந்த வேலைக்கு நீ பொருத்தமானவன் என எப்படி நினைக்கிறாய் ? என ஒரு கேள்வி வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பதில் இப்படியும் இருக்கலாம்,

“இது என்னுடைய விருப்ப ஏரியா. நான் இதைக்குறித்து தெரிந்து வைத்திருக்கிறேன். எனக்கு முன் அனுபவம் உண்டு. என்னால் நிச்சயம் இந்த வேலையைச் செய்ய முடியும் என நம்புகிறேன். இதே போன்ற இன்னொரு தொழில்நுட்பமும் எனக்குத் தெரியும், எனவே இந்த வேலையை இன்னும் தெளிவாகச் செய்ய முடியும் என நம்புகிறேன்”

அல்லது, உங்கள் பதில் இப்படியும் இருக்கலாம்.

“வந்து.. இது புது ஏரியா கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு. பட் மேனேஜ் பண்ணிடுவேன். எந்த வேலைன்னாலும் செய்து தானே ஆகணும். லெட்ஸ் சீ.. கொஞ்ச நாள்லயே கத்துக்கலாம்ன்னு நினைக்கிறேன்”

இந்த ரெண்டு பதில்களையும் ஒருமுறை கவனமாய்ப் பாருங்கள். ஒன்றில் தன்னம்பிக்கை தெரிகிறது. தனக்குத் திறமை இருக்கிறது, எதிர்பார்ப்புக்கும் மேலேயே பரிச்சயம் இருக்கிறது என்பதை நாசூக்காய்ச் சொல்லும் தன்மை இருக்கிறது. இந்த வேலைக்கு நான் தகுதியானவன் என்பதை வெளிப்படுத்தும் உறுதி தெரிகிறது. வேலையைப் பெற்றுவிடும் நாசூக்கு இந்தப் பதிலுக்கு இருக்கிறது.

இரண்டாவது பதிலைப் பாருங்கள். தன்னம்பிக்கை ஆட்டம் காண்கிறது. எப்படியாவது இந்த வேலை எனக்குக் கிடைக்கணும் எனும் எதிர்பார்ப்பு தான் தெரிகிறதே தவிர, தான் அந்த வேலைக்கு தகுதியானவன் எனும் வெளிப்பாடு இல்லை. இத்தகைய பதில்கள் வேலையைப் பெறுவது கடினம்.

சுருக்கமாக, நீங்கள் எச்.ஆர் இன்டர்வியூவில் தன்னம்பிக்கை நிறைந்தவராக, குழுவாக இணைந்து செயல்படக் கூடியவராக தோற்றமளிக்க வேண்டும் !

பொதுவான சில கேள்விகளைக் கேட்பார்கள். அவற்றில் ஒன்று, “உங்களுடைய குறுகிய கால, நீண்டகால திட்டங்கள் என்ன ?” என்பதாய் இருக்கலாம்.

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, பொருளாதார திட்டம் எதையும் இங்கே உளறி வைக்காதீர்கள். அலுவலில் உங்களுடைய இலட்சியங்கள் என்ன என்பது தான் நீங்கள் சொல்ல வேண்டியது. உங்கள் கனவுகள் நேரானதாக, நேர்த்தியானதாக இருக்கட்டும். இப்படிப்பட்ட சில கேள்விகளுக்கு நீங்கள் பதில்களை ஏற்கனவே தயாரித்து வைப்பது சாலச் சிறந்தது !

அடிக்கடி கம்பெனி தாவும் ஊழியர்களை நிறுவனங்களுக்குப் புடிக்காது. நாளைக்கு நம்மையும் விட்டு விட்டு ஓடி விடுவான் என அவர்கள் நினைப்பார்கள். எனவே நீங்கள் அந்த வகையறாவில் வருவீர்களெனில் கவனமாய் இருங்கள். ஒரு பக்கா பதிலைத் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

எந்த ஒரு பழைய கம்பெனியையும் தரக்குறைவாய் பேசாதீர்கள். எந்த ஒரு பழைய தலைவரையும் ஏளனமாய் அல்லது இளக்காரமாய்ப் பேசவே பேசாதீர்கள். இங்கேயும் நீங்கள் அப்படித் தான் நடந்து கொள்வீர்கள் என்றே கருதப்படும். அதற்குப் பதிலாக பாசிடிவ் பதில்களையே சொல்லுங்கள்.

உதாரணமாக, “ஏன் வேலையை விட்டீங்க ?” என கேட்டால்

“என்னுடைய திறமையைப் பயன்படுத்தும்படியான வேலை அங்கே இல்லை. எனக்குப் பிடித்த, எனக்குத் திறமை இருக்கிற ஏரியாவில் வேலை செய்ய விரும்புகிறேன். அப்போது தான் என்னுடைய வளர்ச்சியும், நான் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்” என்பது போன்ற ஒரு பதிலைச் சொல்லுங்கள். அதை விட்டு விட்டு, “அதென்ன சார் கம்பெனி, அங்கே இருக்கிறவனுக்கு விஷயமே தெரியாது” என்றெல்லாம் பேசாதீர்கள். வேலை அதோ கதியாகி விடும்.

இத்தகைய கேள்விகளில் எச்.ஆர் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா ?. நீண்டகாலம் இந்த நபர் நம்முடைய நிறுவனத்தில் பணியாற்றுவான், தெளிவான இலக்கை வைத்திருக்கிறான், நிறுவனத்தின் வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டிருக்கிறான். எனும் தொனி வெளிப்படுவது தான்.

“என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீங்க ?” எனக் கேட்டால் கொஞ்சம் உஷாராகி விடுங்கள். ஏற்கனவே ஒரு வேலையில் இருந்தால் அந்த சம்பளத்தை விட ஒரு குறிப்பிட்ட சதவீதம் அதிகம் கேட்கலாம். அதற்காக கொஞ்சம் சந்தை மதிப்பையும் அலசி வைத்திருங்கள். 25 விழுக்காடு உயர்வு எதிர்பார்க்கிறேன் என்பது போன்ற பதிலே சரியானது.

