பைபிள் மாந்தர்கள் : 45 (சேபாவின் அரசி)

தினத்தந்தி ஆன்மீக மலரில் (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் பைபிள் மாந்தர்கள் தொடரின் 45 வது பாகம்.

 

45th Week

யோனாவைத் துரத்திய கடவுள்


யோனா இறைவிசுவாசமோ, இறைபக்தியோ அதிகம் இல்லாத ஒரு மனிதர். ஒரு நாள் கடவுள் அவர் முன்னால் வந்து நின்றார்.

‘யோனா… நினிவே நகர மக்கள் தவறான வழிகளில் போய்க் கொண்டிருக்கிறார்கள். நீ அங்கே போய் கடவுள் உங்களை அழிக்கப் போகிறார் என்று அறிவி’ என்று சொல்லிவிட்டு மறைந்தார்.

யோனா பயந்தார். ‘இதெல்லாம் என்னால் முடியாத காரியம். நான் போய் நினிவே நகரில் கடவுளுடைய வார்த்தையைச் சொன்னால் என்னைக் கல்லால் எறிந்து கொல்வார்களோ, இல்லை பைத்தியக்காரன் என்று துரத்துவார்களோ தெரியாது’. என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.

இதிலிருந்து தப்பியாக வேண்டும். கண்டிப்பாக நான் நினிவேக்குச் செல்ல மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே அதற்கு எதிர் திசையில் உள்ள தர்கீசு என்னும் நகருக்குப் போக தீர்மானித்தார். தர்கீசுக்குக் கப்பல் ஒன்று விரைவில் செல்ல இருப்பதாக அறிந்த யோனா விரைந்து சென்று கட்டணம் செலுத்தி கப்பலுள் நுழைந்து கடல் பயணத்தைத் துவங்கினார்.

‘அப்பாடா ஒருவழியாகத் தப்பித்தோம்’ என்று, பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடித்த கதையாக, நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டே கப்பலில் அடித்தளத்தில் நிம்மதியாகத் தூங்கினார்.

கடவுள் யோனாவை விடவில்லை. யோனா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது கடலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

மாலுமிக்கோ, பயணிகளுக்கோ காரணம் புரியவில்லை.
‘எத்தனையோ காலமாக இந்த வழியாக பயணம் செய்கிறோம், எப்போதுமே இல்லாத கடல் கொந்தளிப்பு இப்போது வந்திருக்கிறதே !’
‘கால நிலை கூட நன்றாகத் தானே இருக்கிறது ? எப்படி இந்தத் திடீர்க் கொந்தளிப்பு ஏற்பட்டது ‘ என தங்களுக்குளே பேசிக் கொண்டனர். கடல் கொந்தளிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்க பயணிகள் எல்லோரும் பயந்து நடுங்க ஆரம்பித்தார்கள்.

‘இப்படியே போனால் கப்பல் உடைந்து கடலில் மூழ்கிவிடுவது உறுதி. எனவே கனமான பொருட்களையெல்லாம் கடலில் தூக்கி வீச வேண்டும்’ மாலுமி ஆணையிட்டான்.

அதன்படி கனமான மூட்டைகளும், தானியங்களும் கடலில் தூக்கி வீசப்பட்டன. இருந்த பொருட்கள் எல்லாம் கடலில் வீசப்பட்ட பின்னும் கப்பல் கவிழும் நிலையிலேயே இருந்தது. கடல் கொந்தளிப்போ, கப்பலில் தடுமாற்றமோ நிற்கவில்லை. கடலின் பெரிய அலைகளில் சிக்கி எப்போது வேண்டுமானாலும் கப்பல் உடையலாம் என்னும் நிலை. மாலுமிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்தப் பயணம் இறுதிப் பயணம் ஆகிவிடும் போலிருக்கிறதே என்று அவரும் கலங்கினார்.

‘எல்லோரும் அவரவர் கடவுளை நோக்கி செபியுங்கள். ஏதாவது கடவுள் வந்தாகிலும் நம்மைக் காப்பாற்றட்டும்’ என்றார் மாலுமி. எங்கும் பதட்டம் பரவிக் கிடந்தது.

