வீதியில் நாய்கள், பீதியில் மனிதர்கள்

dog.jpg

தெருநாய் பிரச்சனை ஏதோ தெருவில் உள்ள பிரச்சனையாக இல்லாமல் தேசியப் பிரச்சனையாக உருமாறியிருக்கிறது. பெங்களூர் நகரில் மட்டும் ஒரு நிமிடத்திற்கு பன்னிரண்டு பேரை ஏதோ ஓர் நாய் கடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புள்ளிவிவரம் எத்தனை தூரம் உண்மை என்று தெரியாது எனினும் இதிலுள்ள சாராம்சமான தெருநாய்ப் பிரச்சனை ஒரு மிகப்பெரிய பிரச்சனை என்பதை கவனத்தில் கொண்டேயாக வேண்டியிருக்கிறது.

அதுவும் இரவில் பயணிக்கும் மக்கள் அனுபவிக்கும் தொல்லை சொல்லி மாளாது. இருசக்கர வாகன வாசிகளை நாலு கால் பாய்ச்சலில் துரத்தித் துரத்திக் கடித்து இம்சிக்கும் இந்த நாய்கள் ஏராளமான விபத்துகளுக்கும் காரணமாகி விடுகின்றன. நாய் துரத்தலில் பதட்டத்துடன் ஓட்டுபவர்கள் விபத்துக்குள்ளாகி இறந்து போன நிகழ்வுகளும் உண்டு.

தமிழகத்திலேயே நாய்கள் கடித்துக் குதறி உயிரிழப்புகள் ஏற்பட்ட நிகழ்வுகள் சமீபகாலமாக பத்திரிகைகளில் தவறாமல் இடம் பெற்றுவிடுகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாகுபாடில்லாமல் பாதிப்புக்கு உள்ளாகும் செய்திகளை ஊடகங்கள் தெரிவித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

பரியா நாய்கள் எனும் நாய் இனமே இந்தியாவில் தெருநாய்கள் தோன்றக் காரணம் என்று கருதப்படுகிறது. சுமார் பதினான்காயிரம் ஆண்டுகளாக இந்த நாய் இனம் ஆசியா, வட ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் வாழ்கின்றனவாம்.

நாய்களைக் கொல்லவேண்டும், அழிக்க வேண்டும் என்று ஒருசாரார் கோஷமிட, நாய்களைக் கொல்வது அரக்கத்தனம், நாய்களின் உயிருக்கு விலையில்லையா ? அவற்றின் வலி வலியில்லையா என்று நாய்களுக்கு ஆதரவாக இன்னொரு சாராரின் குரல்கள் எழும்புகின்றன.

தெருக்களில் கொட்டப்படும் மீதங்களுக்காகவும், இறைச்சிக் கழிவுகளுக்காகவும் பல தெருக்களில் நாய்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக தெரிவிக்கின்றது மாநகராட்சி.

இந்தியாவில் தெருநாய்களைக் கொல்லக்கூடாது என்னும் சட்டம் அமலில் இருக்கிறது. தெருநாய்கள் கொல்லப்படக் கூடாது என்பது மட்டுமல்ல, கர்ப்பமாய் இருக்கும் நாய்களுக்கு கருக்கலைப்பு கூட செய்யக் கூடாது என்கிறது சட்டம்.

தெரு நாய்களைக் கொல்லக்கூடாது என்று சட்டமியற்றியபின் நாய்களின் நடமாட்டம் மிகவும் அதிகரித்திருக்கிறது. நாய்களுக்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்யவேண்டும் என்பதெல்லாம் வாதத்தோடு சரி. இன்னும் முழுமையான செயலாக்கத்துக்கு வரவில்லை.

இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்காய் பிடித்துச் செல்லப்படும் நாய்கள், சிகிச்சைக்குப் பின் அதே தெருவில் கொண்டு விடப்படுகின்றன. வெகுசில ஆயிரக்கணக்கில் மட்டுமே நாய்கள் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. உதாரணமாக வட இந்தியாவில் இரண்டாயிரத்து ஒன்று மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட நாய்கள் வெறும் ஆறாயிரம் மட்டுமே.

பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷ் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தெருநாய் ஒழிப்பில் வருடம் தோறும் சுமார் ஐம்பதாயிரம் நாய்கள் கொல்லப்பட்டு வந்தன. எத்தனை நாய்கள் கொல்லப்பட்டாலும் புதிது புதிதாய் நாய்கள் வந்து கொண்டே இருந்ததாலும், நாய்கள் மீதான கருணை மனிதர்களிடம் எழுந்ததாலும் நாய்களை ஒழிப்பதற்குப் பதிலாக கட்டுப்பாடு செய்ய வேண்டுமெனும் சட்டமியற்ற 1994ம் ஆண்டு அரசு தீர்மானித்தது.

நீண்டகாலப் பார்வையாக நாய்களுக்கு கட்டுப்பாடு செய்வதும், தெருக்களை சுத்தமாக வைத்திருப்பதும் தெரு நாய் தொல்லைகளைத் தவிர்க்கும். எனினும் அவசர காலத் தேவைகளுக்கு இவை ஒத்து வராது என்பது கண்கூடு. வெயில் காலத்தில் இந்த நாய்களின் தொந்தரவு இன்னும் அதிகம் இருக்கும் என்பது உறுதி.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் தெருநாய்களைக் காண முடியாது. காரணம் அங்கே சேரிப்பகுதிகளோ, தெருவில் நாய்களுக்கு உணவோ இருப்பதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக அங்கே உள்ள நாய்களும் கைவிடப்பட்டவையாக இருக்கும். அவை உடனுக்குடன் பிடித்துச் செல்லப்படுகின்றன.

நாய்களுக்குக் கருத்தடை செய்வதன் மூலம் நாய்கள் பெருகுவது பெருமளவில் கட்டுக்குள் வரும் என நம்பப்படுகிறது. நாய்களிடையே உள்ள சண்டைகளைக் கூட இது தீர்த்து வைக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் மனிதர்கள் மீதான தாக்குதலும் குறையும்.

ஒரு பெண் நாய் சாகாமல் தப்பினால் அல்லது குடும்பக் கட்டுப்பாடு செய்யப்படாமல் விடப்பட்டால் கூட,  ஆறு ஆண்களில் அறுபத்து ஏழாயிரம் புதிய நாய்கள் உருவாகலாம் என  அமெரிக்காவிலிருந்து வெளிவரும் Doris Day Animal League எனும் பத்திரிகை தெரிவிக்கிறது. இதிலிருந்து தெருநாய் பிரச்சனையை எத்தனை வேகமாகவும், துரிதமாகவும் செயலாக்கம் செய்ய வேண்டும் என்பது விளங்குகிறது.

நாய்களைக் கொல்வது எளிய வழிமுறையாகத் தோன்றினாலும் நாய்களை முற்றிலும் ஒழிப்பது என்பது வளரும் நாடுகளில் சாத்தியமில்லாமலேயே இருக்கிறது.

* தெருக்களில் இருக்கும் உணவுப் பொருட்கள் தெருநாய்களைப் பெருக்குகின்றன. எங்கிருந்தாவது நாய்களை அங்கே கொண்டு சேர்த்து விடுகின்றன இந்த மீத உணவுகள். இவற்றை முழுமையாகத் தவிர்த்தால், தெருநாய்கள் நடமாட்டத்தை படிப்படியாக ஒழிக்கலாம்.

* வேறு இடத்திலிருந்து வரும் நாய்களுடன் தெருநாய்கள் சண்டையிடுகின்றன. இதனால் தெருவில் ஒரு சகஜமற்ற சூழல் உருவாகி விடுகிறது. இதுவே பல வேளைகளில் தெருவில் நுழையும் இருசக்கர வாகனங்களை நோக்கி திரும்பிவிடுகின்றது.