அவர்கள் உடனே ஒத்துக் கொள்ள மாட்டார்கள், “15 பர்சன்ட் தான் எங்களோட நிறுவன நிறுவனத்தின் எல்லை, என்ன சொல்றீங்க‌” என இழுப்பார்கள். “நான் மார்க்கெட் வேல்யூ தான் கேட்டேன். பட் சேலரி ரொம்ப முக்கியம் இல்லை. எனக்கு உங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும் என்பது தான் விருப்பம். அதற்காக உங்கள் நிறுவன சம்பளத்தோடு ஒத்துக் கொள்கிறேன்” என சொல்லலாம். விருப்பமில்லையேல், “சாரி, நான் குறைந்த பட்சம் 20% ஆவது எதிர்பார்க்கிறேன்” என்றும் சொல்லலாம்.

சம்பள விஷயம் பேசும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை தான். ஒன்று, நீங்கள் சம்பளத்துக்காகத் தான் நிறுவனங்களை மாற்றுகிறீர்கள் எனும் எண்ணம் வரக் கூடாது. இரண்டு, நிறுவனத்தின் பார்வையிலிருந்து நீங்கள் யோசிக்க மறுக்கிறீர்கள் எனும் எண்ணம் வரக் கூடாது. மூன்று, பேராசை பிடித்தவன் அல்லது பிடிவாதக்காரன் எனும் எண்ணம் வரக் கூடாது. அதில் கவனமாய் இருங்கள்.

“இந்த நிறுவனத்தை ஏன் தேர்வு செய்தீர்கள் ?” என கேட்கலாம். “சும்மா தான், ஓப்பனிங் இருந்துச்சு மற்றபடி உங்க கம்பெனி பற்றி ஒண்ணும் தெரியாது” என்று சொல்லாதீர்கள். “உங்கள் நிறுவனத்தின் இலட்சியம், இலக்கு, தொழில்நுட்பங்கள் போன்றவை எனக்குப் பிடித்திருக்கிறது. சமீபத்தில் நீங்கள் இந்த தொழில்நுட்பத்தில் நுழைந்திருப்பதை அறிந்தேன், அது என்னை வசீகரித்தது. மட்டுமல்ல, உங்கள் நிறுவனத்துக்கு சந்தையில் மிகப்பெரிய மரியாதை இருக்கிறது.” என சில விஷயங்களைச் சொன்னீர்களெனில் உங்களுடைய மரியாதை கூடும். அதற்கு நீங்கள் இன்டர்வியூ செல்லும் நிறுவனம் பற்றி நிறைய விஷயங்களை இணையம் மூலமாகவோ, நண்பர்கள் மூலமாகவோ அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

“உங்களுக்கு ஏதாவது கேள்வி இருக்கா ?” என கடைசி கேள்வி வரும். கேளுங்கள். உங்களுடைய கேள்வியை வைத்துக் கூட உங்களை அளவிடுவார்கள். அதனால் கேட்பதை கவனமாய்க் கேளுங்கள். அபீஸை ரொம்ப தூரமா வெச்சிருக்கீங்களே, பஸ் கிடைக்குமா ?” என்பது போன்ற சில்லறைத்தனமான‌ கேள்விகளை ஒதுக்குங்கள். உங்களுடைய வேலை சார்ந்தவற்றை, அல்லது நிறுவனத்தில் இலக்கு சார்ந்தவற்றைக் கேளுங்கள்.

“இந்த வேலையில் சேரும் ஒருவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்கள் ? அல்லது என்ன ஆலோசனை கொடுப்பீர்கள்” என்பது போன்ற எளிய கேள்விகளையும் கேட்கலாம்.

இன்டர்வியூ முடிந்ததும் நன்றி சொல்லி கைகுலுக்க மறவாதீர்கள். தன்னம்பிக்கையோடு வெளியே வாருங்கள். நிறுவனம் உங்களைப் பார்த்து பிரமித்து அந்த வேலையை உங்களுக்குத் தரவேண்டுமே தவிர, பரிதாபப்பட்டு தரக்கூடாது. எனவே நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாய் இன்டர்வியூவை முடியுங்கள்.

Image result for HR Discussion

பத்து கட்டளைகள்

 1. எச்.ஆர் இன்டர்வியூ என்பது உங்கள் குணாதிசயத்தைப் பார்ப்பது.

 1. சரியான விடை, தவறான விடை என்பதை விட நேர்மையான விடை, வசீகரமான விடை என்பதே தேவை.

 1. எதையும் பாசிடிவ் ஆக அணுகும் மனநிலை வரவேற்கப்படும்.

 1. தன்னம்பிக்கை ரொம்ப ரொம்ப முக்கியம். நேர்த்தியான ஆடை, தெளிவான பார்வை இருக்கட்டும்.

 1. எதிர்பார்ப்புகளைப் பற்றிப் பேசும்போது சதவீதம் மற்றும் சந்தை மதிப்பீடு வைத்துப் பேசுவது நல்லது

 1. பழைய நிறுவனங்களைப் பற்றி தவறாய்ப் பேசாதீர்கள். நேர்மையான காரணங்கள் இல்லையேல் கம்பெனி மாறாதீர்கள்.

 1. புது நிறுவனம் பற்றிய விஷயங்களைத் தெரிந்து வைத்திருங்கள்.

 1. நேர்மையாய் இருங்கள், நிறுவனத்தின் வளர்ச்சியில் ஆர்வம் உடையவராய் இருங்கள்.

 1. நல்ல ஒரு கேள்வி கேட்டு உங்கள் மரியாதையை உயர்த்துங்கள்.

 1. நன்றி சொல்லி தன்னம்பிக்கை கலந்த புன்னகையோடு விடை பெறுங்கள்.

