தலைக்கவசம் : தலைக்கு அவசியம்

( இந்தவார தமிழ் ஓசை நாளிதழின் ஞாயிறு இணைப்பான களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )

new-bitmap-image.JPG சாலைப் பாதுகாப்பு என்பது தேசத்தின் மிகவும் முக்கியமான பிரச்சனையாக உருமாறியிருக்கிறது. காரணம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நிகழ்ந்து வரும் விபத்துகள். பல இலட்சம் உயிர்களைப் பலிவாங்கும் இருசக்கர விபத்துகளுக்கு முக்கியமான காரணம் தலைக்கவசம் அணியாமல் பயணிப்பதே என்னும் ஆய்வுகளின் அடிப்படையில் உலக அளவில் எல்லா நாடுகளும் தலைக்கவசத்தின் தேவையை உணர்ந்து செயல்படுகின்றன.

தமிழகத்தில் தலைக்கவசம் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுவதை அரசு இப்போது கட்டாயமாக்கியிருப்பது விபத்து உயிரிழப்பைக் குறைக்க தமிழக அரசு எடுத்துள்ள ஒரு தீவிர நடவடிக்கை என்றே கொள்ள வேண்டும். கர்நாடகாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செயலாக்கம் பெற்ற இந்த சட்டம் தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் அமலுக்கு வருகிறது.

ஃபைபர் கிளாஸ், பைண்டர் ரெசின், யூ.வி ஸ்டெபிலைசர் போன்றவற்றின் உதவியுடன் தயாராக்கப் படுகிறது தலைக்கவசம். கண்ணாடி நார் பூச்சு, அதன்மேல் ஒட்டிக் கொள்ளும் பைண்டர் ரெசின் என ஒன்றன் மீது ஒன்றாக இவை பல அடுக்குகளாக சேரும்போது தலைக்கவசம் தயாராகிறது.

ரெசினில் நல்ல தரமான ரெசினை உபயோகப்படுத்தினால் மட்டுமே தலைக்கவசம் தரமானதாய் இருக்கும். அதே போல கண்ணாடி இழைகளிலும் சி, இ என பல வகை இழைகள் உள்ளன. தரமான இழைகளினால் தயாராக்கப்படாத ஹெல்மெட் பார்வைக்கு தலைக்கவசம் போல் இருக்குமே தவிர பாதுகாப்புக்குப் பயன்படாது என்கிறார் பிளாஸ்டிக் தொழில் நுட்ப வல்லுநர் திரு. சந்திரசேகரன் அவர்கள்.

ஹெல்மெட் கட்டாயமாக்கப் பட்டதும் இன்று சாலை ஓரங்களிலும், மர நிழல்களிலும், சந்துகளிலும் எங்கும் ஹெல்மெட் கடைகள். தலைக்கவசங்கள் வெறும் இருநூறு முந்நூறு ரூபாய்க்கே கிடைக்கிறது என்பது ஆச்சரியத் தகவல். இவை நிச்சயம் போலியானவையே. Steelbird, Studd, Protech போன்ற நிறுவனங்கள் தரமான தலைக்கவசங்களை விற்கின்றன. போலிகள் அந்த பெயரில் கூட உலவலாம் எனவே அவர்களுடைய நேரடி விற்பனை நிலையங்களையே அணுகி வாங்குவது பலனளிக்கும்.

தரமான தலைக்கவசம் ஆயிரம் ரூபாய் ஆகலாம். மிகவும் குறைந்த விலையிலுள்ள தலைக்கவசங்கள் நிச்சயம் தரமற்றவையே. எடைக்கும், ஹெல்மெட் பாதுகாப்புக்கும் சம்பந்தம் கிடையாது. எடை எண்ணூறு கிராமுக்கும் இரண்டு கிலோவுக்கும் இடைப்பட்டதாக இருக்கும் தரமான தலைக்கவசங்கள்.