* குட்டிகளுடன் இருக்கும் தாய் நாய்கள் இன்னும் அசுரத்தனமான தாக்குதல் மனதுடன் இருக்கும். தன் குட்டிகளுக்கு ஏதும் நேரக்கூடாது என்னும் பதட்டத்தின் காரணமாக தெரியாமல் நெருங்கி வருபவர்களைக் கூட இவை பதம் பார்க்கின்றன.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள வளர்ந்த நாடுகளைத் தவிர்த்த அனைத்து நாடுகளிலும் இது மிகப்பெரிய பிரச்சனையாகவே உள்ளது.

பசியும் பட்டினியுமாக உலகத்தின் கண்களைக் குளமாக்கிய எத்தியோப்பியாவிலும் தெருநாய் பிரச்சனை பூதாகரமாக இருக்கிறது. மக்கள் தங்கள் வறுமையிலும் தெருநாய்களை வீடுகளில் பராமரித்தும், அவற்றுக்கு கட்டுப்பாடு மருத்துவம் செய்தும் பிரச்சனைகளை சமாளிக்க முயல்கிறார்கள்.

இஸ்தான்புல் நாட்டில் தெரு நாய்கள் மிக அதிக அளவில் உலவுவதால் அதைத் தடுக்க பல உயர்மட்ட ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. பல ஆயிரம் நாய்களுக்குக் கட்டுப்பாடு செய்யப்பட்டன.

ராபிஸ் எனும் வைரஸ் தாக்கும் நோய்க்கான தடுப்பு மருந்து இந்தியாவில் இன்னும் பாதுகாப்பற்ற நிலையிலேயே இருப்பதாகவும், மற்ற அனைத்து நாடுகளும் நல்ல பாதுகாப்பான மருந்துகளைப் பயன்படுத்துவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த நோய்கள் பரவ மிக முக்கியமான காரணம் தெருநாய்கள் என்கின்றன மருத்துவ ஆய்வுகள்.

ராபீஸ் நோய் உயிர்க்கொல்லி நோய். உலகிலேயே இந்தியாவில் தான் இந்த நோய்க்கு பலியாபவர்கள் அதிகம் என்பது கவலைக்குரிய செய்தியாகும். வீடுகளில் வளரும் நாய்களுக்கே 32 விழுக்காடு மக்கள் தடுப்பூசிகள் எதுவும் போடுவதில்லை என்கிறது உலக நலவாழ்வு அறிக்கை ஒன்று. நாய்களை வீடுகளில் வளர்ப்போர் நாய்களுக்கு ராபிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியம்.

தெருநாய்கள் மூலமாக இந்த நோய் வீடுகளிலுள்ள நாய்களுக்கும் பரவி மனிதர்களைத் தாக்கி விடுகிறது. உலக நலவாழ்வு நிறுவனத்தின் 2003ம் ஆண்டைய அறிக்கையின் படி இந்தியாவில் இருபதாயிரம் மரணங்கள் ஆண்டுதோறும் இந்த நோயினால் நிகழ்கின்றன. தற்போதைய புள்ளிவிவரங்கள் இந்த எண்ணிக்கை முப்பத்து ஐந்தாயிரம் என்பது அதிர்ச்சித் தகவல்.

இந்தியாவில் உள்ள நாய்களில் சுமார் அறுபது விழுக்காடு நாய்கள் தெருநாய்கள் என்கிறது உலக நலவாழ்வு நிறுவனத்தின் நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய அறிக்கை. அந்த அறிக்கையின் படி சுமார் பதினைந்து இலட்சம் தெருநாய்கள் இந்தியாவில் உள்ளன.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் பதினேழு இலட்சம் மக்கள் நாய்கடிக்கு ஆளாகிறார்கள், இவற்றில் எழுபத்து ஆறு விழுக்காடு, அதாவது சுமார் பன்னிரண்டு இலட்சம் தெருநாய்களினால் வருவதே !