புதிய தலைமுறை : குரூப் டிஸ்கஷன்

Image result for Group Discussion

குரூப் டிஸ்கஷனை தமிழில் குழு உரையாடல் என்றோ குழு விவாதம் என்றோ சொல்லலாம். முதன் முதலாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர முயற்சி செய்கிறீர்களெனில் பெரும்பாலும் நீங்கள் இந்த கிணறைத் தாண்டியாக வேண்டும். வேலைக்கு விண்ணப்பிக்கும் ஏராளமான நபர்களிடமிருந்து ஒரு சிலரை மட்டும் பிரித்தெடுக்க பெரும்பாலும் இந்த குழு விவாதம் நடத்தப்படுகிறது.

இந்த தேர்வு உங்களைப் பற்றிய பல விஷயங்களை வெளிப்படுத்தும்.  உங்களுடைய குணாதிசயம் என்ன ?, தன்னம்பிக்கை எப்படி இருக்கிறது ? கம்யூனிகேஷன் எப்படி இருக்கிறது ? தலைமைப் பண்பு எப்படி இருக்கிறது ? குழுவாய் செயல்படும் தன்மை உண்டா ? திறந்த மனம் உடையவரா ? என பல்வேறு விஷயங்களை இந்த குழு உரையாடல் புட்டுப் புட்டு வைக்கும்.

ஜாலியா உக்காந்து அரட்டையடிக்கத் தெரியுமா ? ஏதாச்சும் ஒரு தலைப்பைக் கொடுத்தா அதைத் துவச்சு காயப் போடுவீங்களா ? அது தான் குழு விவாதம். குட்டிச் சுவரிலோ, டீக் கடை பெஞ்சிலோ, காபி ஷாப்பிலோ சர்வ சாதாரணமாய் நடக்கிற ஒரு நிகழ்ச்சி தான். அதை அப்படியே ஒரு இன்டர்வியூ முறை என்று சொல்லும் போது பதட்டம் வந்து விடுகிறது.

இது எப்படி நடக்கும் ?

ஒரு அறையில் சுமார் பத்து பேரை அமர வைப்பார்கள். அது பெரும்பாலும் ஒரு வட்ட மேஜை மீட்டிங் போல இருக்கும். ஓரமாய் அமர்ந்து ஒன்றோ இரண்டோ நபர்கள் நீங்கள் என்ன செய்கிறீர்கள், என்ன பேசுகிறீர்கள் என்பதைக் கண்காணித்து உங்களுக்கு மதிப்பெண் வழங்குவார்கள். யாருக்கு அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அவர்கள் வெற்றி பெற்றதாய் அறிவிக்கப்படுவர். அவ்வளவு தான் !

உள்ளே நுழைந்ததும் ஒரு தலைப்பு தரப்படும். அந்த தலைப்பு எதுவாகவும் இருக்கலாம். கருப்புப் பணம் ஒழியுமா என்பதாகவோ, கபாலியில் ரஜினி இறந்து விட்டாரா என்பதாகவோ இருக்கலாம். தலைப்பு இங்கே விஷயமில்லை. நீங்கள் எப்படிப் பேசுகிறீர்கள் என்பது தான் விஷயம். தலைப்பு புரியவில்லையேல் முதலிலேயே கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

உள்ளே நுழையும்போதே ஒரு பேனா, ஒரு பேப்பர் கையோடு கொண்டு செல்லுங்கள். அது உங்களுக்கு ரொம்பவே கைகொடுக்கும். மனதில் தோன்றும் கருத்துகளை சின்னச் சின்னக் குறிப்புகளாக எழுதி வைத்தால் எதையும் தவற விடாமல் பேச உதவும்.

தைரியமும், மொழிப் பரிச்சயமும், தன்னம்பிக்கையும் உடையவர்கள் பளிச் பளிச் என பேசி ஸ்கோர் செய்வார்கள். தயங்கித் தயங்கி நிற்பவர்கள் அப்படியே திரும்பிப் போக வேண்டியது தான். அதற்காக பேசிக்கொண்டே இருக்க வேண்டுமென்பதில்லை. முப்பது முதல் நாற்பது வினாடிகள் வீதம், மூன்று அல்லது நான்கு முறை பேசுங்கள். அது போதும்.

நிறுவனங்கள் ஒரு குழுவாக இயங்கும் அமைப்புகள். அதில் தனிநபர் சாதனைகளை விட எப்படி குழுவாய் இணைகிறீர்கள் என்பதும் முக்கியம். அதனால் தான் இத்தகைய உரையாடல்கள் உங்களுடைய பன்முகத் தன்மையை உங்களை அறியாமலேயே வெளியே கொண்டு வரும்.

உங்களுக்கு மொழியில் நல்ல பரிச்சயம் இருக்க வேண்டியது அவசியம். காலேஜ்ல படிக்கும் போதே ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்வது இங்கே உங்களுக்குக் கைகொடுக்கும். கிராமத்து இளைஞர்கள் பெரும்பாலும் தடுமாறும் இடம் இது. சிலர் உடைந்த ஆங்கிலத்தை வைத்துக் கொண்டே பிச்சு உதறுவார்கள். அவர்களுடைய தன்னம்பிக்கையும், இலட்சியமும் தான் அதன் காரணிகள்.

உங்களுடைய தலைமைப் பண்பு எப்படி இருக்கிறது என்பது இங்கே கவனிக்கப்படும். ஒரு தலைப்பைக் கொடுத்தவுடன் முதலில் தைரியமாகப் பேசி தனது கருத்தை முன்வைப்பவருக்கு ஸ்பெஷல் மதிப்பெண் உண்டு. சொல்ல வருகின்ற விஷயம் எதுவானாலும் அதை தெளிவாய்ச் சொல்ல வேண்டும் என்பது பாலபாடம்.

இன்னொருவர் சொல்கின்ற கருத்தை ஒட்டியோ, வெட்டியோ நீங்கள் பேசலாம். உங்களுடைய மனதில் எது சரியெனப் படுகிறதோ அந்தப் பக்கம் நின்று பேசுங்கள். ஆனால் அங்கேயும் இங்கேயுமாக பல்டி அடிக்காதீர்கள். அது உங்களுக்கு எதிராய் முடியலாம். வெட்டிப் பேசுவதாய் இருந்தால் அதற்கான ஜஸ்டிபிகேஷன் ரொம்ப முக்கியம். பேசும்போது மற்றவர்களுடைய கண்களைப் பார்த்து பேசுவது நல்லது.

