பசுமை விகடன் கட்டுரை : அடி எடுத்தது அமெரிக்கா, அணி வகுக்குமா உலகம்

untitled

அப்பாடி…! ஒரு வழியாக அமெரிக்காவே மனமிரங்கி, “குளோபல் வாமிங்” குறித்து உருப்படியாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. பின்னே… இத்தனை நாட்களாக உலக அளவில் நடத் தப்பட்ட குளோபல் வாமிங் பிரச்னையில் இருந்து தப்பிப்பது குறித்த மாநாடுகளின்போது, மற்ற நாடுகளின் மீது குற்றச்சாட்டு சேற்றை வாரிப் பூசி, உலகத்தின் சுற்றுச் சூழல் கேடுகளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல் “பாவ்லா” காட்டிக் கொண்டிருந்த நாடாயிற்றே!

அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா பதவி ஏற்ற பிறகுதான் இந்த நிலையில் கொஞ்சம் மாற்றம் தெரியத் தொடங்கி, தற்போது அவரே முன்மொழிய, அமெரிக்க நாடாளுமன்றத்தின் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கிறது சுற்றுச்சூழல் கேடுகளை ஏற்படுத்தும் விஷயங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் தீர்மானம். இதன் மூலம் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும்

‘குளோபல் வாமிங்” பயங்கரத்துக்கு நல்ல தீர்வு கிடைக் கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது!

பூமியின் வெப்ப நிலையானது, இயற்கைக்கு எதிரான மனிதனுடைய செயல்பாடுகள் காரணமாக குறைந்தகால இடைவெளியில் சட்டென அதிகரிப்பதுதான் குளோபல் வாமிங். கொஞ்சம் அறிவியல்ரீதியாகச் சொல்லவேண்டுமெனில்… பூமியானது, நூறு ஆண்டுக்குள் இயல்பான வெப்ப நிலையிலி ருந்து ஒரு டிகிரி செல்சியஸோ அல்லது அதற்கு மேலாகவே வெப்பமடைந்தால் அது “குளோபல் வாமிங்” எனப்படும் சிக்கலுக்குள் வருகிறது எனலாம்.

பூமி, வழக்கத்துக்கு மாறாக இப்படிச் சூடாவதற்கு அறுதியிட்டுச் சொல்ல முடியாத ஆயிரக்கணக்கான காரணங்கள் உண்டு. அவற்றிலி ருந்து முக்கியமான காரணிகளைப் பிரித்தெடுத்து வரிசைப்படுத்தினால்… முதலிடத்தில் நிற்பது கார்பன் டை ஆக்சைடு எனப்படும் கரியமில வாயு. இதன் பரவலைக் கட்டுப்படுத்தினாலே பூமி வெப்பமயமாவதிலிருந்து தடுக்கலாம் என்பது விஞ்ஞானிகளுடைய நம்பிக்கை மற்றும் ஆலோசனை.

உண்மையில், ‘குளோபல் வாமிங்” என்ற வார்த்தைகளைக் கேட்டாலே உலகமே குலைநடுக் கம் கொள்ளவேண்டும். காரணம்… அதன் எதிர் விளைவுகள் அப்படி! இன்றைக்கு மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சுனாமி, நிலநடுக்கம், பெருமழை, கடும் வறட்சி, கோர புயல், வெப்ப அலை என்று பலவற்றுக்கும் ஒரு வகையில் காரணகர்த்தா… இந்த குளோபல் வாமிங்.

இது, அண்டார்டிகா உள்ளிட்ட பனிப்பிர தேசங்களில் உள்ள பனிப் பாறைகளை உருக வைப்பதன் காரணமாக, கடல் நீர் மட்டம் உயர்ந்து, கடலோர பிரதேசங்களை குறிப்பாக இந்தியா, வங்கதேசம், பர்மா போன்ற நாடுகளின் கடற்கரைகளை விழுங்கிவிடும் என்று எச்சரிக் கிறார்கள் விஞ்ஞானிகள்.

“குளோபல் வாமிங்கின் நேரடி அறிகுறிகளான சுனாமி, புயல், வெப்ப அலை, வெள்ளப் பெருக்கு, காட்டுத் தீ, நில நடுக்கம், பனிமலை உருகுதல், காலநிலை மாற்றம் போன்றவை காரணமாக உலகில் ஆண்டுக்கு மூன்று லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். மூன்று கோடி மக்கள் பாதிப்படைகின்றனர்” என்கிறது சமீபத்தில் லண்டனின் வெளியான ஆய்வு முடிவு ஒன்று.

“இப்படியே போனால்… 2030 ம் ஆண்டு வாக்கில் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் இந்த புவி வெப்பத்தினால் உயிரிழப்பார்கள்” என்கிறது பதறடிக்கும் இன்னொரு புள்ளி விவரம்.

