என் சாலையோர நிழல்கள்

Image result for friends talking

என் சாலையோர நிழல்கள்

நட்பைப் பற்றி
எழுதும்போதெல்லாம்
என் விரல்களை விட வேகமாய்
மனம் எழுதுகிறது.

என்
சாலைகளின் இரு புறமும்
நண்பர்கள்
நிற்பதால் தான்
நிழல் பயணம் எனக்கு
நிஜமாகிறது.

துயரத்தின் தூண்கள்
என் இமை இடிக்கும் போது
நண்பர்களின் கரங்களே
காயம் விழு முன்
கண்களைக் காக்கின்றன.

கல்வியின் கரைகள்
பெற்றுத்தந்தவை எல்லாம்
சின்னச் சின்னச் சிப்பிகளே,
நட்பே
அதற்குள் முத்தை வைத்தது.

பணத்தின் கரங்கள்
பூக்களைப் பறித்தன
அதில்
மணத்தை வைத்தது
நண்பர்களே.

எத்தனை பழசானாலும்
முளைக்கும் விதை தானே
நட்பு ?

எத்தனை உரசினாலும்
சாம்பலாகாத வைரம் தானே
நட்பு.

மெதுவாய் முளைத்து
ஆழமாய் வேர்விட்டு
அகலமாய் படருவது தானே
நட்பு ?

நங்கூரமாய் சிலநேரம்
நிறுத்தி வைக்கும்,
சுக்கானாய் சில நேரம்
செலுத்தி வைக்கும் நட்பு,
ஓர்
ஓய்வெடுக்கும் தீவு.

நடப்பு வாழ்வின்
முதுகெலும்பு நட்பே.

நட்பை நேசியுங்கள்
நண்பர்களை சேமியுங்கள்
இன்றே..
இப்போதே.

ஏனென்றால்
தாமதமான துவக்கங்களை
முடிவுகள் வந்து
முந்திக்கொள்ளும்.

நண்பனின் நினைவாக

navanee11.jpg

தினமும் அந்த சாலை வழியாகத் தான் கடந்து வருகிறேன். ஒவ்வோர் முறை அந்த சாலை வழியாகக் கடக்கும் போதும் துயரமும், வலியும், கோபமும், இயலாமையும் என்னை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. 

.எத்தனையோ உயிர்களை இரக்கமின்றி இறக்க வைத்த சாலைகளும், வாகனங்களும் எப்போதும் போல சாலைகளில் ஓடிக்கொண்டே தான் இருக்கின்றன.  

.அவன் மடிந்து ஓராண்டு முடிந்து விட்டிருக்கிறது. 

.அவன் முகத்தை கடைசியாய் பார்த்த அந்த மருத்துவமனை ஏதும் அறியாத ஓர் கல்வெட்டு போல மௌனமாய் நிற்கிறது. எத்தனை அழுகைகள் அந்த மருத்துவமனையின் முற்றத்தில் உறைந்து கிடக்கின்றனவோ ? 

.அந்த நள்ளிரவில் வந்த தொலைபேசி அழைப்பையும், நண்பன் இறந்து விட்டான் எனும் இடிச் செய்தியையும் நினைத்துப் பார்க்கையில் இன்னும் அதே அதிர்ச்சி தான் மனதில். சற்றும் விலகவில்லை. 

.அந்த நிகழ்வு நிலைகுலைய வைத்தது. சில நாட்களுக்குப் பின் எங்கள் நெருங்கிய வட்டாரத்துக்குள் இருந்த நண்பர்களுக்கெல்லாம் தொலைபேசினேன். நவனீ.. என்று சொல்லி விசும்பியவர்கள் வேறேதும் பேசாமலேயே அரைமணி நேரம் அமர்ந்திருந்தனர். விசும்பல்களுக்குடையே “அவன் ஒரு குழந்தைடா என நண்பர்கள் சொன்ன வார்த்தையின் வலி சற்றும் கலப்படமில்லாத நேசத்தின் குரல்.   

navanee2.jpg 

.எட்டு ஆண்டுகாலம் நண்பனாக இருந்தவன். நண்பன் என்று சொல்வதை விட ஒரு சகோதரனாக இருந்தவன் என்று சொல்வது மட்டுமே அவனைக் குறித்து நான் சொல்லும் நேர்மையான பதிலாய் இருக்க முடியும். ஏனெனில் எனது குடும்பத்தில் ஒருவனாகவே எப்போதும் அவன் பழகினான். 

