கைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்

தமிழ் ஓசை நாளிதழின் இலவச இணைப்பான களஞ்சியம் இதழில் இந்த வாரம்(21.01.2007) வெளியான எனது கட்டுரை

 

கைபேசிகள் சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்பட்டன. கைபேசி வைத்திருப்பவர்கள் அதை மற்றவர்கள் கண்ணுக்குத் தெரியும் விதமாக வைத்திருப்பதும். பொது இடங்களில் சத்தமாகப் பேசி மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பதுமாக இருந்த காலம் மலையேற்஢விட்டது. இப்போதெல்லாம் கைபேசி இல்லாதவனை கையே இல்லாதவன் போல பார்க்கிறது சமூகம். ‘என்னது உன்கிட்டே கைபேசி இல்லையா ?’ என்று ஏதோ சாவான பாவத்தைச் செய்து விட்டது போல நம்ப முடியாத ஆச்சரியக் குரலில் தான் கேட்கிறார்கள் கைபேசி இல்லாதவர்களிடம்.

ஊருக்கு ஒரு தொலைபேசி என்றிருந்த காலம் தாண்டி, வீட்டுக்கு ஒரு தொலைபேசி என்னும் நிலையையும் கடந்து, ஆளுக்கு ஒரு கைபேசி எனும் நிலையில் இருக்கிறது இன்றைய வாழ்வு. அதுவும் அலுவலகவாசிகள் பலருக்கும் ஒன்றுக்கு இரண்டாக கைபேசிகள் இருக்கின்றன. இன்றைக்கு பிரமிப்பூட்டும் வகையில் வளர்ந்துள்ள கைபேசிகளின் வரலாறு பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது.

தொலைபேசி நெட்வர்க்குடன் இணைக்கப்பட்ட முதல் கைபேசி ஸ்வீடன் நாட்டு காவல் துறையினரால் 1946ம் ஆண்டு வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது. காவல் துறையினர் உபயோகப்படுத்தி வந்த தகவல் தொடர்பு ரேடியோவே இதன் முன்னோடி எனலாம். 1947ம் ஆண்டு பெல் சோதனைச் சாலை பொறியாளர் டி.எச். ரிங் என்பவரால் இந்த கைபேசிகள் தன்னுடைய நிலையிலிருந்து சற்று முன்னேறின. எனினும் 1960 களில் எலக்ரானிக்ஸ் துறை மேம்படும் வரை இந்த கைபேசிகள் வளர்ச்சியடையவில்லை.

1967 களில் கைபேசி வைத்திருப்பவர்கள் அழைப்பை ஏற்றுக் கொண்ட பின் அந்த எல்லையை விட்டு வெளியே சென்றால் அழைப்பு துண்டிக்கப்பட்டு விடும். ஒவ்வொரு அழைப்புக் கோபுரத்தின் எல்லைக்குள்ளேயே அந்தந்த அழைப்பை பேசி முடித்துவிட வேண்டும். அப்போதெல்லாம் அந்த அழைப்பு எல்லையே மிகவும் குறுகியது என்பது வேறு விஷயம்.

பெல் ஆய்வுக்கூட பொறியாளர் ஆமோஸ் எட்வர்ட் என்பவர் 1970ல் தானியங்கியாக ஒரு அழைப்பு கோபுர எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கு அழைப்பு துண்டிக்காமலேயே செல்லும் ‘அழைப்பு கைமாற்ற’ தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தார். அது கைபேசி வளர்ச்சிக்கு பேருதவியாயிற்று. 1971ல் ‘ஏ.டி & டி’ நிறுவனம் கைபேசி சேவை ஒப்புதலுக்காக பெடரல் தொலை தொடர்பு குழுவிடம் விண்ணப்பித்தது. அது சுமார் பதினோரு ஆண்டுகளுக்குப் பின் 1982ல் அங்கீகரிக்கப்பட்டு தனியாக அலைவரிசை ஒதுக்கப்பட்டது.

1956ல் எரிக்ஸன் நிறுவனம் ஸ்வீடன் நாட்டில் தனது முதல் தானியங்கி கைபேசியை வெளியிட்டபோது அந்த கைபேசியின் எடை எவ்வளவு தெரியுமா ? சொன்னால் நம்ப மாட்டீர்கள். நாற்பது கிலோ. அரை மூட்டை அரிசியின் எடை. எப்படித் தான் தூக்கிச் சுமந்தார்களோ !! அதன் பின் அதே நிறுவனம் 1965ல் நவீன இலகுவான கைபேசி ஒன்றைத் தயாரித்தது. அதன் எடை ஒன்பது கிலோ !!!! அப்போதைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 150 !. அன்றிலிருந்து சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் அங்கே மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை வெறும் 600 தான்.