ஹெல்மெட்டுக்குள் உள்ளே உள்ள துணியை விலக்கிப் பார்த்து கரடுமுரடாகவோ, மணல் துகள்கள் இருந்தாலோ வாங்காதீர்கள். அது போலியான தலைக்கவசம். என்று நல்ல தலைக்கவசங்களை வாங்குவதற்கான யோசனைகளையும் அவரே தெரிவிக்கிறார்.

1961ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மோட்டார் வாகனங்களில் தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது. உலகிலேயே முதன் முதலாக தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்ட நாடு எனும் பெருமையையும் ஆஸ்திரேலியா பெறுகிறது. அதுமட்டுமன்றி உலகிலேயே சைக்கிளில் செல்வோர் ஹெல்மெட் அணியவேண்டும் என்பதைச் கட்டாயமாக்கிய நாடும் ஆஸ்திரேலியா தான் 1990 களில் இந்த சட்டம் அமுலுக்கு வந்தது. தற்போது சில அமெரிக்க மாநிலங்களிலும், ஸ்வீடன், இத்தாலி போன்ற நாடுகளிலும் இந்த சட்டம் அமலில் உள்ளது.

ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, டென்மார்க், பின்லாந்து, பிரான்சு, ஜெர்மனி, ஹங்கேரி, ஐஸ்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, லாட்வியா, லித்தானியா, லெக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுக்கல், சுவீடன், சுவிட்சர்லாந்து ஸ்பெயின் போன்ற பல நாடுகளில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் வாகனங்கள் ஓட்டுவது கட்டாயச் சட்டமாக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் இருபது கிலோ மீட்டருக்கும் குறைவான வேகத்தில் மட்டுமே செல்லும் திறனுடைய இருசக்கர வாகனங்களுக்கு இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து, பின்லாந்து, கனடா, நியூசிலாந்து உட்பட பல நாடுகளில் நிலவி வரும் சைக்கிள் தலைக்கவச சட்டம் பெரும்பாலும் சிறுவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தலைக்கவசத்தைக் கட்டாயமாக்கும் தேசீயச் சட்டம் எதுவும் இல்லை. ஆனால் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனிச் சட்டங்களை வைத்துள்ளன. கொலராடோ , இல்லினாய்ஸ் போன்ற சில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் 47 மாநிலங்களில் தலைக்கவசச் கட்டாயச் சட்டம் உள்ளது.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சைக்கிளில் செல்லவும் தலைக்கவசம் அணியவேண்டும் என்பதும் அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்களில் சட்டமாக உள்ளது. இதன்மூலம் சிறுவர் விபத்துகள் 54 விழுக்காடு குறைந்திருப்பதாக அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் 1967ம் ஆண்டு முதல் சுவடு எடுத்து வைத்த தலைக்கவச கட்டாயச் சட்டம் 1975ம் ஆண்டிற்குள் பெரும்பாலான மாநிலங்களில் அமலுக்கு வந்துவிட்டது. இதனால் அங்கு விபத்துகள் பெருமளவு குறைந்து விட்டன. அங்கு தலைக்கவசம் அணியாமல் பயணிப்பவர்களுக்கு மருத்துவக் காப்பீடு கிடைப்பதிலும் சிக்கல் இருப்பதனால் மக்கள் சட்டத்தை மீறாமல் பின்பற்றுகின்றார்கள். அங்குள்ள மக்களில் 81 விழுக்காட்டினர் தலைக்கவசச் சட்டத்தை ஆதரிக்கிறார்கள்

தலைக்கவசங்களின் வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் 1880 களில் தலைக் காயமே பெரும்பாலான சைக்கிள் விபத்துகளினால் உயிரிழக்கச் செய்கிறது என்று சொல்லி தலைக்கு ஏதாவது கவசம் போல போட ஆரம்பித்தார்கள். 1953ம் ஆண்டு தென் கலிபோர்ணியாவிலுள்ள பேராசிரியர் லோம்பர்ட் என்பவர் தலைக்கவசத்துக்கான காப்புரிமையைப் பெற்றார். இதுவே நவீன கால தலைக்கவசங்களுக்கெல்லாம் முன்னோடி என நம்பப்படுகிறது.