.மூன்று ஆண்டுகாலம் அமெரிக்காவில் ஒரே வீட்டில் வசிக்க நேர்ந்த பொழுதுகளிலெல்லாம் ஒரு முறையேனும் நண்பர்களுக்கு இடையே வரும் வாய்த் தகராறு கூட வரவில்லை, அதன் காரணம் நட்பையும் தாண்டி அவன் என்மீது கொண்டிருந்த அண்ணன் எனும் உறவு என்பதை எப்போதும் என்னால் மறுதலித்து விட முடியாது. 

.எங்கள் நட்பு துவங்கியபின் எந்த முடிவையும், விருப்பத்தையும் முதலில் என்னிடம் சொல்வதில் ஆனந்தமடைபவன். எனது வாழ்வின் நிகழ்வுகளை என்னை விட அதிகமாய் நினைவில் கொண்டும், கூடவே நின்றும் நடத்துபவன். 

அவனைக் குறித்த நினைவுகள் நீளமானவை எனவே தான் அது தருகின்ற வேதனையும் ஆழமானதாகவே இருக்கிறது.

  navanee3.jpg

.அமெரிக்க வாழ்க்கையில் இருபத்து நான்கு மணிநேரமும் சேர்ந்தே இருக்க வேண்டிய சூழலில் அவனிடம் எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்பதை பலவீனங்கள் நிறைந்த என்னால் கண்டறிய முடிந்தது. 

.எனக்குத் தெரிந்து எல்லா நாட்களும் அவனே தான் சமைத்திருக்கிறான். நான் ஏதும் உருப்படியாய் செய்த நினைவு இல்லை. சைவம், அசைவம் என எல்லாவற்றையும் தேர்ந்த சமையல்கார அம்மாவைப் போல பக்குவமாகவும், இயல்பாகவும், சலிக்காமலும் செய்யும் அவனது குணம் சத்தியமாக என்னிடம் கடுகளவும் இல்லை.

  xn1.jpg

.“ஹெல்மெட் இல்லாம வண்டி ஓட்டினே மவனே அப்புறம் நடக்கிறதே வேற.. எனும் உரிமையான எனது கண்டிப்பை புன்னகையுடன் ஏற்று விரைவிலேயே ஹெல்மெட் வாங்கினவன்.  அதுவும் கடைசியில் அவனைக் கைவிட்டது.

.அவனை விபத்து சந்திப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு தான் அவனது வீட்டில் சென்று அவனைச் சந்தித்தேன். அந்த கணங்கள் இன்னும் கண்ணுக்குள் ஈரமாகவே இருக்கின்றன. அவனுடைய பெற்றோர் எப்போதுமே எனது இரண்டாவது பெற்றோர் போல அன்புடனும், உரிமையுடனும் பழகுவார்கள். அடுத்த மாதம் உன் வீட்டுக்கு வருகிறேன் என்றான்.  எப்போதும் சொன்ன சொல்லைக்  காப்பாற்றுபவன்,  வந்தானா  தெரியவில்லை.  

.இரண்டு ரூபாய் அதிக சம்பளத்துக்காக நான்கு மணி நேரம் கூடுதலாக மளிகைக் கடையில் நின்று நின்று நின்று கால்கள் இரண்டிலும் நிரந்தரப் புண்களை  வாங்கியவர் அவனது அப்பா. ஒரே மகனை எத்தனை துயரத்தில் அவர்கள் வளர்த்தார் என்பதற்கு இந்த செய்தி ஒன்றே போதும். 

.அவனோடு நட்புடன் உறவாடிய பொழுதுகளும், அவனுடன் சென்ற பயணங்களும், அவனுடன் கலந்து கொண்ட நிகழ்வுகளும் வரலாற்றுச் சோகமாகவும், சற்றேனும் இளைப்பாறும் நிழலாகவும் இருமுகம் காட்டி நிற்கிறது

. xn2.jpg 

.நண்பனுடைய நினைவுகளின் மீது சிறிது நேரம் கண்ணீருடன் இளைப்பாற வேண்டும் எனும் உந்துதல் மட்டுமே இந்த பதிவின் நோக்கம்.

.இறைவனின் உறைவிடத்தில் அவன் இளைப்பாறட்டும்.