முழுதும் தானியங்கியாக செயல்படத் துவங்கிய முதல் கைபேசி 1981ம் ஆண்டின் நோர்டிக் கைபேசி தான். இதை முதல் தலைமுறை கைபேசி என்று அழைத்தனர். ஆயினும் எண்பதுகளிலெல்லாம் கைபேசிகள் வாகனங்களில் நிரந்தரமாக பொருத்தப்பட்டு அவை வாகன தொலைபேசிகள் போல செயல்பட்டன. காரணம் அவற்றின் அளவு மற்றும் எடை.

1990ல் முதல் டிஜிடல் தொழில்நுட்ப கைபேசி அமெரிக்காவில் ஆரம்பமானது, அதற்கு அடுத்த ஆண்டு முதல் ஜி.எஸ்.எம் தொழில்நுட்ப கைபேசி ஐரோப்பாவில் துவங்கியது. அதன் பின்பே இந்த கைபேசி அசுர வளர்ச்சி பெற்று எட்டாக் கனியாக இருந்த நிலையிலிருந்து அத்தியாவசியத் தேவை என்னும் தளத்துக்கு இடம் பெயர்ந்தது.

இப்போதையை கைபேசிகள் ஒரு கணினி போல செயல்படுகின்றன. பேசுவதற்கான என்னும் அடிப்படை வசதியைத் தாண்டி, புகைப்படம் எடுப்பது, வீடியோ படம் எடுப்பது, மின்னஞ்சல் அனுப்புவது, இணையப் பக்கங்களை வாசிப்பது, தகவல்கள் சேமித்து வைப்பது, இன்னும் ஒரு படி மேலே போய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது கூட கைபேசிகளில் கைவந்திருக்கிறது.

கைபேசி இருப்பதனால் தகவல் தொடர்பு பெருமளவு வளர்ந்து விட்டது. இதன் மூலமாக உலகோடும், குடும்பத்தோடும் எப்போதும் இணைந்து இயங்கும் நிலை உருவாகி இருக்கிறது. கைபேசி பழக்கம் பெருகி விட்டபிறகு அமெரிக்காவில் விபத்துகள் பற்றிய தகவல்களும், குடித்து விட்டு காரோட்டுபவர்கள் பற்றிய தகவல்களும், அவசர தேவை அழைப்புகளும் மிக விரைவில் வந்தடைவதாக அமெரிக்க காவல்துறை கடந்த ஆண்டு தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

கைபேசியில் புகைப்படம் எடுக்கும் வசதியும், வீடியோ எடுக்கும் வசதியும் ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தப்பட்டால் சமுதாயத்தில் நிகழும் பல தவறுகளைப் பதிவு செய்வதற்கும், லஞ்சம் உட்பட நிகழும் சட்ட மீறல்களை சாட்சிக்காக காட்சிப்படுத்தவும் பயன்படுத்த முடியும் என்கிறது அமெரிக்க காவல் துறை.

ஜப்பானில் நிலநடுக்கம் நிகழப்போகிறதெனில் அந்த அபாய முன்னறிவிப்பினை நாட்டிலுள்ள எல்லா கைபேசிகளுக்கும் அனுப்பி விடுகிறார்கள். இதன்மூலம் ஜப்பானியர்கள் எங்கே இருந்தாலும் நிலநடுக்கம் எங்கே எப்போது நிகழப்போகிறது என்பதை அறிந்து கொள்கிறார்கள்.

அமெரிக்க உளவு நிறுவனம் கைபேசிகளை உளவாளிகள் போலப் பயன்படுத்துகிறது. தொலைவிலிருந்தே கைபேசிகளின் மைக்-கை இயக்கி சந்தேகத்திற்கிடமான நபர்களின் உரையாடல்களை உற்றுக் கேட்பதை அமெரிக்க அரசு உளவு நிறுவனங்கள் செய்து வருகின்றன. கைபேசிகள் இப்போது இணையத்துடன் ஒன்றித்துவிட்டதால் உளவு மென்பொருட்களை எந்த கைபேசிக்கு வேண்டுமானாலும் கைபேசி சேவை வழங்கு நிறுவனங்கள் விரும்பினால் தரவிறக்கம் செய்ய முடியும். அமெரிக்க உளவு நிறுவனத்தின் விண்ணப்பங்கள் நிறைவேற்றப்படுவதாக பெரும்பாலான கைபேசி சேவை வழங்கு நிறுவனங்கள் ஒத்துக் கொள்கின்றன. சில மெளனம் சாதிக்கின்றன.

