
உன் கடிதம் வந்து மாதங்களாகிறது.
நான்
தபால்காரன் விலகிச் செல்லும் வரை
வாசலில் தான் விழித்திருக்கிறேன்.
மனம் ஒத்துழைக்குமளவுக்கு
இப்போதெல்லாம்
உடம்பு ஒத்துழைக்க மறுக்கிறது.
ஆனாலும்
உன்னைப்பற்றி நினைக்கும்போது மட்டும்
இன்னும் இளமையாய் உணர்கிறேன்.
மழலைப்பருவத்தின்
மாலை வேளைகளிளெல்லாம்
நீ
என் மார்பு நனைத்துக் கிடப்பாய்.
பிஞ்சு விரல்களால் மீசையை இழுத்துச் சிரிப்பாய்
தூங்கவிடாமல் புரள்வாய்
நினைவிருக்கிறது.
நம் வயலோரக்காற்றெல்லாம்
உன்னை முத்தமிட
நீ
என் உள்ளங்கைக்குள் கரம் பொத்தி
என் சுவடுகளுக்குள் அளவெடுத்து நடப்பாய்.
பட்டென்று
அம்மாவின் முந்தானை இழுத்து
அவளை சமையல் செய்யவிடாமல்
சிறைப்பிடிப்பாய்.
உன் முகத்தின் முக்கால்வாசியும்
சோறு தின்ன
வாய்க்குள் சில பருக்கைகள்
மட்டுமே பயணப்படும்.
வெள்ளையடித்து முடித்த சுவர்களெங்கும்
சேற்றுச் சித்திரம் வரைவாய்
தூங்க மறுக்கும் இரவுகளில்
தாயின் தாலாட்டுகளில் லயித்திருப்பாய்.
பழைய கதைகளைப் புதிதாய்ப் பேசிப் பேசி
ஒவ்வோர் கிழமைகளிலும்
நானும், உன் அம்மாவும்
உன் நினைவுகளில் தான்
சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்
உனக்கு
மழலை நினைவுகளெல்லாம்
பள்ளிக்கூட படிதாண்டியபோது மறந்திருக்கும்.
சிறுவனாய் சிரித்ததெல்லாம்
கல்லூரி வாழ்க்கையால்
கழுவப்பட்டிருக்கும்.
கல்லூரிக் கலாட்டாக்கள் கூட
வேலைப்பளுவில் களைந்து போயிருக்கும்..
இன்னும்
நீ எனக்கு மழலை தான்.
வங்கியின் வயிற்றை நிரப்பும் வேகத்தில்
எங்கள் மனசை பட்டினியிடாதே..
நான் வேண்டுவதெல்லாம்
ஐந்திலக்க அமெரிக்க டாலர்களை விட
நலமென உன் கரம் எழுதும்
ஓர்
நான்கு வரிக் கடிதம் தான்.
Like this:
Like Loading...