பதினைந்து இலட்சம் தெருநாய்களுக்கு எப்படி குடும்பக் கட்டுப்பாடு செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கும் கால இடைவெளியில் இவை இன்னும் பலுகிப் பெருகி விடுகின்றன. பல இலட்சக் கணக்கான நாய்களுக்கு ஒரே நேரத்தில் கட்டுப்பாடு செய்யக் கூடிய ஒரு திட்டம் வந்தால் மட்டுமே இது சாத்தியம் என்கின்றனர் ஆய்வலர்கள்.

இந்தியாவிலுள்ள விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாடு ( Animal Birth Control (ABC) ) சட்டம் முழு மூச்சுடன் செயல்பட்டால் ஆறுமாத காலத்தில் அறுபது சதவீதம் தெருநாய்களை சரிசெய்துவிட முடியும் என்கிறது உலக நலவாழ்வு நிறுவனம். ஆனால் இந்தியாவில் சட்டங்களுக்கும் செயலாக்கங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்பவே பல பத்தாண்டுகள் ஆகிவிடுகின்றன.

புதுடில்லியில் மட்டும் தற்போது சுமார் இரண்டு இலட்சம் தெருநாய்கள் உள்ளன. இவை ஆண்டுதோறும் பெருகி வருகின்றன.

தெருநாய்களைக் கொல்லாமல் குடும்பக் கட்டுப்பாடு செய்து விட பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முன்வருகின்றன. புருகாட் பெங்களூர் மஹாநகர பாலிக் – கடந்த ஐந்து ஆண்டுகளில் தெருநாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்ய சுமார் ஆறரை கோடி ரூபாய் செலவிட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது. இப்போது நாய்களை வீடுகளில் தத்து கொடுக்கும் திட்டத்தையும் அவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள்.

வீடுகளில் வசிக்கும் நாய்கள் போடும் குட்டிகளில் தேவையற்றவற்றை தெருவிலேயே விடும் போக்கும், வீடுகளைக் காலிசெய்து விட்டு வேறு இடங்களுக்குச் செல்கையில் நாய்களை தெருவில் விட்டு விடுவதும் தவிர்க்கப் படவேண்டியவை, இவை தெருநாய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன.

சண்டிகரில் ஐம்பத்து ஐந்து வயதான நபர் ஒருவரை தெருநாய்கள் கடித்துத் தின்றதும், காஷ்மீரில் ஆறு வயதுக் குழந்தையை பதினைந்து தெருநாய்கள் கடித்துக் கொன்றதும், சமீபத்தில் பெங்களூரில் நடந்த மரணங்களும், தமிழகம் சந்தித்த துயர மரணங்களும் தெருநாய்களால் மனுக்குலத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களின் சில உதாரணங்கள் மட்டுமே.

தெருநாய்களால் குழந்தைகள் இறந்தால் நாய்களைக் கொல்லவேண்டும் என்கிறீர்கள், அப்படியானால் வாகனம் மோதி இறந்தால் வாகன ஓட்டியைக் கொல்வீர்களா, மாடு மோதி இறந்தால் மாடுகளைக் கொல்வீர்களா என்ற விவாதங்களை முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கில்லை.

குழந்தைகளின் உயிர்களையும் பலிவாங்கும் இந்த தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் மனதிலும் உள்ள எண்ணம். அதை எப்படிச் செயல்படுத்துவது என்பதில் அனைவரும் ஒன்றுபட்டு முடிவெடுக்க வேண்டியது அவசியம்.

தெருநாய்களால் விளையும் தீமைகள் குறித்து அனைவரும் ஒத்துக் கொள்ளும் வேளையில் அதிலிருந்து விடுபடவும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம். எதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும், எதை எப்படி அணுகவேண்டும் என்பதில் ஒரு தெளிவு அரசுக்கும் மக்களுக்கும் வேண்டும். அப்படிப்பட்ட தெளிவான சிந்தனையோடும், தீர்க்கமான முடிவோடும், தீவிரமான அணுகுமுறையோடும் இந்தப் பிரச்சனையைச் சந்தித்தால் தெரு நாய் தொந்தரவு இல்லாத பாரதம் சாத்தியமாகும்.