ஒருவர் சொல்லும் கருத்தை விட்டு முற்றிலும் விலகி, தலைப்புக்கு சம்பந்தமே இல்லாத விஷயங்களைப் பேசுவது அதிக பயனளிக்காது. கபாலி பற்றிப் பேசச் சொல்கிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு சினிமா பார்க்கும் வழக்கமே இல்லை. என்ன செய்யலாம் ? “கபாலி எனும் கதாபாத்திரம் இறந்தால் என்ன வாழ்ந்தால் என்ன ? அதனால் சமூகத்துக்கு என்ன மாற்றம் வரப் போகிறது ? திரையரங்கு முதல் நிறுவனம் வரை நாம் அதைப் பற்றிப் பேசவேண்டுமா ?” என்பது போன்ற போல்டான எதிர் கருத்துகளை சொல்லலாம் !

குழு உரையாடல் ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் தான் நடக்கும். அவ்வளவு நேரமும் வெட்கம், தயக்கம், பயம் எல்லாவற்றையும் ஒதுக்கி வையுங்கள். “அடுத்தவன் என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் கவலையில்லை” எனும் மனப்பான்மையை மனதில் கொள்ளுங்கள். தைரியம் தானாய் வந்து விடும்.

லேட்டஸ்ட் விஷயங்கள், புள்ளி விவரங்கள், அறிஞர்களின் கருத்துகள் போன்றவற்றை உங்கள் உரையாடலில் சொருக முடிந்தால் ரொம்ப நல்லது. ஸ்பெஷல் மதிப்பெண்கள் கிடைக்கும். என்ன பேசினாலும் அதை தைரியமாய் பேசுங்கள்.

ஒரு விஷயத்தை மற்றவர்கள் அணுகாத கோணத்திலிருந்து நீங்கள் பேசினால் ரொம்ப நல்லது. அட, இப்படியெல்லாம் சிந்திக்கிறானே, செம கிரியேட்டிவிட்டி என தேர்வாளர் நினைத்தால் நீங்கள் தேர்வு செய்யப்படுவீர்கள்.

ரொம்ப மெதுவாகப் பேசாதீர்கள், ‘உங்களுக்கு தன்னம்பிக்கை இல்லை, சொல்லும் கருத்திலேயே உங்களுக்கு பற்றுறுதி இல்லை’ என்பதன் அடையாளம் அது. ரொம்ப கத்திப் பேசாதீர்கள், “நீங்கள் சர்வாதிகார மனநிலை உடையவர் என்பதன் அடையாளம் அது”. எல்லோருக்கும் கேட்கும் வகையில், தெளிவாக பேசுங்கள். அதுவே சரியானது.

ஒருவர் ரொம்ப நேரம் பேசிக்கொண்டே இருந்தால் நீங்கள் அவரை இடைமறித்து உங்களுடைய கருத்தைச் சொல்ல ஆரம்பியுங்கள். “மைக்கை அவர் கிட்டே குடுங்க” என யாரும் இங்கே சொல்வதில்லை. வாய்ப்புகள் கிடைக்காவிட்டால் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும். அதை நாகரீகமாய் நாசூக்காய் சொல்ல வேண்டும். அதே போல நீங்கள் அதிக நேரம் நீட்டி முழக்காமல் அடுத்தவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

பேசும்போது குழுவிலுள்ள நபர்களைப் பார்த்து தான் பேச வேண்டும். தேர்வாளர்களைப் பார்த்து பேசக் கூடாது. அது நெகடிவ் மார்க். இது குழு விவாதம் என்பது மனதில் இருக்கட்டும். பேசும்போது தனி நபர் தாக்குதல்கள் கூடவே கூடாது. விவாதம் எல்லாம் தலைப்போடு மட்டுமே இருக்கவேண்டும்.

எல்லா தலைப்புகளும் நமக்கு பிடித்தமானதாய் இருக்க வேண்டுமென்றில்லை. நமக்கு பிடிக்காத தலைப்பு கூட தரப்படலாம். கவலையில்லை. ஏதோ கிடைக்கும் ஒரு சில பாயின்ட்களை வைத்துப் பேசலாம். நல்ல பாயின்ட்ஸ் கிடைச்சா தான் பேசுவேன் என நினைக்கக் கூடாது. சில நேரங்களில் இதெல்லாம் கூட்டமான‌ டவுன் பஸ் என நினைத்து, கிடைக்கும் கம்பியில் தொங்க வேண்டியது தான். அசௌகரியமாய் இருந்தாலும் பயணம் சாத்தியப்படும்.

பாடி லேங்குவேஜ் எனப்படும் உடல் மொழி ரொம்ப ரொம்ப முக்கியம். அடுத்தவர் பேசும்போது கவனிப்பது, நாம் பேசும்போது ஒரு சின்ன புன்னகையுடன் நமது கருத்துகளை எடுத்து வைப்பது, கையை ஆட்டியபடியோ, புருவத்தை உயர்த்தியபடியோ, மேஜையில் மெதுவாய் தட்டியபடியோ நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் கவனிக்கப்படும். ஏன் நாம் எப்படி அமர்ந்திருக்கிறோம் என்பது கூட கவனிக்கப்படும். எனவே ரோபோ மாதிரி அமர்ந்து, உணர்ச்சியில்லாமல் பேசவே பேசாதீர்கள். ஒப்பிப்பது போலவும் பேசாதீர்கள்.

குழு விவாதம் என்பது குழாயடிச் சண்டையல்ல. சாதிச்சண்டையல்ல. அரசியல் சண்டையல்ல. இது ஒரு புரஃபஷனல் டிஸ்கஷன். எந்த சந்தர்ப்பத்திலும் நிதானம் இழந்து கத்துவதோ, சாதி, இன, மத, மொழி, அரசியல் பிரிவினைகள் சார்ந்து பேசுவதோ கூடவே கூடாது. அது சொந்தக் காசில் சூனியம் வைப்பதற்குச் சமம்.