“மனிதர்கள் மட்டுமன்றி உலகிலுள்ள பல்வேறு வகை உயிரினங்களும்கூட அழிவுக்கு உள்ளாகும். பூமியின் வெப்பம் 3.5 டிகிரி செல்சியஸ் அதிகரித் தால் 40 முதல் 70% உயிரினங்கள் அழியும் வாய்ப்பு உண்டு” என்கிறது ‘ஐ.பி.சி.சி.” எனப்படும் அகில உலக குழு

லட்சக் கணக்கான உயிர்கள் பலியாவது ஒருபுறமிருக்க, பொருளாதார ரீதியில் ஆண்டுக்கு 125 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும். இது, 2030 களில் பல மடங்கு உயர்ந்து, 600 பில்லியனை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய ஆபத்துக்கள் இருக்கிறது என்றபோதும், துரதிர்ஷ்டவசமாக… விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலா னவர்கள் மட்டுமே இதை நினைத்து அலறல் போடுகிறார்கள். மற்றவர்கள் எல்லாம், “பக்கத்து வீட்டுல சாவு” என்று சின்னதாக ஒரு “உச்” போட்டுவிட்டு, தன் வீட்டுக் கதவை மூடிக் கொண்டுவிடும் நகர்ப்புறத்து “அடுக்குமாடி குடியிருப்பு” கலாசாரத்தில் ஊறிப்போனவர்கள் போல, எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

பொதுமக்களில் பலரும் விவரம் தெரியாமல், குளோபல் வாமிங் பற்றிய பயமில்லாமல் இருக்கலாம். ஆனால், நாடு களைக் கட்டி ஆளும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினரும் அவ்வாறே கடந்து செல்வதுதான் கொடுமை. “உலகத் தின் இந்த நிலைக்கு நீதான் காரணம்…”, “இல்லையில்லை, நீதான் காரணம்” என்று வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் பரஸ்பரம் கைநீட்டி முட்டிக் கொண்ட படியே இருப்பது கொடுமையிலும் கொடுமை!

இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முயற்சியினால் சமீபத்தில் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் அடிப்படை அம்சங்கள் இரண்டு. ஒன்று, அமெரிக்காவில் கார்பன் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைப்பது. இரண்டு, அந்த சக்திக்கு மாற்றாக “க்ரீன் எனர்ஜி” எனப்படும் பசுமை சக்தியை (அல்லது கிளீன் எனர்ஜி எனப்படும் தூய சக்தி) உருவாக்குவது.

அமெரிக்காவில் எந்த அளவுக்கு கார்பன்டை ஆக்சைடைக் குறைக்கவேண்டும் என்பதற்கான வரைமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. தற்போதைக்கு பயன்பாட்டில் இருக்கும் கார்பனின் அளவிலிருந்து 2020 ம் ஆண்டில் 17%, 2030 ம் ஆண்டில் 40%, 2050 ம் ஆண்டில் 83% என்ற அளவில் குறைத்துக் கொள்ளவேண்டும். அதாவது, 2050 ம் ஆண்டில் கார்பனின் பயன்பாடு என்பது 17% என்ற அளவில் மட்டுமே இருக்கவேண்டும் என்று சொல்கிறது 1,200 பக்கங்களில் நிறைவேற்றப்பட்டிருக்கும் அந்த மகா தீர்மானம்.

அதற்குச் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தேவையில்லாமல் கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடும் கார்பன் மற்றும் நிலக்கரி தொழிற்சாலைகளின் தேவையைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டு, மாற்று சக்தியாக சூரிய ஒளி, காற்று, தாவரங்கள் போன்றவற்றிலிருந்து சக்தியைப் பெறுவது.

““கேட்பதற்கு எளிதாகத் தோன்றும் இந்தத் தீர்மானத்தில் நடைமுறைச் சிக்கல்கள் ஏரளமாக இருக்கின்றன. நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் பல்வேறு தொழிற்சாலைகள் சட்டென தற்போதைய நிலையை மாற்றி, வேறு சக்தியைப் பெறுவது எப்படி என்பது புரியாத புதிர். 2020 ம் ஆண்டில் 17% கார்பன் பயன்பாட்டை நிறுத்துவதெல்லாம் பகல் கனவு என்கின்றனர் பலர். எனவேதான் அமெரிக்க அரசிலேயே இந்தத் தீர்மானத்தை பலர் கடுமையாக எதிர்க்கிறார்கள். 219 பேர் ஆதரவாக வாக்களிக்க, 212 பேர் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

