எதிர்காலத்தில் தகவல் அறிவியல்
எந்த ஒரு தொழில்நுட்பமும் கல்வெட்டு போல நிலைத்து நிற்பதில்லை. நாட்கள் செல்லச் செல்ல அந்த நுட்பம் தனது முக்கியத்துவம் இழந்து விடுகிறது. அப்போது இன்னொரு தொழில்நுட்பம் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும். அதுவும் இன்றைய டிஜிடல் யுகத்தில் தொழில்நுட்பத்தின் மாற்றங்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் தான் நிகழ்கின்றன.
தகவல் அறிவியல் தொழில்நுட்பமும் அப்படித் தான் இன்று இருப்பதைப் போலவே எல்லா நாளும் இருக்கப் போவதில்லை. மாற்றங்களை நிச்சயமாகச் சந்திக்கப் போகிறது, புதிய புதிய வடிவங்களை எடுக்கப் போகிறது. புதிய புதிய தொழில்நுட்பங்களோடு தன்னை இணைத்துக் கொள்ளப் போகிறது.
ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவு அதில் முக்கியமான ஒன்று. அது கண்டிப்பாக இன்னும் ஆழமாக தகவல் அறிவியல் துறைக்குள் நுழையும் என்பதில் சந்தேகமில்லை. அப்போது அல்காரிதங்களும், மென்பொருட்களும் தன்னிலே “ஸ்மார்ட்” ஆக மாறி தகவல்களை பயன்படுத்தத் துவங்கிவிடும். மனித உதவி தேவையில்லாமலேயே பின்னர் ‘பிரடிக்டிவ்’ அலசல்கள் நடக்க வாய்ப்புகள் அதிகம்.
ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்டின் வரவு தகவல் அறிவியலில் ஏற்படுத்துகின்ற விளைவுகளில் ஒரு எதிர் விளைவும் உண்டு. எப்போது செயற்கை அறிவு முழுமையாக தகவல் அறிவியலில் நுழைகிறதோ அப்போது மனித உழைப்புக்கு அங்கே வேலை குறைகிறது. ஆட்டோமேஷன் அந்த இடத்தை வந்தடைகிறது. இதனால் அந்த காலகட்டத்தில் வேலை வாய்ப்புகள் குறையும். ஆனால் அதுவரை தகவல் அறிவியலார்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
அதே போல மெஷின் லேர்னிங் எனப்படும் தொழில்நுட்பமும் இன்னும் அதிகமாக தகவல் அறிவியலில் இணைந்து கொள்ளும். ஏற்கனவே மெஷின் லேர்னிங் நுட்பம் டேட்டா சயின்ஸோடு இணைந்து தான் பயணிக்கிறது. இனிமேல் இன்னும் அதிகமாக அந்த பிணைப்பு இருக்கும்.
உதாரணமாக ஒரு இயந்திரம் தனது தகவலை இன்னொரு இயந்திரத்துக்கு தானாகவே அனுப்பும், ஒரு கருவி வேறு பல கருவிகளிலிருந்து வருகின்ற தகவல்களை தானாகவே சேகரித்து அலசலை துவங்கும். சென்சார்களின் தகவல்கள் அங்கும் இங்கும் தானாகவே கூடு விட்டுக் கூடு பாய்ந்து தனது பணிகளைச் செய்யும். என இந்த மெஷின் லேர்னிங் நுட்பம் தகவல் அறிவியலில் வெகு ஆழமாய் செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை.
மருத்துவத் துறையில் தகவல் அறிவியலின் பயன் இன்னும் பல மடங்கு அதிகரிக்கப் போகிறது. குறிப்பாக நியூரல் நெட்வர்க் எனும் நரம்பியல் துறையில் தகவல் அறிவியலின் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கும் என மருத்துவ அறிக்கைகளும், ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. மருத்துவம் ஏற்கனவே தகவல் அறிவியலை ஆய்வுகளிலும், மருத்துவமனைகளிலும் பயன்படுத்தி வருகிறது. அது இன்னும் பலமடங்கு அதிகரிக்கும்.
இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனும் தொழில்நுட்பம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போது கணினி துறையில் படிப்பவர்களுக்கு இது ஒரு கட்டாயப் பாடமாகவும் இருக்கிறது. எப்படி இணையத்தில் தகவல்களை சேமிக்கிறோமோ, அப்படி உலகில் நாம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களையும் இணையத்தோடு இணைப்பது தான் இதன் அடிப்படை சிந்தனை. உதாரணமாக உங்கள் வீட்டு கேஸ் ஸடவ்வை நீங்கள் இணையத்தோடு இணைக்கலாம். அது ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதைக் கவனிக்கலாம்.
இவற்றையெல்லாம் சென்சார்கள் கவனித்துக் கொள்கின்றன. டிஜிடல் தகவல்களை அவை கணினிகளுக்கோ, அல்லது அது போன்ற கருவிகளுக்கோ அனுப்பி இணைய உலகோடுள்ள உறவை உயிர்ப்பித்துக் கொள்கின்றன. இன்றைக்கு சுமார் 170 பில்லியன் எனுமளவில் இருக்கும் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் பிஸினஸ் இன்னும் நான்கு ஆண்டுகளில் சுமார் 560 பில்லியன் எனுமளவுக்கு எகிறும் என்கின்றன ஆய்வுகள்.