தாழ்மையுடன் பேசுங்கள். அதே நேரம் வலிமையாய் உங்கள் கருத்தை எடுத்து வையுங்கள். பேசிய அதே கருத்தை திரும்பத் திரும்ப பேசாதீர்கள். அது சலிப்பையே உருவாக்கும். அடுத்தவர்கள் பேசும்போது கவனியுங்கள், தலையாட்டுங்கள் அவையெல்லாம் நீங்கள் குழுவாய் செயல்படும் குணாதிசயம் உள்ளவர்கள் என காண்பிக்கும்.

கேட்பதற்கு எளிமையாய் தோன்றினாலும் சரியான பயிற்சி இல்லையேல் குழு உரையாடல் பதட்டத்தையே வருவிக்கும். எனவே உங்கள் நண்பர்கள் நான்கைந்து பேராக அமர்ந்து கொண்டு இத்தகைய குழு விவாதங்களை நடத்திப் பாருங்கள். உங்களுடைய பலம் பலவீனம் உங்களுக்குத் தெரியவரும்.

யூடியூப் போன்ற தளங்களில் குரூப் டிஸ்கஷன் டிப்ஸ் நிறைய கிடைக்கும். அவற்றைப் பார்த்தால் அதைக்குறித்த அதிக புரிதல் கிடைக்கும். இணையம் எனும் கடலில் மூழ்கி குரூப் டிஸ்கஷன் முத்தையும் எடுங்கள்.

நமது நோக்கமெல்லாம், அந்த பத்து பதினைந்து நிமிடங்களில் தேர்வாளர்களை வசீகரிக்க வேண்டும். அவ்வளவு தான். வசீகரியுங்கள் வாழ்த்துகள்.

Image result for Group Discussion

பத்து கட்டளைகள்

 1. தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். பிறருடைய விமர்சனங்களுக்குப் பயப்படாமல் தைரியமாய் பேசுங்கள்.

 1. உரையாடலை முதலில் துவங்குவது சிறப்புக் கவனம் பெறும். அதற்கு முயற்சி செய்யுங்கள்.

 1. பதினைந்து முதல் இருபது வினாடிகள் வீதம், மூன்று அல்லது நான்கு முறை பேசுங்கள்.

 1. செவிமடுங்கள். அடுத்தவர்கள் பேசும் கருத்துகளைக் கவனமாய்க் கேட்டு அதை ஒட்டியோ, வெட்டியோ பேசுங்கள்.

 1. உடல் மொழி ரொம்ப முக்கியம். நிமிர்ந்து அமர்வது, கண்களைப் பார்த்து பேசுவது, அசைவுகளால் பேசுவது என உடல்மொழியில் கவனம் செலுத்துங்கள்.

 1. நிறைய பயிற்சி எடுங்கள். ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். யூடியூப் போன்ற தளங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 1. வித்தியாசமான கோணத்திலிருந்து ஒரு விஷயத்தைப் பேச முடியுமா என பாருங்கள்.

 1. சொன்ன விஷயங்களையே திரும்பத் திரும்ப சொல்லாதீர்கள். உங்கள் கருத்தையே நீங்கள் மறுத்தும் பேசாதீர்கள்.

 1. தெளிவாய், நேர்த்தியாய் பேசுங்கள். அதே நேரம் தாழ்மையாய் பேசுங்கள். சண்டைகள், தனிநபர் சண்டைகள் தவிருங்கள்.

 1. பேசும்போது குழுவிலுள்ள நபர்களின் கண்களைப் பார்த்து அவர்களோடு பேசுங்கள். அந்த பத்து பதினைந்து நிமிட குழு உரையாடலில் நீங்கள் தேர்வாளர்களால் கவனிக்கப்படுவதை உறுதி செய்யுங்கள்.

புதிய தலைமுறை : பயோடேட்டா

Image result for interview resume

வேலை நமதே தொடர் – 1

“இந்த புரஃபைல் நல்லா இருக்கு, ஆனா கேன்டிடேட்டை கான்டாக்ட் பண்ண முடியல”

என்னுடைய மேஜையில் ஒரு பயோடேட்டாவை வைத்து விட்டுச் சொன்னார் புராஜக்ட் மேனேஜர் ஒருவர். நான் பயோடேட்டாவைப் புரட்டிப் பார்த்தேன். எங்கள் நிறுவனத்துக்கு தேவையான எல்லா திறமைகளும் அந்த பயோடேட்டாவில் இருந்தன.

புரஃபைலின் மேல்பகுதியில் பார்த்தேன். மொபைல் நம்பர் எழுதப்பட்டிருந்தது. அழைத்தேன். “நீங்கள் தொடர்பு கொள்ளும் எண்ணைச் சரிபார்க்கவும்” என சலிக்காமல் மறு முனை சொல்லிக் கொண்டிருந்தது. சற்றே உற்றுப் பார்த்தால், அந்த தொலைபேசி எண்ணில் ஒரு இலக்கம் மிஸ்ஸிங்.

போனில் தொடர்பு கொள்ள முடியாது என்பது புரிந்து போனது, சரி மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு தகவல் கொடுக்கலாம் என புரபைலைப் புரட்டிப் பார்த்தால் கடைசிப் பக்கத்தில் ஒரு மின்னஞ்சல் முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. விக்னேஷ்_நெருப்புடா@ஜிமெயி.காம் என்றிருந்தது. மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டேன். “பிளீஸ் கால் மி” என ஒரு தகவலை அனுப்பிவிட்டு திரும்பினால், “டெலிவரி ஃபெயில்ட்” என செய்தி கண்சிமிட்டியது.

அந்த புரஃபைலை மீண்டும் ஒரு முறை புரட்டினேன். எல்லா தகுதிகளும் இருந்தும், எல்லாம் படித்திருந்தும் இந்தப் பையனை தொடர்பு கொள்ள முடியவில்லையே என நினைத்துக் கொண்டே அதை ஓரமாய்த் தூக்கிப் போட்டேன்.

