ஆனந்த விகடன் : காட்டேரி காதல்

  twilight_bigteaserposter 

வேம்பயர்கள் அல்லது இரத்தக்காட்டேறிகள் என்றாலே உள்ளுக்குள் உதறல் எடுக்க வேண்டும். பயத்தினால் தூக்கம் கெடவேண்டும். அது தான் நியதி. ஆனால் ஒரு வேம்பயர் இளம் பெண்களுடைய தூக்கத்தைக் கனவுகளால் கெடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வசீகர வேம்பையர் டுவைலைட் கதையில் வரும் நாயகன் எட்வர்ட் குல்லன்.

கதையின் நாயகி பதினேழு வயதான அழகுப் பெண் பெல்லா எனும் இஸபெல்லா ஸ்வான். அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனில் இருக்கும் தந்தையுடன் வாழும் ஆசையில் அரிசோனா மாநிலத்தை விட்டு வருகிறார். புது இடத்தில், புது பள்ளிக்கூடத்தில் புதுப் புது நட்புகள். வகுப்பில் அருமே அமர்ந்திருக்கிறார் கதாநாயகன் எட்வர்ட். “தன்னை அறியாமலேயே” காதலில் விழுகிறாள்.

ஆனால் நாயகனோ ஒரு மர்ம மனிதனாய் இருக்கிறான். ஒருமுறை வேன் ஒன்று பெல்லாவை இடிக்கப்போகும் நேரத்தில் வெறும் கையால் வேனை நிறுத்தி பெல்லாவைக் காப்பாற்றுகிறான். திடீர் திடீரென காணாமல் போய்விடுகிறான். அப்புறம் தான் விஷயம் தெரிகிறது, அவன் ஒரு இரத்தக் காட்டேறி. ஆனால் மனுஷ இரத்தம் குடிக்காமல் வெறும் மிருக இரத்தம் குடிக்கும் நல்ல காட்டேறி.

Bella-and-Edwardஇவர்களுக்கிடையே வில்லனாய் வருகிறார் ஜேம்ஸ் எனும் படு பயங்கர இரத்தக் காட்டேறி. பெல்லாவின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்க வேண்டும் எனும் வெறி அவனுக்கு. வேம்பயர்களுக்கும், மனுஷர்களுக்கும் காதல் என்பதை அவனால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. பார்முலா மாறாமல், எட்வர்ட் மற்றும் நல்ல காட்டேறிகள் எல்லாம் சேர்ந்து வில்லனின் திட்டங்களை ஒவ்வொன்றாய் முறியடிக்கின்றனர்.

வில்லனின் அட்டகாசங்களைப் பொறுக்க முடியாத பெல்லா தனது சொந்த ஊருக்கே ஓடி விடுகிறார். விடுவாரா வில்லன், சொந்த ஊருக்கே சென்று கதா நாயகியைக் “கடித்து” விடுகிறான். ஹீரோ தக்க சமயத்தில் சென்று கதாநாயகியை மீட்டு, வில்லனை ஒழிக்க, கதை முடிகிறது.

ஸ்டெபனி மேயர் எழுதிய நான்கு நாவல்களின் முதல் பாகம் தான் இந்த டுவைலைட். “இதையெல்லாம் புத்தகமா போட முடியாதும்மா” என 14 பப்ளிஷர்ஸ் நிராகரிக்க, கடைசியில் ஒரு பப்ளிஷர் புத்தகத்தைப் போட்டார். அடித்தது ஜாக்பாட். பெட்ரோலில் பற்றிய தீ போல இளசுகளின் மனசை சட்டென பற்றிக் கொண்டது நாவல். உலகெங்கும் படு ஹிட்டாகியிருக்கும் இந்த நாவலின் இரண்டாம், மூன்றாம், நான்காம் பாகங்களும் வெளியாகி இலட்சக் கணக்கில் விற்று வசூலில் கலக்கிக் கொண்டிருக்கின்றன. இன்றைய தேதியில் முப்பத்து ஏழு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, இருபத்து ஆறு நாடுகளில் விற்பனையாகி ஒரு சர்வதேச ஹிட் நாவலாகியிருக்கிறது இது. காரணம் இளசுகள் இந்த நாவலில் காட்டும் அதீத ஆர்வம்.

முதல் நாவலான டுவைலைட் கடந்த ஆண்டு திரைப்படமாக வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. ராபர்ட் பாட்டின்சன் நாயகனாகவும், கிரிஸ்டன் ஸ்டிவர்ட் நாயகியாகவும் கலக்கியிருந்தனர். நாவலின் அடுத்தடுத்த பாகங்களும் விரைவில் திரையேறப் போகின்றன.

“இப்படி ஒரு கதை எழுத எப்படித் தோணிற்று” என்று கதாசிரியரைக் கேட்டால், ஒரு நாள் ஒரு கனவு கண்டேங்க, அதைத் தான் நாவலாய் எழுதினேன் என்கிறார் கூலாக.

ம் நமக்கும் வருதே கனவு !