எல்லோரும் ஒரே குரலாக அவரவர் கடவுளர்களிடம் மன்றாடத் துவங்கினர். பிரார்த்தனைகள் கப்பலில் எல்லா பாகங்களிலும் கேட்டன. ஆனாலும் கடல் கொந்தளிப்பு சற்றும் குறையக் காணோம். இதையெதையும் அறியாமல் யோனா நிம்மதியாகக் கடலின் அடித்தட்டில் இன்னும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

‘என்ன இது.. இப்படித் தூங்கிக் கொண்டிருக்கிறாயே… விஷயம் தெரியாதா உனக்கு ? கப்பல் உடையப் போகிறது. நாமெல்லாம் சாகப் போகிறோம்…’ கீழ்த்தளத்திலிருந்த மாலுமிகளில் ஒருவர் யோனாவை எழுப்பினார்.

‘கப்பல் உடையப் போகிறதா ? ஏன் ?’ யோனா பதட்டமானார்.

‘ஏனென்று தெரியவில்லை. காலநிலை நன்றாகத் தான் இருக்கிறது. பயணமும் பழகிய வழியில் தான் போகிறது. ஆனாலும் இந்த எதிர்பாராத கடல் கொந்தளிப்பு நிற்கவில்லை. என்னவென்று தெரியாமல் எல்லோரும் குழம்பிப் போயிருக்கிறோம்’ அவர் சொல்ல, யோனாவுக்கு பயம் வந்தது. கடவுள் தான் தம்மைத் துரத்துகிறார் என்பது அவருக்குச் சட்டென விளங்கியது.

மாலுமி பயணிகளைப் பார்த்து , ‘இந்தக் கொந்தளிப்பு சாதாரணமானதல்ல என்றே நினைக்கிறேன். இந்தக் கப்பலில் இருப்பவர்கள் யாரோ பெரிய தப்பு செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதனால் தான் இந்தக் கடல் கொந்தளிப்பு. உண்மையைச் சொல்லுங்கள் யார் அது ? ‘  என்று கேட்டார்.

யோனா மெளனமாய் இருந்தார்.

‘சரி.. நீங்கள் யாரும் பேசப் போவதில்லை. எனவே நாம் எல்லோருடைய பெயரையும் எழுதி சீட்டுக் குலுக்கிப் போடுவோம். யாருடைய பெயர் வருகிறதோ அவரே தப்பு செய்தவர்.’ மாலுமி சொன்னார். பயணிகள் அமைதியானார்கள்.

அதன்படி எல்லோருடைய பெயரும் எழுதப்பட்டன. சீட்டுகள் ஒரிடத்தில் கொட்டி குலுக்கப்பட்டு ஒரு சீட்டு எடுக்கப் பட்டது. எல்லோரும் பதட்டமாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாருடைய பெயர் வரப் போகிறதோ என்று ஒவ்வொருவரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அமைதியாய் இருந்தார்கள்.
மாலுமி எடுத்த சீட்டை வாசித்தார்.

‘யோனா’

மாலுமி யோனாவை அழைத்தார்,’ யோனா ! உன்னுடைய பெயர் தான் வந்திருக்கிறது. உன்னால் தான் எங்களுக்கு மிகப்பெரிய சோதனை வந்திருக்கிறது என நினைக்கிறோம்… நீ யார் ? உண்மையைச் சொல்’ என்றார்.

யோனா நடுங்கினார். ‘ உண்மையைச் சொல்லிவிடுகிறேன். என்பெயர் யோனா. கடவுள் என்னை நினிவே நகருக்குப் போகச் சொன்னார். நான் தான் அவரிடமிருந்து தப்பி ஓடுகிறேன்’ என்று உண்மையைச் சொன்னார்.

‘கடவுளிடமிருந்து தப்ப முடியுமா மூடனே… உன்னை இப்போது என்ன செய்வது ?’ மாலுமி கோபத்தில் கத்தினார்.

‘என்னைக் கடலில் எறிந்து விடுங்கள்….’ யோனா கூறினார்.

‘உன்னைக் கடலில் எறிந்தால் கொந்தளிப்பு நின்று விடுமா ? ஒரு அப்பாவியைக் கொன்ற பழி என்மேல் வராதா’ மாலுமி கேட்டார்

‘வராது. என்னைக் கடலில் எறிந்து விடுங்கள். கொந்தளிப்பு கண்டிப்பாக நிற்கும்’ யோனா மீண்டும் கூறினார்.

மாலுமி யோனாவைப் பிடித்துக் கடலில் தள்ளினான். கடல் திடீரென அமைதியாயிற்று ! கடலிலிருந்த ஒட்டு மொத்த மக்களும் ஆச்சரியத்தாலும், பயத்தாலும் அமைதியானார்கள். யோனாவின் கடவுளுக்குந் நன்றி செலுத்தினார்கள்.