பயோடேட்டா என்பது ஒரு வீட்டைத் திறக்கும் சாவியைப் போன்றது. சரியான சாவி, சரியான நேரத்தில் கையில் இல்லாவிட்டால் வீட்டைத் திறப்பது சாத்தியமில்லாத ஒன்று. என்னதான் அழகிய வீட்டைக் கட்டி, எல்லா அறைகளிலும் ஏசி மாட்டியிருந்தாலும் சாவி இல்லாம என்ன பண்ண ?

ஒரு பயோடேட்டால என்ன இருக்கு ? என நீங்கள் நினைக்கலாம். உண்மையில், அதில் தான் எல்லா விஷயங்களும் இருக்கின்றன. ஒரு பயோடேட்டா ஒரு அதிகாரியை பத்து முதல் பதினைந்து வினாடிகளுக்குள் வசீகரிக்க வேண்டும். இல்லையேல் அது வேஸ்ட் என முடிவுகட்டி விடலாம்.

நீங்கள் ஒரு புத்தகக் கடைக்குப் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். வரிசை வரிசையாய் எக்கச்சக்கமான புத்தகங்கள் இருக்கின்றன. எல்லாமே புதிய எழுத்தாளர்களின் நூல்கள்.  எதை எடுப்பீர்கள் ? எந்த புத்தகம் உங்களுடைய பார்வையை சட்டென இழுக்கிறதோ அந்த புத்தகத்தை ! அப்படித் தானே ? அப்படி எடுக்கின்ற புத்தகத்தை எத்தனை வினாடிகள் புரட்டிப் பார்ப்பீர்கள் ? அதிகபட்சம் 30..40 வினாடிகள் அவ்வளவு தான்.

அந்த நேரத்தில் அந்த நூல் உங்களை வசீகரித்தால், மேலும் சில நிமிடங்கள் செலவிட்டு அந்த நூலை வாங்கலாமா வேண்டாமா என முடிவெடுப்பீர்கள். முதல் பத்து இருபது வினாடிகளில் அந்த நூலின் அட்டையோ, தலைப்போ, பின்னட்டை வாசகங்களோ ஏதோ ஒன்று உங்களை வசீகரிக்காவிடில் அப்படியே போட்டு விட்டு அடுத்த புத்தகத்தை எடுப்பீர்கள்.

ஒரு சினிமா போஸ்டரைப் பார்க்கிறீர்கள். சில போஸ்டர்களைப் பார்த்ததும் “அட, போய் பாக்கலாமே” என தோன்றும். சில போஸ்டர்கள் சலனப்படுத்துவதில்லை. அப்படித் தான் புரஃபைல்.

வசீகரமான சுருக்கமான பயோடேட்டா தான் மிக முக்கியம். உங்களுடைய தொடர்பு தகவல்கள் மிகச்சரியாக, மிகத்தெளிவாக இருக்க வேண்டியது மிக மிக முக்கியம். முதல் பக்கத்திலேயே, நெற்றியிலேயே அந்த இரண்டு தகவல்களும் வருவது போல அமைத்துக் கொள்ளுங்கள்.

ஒருவேளை உங்களுடைய தொலைபேசி எண் மாற்றப்பட்டால், உடனே பயோடேட்டாவிலும் மாற்றிவிடுங்கள். பழைய காலம் போல டைப் பண்ணியோ, பிரிண்ட் அவுட் எடுத்தோ, பயோடேட்டாக்களை கட்டுக்கட்டாய் சுமந்து செல்லும் காலம் இப்போது இல்லை. எல்லாம் டிஜிடல் மயம். கொஞ்சம் கவனம் செலுத்தி எண்களை சரி செய்யவேண்டும் அவ்வளவு தான்.

அதே போல உங்களுடைய மின்னஞ்சல் முகவரியும் தெளிவாக இருக்க வேண்டும். மின்னஞ்சலை முடிந்தவரை ஜிமெயில், யாகூ போன்ற தளங்களில் வைத்திருங்கள். ஏகப்பட்ட குட்டிக் குட்டி மின்னஞ்சல் தளங்கள் உண்டு, அவற்றை விட்டு விடுங்கள். அதே போல மின்னஞ்சல்களை விக்னேஷ்@குமார்.காம் போல “கஸ்டமைஸ்” செய்வதும் வேண்டாம். முடிந்தவரை சிம்பிளாக வைத்திருங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம். கல்லூரி காலத்துக்கும், வேலை தேடும் காலத்துக்கும் ரொம்பவே வித்தியாசம் உண்டு. கல்லூரி காலத்தில் உங்களுடைய பட்டப்பெயர்களுக்கு தனி மரியாதை இருக்கும். மிஸ்டர் பாடி பில்டர், மிஸ் சாஃப்ட்வேர், மிஸ் பிஸிக்ஸ் போன்ற பெயர்களையெல்லாம் கல்லூரியிலேயே விட்டு விடுங்கள்.

பல புரஃபைல்களில் மின்னஞ்சல் முகவரிகளை 007, சூப்பர், 09191995எபிசி என்றெல்லாம் வைக்கிறார்கள். அதெல்லாம் உங்களுடைய பெயரை நீங்களே கெடுத்துக் கொள்வது போல. சொந்தக் காசில் சூனியம் என்று சொல்லுவாங்களே, அது போன்ற விஷயம் அது. உங்கள் பெயர், கூடவே ஒரு சின்ன அடையாளம் அதுவே போதுமானது. உதாரணம் விக்னேஷ்1995@ஜிமெயில்.காம் போல. அது நீங்கள் தினமும் பயன்படுத்தும் மின்னஞ்சலாய் இருக்கட்டும்.

பயோடேட்டா என்பது என்ன ? சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் நீங்கள் யார் என்பதை இன்னொருவருக்கு சுருக்கமாக, தெளிவாகச் சொல்லும் ஒரு டாக்குமென்ட். வேலைக்கான விஷயம் என்பதால் உங்களுடைய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை அதில் பதிவு செய்கிறீர்கள் அவ்வளவு தான்.