1970 களின் துவக்கத்தில் தலையைச் சுற்றி பெல்ட் போன்ற இழைகளால் ஆன தலைக்கவசம் விற்பனைக்கு வந்தது. இது பெரும்பாலும் சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொள்பவர்களின் காது தரையில் உரசாமலிருக்கவே உருவானதாம். அதன் தொடர்ச்சியாக வந்தவையே நவீன கால தலைக்கவசங்கள்.

மேலை நாடுகளில் போக்குவரத்துத் துறை மற்றும் ஸ்னெல் என பல தர அங்கீகாரங்கள் தலைக்கவசங்களின் தரத்தை பரிசோதிக்கின்றன. இதில் ஸ்னெல் சோதனையில் 500 கிலோ மீட்டர் வேகத்தில் தலைக்கவசத்தைத் தாக்கியும், கனமான எடையை அதன் மீது போட்டும், ஒரே நேரத்தில் தலைக்கவசத்தை ஏழெட்டு முறை தாக்கியும், ஒரே இடத்தில் பலமுறை தாக்கியும் சோதனைகள் மேற்கொள்கிறார்கள்.

இருசக்கர வாகனங்களில் செல்வது குறைந்த பாதுகாப்பான பயணம் என்பது நாம் அறிந்ததே. 2004ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி இருசக்கர வாகன விபத்துகள் மற்ற வாகன விபத்துகளை விட 34 மடங்கு அதிகமாகும். தலைக்கவசங்கள் விபத்தினால் தலைக்கு ஏற்படக்கூடிய காயங்களிலிருந்து காப்பாற்றுகிறது என்பது இன்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. தலைக் கவசம் அணிவதனால் இருசக்கர வாகன விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் 88 விழுக்காடு தவிர்க்கப்படும் என்கிறது ஆய்வு ஒன்று.

தலைக்கவசங்களைப் பயன்படுத்துவதால் விபத்துகளினால் ஏற்படும் மருத்துவச் செலவுகள் பெருமளவுக்குக் குறைந்துவிடுகிறது. மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பும் வாய்ப்புகள் பெருமளவு அதிகரிக்கின்றன.

தலைக்கவசம் அணிவதனால் கழுத்துப் பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்னும் வாதத்தை அமெரிக்காவில் கோல்ட்ஸ்டெயின் ஆய்வு பொய் என நிரூபித்திருக்கிறது.

தலைக்கவசம் ஒருவகையில் தலைப் பாதுகாப்புக்கு இருப்பது போல சாலைச் சத்தங்களிலிருந்து கொஞ்சம் காதுக்கும் மனதுக்கும் ஓய்வையும் கொடுக்கிறது என்பது தலைக்கவசப் பயன்பாட்டாளர்களின் கருத்து. இது கவனத்தைச் சாலையில் செலுத்தி வாகனம் ஓட்டுவதற்கு வழிசெய்யும். குளிரிலிருந்து தப்பிக்கவும், தூசிலிருந்து தப்பிக்கவும், பூச்சிகள் போன்றவை கண்களையும், காதுகளையும் தாக்காமல் காக்கவும் கூட தலைக்கவசங்கள் பயன்படுகின்றன என்பன தலைக்கவசங்களின் சிறப்புப் பலன்கள் எனலாம்.

தலைக்கவசம் அணிவது உயிர்காக்கும் என்னும் விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லவேண்டியது நமது கடமையாகும். அதே போல தரமற்ற தலைக்கவசங்கள் பயன்படுத்தினால் விபத்து நேரங்களில் உடைந்து போய் அது அதிக பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் அபாயமும் உண்டு என்பதையும் மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

தலைக்கவசம் வாங்கும்போது அதன் தரத்தைப் பார்த்து வாங்கும் அதே வேளையில், வார்ப்பட்டை நன்றாக வலுவாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்,

தலைக்கவசத்தை தலையில் மாட்டிவிட்டு தலையை வேகமாக அங்கும் இங்கும் அசைத்துப் பாருங்கள். தலைக்கவசம் தனியே அசையக் கூடாது. அசைந்தால் அதை விட்டுவிட்டு வேறொரு நல்ல தரமானதை வாங்குங்கள்.

