வெற்றிக்கும், தோல்விக்கும் இடையே ..

வெற்றி தோல்வி பற்றி சிந்தித்தாலே சட்டென நினைவுக்கு வரும் தாமஸ் ஆல்வா எடிசனின் கதை !  ஆயிரக்கணக்கான முறை தோல்வியைத் தழுவிய அவர் கடைசியில் வெற்றிகரமாய் மின்விளக்கைக் கண்டுபிடித்தார். ‘இத்தனை முறை தோற்றுவிட்டீர்களே’ என அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் ‘நான் தோற்றேன் என்று யார் சொன்னது ? எவையெல்லாம் தவறான வழிகள் என்பதைக் கண்டுபிடித்தேன்’ என்றார்.

வெற்றி என்பதும், தோல்வி என்பதும் நமது மனதைப் பொறுத்தது. நமது மதிப்பீடுகளைப் பொறுத்தது. நமது வாழ்க்கையில் நாம் எதை முதன்மைப்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது !

வாழ்க்கையை ஒரு பயணம் என எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விஷயம் நமக்கு இலக்காக இருக்கிறது. ஒவ்வொரு விஷயம் நமக்கு வெற்றியாய் இருக்கிறது. சிறுவயதில் சைக்கிள் ஓட்டுவது வெற்றி என மார்தட்டுவோம். இருபது வயதில் சைக்கிள் ஓட்டுகிறேன் என பீத்திக்கொள்ள முடியாது !

தேர்வில் மதிப்பெண், ஒரு வேலை, திருமணம், குழந்தை வளர்ப்பு, கலைகள் என எல்லாவற்றிலும் நாம் ஒரு விஷயத்தை வெற்றி என கோடு போட்டு வைத்திருக்கிறோம். கோட்டுக்கு இந்தப் பக்கம் வந்தால் வெற்றி, கோட்டுக்கு அந்தப் பக்கம் போனால் தோல்வி என்பதே பெரும்பாலும் நம்முடைய முடிவு.

பெரும்பாலான வேளைகளில் நமது வெற்றியை நிர்ணயிப்பது கூட நாமல்ல. அடுத்தவருடைய தோல்வி தான் ! இன்னொருவரை விட நாம் ஒரு படி மேலே இருப்பதாகக் காட்டி கொள்வது, அல்லது அடுத்தவரை இழுத்து ஒரு படி கீழே தள்ளுவது வெற்றி என கருதிக் கொள்வதுண்டு !

உண்மையில், வெற்றி என்பதும் தோல்வி என்பதும் மாயையே !

வெற்றி என்பதும், தோல்வி என்பதும் வாழ்வின் நிகழ்வுகளுக்கு நாமாகவே இட்டுக் கொண்ட நாமங்கள். மதிப்பெண் பட்டியலில் இந்த இடத்தில் இருந்தால் அது வெற்றி ! பொருளாதாரத்தில் இந்த நிலையில் இருந்தால் அது வெற்றி ! அலுவலகத்தில் இந்த நிலையில் எனில் அது வெற்றி ! கலைகளில் இந்த இருக்கையில் அமர்ந்தால் அது வெற்றி என்றெல்லாம் நாமே மைல்கற்களை போட்டு விடுகிறோம். நமது பயணம் அந்த மைல் கற்களின் வழியாய் போகவில்லையேல் அதைத் தோல்வி என முடிவு செய்து விடுகிறோம்.

வெற்றி என்பது இறைவன் தந்த ஒரு நாளை எப்படி நல்ல முறையில் நாம் செலவிட்டோம் என்பதில் இருக்கிறது. அதே நாளை பிறருக்கு பயனற்ற வகையில் செலவிடும் போது அது தோல்வியாய் மாறிவிடுகிறது ! இப்படிப்பட்ட நாட்களின் கூட்டுத்தொகை நமது வாழ்க்கையின் வெற்றி தோல்வியை பறைசாற்றுகிறது.