சோ, பயோடேட்டாவில் நாம் கவனிக்க வேண்டியது ரெண்டே ரெண்டு விஷயங்கள் தான். ஒண்ணு, என்ன சொல்லப் போகிறோம் என்பது. ரெண்டு, எப்படிச் சொல்லப் போகிறோம் என்பது.

எந்த வேலைக்கு முயற்சி செய்கிறீர்களோ அந்த வேலைக்கான அம்சங்களை நீங்கள் பயோடேட்டாவில் இருக்கவேண்டும் என்பது பாலபாடம். உதாரணமாக, நீங்கள் ஒரு பத்திரிகையில் வேலைக்கு விண்ணப்பித்தால் நீங்கள் கதை எழுதுவதையும், கவிதை எழுதுவதையும் குறிப்பிடலாம். அதே நேரம் நீங்கள் மெக்கானிக் வேலைக்கு முயல்கிறீர்களெனில் உங்களுடைய கவிதைத் திறமை அங்கே தேவைப்படாது !

எனவே பயோடேட்டா என்பது ஒரு கூட்டாஞ்சோறு எனும் சிந்தனையிலிருந்து வெளியே வாருங்கள். இப்போதும் என்னிடம் வருகின்ற புரஃபைல்களில் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு வாங்கினேன், என்னுடைய உயரம் 167 செமீ என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்க்கிறேன். ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிய வருபவர் 167 செமீ இருந்தால் என்ன 183 சென்டீமீட்டராய் இருந்தால் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.

நீங்கள் விண்ணப்பிக்கப் போகும் நிறுவனத்தைப் பற்றி முதலில் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அந்த திறமை உங்களிடம் இருக்கிறதா என்பதைப் பாருங்கள். இல்லையா ? அதே போன்ற வேறு திறமைகள் இருக்கிறதா என்பதைப் பாருங்கள். அந்த விஷயங்களையெல்லாம் புரஃபைலின் முதல் பக்கத்தில் போடுங்கள். மீண்டும் சொல்கிறேன், முதல் பக்கத்தில் போடுங்கள்.

ஒவ்வொரு நிறுவனமும் ஒரு சில குறிப்பிட்ட வார்த்தைப் பிரயோகங்களை வைத்திருப்பார்கள். அதே வார்த்தைப் பிரயோகத்தை நீங்களும் வைத்தால் சட்டென கவனிக்கப்படுவீர்கள். பூவை, பூ என்றும் சொல்லலாம், புஷ்பம் என்றும் சொல்லலாம். அந்த நிறுவனம் எப்படிச் சொல்கிறதோ அப்படிச் சொல்லிவிட்டுப் போவோமே. மலையாளியின் டீ கடைக்கு போய், “சேட்டா ஒரு சாய” என்று சொன்னால் புன்னகையுடன் முகத்தைப் பார்ப்பார் இல்லையா ?. அப்படி ஒரு யுத்தி தான் இந்த வார்த்தைப் பிரயோகம்.

விஷயத்தை எப்படிப் போடுவது என்பது இரண்டாவது. சில வீட்டுக்குப் போனால் அப்படியே கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல பளிச் என வைத்திருப்பார்கள். வீடு சின்னதாய் இருந்தாலும் நேர்த்தியாய் இருக்கும். அதது இருக்க வேண்டிய இடத்தில் கட்சிதமாய் இருக்கும். அங்கே ஆர அமர உட்கார்ந்து ரிலாக்ஸ் ஆக பேசுவோம்.

சில வீடுகள் மேத்யூ கடந்து சென்ற ஃப்ளோரிடா போல சிதறி சின்னாபின்னமாகிக் கிடக்கும். நுழைந்ததும் எங்கே அமர்வது என்பதில் தொடங்கி, எவ்வளவு நேரம் தான் இங்கே அமர முடியும் என்பது வரை சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். எதுவும் அதனதன் இடத்தில் இருக்காது. விட்டா போதும் சாமி என ஓடியே போய்விடுவோம்.

பயோடேட்டாவும் இப்படி இரண்டு வகைகளில் இருக்கும். ஒன்று நேர்த்தியாய். ஒன்னொன்று ஒழுங்கின்மையாய். இரண்டிலும் இருக்கும் விஷயங்கள் ஒரே மாதிரி இருந்தாலும், இரண்டையும் முன்வைக்கின்ற விதம் வேறுபடும். பிரசன்டேஷன் முக்கியம்.

நல்ல பயோடேட்டா சுவாரஸ்யமாய்ப் பேசுகின்ற நண்பனைப் போல இருக்க வேண்டும். சுவாரஸ்யமான நண்பன் குறைவாய் பேசுவான், பேசுவதையெல்லாம் சுவாரஸ்யமாய்ப் பேசுவான். சில நண்பர்களைக் கண்டால் பின்னங்கால் பிடரியில் பட ஓடியே போய்விடுவோம். அவர்கள் பேசிக் கொல்பவர்கள்.

நல்ல பயோடேட்டாவும் அப்படித் தான். சுருக்கமாக இருக்கவேண்டும் மனதுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். சொல்ல வேண்டிய தகவல்களை மிக மிகச் சுருக்கமாக பதிவு செய்ய வேண்டும் அவ்வளவு தான். பயோடேட்டா என்பது நாவலல்ல. அப்படி நீட்டி முழக்கவே கூடாது. சுருக்கமாய் இருக்க வேண்டும்.

பயோடேட்டாவில் நம்முடைய இலக்கியத் திறமையையும், ஆங்கிலத் திறமையையும் காட்டத் தேவையே இல்லை. இதொன்றும் நவீன கவிதைப் பத்திரிகையல்ல. அல்லது ராக்கெட் சயின்ஸ் ஆய்வுக்கட்டுரையும் அல்ல. ரொம்ப எளிய ஆங்கிலத்தில், நேரடியாக விஷயங்கள் இருக்க வேண்டும். எனக்கு இந்தெந்த விஷயங்கள் தெரியும், இன்னின்ன சான்றிதழ் பயிற்சி எடுத்திருக்கிறேன், இந்த ஏரியாவில் எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் உண்டு, என்னுடைய கல்வித் தகுதி இவை, என்னுடைய பலம் இவை என பளிச் என நேரடியாக இருக்க வேண்டும்.