பெரிய நிறுவனங்களில் உயரதிகாரிகள் முக்கியமான ரகசிய தீர்மானங்கள் நிறைவேற்றும் போதும் இத்தகைய உளவு வேலை எதிரிகளால் நிகழ்த்தப்படலாம் என்னும் அச்சம் நிலவுவதால் பெரும்பாலான நிறுவனங்கள் தீர்மானக் கூட்டங்களின் போது கைபேசிகளை அனுமதிப்பதில்லை. மட்டுமன்றி கைபேசிகளிலுள்ள பாட்டரிகளை கழற்றிவிடுமாறும் அவை அறிவுறுத்துகின்றன.

எல்லா வினைக்கும் அதற்குச் சமமான எதிர் வினை உண்டு என்னும் நியூட்டனின் விதி இங்கும் விதிவிலக்காகவில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு குற்றமுமாக கைபேசிக் குற்றங்கள் வளர்கின்றன. ஏதேனும் ஆபாசப் படங்களுடன் பிரபல நடிகைகளின் படங்களை உலவ விடுதல், வீடியோ காட்சிகளை உலவ விடுதல், ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி எரிச்சல் மூட்டுதல், அலுவலகத்திலும், கல்லூரிகளிலும் கூடவே இருக்கும் பெண்களைக் கூட தவறான கண்ணோட்டத்தில் புகைப்படம் எடுத்து அதை மற்றவர்களுக்கும் அனுப்புதல் என ஆரம்பித்து தவறுகள் ஏறுமுகத்தில் செல்கின்றன. கைபேசிகளின் அபரிமிதமான வளர்ச்சியினால் இவை சில நிமிடங்களுக்குள் நாடு முழுவதும் பரவியும் விடுகின்றன.

லண்டனில் பத்தொன்பது வயது இளம் பெண் ஒருவரை கைபேசிக்காக துப்பாக்கியாய் சுட்ட நிகழ்வும், சென்னையில் கைபேசி வாங்கும் ஆசைக்காக சிறுவனைக் கடத்தி கொலை செய்த மாணவர்களின் வெறிச்செயலும் எச்சரிக்கை மணி அடித்திருக்கின்றன. பல சமூக விரோத குற்றங்களுக்குக் கைபேசிகள் காரணமாய் இருக்கும் அதே வேளையில் சமூக விரோதிகளை அடையாளம் காட்டவும் இவை பெருமளவில் பயன்படுகின்றன. அமெரிக்காவில் பல குற்றவாளிகள் கைபேசிகளில் எக்கச்சக்கமாக மாட்டி கம்பி எண்ணுகின்றனர்.

அமெரிக்காவில் எழுபது சதவீதம் சிறுவர்கள் கைபேசி வைத்திருக்கிறார்கள். சி.ஐ.ஏ புத்தகத்தில் இங்கிலாந்தில் மக்கள் தொகையை விட அதிக எண்ணிக்கையில் கைபேசிகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கைபேசி வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் செல்கிறது. உலகெங்கும் கைபேசி பயன்பாட்டாளர்களின் தொகை பெருமளவில் உயர்ந்திருப்பதால் அதனால் ஏற்படும் விளைவுகளைக் குறித்தும் மக்களிடையே ஒருவிதம் பயம் தோன்றியிருக்கிறது.

இவை எலக்டோ  மேக்னட்டிக் அலைகளைக் கொண்டு இயங்குவதால் கைபேசி பயன்படுத்தும் போது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அலைகளை நமது மூளை ஈர்த்துக் கொள்கிறது. இதனால் அதிக நேரம் பேசுவதால் மூளை பாதிப்படைவதாகவும், சட்டை பாக்கெட்டில் வைத்திருந்தால் இதயம் பாதிப்படைவதாகவும், ஆண்மைக்குக் கூட இதனால் ஆபத்து இருப்பதாகவும் ஆராய்ச்சிகள் தினம் தினம் பயமுறுத்திக் கொண்டே இருக்கின்றன.

