என் சாலையோர நிழல்கள்
நட்பைப் பற்றி
எழுதும்போதெல்லாம்
என் விரல்களை விட வேகமாய்
மனம் எழுதுகிறது.
என்
சாலைகளின் இரு புறமும்
நண்பர்கள்
நிற்பதால் தான்
நிழல் பயணம் எனக்கு
நிஜமாகிறது.
துயரத்தின் தூண்கள்
என் இமை இடிக்கும் போது
நண்பர்களின் கரங்களே
காயம் விழு முன்
கண்களைக் காக்கின்றன.
கல்வியின் கரைகள்
பெற்றுத்தந்தவை எல்லாம்
சின்னச் சின்னச் சிப்பிகளே,
நட்பே
அதற்குள் முத்தை வைத்தது.
பணத்தின் கரங்கள்
பூக்களைப் பறித்தன
அதில்
மணத்தை வைத்தது
நண்பர்களே.
எத்தனை பழசானாலும்
முளைக்கும் விதை தானே
நட்பு ?
எத்தனை உரசினாலும்
சாம்பலாகாத வைரம் தானே
நட்பு.
மெதுவாய் முளைத்து
ஆழமாய் வேர்விட்டு
அகலமாய் படருவது தானே
நட்பு ?
நங்கூரமாய் சிலநேரம்
நிறுத்தி வைக்கும்,
சுக்கானாய் சில நேரம்
செலுத்தி வைக்கும் நட்பு,
ஓர்
ஓய்வெடுக்கும் தீவு.
நடப்பு வாழ்வின்
முதுகெலும்பு நட்பே.
நட்பை நேசியுங்கள்
நண்பர்களை சேமியுங்கள்
இன்றே..
இப்போதே.
ஏனென்றால்
தாமதமான துவக்கங்களை
முடிவுகள் வந்து
முந்திக்கொள்ளும்.