ஒரு இடத்தை அடைவதே வெற்றி என முடிவு செய்து விட்டால், அந்தப் பயணத்தின் இடையில் நடக்கின்ற சுவாரஸ்யங்களை மொத்தமாய் இழந்து விடுவோம். மலையின் உச்சியில் ஒரு வீடு இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அந்த உச்சியை அடைவது தான் உங்கள் இலட்சியம் என வைத்துக் கொள்ளுங்கள். அதை இரண்டு விதமாக அணுகலாம்.

ஒன்று, போகும் வழியில் மலையை ரசித்து, மலையின் தலையில் தலையாட்டும் இலைகளை ரசித்து, கானகத்தின் காற்றோடு கதை பேசிச் சிரிக்கும் பெயர் தெரியா மலர்களை ரசித்து, கிளைகளில் தாவும் பறவையின் இறகுகளின் மென்மையை ரசித்து, சரசரக்கும் சருகுகளின் இசையை ரசித்து பயணிக்கலாம்.

அல்லது, வீட்டின் கூரையில் மட்டுமே பார்வையை பதித்து, அர்ஜுனர் வில் போல, கல் முள் எல்லாம் தாண்டி வீட்டை அடையலாம். போகும் வழியில் இருக்கின்ற அத்தனை சுவாரஸ்யங்களையும் நிராகரித்து விடலாம்.

இதில் முதலாவது மனிதன் அந்த வீட்டை அடையாவிட்டாலும் மனதுக்குள் குதூகலமாய் இருப்பான். அவனது பயணம் வெற்றி என அவனுக்குத் தோன்றும். இரண்டாவது மனிதனோ வீட்டை அடைந்தாலும் அது அவனுக்கு விருப்பமானதாய் இல்லை என விரைவிலேயே உணரத் துவங்குவான்.

வெற்றி வண்ணத்துப் பூச்சியைப் பிடிப்பதிலல்ல !

அதை ரசிப்பதில் !

“இலட்சியத்தை நோக்கி ஓடுங்கள். தோல்வியடைந்தால் துவளாதீர்கள். நீடிய பொறுமையுடனும், விடா முயற்சியுடனும் ஓடினால் வெற்றி நிச்சயம்” என்றெல்லாம் மூச்சு முட்ட பேசும் தன்னம்பிக்கை உரைகள் நமக்குத் தேவையற்றவை ! அவை பழைய சித்தாந்தத்தின் பிள்ளைகள்.

ஒரு இலக்கை அடைவதல்ல வெற்றி !

இலக்கு எது என அறிவதில் !! 

மரணப் படுக்கையில் மூச்சை இழுத்து இழுத்து விடும் ஒருவரிடம் கேட்டுப் பாருங்கள். சிக்கலில்லாமல் மூச்சு விடுவதே வாழ்க்கையின் வெற்றி என்பார் !

டயாலிஸிஸ் படுக்கையில், தினமும் அளந்து வைத்த அரை டம்பர் தண்ணீரில் மட்டுமே நாக்கை நனைத்து வாழும் ஒருவரிடம் கேளுங்கள், நிறைய தண்ணீர் குடிப்பதே வாழ்க்கையின் வெற்றி என்பார்.

சாலை கடக்க ஆளை எதிர்பார்த்து கலங்கி நிற்கும் பார்வையிழந்தவர் சொல்வார், உலகைக் காண முடிந்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி !

மௌனத்தின் தாழ்வாரங்களில் உழலும் பேச்சிழந்தவருக்கோ, ஒரு வார்த்தை பேசுவதே வாழ்க்கையின் ஆகப்பெரிய வெற்றியாய் இருக்கும் !

சற்றே சிந்தித்துப் பார்ப்போம் !

எது வெற்றி ?

மாருதி வைத்திருப்பவர் மெர்சிடிஸ் க்கு மாறுவதா ? கூரை வீடு வைத்திருப்பவர் மாளிகை வீட்டுக்கு இடம் பெயர்வதா ? இல்லை ! வெற்றி என்பது நாம் பயணிப்பதில் இல்லை, நமக்குள் பயணிப்பதில் இருக்கிறது !

