எங்கே போனாளோ என்னழகுத் தேவதை.

love31.jpg

 சின்னப் பல்லழகி
                   சலிக்காத சொல்லழகி
மின்னும் கண்ணழகி
                   வலிக்காத மெல்லழகி
கன்னக் குழியழகி
                   விழிமேலே வில்லழகி
இன்னும் கவியெழுதி
                   முடியாத பேரழகி

நெஞ்சில் வேர்பிடித்துப்
பஞ்சாய் நான்வெடித்து
வஞ்சிப் பேர்உரைத்தும்
கொஞ்சாமல் போனாயே.

*

வெட்கச் சிவப்பழகி
                   தொட்டாலோ சிலிர்ப்பழகி
விரலோடு விரல்பழகி
                   விளையாடும் சிரிப்பழகி
மஞ்சள் நிறத்தழகி
                   மஞ்சத்தில் மதுவழகி
ஊஞ்சல் அசைவழகி
                   உள்ளுக்குள் புதுஅழகி

முத்தத் தேன்குடித்து
மோகத் தீவடித்து
மொத்தத் தேகத்துள்
மூழ்காமல் போனாளே.

 *

பின்னல் கசையழகி
                    பின்னாத நடையழகி
பாசி மலைவழுக்கி
                    பாய்ந்தோடும் நதியழகி
தென்றல் திசையழகி
                   காரிருள் குழலழகி
மெல்லத் தான்பழக்கி
                   அசைந்தாடும் கிளியழகி.

மொட்டுத் தோட்டத்தைச்
சொட்டுப் புன்னகையால்
பட்டெனப் பூக்கவைத்து
சிட்டெனவே போனாளே.