பீஸ்ட் விமர்சனம் / BEAST REVIEW

நெல்சனின் கற்பனை வறட்சியின் வெளிப்பாடு தான் பீஸ்ட் திரைப்படம் ! 

அதரப் பழசான கதையை, அதை விடப் பழசான திரைக்கதையில் கொடுத்திருக்கிறார் நெல்சன். அவர் நம்பியிருக்கும் ஒரே அட்சய பாத்திரம் விஜய் தான். அதுவே ஒரு கட்டத்தில் சலிப்பாகிப் போய், ‘இன்னும் எவ்ளோ நேரம்டா வருவீங்க’ என நொந்து நூடூல்ஸ் ஆகும்போது ஒரு பாட்டைப் போட்டு நம்மை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். 

அந்த ஷாப்பிங் மாலை ஹைஜாக் செய்யாமல் இருந்திருந்தால் எவ்ளோ நல்லா இருந்திருக்கும் என நினைத்துக் கொண்டே நாம் வெளியே வருகிறோம். 

விஜயகாந்த் நடித்து நடித்து அவருக்கே போரடித்துப் போன அதே பாகிஸ்தான் தீவிரவாதி, அதே ‘தலைவனை விடுதலை செய்’ எனும் கோரிக்கை, அதே வெள்ளை தாடி தீவிர வாதி தலைவன், அதே தீவிரவாதியை அழிக்கும் ஹீரோ ! என அட்லிக்கே ஜெர்க் கொடுக்கும் திரைக்கதை ! ஒரே ஆறுதல் பக்கம் பக்கமாக தேச பக்தி வசனங்களையும் சொல்லி நமது குரல்வளையில் ஏறி மிதிக்கவில்லை என்பது தான்.  

முன்னொரு காலத்தில் இப்படி ஒரு படம் பார்த்தேன் என சொல்லும் அத்தனை பேரும் ஊகித்து விடக் கூடிய அக்மார்க் காட்சிகள். ஏசி வெண்ட் வழியாக தவழ்ந்து போவது, பணயக் கைதிகளை உட்கார வைத்திருப்பது, விடுவிக்கப் போறியா இல்லையா என மிரட்டுவது, எனக்கு தப்பிப் போக ஒரு பிளைட் வேணும் என சொல்வது.. ஷப்பா… நெல்சன்… புது படமாவது பாத்து தொலைய்யா என கத்தத் தோன்றுகிறது. 

ஒரு சின்ன மாலுக்குள் அடைபடும் கதையை தூக்கி நிமிர்ந்த வேண்டுமெனில் கொஞ்சம் சுவாரஸ்யமான, திருப்பங்கள் நிறைந்த ஒரு திரைக்கதை மிக மிக அவசியம். ஹீரோவும் செல்வராகவனும் இணைந்து அப்படி ஏதோ திட்டம் போடப் போகிறார்கள், மணி ஹேய்ஸ்ட் புரபசர் போல ஏதோ ஒரு மேட்டர் இருக்கிறது என காத்திருந்தால், அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை கிளம்பு காத்து வரட்டும் என கொமட்டிலேயே குத்தி விரட்டி விடுகிறார்கள். 

படத்தில் சீரியசாக வரவேண்டிய காட்சிகளை மினிஸ்டர் வந்து காமெடியாக மாற்றி விடுகிறார். காமெடியாக வேண்டிய காட்சிகளை யோகிபாபுவும் கிங்க்ஸ்லியும் செம சீரியசாக்கி கடுப்படிக்கிறார்கள். ஒருத்தனுக்கு கதைப் பஞ்சம் வரலாம், நகைச்சுவைக்குமாய்யா பஞ்சம் ?

தீவிரவாதிகளைப் பார்த்தால் ரொம்பவே பரிதாபமாக இருக்கிறது. குறிபார்த்து சுடத் தெரியவில்லை, ஒரு கத்தியை வீசத் தெரியவில்லை, குறைந்த பட்சம் பணயக் கைதிகளை மிரட்டக் கூட தெரியவில்லை. இருட்டு அறையில் டார்ச் அடித்துத் திரிவது போல துப்பாக்கியை அங்கும் இங்கும் ஆட்டிக் கொண்டு விஜயிடம் அடிவாங்கி அழிகிறார்கள். 

நாலு முக்கு ரோட்டில் பான் பீடா 420 விற்கும் அங்கிள் போல ஒரு வில்லன். ஷப்பா.. கொஞ்சமாச்சும் டஃப் குடுத்திருக்கலாம்ல என ஹீரோவே கடைசியில் கலாய்த்து நெல்சனை கிளீன் போல்ட் ஆக்கி விடுகிறார். என்னையா நீ போல்ட் ஆக்கறே என கடுப்பான நெல்சன் ஹீரோ கையில் ஒரு இளநீர் வெட்டும் கத்தியைக் கொடுத்து கொடுத்து பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கிறார். அவர் ஒற்றை ஆளாய் தரையிலும், வானத்திலும், குகையிலும் வித்தை காட்டி, வார் பிளைட்டில் அமர்ந்து கொண்டு சர்வ தேசத்தோடும் வீடியோ கேம் விளையாடி சிரிக்க வைக்கிறார். அந்த கடைசி 15 நிமிடத்தில்  தனக்கு நகைச்சுவை சிறப்பாய் வரும் என நெல்சன் நிரூபித்திருக்கிறார். பார்வையாளர்களிடம் கொஞ்ச நஞ்ச உயிரும் மிச்சமிருக்கக் கூடாது எனும் அவரோட பரந்த மனசு தான் அதுக்குக் காரணம். 

படத்தில் ஏதாச்சும் ஒரு புது காட்சியைக் காண்பித்தால் இலட்சம் ரூபாய் பரிசு என தாராளமாய் வைக்கலாம். மேக்கிங்கில் தனது திறமையைக் காட்டிய இயக்குனர், கதை திரைக்கதை வசனத்தில் அகல பாதாளத்தில் நழுவியிருக்கிறார். பீஸ்ட், ரஜினிக்கு ஒரு எச்சரிக்கை மணி. நெல்சனைக் கழட்டி விட்டுடுங்க, அவரு சிவகார்த்திகேயன் கூட டாக்டர் கம்பவுண்டன்னு ஏதாச்சும் படம் எடுத்து பொழச்சுக்கட்டும். 

பீஸ்ட்… பீஸ் இல்லாத பழைய குஸ்கா !

ஆனா ஒண்ணு சொல்லணும்.. விஜய்.. செம மாஸ் ! ஸ்டைலிஷ் ! 

*