புத்தாண்டு !
ஒரு நாளைக்கு
இருபத்தைந்து
மணி நேரங்களைத்
தரப்போவதில்லை.
ஆண்டுக்கு
நானூறு நாட்களோ
வாரத்துக்கு
ஆறு நாட்களோ
அளிக்கப் போவதில்லை.
பசிக்காத
வயிறையோ,
இமைக்காத
விழிகளையோ
பரிசளிக்கப் போவதில்லை.
ஒன்று மட்டும்
உன் வசம் உண்டு !
வெறும் தினங்களை
செலவிட்டு
நீ
மனங்களை சம்பாதிக்கலாம்.
வாரங்களை செலவிட்டு
இறை
வரங்களைச் சம்பாதிக்கலாம்
மாதங்களைச் செலவிட்டு
நீ
மனிதத்தை சம்பாதிக்கலாம்.
புத்தாண்டு
புத்தாடைகளின் வனப்பிலல்ல
பிறருக்குள்
புன்னகை விதைக்கும்
உனது நினைப்பில்!
அலுமினியம்
பாத்திரமாகலாம்
விமானத்தின் பாகமாகலாம்.
பயன்பாட்டின்
நிலை பொறுத்து !
நாட்கள்
வெறும் அடையாளங்கள்
பயன்பாட்டைப் பொறுத்தே
அவை
பெறும் அர்த்தங்கள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்