அதே போல பிக் டேட்டா எனும் தொழில்நுட்பமும் தகவல் அறிவியலின் ஒரு பாகம் தான். பிக் டேட்டா என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம் தான். கொட்டிக் கிடக்கின்ற கணக்கற்ற தகவல்களை எப்படி பயனுள்ள தகவல்களாக மாற்றுகிறோம் ? எப்படி அவற்றைக் கொண்டு தொழிலை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறோம் என்பது தான் அதன் அடிப்படை. முழுக்க முழுக்க தகவல்களின் அடிப்படையில் இயங்குவதால் இது தொடர்ந்து தகவல் அறிவியலில் ஒரு முக்கியமான பாகமாக இருக்கும் !
வெறும் எண்களையும், டிஜிடல் எழுத்துகளையும் வைத்து தான் இன்றைக்கு தகவல் அறிவியல் அசத்திக் கொண்டிருக்கிறது. மற்றெந்த வகை தகவல்களாய் இருந்தாலும் அவற்றை முதலில் டிஜிடல் எண்களாகவோ, எழுத்துகளாகவோ மாற்றினால் தான் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியும் எனும் சூழல் இருக்கிறது. இந்த நிலை மாறும் ! இனி வரும் காலங்களில் தகவல்களை டிஜிடல் எண்களாக மாற்றாமல் நேரடியாகவே பயன்படுத்தக் கூடிய நுட்பங்கள் உருவாகும்.
அப்படிப்பட்ட மாற்றம் வரும்போது தகவல் அறிவியலில் இன்னும் வியப்பூட்டும் விஷயங்கள் நடக்கும். ஆடியோக்கள், வீடியோக்கள், புகைப்படங்கள், லைவ் கேமராக்கள் போன்றவை எல்லாமே மிகப்பெரிய நேரடியான உள்ளீடு தகவல்களாக பயன்படும். தகவல் அறிவியலின் மிகப்பெரிய புரட்சி அது என சொல்லலாம்.
அத்துடன் ‘நேட்டிவ் லேங்குவேஜ்’ எனப்படும் மொழிகடந்த தகவல் அறிவியலும் உருவாகிவிட்டால் இதன் வீச்சு கணிக்க முடியாத அளவுக்கு இருக்கும்.
ஹைப்பர் பெர்சனலைசேஷன் எனப்படும் தனிமனிதனை மையப்படுத்தி செய்கின்ற தொழில்களுக்கு தகவல் அறிவியல் தான் மிகப்பெரிய துணையாய் இருக்கப் போகிறது. விற்பனையாளருக்கும், வாடிக்கையாளருக்கும் இடையேயான தொடர்பை இறுக்கிப் பிடித்து விற்பனையை உறுதி செய்வதில் இந்த பெர்சனலைசேஷன் சிந்தனை தேவையானதாய் இருக்கிறது.
ஆகுமென்டட் ரியாலிடி எனும் தொழில்நுட்பத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களும் தகவல் அறிவியலின் வளர்ச்சியைக் கொண்டு வரும். ஆகுமென்டர் ரியாலிடி இன்றைக்கு ‘கேம்ஸ்’ துறையில் கொண்டு வந்திருக்கின்ற மாற்றங்கள் எக்கச்சக்கம். அப்படியே அந்த நுட்பத்தை ஸ்மார்ட் போனில் மாற்றுகின்ற நடைமுறையும் இப்போது வரத் துவங்கியிருக்கிறது. ஆகுமென்டட் ரியாலிடி வளர வளர, டேட்டா சயின்ஸும் வளரும்.
பிகேவியரல் அனாலிசிஸ் எனப்படும், ஒரு மனிதனுடைய குணாதிசயங்களை அலசுகின்ற, உளவியல் சார்ந்த தகவல் அறிவியலும் இப்போது வளர்ந்து வருகிறது. பயனாளர்களை உளவியல் ரீதியாக அணுகும் முறை இது என்றும் சொல்லலாம். எந்த அளவுக்கு ஒரு நபரைத் தெரிந்து வைத்திருக்கிறோமோ, அந்த அளவுக்கு அவருடைய தேவைகளை அறிந்து கொள்ள முடியும் எனும் அடிப்படை விஷயம் தான் இங்கே கையாளப்படுகிறது.
தகவல் அறிவியலில் வளர்ச்சியும், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் வளர்ச்சியும் இயந்திரங்களையும், கருவிகளையும் ஸ்மார்ட் ஆக மாற்றிக் கொண்டிருக்கின்றன. இனிமேல் அந்த கருவிகளெல்லாம் அறிவைத் தாண்டி ஞானம் உடையவையாக மாறும் என்பதே தொழில்நுட்பம் தருகின்ற தொலை நோக்குப் பார்வை. நமது பிள்ளைகளுக்கு நாம் அறிவைக் கொடுக்கும் முன்பே நல்ல சிந்தனைகளையும், பகுத்தறிவையும் கொடுக்கிறோம் இல்லையா ? அதே போல நமது இயந்திரங்களும் ஞானம் கொண்டவையாய், சுய சிந்தனை கொண்டவையாய் மாறும் என்பதே தகவல் அறிவியலின் சிந்தனை.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், தகவல் அறிவியலின் வீச்சும் பயன்பாடும் அடுத்த ஐந்து பத்து ஆண்டுகளுக்கு நிற்கப் போவதில்லை. வடிவம் மாறி, நுட்பம் மாறி பயணித்துக் கொண்டே தான் இருக்கப் போகிறது. எனவே ஆர்வமும், திறமையும் உடையவர்கள் தயங்காமல் இந்தத் துறையை அரவணைத்துக் கொள்ளலாம்
( முற்றும் )