என்றாலும் அமெரிக்கா நிறைவேற்றியிருக்கும் இந்தத் தீர்மானம், வருகிற டிசம்பர் மாதம் டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்கோஹ னில் நடைபெற உள்ள காலநிலை தொடர்பான அகில உலக மாநாட்டில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவே களம் இறங்கிவிட்டது என்றால்… அதன் வால்பிடித்து இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் என்று பல நாடுகளும் வரிசையாக அணி வகுக்கும். மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனா, இந்தியா போன்ற நாடுகள் மீதுதான் குளோபல் வாமிங் விஷயத்தில் உலக நாடுகள் கை நீட்டுகின்றன. எனவே, இந்த நாடுகளுக்கும் நெருக்கடி ஏற்படும். அதன் காரணமாக உலக அளவில் இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

இது இப்படி இருக்க… இப்போது சொல்லப்படும் “குளோபல் வாமிங்” என்ப தெல்லாம் ஒரு மாயை. பூமி வெப்பமடைவதும், பின் குளிர்வதும் பல ஆயிரம் காலமாக நிகழ்வதுதான். கி.பி. 1,000 ம் ஆண்டுகளில் வெப்பமடைந்த பூமி, கி.பி. 1,500 களில் குளிர்ந்தது. இப்போது கி.பி. 2000 ம் ஆண்டுகளில் மீண்டும் வெப்பம் அதிகரிக்கிறது. காலப்போக்கில் குளிர்ந்து விடும்என்று சொல்லும் விஞ்ஞானிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த வம்பளப்புகள் ஒருபுறமிருந்தாலும்… வீடு அசுத்தமானால், துடைக்க வேண்டும் என்பது நியதி. அதேதான் பூமிக்கும். அது மாசுபட்டு கிடப்பப்பது கண்கூடு. இது நோயின் அறிகுறி மட்டுமே. இப்போதே விழிப்படையாவிட்டால்… உயிரைப் பறிகொடுக்க வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

– சேவியர்

தமிழிஷில் வாக்களிக்க விரும்பினால்…

வந்துவிட்டதா, பிளாஸ்டிக் விடைபெறும் காலம் ?

plastic_household_items

ஆடித் தள்ளுபடிக்கு கடையில் புடவை எடுத்து ஒவ்வொரு புடவையையும் ஒவ்வோர் பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வாங்கி வரும் அம்மாக்களில் எத்தனை பேருக்குத் தெரியும் பிளாஸ்டிக் பொருட்களால் விளையும் தீங்கு பற்றி ?

பயணத்துக்குச் செல்லும் போதெல்லாம் நான்கைந்து தண்ணீர் பாட்டில்கள் வாங்கி, தண்ணீரைக் குடித்து முடித்தபின் அலட்சியமாய் தூக்கி வீசும் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது பிளாஸ்டிப் பொருட்கள் பூமியை மாசுபடுத்தி விடுமே எனும் கவலை ?

சற்றே நீங்கள் இருக்கும் இடத்தைச் சுற்றிப் பாருங்கள் எத்தனை பொருட்கள் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டிருக்கின்றன ? வீட்டு உபயோகப்பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், கருவிகள் என எங்கும் எதிலும் பிளாஸ்டிக் மயம்.

பிளாஸ்டிக் பொருகள் பயன்படுத்த வேண்டாம் என்று எத்தனை தான் அறிவுரைகள் சொன்னாலும் அவை இன்றைக்கு நடைமுறை சாத்தியமற்றுப் போவதற்கு மிக முக்கியமான காரணம் சரியான மாற்றுப் பொருள் இல்லாமை!

இந்த பிளாஸ்டிக் எமனின் விஸ்வரூப வளர்ச்சி இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவில் மாபெரும் கவலையாய் உருவெடுத்து பல ஆண்டுகாலமாக பேசப்பட்டு வருகிறது. மறுசுழற்சி செய்து பயன்படுத்தவும் முடியாமல், அழியவும் செய்யாமல், நச்சுத் தன்மைகளை உள்ளடக்கி வேண்டாத விருந்தாளி போல கூடவே திரியும் இந்த பிளாஸ்டிக் பொருட்களை விலக்கி விடும் வாய்ப்புக்காக உலகமே காத்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் மட்டுமே வருடத்துக்கு குறைந்தபட்சம் இருநூற்று ஐம்பது கோடி பிளாஸ்டிக் பாட்டில்கள் தண்ணீர் விற்கப்படுகிறதாம். உலக அளவில் பார்த்தால் சுமார் முப்பது இலட்சம் டன் எடையுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆண்டு தோறும் விற்கப்படுகின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம். இவற்றில் பெரும்பாலானவை பூமிக்குள் திணிக்கப்பட்டு பூமியை மாசுபடுத்தும் பணியைத் தான் செய்கிறது.