கைபேசி கோபுரங்களின் அருகே, குறிப்பாக சுமார் முந்நூறு மீட்டர் சுற்றளவில், வசிக்கும் மக்களுக்கு பலவிதமான நோய்கள் வருவதாக பிரான்ஸிலுள்ள சாண்டினி குழுவின் ஆய்வு தெரிவித்து அதிர்ச்சியளிக்கிறது.

ரெப்லக்ஸ் என்னும் ஐரோப்ப ஆய்வு ஒன்று டி.என்.ஏ க்களுக்கு கைபேசி கதிர்களால் பாதிப்பு ஏற்படுவதாக அறிக்கை வெளியிட்டது. ஸ்வீடன் நாட்டின் கரோலின்ஸ்க்கா நிறுவனம் தொடர்ந்து கைபேசியை நீண்ட நேரம் பயன்படுத்துவது நிச்சயம் கெடுதலை விளைவிக்கும் என்றும், புற்று நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது. எனினும் இதை கைபேசி நிறுவனங்கள் மறுத்துள்ளன, மாறும் காலத்துக்கேற்ப கைபேசிகள் நவீனத்துவம் பெறுவதாகவும் ஒத்துக்கொள்ளாத அளவுக்கு கதிர்களை அவை வெளியிடுவதில்லை என்றும் அவை சாதிக்கின்றன.

கைபேசி உபயோகிப்பதால் புற்றுநோய் வருவதாக டெபோரா ரைட் என்னும் அமெரிக்கர் உட்பட சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதற்கு ஒரு முடிவு காணும் விதமாக கைபேசி நிறுவனத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து ‘அறிவியல் ஆலோசனை குழு’ ஒன்றை ஆரம்பித்து சுமார் இருபது கோடி ரூபாய் செலவிட்டு இந்த கைபேசி பயன்பாட்டிற்கும், புற்று நோய்க்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா என்று கடந்த பத்து ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தனர். ஆனால் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

கைபேசிகளால் உருவாகும் நோய்களைப் பற்றி ஆதாரபூர்வமாக இன்னும் எந்த அறிவியல் ஆய்வு அறிக்கையும் வெளி வரவில்லை என்பது ஆறுதலான செய்தியெனினும், கைபேசிகள் மிகவும் பாதுகாப்பானவை என்றும் இன்னும் எந்த ஆய்வும் வரவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

கைபேசிக் காமராக்களின் உதவியினால் கிரடிட் கார்ட் (கடனட்டை) போன்றவற்றை நமக்குத் தெரியாமலேயே படம் எடுத்து இணையத்தில் பயன்படுத்தும் அச்சுறுத்தலும் நம்மைத் தொடர்கிறது. சாதாரண கைபேசிக் காமராக்களில் கடனட்டையை தெளிவாக புகைப்படமெடுப்பது சாத்தியமில்லை என்று சொல்லப்பட்ட போதிலும் நவீன வகை கைபேசிகளில் அதிக மெஹா பிக்சஸ் புகைப்படங்களில் இவை சாத்தியம் என்பதால் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது பயன்பாட்டாளர்களின் தேவையாக இருக்கிறது.

அமெரிக்காவில் 1990 ல் நாற்பது இலட்சம் பேர் கை பேசி வைத்திருந்தார்கள். இன்று சுமார் இருபத்து மூன்று கோடி பேர் கைபேசி உபயோகிக்கிறார்கள். உலக அளவில் வருடத்திற்கு பத்து கோடி கைபேசிகள் உபயோகிக்க முடியாத படி பழுதாகிவிடுகின்றன. இவற்றை சரியான முறையில் அழிக்காவிட்டால் அதிலுள்ள டாக்சிக் உதிரிகளும், அழிந்து போகாத பாகங்களும் சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு அதிகரிக்கும் என்பது இன்னொரு அச்சுறுத்தல்.

குடித்து விட்டுக் காரோட்டுவதைப் போல செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதும் இந்தியா உட்பட உலகின் நாற்பது  நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. விபத்துகளின் பின்னணியை அலசிப்பார்த்தால் சில வினாடிகள் தவறவிடும் கவனமே பெரும்பாலும் காரணமாகிறது. ஏ.ஏ அமைப்பு உலகளாவிய அளவில் நிகழ்த்திய ஆய்வில் கைபேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்கள் விபத்துகளில் விழ நான்கு மடங்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அதிகம் குடித்திருக்கிறோமா என்று கண்டுபிடிப்பதற்கான கைபேசி ஒன்றை எல்.ஜி நிறுவனம் அமெரிக்காவில் வெள்ளோட்டம் விட்டிருக்கிறது. அந்த தொலைபேசியிலுள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் குடிகாரர் ஊதினால் கைபேசி சொல்லிவிடும் அவரால் காரை ஓட்டமுடியுமா, காவலர் பிடித்தால் அபராதம் போடுவாரா போன்ற விஷயங்களை !

பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவும், சக மாணவ மாணவியரை தேவையில்லாமல் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்கவும், அமெரிக்காவில் பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் கைபேசி தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளி வாகன ஓட்டிகள் கைபேசி உபயோகிப்பதும் அங்கே பெரும்பாலான மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

கைபேசிகளின் எண்ணை எப்படியோ பெற்றுக் கொண்டு விடாமல் தொந்தரவு செய்யும் வியாபார அழைப்புகளும் இன்று ஏராளமாகி விட்டன. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நம்முடைய கைபேசி அல்லது தொலை பேசி எண்ணுக்கு தேவையற்ற தொலை பேசி அழைப்புகள் அதிகம் வருகிறது என்றால் அந்த சேவை வழங்கு நிறுவனத்துக்கு நம்முடைய தொலைபேசி எண்ணைக் கொடுத்து நம்முடைய எண்ணை அவர்களுடைய விசேஷ தகவல் சேமிப்பில் இணைத்துக் கொள்ளலாம். அதன்பின் நமக்கு ‘தொந்தரவு’ அழைப்புகள் வராது. மீறி வந்தால் வழக்கு பதிவு செய்து நஷ்ட ஈடு பெற்றுக் கொண்டு ஜாலியாக போக வேண்டியது தான்.

அமெரிக்காவின் மாநில இணைய தளங்கள் அனைத்திலும் இந்த சேவைக்கான இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். இப்போது இந்த வசதியை இந்தியாவில் ஏர்டெல் நிறுவனமும் துவங்கியிருப்பதாக கேள்வி. இந்தியா, ஜப்பான், ஐரோப்பா போன்ற நாடுகளில் வருகின்ற அழைப்புகளுக்கு பணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால் அமெரிக்கா, கனடா, ஹாங்காங் போன்ற நாடுகளில் வருகின்ற அழைப்புகளுக்கும் இப்போதும் பயன்படுத்தும் நிமிடத்திற்கு ஏற்ப பணம் வசூலிக்கப்படுகிறது.

கைபேசி எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க திருட்டுப் போவதும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. யூ.கே வில் மட்டும் பன்னிரண்டு வினாடிக்கு ஒரு கைபேசி திருட்டு போவதாகவும், கடந்த ஆண்டு மட்டும் முப்பத்து ஒன்பது கோடி பவுண்டுகள் மதிப்புள்ள கைபேசிகள் திருடு போயிருப்பதாகவும் ஹாலிபேக்ஸ் காப்பீடு நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கைபேசிகள் திருடுபோவதைத் தடுக்க சில வழிமுறைகள் உள்ளன. நோக்கியா தொலைபேசியில் *#92702689# என்ற எண்ணை அழுத்தினால் வரிசை எண், உருவாக்கப்பட்ட தேதி, வாங்கிய நாள், கடைசியாக பழுது பார்த்த நாள் போன்றவற்றை அறிய முடியும்.

இந்த வரிசை எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கைபேசி ஒருவேளை திருடுபோய்விட்டால் இந்த எண்ணை சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, அல்லது சைபர் கிரைம்க்கு (இணையக் குற்றங்கள் தடுக்கும் காவல்துறையின் சிறப்புப் பிரிவு) தெரியப்படுத்தினால் அவர்கள் இந்த கைபேசியை செயலிழக்கச் செய்து விடுவார்கள். இதை பரவலாக எல்லோரும் பயன்படுத்தும் பட்சத்தில் கைபேசி திருடுவதில் எந்த பயனும் இல்லை எனும் நிலை உருவாகி கைபேசித் திருட்டை அறவே ஒழிந்துவிடலாம்.

IMEI என்று அழைக்கப்படு இந்த எண், ஒவ்வொரு முறை கைபேசியை நாம் இயக்கும்போதும் தகவல் சேமிப்பிலிருந்து நமது எண்ணை சரிபார்த்து கைபேசி இணைப்பு உருவாகும். தடை செய்யப்பட்ட எண் எனில் இந்த இணைப்பு உருவாகாது. உலகின் எந்த தொலைபேசி நிறுவனம் தரும் எந்த சேவையும் , எந்த சிம் கார்ட்டும் இதை பயன்படுத்த முடியாத நிலை உருவாகும்.

