வேட்டி கட்டிய இயேசு ! :

img_3808-1.jpg
பல் சமய அடையாளங்களுடன் மிளிரும் கிறிஸ்தவ ஆலயங்கள்

மதங்களைக் கடந்த மனித நேயம் சமுதாயத்தில் உலவ வேண்டும் என்பது சமத்துவ சமுதாயத்தை வென்றெடுக்கும் சிந்தனை கொண்ட அனைவருடைய ஆசையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அத்தகைய சிந்தனையோடு கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் சில குமரி மாவட்டத்தின் கிராமங்களில் காணக் கிடைக்கின்றன என்பது வியப்புக்குரிய ஒன்றாகும்.

பரக்குன்று, நாகர்கோவிலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் (மார்த்தாண்டத்திலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் ) தொலைவில் இருக்கும் ஒரு கிராமம். இங்கே அமைந்திருக்கிறது “இயேசுவின் திரு இருதய ஆலயம்”. இந்தியக் கலாச்சாரங்களின் அடையாளங்களோடு மத ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கும் வகையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

 img_3033-small-2.jpg

ஜெர்மனியிலிருந்து கிறிஸ்தவ மதப் பணிக்காக இந்தியா வந்த ஜேம்ஸ் தொம்பர் எனும் கிறிஸ்தவப் பாதிரியாரால் 1957ல் கட்டப்பட்டது இந்த ஆலயம்.

ஆலயத்தில் நுழைவதற்கு முன் தெப்பக்குளம் ஒன்று இந்துக் கோயில்களில் காணப்படுவது போல படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது.

அதைக் கடந்து பல படிகள் ஏறி ஆலய முற்றம் சென்றால் ஆலயம் அழகுணர்ச்சியுடன் தெரிகிறது.

ஆலயத்தின் உச்சியில் இஸ்லாமிய மசூதியின் வடிவத்துடன் கோபுரம் அமைந்துள்ளது.

உள்ளே நுழைந்தால் நீரிலிருந்து வெளிவரும் தாமரை மலர் போல ஆலயத்தினுள் திருமுழுக்குத் தொட்டி ஒன்று வசீகரிக்கிறது.

திராவிடக் சிற்பக்கலை அழகுடனும், வாழ்வுக்கும் வளத்துக்கும் அடையாளமான வாழைப்பூக் குலையுடனும் ஆலயத்தின் உள்ளே கருப்பு நிறத் தூண்கள் கம்பீரமாய் காட்சியளிக்கின்றன.

ஆலயத்துள் நுழைபவர்களுக்கு இந்துக் கோயிலா, கிறிஸ்தவக் கோயிலா, இஸ்லாமியத் தொழுகைக்கூடமா என வியப்பு ஏற்படும் விதத்தில் இந்த ஆலயம் அமைந்துளது குறிப்பிடத் தக்கது.

இந்த ஆலய விழாவில் சர்வ சமைய தினம் ஒன்று சிறப்பிக்கப்பட்டு பல் சமைய தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றுவதும் சிறப்புற நடந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

img_3805.jpg

இந்த ஆலயத்திலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நல்லாயன் புரம் ஆலயம். 1965களில் ஜேம்ஸ் தொம்மரால் கட்டப்பட்ட இன்னொரு ஆலயம் இது.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தின் கோபுர அழகில் வசீகரிக்கப்பட்ட பாதிரியார் இந்த ஆலயத்தை அதே வடிவில் கட்ட நினைத்தார். வாய்ப்புகளும், வருவாயும் அதற்குப் போதாமல் போகவே சிற்ப வேலைப்பாடுகள் இல்லாத கோபுர வடிவில் இது அமைக்கப்பட்டது.

உள்ளே தோளில் ஆடு சுமக்கும் இயேசு வேட்டி சட்டையில் காட்சியளிப்பது வியப்புக்குரியது !

இந்த ஆலயம் தனது இரண்டு பக்கமும் இஸ்லாமிய தொழுகைக்கூட அமைப்பையும், தூண்களில் இந்துக் கோயில்களின் அமைப்பையும் கொண்டுள்ளது.

சாதீய வேறுபாடுகளில் ஊறிக்கிடந்த மக்களை ஒன்று சேர்த்தது இந்த ஆலயம் என்பதை வரலாறுகள் தெரிவிக்கின்றன. தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலிலும் இது குறித்து சிலாகித்துப் பேசுகிறார் பாதிரியார்.

அங்கிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேல்பாலை எனும் கிராமத்திலும் பாதிரியார் ஒரு ஆலயத்தைக் கட்டினார் அது பத்மநாதபுர அரண்மனையின் கூரை வடிவை உள்வாங்கி கட்டப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் தொம்மர் தன்னுடைய பணிக்காலத்தில் எழுப்பிய ஆலயங்களில் இந்திய கலாச்சாரங்களையும், பிறர் மத அடையாளங்களையும் வெறுமனே வசீகரத்துக்காகக் கொண்டிருக்கவில்லை.

பல் சமய மக்களையும் கலந்தாலோசித்தே தன்னுடைய நிர்வாக முடிவை எடுக்கும் பரந்த மனத்தையும் கொண்டிருந்தார் அவர்.  இவருடைய பணிக்காலத்தில் அடித்தளமிடப்பட்ட சமூக நல்லுறவும், பல்சமைய ஒருமைப்பாடும் அந்த கிராமங்களில் இன்றும் செழித்து வளர்ந்து வருவது அவருடைய பணியின் வெற்றி எனக் கொள்ளலாம்.

இந்தியாவின் தெற்கு ஓரத்தில் கிராமத்து வீதிகளில் சமய ஒற்றுமைக்குக் கரம் கொடுக்கும் ஆலயங்கள் இருப்பது உண்மையிலேயே மனதுக்கு இதமாக இருக்கிறது.