நமது பால்யகால நினைவுகளை கொஞ்சம் அசைபோட்டுப் பார்ப்போம் ! எது நமக்கு வெற்றியாய் தெரிந்தது ? எது நமக்கு மகிழ்ச்சியாய் இருந்தது ?

தந்தையின் கரம் பிடித்து வரப்புகளில் நடந்த நாட்கள், கணினியில் விரல் அடித்து கடந்த நாட்களை விட உன்னதமானவை இல்லையா ? அன்னையின் கரம் தொட்டு அமுதுண்ட நாட்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல் உணவுகளை விட உன்னதமானவை இல்லையா ? சண்டையிட்டும், அழுதும் திரிந்த சகோதர நாட்கள் அலுவலக கெட் டுகதர்களை விட மகத்துவமானவை இல்லையா ?

எனில் வெற்றி என்பது உயர்தலில் அல்ல, உணர்தலில் !

உறவுகளின் பாசக் கூட்டில் நாட்களை இனிதே கழிக்க முடிந்தால் அது வெற்றி ! மண் வந்த கடவுளான‌ பெற்றோரைப் பாதுகாக்க பாசம் துடித்தால் அது வெற்றி ! தோழர்களின் தேவையில் கேட்காமலேயே கால்கள் ஓடினால் அது வெற்றி ! மனித நேயத்தின் குரல் கண நேரமும் உயிர்ப்புடன் துடித்தால் அது வெற்றி !

எனில், வெற்றி என்பது சேர்ப்பதில் அல்ல, செலவழித்தலில் !

பாசத்தின் கரம் பிடித்து மகனுக்காகவும், மகளுக்காகவும் உழைக்கும் தந்தை, மனதில் இம்மியளவும் சோர்வு கொள்வதில்லை. பிள்ளைகளில் நலனே அவரது வெற்றி !  நேசத்தில் தினம் நனைந்து அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்யும் அன்னை எரிச்சல் கொள்வதில்லை. பிள்ளைகளின் பசியாற்றுதலே அன்னையின் வெற்றி

!எனில் வெற்றி என்பது அடைதலில் அல்ல, உடைதலில்.

கடைகளிலும், இணையத்திலும் வெற்றிகளுக்கான விதிமுறைகள் ஆயிரக்கணக்கில் உண்டு. தோல்வியிலிருந்து எப்படி வெற்றியை பற்றிக் கொள்ளலாம் என போதிக்கும் நூற்கள் பல்லாயிரக்கணக்கில் உண்டு. அவையெல்லாம் பொருளாதாரத்தின் பல் பிடித்து உங்களை சிம்மாசனம் ஏற்றத் துடிப்பவை !

அவற்றை ஒதுக்குங்கள் ! வெற்றி என்பது இருக்கைகளில் இல்லை இதயத்தில் இருக்கிறது. வெற்றி என்றால் என்ன என்பதை மறு பரிசீலனை செய்வோம். வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதிலும், நமது வாழ்க்கையை பிறருக்கு பயனுள்ள வகையில் அமைத்துக் கொள்வதிலும் தான் வெற்றி இருக்கிறது !

கோபத்தை துரத்தி விட்டு அன்பை அணிந்து கொள்ளும் வாழ்வில் வெற்றி இருக்கிறது. சலனத்தை விலக்கி விட்டு உறவுகளை இறுகப் பிடிப்பதில் வெற்றி இருக்கிறது. இறுக்கத்தை உடைத்து விட்டு மன்னிப்பை பகிர்வதில் வெற்றி இருக்கிறது !

உலகம் தருகின்ற அட்டவணைக்குள் அடைபடுவதல்ல வாழ்க்கை ! இறைவன் கொடுத்த சிறகைக் கொண்டு வானம் அடைவதே வாழ்க்கை !

இக்கணம் நமதே !

இவ் எண்ணமே வெற்றி !!

*