சென்னை சைபர் கிரைம் பிரிவு பல கைபேசிகளை IMEI மூலம் கண்டு பிடித்துள்ளது. ஏதேனும் கைபேசி தொலைந்து விட்டால் cop@vsnl.net என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு வழக்கு பதிவு செய்ய அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

நமது கைபேசிகளில் ஏராளமான எண்களை சேமித்து வைத்திருப்போம். அதுவும் இளைஞர்களின் கைபேசிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம் நூற்றுக்கணக்கான எண்கள் நிரம்பி வழியும். அதில் அவசர தேவைக்கு தொடர்பு கொள்வதற்காக ICE (In Case Of Emergency ) என்று ஒரு எண்ணை சேமித்து வைக்க அறிவுறுத்துகின்றன சர்வதேச தொலைபேசி சேவை நிறுவனங்கள். சம்பந்தப்பட்ட நபர் ஏதேனும்  விபத்தில் சிக்கிக் கொண்டால் யாரை அழைப்பது என்னும் குழப்பங்களுக்கு விடை சொல்வதாக இந்த எண் அமையும்.

மேஜை நாகரீகம், உடை நாகரீகம் போல கைபேசியில் பேசுவதற்கும் நாகரீக வரைமுறைகள் உள்ளன. நண்பர் குழுவினருடன் உரையாடுகையில் கைபேசி மணியடித்தால் ‘மன்னியுங்கள்’ என்று சொல்லிவிட்டு சற்றுத் தொலைவில் சென்று பேசுங்கள். ஏதேனும் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில் கைபேசி கிணுகிணுத்தால் அந்த அழைப்பை மிகவும் குறுகியதாய் ஆக்கிக் கொள்ளுங்கள் இல்லையேல் அருகிலிருக்கும் நண்பர் முக்கியமற்றவராகவும் கைபேசியில் பேசுபவர் முக்கியமானவர் போலவும் ஒரு தோற்றம் உருவாகிவிடும். காதலியுடன் அமர்ந்திருக்கையில் கைபேசியை அணைத்துவிடுங்கள்.

ஆலயங்கள், உணவு விடுதிகள், மரண வீடுகள், திருமண வீடுகள், பேருந்து போன்ற வாகனங்கள், திரையரங்குகள் இங்கெல்லாம் கைபேசியை அதிர்வு முறையில் வைத்திருங்கள். அப்போது தொலைபேசியின் சத்தம் வெளியே வந்து மற்றவர்களை இம்சைப்படுத்தாது. மற்றவர்களின் அனுமதியின்றி அவர்களை எந்தக் காரணம் கொண்டும் புகைப்படம் எடுக்காதீர்கள். பொது இடங்களில் சத்தமாய் பேசி மற்றவர்களின் அமைதியான மனநிலையைக் கெடுக்காதீர்கள்.

எல்லாவற்றிலும் முக்கியமாக நீங்கள் சமீபத்திய அழைப்பு இசை வைத்திருக்கிறீர்கள் என்பதற்காக அதை அலறவிடாதீர்கள். எல்லோரும் கேட்கட்டும் என்பதற்காக அழைப்பை எடுக்க தாமதிக்காதீர்கள். இவையெல்லாம் கைபேசி நாகரீகங்களாகவும், இவை தெரியாதவர்கள் நாகரீகம் கற்காத கற்கால வாசிகள் போலவும் மேல் நாடுகளில் பார்க்கப்படுகின்றார்கள்.

கனடாவிலுள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகம் இணையத்தின் வளர்ச்சி இனிமேல் கைபேசிகளில் தான் என்று தனியாக ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. எப்போதும் கிடைக்கும் இணைப்பு, எங்கிருந்தும் இயக்கும் வசதி போன்றவற்றால் இனிமேல் இணையம் கணினியின் மூலமாக இயக்குவது என்பது அருங்காட்சியகங்களுக்குச் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறது அந்த ஆய்வு. மிக அதிக தரம் வாய்ந்த டிஜிடல் காமரா, வீடீயோ வசதி, மின்னஞ்சல், இசை என அனைத்தும் கைபேசிகளில் வந்து விட்டதால் உலகம் உள்ளங்கையில் என்னும் வாக்கியம் நிஜமாகியிருக்கிறது.