அணியும்போது திருப்திகரமான தலைக்கவசத்தை வாங்குதல் அவசியம், இல்லையேல் அதுவே பிரச்சனையாகிவிடக் கூடும். தலைக்கவசத்துக்காக செலவிடும் தொகை என்பது நம் உயிருக்குச் செய்யும் காப்பீடு போலக் கருத வேண்டும். நம்முடைய உயிரையும் நம்மை சார்ந்திருப்பவர்களின் எதிர்காலத்தையும் நமது தலைக்கவசமே நிர்ணயிக்கிறது எனும் எண்ணம் எப்போதும் இருத்தல் அவசியம்

தலைக்கவசம் அரைக் கவசமாக இல்லாமல் முழு தலையையும் மறைக்கும் விதத்தில் அமைந்திருப்பது மிக மிக அவசியம். தலைக்கவசங்கள் சட்டத்தின் கண்களுக்கு முன்னால் காட்டப்படும் அடையாள அட்டைகளல்ல, அது நம் அவசியத் தேவை என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். நாம் சட்டத்தை ஏமாற்ற நினைக்கையில் ஏமாந்து போவது நாம் என்பதைப் புரிய வேண்டும்.

பார்வைக்குத் தடை ஏற்படுத்தாத தலைக்கவசங்களையே தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். அல்லது சாலைப்பயணத்தில், குறிப்பாக இரவு நேரப் பயணங்களில் அது இடஞ்சலாய் மாறிவிடக் கூடும்.

காதை முழுவதுமாக அழுத்தி வலி தரும் தலைக்கவசங்களைத் தவிர்க்க வேண்டும். சத்தத்தை முழுதுமாக தடை செய்யும் தலைக்கவசங்களையும் தவிர்க்க வேண்டும்.

அதிக எடையுள்ள தலைக்கவசங்களையும் தவிர்க்க வேண்டும். தற்போது இஞ்ஜக்சன் மோல்டிங் வகை தலைக்கவசங்கள் கிடைக்கின்றன. இதில் கனம் குறைவு ஆனால் விலை சுமார் 2500.

தலைக்கவசங்கள் உங்களுக்கு அலர்ஜி நோயை ஏற்படுத்தா வண்ணம் கவனித்துக் கொள்ள வேண்டும். எண்ணைப்பசை தலை உடையவர்கள் தலைக்கவசத்துக்கு உள்ளே இன்னொரு துணியை வைத்து அணிவது தலைக்கவசம் விரைவில் பயனற்றுப் போவதிலிருந்து பாதுகாக்கும்

காவல்துறையினரின் ஈடுபாடு இதில் மிக மிக அவசியம். சுயநலச் சில்லறைகளை மட்டுமே மீண்டும் எதிர்பார்ப்பார்களெனில் சட்டம் என்பது ஏடுகளில் தூங்கும் கரையானாகி விடும் அபாயம் உண்டு. தலைக்கவசம் சட்டம் அமலுக்கு வரும் அதே நேரத்தில் அந்த தலைக்கவசத்தையும் போட்டுக்கொண்டு நாம் செல்ல வேண்டிய சாலைகளையும் அரசு சற்று கவனித்தால் நன்றாக இருக்கும்.

முக்கியமான பணிகளை தலையாய பணி என்பது நம் வழக்கம். தலைக்குக் கவசம் அணிவதே தலையாய பணிகளில் எல்லாம் தலையாய பணி என்பதை அனைவரும் கவனத்தில் கொண்டு நாட்டின் விபத்துச் சோகங்களைக் குறைக்க உறுதியெடுப்போம்.