ஒரு சில பக்கங்களில் தெளிவாக பயோடேட்டாவை முடித்து விடுங்கள். அதற்காக எழுத்துருவைச் சுருக்கி எழுத்துகளை ஷேர் ஆட்டோவில் முண்டியடிக்கும் சென்னைவாசிகளைப் போல நெருக்காதீர்கள். வாசிப்பவர்களுக்கே அது மூச்சு முட்டும். தேவையற்ற விஷயங்களை வெட்டி எறியுங்கள். தேவையான விஷயங்கள் இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, தேவையற்ற விஷயங்கள் இல்லாமல் இருக்க வேண்டியதும் அவ்வளவு அவசியம்.

எழுத்துரு இயல்பாக, சாதாரணமாக இருக்கட்டும். உங்கள் பயோடேட்டாவை வாசிப்பவர் உங்கள் வயசுக்காரராகவோ, உங்கள் ரசனைக்காரராகவோ இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. சுருளிராஜனின் முடியைப் போலவோ, கிரிஸ் கேல்ஸின் சடையைப் போலவோ ஸ்டைல் காட்டத் தேவையில்லை. சாதாரண எழுத்துருவே ரொம்பச் சரி.

புல்லட் பாயின்ட்ஸ் போடலாம். அதே போல சில முக்கியமான வார்த்தைகளை ‘போல்ட்” செய்யலாம். அடிக்கோடிடாதீர்கள். உதாரணமாக நான் ஒரு ஜாவா சர்டிஃபைட் புரஃபஷனல் எனும் வாக்கியத்தில் “ஜாவா சர்டிஃபைட்” எனும் வார்த்தைகளை போல்ட் செய்யலாம். அப்போது வேகமாய்ப் புரட்டுபவர் கூட ஒரு வினாடி தன்னையறியாமலேயே அதை வாசிப்பார். அப்படி தேவையான நான்கைந்து வார்த்தைகளை நீங்கள் போல்ட் செய்யலாம்.

இன்னொரு முக்கியமான விஷயம், பயோடேட்டா உங்களுடைய வாழ்க்கை வரலாறு அல்ல. நீங்கள் குப்புறப் படுத்து தலை நிமிர்ந்த நாள் தொடங்கிய விஷயங்களெல்லாம் அதில் இருக்க வேண்டிய தேவை இல்லை. சமீபத்திய‌ ஆண்டுகள் தான் முக்கியம். பள்ளி இறுதி ஆண்டுக்குப் பின் என வைத்துக் கொள்ளலாம். அதுவும் தேவைக்கேற்ப, நிறுவனத்துக்கேற்ப அதை உருவாக்க வேண்டும்.

பயோடேட்டா என்பது மிக முக்கியமான முதன்மையான விஷயம். எனவே தான் இதை தயாரித்துத் தர பல்வேறு நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்கள் உங்களிடமிருந்து தகவல்களை வாங்கி அவற்றை ஸ்டைலான பயோடேட்டாவாக‌ உருவாக்கித் தெருகின்றன. அதற்காக பல்லாயிரம் ரூபாய்களை அவை கட்டணமாகப் பெறுகின்றன. நாம சமைச்ச சாப்பாட்டை நம்மிடமிருந்து வாங்கி நமக்கே பரிமாறி நம்மிடம் பணம் வாங்கும் நிறுவனங்கள் நமக்கெதுக்கு ? நாமே தயாராக்குவோம் நம்முடைய பயோடேட்டாவை.

கடைசியாக ஒரு நினைவூட்டல். பயோடேட்டா தெளிவாக, எளிமையாக, நல்ல எழுத்துருவில் இருக்கட்டும். தேவையான அம்சங்கள் முதல் பக்கத்தில் இடம்பெறட்டும். தேவையற்ற அம்சங்கள் இடம்பெற வேண்டாம். தொடர்பு தகவல்கள் தெளிவாக இருக்கட்டும். பயோடேட்டாவில் இருக்கும் விஷயங்களெல்லாம் உண்மையாய் இருக்கட்டும்.

Image result for interview resume

பத்து  கட்டளைகள்

 1. பயோடேட்டா வாசிப்பவரை முதல் இருபது வினாடிகளுக்குள் கவரவேண்டும்.

 1. முதல் பக்கம் மிக மிக முக்கியம். உங்களுடைய பலம் அந்த பக்கத்தில் பளிச் என தெரிய வேண்டும்.

 1. கான்டாக்ட் தகவல்களான இமெயில், தொலைபேசி எண், அலைபேசி எண் எல்லாம் சரியாய், தெளிவாய் இருக்கட்டும்.

 1. பயோடேட்டாக்களை நிறுவனங்களின் தன்மைக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.

 1. இரண்டு அல்லது மூன்று பக்கங்களைத் தாண்ட வேண்டாம். தேவையற்ற பொது தகவல்களை தவிருங்கள்.

 1. கல்வித் தகுதி, சர்டிபிகேஷன்ஸ்,பயிற்சிகள், பயிலரங்கங்கள் போன்ற தகவல்களை தவறாமல் முதல் பக்கத்தில் குறிப்பிடுங்கள்.

 1. எளிமையான ஆங்கிலத்தில், தெளிவான எழுத்துருவில், தேவையான இடைவெளி விட்டு எழுதுங்கள். பல வண்ணம், இட்டாலிக்ஸ், அடிக்கோடிடுதல் போன்றவற்றை தவிருங்கள்.

 1. நிறுவனம் எதிர்பார்க்கும் தகுதி சார்ந்தவற்றை முன்னிலைப்படுத்துங்கள்.

 1. இணையத்தில் நிறைய சாம்பிள் ‘டெம்ப்ளேட்கள்’ கிடைக்கின்றன, அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 1. பயோடேட்டாவில் நெகடிவ் விஷயங்கள் எதையும் போடாதீர்கள்.