கடலுக்குள் விழுந்த யோனாவை தண்ணீர் தலைகீழாகப் புரட்டி, ஆழ்கடலில் தள்ளியது. ஆழ்கடலில் பாசிகளில் சிக்கிய யோனா மரணம் தன் கை தொடும் தூரத்தில் வந்துவிட்டது என்பதை அறிந்து ‘ கடவுளே…காப்பாற்றும் ‘ எனக் கதறினார். அப்போது ஒரு பெரிய மீன் வந்து அவரை முழுசாய் விழுங்கியது !

யோனா… மீனின் வயிற்றுக்குள் கிடந்தார். சாவு சம்பவிக்கவில்லை என்பதை அறிந்த யோனா, எல்லாம் கடவுளின் செயல் தான் இனிமேல் தான் கடவுளின் வார்த்தைகளை மீறக்கூடாது என முடிவெடுத்தார்.

‘கடவுளே… என்னை சாவிலிருந்து விடுவியும். நான் உம் வழியை விட்டு விலக மாட்டேன். உம் கட்டளைகளைக் கடைபிடிப்பேன்’ என யோனா மீனின் வயிற்றுக்குள்ளிருந்தே வேண்டுதல் நடத்தினார்.

மூன்று நாட்களுக்குப் பின் அந்த மீன் அவரைக் கரையில் துப்பியது !

யோனா தான் உயிர்பிழைத்ததை அறிந்து மகிழ்ந்தார். நினிவே நகருக்கு ஓடினார்.

நினிவே நகர வீதிகள் எங்கும்,’ இன்னும் நாற்பது நாட்களிலே நினிவே அழிக்கப் படும்’ என்று அறிவித்தார்.

‘நினிவே அழிக்கப்படுமா ? யார் நீ… எங்கிருந்து வருகிறாய் ?’ மக்கள் கேள்வி கேட்டனர்.

‘நான் கடவுளிடமிருந்து வருகிறேன்’ என்று சொன்ன யோனா, தன் கதையை முழுவதும் மக்களுக்குத் தெரிவித்தான். மக்கள் திகிலடைந்தார்கள்.செய்தி மன்னனின் காதுக்குப் போயிற்று. மன்னனும் கலங்கினான். தன் நாடு தவறான பாதையில் தான் போகிறது என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது எனவே உடனடியாக ஒரு ஆணை பிறப்பித்தான்.

‘இன்றிலிருந்து நாற்பது நாட்கள் எல்லோரும் உண்ணா நோன்பு இருக்க வேண்டும். கால்நடைகளுக்குக் கூட உணவளிக்கக் கூடாது. மனிதர் அனைவரும் தங்கள் ஆடம்பர ஆடைகளை அவிழ்த்து விட்டு கோணிகளைக் கட்டிக் கொண்டு சாம்பலில் அமர்ந்து கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… இது அரச ஆணை. யாரும் மீறக் கூடாது ! நம்முடைய நோன்பின் பொருட்டாகிலும் கடவுள் நம் நகரையும், நம்மையும் காக்கட்டும்’ என்று நகரெங்கும் அறிவித்தான்.

நினிவே நகர் முழுவதும் அந்த ஆனை புயல் வேகத்தில் அறிவிக்கப் பட்டது.

மக்கள் அனைவரும் அதன்படியே செய்தார்கள். எல்லோரும் கோணி உடுத்தி,’ கடவுளே எங்களை மன்னியும், இனிமேல் தவறிழைக்க மாட்டோ ம்’ என்று வேண்டினர்.

அவர்களுடைய கூட்டுப் பிரார்த்தனை பலனளித்தது. மக்கள் மனம் திருந்திவிட்டதைக் கண்ட கடவுள் நினிவேயை அழிக்கவில்லை. மக்கள் மகிழ்ந்தனர்.

யோனா மட்டும் கோபமடைந்தார். ‘ கடவுளே என்ன இது ? நகர் அழியும் என்று அறிவித்த நான் இப்போது உண்மையிலேயே பைத்தியக் காரனாகி விட்டேன். நீர் நகரை அழிக்காமல் என்னை அவமானத்துக்குள்ளாக்கி விட்டீர்’ என்று சினந்தான்.

‘சினங் கொள்ளாதே யோனா.. உன்னால் தான் நகர் திருந்தியிருக்கிறது என்று திருப்தி கொள். நான் நினிவேயை அழிக்காத காரணம் விரைவில் உனக்கே விளங்கும்’ என்றார்.