பூமியை மாசுபடுத்துவதுடன் பிளாஸ்டிக் பொருட்களில் பயன்படுத்தப்படும் பிஸ்பினால் எ எனும் அமிலம் மூளையின் செயல்பாடுகளையும், மனநிலையையும் பாதிக்கலாம் என ஏல் பல்கலைக்கழகம் சில மாதங்களுக்கு முன் ஆய்வு முடிவு வெளியிட்டிருந்தது. குரங்குகளை வைத்து நிரூபிக்கப்பட்ட இந்த ஆய்வு மனிதர்களுக்கும் பொருந்தலாம் என்பதே ஆய்வாளர்களின் நம்பிக்கையாகும்.

இன்னொரு கவலை இந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெயின் அளவு ! அமெரிக்காவில் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்க மட்டுமே இருபது இலட்சம் பாரல்கள் எண்ணெய் ஆண்டு தோறும் தேவைப்படுகிறதாம். ஒரு இலட்சம் கார்கள் சுமார் ஓராண்டு காலம் ஓடத் தேவையான எரிபொருள் இது என்பது குறிப்பிடத் தக்கது.

அப்படியானால் பிளாஸ்டிக் பொருளைப் பயன்படுத்துவது மட்டுமல்ல பிரச்சினை, அதைத் தயாரிப்பதனால் மறை முகமாக எரிபொருள் வளத்தையும் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதும் ஒரு பிரச்சினையே.
 
இதற்கு ஏதேனும் மாற்றுப் பொருள் கண்டுபிடித்தாகவேண்டும் என ஆராய்ச்சிகள் படு வேகமாய் இயங்கிக் கொண்டிருக்க,  இதோ நாங்கள் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்திருக்கிறோம் என கவன ஈர்ப்பு அறிக்கை வெளியிட்டுள்ளனர் ஜெர்மன் விஞ்ஞானிகள்.

மரத் திரவம் ! அதுதான் அந்த புதிய வழி. பிளாஸ்டிக் பொருட்களுக்குச் சரியான மாற்றுப் பொருள் இது தான். மாசு குறித்த கவலையற்றது, எந்த நச்சுத் தன்மையுமற்றது, இனிமேல் பூமி அசுத்தமடையாது என உற்சாக அறிக்கை வெளியிட்டுள்ளது பான்ஹோஃபர் இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி.

ஆர்போஃபோம் எனப்படும் இந்த புதிய பொருள் மரத்திலுள்ள மெல்லிய திசுக்களையும் வேறு பல பொருட்களையும் இணைத்து உருவாக்கப்படுகிறது. இந்தப் பொருள் எந்தவிதமான நச்சுத் தன்மையும் அற்றது, எனவே பிளாஸ்டிக் பொருளுக்குரிய அச்சுறுத்தல் இல்லை என்கிறார் இந்த ஆராய்ச்சியின் முதுகெலும்பாய் இருக்கும் நார்பர்ட் என்பவர்.

காகிதம் செய்வதற்குப் பயன்படாத மரப் பகுதியான லிக்னின் இந்த புதிய பொருளை உருவாக்க உதவும் என்பது கவனிக்கப்படவேண்டிய தகவல் என்கிறார் குழுவின் தலைவர் எமிலியா. இதன் மூலம் காகித ஆலைகளில் தேவையற்றதாய் ஒதுக்கப்படும் பொருள் இந்த மரத் திரவத்தின் மூலப்பொருளாகிவிடுகிறது.

இந்தப் பொருள் பிளாஸ்டிக்கைப் போன்ற தோற்றத்துடன், ஆனால் மரத்துக்கான குணாதிசயங்களுடன் விளங்கும் என்றும், பிளாஸ்டிக்கைக் கொண்டு என்னென்ன தயாரிக்க முடியுமோ அவற்றையெல்லாம் இந்தப் பொருளைக் கொண்டும் தயாரிக்கலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரே ஒரு சிக்கல் இந்தப் பொருளில் அடங்கியுள்ள சல்பர் எனும் வேதியல் பொருள். இதை 90 விழுக்காடு அளவுக்குக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் விஞ்ஞானிகள். இதன் மூலம் சற்றும் பாதிப்பில்லாத வீட்டு உபயோகப் பொருட்களை தயாரிக்கலாம்.

சுற்றுப்புறச் சூழலுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என சொல்லப்படும் இந்த மரத் திரவம், மறு சுழற்சிக்கும் ஏதுவானது என்பது நம்பிக்கையூட்டுகிறது.

எப்படியோ நீண்ட நெடுங்காலமாக பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கவலையுடன் பேசிக்கொண்டிருந்த உலகுக்கு ஒரு நம்பிக்கைக் கீற்றாய் வெளிவந்திருக்கிறது இந்த புதிய முறை என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

பிடித்திருந்தால் ஒரு கிளிக்…