‘இல்லை கடவுளே… நீர் என்னிடம் சொன்னதன் படி நகரை அழிக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டு யோனா கோபத்துடன் நகரை விட்டு வெளியேறினார். நகருக்கு வெளியே தூரத்தில் பொட்டல் காட்டில் ஒரு சின்ன பந்தல் அமைத்து அதன் நிழலில் அமர்ந்தார். கடவுள் எப்படியும் நினிவேயை அழிப்பார் அதை தூரத்திலிருந்து பார்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.

அவருக்கு அருகே ஒரு ஆமணக்குச் செடி சட்டென முளை விட்டது. ஒருசில நாட்களிலேயே அது ஒரு செடியாக வளர்ந்தது. தனிமையில் இருந்த யோனா அதைக் கண்டு மகிழ்ந்தார். அதன் நிழலிலேயே தங்கி, அதனை ஒரு ஜீவன் போலப் பாவித்து அதனுடன் பேசிக் கொண்டிருந்தார்.

ஒருநாள் காலையில் யோனா கண்விழித்துப் பார்த்த போது அந்த ஆமணக்குச் செடி பட்டுப் போய்க் கிடந்தது. அதன் மூட்டில் அந்தக் செடியை அரித்து அழித்த புழு கொழுத்துக் கிடந்தது.

யோனா மிகவும் வருத்தமடைந்தார். ‘தான் நேசமாய் பராமரித்த தன்னுடைய செடி அழிந்து விட்டதே என்று மிகவும் கவலையடைந்தார். நானும் செத்துப் போயிருக்கலாம். எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது. எனக்கும் சாவு வரட்டும்.’ என்று கூறி குப்புறப் படுத்துக் கொண்டார்.

கடவுள் யோனாவை அழைத்தார்.
‘யோனா… என்னாயிற்று உனக்கு ? ஏன் கலங்குகிறாய் ?’

‘கடவுளே… என்னுடன் தோழமை கொண்டிருந்த ஒரே ஒரு செடியும் சட்டென்று வாடி விட்டதே. அதன் அழகிய இலைகளும், நிறமும் எல்லாம் போய் விட்டதே. பட்டுப் போன செடியைப் பார்க்கப் பார்க்க என்னால் தாங்க முடியவில்லை’

‘அது ஒரு சின்னச் செடிதானே?.. விட்டு விடு. ஏன் வருத்தப் படுகிறாய்?’ என்று கேட்டார்.

‘சின்னச் செடிதான் ஆனால் நான் மிகவும் நேசித்த செடியல்லவா அது…’ யோனா பதில் சொன்னான்.

‘சாவு வரட்டும் என மன்றாடும் அளவுக்கு நேசித்தாயா அதை ?’ கடவுள் கேட்டார்.

‘ஆம் கடவுளே.. என்னைக் கொன்றுவிடும். எனக்கு வாழப் பிடிக்கவில்லை’ யோனா வெறுப்பாகப் பேசினார்.

‘நீ விதைக்காத ஒரு விதையிலிருந்து முளைத்த ஒரு செடி அது. அதற்கு நீ நீரூற்றக் கூட இல்லை. மிகக் குறைந்த நாட்கள் தான் உன்னோடு அது இருந்தது. அதன் மீது நீ இவ்வளவு பாசம் வைக்கும் போது, நான் படைத்து பராமரித்து வரும் நினிவே நகரின் இலட்சக் கணக்கான மக்கள் மீது நான் இரக்கம் காட்டியது தவறா ?’ ஆண்டவர் கேட்டார்.

யோனா வினாடி நேரத்தில் புத்தி தெளிந்தார்.

‘கடவுளே என்னை மன்னியும். நான் சுயநலவாதியாய் சிந்தித்து விட்டேன். இப்போது உண்மை உணர்கிறேன். நான் அழியும் என்று சொன்ன நகர் அழிய வேண்டும் என்று அகந்தை கொண்டுவிட்டேன். உம்முடைய மனதை அறிந்து கொள்ள நான் முயற்சி செய்யவேயில்லை. என்னை மன்னியுங்கள்’ என்று பணிந்தார்.

அவர் நிமிர்ந்தபோது மனதுக்குள் சொல்ல முடியாத நிம்மதி நிறைந்திருந்தது.

 – எனது கி.மு / விவிலியக் கதைகள் – நூலிலிருந்து ஒரு சிறுகதை